உள்ளடக்கத்துக்குச் செல்

பலம் தரும் பத்து நிமிடப் பயிற்சிகள்/இரண்டு வித பயிற்சிகள்

விக்கிமூலம் இலிருந்து
6. இரண்டு வித பயிற்சி முறைகள்

ஒரே சீராக ஒரே தன்மையாக, ஒரு குறிப்பிட்ட தசைகளைப் பெரிதுபடுத்தி பலம் பெறக் கூடிய பயிற்சிகளை எடைப் பயிற்சிகள் என்று அழைப்பார்கள். “Isometric, Isotomic Exercises” என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பயிற்சிகள்.

எடைப் பயிற்சிகள் பற்றி, இந்தப் புத்தகத்தில் எதுவும் எழுதவில்லை காரணம், எனது புதிய நூலாக வெளிவந்திருக்கும் “உடலுக்கு அழகு தரும் எடைப் பயிற்சிகள்” என்ற புத்தகத்தைப் படித்துத் தெரிந்து கொள்ளவும்.

இரண்டாவது முறைதான் விசை இயக்க சக்தியை அளிக்கின்ற வெறுங்கைப் பயிற்சிகள்.

நமது நோக்கம், நம்முடைய உடலுக்குப் பலம் சேர்க்க வேண்டும். கடமைகளை ஆற்றும் போது, களைப்பு அடையாமல் இருக்க வேண்டும் என்பது தானே! ஆரம்பித்த உடனேயே அசதி என்று அயர்ந்து விடாமல். நீடித்துழைக்க நிரம்பிய பலம் வேண்டும்.

இப்படிப்பட்ட பயிற்சி முறைகள் நிறைய உண்டு. அவைகள் உடல் உறுப்புக்கள் அத்தனையையும் இலக்காக வைத்து, எளிதாகச் செய்யப்படும் இனிய பயிற்சி முறைகள், ஆகும்.

1. கால்களை அல்லது கைகளை மடக்கிச் செய்யும் பயிற்சிகள் (Limbering exercises)

2.எளிதாக உறுப்புக்களை இயக்கும் இலகுப் பயிற்சிகள் (Calisthenic Exercises)

3. காற்றிழுத்துக் குதித்து, ஆடி ஓடி செய்யும் மூச்சுப் பயிற்சிகள் (Aerobic exercises)

4.விளையாட்டுப் பயிற்சிகள் (Sports and games)

இந்த நான்கு வகைப் பயிற்சிகள் எல்லாமே, உடல் இயக்கங்களில் ஒருங்கிணைந்த முறையைக் கையாண்டு, பலத்தைப் பெருக்கும் பாதையில் பக்குவமாக வழிநடத்திச் செல்கின்றனவாகும்.

பயிற்சியின் இலக்கு எது என்றால்? ......

1. உடலின் முக்கியமான உறுப்பான, சிறப்புத் தசையான இதயத்தின் வலிமையை மிகுதிப்படுத்தி செயலாற்றலை செழுமையாக்குவது

2. அதிகமான மூச்சிழுப்பினால், அதிகக் காற்றைச் சுவாசித்து, நுரையீரல்களின் வலிமையை மிகுதிப் படுத்தி செயலாற்றுகிறது.

இப்படி உடல் முழுவதற்கும் உதவி, காத்து வருகிற இதயத்தையும், நுரையீரல்களையும் இரட்டிப்புப் பணிக்கு இதம்பட இணைத்து விடுவதால் என்ன லாபம் கிடைக்கும்? நல்ல கேள்விதான்.

இதயத்திற்கு இடையிடையே ஓய்வு தருகிறபடி வலிமைப்படுத்துகிற வண்ணம், பயிற்சிகள் செய்தால் போதும். கிடைப்பது எல்லாமே லாபம்தான்.