பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்/ஆய்வினின்றும் புலனாகும் செய்திகள்

விக்கிமூலம் இலிருந்து

ஆய்வினின்றும் புலனாகும் செய்திகள்

1. ஐரோப்பியக் (கிரேக்க, உரோமானிய) கட்டடக் கலைக்கு இணையான உயர்த்திறன் தமிழர் கட்டடக் கலைக்கு இருந்துள்ளது.

2. ஒரு கட்டடத்துக்கு மனை, மரம், திசை, நாள், கோள் முதலிய அனைத்தும் ஆய்ந்து, தேர்ந்து கொண்டு செயற்படும் திறனைத் தமிழர் பெற்றிருந்தனர்.

3. கட்டடக் கலை மரபு பற்றியே தமிழகத்தில் பல்வேறு நூல்கள் தோன்றிச் சிறந்துள்ளன. திராவிடக் கட்டடக் கலை என்ற தனிப் பிரிவே உருவாகியிருந்துள்ளது.

4. கோயில்களை அமைப்பதில் கலையழகும், நுணுக்கமும் சிற்ப வேலைப்பாட்டுத் திறனும், படிப்படியான வளர்ச்சியும், தமிழர் பெற்றுயர்ந்துள்ளனர். வானுயர மாடங்களும், கோபுரங்களும், தமிழரின் கட்டடக் கலைச் சிறப்பின் மகுடமாயிருந்துள்ளன.

5. அரண்மனைகளை, அவற்றுக்குரிய உட்பிரிவுகளுடன் வகுத்து அமைக்கும் வல்லமையும், திறனும் தமிழர் கட்டடக் கலைக்கு இருந்துள்ளன.

6. கோட்டை, கொத்தளம், அகழி முதலியவற்றைப் பாதுகாப்புபடை வளத்துக்கு ஏற்பச் செம்மையாகத் தமிழர் அமைத்துள்ளனர்.

7. மதில்களில் பகைவரை எதிர்த்தழிக்கும் பொறி நுணுக்கங்களைப் பண்டைப் பழங்காலத்திலேயே தமிழர் அறிந்துள்ளனர் என்ற செய்தி பெருமிதம் கொள்ளச் செய்கிறது.

8. கோயில், அரண்மனை, வீடு ஆகிய முப்பிரிவுகளிலும் ஒவியம், சிற்பம் முதலிய துணை நுண்கலைகளையும் இணைத்து அழகு சேர்த்துள்ளமை வியப்புக்குரியது.

9. கரிகாலன், கல்லணை முதலியவற்றைக் கட்டிய திறத்தால் நீர்ப்பாசனக் கட்டடக் கலையிலும் மிகப் பழங்காலத்திலேயே தமிழர் வல்லுநராயிருந்தனர் என்பதும், பளுவைத் தூக்கும் கருவிகள் இல்லாமலே தஞ்சைக் கோபுர மேல் தளக் கல்லைச் சாரம் கட்டித் துக்கியுள்ளனர் என்பதும் தமிழரின் பொறியியல், அறிவியல் திறனுக்குச் சான்று பகர்கின்றன.

10. அரங்கமைப்பு, கூத்து மேடை சமைத்தல், நாடக மேடை உருவாக்கல் போன்ற நிருமாணக் கலையிலும் (Recreational Architecture) தமிழர் வல்லவராயிருந்தனர் என்பது நாடகத் தமிழில் தமிழர் நனி சிறந்திருந்ததோடு, நாடக அரங்கமைப்புக் கலை நுணுக்கத்திலும் தன்னிகரற்று விளங்கினர் என்பதை நன்கறிய முடிகிறது.

11. கட்டிய கட்டடங்களுக்குள் உள்ளணி செயல் (Interior Decoration) எனப்படும் சுவர்களை அழகு செய்தல், திரைச்சீலை, ஓவியங்கள் வரைதல், முத்து மாலை, மணிமாலைகள் தோரணங்களால் அலங்கரித்தல் ஆகிய ஒப்பனைக் கலையிலும் உயர்ந்திருந்துள்ளனர்.

12. நகரமைப்புக் கலையில் இந்நாளைய மேலை நாட்டுப் பாணியையும் விஞ்சி இருந்துள்ளனர்.

13. பூம்புகார் நகரம் மிகச் சிறந்த நகரமைப்பிற்கு எடுத்துக்காட்டாக, மருவூர்ப்பாக்கம், நாளங்காடி, பட்டினப்

பாக்கம் என்ற பிரிவுகளுடன் ஆயிரங்கண்ணோன் அருங்கலச் செப்புப் போல அமைந்திருந்துள்ளது.

14. மதுரை நகரம் அகநகர், புறநகர் என்ற பிரிவுகளுடன், தாமரைப்பூப் போன்ற வடிவில் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தது.

15. தெருக்களின் கீழே யானைகள் நுழைந்து செல்லுமளவு பெரிய நீர் செல்லும் வழிகள் (Underground ways) அமைக்கப் பட்டிருந்துள்ளமை வியந்து பாராட்டுதற்குரியது.

16. நகரங்கள் அமைப்பில் பெரும்பகுதி மரக்கூட்டங்கள், சோலைகள், இளமரக்காக்கள், உய்யான வனங்கள் ஆகிய காற்றோட்டம், சுற்றுப்புறத் தூய்மை (Ecology) ஆகியவற்றுக்கு ஏற்ப ஒழுங்கு செய்யப்பட்டிருந்தமையும் ஏரிகள், நீர்நிலைகள், நீரூற்று ஆகியன தக்கவாறு அமைக்கப் பட்டிருந்தமையும் தமிழரின் ஆரோக்கிய வாழ்வின் நாட்டத்தைக் காட்டுகின்றன.

17. நகரமைப்பில் நாளங்காடி (பகல் நேரக் கடை) அல்லங்காடி (இரவு நேரக் கடை) என வகுக்கப்பட்டு அவ்வவற்றிற்கேற்ற வடிவத்தில் வெவ்வேறு வகையான வீதிகள் ஒதுக்கப்பட்டிருந்தமை வீதியமைப்புக் கலையில் தமிழரின் தனித்திறனைக் காட்டுகிறது.

18. பூம்புகார் வர்த்தக நகரமாகவும், மதுரை புலவர்கள் நகரமாகவும், காஞ்சி கலைகளின் நகரமாகவும் கண்டோர் கருதத் தக்கவாறு முறையுற அமைந்திருந்தது.

19. நகரமைப்புக் கலை நூல்களின் கண், தாமரை போல், சாமரம் போல், இரத்தினக்கல்லின் ஒளிபோல், நந்தியா வர்த்தப் பூப்போல் சுவஸ்திகம் போல் ஊர்களை அமைத்தல் வேண்டும் என்று இலக்கணமுறை வகுத்திருந் தமையும் அம்முறை வழுவாது அவை அமைக்கப்பட்டுள்ளமையும் தெளிவாய்த் தெரிகின்றன. -

20. சூழ்நிலைக்கேற்பத் திட்டமிடல் (Planning the Environment) பயன் கருதித் திட்டமிடல் (Planning for use) பொருள் நிலை கருதித் திட்டமிடல் (Economic planning) ஆகிய மூவகையிலும் பண்டைத் தமிழர் கட்டடக் கலை பெரிதும் பொருத்தமுற அமைந்திருந்துள்ளது.

21. வாழுமிடம், குடியிருப்பிடங்கள் (Domestic) வழிபடும் இடங்களான கோயில், விகாரம், கோட்டம், அரசு நிர்வாகக் கட்டடங்கள், கேளிக்கை அரங்குகள், தொழிற்கூடங்கள், வாணிகக் கூடங்கள் ஆகியன அவ்வவற்றிற்குரிய தனியமைப்பு முறைப்படி கட்டப்பட்டன.

இவையனைத்தும், பண்டைத் தமிழர் தன்னிகரற்ற நனி நாகரிக மக்களாய் வாழ்ந்தனர் என்ற உண்மையை எண்ணியெண்ணி நாம் உவப்புறச் செய்வன.

♫♫