உள்ளடக்கத்துக்குச் செல்

பல்லவர் வரலாறு/19. கலைக் கழகங்கள்

விக்கிமூலம் இலிருந்து

19. கலைக் கழகங்கள்

முன்னுரை

பண்டைக் காலக் கல்விமுறை இக்காலக் கல்விமுறையில் முற்றும் மாறுபட்டதாகும். அக்காலக் கல்வி, இக்காலக் கல்வி முறைப்படி தொடக்கக் கல்வி, நடுத்தரக்கல்வி, பல்கலைக் கழகக் கல்வி எனப்பலபிரிவுகளை உடையதன்று. உலகில் அறம், பொருள், இன்பம் நுகரவும் வீடுபேற்றுக்குரியநெறியிற் பயிலவுமே பண்டைக் காலத்தார் கல்வி கற்றனர். அவர்கள் உயிர்க்கு உறுதி பயக்கும் கல்வியையே சிறப்பாகக் கொண்டனர்.

ஒவிய - சிற்பக் கலைக்கூடங்கள்

பல்லவரை உலகம் புகழ வைத்த பெருமை ஒவிய-சிற்பப் புலவர்கட்கே உரித்தானது. உயிருள்ள சித்தன்னவாசல், ஓவியங்கள், மாமல்லபுரம், வைகுந்தப் பெருமாள்கோவில், கயிலாசநாதர் கோவில் இவற்றில் உள்ள வியப்பூட்டும் சிற்பங்கள் இன்ன பிறவும் இயற்றிய பெருமக்கள் கலை அறிவை நாம் என்னெனப் புகழ்வது?

ஓவியம் வரைதலும் சிற்பம் பொறித்தலும் எளிய செயல்கள் அல்ல. பல்லவர் கால ஓவிய சிற்பங்கள் இற்றைக்கு 1300 ஆண்டுகட்கு முற்பட்டவை; ஆயினும் இன்று செய்தாற் போலக் காட்சி அளிப்பவை எனின், இவற்றில் அமைந்துள்ள வேலைத்திறனை என்னென்பது! இவ்வேலைத்திறனை இன்றளவும் நாம் உணருமாறு செய்த அப்பெருமக்கள் கலை அறிவு வியக்கத்தக்கதன்றோ? அவர்கள் எங்ஙனம் எங்கு - இக்கலை அறிவைப் பெற்றனர்’ பல்லவர் பெருநாட்டிலே அன்றோ காவியம் படித்துணர்வது ஓவியமும் சிற்பமும் பார்த்து உணர்பவை, இவை காவியத்தையே கண்முன் காட்டுபவை அல்லவா? எனவே, இவற்றில் வல்ல பெருமக்கள் முதலிற் காவிய உணர்ச்சிஉடையராதல் வேண்டும்.அத்துடன்சிறந்த ஒழுக்கமும்பத்தி முதிர்ந்த உள்ளமும் உடையவராதல் வேண்டும் மாசற்ற அகத்தூய்மை உடையவர் தாம் இவற்றைச் செய்து முடித்தல் கூடும். ஆதலின், அந்நிலையைப் பெற அப்பெருமக்கள் இசை நாடகம், நடனம், சமயம், இலக்கியம், உலகியல் இவற்றில் திப்பிய புலமை சான்றவராக இருந்தனர் என்பதில் ஐயமில்லை. ஆகவே, அவர்கள் அரசாங்கத்தாலும் பொதுமக்களாலும் உயர்வாக மதிக்கப் பெற்று வந்தவராவர். இந்நிலைக்கு உரிய கல்வி எத்தகையதாக வளர்ச்சியுற்றிருத்தல் வேண்டும் பல்லவப் பெருநாட்டில் சிறந்த கலைக்கூடங்கள் இராவிடில், இக்கலைகள் ஒருபோதும் வளர்ச்சிற்று இரா.

காஞ்சிக் கல்லுரரி

கதம்ப அரசர் மரபைத் தோற்றுவித்த மயூரசன்மன் முதற்பல்லவர் காலத்தில் காஞ்சியில் இருந்தவடமொழிக்கல்லூரியில் (கடிகையில்) படிக்க வந்தான். அவன் காலம் கி.பி. 345-370 என ஆராய்ச்சியாளர் அறைகின்றனர்;[1] எனவே, காஞ்சி வடமொழிக் கல்லூரி அக்காலத்திலேயே சிறப்புற்று இருந்ததென்பதை அறியலாம்.

எத்தகைய கல்வி?

அக்கல்லூரியில் எவ்வகைக் கல்வி அளிக்கப்பட்டது? ‘மயூரசன்மன் வேதங்களை நன்றாகப் படித்தவன். அவன் தன் ஆசிரியருடன் காஞ்சி வடமொழிக் கல்லூரிக்கு மேலும் படிக்கச் சென்றான்’ என்னும் தாளகுண்டாப் பட்டயத்தை நோக்கக் காஞ்சி -வடமொழிக் கல்லூரி வேதங்களைப் படித்தவர்க்கு அளிக்கும் உயரிய ஆராய்ச்சிக் கல்வியையும் அளித்து வந்தது என்பதை நன்குணரலாம்.

அக்கல்லூரியில் நூற்றுக்கணக்கான மாணவர் வடமொழிச் சாத்திரங்களைக் கற்றனர். அவற்றைப் போதிக்க வடமொழிப் புலவர் பலர் இருந்தனர்.

மயூரசன்மன் பல்லவ அரசனால் கல்லூரியிலிருந்து விரட்டப்பட்டான் என்பதிலிருந்து, கல்லூரி பல்லவ அரசனது பார்வையின் கீழ் இருந்தது என்பது தெளிவாகும்.

பல கலை வல்லார் இங்குக் கூடிப் பேசலும் மரபு. ஒரு கலையிற் புலமை எய்திய ஒருவர், தாம் கண்டதைக் கூறிப்பிறர் இசைவைப் பெறவும் இக்கடிகை பயன்பெற்றது. சமந்தபத்திரர், பூச்யபாதர் முதலிய சமண சமய ஆசிரியரும் பெரும் புலவரும் ஆகிய பெருமக்கள் இங்கு வந்திருந்தனர் எனின், இக்கடிகை, மதுரைத் தமிழ்ச் சங்கம் போல அனைவர்க்கும் பொதுக் கடிகையாக இருந்ததென்னலாம். இங்குப் பேசுதல் அக்காலத்தில் சிறப்பளித்த ஒன்றாகக் கருதப்பட்டது. இதனால், இச்சிறப்பைப் பெறப் பல நாட்டார் இங்கு வந்து சென்றனர்.[2] இங்கிருந்துதர்மபாலர் நாலந்தாப் பல்கலைக் கழகப் பேராசிரியராகச் சென்றார். எனின் இக்கடிகை அஃகாலத்தில், பெற்றிருந்த பெருஞ் சிறப்பை என்னென்பது இதனை நன்கு அறிந்தே அப்பர் பெருமான், “கல்வியிற் கரையிலாத காஞ்சி மாநகர்” எனப் பாராட்டியுள்ளார்.

கடிகாசலம்

இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் சோளிங்கர் (சோழ சிங்கபுரம், கடிகாசலம்) மலைமீதுள்ள கடிகைக்கு மானியம் விடப்பட்டதாகத் திருவல்லம் கல்வெட்டுக் குறிக்கிறது. இது நீண்ட காலமாக அங்கு இருந்திருக்கலாம். இது வைணவர் கலைப் பீடமாக இருந்திருத்தல் கூடியதே. பாகூர் வடமொழிக் கல்லூரி

பாகூர் என்பது தென்னார்க்காட்டுக் கோட்டத்தில் திருப்பாதிரிப்புலியூருக்கும் புதுச்சேரிக்கும் இடையில் உள்ள பெரும்பாதையில் அமைந்துள்ள சிற்றுாராகும். இது பல்லவர் காலத்திற் சிறந்திருந்த பெரும் பதியாகும். இங்கு ஒரு வடமொழிக் கல்லூரி இருந்தது. நிருபதுங்கவர்மன் காலத்துப் பட்டயத்தில் உள்ள செய்திகளைக் காண, அக்கல்லூரி அதற்கு முன்னரே உயரிய நிலையில் இருந்துவந்தது. என்பது தெரிகிறது. அக் கல்லூரியில் படித்தவர் அனைவரும் மறையவரேயாவர்; அதனைப் பார்வையிட்ட வரும் மறையவரே ஆவர். இங்கு 14 கலைகள் கற்பிக்கப்படுகின்றன; இக்கல்லூரி மறையவராற் பார்வையிடப்பெறுகின்றது; இச் சிற்றுரைச் சேர்ந்த அலுவல்களும் அவராலே கவனிக்கப்படு கின்றன; இங்குப்பதினான்கு கலைகளுடன் 18 வகை வித்தைகளும் கற்பிக்கப்படுகின்றன.[3] 18 வகை வித்தையாவன: நான்கு வேதங்கள், ஆறு அங்கங்கள், மீமாம்சை, நியாயம், தருமசாத்திரம், புராணம், மருத்துவம், வில்வித்தை, இசை, பொருள் நூல் என்பன.

முன்று சிற்றரர்கள்

இக் கல்லூரி செவ்வனே நடைபெற, ஏறத்தாழக் கி.பி. 860இல், நிருபதுங்கவர்மன் ஆட்சியில், பாகூரை அடுத்த மூன்று சிற்றுார்கள் மார்த்தாண்டன்[4] என்ற (கோட்டத்து) அதிகாரி ஒருவனால் விடப்பட்டன. அச்சிற்றுார்களாவன: (1) சேட்டுப்பாக்கம், (2) விளாங்காட்டங் கடுவனுர், (3) இறைபுனைச்சேரி என்பன.

வாகூர்ப் பட்டயப்படி, (1) விளாங்காட்டங் கடுவனுர் என்பது இன்று கடுவனூர் என்ற பெயருடன் இருக்கிறது. அது வாகூர்க்குத் தென்மேற்கில் மூன்று கல் தொலைவில் இருக்கிறது. (2) அதற்குத் தெற்கே சேட்டுப்பாக்கம் இருந்தது என்று பட்டயம் குறிக்கிறது. அப்பெயர் இன்று காணுமாறில்லை. சேட்டுப்பாக்கம் கிழக்கில் நென்மலிப் பாக்கத்தையும், மேற்கே மாம்பாக்கத்தையும், வடக்கே கடுவனுரையும், தெற்கே நென்மலைப்பாக்கம், நெல் வாய்ப்பாக்கம், உரத்தூர் என்பனவற்றையும் எல்லைகளாகப் பெற்றிருந்தது என்று பட்டயம் கூறுகிறது. இவ்வூர்களின் பெயர்கள் இன்றுகாணு மாறில்லை. (3) பட்டயப்படி, இறைபுனைச் சேரிக்குக் கிழக்கே காடு இருந்தது. இதற்கு அடையாளமாக அங்குக் ‘காட்டுப்பாக்கம்’ என்னும் சிற்றுர் இன்று இருக்கின்றது. பட்டயப்படி வடக்கே கிரிமாம்பட்டி இருந்தது. அதுவே இன்றைய கிரிமாம் பாக்கம் என்பது. ‘இறைபுனைச்சேரி’ என்னும் பெயர் கொண்ட சிற்றுார் இப்பொழுதில்லை. பட்டயத்தில் உள்ள எல்லைகளை நோக்க இன்றைய பின்னாச்சி குப்பம் என்பதே அக்கால இறைபுனைச் சேரியாக இருந்திருக்கலாம் என்பது உய்த்துணரலாம்.[5]

பாகூர்ப் பழம்பதி[6]

இன்றுள்ள பாகூர் (வாகூர்), நெடுவழிக்கு இரண்டு கல் தொலைவில் இருக்கின்றது. நெடுவழிக்கு மறுபுறத்தில் பெருமான் கோவிலும் பார்ப்பனச்சேரி ஒன்றும் பழங்காலத்துக் குளம் ஒன்றும் பிற சிதைவுகளும் இருக்கின்றன. இன்றைய பாகூர் சிற்றுர் ஆகும். அதன்கண் உள்ள சிவன் கோவில் பழைமையானது. அங்குக் கல்வெட்டுகள் பல இருக்கின்றன. பாகூர் பட்டயத்தை நோக்க, அங்கிருந்த கல்லுர்ரி, பல்லவர் காலத்தில், தென் பல்லவ நாட்டிற்கு அமைந்த பெருங் கல்லூரியாக இருந்திருத்தல் வேண்டும் என்பது புலனாகிறது. இதனால் பழைய பாகூரும் மிகப்பெரியதாக இருந்திருத்தல் வேண்டும் என்பது தவறாகாது. ஆகவே, சாலைக்கப்பால் உள்ள கோவில், குளம், அக்கிரகாரம் இவற்றையும் இன்றைய பாகூரையும் தன்னகத்தே கொண்டதாகப் பழைய பாகூர் இருந்தது எனக் கோடலே பொருத்தமாகும்.

அக்கிரகாரங்க

நான்கு வேதங்கள், ஆறு அங்கங்கள் முதலிய பல கலைகளில் வல்ல மறையவரைக் கொண்ட சேரியே அக்கிரகாரம் என்பது. இத்தகைய சேரிகள் சில சங்க காலத்திலே இருந்தன என்பது பத்துப்பாட்டால் அறியலாம். கற்றறிந்த மறையவர் - வாதங்களில் வல்ல மறையவர் - கற்பிக்கும் ஆற்றல் பெற்ற மறையவர் கூடி உறைந்தமையின், மாணவர் பலர் அவர்களிடம் சென்று கல்வி கற்க வசதி இருந்தது. பொதுவாக இச்சேரிகள் ஊர்கட்கு வெளியே, அமைதி குடி கொண்ட கழனி வெளிகட்கு இடையே, இயற்கைப் பொருள்களின் நடுவே அமைந்திருந்தன. அரசர்கள் இவர்கட்குச் சிற்றுார்களை இறையிலியாக விட்டு எல்லா வசதிகளையும் அளித்தனர். இவ்விரு காரணங்களாலும் இம் மறையவர் மன அமைதியுடன் கல்வி கேள்விகளிற் சிறந்து விளங்கினர்; இவர்களைத் தேடி வந்த மாணவர்க்கும் பலதுறைக் கல்வியைப் புகட்டினர். இங்ஙனம் மாணவர் விருப்பத்தோடு வந்து கற்பதைக் கண்ட அரசரும் செல்வரும், அம் மாணவர் இருந்து உண்டு படிப்பதற்கேற்ற விடுதிகளும் பிற வசதிகளும் செய்து தந்தனர். இங்ஙனம் சேர்ந்த பொருளைச் சேரி மறையவரே பாதுகாத்து, வேண்டிய வசதிகளை மேன்மேலும் பெருக்கிக் கொண்டே சென்றனர், கட்டடங்கள் பெருகின; வகுப்புகள் மிகுதிப்பட்டன; பிற நாட்டு நல்லறிஞர் வரின் தங்குதற்கேற்ற விடுதிகள் (சத்திரங்கள்) உண்டாயின, கோவிலும் உண்டாயிற்று. இங்ஙனம் சேரி பெரிதாய் விட்டமையின், மறையவரே ‘ஊராண்மையை'ச் சட்டப்படி கவனித்து வந்தனர். இவையே ‘குடி’ அல்லது ‘சதுர்வேதி மங்கலம்’ எனப் பெயர் பெற்ற சிற்றுர்கள். இவை பலவாக இருந்தன என்பது கல்வெட்டுகளாலும் பெரிய புராணத்தாலும் நன்கறியலாம். சம்பந்தரை வரவேற்ற சதுர்வேதி மங்கலத்தார் பலராவர்; சுந்தரர்க்கு வேண்டிய வசதிகள் அளித்த மறையவர் பலராவர். இச் சிற்றுர்களில் எப்பொழுதும் ‘மறை ஒலி' கேட்டபடியே இருந்தது என்பதும், அம் மறையவர் அனைவரும் பண்பட்ட அறிவுடையோர் என்பதும் தேவாரப் பாடல்களால் நன்கறியும் செய்திகளாம்.

ஊராண்மை

இவர்கள் ஆட்சியில் ‘ஊர் அவைகள்’ பல இருந்தன. அவை ஊருக்கு வேண்டிய அனைத்தையும் செய்து வந்தன; வழக்குகளை விசாரித்துமுடிவு கூறின. இதனைத்தடுத்தாட்கொண்டபுராணத்தும் திருநீலகண்ட நாயனார் புராணத்தும் சண்டீசர் புராணத்தும் காணலாம். பெரிய புராணத்துள், 20க்கு மேற்பட்ட ஊர்கள் குறிக்கப்பட்டுள. அவற்றுள் சேந்தன் அளித்த சேய்ஞலூர், திருமணஞ்சேரி, தெளிச்சேரி, திருவெண்ணெய் நல்லூர், திருநாவலூர், திருநின்றவூர் முதலியன குறிப்பிடத்தக்கன. பல்லவ அரசர் அளித்த சிற்றுர்கள் மிகப் பல ஆகும். சான்றாக, இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் கும்பகோணம், நாகப்பட்டினம் ஆகிய இரண்டிற்கும் அருகில் இரண்டு சேரிகளை உண்டாக்கினான். அவையே பட்டயத்தாள் மங்கல அக்கிரகாரம், தயாமுகமங்கல அக்கிரகாரம் என்பன.

படைக்கலப் பயிற்சி

இங்ஙனம் கல்வி கற்பித்தும் ஊராண்மை செய்தும் வந்த நான்மறையாளர், தம் சேரிகளைப் பகைவரிடமிருந்து பாதுகாப்பதற்கென்று படைக்கலப் பயிற்சியும் பெற்றிருந்தனர். இத்தகைய பயிற்சியாற்றான் பிராமணர் பலர் மேலைச் சாளுக்கியரிடம் மகா சாமந்தராக இருந்தனர் என்பது இங்கு அறியத்தகும். பல்லவர் ஆட்சியில் இத்தகையோர் இருந்தமைக்குரிய சான்றுகள் இல்லை; ஆயினும், மயூரசன்மனைக் குறிக்கலாம்.

வேலைகள்

இம் மறையவர் வடமொழியுடன் இந்நாட்டு மொழியான தமிழையும் கற்றிருந்தனர்; கோவிற் பூசைசெய்தனர்; கோவில்களின் விழாக்கள் நாடகங்கள் நடத்தினர்;உண்டிச்சாலை, மருத்துவச்சாலை முதலிய நடத்தினர். சுருங்கக் கூறின், அரசர் ஆணைப்படி இம் மறையவர், சிற்றுர்களில் இருந்துகொண்டு பலவகைத் தொண்டுகளைச் செய்து வந்தனர் என்னலாம். புரோகிதர் கோவில் உரிமை பெற்றதும், தமிழ் மக்களிடம் குருக்கள் வேலை தொடங்கியதும் இந்தக் காலமே ஆகும்.[7]

பிரம்மபுரிகள்

பேரூர்களிலும் நகரங்களிலும் கலை வளர்ச்சிக்காக மறையவர் தங்கியிருந்த இடம் பிரம்மபுரி எனப்பட்டது. இவர்க்கு பிரம்மதேயம் இல்லை எனினும், கல்வி கற்பிப்பதற்காக நிலம் மானியமாக விடப்பட்டது. இத்தகைய பிரம்மபுரிகள் கங்கர் தலைநகரான தழைக்காட்டில் பல இருந்தன.[8] இப் பிரம்மபுரிகள் பல்லவர் காலத்தில் இருந்தன என்பதற்குப் பட்டயச்சான்று இல்லை. ஆயினும், சீகாழிக்கு உரிய பல பெயர்களுட் பிரம்மபுரம் என்பதொன்றாகும். இப் பெயர் முதலில் சீகாழிப் பகுதியில் பிராமணர் இருந்த பகுதியை மட்டும் குறித்து வந்து, சம்பந்தர் காலத்தில் சினையாகு பெயராய் நகரத்தையே குறிக்கலாயிற்று[9] எனக் கோடலில் எவ்வித தவறும் இல்லை. சீகாழிப் பிரம்மபுரியில் மறையவர் பலர் இருந்தனர்; வேத வேள்விகளிற் சிறந்திருந்தனர் எனவரும் பெரியபுராணக் குறிப்பும் சம்பந்தர் பதிகக் குறிப்பும் நோக்கத்தக்கன.

பட்டவிருத்தி

பல்லவப் பேரரசர் தனிப்பட்டவர் கல்விக்கு மதிப்பீந்தனர்; சாணக்கியர் பொருள் நூல், ‘மறையில் வந்த அந்தணர் நல்ல வருவாய் கொண்ட நிலங்களை இறையிலியாகப் பெறக் கடவர் என்று கூறுகிறது. அம் முறையை இந்தியா முழுவதிலும் இருந்த பெரும்பாலான அரசர் பின்பற்றி வந்தனர். இது பிற்காலச் சோழர் காலத்தில் ‘பட்டவிருத்தி’ எனப்பட்டது. இதனைப் பல்லவ அரசர் செய்து வந்தனர் என்பது பல பட்டயங்களைக் கொண்டு அறியலாம்.

1. ஓங்கோட்டுப் பட்டயம் : விசய கந்தவர்மன் என்ற பிராக்ருத காலப் பல்லவ வேந்தன், தனக்கு உட்பட்ட ஆந்திர நாட்டில் ஓங்கோடு என்ற சிற்றுரைக் கோல சருமன் என்ற மறையவனுக்குத் தானம் அளித்தான். அம் மறையவன் காசியபகோத்திரத்தான். இரண்டு வேதங்களிலும் ஆறு அங்கங்களிலும் வல்லவன்; அவனுக்குக் கொடுக்கப்பட்ட சிற்றுார் 18 வகை வரியினின்றும் நீக்கப்பட்டது.[10]

2. காசக்குடிப் பட்டயம்: இஃது இரண்டாம் நந்திவர்மனால் விடப்பட்டதாகும். ‘கொடுகொள்ளி’ என்ற சிற்றுர் ‘ஏக தீரமங்கலம்’ என்று பெயரிடப்பட்டுச் ‘சோமயாஜி’ என்ற மறையவற்குக் கொடுக்கப்பட்டது. அம் மறையவன், “கடல் போன்ற வேதங்களைக் கற்றவன், சாமவேதம் பாடவல்லவன், ஆறு அங்கங்களையும் பழுதற உணர்ந்தவன்; கரும காண்டம், ஞான காண்டம் முதலியவற்றில் தேர்ச்சியுற்றவன்; உலகியலை நன்குனர்ந்து நடப்பதில் வல்லவன்.[11] செய்யுள், நாடகம், கதைகள், இதிகாசங்கள், கட்டுக்கதைகள் இவற்றில் சமர்த்தன; எல்லாச்சமயச் செயல்களிலும் தேர்ந்தவன்; நல்லொழுக்கம் உடையவன்; வீட்டை விளக்கு அணி செய்தல் போல நாட்டை அணி செய்பவன் உயர் கல்வி இருந்தும் அடக்கம் உடையவன்; முற்பிறப்பிற் செய்த நல்வினைப் பயனால் இப் பிறப்பில் இவ்வுயர்வைப் பெற்றவன்; இரு பிறப்பாளருள் முதன்மையானவன்; வேத விதிப்படி நடப்பவன்: சாந்தோக சூத்திரத்தைப் பின்பற்றுபவன்; தொண்டை நாட்டில் ‘பூனியம்’ என்ற

சிற்றுரில் வாழ்பவன்; சிறந்த மறையவன்.......” எனப் பலபடப் பாராட்டப்பட்டுள்ளான்.[12] இதனால் பல்லவ மன்னர் தனிப்பட்ட கல்விமான்களைத் தாராளமாக ஆதரித்து வந்தனர் என்பது வெள்ளிடைமலை.

கோவில்கள்

பல்லவர் காலத்தில் கயிலாசநாதர் கோவில் போன்றவை பல்கலைப் பள்ளிகளாகவும் இருந்து வந்தன. அங்குச் சிற்பம், ஓவியம், இசை,நடனம், நாடகம், சமயக்கல்வி சாத்திரக்கல்வி இன்ன பிறவும் கற்பிக்கப்பட்டு வந்தன. நாகரிக நாட்டார் போற்றும் இக்கலைகள் அனைத்திற்கும் கோவிலே தாயகமாக இருந்தது. பத்திரப் பதிவும் (பட்டயமும் கல்வெட்டும் பிறவும்) அங்குத்தான் நடைபெற்று வந்தன. அப்பத்திரங்களிலிருந்தன்றோ, நாம், இன்று பல்லவர் வரலாற்றை அறிந்து இன்புறுகின்றோம்! பெரிய கோவில்களில் படிக்கும் மண்டபம், நடன மண்டபம், நாடக மண்டபம், தருக்க மண்டபம் முதலியன இருந்தன. மாபாரதம் போன்ற பழைய கதைகளைக்குடி மக்கட்கு ஊட்டி அவர் ஒழுக்கத்தை வளர்க்க முயன்றது கோவிலே ஆகும். சமய நூல்கள், தேவாரப் பதிகங்கள் முதலியன பாதுகாக்கப்பட்ட இடங்களும் கோவில்களே ஆகும். இங்ஙனம் இக் கோவில்கள் இருமைக்கும் இன்பம் ஊட்டும் நிலைக்களங்களாக இருந்தன.

மடங்கள்

இவை நீண்ட காலமாக நாட்டில் இருந்து வருபவை. இவை உண்டியும் உறையுளும் அளித்து மாணவர்க்குக் கல்வி கலைக் கூடங்கள் துறவிகள், கற்ற பெருமக்கள், நாடு முழுவதும் சுற்றித்திரிந்து உண்மை அறிவைத் தேடும் பெருமக்கள் ஆகியவர் தங்கும் இடங்கள்; ஏழைகள், திக்கற்றவர் முதலியோருக்குப் புகல் இடங்கள். இவை அரசர், சிற்றரசர், செல்வர் முதலியோரால் அமைக்கப் பட்டவை. இவை சமய உயர்தரக் கல்வியை ஊட்டி

வந்தன. கங்கபாடியில் இருந்த இம் மடங்களில் சமணம், பெளத்தம், தர்க்கம், காவியம், இலக்கணம், நாடகம், பரதசாத்திரம் முதலிய பல கலைகளில் வல்லுநர் இருந்தனர்என்றுகங்கநாட்டுக்கல்வெட்டுகள் குறிக்கின்றன. எனின் ஏறக் குறைய அக் காலத்தில் பேரரசராகவும் சிறந்த கலைகளில் நிபுனராகவும் இருந்த பல்லவப் பேரரசருடைய பெரு நாட்டு மடங்களில் இக் கலைகள் பயிற்றுவிக்கப்பெற்றன என்பது கூறாதே அமையும் அன்றோ?

சைவ மடங்கள்

சைவ மடங்களுள் காபாலிக மடம், பாசுபத மடம், காளாமுக மடம் எனப் பலவகை இருந்தன. காபாலிகர் மடம் காஞ்சி-ஏகாம்பரநாதர் கோவிலை அடுத்து இருந்தது என்பதை மந்தவிலாசத்தைக் கொண்டு குறிப்பாக உணரலாம். காஞ்சியில் பாசுபதர் இருந்தனர் என்று அதே மத்தவிலாசம் கூறலால், அவர்கட்கும் தனி மடம் இருந்திருத்தல் வேண்டும் என்பது தெரிகிறது. மயிலாப்பூர் கபாலீசர் கோவிலில் அல்லது அதனை அடுத்துக் காபாலிகர் மடம் இருந்திருத்தல் வேண்டும். கொடும்பாளுர் முதலிய இடங்களிற் காளாமுகர் மடங்கள் இருந்தன. இவற்றுள் பின்னவர் வைத்து நடத்திய மடங்களே சிறப்பெய்தின என்றுகங்கநாட்டு வரலாற்றைக்கொண்டு உணரலாம்.

கி.பி.ஏழாம் நூற்றாண்டில்-அப்பர், சம்பந்தர் காலத்தில் தமிழ்நாட்டில் ஏறத்தாழ 20 தளிகளின் மடங்கள் இருந்தன என்பதையும், அப்பூதி அடிகள், குங்குலியக் கலயர், முருக நாயனார், சம்பந்தர், அப்பர் முதலியோர் மடங்கைளஏற்படுத்தினர் என்பதையும் வரலாற்றுச் சிறப்புடைய பெரிய புராணத்திலிருந்து நன்கறியலாம். இவற்றிற்குப் பட்டயச் சான்று இல்லை. (சோழர் காலத்துப் பட்டயச் சான்றுகள் உண்டு) எனினும் இவை இருந்திருத்தல் வேண்டும் என்பதைமெய்ப்பிப்பனபோல, (சுந்தரருக்குமுற்பட்ட நந்திவர்மன் காலத்துப் பட்டயம் ஒன்றில்-கச்சி மேற்றளியைச் சார்ந்த மடம் ஒன்று குறிப்பிடப்பட்டுள்ளது. இம் மேற்றளியிற் பாடுங்கால் அப்பர் ‘கல்வியிற் கரையிலாத காஞ்சி மாநகர்’ என்று கூறலை நோக்க, அவர் காலத்திலேயே இம் மடம் இருந்திருக்கலாம் எனக் கோடலில் தவறில்லை.

காளாமுகர்

இக் காளாமுகர் பெரும் படிப்பாளிகள் சிறந்த ஒழுக்கம் உடையவர்கள் பக்தித் துறையை மேற்கொண்டவர்கள், மணல் மீது படுத்தல், மந்திரம் செபித்தல், பதிகங்கள் பாடல், இறைவனைப் பற்றிப் பாடி ஆடுதல், உழவாரப்பணி புரிதல் முதலியவற்றில் ஈடுபட்டிருந்தனர்; ‘அவர்களை எந்நேரமும் மாணவர் சுற்றிக் கொண்டு இருப்பர்’ என்று கங்க நாட்டுக் கல்வெட்டு ஒன்று கூறுகின்றது. அவர் தம் பெயர்கள் ‘ராசி, சக்தி, அபரண’ என்ற முடிபுகளைப் பெற்றவை. அவருள் மணமானவரும் உண்டு; மணமற்றவரும் உண்டு. இருதிறத்தாரும் எண்வகை யோகங்களிற் பயிற்சி பெற்றவர். எனினும் மணமற்ற குருமாரே சிறப்பாகக் கருதப்பட்டனர். இவர்கள் மடங்கட்குத் தலைவர்களாகவும், கோவில் கண்காணிப்பாளராகவும், குருமார்களாகவும், சமயக் கல்விச்சாலைத் தலைவர்ககளாகவும் இருந்து வந்தனர். இவர்கள் தங்கள் அளப்பரிய பல துறைக் கல்வியால் நாட்டிற் செல்வாக்குப் பெற்றிருந்தனர். இவர்கள் ஹொய்சளர் காலத்தில் ‘இராசகுரு’ என்ற உயர்நிலையில் இருந்து வந்தனர். இவர்களிடம் பேரரசர்கள் சீடர்களாக இருந்தனர். இதனைப் பிற்காலச் சோழர் கல்வெட்டுகளும் மெய்ப்பிக்கின்றன.

பாடத்திட்டம்

மடங்கள் கற்பித்த பாடங்களில் இலக்கணம், தரிசனங்கள், சித்தாத்தம்,[13] யோகம் அறநூல்கள், புராணங்கள், செய்யுள், நாடகம், தருக்கம், இசை, ஓவியம் முதலியன குறிப்பிடத்தக்கவை. [14]பல்லவர் கல்வெட்டுகளையும் பட்டயங்களையும் அணுகி ஆராயின், இதுகாறும் கூறப்பெற்ற அனைத்தும் பல்லவ நாட்டு மடங்கட்கும் பொருந்தியவையே என்பதை அறியலாம்.

மடத்து ஆட்சிக் குழுவினர்

காவேரிப்பாக்கத்து வரதராசப் பெருமாள் கோவிலில் நிருபதுங்கன் காலத்துக் கல்வெட்டில், ‘மடத்துச் சத்தபெருமக்கள்’ என்பது காண்ப்படுகிறது. இத் தொடரால், ‘மடத்தை மேற்பார்க்க அறிஞர் எழுவர் இருந்தனர்’ என்பது தெளிவாகிறது. அவர் ‘அறிஞர் என்பதனாலும், எழுவர்’ என்பதானலும், மடத்துப் பணிகள் பல என்பதும், அவற்றை மேற்பார்க்கவோ ஆட்சி நடத்தவோ எழுவர் தேவைப்பட்டனர் என்பதும் நன்கு விளங்குகின்றன அல்லவா?

மடத்து ஆட்சி

‘சைவ சமய குரவர் தம் அடியார் பரிவாரங்களுடன் மடங்களில் தங்கி இருந்தனர்; அப்பர் திருப்பூந்துருத்தியில் மடம் ஒன்றை உண்டாக்கினார்; அங்கு இருந்துகொண்டு பல பதிகங்கள் செய்தார்; பஞ்சகாலத்தில் அப்பரும் சம்பந்தரும் திருவிழிமிழலையில் இருந்த இரண்டு மடங்களில் தங்கி இருந்தனர்’ என்பன போன்ற பல செய்திகளை நோக்க, ‘மடத்துச் சத்த பெருமக்கள்’ எனவரும் கல்வெட்டுத் தொடரையும் நோக்க. ‘பல்லவர் காலத்தில் பல ஊர்களில் சிறந்தகோவில்களை அடுத்து மடங்கள் இருந்தன.அவை ஒரு குழுவினர் மேற்பார்வையில் நடைபெற்று வந்தன. அடியார்க்கு வேண்டிய வசதிகள் அளித்தன. சமய வளர்ச்சிக்குரிய சிறந்த கலைப்பீடங்களாக இருந்தன’ என்பதை நன்கு உணரலாம். பல்லவப் பேரரசர் கோவில்களில் அமைத்த வியத்தகு ஏற்பாடுகளுடன், மடங்களிலும் தக்க ஏற்பாடுகள் செய்திருந்தமையாற்றான் சமயகுரவர் கவலையின்றி உற்சாகத்துடன் சமயப் பிரசாரத்தைப் பலமாக நடத்தி வந்தனர் போலும்!

பெளத்தர் கலை இடங்கள்

பல்லவர் காலத்தில் ஸ்ரீபர்வதம் எனப்படும் நாகார்ச்சுனமலை, வேங்கியை அடுத்த குண்டப்பள்ளி, தான்ய கடகம் முதலிய இடங்களில் பெளத்தவிகாரங்களும் பள்ளிகளும் இருந்தன என்பதை இன்றும் அங்குக் காணக்கிடக்கும் சிதைவுகள் கொண்டு நன்கறியலாம். காஞ்சி, மணிமேகலை காலத்திற் சிறந்த பெளத்த நகரமாக இருந்ததை இலக்கியம் கொண்டறியலாம். மத்த விலாசம், இயூன் - சங் குறிப்பு இவை கொண்டு கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் பெளத்த விகாரங்கள் காஞ்சியில் இருந்தன என்பதை அறியலாம். கி.பி. 7 ஆம் நூற்றாண்டினரான சம்பந்தர் தஞ்சைக் கோட்டத்தில் உள்ள போதி மங்கை (இக்காலப் ‘பூத மங்கலம்') என்னும் ஊரில் இருந்த புத்தருடன் வாதிட்டு வென்றார் என்னும் குறிப்பால், தஞ்சைக் கோட்டத்தில் பெளத்தர் இருந்தமை அறியலாம். திருமங்கை ஆழ்வார் நாகையில் இருந்த பெளத்தவிகாரத்துப் பொன் விக்கிரகம் ஒன்றைக்கவர்ந்து வந்தனர் என்று குருபரம்பரை கூறலால், இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் நாகையில் பெளத்தர் இருந்தனர் என்பது தெளிவு. இவ் விடங்களில் எல்லாம் பெளத்தர் தம் சமயக் கல்வியைத் தம்மைத் தேடி வந்த மக்கட்கு ஊட்டி வந்தனர் என்பது மிகையாகாது.

சமணர் கலை இடங்கள்

பாதிரிப்புலியூர்-மடம்

பல்லவர் ஆட்சிக் காலத்தில் தென் இந்தியாவில் சிறந்த சமண மடம் பாதிரிப்புலியூரிற்றான் (பாடலிபுத்ரம்) இருந்தது. ‘லோக விபாகம்’ என்னும் சமண நூல் பாலி மொழியிலிருந்து வடமொழியில் மொழி பெயர்க்கப்பட்ட இடம் பாதிரிப்புலியூரே ஆகும் அன்றோ? கி.பி. 5ஆம் நூற்றாண்டில் அந்த மடத்தில் புகழ்பெற்ற சிம்மசூரி, சர்வநந்தி என்னும் திகம்பர சமணப் பேரறிஞர் வடமொழியிலும் பிராக்ருதத்திலும் புலவராய் விளங்கினர். கி.பி. 7ஆம் நூற்றாண்டில் மருள் நீக்கியார் (அப்பர்) அம் மடத்திற் சேர்ந்து, சமணர் நூல்களைக் கற்றுப்புத்தரைவாதில் வென்று, மடத்துத் தலைவராகித்தருமசேனர் என்னும் பட்டமும் பெற்றுத் திகழ்ந்தார்.[15] இங்ஙனம் இம் மடம் பெரிய கலைப்பீடமாக இருந்தமையாற்றான். இடைக்காலப்

பல்லவருள் ஒருவனான முதலாம் சிம்மவர்மன் (கி.பி. 436-450) இம் மடத்தை நன்கு ஆதரித்தான் என்பது, ‘லோக விபாகம்’ என்னும் நூலைக்கொண்டு குறிப்பாக உணரலாம். இவனுக்கு அடுத்தவனாக இம் மடத்தைப் பெரிதும் ஆதரித்தவன் மகேந்திரவர்மன் ஆவன் அக்காலத்திற்றான் அப்பர் இங்குத் தருமசேனராக இருந்தார். அவர் சைவராக மாறினதும் அரசனும் நன்கு யோசித்துச் சைவனாக மாறினான்; பாதிரிப்புலியூர் மடத்தை அடியோடு அழித்து, அப் பொருள்களைக் கொண்டு திருவதிகையில் கோவில் கட்டி, அதற்குக் ‘குணதர ஈசுவரம்’ என்று தன் பெயரிட்டான் என்பன பெரியபுராணத்தால் அறிகிறோம். இந்நிகழ்ச்சியால், அறிவுக் களஞ்சியமாக இருந்த சமண மடம் அழிந்தது. சமணர், பேரரசன் ஆதரவை இழந்தனர். அதன் பிறகு பாடலிபுரத்துச் சமணர் பெருமை பிற்கால வரலாற்றில் கேட்கப்படவே இல்லை.[16]

திருப்பருத்திக்குன்றம்

காஞ்சிபுரத்தை அடுத்துள்ள இந்த இடம் சமணகாஞ்சி எனப்படும். இது பல்லவர் காலத்தில் மிக உயர்ந்த நிலையில் இருந்த இடமாகும். இது வேகவதி யாற்றங்கரையில் காஞ்சிக்கு இரண்டு கல் தொலைவில் உள்ள கலைப்பீடமாகும். இந்த இடத்தில் இரண்டு கோவில்கள் உள்ளன. ஒன்று பல்லவர் காலத்துக் கோவில் என்னலாம்; மற்றொன்று பிற்காலத்ததாகலாம். இத் திருப்பதியைப் பற்றி அறிஞர் T.N. இராமச்சந்திரன்[17] என்பார் அழகிய ஆராய்ச்சி நூல் ஒன்றை எழுதியுள்ளார். இங்குள்ள ஓவியங்கள் பழையன: மூர்த்தங்கள் பழையன; பல்லவர் காலச் சிற்ப-ஓவியக் கலைகளை ஓரளவு இங்குக் கண்டு மகிழலாம். இச் சிற்றுர் பல்லவர் காலத்திற் சிறப்புடையதாக இருந்திருத்தல் வேண்டும் என்பது பார்த்தவுடனே நன்கு வெளியாகிறது. திருப்பருத்திக்குன்றம் பல்லவர் காலத்தில் சமணக் கலையைப் பரப்ப அமைந்திருந்த நல்லிடம் என்பதில் ஐயமில்லை. மைசூர் - திகம்பர சமணர். ‘திகம்பர சமணர் கலைப்பீடங்கள் நான்கனுள் சமண - காஞ்சி ஒன்று’ என்று கூறல் இதற்கு அரண் செய்தல் காண்க. எனினும், இது பிற்காலச் சோழர் காலத்திற்றான் பெருஞ் சிறப்புப் பெற்றது.

தமிழ்க் கல்வி

பல்லவர் ஆட்சியில் மக்கள் கல்வி, வாணிகம், சமயம், இசை, சிற்பம், ஓவியம், நடனம், நாடகம், முதலிய பல துறைகளில் வளர்ச்சி பெற்றனர். வடமொழிக் கல்லூரிகள் இருந்தன என்பதற்குச் சான்று இருப்பினும், தமிழ்ப்பள்ளிகள் இல்லை என்பது அறிவுடைமை அன்று. தமிழ்க் கல்வெட்டுகள், தமிழ்ப் பாடல்கள் முதுலியன இருத்தலை நோக்க, ‘பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய, சைவ-வைணவத் திருமுறைகள் இருத்தலை நோக்க, தமிழ் நாட்டில் பல்லவர் அரசியல் தமிழ்மொழியிலேயே நடந்திருத்தலைப் பட்டயங்களும் கல்வெட்டுகளுமே அறிவித்தலைக்கான, பல்லவர் ஆட்சியில் தமிழகம் தமிழ் மணத்தில் தழைத்திருந்தது என்பதை உறுதியாகக் கூறலாம். எனவே, தமிழ் நாட்டு ஆடவர் பெண்டிர் பலருள் சிலரேனும் மேற்கூறிய பல கலைகளிலும் பண்புற்று விளங்கினராதல் வேண்டும் எனக் கோடல் தவறாகாது. அறுபான்மும்மை நாயன்மார் வரலாறுகளை நோக்க - அவர்கள் சமயப்பற்றும் தமிழ்ப்பற்றும் பல்கலை உணர்ச்சியும் காண - பல்லவர் அரசாட்சியின் மேம்பாடு குன்றின்மீதிட்ட விளக்கென ஒளிரா நிற்கின்றது. அந் நாயன்மார் மனைவியர் ஒழுகலாற்றை நோக்கப் பல்லவர் காலத்தில் கற்புக்கடம் பூண்டபொற்புடைப் பலர் பல்லவர் நாட்டில் பல்கி இருந்தனர் என்பது விளங்குகின்றது. இங்ஙனமே திருமங்கையாழ்வார், திருமழிசை ஆழ்வார் முதலிய வைணவப் பெரியார்களும் வாழ்ந்த காலம் இதுவே ஆகும். வாதங்களில் வல்லவரான சமணரும் புத்தரும் வாழ்ந்த காலமும் தத்தம் கலைகளை வளர்த்து மறைந்த காலமும் பல்லவர் காலமே ஆகும். இதுகாறும் கூறியவற்றால், பல்லவர் ஆட்சியில் இருந்த மக்கள் பொதுக் கல்வி அறிவும், சமயக் கல்வி அறிவும், பிற கலைகளில் அறிவும் பண்படப்பெற்றிருந்தனர் என்பதைப் பாங்குறஉணரலாம்.[18]


  1. “Moreas’s “The Kadamba Kula,’ p. 14.
  2. N.V.K. Rao’s “Gangas of Talakad’, pp.257-258.
  3. Ep.Ind.Vol. XVIII p.II 11
  4. இப்பெயர் மூன்றாம் நந்திவர்மற்கு உரியது.
  5. இச் செய்திகளை விளக்கமான படக்குறிப்புடன் எனக்கு உதவியர் புதுவை. ரா.தேசிகப்பிள்ளை பி.ஏ., பி.எல்., அவர்கள் ஆவர்.
  6. நான் புதுவை ரா. தேசிகப்பிள்ளை அவர்களுடன் சென்று இவ்விடத்தைப் பார்வையிட்டேன். இங்குத் தளவாயாக இருப்பவர் ஆராய்ச்சி துறையிற் பெயர்பெற்ற துப்ராய் துரை மாணவர். அவர் உடன் வந்து பல இடங்களைக் காட்டித் தாம் கொண்ட கருத்துக்களையும் விளக்கினார்.
  7. இச் சிற்றுார்களின் செயல்கள் அனைத்தும் தேவாரத் திருமுறைகளில் பரக்கக் காணலாம்.
  8. M.V.K. Rao’s “Gangas of Talakad’, p.265.
  9. சாளுக்கிய நாட்டிலும் பிரம்மபுரிகள் பல இருந்தன. இன்றைய காம்பூர் என்பது பிரம்மபுரிகள் சிதைவேயாகும். அதுவும், சினையாகு பெயராகி (சீகாழியைப்போல, நகரத்தையே குறிக்கலாயிற்று)
  10. Ep.Ind. Vol. XV. p.250
  11. ‘உலகத்தோடொட்ட ஒழுகல் பலகற்றும்
    கல்லார் அறிவிலாதார்’ என்ற தமிழ் மறை நோக்குக.
  12. S.I.I. Vol. II, p.346.
  13. ‘இராசசிம்மன் சைவ சித்தாந்தத்தில் வல்லவன்’ என்று கயிலாசநாதர் கோவிற் கல்வெட்டுகள் கூறுகின்றன. S.I.I. Vol.I.
  14. M.V.K. Rao’s “Ganga of Talakad’, pp.267-269.
  15. அப்பர் புராணம், செ.37-40
  16. திருவதிகை-கோவிலுக்கு ஒரு கல்தொலைவில் பாழ்பட்டுக் கிடந்து இப்போது வெளிக்கொணரப்பட்ட சிறிய கோவிலே ‘குணதர ஈச்சுரம்’ என்று அறிஞர் கூறுகின்றனர்.
  17. Vide “Tiruparuthikunram and its Temples’.
  18. தமிழ்க் கல்வி விளக்கம் ‘இலக்கியம்’ என்னும் தலைப்பில் விவரமாகத் தரப்படும்.