உள்ளடக்கத்துக்குச் செல்

பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்/நகரமைப்பில் சமுதாயங்கள்

விக்கிமூலம் இலிருந்து
இயல் ஒன்பது
நகரமைப்பில் சமுதாயங்கள்

தமிழ்க் காப்பியங்களிலும், இலக்கியங்களிலும் புலவர்கள் பாடியிருக்கிற பழந்தமிழர் நகரமைப்பு முறையில் எந்தெந்தச் சமுதாயங்கள் எபபடி எப்படி, எங்கு எங்கு வாழ்ந்தன என்பதை ஒரளவு அறிய முடிகிறது. கோயிலை அல்லது அரசனின் அரண்மனையை மையமாக வைத்து நகரமைப்பை வருணிக்கும் நூல்களில் எந்தெந்தச் சமுதாய மக்கள், எந்தெந்தத் தெருக்களில், எப்படி வாழ்ந்தார்கள் என விவரிக்கப்படுவதை ஓர் ஆய்வுக் கண்ணோட்டத்தில் காண முயலலாம்.

ஒரு நாட்டின் எல்லா மக்களும், எல்லா இடங்களிலும் இணைந்து கலந்து வாழும் இன்றைய சமத்துவச் சமுதாய அமைப்போடு ஒப்பிடாமல் அன்றைய முடியாட்சி முறையில் சமுதாயங்கள் அமைந்திருந்த பாங்கை மட்டும் ஆராய்வதே பொருந்துவதாகும். காவிரிப்பூம்பட்டினம், மதுரை முதலிய கோநகரங்களைப் பற்றிய குறிப்புகள் இந்த ஆராய்ச்சிக்குப் பயன்படக் கூடும். சிலம்பு காட்டும் பூம்புகார் நகரமைப்பை முதலில் காணலாம். -

பரதர் மலிந்த பயங்கெழு மாநகர்1
குலத்திற் குன்றாக் கொழுங்குடிச் செல்வர்2

என்று பூம்புகார் நகரில் வெளிநாடுகள் சென்று வாணிபஞ் செய்யும் 'கடலோடிகள்' உண்டென்றும், பெருத்த செல்வர்கள் உண்டென்றும், கோவலன் கண்ணகியின் இல்லறம் பற்றிக் கூறும் பகுதியில் பொதுவாகக் கூறுகிறார் இளங்கோ அடிகள். வர்த்தக சமுதாயம் (Business Community) என இன்று நாம் பொதுவில் சுட்டிக் கூறுவோரைப் பற்றிய கருத்துகளாகவே அமைகின்றன் இவை. விரிவான செய்திகள் சிலம்பிலேயே பின்னர் வருகின்றன.

பின்னர் இந்திர விழவூரெடுத்த காதையில்தான் காவிரிப்பூம்பட்டின நகரின் அமைப்பில் எங்கெங்கே, எந்த எந்தச் சமுதாயத்தினர் அல்லது தொழில்களைச் செய்வோர் வாழ்ந்தனர் என்பது அதிகமாக விவரிக்கப்படுகிறது.

யவனர்கள், புலம்பெயர் மாக்கள், அன்றைய அடிக்கடி பயணம் செய்து இடம் மாறுவோர், வண்ணமும், சுண்ணமும், பூவும், புகையும், என்றிவை விற்கும் வாசனை வணிகர்கள், பட்டு, கம்பளி, பருத்தியாடை நெசவாளிகள், துணிகளில் அச்சுக் கட்டுவோர், பொன்னாலும், மணிகளாலும் அணிகலன்கள் செய்வோர், கூலவாணிகம் (தானிய விற்பனை) செய்வோர், உணவுப் பொருளாகிய பிட்டு விற்போர், அப்பம் சுடுவோர், வெற்றை கட்டுவோர், பஞ்சவாசம் விற்போர், தக்கோலம், இலவங்கங்கள், ஏலம், கர்ப்பூரம், சாதிக்காய், ஆட்டிறைச்சி விற்போர், எண்ணெய் விற்போர், வெண்கலம் விற்போர், கன்னார், தச்சர், கொல்லர், ஓவியர், குயவர், பொம்மை செய்பவர், தட்டார், பொற்கொல்லர், பாணர்கள், தோல் வேலையாளராகிய சக்கிலியர், துணியிலும், மூங்கிலிலும், சடை நெட்டிகளிலும் பல வேலைகள் செய்வோரும், இசைப் பிரிவினரும், கைவேலை, நுண் தொழில்களில் ஈடுபடுவோரும் வாழ்கிற மருவூர்ப்பாக்கம் என்கிறார் சிலப்பதிகார ஆசிரியர். நகரின் தொழில் வல்லுநர் குடியிருப்புப் பகுதியே இது. செய்யும் தொழில் அடிப்படையிலான சமுதாய அமைப்பே இங்கு கூறப்பட்டுள்ளது. கனரகத்

தொழில், நுண்கலை, கைவினை எல்லாமே பேரளவு இதில் அடங்கி விடுகிறது.3

அடுத்து இனி வருவது பட்டினப்பாக்கம் இராசவீதி (Kingsway) எனப்படும் செண்டு வெளிப்புறத் தெருவும், விழா வீதிகளும், வணிகர் குடியிருப்பும், மறையோர்களாகிய பஞ்சக்கிராமிகள் இருப்பும், வேளாளரும், மருத்துவ நூலாரும், சோதிட நூலாரும், பல முறைமையோடு இருக்கும் இருப்பிடங்களும், முத்துக் கோர்ப்பவர்களும், சங்கு அறுத்து வளை செய்பவர்களும், நின்றேத்துவார். இருந்தேத்துவார் தம் தெருக்களும், வைதாளியாடுவாரும், கடிகையார், சாந்திக் கூத்தர், களத்தாடும் கணிகையர், அகத்தாடும் பதியிலார், பூவிலை மடந்தையர் மடைப்பள்ளியாரடியார் தோற்கருவிகளை இசைப்பர். படைக்கும் உற்சவத்துக்கும் கொட்டுவார்,நகை வேழம்பர். குதிரை செலுத்துவோர், யானைப் பாகர்கள், தேர்ப் பாகர்கள், காலாட்படைத் தலைவர்கள் ஆகியோர் அடங்கிய பட்டினப்பாக்கம் என விவரிக்கப்படுகிறது. பல்வேறு சமுதாய மக்களை இன்று போல் சாதி வகைப்படுத்தாமல் தொழிற் சமுதாயமாக வகைப்படுத்தியுள்ள சிறப்புக் கூர்ந்து நோக்கத்தக்கது.4

இரு பாக்கத்திற்கும் நடுவே இருந்த நெருங்கிய மிடைமரச் சோலையில் "நாளங்காடி"5 இருந்தது எனக் கூறி மேலே போகிறது. காப்பியம், நாளங்காடியின் கூட்டமும் ஓசைகளும் வருணிக்கப்படுகின்றன.

மேலும் இதே சிலம்பின் புறஞ்சேரியிறுத்த காதையில், மதுரை நகரமைப்பு அகநகர்-புறநகர் என இரண்டாகப் பிரிக்கப்பட்டிருந்தது தெரிகிறது.6 ஆயர்-ஆடுமாடுகளை வளர்ப்போர்-பால் தயிர் நறுநெய் தருவோர் புறஞ்சேரியில் ஆயர்பாடி என்ற தனிப்பகுதியில் வாழ்ந்ததும் தெரிய வருகிறது. அரசர், மறையோர், வீரர், பொற்கொல்லர் முதலியோர் அக நகரில்7 இருந்தமையும் கூறப்பட்டு உள்ளது. பட்டினப்பாலை, மதுரைக் காஞ்சி முதலிய சங்க நூல்களில் கூறப்பட்டுள்ள இந்நகரங்களின் அமைப்பு முறையும் சமுதாய வாரியான குடியிருப்புகளும் கூட இதே வகையில்தான் உள்ளன.

சம்பிரதாயமான பிரம்ம சத்திரிய வைசிய எனத் தொடங்கும் சாதி முறைப்படியோ, நால்வருண முறைப்படியோ, சமுதாய அமைப்புகள் பழைய காவிரிப் பூம்பட்டின நகரிலும், மதுரையிலும் இருந்ததாகத் தோன்றும்படி கூறாமல், தொழில் முறை இயைபுக்கேற்ற வகையில் சங்க நூல்களும், சிலப்பதிகாரம் முதலிய காப்பியங்களும் கூறிய இந்நிலை பின்நாளில் காவிய, புராண, பிரபந்தக் காலங்களில் மெல்ல மெல்ல மாறியிருப்பதைக் காண்கிறோம்.

வெண்பா உத்தமசாதிக்கு, ஆசிரியப்பா அடுத்த சாதிக்கு என்று பிற்காலப் பட்டியல் நூல்கள் பாட்டுகளையும் சாதி சமுதாயங்களையும், முடிச்சுப் போட்டதைப் போல எல்லாக் காப்பியங்களிலும் புராணங்களிலும் நாட்டுப்படலம், நகரப்படலம் என்ற பெயர்களில் விரிவான பகுதிகள் சாதி அடிப்படையில் குடியிருக்கும் முறைகள் பழைய நகரங்களில் இருந்தாற் போல வருணனைகள் இடம் பெறத் தொடங்கி விட்டன. நாளடைவில் இம் முறை விவரிப்போ புதிய காப்பியங்களிலும், புராணங்களிலும் ஒருவகை மரபு போலவே ஆகிவிட்டது. கம்ப ராமாயணம், திருவிளையாடற் புராணம், காவிரிப்பூம் பட்டினம் பற்றிய சில புராண நூல்கள், பெரிய புராணம் ஆகியவற்றில் இம்முறை வந்துவிட்டது.

சங்க நூல்களிலும், பழங் காப்பியங்களிலும் கோநகர அமைப்புகளில் அந்தந்தச் சமுதாய மக்கள் வசித்த முறை அவரவர் தொழில்களின் அடிப்படையில் ஒரளவு நாகரிகமாகக் கூறப்பட்டதற்கும் பிற்காலக் காப்பியங்களிலும், புராணங்களிலும் அதே கோநகரங்களைச் சார்த்தி அவை, வெறும் சாதி சமய அடிப்படையில் மட்டும் கூறப்பட்டதற்கும் உள்ள வேறுபாடு நோக்கத்தக்கது. காஞ்சி, உறையூர், வஞ்சி போன்ற பிற கோநகரங்களிலும் இதே சமுதாய அமைப்பு முறைதான் நிலவியிருந்திருக்கிறது.

சில நகர்கள் தொழில் முறைப்படி சமுதாயக் குடியிருப் புக்களைக் கொண்டிருந்திருக்கின்றன. வேறு சில நால் வருண முறைப்படி கொண்டிருந்திருக்கின்றன.

பூம்புகார், மதுரை போன்ற நகரங்கள் வீதிகளின் அமைப்பு முறையிலேயே அங்கங்கே குடியிருந்த சமுதாயங்களின் இயைபு பொருந்தும்படி இருந்துள்ளன.8 பால் வேறு தெரிந்த நால் வேறு வகைத் தெரு9 எனவும் மதுரையில் சார்த்திக் கூறப்படுகிறது.

பூம்புகாரில் நாளங்காடியும் பல மன்றங்களும் வீதிகளைத் தவிர மக்கள் கூடும் சமுதாயப் பொது இடங்களாக (Community Center or Public Places) வாய்த்திருக்கின்றன.

இவ்வாறு பழந்தமிழர் நகரங்களில் சமுதாயப் பொருந்துமுறை நகரமைப்புக்கு இயைந்து அழகுற வாய்த்திருந்துள்ளமையை அறிகிறோம். -

எல்லாத் தமிழ் நகரங்களிலும் பெரும்பாலும் இதில் ஒரே வகைமை (Pattern) காணப்படுவது போற்றற்குரியதாகும்.

இனி இவ்வாய்வினின்றும் புலனாகும் செய்திகளை அடுத்துக் காணலாம்.

♫♫
.

குறிப்புகள் :

1. சிலம்பு 2:2
2.
"
2:8
3.
"
5:9-39
4.
"
5:40-58
5.
"
5:59-63
6.
"
6:189-195
7.
"
15:109
8.
"
14:183
9.
"
22:110