பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்/கட்டடக் கலையும் தமிழர் பண்பாடும்

விக்கிமூலம் இலிருந்து

இயல் மூன்று

கட்டடக் கலையும் தமிழர் பண்பாடும்

சங்க நூல்களில் கட்டடக் கலை பற்றிய செய்திகள் அங்கங்கே காணக் கிடைக்கின்றன. கட்டடக் கலையில் தமிழர்க்கு இருந்த ஈடுபாட்டையும் அக்கறையையும் அவற்றிலிருந்து அறிய முடிகிறது.

கை புனைந்து இயற்றாக் கவின் பெறுவனப்பு 1

என இயற்கையைத் திருமுருகாற்றுப்படையில் வருணித்த அதே நக்கீரர் பத்துப்பாட்டில் தம்முடைய மற்றொரு பாட்டாகிய நெடுநல்வாடையில் செயற்கைக் கலையாகிய கட்டடக்கலை பற்றிக் குறிப்பிடுகிறார்.

இக்காரணத்தால் அறிஞர்கள் நெடுநல்வாடையைக் கட்டடக்கலை நூல் என்னும் பொருள்படுகிற சிற்பப்பாட்டு என்றே கூறலாம் என்னும் அளவு துணிபு கொள்கின்றனா்.

“நக்கீரர் நெடுநல்வாடையில் பாண்டிமாதேவி படுத்திருந்த கட்டிலின் மேல் விதானத்துத் திரைச்சீலையில் மெழுகு வழித்து, ஓவியம் தீட்டியிருந்ததைக் குறிப்பிடுகிறார். அதில் மேடராசியில் ஞாயிறு திரியும் காலத்தில் திங்களஞ் செல்வனுடன் உரோகிணி மகிழ்ந்திருக்கும் காட்சி வரையப் பெற்றிருந்தது.

இவ் ஓவியக் காட்சி தேவியின் உள்ளத்தை உருக்கியது. மேலும் நக்கீரர்க்கு ஒவியம், சிற்பம், கட்டடக் கலை ஆகியவற்றில் ஈடுபாடு இருந்தமை நெடுநல்வாடையால் உணரப்படுகிறது.

அரண்மனை வகுத்துக் கட்டப்பட்ட முறையை, அது கால்கோள் செய்யப்பட்ட நாள் முதலாக எடுத்துரைக்கிறார்.

அரண்மனை வாயில் முற்றம், அந்தப்புரத்தின் அமைப்பு, அரசி படுத்திருக்கும் வட்டக் கட்டில், அதன் விதானம், படுக்கையின் அமைப்பு யாவும் சிற்ப உத்தித் திறனோடு புனையப்பட்டுள்ளன. கட்டிற்காலில் உருண்டு திரண்டிருக்கும் குடம் போன்ற உறுப்பைத் ‘தூங்கு இயல் மகளிர் வீங்குமுலை கடுப்பப் புடைதிரண் டிருந்த குடத்த” என்று நுட்பமாக விளக்குகிறார். அசையும் நடையினை உடைய மகளிர் என்பதனால் கருக்கொண்ட மகளிர் என்பதைக் குறிப்பாக உணர்த்தியிருக்கும் அழகிலேயே சிற்ப நுட்பம் உளதன்றோ? பாண்டியனுக்கு முன்னதாகப் பாசறைக்கண் நள்ளிரவில் தீவட்டி பிடித்துச் செல்லுகையில் வாடைக்காற்று வீசுவதால் அதன் சுடர் தெற்கே சாய்ந்து எரிவதையும் நக்கீரர் குறிப்பிடுகிறார்.

வடந்தைத் தண்வளி எறிதொறும் நுடங்கி
தெற்கு ஏர்பு இறைஞ்சிய தலைய நன்பல்
பாண்டில் விளக்கில் பரூஉச்சுடர் அழல

(நெடுநல். 173-75)

இக்காட்சியும் சிற்பத் திறனை நுட்பமாகக் குறிப்பிடுவதாகும். இங்கனம் வரும் பல பகுதிகளை நோக்கும் பொழுது நெடுநல்வாடையைச் சிற்பப் பாட்டு’ (Sculpture Poem) என்றே அழைக்கலாம் எனத் தோன்றுகிறது.2

'நாள் பார்த்தல் '

பழைய நம்பிக்கைகள் - பழக்க வழக்கங்களின் அடிப்படையில் எழுந்தவை என இவ்வாய்வின் முந்திய

இயலில் குறிப்பிடப்பட்ட' மனைநூல்' இலக்கணக் கூறுபாடுகளை' நெடுநல்வாடை’க் காலத்திலும் தமிழர்கள் கடைப்பிடித்திருக்கிறார்கள் என்பதற்கு அகச்சான்று கிடைக்கிறது.

தலைவி தங்கியிருக்கும் இல்லம் உள்ள அரண்மனையை எவ்வாறு தொடங்கிக் கட்டினார்கள் என்றுகூற வந்த நக்கீரர்,


... ... ... ... மாதிரம் விரிகதிர்
 பரப்பிய வியல்வாய் மண்டிலம்
 இருகோற் குறிநிலை வழுக்காது குடக்கேர்பு
 ஒருதிறஞ்சாரா வரைநாள் அமயத்து 3

என்று நாள் செய்து தொடங்கியதைக் கூறுகிறார். மனைநூற் கருத்தும்-நெடுநல்வாடையின் இப்பகுதியும் ஒத்து வருகின்றன. நாள் கோள்களின் நிலை பார்த்து நல்ல வேளையிலே கட்டடம் தொடங்கும் மரபையும் அம்மரபின் பழமையையும் அறிய முடிகிறது. மனைநூலின் நடையும் எழுதப்பட்ட காலமும் பழையதாகத் தோன்றவில்லை. எனினும் மனைநூற் செய்திகள் பழந்தமிழர் வாழ்வில் இருந்தவையே என்பதைத் தெளிய இந்த நெடுநல்வாடைப் பகுதி தகுந்த சான்றாகிறது.

திசைகளிலே விரிந்த கிரணங்களைப் பரப்பின அகன்ற
இடத்தை உடைய ஞாயிறு மேற்றிசைக்கட் சேறற்கெழுந்து
இரண்டிடத்து நாட்டின இரண்டு கோலிடத்துஞ் சாயா
நிழலால் தாரை போக ஓடுகின்ற நிலையைக் குறித்துக்
கொள்ளுந் தன்மை தப்பாதபடி தான் ஒரு பக்கத்தைச்

சாரப் போகாத சித்திரைத் திங்களின் நடுவிற்
பத்தினின்ற யாதோர் நாளிற் பதினைந்தா நாழிகையிலே
அங்குரார்ப்பணம் பண்ணி 4

என இதற்கு நச்சினார்க்கினியர் விளக்கம் எழுதியுள்ளார்.

'சிற்ப நூல்' என்றே உரையில் பெயர் குறிக்கப்படுகிறது. எனவே அக்காலத்திலேயே கட்டடக்கலை ஒரு கலையாக இருந்ததும் அதற்கென்று வரைவிலக்கணநூல் இருந்ததும் பெறப்படுகின்றன. கோலளவு, நூல் பிடித்தல் முதலிய கட்டடக் கலைச் செய்திகளும் பெறப்படுகின்றன. வாஸ்து தேவதை, திசைக் கடவுள்கள் முதலிய செய்திகளும் மனைநூலில் கூறியபடியே வருவதையும் காண்கிறோம்.

இப்போது வழக்கிலுள்ள' மனையடி சாஸ்தி'ரத்தில் கூட மனை கோலுவதற்கு மிகச் சிறந்த மாதமாகச் சித்திரையே கூறப்பட்டுள்ளது. நெடுநல்வாடையும் இதை உறுதி செய்கிறது.

கோயிலை (அரண்மனையை)க் கட்டுவது நல்ல நாளில் தொடங்கப்பட வேண்டுமாதலால் அதற்கு ஏற்பச் சித்திரை மாதத்து இடைப்பத்து நாளில் ஏற்ற தான ஒருநாளில் பகலின் நடுப்போதில் அங்குரார்ப்பணஞ் செய்தனர். பகலின் பதினான்கு நாழிகைக்கு மேற்பட்ட இரண்டு நாழிகை-அபிசித்து முகூர்த்தமென்று கொண்டாடப்படுமாதலாலும் அந்த முகூர்த்தம் எல்லாக் குற்றங்களையும் போக்குமென்பதும் சாதிட நூலார் கொள்கையாதலாலும் அம்முகூர்த்தத்தில் அங்குரார்ப்பணஞ் செய்தனர்.5

என விளக்குவார் வை. மு. கோ. அவர்கள்.

பொறியியல் வல்லுநர்

நூலறி புலவர் நுண்ணிதிற் கயிறிட்டுத்
தேஎங் கொண்டு தெய்வ நோக்கிப்
பெரும்பெயர் மன்னர்க் கொப்ப மனைவகுத்து 6

என்று மேலும் கூறப்படுகிறது.

இன்றைய பொறியியல் வல்லுநர்கள் (Construction Engineers) போல் அன்றும் கட்டடக்கலைத் திறன் வல்ல நூலறி புலவர் இருந்தனர் என்பதை நெடுநல்வாடையிலிருந்து அறிய முடிகிறது. கட்டடக்கலை நூல்களும் இருந்தன என்பது அறியக் கிடக்கிறது.

சிற்ப நூலை (கட்டடக் கலை நூலை) நன்கு துணுக்கமாக அறிந்த புலவர்கள் நூலை நேரே பிடித்துத் திசைகளை மாறாது குறித்துக்கொண்டு அவ்வத் திசைகளில் நிற்கும் தெய்வங்களையும் குறைவறப் பார்த்து அரச மரபினருக்கு ஏற்ப மனையை வகுத்தனர்.

என்கிறார் நக்கீரர்.

நூலைப்பிடித்து அளவும் திசையும் பார்க்கும் வழக்கம் இன்றும் கொத்தனார்களிடையே உள்ளது. வாயுமூலை, ஈசானியமூலை, அக்கினிமூலை, நிருதிமூலை 7 என்று மனைநூலில் திசைகளும் தெய்வங்களும் கூறப்படுவது இங்கே நினைவுகூரத் தக்கது.

இப்பகுதிக்கு உரை எழுதுங்கால் உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்க்கினியர் 'மனை வகுத்து’ என்பதற்கு மட்டும், "மனைகளையும் வாயில்களையும் மண்டபங்கள் முதலியவற்றையும் கூறுபடுத்தி”8 என்று பதசாரம் எழுதுகிறார். அரசர்க்குரிய கட்டடத்தின் உட்பிரிவுகள் கூறப்படுகின்றன. “மனையை வாயில், மண்டபம், முற்றம், கூடம் முதலியவாகக் கூறுபடுத்து" 9என இன்னும் தெளிவாக விளக்குகிறார் வை. மு. கோபாலகிருஷ்ணமாசாரியார்.

நெடுநல்வாடையே மேலும் கூறுகிறது :

ஒருங்குடன் வளைஇ ஓங்குநிலை வரைப்பின்
பருவிரும்பு பிணித்துச் செலவாக்குரீ இத்
துணைமாண் கதவம் பொருத்தி யினைமாண்டு
நாளொடு பெயரிய கோளமை விழுமரத்துப்
போதவிழ் குவளைப் புதுப்பிடி காலமைத்துத்
தாழொடு குயின்ற போரமை புணர்ப்பிற்
கைவல் கம்மியன் முடுக்கலிற் புரைதீர்ந்து
ஐயவி அப்பிய நெய்யணி நெடுநிலை
வென்றெழு கொடியொடு வேழஞ் சென்றுபுகக்
குன்று குயின்றன்ன வோங்குநிலை வாயில் 10

முற்றம், கூடம், மண்டபம் என்னும் உட்பிரிவுகளை எல்லாம் ஒருசேரக் கவிய வளைத்து உயர்ந்த நிலையையுடைய மதில் என வருகிறது.

கட்டவேண்டிய இடத்தை எல்லாம் முன்னதாக அளந்துகொண்டு இன்ன இன்ன இடத்தின்கண் இன்ன இன்ன கோள்கள் உள்ளன என்பது முதலியவற்றை அறிந்து எந்தெந்தத் திசையில் எந்தெந்தத் தெய்வம் நிற்பதால் நன்மை விளையுமோ அவற்றை அறிந்து நியமித்தபின் தொடங்குக என்றவாறாயிற்று. 11

திசை மரபு

தெற்கு இயமன், வடக்கு குபேரன்,கிழக்கு இந்திரன், மேற்கு வருணன், தென்கிழக்கு அக்கினி, தென்மேற்கு நிருதி, வடமேற்கு வாயு, வடகிழக்கு ஈசானன் என்பது மனைநூல் கூறும் "திசைக்கடவுளர் விளக்கம்" (9 விளக்கப்படம் 1) இத்தெய்வங்கள் நிற்கும் நிலைகளை அறிந்து கட்டடம் அமைப்பது நக்கீரர் காலத்தும் வழக்கமாக இருந்தமை அறியப்படுகிறது. -

‘நூலறி புலவர்' என்ற தொடருக்குச் சிற்ப நூலையறிந்த தச்சர் 12 என நச்சினார்க்கினியர் கூறும் விளக்கம்

காணத்தக்கது. நூலாவது 'கிருஹ நிர்மாண சாஸ்திரம் 13(வீடு கட்டுதல் பற்றிய நூல்) என்பார் வை. மு. கோபால கிருஷ்ணமாசாரியார்.

கட்டட மரபுகள்

இந்நெடுநல்வாடை பகுதியால் தெரியவரும் கட்டடக் கலைத் தொடர்பான பழக்க வழக்கங்களும் பண்பாடுகளும் கூர்ந்து கவனிக்கத் தக்கவை.

1) கதவு முகப்பில் குவளைப்பூ ஏந்திய இரு பெண் யானைகளினிடையே திருமகள் தோற்றம் அமைப்பது மங்கலமாகக் கருதப்பட்டது. 14

2) நிலைப்படியில் வெண்றிறுகடுகு அரைத்து நெய் கலந்து அப்புகிற பழக்கம் மரபாயிருந்தது. 15

3) முற்றத்தில் மணல் பரப்புவது வழக்கமாயிருந்தது. 16

ஆணிகளும் பட்டங்களுமாகிய பெரிய இரும்புகளாலே கட்டப்பட்டுச் செவ்வரக்கு வழித்துத் தாழ்ப்பாள் பொருத்திய இரண்டாய் மாட்சிமைப்பட்ட கதவைச் சேர்த்தி உத்தரமென்னும் நாளின் பெயர் பெற்ற சிறப்பமைந்த உத்தரக்குறுக்குக் கட்டையை வைத்துப் பிடி ஏந்திய குவளைப் பூவுடன் இடையே திருவிளங்க நிலை ஏற்பாடு செய்து கைத்தொழில் வல்ல தச்சன் இடைவெளி தெரியாது இணைத்த மரயாப்பின் வெண் சிறுகடுகும் நெய்யும் அணிந்த படியில் எழுகின்ற கொடியுடன் யானை புகும் மலையை நடுவே திறந்தாற் போன்ற கோபுர வாயில் என்று நெடுநல்வாடை அரசனின் கோயிலை விவரிக்கிறது.

உத்தரத்துக்கும் நிலைக்கும் மரங்களைப் பயன்படுத்தினர் என்பதையும் பல மரங்களைச்சந்து தெரியாமல் இணைத்து இழைப்பது உண்டென்பதையும், கோயில்கள் போல் அரசன் அரண்மனைக்கும் கோபுர வாயில் உண்டு

என்பதையும் கதவுகள் ஒன்றினுள் ஒன்றாக இரண்டாய் அமையும் எனவும் இதிலிருந்து அறிய முடிகிறது.

பழந்தமிழர் கட்டடக்கலை மரபான வாயிற்படியில் யானைகளிடையே திருமகள் சிலை அமைத்தல் (கஜ லட்சுமி) இன்றும் நடைமுறையில் இருப்பதைக் காண்கிறோம்.

கலித்தொகை, சீவகசிந்தாமணி முதலிய பிற நூல்களிலும் இக்கருத்துக் கூறப்பட்டுள்ளது.

- வருநுதல் எழில்வேழம் பூநீர்மேற் சொரிதரப்புரி நெகிழ் தாமரை மலரங்கண் வீறெய்தித் திருநயந் திருந்தன்ன ‘ நான் மருப்பின் மதயானை நாறிய -

பைந்தாமரை மடந்தையைத் தேன் மதர்ப்பத் திளைத்தாங்கவன் திருவின்

சாயனலங் கவர்ந்தபின் ஊன் மதார்த்த வொளி வேற்கண்ணார்

பரவவிவ் வாறொழுகு மன்றே வானகத்து நிலத்து மில்லாவண்ணம் . . - மிக்கமணிப் பூணினான்

‘ மேற்படி சிந்தாமணிச் செய்யுள் உரையில் நச்சினார்க் கினியர், “இரண்டானை பக்கத்தே நின்று நீரைச்சொரிய நடுவே தாமரைப் பூவிலேயிருந்த திருமகளைத் திளைத் தாற்போல” என்று விளக்கியுள்ளார். - -

வாயில் நெடுநிலையில் தெய்வம் உறையும் என்ற நம்பிக்கையில் அதற்கு ஐயவி அப்பி நெய்யணியும் மரபை, நற்றினையும் “ கூறும். மதுரைக் காஞ்சியிலும் இந்த ஐயவி அப்புதல் பற்றிக் குறிப்புள்ளது.

தொல்வலி நிலைஇய அணங்குடை நெடுநிலை நெய்படக் கரிந்த தண்போர்க் கதவின்” குறுங்கதிர்த் தோரை நெடுங்கால் ஐயவி *

நெய்யோடு ஐயவி அப்பி ஐதுரைத்து 22
அமன்ற வெண்காற் செறுவின்23

நிலைப்படியில் திருமகள் அமைப்புத் தவிர அழகிய மனையின் முன்னிடத்தில் மணல் பரப்பும் வழக்கமும் இருந்தது என்பதையும் அறிகிறோம்.

திருநிலை பெற்ற தீதுதிர் சிறப்பின்
தருமணன் ஞெமிரிய திருநகர் முற்றத்து24

அத்தகைய மணல் முற்றத்தில் அழகிய நிறத்தையுடைய அன்னப்பறவைகள் இருக்கும் என்பதையும், அரசன் கோயிலில் சிறப்பான நிலா முற்றம் உண்டு என்பதையும் கூட நெடுநல்வாடையிலிருந்தே அறிய முடிகிறது.

நெடுமயிர் எகினத் தூ நிற வேற்றை
குறுங்கா லன்னமொ டுகளும் முன்கடை
பணைநிலை முனைஇய பல்லுளைப் புரவி
புல்லுணாத் தெவிட்டும் புலம்புவிடு குரலொடு
நிலவுப் பயன்கொள்ளும் நெடுவெண்முற்றத்துக்
கிம்புரிப் பகுவா யம்பண நிறையக்
கலுழ்ந்து வீழருவிப் பாடுவிறந் தயல
ஒலிநெடும் பீலி யொல்க மெல்லியற்
கலிமயி லகவும் வயிர்மருளின்னிசை
நளிமலைச் சிலம்பிற் சிலம்புங் கோயில் 25

ஆண் மான்களும், அன்னங்களும் திரியும் முன்பக்கத்தின் நிலை கூறப்படுகிறது. குதிரைகளின் குரல் ஒலி, நிலா முற்றத்துச் செயற்கை அருவி நீரொலி, மயிலின் ஆரவாரம் எல்லாம் மலையின் செறிந்த ஆரவாரம் போலுள்ள அரண்மனை என விவரிக்கப்படுகிறது.

இதுவரை வெளி அலங்காரம் அமைப்புப் பற்றிக் கூறிய (Exterior Decoration) இனி உள் அமைப்பு அலங்காரம் (Interior Decoration) பற்றிக் கூறுகிறார்.

உள்ளலங்காரம்

இக்காலக் கட்டடக் கலையை போலவே இவ்விரு கூறும் அன்றுகூடச் சிறப்பாக அமைந்திருக்கின்றன. இன்று வளர்ந்துள்ள உள்முக அலங்கார வகைகளை அன்றே தமிழரிடம் காண முடிகிறது. அரண்மனையை மேலோட்டமாக (Surface) வருணித்த நக்கீரர் இனி அவ்வரண்மனையில் தலைவி இருந்த பகுதியின் உட்புற எழிலை வருணிக்கிறார். இப்பகுதியிலிருந்து கட்டிடக் கலையின் நுணுக்க வேலைப்பாடாகிய உள்ளழகு செய்தல் (Interior Decoration) புலப்படுகிறது.

யவனர் இயற்றிய வினைமாண் பாவை
கைஏந் தையகல் நிறைய நெய் சொரிந்து
பரூஉத்திரி கொளீஇய குரூஉத்தலை நிமிரெரி
அறுவறு காலைதோ றமைவரப் பண்ணிப்
பல்வேறு பள்ளிதொறும் பாயிரு ணீங்கப்
பீடுகெழு சிறப்பிற் பெருந்தகை யல்லது
ஆடவர் குறுகா அருங்கடி வரைப்பின்
வரை கண்டன்ன தோன்றல வரைசேர்பு
வில்கிடந் தன்ன கொடிய பல்வயின்
வெள்ளி யன்ன விளங்குஞ் சுதையுரீஇ
மணி கண்டன்ன மாத்திரட் டிண்காழ்ச்
செம்பியன் றன்ன செய்வுறு நெடுஞ்சுவர்
உருவப் பல்பூ வொருகொடி வளைஇக்
கருவொடு பெயரிய காண்பின் நல்லில்25

யவனர் எனப்படும் சோனகர் செய்த தொழில் மாட்சிமைப் பட்ட கையில் விளக்கு ஏந்திய பிரதிமைகள் - அவ்விளக்கில் அது எரிய நெய் சொரியப்பட்டு நிற்க அவற்றின் திரிகள் மேல் நோக்கிச் சுடர் பரப்பி எரிய இருள் நீங்கிய பெருமை பொருந்திய சிறப்புடையது. காவல் நிரம்பிய பாண்டியனின் அரண்மனையில் மலையை ஒட்டி வானவில் போலப் பெரிய கட்டடங்களில் பல நிறக் கொடிகள் தோன்றின. அந்த அரண்மனையின் நடு இடம் (கருப்பக் கிருகம்) வெண்ணிறச் சுண்ணம் பூசிய செம்பிலியன்றது போலும் சுவர்களையும் பல தூண்களையும் கொண்டு விளங்கியது. சுவரில் பூங்கொடிகள் எழுதப் பெற்றிருந்தமை இந்நாளையச் சுவர் அணித்தாள் (Wall Decoration Paper) ேபான்ற உள்ளலங்கார (Interior Decoration) அமைப்பாகத் தோன்றுகிறது.

அரண்மனை நடு இடச் சுவரைச் “செம்பிலியன்றது போல் என ஒப்பிடும் வழக்கம் பிற பாடல்களிலும் காணக் கிடக்கிறது. மதுரைக் காஞ்சியில்,

செம்பியன்றன்ன செஞ்சுவர் புனைந்து 27

என வருவதை இங்கு ஒப்பு நோக்க முடிகிறது. அறை உள்ளலங்காரத்தின் அடுத்த பகுதியாக அக் கருப்பக் கிருகத்தில் இருந்த கட்டிலின் வருணனை வருகிறது.

இறைவன் கோயிலின் நடு இடத்தைக் கருப்பக்கிருகம் என இக்காலத்தில் அழைப்பது போல அரசன் கோயிலின் நடு இடத்தைக் கருப்பக்கிருகம் என அழைத்தமை பத்துப் பாட்டு-நெடுநல்வாடையில் நச்சினார்க்கினியர் உரையில் இருந்து தெரிகிறது28

இப்பகுதியில் வரும் கட்டில் வருணனை நேரடியாகக் கட்டடக் கலையோடு தொடர்பற்றது எனினும் கருவறையின் உள்ளலங்காரத்தை விளக்குகிறது.

மடைமாண் நுண்ணிழை பொலியத் தொடைமாண்டு
முத்துடைச் சாலேக நாற்றிக் குத்துறுத்துப்
புலிப்பொறிக் கொண்ட பூங்கேழ்த் தட்டத்துத்
தகடுகண் புதையப் பொளீஇத் துகடீர்ந்து
ஊட்டுறு பன்மயிர் விரைஇ வயமான்
வேட்டம் பொறித்து வியன்கட் கானத்து
முல்லைப் பல்போ துறழப் பூநிரைத்து
மெல்லி தின் விரிந்த சேக்கை மேம்படத்
துணைபுண ரன்னத் தூ நிறத் தூ வி
இணையனை மேம்படப் பாயணை யிட்டுக்
காடி கொண்ட கழுவுறு கலிங்கத்துத்
தோடமை து மடி விரித்த சேக்கை

மூட்டுவாய் இனிது பொருந்த நூலிழையிற்கோத்த முத்துச் சரங்களை அந்தத் தந்தக்கட்டிலின் நாற்புறமும் சாளரம் போல் (சாலேகம்) இடைவெளிவிட்டு நேராகத் தொங்க விட்டிருத்தலையும், கட்டிலின் அமைப்பையும் கச்சுப் பட்டைகளாற் கட்டப்பட்டிருந்த விதத்தையும், படுக்கை விரிப்பையும், மலர்கள் தூவியிருந்தலையும் இப்பகுதி விளக்கும்போது பழந்தமிழர் - உள்ளலங்காரத் துறையிலும் சிறந்திருந்ததை அறிய முடிகிறது.

கடவுளர் கோயில் கட்டடங்கள்

அரசர்தம் அரண்மனைக் கட்டடக் கலையைப்போல் கடவுளர் கோயிற் கட்டடக் கலையைப் பற்றி இனிக் காணலாம். கடவுளர் தொடர்பான தமிழ்நாட்டுக் கோயிற் கட்டடக் கலையில் படிப்படியான வளர்ச்சி நிலைகள் உள்ளன என்கிறார் பேரறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி.20

(அ) மரத் தளிகள் (மரத்தாற் கட்டிய கோயில்கள்)
(ஆ) செங்கல் சுண்ணாம்பு மரம் இணைந்த கட்டடக் கோயில்கள்
(இ) குகை - குடைவரைக் கோயில்கள்
(ஈ) கற்றளிகள் (கல்லால் கட்டப்பட்ட கோயில்கள்)
(உ) மண்தளிகள் (மண்ணால் கட்டப்பட்ட கோயில்கள்)

பெரும்பாலான மலைநாட்டுக் (இன்றைய கேரளப் பகுதி) கோயில்கள் திருக்குற்றாலம் - சித்திரசபை, சிதம்பரம் சபாநாதர் மண்டபம் ஆகியவை முழுமையாக

மரத்தினாலேயே கட்டப்பட்டன. தில்லைக் கோவிலில் உள்ள ஊர்த்துவதாண்டவ மூர்த்தி கோயில், முதலில் மரத்தினாலேயே அமைக்கப்பட்டிருந்தது. பிற்காலத்தில் தான் கருங்கல்லுக்கு மாற்றப்பட்டது. மரக்கூரை, தூண்கள், கெட்டுப் போகாத வண்ணமே செம்பிலும், தங்கத்திலும் தகடுகள் வேயப்பட்டன.31

செங்கற்கோயில்கள்

பின்பு மரக்கோயில்களில் தீப்பற்றி அழிய நேரும் அபாயம் உணரப்பட்ட பின் - செங்கல் (சுடுமண்) சுண்ணாம்பு (சுதை) கொண்டு பெரும்பகுதி கட்டி உத்தரம் கதவு முதலியவற்றுக்கு மட்டுமே மரங்களைப் பயன்படுத்தும் வழக்கம் ஏற்பட்டது. கி.பி. 600க்கு முற்பட்ட தமிழ் நாட்டுக் கோயில்கள் யாவும் செங்கற் கட்டடங்களே என்பார் மயிலை சீனி வேங்கடசாமி. 32<\sup>

சங்க காலத்துத் தமிழ்க் கோயில்கள் பெரும்பாலும் இத்தகையவையே என்று கூறுவதற்குப் போதிய சான்றுகள் உள்ளன. இதற்கு எட்டுத் தொகையில் ஒன்றாகிய அகநானூற்றில் பெரும்புலவர் கடியலூர் உருத்திரங். கண்ணனார் பாடியுள்ள ஒரு பகுதி சான்றாக அமையும்.

இட்டிகை நெடுஞ்சுவர் விட்டம் வீழ்ந்தென .
மணிப்புறாத் துறந்த மரஞ்சோர் மாடத்து
எழுதணி கடவுள் போகலிற் புல்லென்று
ஒழுகுபலி மறந்த மெழுகாப் புன்றிணை 33<\sup>

பாழடைந்த கோயில் ஒன்றைப் பற்றிய வருணனையாக வரும் இதனுள், "செங்கல்லால் இயன்ற நெடிய சுவரிற் சேர்த்திய விட்டம் என்னும் மரம் அசைந்து வீழ்ந்து பட்டதனால் அங்கு ஏற்கெனவே இருந்த மணிபுப்றாக்கள் கைவிட்டுப் போன நழுவி வீழ்தலையுடைய மாடத்தின் கண் ஓவிய வடிவாக எழுதி ஊர்மக்கள் வழிப்பட்ட கடவுள் போய்விட்டதனால் பொலிவிழந்து மக்களால் வழிபடப் பெறாத சாணம் மெழுகித் தூய்மை செய்யப் பெறாத திண்ணைகளையுடைய அம்பலம் என்று வருவதனால் அக்காலக் கோயில்கள் கட்டப்பட்ட விதத்தை அறிய முடிகிறது.

கடைச் சங்க காலத்தின் இறுதியில் இருந்த சோழன் செங்கணான் சிவபெருமானுக்கும் திருமாலுக்குமாக எழுபதுக்கு மேற்பட்ட திருக்கோயில்களைச் செங்கல்லால் கட்டினான்.34

இருக்கிலங்கு திருமொழிவாய் எண்டோ ளீசற்கு
எழில்மாடம் எழுபதுசெய் துலகமாண்ட
திருக்குலத்து வளச் சோழன் 35

என இதனை அப்பர் தேவாரமும் கூறுகிறது. இவை யாவும் செங்கற் கோயில்களாகவே அமைந்தன என்று அக்கால வரலாறு கொண்டு உய்த்துணர்ந்து உரைக்கிறார் அறிஞர் சீனி வேங்கடசாமி.

பாறைக் கோயில்கள்

கி.பி. ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல்லவப் பெருவேந்தனான மகேந்திர வர்மன் என்னும் அரசன் ஆட்சி செய்தபோது (கி.பி.600 முதல் 630 வரை) கோயிற் கட்டடக் கலையில் புது மாறுதல் ஒன்று நிகழ்ந்தது.

இவன் காலத்தில் பெரிய கற்பாறைகளைக் குடைந்து எழில் வாய்ந்த குகைக் கோயில்களை (பாறைக் கோயில்கள்) அமைக்கும் வழக்கம் ஏற்பட்டது.

கற்பாறைகளைச் செதுக்கித் தூண்களையும் முன் மண்டபத்தையும் அப்பால் கருவறை எனப்படும் திருவுண்ணாழிகையையும் அமைக்கும் பாறைக் கோயில் முறை இவன் காலத்திலேயே ஏற்பட்டது.36

இன்றைய தென்னார்க்காடு மாவட்டம் விழுப்புரம் தாலுகாவைச் சேர்ந்த மண்டகப்பட்டு என்னும் ஊரில் மகேந்திர வர்மன் அமைத்த பாறைக்கோயில் ஒன்று உள்ளது. 37

இதே மண்டகப்பட்டுக் குகைக்கோயிலில் உள்ள வடமொழிச் சாசனம் ஒன்று,

"செங்கல், சுண்ணம், மரம், உலோகம் முதலியவை இல்லாமலே பிரம, ஈசுவர, விஷ்ணுக்களுக்கு விசித்திர சித்தன் (மகேந்திர வர்மனின் பெயர்) என்னும் அரசனால் இக்கோயில் அமைக்கப்பட்டது” என்று கூறுகிறது.

மண்டகப்பட்டுத் தவிர இதே மகேந்திர வர்மன் குடைந்த பாறைக் கோயில்கள் சென்னையை அடுத்த பல்லாவரத்திலும், காஞ்சியை அடுத்த மற்றொரு பல்லாவரத்திலும், மகேந்திரவாடி, சீயமங்கலம், மேலைச்சேரி, வல்லம் மாமண்டூர், தளவானூர், சித்தன்னவாசல் முதலிய ஊர்களிலும் உள்ளன.38

இவனுக்குப் பின் இவனுடைய மகனான மாமல்லன் நரசிம்மபல்லவனும், அவனுக்குப் பின் பரமேசுவரவர்மன் முதலியவர்களும் மாமல்லபுரம், சாளுவன் குப்பம் முதலிய இடங்களில் பாறைகளைக் குடைந்து குகைக்கோயில்களையும் தேர்க்கோயில்களையும் உருவாக்கினர்.

கற்கோயில்கள்

பாறைக்கோயில்களை அடுத்துக் கற்றளிகள் எனப்படும் கற்கோயில்களின் காலம் கி. பி. ஏழாம் நூற்றாண்டின் இறுதியில் அரசாண்ட இரண்டாம் நரசிம்மவர்மன் ஆகிய இராசசிம்ம பல்லவன் கால முதல் தொடங்கியது.

நீளமாகவும், அகலமாகவும் தேவைக்கேற்பவும் தரித்து எடுத்த கருங்கற்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கிக் கட்டப்படும் கோயிலே கற்றளி. சுண்ணம் சேர்க்காமலே பெரும்பாலும் இக்கட்டடங்கள் அமைக்கப்பட்டன.39

மல்லபுரக் கடலோரமாக உள்ள கற்றளியும், காஞ்சியில் கைலாசநாதர் கோயில் என்று இப்போது கூறப்படும் இராசசிம்மேசரம் என்ற கற்கோயிலும், பனை

மலையிலுள்ள கற்கோயிலுமே முதன்முதலில் கட்டப்பட்டன. இவற்றின் வயது இருநூறு ஆக இருக்கலாம்.

கல்வெட்டுக்களில் இருந்தும் சாசனங்களில் இருந்தும் பிற்காலச் சோழர்கள் பல செங்கல் தளிகளைக் கற்கோயில்களாக மாற்றிக் கட்டியதை அறிகிறோம். 40

பின்னாளில் கற்கோயில்களே பெரு வழக்கமாயிற்று. திருவரங்கம், தில்லை, மதுரைக் கோயில்களின் பெரும்பகுதிகள் இத்தகைய கற்கோயில்களாகவே கட்டப்பட்டு அர்த்த மண்டபம், மகாமண்டபம், ஆயிரங்கால் மண்டபம், கருவறை, திருச்சுற்றுக்கள் என்னும் அமைப்புடன் சிறப்பாக விளங்கி வருகின்றன என்பதைக் காண்கிறோம்.

மாடக் கோயில்கள்

ஒன்றின் மேல் ஒன்றாக ஒன்பது நிலைகளை உடைய மாடக்கோயில்களைச் சிற்பசாஸ்திரங்கள் விவரிக்கின்றன, யானை முதுகு போல் மேற்பகுதி அமைந்த கோயில்கள் தூங்கானை மாடக்கோயில்களாம். ஆனால் இக்காலத்தில் ஒன்பது நிலைகளும் நிறையக் கட்டப்பெற்ற கோயில்களைக் காண்பது அரிதாயுள்ளது.41

இரண்டு அல்லது மூன்று நிலைகள் உள்ள கோயில்களே காணப்படுகின்றன.

கி.பி. ஆறாம் நூற்றாண்டிற்கு முன்னரே - அதாவது பல்லவர் காலத்துக்கு முன்னரே இம்மாடக் கோயில்கள் செங்கல்லினால் அமைக்கப்பட்டவை. அவை அழிந்து பட்டன.

திருமங்கையாழ்வார் தமது பெரிய திருமொழியில் 42<\sup> திருநாங்கூர் மணிமாடக் கோயிலைப்பற்றிக் குறிப்பிடுகிறார். இத்திருநாங்கூர் என்பது தஞ்சை மாவட்டம் சீர்காழிக்குக் கிழக்கே ஐந்து கல் தொலைவிலுள்ள ஒரு சோழ நாட்டுத் திருப்பதியாகும்.

திருநறையூரில் (இன்றைய நாச்சியார் கோயில்) சோழன் செங்கணான் கட்டிய மணிமாடக்கோயில் ஒன்றும் 'திருவைகல்’ என்னும் தலத்தில் ஒரு மணிமாடக் கோயில் இருந்ததாகவும் (திருவைகல் மாடக் கோயில்) தெரிகிறது.43

மாமல்லபுரத்து அருச்சுனன் இரதம் தருமராசர் இரதம் ஆகியவையும் மாடக் கோயில்கள் போன்ற அமைப்பினவே. 44

காஞ்சி பரமேசுவர விண்ணகரம் என்னும் வைகுந்தப் பெருமாள் கோயிலும் கி.பி. 730 முதல் 795 வரை ஆண்ட நந்தி வர்ம பல்லவன் கட்டிய உத்தரமேரூர் மாடக் கோயிலும் குறிப்பிடத்தக்கவை. இதுவும் மூன்று நிலைகளுள்ள மாடக் கோயிலே.45

மூவகைப் பிரிவுகள்

பாரத நாட்டுக் கட்டடக் கலையை மூவகையாகப் பிரித்துக் காணலாம். அம்மூன்று பெரும்பிரிவுகளும் நிலவியல் வழிபாட்டுமுறை சார்ந்தவை.

1. நாகரம், 2. வேசரம், 3. திராவிடம்.
(அ) நாகரம் என்பது வடஇந்தியக் கட்டட மரபு ஆகும்.
(ஆ) வேசரம் என்பது பெளத்த மதத்தவர் சார்பான கட்டடக்கலை.
(இ) திராவிடம் தென்னிந்தியக் கோயிற் கட்டடக் கலையாகும்.46

நாகரக் கட்டடக் கலை நருமதை ஆற்றுக்கு வடக்கே வட இந்தியாவில் அமைந்தது. அடி முதல் முடிவரை நான்கு பட்டை (சதுரமாக) இருக்கும். இம்முறை தமிழகத்தில் இல்லை.

வேசரம் - பெளத்த விகாரங்களும், அரைவட்டவடிவ பகோடாக்களும், தேங்காய் மூடியைக் கவிழ்த்ததுபோன்ற அமைப்புக்களும் இதனுள் அடங்கும். வேசரம் 47 ஒரு சிற்பவகை என்பர்.

திராவிடம் - வடபால் கிருஷ்ணா நதிக்குத் தெற்கே கன்னியாகுமரிவரை அமைந்த கட்டடக்கலை. இதில் தமிழர், சாளுக்கியர், ஹொய்சாளர் முதலிய உட்பிரிவினரின் கட்டடக் கலைகள் எல்லாம் அடங்கக் கூடியவையாம். 48

தளிகள் அமைப்பு

பழந்தமிழர் கோயிற் கட்டடக் கலையில் ஆறு பெரும் உறுப்புக்கள் உண்டு. அவையாவன:

1. அடி (அதிஷ்டானம்) 2. உடல் (பாதம்) 8. தோள் (மஞ்சம்) 4. கழுத்து (கண்டம்) 5. தலை (பண்டிகை) 6. முடி (ஸ்தூபி)

ஆறுறுப்பின் அளவுகள்

1. அடி என்னும் அதிஷ்டானத்தின் உயரம் 1 பங்கு.
2. உடல் என்னும் பாதத்தின் உயரம் 2 பங்கு.
3. தோள் என்னும் மஞ்சத்தின் உயரம் 1 பங்கு.
4. கழுத்து என்னும் கண்டத்தின் உயரம் 1 பங்கு.
5. தலை என்னும் பண்டிகையின் உயரம் 2 பங்கு.
6. முடி என்னும் ஸ்தூபியின் உயரம் 1 பங்கு 49

விமானங்கள்

கோயிலின் மூலத்தானத்தில் கடவுள் அல்லது மூர்த்தம் அமைந்திருக்கும் இடத்திற் மேற்பகுதித் தூபிக்கு விமானம் என்று பெயர். நுழைவாயில் பகுதித் தூபிக்குக் கோபுரம் என்று பெயர்.

மூலத்தானம் அல்லது கருவறைக்குத் திருவுண்ணாழிகை என்று பெயர். 50 தமிழகத்திலேயே மிக உயரமான விமானம் கி.பி. 1000 ல் இராசராசன் எடுத்த தஞ்சைப் பெருவுடையார் விமானமாகும். இதன் உயரம் 190 அடி. பின்னர் கங்கை கொண்ட சோழபுரத்தில் தஞ்சை விமானம் போலவே கி.பி. 1025-ல் ஒரு விமானம் எடுக்கப்பட்டது. அடுத்துத் திரிபுவனேசுவரர் கோயில் விமானம் குறிப்பிடத்தக்கது.51 இந்த அளவு உயரமான விமானக் கோயில்கள் பிற்காலத்தில் கட்டப்படவில்லை.

அப்பர் தேவாரத்தில் சோழன் செங்கணான் கட்டிய எழுபத்தெட்டுக் கோயில்களைக் கூறியபின்,

1. கரக் கோயில், 2. ஞாழற் கோயில், 3. கொகுடிக் கோயில், 4. இளங்கோயில், 5. மணிக்கோயில், 6. ஆலக் கோயில்

என்னும் ஆறு வகைகள்52 கூறப்படுகின்றன.

கோயிலில் நீர்ப்படை செய்யுமுன் சிலையை வைக்கும் தற்காலிகமான இடத்தைப் 'பாலாலயம்’ என்று வட மொழியில் கூறுவதுண்டு. 'இளங்கோயில்’ என இங்கே கூறப்படுவது அதன் மொழிபெயர்ப்போ என்று தோன்றுகிறது.53

வடமொழியிலுள்ள சிற்ப நூல்கள் இந்த வகைகளை,

1. விஜயம், 2. ஸ்ரீயோகம், 3. ஸ்ரீவிசாலம், 4. ஸ்கந்த காந்தம், 5. ஸ்ரீகரம், 6. ஹஸ்தி பிருஷ்டம், 7. கேசரம்

எனக் கூறுகின்றன. யானை முதுகு போன்ற விமான அமைப்புடைய கோயில் கஜபிருஷ்ட விமானக் கோயில் அல்லது ஆலக்கோயில் எனப்பட்டது. ஆலக்கோயில் ஆனைக் கோயில் என்பதன் மரூஉ ஆகும்.

அக்காலக் கோயில்களிலிருந்த மூவகைகளைக் குறிக்க மூன்று வடசொற்களைப் பயன்படுத்தினர்.

1. சுத்தம் - முழுமையும் மரம் அல்லது கல்லால் ஆகியது.
2. மிஸ்ரம் - இரண்டு பொருள் கலந்து அமைப்பது.
3. சங்கீர்ணம் - இரண்டிற்கும் மேற்பட்ட பொருள்களைக் கலந்து கட்டுவது.

இதுகாறும் அரசனுக்குரிய கட்டடம், இறைவனுக்குரிய கட்டடம் ஆகிய கோயில்கள் ஆகியவற்றை உரிய சான்றுகளுடன் ஆராய்ந்து உண்மைகளைக் காண முடிந்தது.

இனி மக்கள் இல்லங்கள் வீடுகள் பற்றிய கட்டடங்களை ஓரளவு கவனிக்கலாம். இலக்கியங்கள் காப்பியங்களில் அரசர் இருக்கை, இறையவர் இருக்கைகள்பற்றிய சான்றுகள் அதிகமாகக் கிடைப்பதுபோல் மக்கள் இல்லங்கள், கட்டடங்கள் பற்றிய வருணனைகள் பெரும் பான்மையினவாகக் காணக் கூடவில்லை. இல், புக்கில், துச்சில், குரம்பை, குடிசை, குடும்பம் என்ற சொற்கள் கொண்டே ஆய்வைத் தொடங்கலாம்.

மக்களுக்கான கட்டடங்கள்

திராவிடக் கட்டடக் கலையில் ஒரு பகுதியாகிய பழந்தமிழர் கட்டடக் கலையில் மக்கள் எத்தகு கட்டடங்களை அமைத்து வாழ்ந்தனர் என்பது வினா. இவ்வினாவிற்குப் பல விடைகள் கிடைக்கின்றன.

இல்லம், இல், மனை, குரம்பை, புக்கில், துச்சில்,வீடு, குடி, குடில் போன்ற சொற்கள் பழந்தமிழர் நூல்களில் வழங்குகின்றன.

தமிழகத்தில் பழையகற்காலம் தொட்டு மக்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள் என்பதற்கான சான்றுகள் நிரம்பக் கிடைத்திருப்பதால் மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு மிக முக்கியமான உணவு, உடை, உறையுள் என்ற மூன்றினையும் அமைத்துக் கொள்வதற்கான முயற்சியும், அம்முயற்சி வெற்றி பெறக் கையாண்ட முறைகளிலே ஏற்பட்ட வளர்ச்சியும் நாளாவட்டத்தில் மெல்ல மெல்ல அதே நேரத்தில் திண்மையாக வளர்ந்து வந்திருக்கின்றன என்று அறிகிறோம். 54

என்கிறார் அறிஞர் நடன காசிநாதன்.

புதிய கற்காலம் முதலே கட்டடக் கலை தொடங்கி விட்டது. இயற்கையாக அமைந்த பாறையிடுக்குகளிலே குகைகளில் வாழ்ந்த மக்கள், மலைச் சரிவுகளிலே வட்ட வடிவில் அமைந்த குடிசைகளில் (புல்வேய் குரம்பை) வாழத் தொடங்கிய கால முதல் புதிய கற்காலம் வந்து விட்டது.

புதிய கற்கால மக்கள் பயன்படுத்திய கோடரி முதலிய கருவிகளே இதற்குச் சான்று. புதிய கற்கால முதலே தமிழகத்தில் கட்டடக்கலையின் வளர்ச்சி தொடங்கி யிருப்பதை அறிய முடிகிறது.

இப்படி வளரத் தொடங்கிய கலை சங்க காலத்தில் நல்ல நிலையை அடைந்திருக்க வேண்டும். கி.பி. முதல் நூற்றாண்டிலிருந்து மூன்றாம் நூற்றாண்டு வரை சங்க காலம் நிலவியிருக்கலாம் என்று வரலாற்றறிஞர்கள் கருதுகின்றனர்.

அந்தக் காலத்தில் இறைவர்தம் கோயில்களும் அரசர் தம் அரண்மனைகளும் சமுதாயத்தட்டில் உயர் நிலையில் இருந்தவர்களுக்கு மாட மாளிகைகளும் அமைக்கப்பட்டு இருந்ததற்கான ஆதாரங்கள் சங்க இலக்கியங்களிலே நிரம்பக் கிடைக்கின்றன.55

கட்டடக்கலை தொடர்பான பின்வரும் சொற்களும், தொடர்களும் பழந்தமிழ் நூல்களில் காணக் கிடைக்கின்றன.

1. சுடுமண் (செங்கல்), 2. சுதை (சுண்ணாம்பு), 3. விட்டம் (உத்தரம், நிலை முதலியன). 4. மாடம், 5. சாலகம் (பலகணி-சன்னல்), 6. காலதர் (பலகணி. -சன்னல்), 7. வேதிகை (திண்ணை), 8. தெற்றி

(திண்ணை), 9. கூடம், 10. அங்கணம் (வீட்டுச் சாக்கடை), 11. முன்றில் (இல் முன்) 12.கதவு-கதவம் தாழ்ந்த பொருளாதார நிலையிலிருந்தவர்கள் தொடங்கிப் பெருஞ்செல்வ நிலையிலுள்ளோர் வரை உறையுள்களை அமைத்திருக்கின்றனர்.

          தழை முடித்துத் தருப்பை வேய்ந்த
          குறையிறைக் குரம்பை56
          புதுவை வேய்ந்த கவி குடில்57
          ஈந்தலை வேய்ந்த வெய்புரக் கரம்பை58
          குறவர் ஊன்றிய குரம்பை புதைய
          வேங்கை தாஅய் தேம்பாய் தோற்றம்59
           புல்வெய் குரம்பை புலர ஊன்றி
           முன்றில் நீடிய முழவு...60
           குறையிலாக் குரம்பைக் கொலைவெம்பாதவர் 61
           குளகு மறுத்து உயங்கிய மருங்குல பலவுடன்
           பாழுர்க் குரம்பை62
           குரம்பை நம் மனைவயின் புகுதரும் 63
           நல்கூர் பெண்டில்புல் வேய் குரம்பை
           


தழைகளை இணைத்துத் தருப்பைப் புற்களால் குடிசைகளை வேய்ந்தனர். புதிய வைக்கோலால் தாழ்ந்து நெருங்கிய குடில்களை அமைத்துள்ளனர். மலைவாழ் மக்களின் குடிசைமேல் வேங்கைப் பூக்கள் உதிர்ந்து அழகிய தோற்றத்தை உண்டாக்கியுள்ளன.

குடிசைக்கும் முன்றில் புழைக்கடை அமைப்புக்கள் இருந்துள்ளன. குடிசையும் மனைவீடு என்ற பெயர்களால் அழைக்கப்பட்டுள்ளன./65

மலைப்பாறைகளில் இயல்பாய் அமைந்த கல் முழைகளும் குறிஞ்சி நில மக்களால் வாழிடங்களாகப் பயன்படுத்தப் பெற்றிருக்கின்றன.

கட்டடங்கள் அமைக்கத் தொடங்கிய காலத்தில் - மயன்மரபு’ (இன்றைய மனையடி சாஸ்திரத்தின் மூல நெறி) அல்லது பொதுவாக ' விசுவகர்ம முறை' என்று அழைக்கப்படும் நெறி பயன்பட்டுள்ளது. 66“ மயன் விதித் தன்ன மணிக்கால் அமளிமிசை” 67 எனச் சிலப்பதிகாரத் தலைவனும் தலைவியும் அமர்ந்திருந்த கட்டில் வருணிக் கப்பட்டுள்ளது.

மண்ணினும் கல்லினும் மரத்திலும் சுவரினும்
கண்ணிய தெய்வம் காட்டுநர் வகுக்க 68

என்ற மணிமேகலை அடிகளால் - மண், கல், மரம், செங்கல் ஆகியவற்றைப் பயன்படுத்தும் வழக்கம் இருந்ததையும் அறியமுடிகிறது.69

காவிரிப்பூம்பட்டினத்து வீடுகள் எவ்வாறு கட்டப்பட்டன என்பதற்குச் சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் நிரம்பிய சான்றுகள் கிடைக்கின்றன. கட்டடத்திற்கு செங்கல், ஒடு ஆகியவை பயன்படுத்தப் பெற்றமைக்குப் பின்வரும் மேற்கோள்கள் சான்று பகர்கின்றன.

சுடுமண் ஏறா வடுநீங்கு சிறப்பின்
முடியரசு ஒடுங்குங் கடிமனை வாழ்க்கை 70
வம்ப மாக்கள் கம்பலை மூதூர்
சுடுமண் ஓங்கிய நெடுநிலை மனைதொறும் 71

முன்னதில் சமுதாயக் குற்றஞ்செய்தாரைத் தலையில் செங்கல்லை வைத்து ஊர்ப்புறம் போக்கும் வழக்கம் கூறப்படுகிறது. 'சுடுமண்' என்பது செங்கல் அல்லது சுட்ட ஒடுகளைக் குறிக்கும்.

கட்டட வேலைக்குச் சுண்ணாம்பு பயன்பட்டது.

வெண்சுதை விளக் கத்துவித்தகர் இயற்றிய 72
வெள்ளியண்ண விளங்குஞ் சுதையுரீஇ 73

சுவர்கள் அழகுற அமைக்கப்பட்டன.

செம்பியன்றன்ன செஞ்சுவர் புனைந்து 74

மாடங்களிலும் சுவர்களிலும் சித்திரங்கள் தீட்டப்பட் டிருந்தன.75

சுவர்களை அமைத்தமுறை, ஒவியந்தீட்டுதல் போன்ற வேலைப்பாடுகள் கட்டடக்கலையின் ஒரு பகுதியாகிய உள்ளலங்கார வேலையிலும் பழந்தமிழர் சிறப்புப் பெற்றிருந்தனர் என்பதனையே காட்டுகிறது.

எட்டுத்தொகை நூலுள் ஒன்றாகிய பரிபாடலில் கூட இதற்கான சான்றுகள் காணக்கிடைக்கின்றன. மதுரைக்கு அருகேயுள்ள திருப்பரங்குன்றம் குகைக் கோயிலில் அமைந்த ஓவியம் பற்றிய வருணனையில்,

நின் குன்றத்து
எழுதெழில் அம்பலம் காமவேள் அம்பின்
தொழில் வீற்றிருந்த நகர் 76

என்று குன்றம்பூதனார் என்ற புலவர் பாடியுள்ளார். ‘சித்திர மாடத்துத் துஞ்சிய நெடுமாறன்’ 77 என்றே ஒர் அரசன் புறநானூற்றில் குறிக்கப்படுகிறான். மாடங்களில் அழகிய ஓவியங்கள் தீட்டப்படுவது பழந்தமிழர் கட்டடக் கலை வழக்கமாயிருந்தது தெரிகிறது.

கட்டடக் கலையும் பாதுகாப்பும் (Defence Architecture)

கோயில்கள், அரண்மனைகள் போலவே பாதுகாப்புக்கான கோட்டை கொத்தளங்களையும் அகழி, மதில் போன்ற அவற்றின் உறுப்புக்களையும் தமிழர்கள் சிறப்பாக வகுத்திருக்கின்றனர்.

அரசன் இல்லத்திற்கு அரண்மனை என்றே பெயர் வைத்ததில் பாதுகாப்புப் பொருளும் இணைந்து வருவது காணற்குரியது.

பெரும்பாலான அரசர் வசிப்பிடங்கள் கோட்டைக்குள்ளேயே அமைந்திருந்தன என்பதும் தெரிகிறது.

"பழங்கால மதில்கள் இயந்திரக் கலை நுட்பமும், இராணுவப் பொறி நுட்பமும் சேர்ந்து விளங்கின”78

கோட்டை மதில்களையும் பாதுகாப்புக்கான அகழிகளையும் அமைப்பதில் தமிழர்கள் மிகமிக உயர்திறன் பெற்றிருந்ததை அறியப் போதுமான சான்றுகள் உள்ளன.

போர்க்காலப் பயன்களுக்காகக் கரந்துபடை என்னும் சுரங்கப் பாதைகளையும் அமைத்துக் கொண்டனர் தமிழ் மன்னர்கள்.

நெடிதுயர்ந்த மதில்களில் பாதுகாப்புக்கான பல்வேறு வகை விசைக் கருவிகள் பொறிகள் பொருத்தப்பட்டிருந்தன. தாமாகவே வளைந்து விரைவாக அம்புகளை வீசும் விற்பொறிகள், கருங்குரங்கைப் போன்ற அமைப்புடைய விசைப்பொறிகள், கற்களை உமிழ்வதுபோல வீசியடிக்கும் கவண்பொறிகள், பகைவர் நெருங்கிவர முயலும்போது அவர்மீது கொதிக்கிற எண்ணெயைக் கவிழ்த்துவிடும் பொறிகள், இரும்பைக் காய்ச்சி ஊற்றும் உலைப்பொறிகள், பகைவரைப் பற்றிக் கழுத்தை இறுக்கி முறுக்கும் பொறிகள், ஆளிதலைப் புலிவடிவாக அமைந்த புதுமைப் பொறிகள், அகழியைத் கடந்து மதிலில் ஏற முயலும் பகைவர்களைக் கீழே தள்ளிவிடும் இரும்புக் காப்புக்கள், தூண்டில் பொறிகள், பன்றிப் பொறிகள், ஊசிப் பொறிகள், சங்கிலிப் பொறிகள் முதலான பல்வேறு வகை இயந்திரப் பொறிகளை மதிலில் கட்டி யிருந்தார்கள் என்று சிலப்பதிகாரம் விவரித்துக் கூறுகிறது79 பொதுமக்களுக்கான பொறியியல் அறிவுடன் (Civil Engineering) இராணுவப் பொறியியல் அறிவை (Military Engineering) யும் பழந்தமிழா்கள் ெபற்றிருந்தார்கள் என்பதையே இச்சான்றுகளால் உணரமுடிகிறது.

“அரண்மனையிலிருந்து கோயிலுக்குச் செல்லவும், ஊருக்கு வெளியே இரகசியமாகச் செல்லவும் தமிழ் மன்னர்கள் சுரங்கப் பாதைகள் அமைத்துக் கொண்டனர்.

கோட்டை மதில்கள் அமைப்பதிலும் தமிழ் வேந்தர்கள் மிகுந்த கவனம் செலுத்தினர். பழங்கால மதில்கள் அமைப்பில் கட்டடக் கலை நுட்பமும் இயந்திரக் கலை துட்பமும் இராணுவப் பொறி நுட்பமும் சேர்ந்து விளங்கின. 80

மதிலும் கோபுரமும் சுருங்கையுமாகிய அரணுடைமை பற்றி அது அரண்மனை எனப்பட்டது. அதற்குக் கோயில், பள்ளி, நகர், மாளிகை எனப் பிற பெயர்களும் உண்டு.81

என அறிஞர் இதனை விளக்குவர்.

அரசன் முன்னிலையில் சூழ்வினை அமைச்சரும், படைத்தலைவரும், பல்வேறு ஆள்வினைத் திணைக்களத் தலைவரும், பெருங்கணியும் ஆசானும் பல்வகைப் புலவரும் பிறரும் நாள்தோறும் குழுமியிருக்கும் நிலையான இடம் அவைக்களம் 82
ஒரு தலைநகருக்கு ஐவகை அரண்கள் உண்டென்றும், அவை: மதிலரண், நிலவரண், நீரரண், காட்டரண், மலையரண் எனப்படும் என்றும் தெரிகிறது. 83

இவற்றுள் கட்டடக் கலையோடு தொடர்புடைய மதிலரண் பொதுவில் 'புரிசை' என்று கூறப்பட்டாலும், மதில், எயில், இஞ்சி, சோ என்று நால்வகைப்படும். புரிசை என்றால் வளைதல் அல்லது சூழ்ந்திருத்தல்.

மதில்

நால்வகை மதில் அரண்களில் உயரம் ஒன்றே உடை யது மதில்.

எயில்

உயரத்தோடு அகலமும் உடையது எயில்.

இஞ்சி

உயரம் அகலம் இவற்றோடு திண்மையும் உடையது இஞ்சி.

சோ உயரம், அகலம், திண்மை இவற்றோடு பகைவர் நெருங்க அரியது சோ.

நான்கு வகை அரண்களுள் சோவரணே சிறந்தது 83

உயர்வகலந் திண்மை அருமையிந் நான்கின்
அமைவரண் என்றுரைக்கு நூல் 84

திருக்குறளில் 'அரண்' என்றே பொருட்பாலில் ஓர் அதிகாரம் உள்ளது. இஞ்சுதல் என்றால் தமிழில் இறுகுதல் என்று பொருள். இறுகிய மதிலே இஞ்சி - செம்பை உருக்கிச் சாந்தாக வார்த்துக் கருங்கல்லாற் கட்டிய மதிலே இஞ்சி.

செம்பிட்டுச் செய்த இஞ்சித் திருநகர் 85
செம்பு புனைந் தியற்றிய சேண்நெடும் புரிசை
உவரா வீகைத் துவரை யாண்டு 86
சோ வரணும் போர் மடியத் தொல்லிலங்கை
கட்டழித்த87
சுழலழலுள் வைகின்று சோ88
ஏமாண்ட நெடும்புரிசை89
பிறைதொடும் பேமதில் 90
சுடுமண் நெடுமதில் 91
மழைதுஞ்சு நீளரணம்92

எனப் பழைய நூல்களில் பலவாகப் பயின்று வந்துள்ளமை காணத்தக்கது. இலங்கையிலும், துவார சமுத்திரம் எனப்படும் துவரை நகரிலும் 'இஞ்சியரண்’ இருந்தமை அறியப்படும். செப்புக்கோட்டை என்பது இராவணன் கோட்டைப் பெயராக இன்றும் ஈழத்தில் வழங்கப்படுகிறது. மதிலரணை அருமைப்படுத்துவது பொறியாதலால் ஏவறைகளும், பொறிகளுமுடைய இஞ்சியே சோவரணமாயிருத்தல் வேண்டும் என்பது புலனாகிறது. பெரும்பாலும் கோ நகரங்களில் ஒரே ஒரு சுற்றுமதில் தவிர ஒன்றினையடுத்து மற்றொன்றாகப் பல மதில்களைக் கட்டுவதும் உண்டு என்பது தெரிகிறது.

'கோடுறழ்ந்தெடுத்த’ என்னும் பதிற்றுப்பத்துச் செய்யுளில் அகமதில் - மதிலென்றும் புறமதிலே இஞ்சியென்றும் கூறப்படுகிறது. மதிலை ஒட்டி உட்புறம் அமையும் மேடைக்கு அகப்பா என்று பெயராம்.93<\sup>

தொலைவில் பகைவர் வருவதை முன்கூட்டியேநின்று காண முடிந்தபடி புறமதிலின் பல திசைகளிலும் அட்டாலை என்னும் சிறுசிறு கோபுரங்கள் அமைக்கப்பட்டிருப்பதும் உண்டு. இக்கோபுரங்களைக் காப்பார் ‘அட்டாலைச் சேவகர்’ எனப்பட்டார். மதில் காவலர் மதில் நாயகர் எனப்பட்டார்.94

மதிலுள்ள நிலவரண் வெள்ளிடை நிலம், தண்ணடை நிலம் என இருவகைப்பட்டன. புறமதிற் புறத்தே ஆறும் கடலுமாகிய இயற்கை நீர்நிலையாகவும் அகழி அல்லது கிடங்கு என்னும் செயற்கை நீர்நிலையாகவும் இருக்கும் அரண். காட்டரண் மரங்களடர்ந்த பகுதியாயிருக்கும். மக்கள் விரைந்து கூட்டமாக மேலேற முடியாததும் ஏறினால் கற்களை உருட்டித் தடுக்கக் கூடியதுமாய் இருப்பது மலையரண். 95

இந்த அரண்களை எல்லாம் நுணுக்கமாக அமைப்பதற்குத் தேவையான பாதுகாப்புப் பொறியியல் அல்லது இராணுவப்பொறியியல் வல்லமை (Defence Architecture or Military Engineering) பழந்தமிழா்க்கு இருந்ததை மேலே காட்டிய நூற்சான்றுகளிலிருந்து அறியமுடிகிறது.

அரசன் வாழும் இல்லம், இறைவர்க்கான கோயில் இரண்டையும் பற்றிய செய்திகள் கிடைப்பதுபோல் தனிப்பட்ட மக்கள் வீடுகள் பற்றிய விவரங்கள் குறைவாகவே கிடைக்கின்றன. அப்படிக் கிடைக்கும் விவரங்களும் மாட மாளிகைகள் வணிகர் குடியிருப்புக்கள் பற்றியனவாகவே உள்ளன. இக்காரணங்களால் திராவிடக் கட்டடக் கலையின் காலம் கோயில்களின் கட்டடக் கலையோடு சார்த்தியே ஆராயப்பட்டுள்ளது.

திராவிடக் கட்டடக் கலையின் பல்வேறு கால நிலைகள்.

1. பழைய காலம்  : கி. பி. 500க்கு முற்பட்டது. மரம் செங்கற்களால் மட்டும் ஆன கோயில்கள்.
2. பல்லவர் காலம் : கி. பி. 600 - 900 பல்லவர் கற்றளிக் காலம்.
3. சோழர் காலம்  : கி. பி. 900 - 1800 புதிய கற்றளிக் காலம். பழைய கற்றளிகளும் புதுக்கப்பட்ட காலம்.
4. பாண்டியர் காலம் : கி.பி. 1800-1500.
5. விஜயநகரக் காலம் : கி. பி. 1500-1700.

குகைக் கோயில்களும், பாறைக்கோயில்களும் கி. பி. 600 முதல் 850 க்குள் தமிழகத்தில் முதன்முதலாக அமைக் கப்பட்டன என்று தெரிகிறது. 96 மயன், மரபு காக்கேயர் சிற்பம் முதலிய கட்டடக் கலை நூல்கள் கட்டடங்களுக் காக ஏற்கப்பட்டுள்ளமையும் தெரிய வருகிறது. 97

பொறியியல் நுணுக்கங்கள்

இக்காலக் கட்டடக் கலை வல்லுநரும் வியக்கும் சில பொறியியல் துணுக்கங்கள் பழந்தமிழர் கட்டடக் கலையில் அமைந்திருந்ததைக் காண்கிறோம்.

வேயா மாடமும் வியன்கல இருக்கையும்
மான்கட் காலதர் மாளிகை இடங்களும் 98

என்று சிலப்பதிகாரம் கூறுவதிலிருந்து பலவகை அழகிய தோற்றமுடைய பலகணிகளைப் (ஜன்னல்) பழந்தமிழர் கட்டியிருப்பதை அறிய முடிகிறது. அவற்றில் மானின் கண்போன்ற துளைகள் அமைந்த சாளரமும் ஒன்று என்று தெரிகிறது.

அரண்மனைகளில் மகர மீனின் வாயைப் பிளந்தாற் போன்ற நீர்ப்பந்தல், அமைக்கப்பட்டிருந்தது. வேனிற்

காலத்தில் மன்னர்கள் தங்கிய மாடத்திற்கு இளவேனிற் பள்ளி என்று பெயரிட்டிருந்தனர்.99

பூம்புகார் நகரில் அரண்மனை மண்டபம் கட்டுவதற்கு யவன நாட்டுத் தச்சரும் துணை செய்திருக்கின்றனர். எனவே அயல்நாட்டு நிபுணரைக் கலந்து செயல்படும் வழக்கமும் இருந்தமை தெளிவாகிறது.

இராசராசன் கட்டிய தஞ்சைக் கோபுரத்தின் உயரம் 216 அடி. அப்படியானால் இதன் கடைக்கால் அளவு எத்துணை ஆழமும் அகலமும் உள்ளதாயிருந்திருத்தல் வேண்டும்? கோபுரத்தின் உச்சியில் அமைந்துள்ள ஒரே கல் மட்டும் இருபத்தைந்தரை அடிச் சதுரம் உடையது. இதன் எடை இன்றைய அளவுமுறைப்படி எண்பது டன். இதற்குப் 'பிரமந்திரதளக்கல்’ என்று பெயர். பாரம் தூக்கி மேலே ஏற்றி வைக்கக்கூடிய புதிய எந்திரங்கள் எவையும் இன்றுபோல இல்லாத காலத்தில் இவ்வளவு பெரிய கல்லை எவ்வாறு 216அடி உயரத்திற்கு ஏற்றினர் என்பது எண்ணி வியத்தற்குரியது.

மணலைக் குவித்துச் சாரமேடு அமைத்து யானைகளின் உதவியால் தள்ளிப் பிரமந்திரதளக்கல்லைக் கோபுரத்தின்மேல் ஏற்றியதாகத் தெரிகிறது. இதற்கு ஆதாரமான சாரப் பள்ளம் ஊர் தஞ்சைக்கு அருகே உள்ளது. 100

அணைகள் கட்டி நீரைத் தேக்கும் பொறியியலிலும் தமிழர்கள் திறம் பெற்றிருந்தனர். சோழன் கரிகாற் பெருவளத்தான் காவிரிக்குக் கரை எடுத்த பெருமையும், கல்லணை கட்டிய சிறப்பும் நீர்ப்பாசனப் பொறியியல் கட்டடக் கலையியலின் அழியாச் சின்னங்களாக விளங்குகின்றன.101

உயர்ந்த மண் அணையினால் அமைக்கப்பட்ட வீரானம் என்னும் வீர நாராயணம் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி,காவேரிப்பாக்கம் ஏரி,இராசசிங்க மங்கலம் ஏரி முதலிய ஏரிகளின் மிகப் பெரும் அமைப்பு மேல்நாட்டுப் பொறியியல் வல்லுநர்களையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. வரலாற்றுக்கு முற்பட்ட இவற்றைப் போன்ற மாபெரும் ஏரித் தேக்க முறை இதுவரை வேறெந்த நாட்டிலும் காணப்படவில்லை என்றும் மேல்நாட்டு அறிஞர்கள் பாராட்டுகின்றனர்.102

பாசனக் கால்வாய்கள் தென்னை ஓலையைப் போல் அமைய வேண்டும் என்றும் ஒரு குறிப்பு உள்ளது. அதாவது மத்தியில் உள்ள மட்டை போன்ற பெரிய கால்வாயும், இருபுறமும் ஒலைகள் பிரிவது போல் கிளை வாய்க்கால்களும் இருக்க வேண்டும் என்பது கருத்து. இவற்றை எல்லாம் தொகுத்துக் காணும்போது இவை, பொறியியல் விந்தையாகவே தோன்றுகின்றன.103

கல். மரம், செம்பு, இரும்பு, அரக்கு முதலியவற்றைப் பயன்படுத்தி அவ்வக் காலத்தில் தமிழர் கட்டடக் கலை கோயில்களாகவும், அரண்மனைகளாகவும் வளர்ந்த விதம், கோட்டைகளாகவும், பாதுகாப்புக் கட்டடங்களாகவும் வளர்ந்த விதம் அனைத்துமே அவர்தம் வரலாற்றுச் சிறப்பையும், பண்பாட்டுப் பெருமையையும், பொறியியல் நுண்ணறிவையும் விளக்குவனவாக அமைந்துள்ளன. பிற்கால மாளிகைகளாகிய திருமலை நாயக்கர் மகால் (மதுரை) போன்றவற்றில் இசுலாமியக் கட்டடக் கலைப் பாங்கு விரவியிருப்பதாக அறிஞர் நடன காசிநாதன் போன்றோர் கருதினாலும், அதிலுள்ள முகப்புத் தூண்கள் போன்ற தமிழ்க் கட்டடக் கலைக் கூறுபாடுகள் வியக்கத் தக்கவையாக உள்ளன.104 இன்றைய மொஸைக் (Mosaic) போல் அன்றே சுதை-கண்டசருக்காரை, இளநீர், பனஞ்சாறு-முட்டைச் சாறு போன்றவற்றால் மழுமழுப்பான மேற்புறம் அமைக்கப்பட்டிருக்கும் அழகை மகாலில் காணமுடிகிறது.

▓▓

குறிப்புகள் :

1. திருமுருகாற்றுப்படை 17, ப. 3.

2. டாக்டர் தமிழண்ணல், ஒப்பிலக்கிய அறிமுகம், பக், 138-39.

3. நெடுநல்வாடை 72-75.

4. பத்துப்பாட்டு நெடுநல்வாடை, நச்சினார்க்கினியர் உரை, ப. 385.

5. பத்துப்பாட்டு உரை நெடுநல்வாடை, ப.5.

6. நெடுநல்வாடை 76-79.

7. முருகு ராஜேந்திரன், மனையடி சாஸ்திரம், ப. 82.

8. பத்துப்பாட்டு, நச்சினார்க்கினியர் உரை. ப. 385.

9. நெடுநல்வாடை, வை.மு.கோ. உரை, ப.15.

10. நெடுநல்வாடை 79-85.

11. முருகு ராஜேந்திரன், மனையடி சாஸ்திரம், ப.25.

12. பத்துப்பாட்டு நெடுநல்வாடை நச்சினார்க் கினியர் உரை, ப. 335.

13. பத்துப்பாட்டு நெடுநல்வாடை வை. மு. கோ. உரை, ப. 16.

14. நெடுநல்வாடை 84.

15. நெடுநல்வாடை 86.

16. நெடுநல்வாடை 94.

17. கலித்தொகை 44:5-7.

18. சீவகசிந்தாமணி 2595.

19. நற்றிணை 370.

20. மதுரைக்காஞ்சி 287.

21. மதுரைக்காஞ்சி 853-54.

22. திருமுருகாற்றுப்படை 228.

23. மலைபடுகடாம் 123.

24. நெடுநல்வாடை 89-90.

25. நெடுநல்வாடை 93-100.

26. நெடுநல்வாடை 101-114.

27. மதுரைக்காஞ்சி 485.

28. நெடுநல்வாடை உரை. ப. 338.

29. நெடுநல்வாடை 124-135.

30.மயிலை சீனி வேங்கடசாமி, தமிழர் வளர்த்த, அழகுக் கலைகள், ப. 9.

31. மயிலை சீனி வேங்கடசாமி, தமிழர் வளர்த்த, அழகுக் கலைகள்,ப.10.

32. மயிலை சீனி வேங்கடசாமி, தமிழர் வளர்த்த, அழகுக் கலைகள்,ப.11. 33. அகநானூறு 167 : 13-16.

34.மயிலை சீனி வேங்கடசாமி, தமிழர் வளர்த்த அழகுக் கலைகள், ப. 12.

35. அப்பர் தேவாரம் திருஅடைவுத் தாண்டகம், 5.

36.மயிலை சீனி வேங்கடசாமி, தமிழர் வளர்த்த அழகுக் கலைகள், ப. 12.

37.மயிலை சீனி வேங்கடசாமி, தமிழர் வளர்த்த அழகுக் கலைகள், ப. 13.

38.மயிலை சீனி வேங்கடசாமி, தமிழர் வளர்த்த அழகுக் கலைகள், ப. 14.

39.மயிலை சீனி வேங்கடசாமி, தமிழர் வளர்த்த அழகுக் கலைகள், ப. 14.

40.மயிலை சீனி வேங்கடசாமி, தமிழர் வளர்த்த அழகுக் கலைகள், ப. 15.

41.மயிலை சீனி வேங்கடசாமி, தமிழர் வளர்த்த அழகுக் கலைகள், ப. 20

42. நாலாயிர திவ்யப் பிரபந்தம், திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி, 1218-1227.

43.மயிலை சீனி வேங்கடசாமி, தமிழர் வளர்த்த அழகுக் கலைகள், ப. 21.

44.மயிலை சீனி வேங்கடசாமி, தமிழர் வளர்த்த அழகுக் கலைகள், ப. 22.

45.மயிலை சீனி வேங்கடசாமி, தமிழர் வளர்த்த அழகுக் கலைகள், ப. 22.

46. மயிலை சீனி. வேங்கடசாமி, தமிழர் வள்ர்த்த அழகுக் கலைகள் ப.16
47. மதுரைத் தமிழ்ப் பேரகராதி ப.586
48. மயிலை சீனி. வேங்கடசாமி, தமிழர் வள்ர்த்த அழகுக் கலைகள் ப 16
49. """ ப.23
50. """ ப.26
51. """ ப.35
52. """ ப.27
53. அப்பர் தேவாரம் திருஅடைவுத் திருத் தாண்டகம் 5ம் பாடல்
54. நடன காசிநாதன், தமிழக நுண் கலைகள், கட்டடக் கலை ப.82
55. """ ப.83
56. பெரும்பாணாற்றுப்படை ப.263-65
57. " ப.225
58. " ப.88
59. அகநானூறு 12:9
60. " 172:10
61. " 210:8
62. " 229:5
63. " 272:11
64. " 369:22
65. பெரும்பாணாற்றுப்படை 263-65
66. மயிலை சீனி. வேங்கடசாமி, தமிழர் வள்ர்த்த அழகுக் கலைகள் ப.84
67. சிலப்பதிகாரம், மனையறம் 12
68. மணிமேகலை 21:125-126
69. மயிலை சீனி. வேங்கடசாமி, தமிழர் வள்ர்த்த அழகுக் கலைகள் ப.85
70. சிலப்பதிகாரம், ஊர்காண் 146-147
71. மணிமேகலை, மலர்வனம் புக்ககாதை 126-127
72. """ 120
73. நெடுநல்வாடை 110
74. மதுரைக் காஞ்சி 484-85
75. நெடுநல்வாடை 110-114
76. பரிபாடல் 18:27-29
77. புறநானூறு 59
78. டி. முத்தையன், தமிழர் நாகரிகம் பொறியியல் ப.64
79. சிலப்பதிகாரம் 15:206-216
80. டி. முத்தையன், தமிழர் நாகரிகம் பொறியியல் ப.64
81. ப.29
82. """ ப.31
83. """ ப.58
84. திருக்குறள் 743
85. கம்ப ராமாயணம், கும்பகருணன் வதைப்படலம் 159
86. புறநானூறு 20
87. சிலப்பதிகாரம் ஆய்ச்சியர் குரவை 17:33
88. புறப்பொருள் வெண்பா மாலை 228
89. புறப்பொருள் வெண்பா மாலை நொச்சி படலம்,குதிரை மறம் 4
90. புறப்பொருள் வெண்பா மாலை உழிஞைப் படலம் வாள்நாட்கோள் 2
91. புறப்பொருள் வெண்பா உழிஞைப் படலம் ஏயிற்பாசி 18

92.
புறப்பொருள் வெண்பா மாலை வேற்றுப்படை வரவு 24
93.
ஞா. தேவநேயன், பழந்தமிழராட்சி ப.61
94.
""" ப.63
95.
""" ப.63
96.
மயிலை சீனி வேங்கடசாமி, தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் ப.95
97.
டி. முத்தையன், தமிழர் நாகரிகம் பொறியியல் ப.62
98.
சிலப்பதிகாரம் .5:7-8
99.
டி. முத்தையன், தமிழர் நாகரிகம் பொறியியல் ப.61
100. """ ப.64
101. """ ப.65
102. """ ப.65
103. """ ப.65
104. நடன காசிநாதன், தமிழக நுண் கலைகள் P.VI, 1978