பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்/கட்டடக் கலை மரபு

விக்கிமூலம் இலிருந்து
இயல் இரண்டு

கட்டடக் கலை மரபு

கட்டடக் கலை அறுபத்து நான்கு கலைகளுள் ஒன்றாகவே கருதப்பட்டு வந்திருக்கிறது. 'சிற்பத் தொழில்' என்பதனைக் கலைஞானம் அறுபத்துநான்கின் ஒன்று1 எனக் குறிப்பிட்டு 'இல்லமெடுத்தல், கோயில் முதலியனக் கட்டுஞ் சாத்திரம்’ என மதுரைத் தமிழ்ப் பேரகராதி விளக்கவும் செய்கிறது. செதுக்குவேலை, கல்வேலை,கற்சிற்ப வேலை என விரிவும் கூறப்படுகிறது. இத்தொழில் செய்வோரைக் குறிக்கும் பெயர்களுள் ஒன்று ‘கண்ணுள் வினைஞர் கண்ணாளர்’ என்பது. இச்சொற்றொடரே ஓவியர், சிற்பியரைக் குறிக்கவும் பயன்படுத்தப்பெற்றது. வடமொழிப் பெயரில் இது 'வாஸ்து வித்யா' எனப்படுகிறது. சிற்பத் தொழிற்கு உறுப்பு எனக் கல், உலோகம், செங்கல், மரம், மண், சுதை, தந்தம், வண்ணம், கண்டசருக்கரை, மெழுகு ஆகியவை கூறப்பட் டுள்ளன.

இக்கலை பற்றிக் கூறும் முன்னூல்களாக விச்சுவ தருமம், விச்சுவேசம், விச்சுவசாரம், விருத்தம், தாவட்டம், நளம், மயம். அனுமான், பானு, கற்பாரியம், இருப்பிம், மானசாரம், வத்து வித்யாபதி, பராசாரியம், அரிடிகம், சயித்தகம், வாத்துபோதம், வித்தாரம் ஐந்திரம், வச்சிரம், செளமம், விச்சுவகாசிபம், மகாதந்திரம், விசாலம், சித்திரம், காபில காலயூபம், நாமசங்கிதை, சாத்திகம், விச்சுவபோதம், அதிசாரம், வெகுசுருதம், மானபோதம் என்னும் முப்பத்திரண்டு நூல்களை மதுரைத் தமிழ்ப் பேரகராதி4 விவரிக்கிறது.

இம்முப்பத்திரண்டு நூல்களுள் மயன் இயற்றியதாக வழங்கும் சிற்ப சாத்திரம் எனப்படும். 'மயம்' ஒன்றே தமிழில் செய்யுள்களின் வடிவில் வழங்கி வருகிறது. நானூற்றுப் பதினைந்து விருத்தங்களுக்கு மேலாக இந்நூலில் உள்ளன. சிற்பநூல் பின்வருமாறு தொடங்குகிறது.

வேதநான் மறைகளாகி விளங்கும் மும்மூர்த்தியாகிப்
பூதலந் தனைப்படைத்த புண்ணியன் தாளைப் போற்றித்
தீதிலா மயனார் சொன்ன சிற்ப சாஸ்திரமாம் நூலை
நீதியாய்த் தமிழினாலே நிலைபட உரைக்கலுற்றேன்5

மனையடி சாத்திரம் இவ்வாய்வுக்கு எவ்வகையில் பயன்படும் என்பதை டாக்டர் ச. வே. சுப்பிரமணியன் அவர்கள் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன மனைநூல் பதிப்பின் முன்னுரையில் பின்வருமாறு கூறியுள்ளார்.

"மனித வாழ்க்கையின் நாகரிக வளர்ச்சியை, வீடு கட்டி மனிதன் வாழ்ந்தது நிரூபிக்கிறது. தமிழர் வீடு கட்டும்போது நல்ல இடத்தைத் தேர்ந்தெடுத்தனர். நல்ல மரத்தைத் தேர்ந்தெடுத்தனர். நல்ல நாள் பார்த்துக் கட்டத் தொடங்கினர்." தமிழ்நாட்டிலிருந்து தேக்கு மரம் பல நாடுகளுக்குச் சென்றதற்கு அடிப்படைக்காரணம் தமிழர் வீடுகட்டுவதில் சிறந்த மரத்தைத் தேர்ந்தெடுத்ததுதான் என்பது தெளிவாகிறது. நல்ல மரங்களை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்பதை பற்றித் தமிழர், தெளிவாக அநுபவ அறிவின் வாயிலாக உணர்ந்திருந்தனர் என்பதை நம் மனைநூல் சாத்திரங்கள் நமக்கு உணர்த்துகின்றன.6

தமிழ் மனைநூலின் ஆசிரியர் யாரென அறிய இயலவில்லை எனினும் இவ்வழி நூலிலிருந்து நாமறியும் செய்திகள் பயனுள்ளவையாய் அமைகின்றன.ஆய்வுக்குப் போதிய உதவியாகவும் அமைகின்றன.

நிமித்தங்கள்

கட்டடம் கட்டுவோன் மனைகோல வேண்டும் என்று அதற்குரிய சிற்பியை (கொத்தனாரை) அழைத்துக் கொண்டு புறப்படும்போது எதிர்ப்படும் மனிதர்கள், பொருள்கள் ஆகியவற்றையே மனைநூல் நிமித்தம் என்று கூறுகிறது. பாமரர் வழக்கில் இதுவே சகுனம் என்றும் கூறப்படும்.

இனி எந்தெந்த நிமித்தங்கள் நல்லவை, எந்தெந்த நிமித்தங்கள் தீயவை என மனை நூலின்படியே காணலாம்.

நன்னிமித்தங்கள்

1. பேரழகு வாய்ந்த பெண்கள் எதிர்ப்படுதல், 2. நிறைகுடம், 3. துணி வெளுக்கும் வண்ணான், 4. தயிர்க்குடம், 5. பால்குடம், 6. சோறு, 7. மதுக் குடம், 8. பருவ மகளிர், 9. சாரைப்பாம்பு, 10. தேவதாசி, 11. கரும்புக்கட்டு, 12. இரட்டை அந்தணர்.7

கீழ்வரும் விலங்குகளும் பறவைகளும் மனைகோலைப் புறப்படுகையில் இவ்வாறு புறப்பட்டுச் செல்கிறவருக்கு

இடது பக்கத்தில் தொடங்கி வலது பக்கம் நோக்கிச் சென்றால் பெரிதும் நலம் பயக்கும் என்கிறது மனைநூல்.

1. நரி, 2. கிளி, 3. வேங்கைப்புலி, 4. முயல், 5. கோழி, 6. கொக்கு, 7. மயில், 8. ஓந்தி, 9. மான், 10. பசு, 11. மாடு, 12. நாரை, 13. அணில், 14. கழுதை, 15. செம்போத்து 8

தீய நிமித்தங்கள்

1. அழுக்கு ஆடை அணிந்தவன், 2. செம்பட்டை முடியினன், 3. சுருட்டை முடியினன், 4. கால்நொண்டி 5. உடலில் மயில் இல்லாதவன், 6. விரித்த தலையை உடையவன், 7. ஒற்றைக் கண்ணன், 8. கைம்பெண். 9. தடி ஊன்றி வருபவன்

ஆகியோர் எதிரில் வருவது உயிர்க்கு ஏதம் விளைவிக்கும் நிமித்தங்களாகக் கருதப்படுகிறது.9

1. அவிழ்ந்த கூந்தலுடன் வருவோர், 2. மோட்டைத் தலையர், 3. மட்டை என்னும் ஒருவகைப் பாம்பு, 4. துறவி, 5. ஒற்றை அந்தணன், 6. மார்பில்லாத பெண், 7. புதிய சட்டி பானை, 8. மூக்கறையன் 9. எண்ணெய் விற்போன்

ஆகியோர் எதிர்ப்பட்டாலும் தீமையேயாம்.5

எதிர்ப்படும் பொருள்கள் சிலவற்றிற்கும் பின்வரும் விளைவுகள் கூறப்பட்டுள்ளன.

பொருள் பலன்

1. குறைகுடம் - துயரம் உண்டாகும்

2. நெருப்பு - குடும்பம் அழியும்

3. கரி - பிணிகள் உண்டாகும்

4. எலும்பு - கன்று காலிகள் நாசமாகும் .

5. உமி - செல்வம் சீரழியும்

6. விறகு - இகழ்ச்சியும் பழியும் ஏற்படும்

நற்பயன்

கட்டடம் கட்டிக்கொள்ள இருப்பவனும் கொத்தனாரும் கட்டப்பட இருக்கிற மனையில் போய் நின்றபின் ஏற்படும் நிமித்தங்களின் பயனை இனிக் காணலாம்:

மனைக்குரியோனும் சிற்பியும் நின்ற இடத்திற்கு வலப்பக்கமாகப் பல்லி செல்லுமானால் நற்பயன் விளையும்.12

முதலில் வலப்புறம் பல்லி சொல்லி அதன்பின் இடப் பக்கமும் தொடர்ந்து சொல்லுமானால் அம் மனைக்கு உரியோன் அரசனுக்கும் - ஆள்வோர்க்கும் மிகவும் வேண்டியவனாகவும், நல்வாழ்வு வாழ்பவனாகவும் இருப்பான்.

காட்சியில் படும் பிற

மனையில் சென்று நிற்கும்போதில் பின்வரும் உயிரினங்களைக் கண்டால் நற்பயனாகும்.

உயிரினம் பயன்
1. வெள்ளைப் புறா சீரும் சிறப்புமாக வாழ்வர்
2. வெள்ளைப்பசு
3. வெள்ளைக் காளை

பறண்டை என்னும் புள் பாடியபடியே வலமிருந்து இடமாகச் செல்வதைக் கண்டால் துயரம் நீங்கி நலம் பயக்கும். 13

பொருள் பயன்
1. மதுக்குடம்
2. மாமிசம்
3. பால்
4. நெய்
5. தண்ணிர் மிகவும் மேலான நல்
6. நல்லபுடைவை விளைவுகள் ஏற்படும்
7. மங்கல மகளிர்
8. நிறைகுடம்
9. யானை
10. குதிரை
11. தேர்
12. ஒற்றை ஆடவன்

தீய பயன்

மனையில் போய் நிற்கும்போது பின்வருவன நிகழுமாயின் மனைகோலாமல் திரும்பிவிடவேண்டும் என்கிறது மனைநூல். 14

1. எறும்புகள் அணி அணியாகச் செல்லாது பிரிந்து சிதறிச் செல்வது.
2. கரையான்கள் பரவிக் கிடப்பது.
3. வண்டுகள் கண்டபடி மண்பரப்பைத் துளைத்துக் கெரண்டிருப்பது.
4. ஓணான் எதிரில் ஒடி வருவது.

பின் வருவோரைக் காணநேர்ந்தால் அந்த இடத்தில் மனை கோலுவோர் குடி சீரழியுமாதலால் மனைகோலுவதைத் தவிர்க்க வேண்டுமாம்.15

1. குடியன், 2. வலையன், 3. சுடுகாட்டு ஆண்டி, 4. முடமானவன், 5. செக்கு ஆட்டுபவன், 6. மூக் கறையன், 7. கூனன், 8. அந்தகன்.

இனி மனைகோலக் கருதிய இடத்தில் மண் பரப்பைத் தோண்டிப் பார்க்குங்கால் என்னென்ன தோன்றினால் என்னென்ன பலன் என்பது. 16

தவளை, அறனை பல்லி, சிலந்தி, நண்டு ஆகியவை தென்பட்டால் வீடு சிறப்படையும்.

2. பசுவின் கொம்பு, பல தானியங்கள், செங்கல், பஞ்சலோகம் (ஐம்பொன்) இவற்றுள் எது கிடைத்தாலும் செல்வம் மேன்மேலும் பெருகும்.

3. பொன், வெள்ளி, செம்பு இவற்றில் யாதொன்று அகப்பட்டாலும் நன்மையே - புதையல் கிடைத்தாலோ மிகப்பெரிய இன்பம் விளையும். இரும்பு, ஈயம், பித்தளை இவற்றுள் யாதொன்று கிடைத்தாலும் குறைந்த நற். பலனே விளையும்.

தீய விளைவுகள்

தோண்டிய மனையுள். 1. உடும்பு, 2. பாம்பு, 3. தேன்கூடு, 4. ஆமை, 5. பூரான், 6. வண்டு ஆகியவை தென்பட்டால் வீடு தீப்பட்டு அழியுமாம். 17

1. எறும்பு, 2. தேள், 3 கரையான், 4. மரக்கட்டை 5. முட்டை, 6. நகம், 7. உரோமம், 8. மண்டையோடு, 9. எலும்பு ஆகியவற்றுள் ஒன்றோ சிலவோ தென்படுமாயின் பெருந்தீங்கு நேரிடுமாம். 18

அகழ்ந்த மண் பரப்பில்,

கரி தோன்றினால், பிணியும்
உமி தோன்றினால், செல்வக்கேடும்
விறகு தோன்றினால், குல அழிவும்

நேரிடும் என்கிறது. 19

கருங்கல்லோ, எலும்போ தென்பட்டால் மனையாள் உயிர்ச் சேதமும் மனைக்குரியோனுக்குப் பிணியால் நலிவும் நேரிடும்.

மேற்கூறிய ஏதுக்களால் மனையை அகழ்ந்து பார்க்காமல் வீடு கட்ட முயலக்கூடாது என்றும் அவ்வாறு ஆராயாமல் கட்டிவிட்டால் நடக்கும் தீய நிகழ்வுகளைக் கொண்டே கட்டப்பட்ட மனையின் எந்தெந்தப் பகுதியில்

என்னென்ன குறை என்று உய்த்துணர முடியும் என்றும் 20 மனைநூலே கூறிவிடுகிறது.

1. கட்டிய வீட்டின் கிழக்கு மூலையில் சிறுகுழந்தை யின் எலும்பு கிடந்தால் அம்மனையில் கறவையினம் பயன்தராது.

2. தென்கிழக்கு மூலையில் பரி எலும்பு கிடந்தால் பசு கறக்காததோடு அரசினர் சினத்துக்கு ஆளாக நேரிடும்.

3. யானை எலும்பு தென்புறத்திற்கிடந்தால் மனைக் குடையோன் ‘ருணகாரனாக (நோயாளி) இருந்து துயரப்படுவான்.

4. தென்மேற்கு மூலையில் பன்றி எலும்பு இருந்தால் அபமிருத்யு பாவம் (துர்மாணம்) விளையும், 21

5. மேற்குப்புறம் எருதின் எலும்பு கிடந்தால் மனைக் குடையோன் பிறருக்கு ஆருடம், போக்குவரவு பற்றி உரைக்கும் தொழிலில் இருப்பான்.

6. மனையின் எப்பகுதியில் கழுதை எலும்பு இருப்பினும் உரியோன் பொருள் நாசத்தால் வருந்துவான்.

7. ஆட்டு எலும்பு வடக்கே இருந்தால் அண்டை அயலார் விரோதமே நிகழும்.22

8. வடகிழக்கு மூலையில் நாய் எலும்பு இருந்தால் எப்போதும் கலகமே விளையும்.

இக்காரணங்களால் கட்டடம் கட்டத் தொடங்குமுன் - மனையை நன்கு அலசி ஆய்ந்த பின்பே பணி தொடங்க வேண்டும் என்கிறது மனைநூல்.

மண் தேர்வும் பிறவும்

கட்டடம் கட்டுவதற்கு உரிய மனையின் மண்ணைத் தேர்ந்து சோதனை செய்யவும் அதன் முடிவை பொறுத்து

மனை அமைக்கவும் கூட நூலில் வழி செய்யப்படுள்ளது. 22

மனை நூலில் கூறுவதையே இன்றைய மண் ஆய் வாளர்களும் கூறுகின்றனர். தற்காலப் பொறியியலில் மண் ஆய்வு (Soil investigation) உரிய இடத்தைப் பெற்றுள்ளது.

மண்ணை அகழ்ந்து பார்த்தல், குழி வெட்டிப் பார்த்தல் போன்ற மனைநூல் முறைகள் இவ்வாறு மண் ஆய்வைப் பொறுத்தவையாகத் தோன்றுகின்றன.

எப்பொருளுக்கும் அடிப்படை நன்கு அமைதல் வேண்டும் என்னும் உலக வழக்குப்படி இக்கட்டடங்கள் எல்லாம் நிலைத்து நிற்க வேண்டின் சிறந்த அடித்தளங்களைப் பெற்றவையாயிருக்க வேண்டும். அடித்தளங்கள் செவ்வனே அமைய வேண்டின் அவை அமைக்கப்படும் இடத்தில் முழுமையான மண் ஆய்வு நடத்தப்படல் சாலவும் இன்றியமையாததாகும்.

மண் ஆய்வு கீழ்க்கண்ட நோக்கங்களோடு நடத்தப்படுகிறது.

(அ) கீழ் மண் தளத்தின்(Sub soil Strata) தாங்கு திறனை (Bearing Power) கண்டுபிடிக்க,

(ஆ) எவ்வளவு ஆழத்தில் உறுதியான தளம் உள்ளது என்பதனை அறிய,

(இ) நமக்குத் தேவையான தாங்குதிறன் கொண்ட தளம் எவ்வளவு ஆழத்தில் உள்ளது என்பதையும் அத் தளத்தின் உயரம் என்ன என்பதையும் கண்டறிய,

(ஈ) எவ்வளவு ஆழத்தில் கீழ்த்தள நீர் மட்டம் உள்ளது என்று காண 24

என்று வகைப்படுத்துவர் பொறியியல் நூலார். இதே செயலை மனை நூலாரும் வேறு வகையில் செய்து பார்த் திருக்கின்றனர்.

'திறந்த வெட்டுக் குழிகள்' (Open pits) அகழ்ந்து ஆய்தல் (Probing) என்று இருவகை மண் ஆய்வு கூறப் படுகிறது. மண்ணின் அழுத்தத்தன்மை (Compressibility) யும் காணப்பட வேண்டும். 25

குழி அகழ்ந்து எடுத்தமண்ணை மீண்டும் குழியிலேயே இட்டுப் பார்க்கும் மனைநூல் முறையின்படி இந்த மண் அழுத்தத் தன்மையே பரிசோதிக்கப்பட்டிருக்கிறது என் பதை உணர முடிகிறது. 26

பாட்டியல் நூல்களில் இன்னின்ன வருணத்தார்க்கு இன்னின்ன பாட்டு என்று கூறப்பட்டுள்ளது போல மனை நூலிலும் கூறப்படுகிறது. இன்னின்னவர்க்கு இந்த வகை மனை என வருதலைக் காண்கிறோம்.

(1) அந்தணர்க்கு : வெண்மை வண்ணமும் இனிமைச் சுவையுமுடைய தாமரைப் பூவின் நறுமணம் பொருந்திய மண்ணில் அந்தணர் வீடு கட்டினால் அனைத்து நலனும் எந்நாளும் பெற்று மங்கல நல்வாழ்வு வாழ்வர்.

(2) அரசர்க்கு : செந்நிறமும், துவர்ப்பான சுவையும் குதிரையின் மேனி மணமும் உள்ள நிலத்தில் அரசர் வீடு கட்டினால் துயரமின்றிக் குபேரனை ஒத்த செல்வம் நிலைத்திருக்க வாழ்வர்.

(3) வேளாளர்க்கு : கரிசல் நிற மும் (கருப்பு) கைப்புச்சுவையும், காரச்சுவையும்,தானியங்களின் மணமு முள்ள நிலத்தில் வேளாளர் வீடு கட்டினால் சிறப்புள்ள தாயிருக்கும். 27

(4) வணிகர்க்கு : பசு நிறமும் (பச்சை) புளிப்பு உவர்ப்புச் சுவையும் உள்ள நிலத்தில் வாணிகஞ் செய்வார் கட்டடம் கட்டினால் உயர்வு அடைவர்.

பொதுநிலை

(5) பொதுவில் என்றுமே இடையறாத இனிமையும்,நறுமணமுமுள்ள நிலத்தில் எவ்வினத்தவரும் வீடு கட்ட எந்தக் குறைவும் வராது.

(6) தயிர், நெய், தேன், குருதி, மயிர், மீன், பட்சி ஆகியவற்றின் மணமுள்ள மனையில் கட்டடம் எடுத்தால் எவர்க்கும் ஆகாது. நல்லன எவையும் விளையா.23

உயர்வு தாழ்வு - திசைகள்

மனையின் கிழக்குப் பக்கமும் வடக்குப் பக்கமும் தாழ்வாகவும், மேற்குப்பக்கமும், தெற்குப்பக்கமும் உயர்ந்தும் உள்ள நிலம் கட்டடத்திற்கு என அமைந்தால் பெரிதும் நலம் பயக்கும். 24

(1) தென் சார்பாக வடக்குப் பார்த்த வாயில் அமைகிற மனை மறையோர்க்கு நல்லது.

(2) மேற்குச் சார்பாகக் கிழக்குப் பார்த்த வாயில் அமைகிற மனை அரசர்க்கு நல்லது.

(3) வடக்குச் சார்பாகக் கிழக்குப் பார்த்த வாயில் அமைவது வணிகர்க்கு நல்லது. .

(4) கிழக்குச் சார்பாக மேற்கைப் பார்த்த மனை, அமைவது வேளாளர்க்கு நல்லது.

ஏற்ற இடம் - நிமித்தம் .

மேற்கூறியபடி தேர்ந்தெடுத்த மனையில் கட்டடம் கட்டும் உரிமையாளன் தன்னைவிட மூத்தோர், குருக்கள், இரு முது குரவர், சுற்றத்தாரில் மூத்தவர் ஆகியோர் தன் இடத்திற்கு மேற்கேயும், தெற்கேயும் அமையுமாறு செய்து அவர்கள் வசிப்பிடத்திற்குக் கிழக்கிலும் வடக்கிலும் தன்

இடம் அமையச் செய்து கொள்வதே உயர்வு அளிக்கும் என்கிறது மனைநூல்.30

(1) இந்திர திசை எனப்படும் மனையின் கிழக்குப் பக்கத்தில் புற்றுத் தோன்றுமாயின் பொருளும் செல்வமும் பெருகும். 31

(2) அக்கினித் திசை எனப்படும் தென்கிழக்குப் பக்கத்தில் புற்றுத் தோன்றுமானால் கட்டப்படும் கட்டடம் இடிந்து பாழாகிவிடும்.

(3) எமன் திசை எனப்படும் தெற்குப் பக்கத்தில் புற்றுத் தோன்றுமாயின் அக் கட்டடத்தில் உள்ளார்க்குத் துன்பம் தொடர்ந்து வரும்.

(4) நிருதித் திசை என்று கூறப்படும் தென்மேற்குத் திசையில் புற்றுத் தென்படுமாயின் கட்ட்டத்திற்கு உரியோன் எல்லாத் திசைகளிலும் புகழ் பெற்று உயர்ந்த வாழ்வைப் பெறுவான்.

(5) வருண திசை எனப்படும். மேற்குத் திசையில் புற்றுத் தோன்றுமேயானால் நன்மக்கட்பேறு - புத்திரப் பேறு அடைவர்.

(6) வாயு திசை எனப்படும் வடமேற்குத் திக்கில் புற்று உண்டாகில் மரணம் ஏற்படும்.

(7) குபேர திசை எனப்படும் வடக்குத் திசையில் புற்றுத் தோன்றினால் அனைத்துச் சிறப்பும், செல்வமும் சீரும் பெறுவார்கள். - -

(8) ஈசானிய திசை எனப்படும். வடகிழக்குத் திசையில் புற்றுத் தோன்றினால் அனைத்து நாளும் பிணி, பெருகி நலிவடையும்.

(9) கட்டட மனையின் மேற்கூறிய எட்டுத் திசையும் அல்லாமல் இவற்றுக்கு நடுவில் உள்ள நடுவன் மனைப் பகுதியை பிரம்மத்தானம் என்பர். இந்த நடுவன் மனைப் பகுதியில் புற்றுத் தோன்றினால் பெருங்கேடு. அதாவது சாவு நிகழும் என்கிறது மனைநூல். “ புற்று நிமித்தத்திற் காகப் பகுத்துக்கூறப்பட்ட எண்திசைகளையும் பிரம்மத் தானத்தையும் வெறும் திக்குகளாக மட்டும் பார்க்காமல் மனையின் ஒன்பான் பகுதிகளாகப் பார்க்க வேண்டும் என்று கூறும் மனைநூல்.

மனை கோலுதல்

கட்டடம் கட்டுவதற்கு முன் தாமாக நேரும் நிமித்தங்கள், சகுனங்கள், நேர்ச்சிகள் தவிர மனையில் கட்ட இருப்பவன் தானாகப் பார்க்கும் சில அடையாளக் குறிப்புக்களும் உள்ளன.

பூப்போட்டுப் பார்த்தல்

மங்கல நன்னாளைத் தேர்ந்தெடுத்துக் கட்டடம் கட்டப் புகுவோன் தன் குடும்பத்துடனும் சிற்பியுடனும் மனைக்குச் சென்று மனையின்கண் ஒரு முழ அகல ஆழ முள்ள குழி ஒன்றை அகழ்ந்து - அதனைத் தண்ணிரால் நிரப்பி அதன்மேல் நறுமணமுள்ள மலரை இடுதல் வேண்டும். அங்ஙனம் இடப்பட்ட மலர் நீர்ப்பரப்பிலே வலமாகச் சுற்றி வருமாயின் அம்மனையில் கட்டும் கட்டடத்தில் அனைத்து நலன்களும் பெருகி,வளரும்.32

இடப்பக்கமாகச் சுற்றி வருமாயின் துன்பம் நேரும் என்பதால் அம்மனையில் கட்டடம் கட்டாமல் விடுதலே சிறந்தது. “வேலை செய்யும் மண்வெட்டி கொட்டு முறியு மாயினும் முனை முறியுமாயினும் கழலுமாயினும் சாவு நேரும் என்பர்.

தொடங்கும்போதே இதைச் செய்து திருவுளக் குறிப்பு அறிந்துவிடுதல் மரபு. பெரும்பாலும் ஈசானிய மூலை எனப்படும் வடகிழக்கு மூலையில் இவ்வாறு அகழ்ந்து நீருற்றி மலரிட்டுப் பார்ப்பது வழக்கமாகும். இது தவிர மற்றொரு வழக்கமும் இருந்தது.34

நீரூற்றி மறுநாள் காணும் நிலை

வீடு கட்டுகிற மனையில் கிழக்கு அல்லது வடக்குப் பக்கத்தில் நாற்சதுரமாகத் தோண்டி அவ்வாறு அகழ்ந்த குழியில் மங்கல மங்கையர் மூவர் குடங்களில் நீர் கொண்டு வந்து ஊற்ற வேண்டும். ஊற்றியபின் அம்மூவரும் ஊற்றிய நீரைத் திரும்பிப் பார்க்காமல் சென்றுவிட வேண்டும். பள்ளத்தில் அவர்கள் ஊற்றிய நீர் வலப்பக்கமாக ஒடிப் பாய்ந்தால் வெற்றி, செல்வம், செல்வாக்கு அனைத்தும் நாடி வரும். இடப்பக்கமாக ஓடினாலும், நுரையும், குமிழியும் ஆக நீர் உள்ளிறங்கினாலும் பல தீமைகள் வரும். 35

இனி இதனை இவ்வாறன்றி வேறுவிதமாகக் காணலும் உண்டு. அகழப்பட்ட பள்ளம் நிறையுமாறு முந்திய மாலையில் நீரூற்றி மறுநாள் கதிரவன் உதிக்கும். காலத்தே வந்து பார்க்கவேண்டும்.

அவ்வாறு காணுங்கால் மூன்றுபிடி (விரற்கடையளவு , நீரேனும் எஞ்சித் தேங்கி நிற்குமாயின் அது மிக நல்ல மனையாகும். நீர் இன்றிச் சேறாக ஈரப்பதத்தோடு இருப்பினும் நன்றே.

நீர் வறண்டு வெடித்திருந்தால் தாழ்வு நிலை வந்தெய்தும்.

ஈரப்பசையின்றிப் பாளம் பாளமாகப் பூமி பிளந்திருந்தால் நோயும், சிறைத்தண்டனையும் எய்தும்.

மண் எடுத்து கண்டும் அடைத்தல்

மனை கோலும் இடம் நல்லதா கெட்டதா என அறிய - மற்றொரு முறையும் வழக்கில் இருந்தது.36 மனைகோலும் அடையாளமாக அகழ்ந்த குழியிலிருந்து எடுத்த மண்ணை மீண்டும் அதே குழியில் இட்டு நிரப்பிப் பார்க்க வேண்டும்.

அம்மண் குழியையும் நிரப்பி மீதமும் எஞ்சுமானால் அங்கே கட்டப்படும் மனையில் வருவாயும், செல்வமும் பெருகி ஊதியம் உயரும் எனக்கொள்ளல் வேண்டும். இட்ட மண்ணினால் குழி சரிசமமாக நிரம்ப மட்டுமே செய்யுமாயின் அம்மனையில் வாழ்பவனின் வரவுக்கும். செலவுக்கும் சமமாயிருக்கும் என்று கொள்ள வேண்டும். உயர்வுமின்றித் தாழ்வுமின்றி எல்லாம் சமமாய் இருக்கும் என்க. இட்டமண் குழியை நிரப்பப் போதாமல் குறைந்து விடுமாயின் வருவாய் குன்றிச் செலவு மிகுதியாகி வறுமை வந்தெய்தும் எனக் கொள்ளவேண்டும். இது தவிரத் தேங்காய்க் குறி என ஒன்றும் இருந்தது.37

தேங்காய் அடையாள முறை

மனை மங்கலம் செய்யும்போது அங்கு வழிபாட்டின் நிமித்தம் உடைக்கப்படும் தேங்காய் எவ்வாறு உடைகிறது என்பதைப் பொறுத்து நன்மை தீமைகள் கணிக்கும் நிலையும் இருந்தது. அவை வருமாறு: 38

(1) தேங்காயின் குடுமி உள்ள முடிப்பக்கம் (கண்கள் உள்ள பக்கம்) பெரிதாகவும் அடிப்பக்கம் சிறிதாகவும் உடைந்தால் அந்த மனையில் திருமகளின் அருள் பொங்கிச் செல்வம் பெருகும்.

(2) முடிப் பக்கம் மும்மடங்கும், அடிப்பக்கம் ஒரு மடங்குமாக உடைந்தாலும் அங்கே கட்டப்படும் மனை யில் மிக்க உவகை விளையும்.

(3) முடிப்பக்கம் ஐந்தில் மூன்று பங்கும் அடிப்பக்கம் ஐந்தில் இரு பங்குமாக உடைந்தால் அக் குடும்பம் நலமாயிருக்கும்.

(4) நரம்பு பிடித்திருந்தால் அக்குடும்பத்தினர் நீடுழி வாழ்வார்கள் என்று பொருள்படும்.

(5) உடையும்போது சிறுபகுதித் துண்டுத் தேங்காய் மூடியினுள் விழுமாயின் அவ்வீட்டில் இரத்தினம் கூடும் என்பர்.

(6) உடையும் தேங்காய் அகலத்தில் இரண்டாக உடையாமல் நீளத்தில் நெடுங்குத்தாகப் பிளக்குமானால் மிக்க துயரம் உண்டாகும். 39

(7) பெரும் பங்கு சிறு பங்கு இன்றிச் சரி பாதியாய் உடையுமாயினும் நன்மை தரும்.

(8) நான்கு அல்லது ஆறு சுக்கல்களாகச் சிதறி உடையுமாயின் மிக்க கேடு பயக்கும்.

(9) தேங்காய் கண்ணுள்ள பகுதியில் உடைந்து அவ்வாறு உடைந்த பகுதி மனைக்குரியவன் மேல் தெறித்து வந்து விழுமாயின் அவனுக்குச் சாவு வரும்.

(10) மேலோடு கழன்று தனியாகப் பிரிந்து உடைத் தால் வறுமை உண்டாகும்.

(11) மேலோடு கழன்று மேலே வந்து விழுந்தால் மனை கட்டுகிறவன் பிணியடைவான்.

(12) ஓடு உடைந்து கழன்று மனையில் விழுந்தால் உரியவன் வீடு வாசலை விற்க நேருமளவு வறுமை அடைய நேரிடும். 40

பொருந்து மனைகள் சில பொருந்தா மனைகள் 41

(1) தெரு அல்லது வீதி மட்டத்தை விட மிகவும் பள்ளமாக இருக்கும் மனையில் வீடுகட்ட முற்படலாகாது. இழக்கு மேற்குத் திசைகளில் நீண்டும் வடக்குத் தெற்குத் திசைகள் சற்றே குறுகலாகவும் இருப்பது நல்லது. பூமி கோணலாக இருக்கக்கூடாது. (2) மூன்று மூலைகள் சரிவரப் பொருந்தி முக்கோணமாய் நான்காம் மூலையே இல்லாது பாம்பின் வால்போல அமைந்த இடத்திலும் வீடு கட்டலாகாது. பழைய மனையைச் சிதைத்த இடத்தில் கட்டுதலும் புதிய மனையில் பழைய வீட்டு உறுப்புக்களைப் பயன்படுத்தலும் ஆகா என்கிறது மனைநூல். 42

(3) வளைகளும் பொந்துகளும் உள்ள மனையும் கட்டடத்திற்கு ஆகாது.

(4) சூரிய சந்திரர் உதிக்கும்போது பார்வையில் படாத இடங்களில் வீடமைக்கலாகாது. அதாவது பார்வையில் படுமாறு அமைப்பது சிறப்பு ஆகும்.

ஏற்ற மாதங்கள் - ஏலாத மாதங்கள்

(கிரகாரம்பம் அல்லது பூமி பூஜை) மனை செய்வதற்கு ஏற்ற மாதங்கள் இவை, ஏலாத மாதங்கள் இவை என்றும் மனை நூலில் கூறப்பட்டுள்ளன.

புதிதாக வீடு கட்டப் புகுந்து மனை கோல முற்படுகிறவர்களுக்கு உத்தம்மான பயன்கள் விளையும் மாதங் களாவன. பின்வரும் எட்டு மாதங்கள். 43

1, சித்திரை, 2. வைகாசி, 3. ஆடி, 4. ஆவணி, 5. ஐப்பசி, 6. கார்த்திகை, 7. தை, 8. மாசி.

மேற்படி மாதங்களில் மனைகோலுவோருக்கு மிகவும் (அநுகூலங்கள்) நற்பலன்கள் விளையும் என்று கூறப்பட்டுள்ளது. இவ்வெட்டு மாதங்களிலும் மிகமிகச் சிறந்த மாதங்களாக வைகாசி, கார்த்திகை ஆகிய இரு மாதங்கள் கருதப்படுகின்றன. சித்திரை மாதம் சிறந்தது என்ற கருத்து நெடுநல் வாடையிலும் வருகிறது.44

மனை கோலும் முயற்சிக்கு ஆகாத மாதங்களாவன, பின்வரும் நான்கு மாதங்கள்.

1. ஆணி, 2. புரட்டாசி, 3. மார்கழி, 4. பங்குனி.

இம்மாதங்களில் கட்டி முடித்த வீடுகளில் குடி புகவும் கூடாது என மனைநூல் தடுக்கிறது. ஆகாத மாதங்களில் முயன்றால் பகையும், துன்பமும் உண்டாவதோடு குடி புகுந்தாலும் பிணி, பீடை நலக் குறைவுகள் நேரும் என்று சொல்லப்படுகிறது. கட்டடக் கலையின் அதிதேவதையாகிய வாஸ்து புருடனின் நிலையறிந்து கட்டுவோன் நாள்கோள் மீன் முதலியன சரிபார்த்து மனைகோல வேண்டும் என்பதை மிக விரிவாக மனைநூல் கூறும்.

மனையடி நீள அகலம்

கட்டடம் கட்டும் மனையில் கட்டப்படும் நீள அகல அடியளவை வைத்து நன்மை தீமைகளைக் கூறுவதால் தான் இவ்வகை நூல்களுக்கு 'மனையடி சாஸ்திரம்’ என்ற பெயரே வந்தது. 45 தவிர அடிகொள்ளல் - தொடங்கல் என்றும் அடிகோலுதல் - அஸ்திவாரம் போடுதல் என்றும் பொருள்படுவனவாகும். 46

புதிதாகக் கட்டப்படும் வீட்டின் அறைகள், கூடங்கள், தாழ்வாரம் (சறுக்கார்) வாசல்கள் போன்றவற்றிக்கு உரிய நீள அகலங்களின் நன்மை தீமைகள் பற்றி விளக்கப்படுகிறது. அடி என்பது முன்னாளில் காலடி அளவும்-இந்நாளில் அடி அளவுமாகக் கொள்ளலாம். மேற்கூறிய அனைத்துப் பகுதிகளின் நீள அகலத்துக்கும் இப்பலன்கள் பொருந்தும். மனையில் கட்டடம் கட்டு வோர் தங்கள் நன்மைக்கேற்ப அளவுகளைத் தேர்ந்து கொள்ளவேண்டும்.47 விஞ்ஞான அறிவு வளர்ந்துள்ள இந் நாளிலும் மரபில் நம்பிக்கையுள்ள தமிழ் மக்கள் அந்த அடிமுறை நம்பிக்கைகளைக் கைவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதே அடி முறை நம்பிக்கையான வேறொரு வகையில் கணித்துப் பார்ப்பதும் உண்டு. யார் மனையில் வீடு கட்டப் போகிறாரோ அவரே. தம் காலடியால் அளந்து பார்த்துக் கொள்கிற முறை அது. 48


அளவு (நீல அகலம்) பலன்


ஏழு அடி நினைத்த செயல் நிறைவேறாமல் நோயுண்டாகும்.
எட்டு அடி எண்ணிய செயல் முடியும். பகைவர் விலகுவர். பட்டமரமும் தளிர்க்கும்
ஒன்பது அடி ஆயுள் குன்றும்-மனையாள் இறப்பாள் -
பத்து அடி கால்நடை கன்று கால்கள் பெருகும்: வேளாண்மை விருத்தியாகும்
பதினோரடி பாலும் சோறும் நிறையும் பயிர்த்தொழில் வளரும்
பன்னிரண்டு அடி செல்வம் நலியும், வருத்தம் மிகுதியாகும்.
பதின்மூன்று அடி எண்ணிய செயல் இயலாது. உறவினர் உகைவர் ஆவர்.
பதினான்கு அடி தொல்லைகள் மிகும் - இன்ப அழிவு. உயிர்ச்சேதம்
பதினைந்து அடி நோயால் சாவு-பாவம் - செல்வம் வந்து சேராது -
பதினாறு அடி செல்வ வளர்ச்சி, புத்திரப்பேறு. பகைவர் விலகுவர் .
பதினேழு அடி பகைவர் வணங்கிப்பணிவர். இறையருள் சித்தி-அரச பதவி கிட்டல்.
பதினெட்டு அடி செல்வ அழிவு - கையிலிருந்த பொருள் விலகல்-மனையாள் பிணியுறல்
பத்தொன்பது அடி மனைவி சாவு-சண்டை பயம்-புத்திர சோகம் நேரும்.
இருபது அடி புத்திரப் பேறு-வாணிகப் பெருக்கம் செல்வமும் மகிழ்ச்சியும் நிலைத்தல்
இருபத்தோரடி பால் பாக்கியம் பெருகும். துன்பம் அணுகாது.
இருபத்திரண்டு அடி மகிழ்ச்சியான வாழ்க்கை. நன் மக்கட்பேறு-பகைவர் அஞ்சும் நிலை
இருபத்துமூன்றுஅடி ஆயுட் குறைவு-நோய் மிகுதி - சுற்றத்தார் விட்டு விலகுவர்
இருபத்துநான்குஅடி ஆயுட் குறைவு
இருபத்தைந்து அடி மனையாள் இறப்பாள்
இருபத்தாறு அடி இந்திரன் போல் போக வாழ்வு
இருபத்தேழடி உலகு புகழ வாழ்வர்-பட்ட பயிரும்விளையும்
இருபத்தெட்டடி செல்வ மிகுதி - நிறை வாழ்வு, எதிரிகள் அச்சம்
இருபத்தொன்பதடி எல்லா வளமும் பெருகும்
முப்பதடி செல்வப் பெருக்கம். புத்திரப்பேறு
முப்பத்தோரடி இறையருள் உண்டாகும்
முப்பத்திரண்டடி இறையருளால் உலகமே அடிப்படும்
முப்பத்து மூன்றடி குடிப் பெருமை உண்டாகும்
முப்பத்து நான்கடி வீட்டை வீட்டு ஓட நேரும்
முப்பத்தைந்தடி பலவகைச் செல்வமும் உண்டாகும்
முப்பத்தாறடி அரச போக வாழ்க்கை
முப்பத்தேழடி இன்பமும் இலாபமும் உண்டாகும்
முப்பத்தெட்டடி வீட்டில் பேய் பிசாசுகள் குடி இருக்கும்
முப்பத்தொன்பதடி இன்பமும் சுகமும் உண்டாகும்
நாற்பதடி சலிப்பும் சோர்வும் உண்டாகும்
நாற்பத்தோரடி குபேர வாழ்வு பெறுவர்
நாற்பத்திரண்டடி எல்லாச் செல்வமும் நிலை பெறும்
நாற்பத்து மூன்றடி சிறப்பு கெடும்-தீமையுண்டாகும்
நாற்பத்து நான்கடி கண்பார்வை அழியும்

வேறு சிலநூல்களில் 100அடி 108 அடி வரை பலன்கள் கூறப்பட்டுள்ளன.

மனை அமைப்பும் அறைகளும்

வீட்டின் அறைகள், கூடங்கள், வாயில் முதலானவற்றிற்கும் அடி அளவுப்பொருத்தம், நற்பயன், தீயபயன் ஆகியவை விவரிக்கப்பட்டிருக்கின்றன. 49

மனையின் தெற்குத் திசையில் குப்பை கொட்டவும், தென்மேற்குத் திசையில்-தென்மேற்கு எல்லையில் வைக்கோல் போர் வைக்கவும், மேற்குத் திசையில் எருமை முதலிய கால்நடைகளைக் கட்டும் கொட்டகை ஏற்படுத்தவும், வடமேற்குத் திசையில் நவதானியங்களை ஆண்டு முழுமைக்கும் சேர்த்து வைக்கும் தொம்பை அமைக்கவும், வடக்கில் பசுவிற்கான தனித்தொழுவம் மட்டும் அமைக்கவும் ஏற்ற வகையில் வீடு கட்ட வேண்டும். 50

இவ்வாறு முறை அமைத்தால் வீட்டில் வசிப்பவருக்கு ஏற்றமும், நலனும், உயர்வும் கூடிப் பெருகும் என்பது பயனாக உரைக்கப்பட்டுள்ளது.

எருமை முதலிய கால்நடைகளைக் கட்டும் இடத்திலிருந்து பசுத் தொழுவம் தனியே உயர்வு கொடுத்துப் பிரிக்கப்பட்டிருப்பதைக் கவனிக்க வேண்டும்.

வீட்டிற்குள் கிழக்குத் திசையில் குளிக்கும் இடமும் அக்கினி மூலையில் உணவு சமைக்கும் இடமும் ஏற்படுத்தப் பெறவேண்டும். 51

தெற்கில் கணவன் மனைவி உறங்கும் படுக்கையறையும், மேற்கில் சமைத்த உணவினை அமர்ந்து உண்ணும் இடமும் அமைந்திருப்பது நல்லதாம். உணவு சமைக்கு மிடமும் அமர்ந்து உண்ணும் இடமும் வேறு வேறாய் அமைந்திருத்தல் குறிப்பிடத்தக்கது. வாயு மூலையில் பசுத் தொழுவமும், வடக்கில் தானியங்கள் சேர்த்து வைக்கும் இடமும், ஈசான்ய மூலையில் வழிபாட்டு அறையும் இருந்தால் அவ்வீட்டிற்குரியோன் அரச யோகம் பெறு வான் என்கிறது மனை நூல்.

முழக்கோல் அளவு

பழைய நாட்களில் நிலத்தை அளக்கவும் கணக்கிடவும் முழக்கோல் பயன்படுத்தப் பெற்றது. ‘முழக்கம்பு’ என இதற்கு மற்றொரு பெயரும் உண்டு.52 அதைப் பற்றிய விவரம் பின்வருமாறு:

அணு எட்டுக் கொண்டது -புல் நுனி

புல் நுனி எட்டுக் கொண்டது - நுண்மணல்

நுண்மணல் எட்டுக் கொண்டது -எள் .

எள் எட்டுக் கொண்டது - நெல்

நெல் எட்டுக் கொண்டது - துவரை

துவரை எட்டுக் கொண்டது - விரற்கடை

விரற்கடை ஆறு கொண்டது - கால் முழம் அல்லது அரைச்சாண்

அரைச்சாண் இரண்டு கொண்டது - ஒரு சாண்

சாண் இரண்டு கொண்டது - ஒரு முழம்

இருபத்து நான்கு விரற்கடை - கிடகு

கிடகு வேளாளருக்கு முழம் என்று கூறப்படும். இருபத்தைந்து விரற்கடை கொண்டது பிராசாபத்தியம். பிராசாபத்தியம் வைசியருக்கு முழம் என்று கூறப்படும். இருபத்தாறு விரற்கடை கொண்டது தனுமுட்டி, தனுமுட்டிஅரசருக்கு முழம் என்றுகூறப்படும். இருபத்து ஏழு விரற்கடை கொண்டது தனுக்கிரகம்-தனுக்கிரகம் அந்தணருக்கு முழம் என்று கூறப்படும் . -

முழக்கோல்-மற்றொரு வகை

அணி எட்டுக் கொண்டது - ஒரு பஞ்சின் தூள்

பஞ்சின் தூள் எட்டுக்கொண்டது - ஒரு மயிர் முனை

மயிர் நுனி எட்டுக் கொண்டது - ஒரு மணல்

மணல் எட்டுக் கொண்டது - ஒரு கடுகு

கடுகு எட்டுக் கொண்டது - ஒரு மூங்கில் அரிசி,

மூங்கில் அரிசி எட்டுக்கொண்டது - ஓர் அங்குலம்

அங்குலம் ஆறு கொண்டது - கால் முழம்

அங்குலம் பன்னிரண்டு கொண்டது - அரை முழம்

அங்குலம் பதினெட்டுக் கொண்டது - முக்கால் முழம்


அங்குலம் இருபத்து நான்கு கொண்டது - ஒரு முழம் 53

இவற்றுள் கோயில் மனை அறை, மண்டபம், மாளிகை போன்றவற்றை இருபத்து நாலு விரற்கடை கொண்ட கிடகால் அளப்பது மரபாக இருந்தது. கோபுரம் கூடம் போன்றவற்றை ஆறுவிரல்கடை கொண்ட முழத்தால் அளப்பது வழக்கமாக இருந்து வந்தது.

கட்டடமும் மரவகைகளும்

வீடு கட்டுவதற்குப் பயன்படும் மரங்கள் பற்றியும், எந்தெந்த மரங்களை எங்கெங்கே பயன்படுத்த வேண்டும் என்பது பற்றியும் எவ்வெவற்றிற்கு என்ன விளைவு என்பது பற்றியும் மனை நூல் விவரிக்கிறது. 54

பயன்படுத்த ஏற்ற மரங்களையும் பயன்படுத்தக் கூடாத மரங்களையும் பெயர் சுட்டி இனம் பிரித்துக் கூறவும் செய்கிறது.

(அ) ஆண் மரம் (ஆ) பெண் மரம் (இ) அலி மரம்.

என மரங்களை மூன்று வகையாகப் பிரிக்கிறது மனை நூல். ஒரு கட்டடத்தில் எக்காரணத்தைக் கொண்டு பயன்படுத்தக் கூடாதவை எனப் பின்வரும் மரங்களைத் தவிர்க்கச் சொல்லுகிறது.

கூடாத மரங்கள்

1. அத்தி, 2. ஆல், 3. இச்சி (இறலி மரம்) 4.அரசு, 5. இலவு, 6. புரசு, 7. குச்சம் (குன்றிமணி மரம்),8. இலந்தை, 9.பீலி (பனங்குருத்து) 10. மகிழ், 11. விளா, 12. அகத்தி, 13. எருக்கு 14. நாவல்.

இம்மரங்களைக்கட்டடத்தில் பயன்படுத்தினால் இருக்கிற செல்வம் தேய்பிறை போலத் தேய்ந்துவிடும்-இருள் சூழும் எனக் கூறுகிறது மனைநூல். வாரிசுகள் இழப்பும், பெருந்துன்பங்கள் அடுத்தடுத்து வருவதும் இம்மரங்களால் விளையுமாம்.

இவை தவிர நெருப்புப் பட்டுப் பாதியளவு வெந்த மரங்கள் அவற்றின் வேகாமல் எஞ்சிய பகுதிகள் கொடி சுற்றிய மரங்கள் யானை முறித்த மரங்கள், பாழடைந்த வீட்டு மரங்கள், பெரும்புயல், காற்று போன்ற இயற்கைச் சீற்றத்தால் வீழ்ந்துபட்ட மரங்கள், கோயிலுக்குச் சொந்தமான மரங்கள், சுடுகாட்டில் இருந்த மரங்கள் போன்றவற்றையும் கட்டடத்தில் பயன்படுத்தக் கூடாது.55

ஏற்ற மரங்கள்

மிகவும் வலிமை உடையவனாய் தூண் போலப் பருத்து அகக்காழுடையனவாய் (உள்ளே வைரம் பாய்ந்தவை) அமையும் மரங்களே ஆண்மரம்.

புறக் காழனவே புல்லென மொழிப
அகக் காழனவே மரனென மொழிப 56

என்னும் தொல்காப்பிய மரபியல் நூற்பா இங்கு நோக்கத்தக்கது. மரத்தின் அடிப்பகுதி, மட்டுமே பருத்து நுனிப் பகுதியில் போகப் போகச் சிறுத்து அமையும் மரங்கள் பெண்மரம் எனப்படும்.

சிறுத்து நீண்டு மெலிந்து புறக்காழுடையதாக (உள்ளே வைரம் பாயாமல்) நெடிதாய்த் தலைப்பகுதி மட்டும் பெரிதாயுள்ளதாய்க் காணப்படின் அத்தகையவற்றை அலிமரம் என்பர்.

இம்மூன்று வகை மரங்களில் எங்கெங்கே எவ்வெவற்றைப் பயன்படுத்தலாம் என்பதற்கும்கூட மனைநூலில் வரையறைகள் செய்யப்பட்டிருக்கின்றன. வாசற்கால், துரண், பலகணி போன்றவற்றிற்கு ஆண் மரங்களையே பயன்படுத்த வேண்டும்.

உத்திரம், விட்டம், வளை, தாழ்வாரம் தாங்கிக் கட்டை, சிறுதுண், சுமைதாங்கிக் கட்டை ஆகிய வற்றுக்குப் பெண் மரங்களைப் பயன்படுத்தலாம்.

சிறுவிட்டம், சட்டம், கைகள், வேலி ஆகியவற்றிற்கு அலி மரங்களையே பயன்படுத்திக்கொள்ளலாம்.

காட்டில் சென்று மரம் வெட்டிவர அல்லது மரம் வாங்கவும் காலநேரப் பொருத்தங்கள் கூறுகிறது மனை

இனி இன்னின்ன வருணத்தார்க்கு இன்னின்ன மரம் நலம் தரும் எனக் கூறப்படுவதனையும் மனைநூலில் காண முடிகிறது.

தேவர்க்கு மாமரமும், அந்தணர்களுக்கு வேப்ப மரமும், அரசர்களுக்குத் தேக்குமரமும், வணிகர்களுக்கு இலுப்ப மரமும், வேளாளர்க்கு வேங்கை மரமும் நலம் தருபவை என்று மனைநூல் விவரிக்கிறது.

வாசல் இராசி - விசால லட்சணம் 57

தெற்கு முகம். மேற்கு முகம் கட்டிய விடு விசாலத்துக்குக் கமலாகரம் எனப்படும்.

இதன் பலன் லட்சுமி பிரதம்.

மேற்கு முகம், வடக்கு முகம் கட்டிய வீடு விசாலத் துக்கு சுவர்ண பலம் எனப்பெயர்.

இதன் பலன் சோரபயமும், பீடையுமாம்.

வடக்கு முகம், கிழக்கு முகம் கட்டிய வீடு விசாலத் துக்குப் புஷ்கத முஷ்டிகம் எனப் பெயர்.

இதன் பலன் திருடர் அச்சமும் நச்சுப் பிராணிகள் பற்றிய அச்சமுமாம்.

தெற்கு, மேற்கு, வடக்கு, கட்டின வீட்டிற்குக் கிழக்கு அவடத்தில் வாசற்கால் வைத்தால் அதற்குப் புத்திர முஷ்டிகம் என்று பெயர்.

இதன் பலன் அச்சம்.

வடக்கு, கிழக்கு, தெற்கு கட்டின வீட்டுக்கு மேற்கு அவடத்தில் வாசற்கால் வைத்தால் அதிசயம் எனப்பெயர். எப்போதும் இருவகை மரம் கலந்த வாசற்கால் ஆகாது.

இதன் பலன் ஆனி. (கெடுதல்)

கிழக்கு, மேற்கு தெற்கு, வடக்கு -கட்டின வீட்டுக் வடக்கில் வாசற்கால் வைத்தால் நல்ல சுகமுண்டாகும்.

மேற்கு கிழக்கு வடக்கு இந்த மூன்று பக்கத்திலும் வாசற்கால் இருந்தால் கலியாணபதம் எனப்படும்.

இதில் செல்வம் உண்டாகும்.

கிழக்கு, தெற்கு மேற்கு, வடக்கு இந்த நாலு பக்கத்திலும் வீடு கட்டியிருந்தால் அதற்குச் சதுரச் சாலை என்று பெயராம்.

இதன் பலன் உத்தமம் என்கிறது மனைநூல். இவற்றிற்கு வாசல் இராசி பார்ப்பது எனப் பெயர் குறிக்கப்படுகிறது.

சங்கு வைத்தல் .

கட்டடம் கட்ட மனை முகூர்த்தம் செய்யும்போது, சங்கு வைத்தல் என்றொரு வழக்கமும் உண்டு. இதில் திசை - ராசி முதலிய பொருத்தமும் பார்க்க வேண்டும்.58

ஒரு மங்கலப் பெண்ணின் கையால் சங்கு வைக்க வேண்டும். இறை வழிபாட்டுக்குப்பின் சங்கு வைப்பது வழக்கம். சங்குக்கான மரம்

சந்தனமரம், யானைத் தந்தம், வன்னி வேங்கை, தேக்கு, ஆல், அரசு, கிச்சிலி, கருங்காலி ஆகியவை சங்கு செய்யச் சிறந்த மரங்களாகும். இவற்றில் தேக்கு வேங்கை ஆகிய மரங்கள் அனைவருக்கும் உரியவையாகும். 59

சங்கு வைக்கும் முறை

இரண்டு முழ நீளம் அகலமுள்ள இடத்தைச் சமன் செய்து நல்ல நேரம் பார்த்து சங்கை நீராட்டித் தூய்மைப் படுத்தி, மஞ்சள் குங்குமம் சந்தனம் இட்டு மலர் தூவி வழிபட்டுச் சமன் செய்யப்பட்ட நிலத்தில் நிறுத்த வேண்டும்.

சங்கு வைக்க ஏற்ற காலம்

சங்கு வைப்பதற்கு ஆவணி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்கள் சிறந்தவை. மேற்படி மாதங்களில் வளர்பிறைக் காலங்களில் வானத்தில் மாசு மறுவற்று கதிரவன் விளங்கும் நாட்களாக இருக்க வேண்டும். புதன், வியாழன், வெள்ளி ஆகிய மூன்று நாட்களும் சங்கு வைக்க மிகவும் சிறந்தவை. அமாவாசை முதல் பிரதமை, சஷ்டி, ஏகாதசி ஆகிய நாட்களில் சங்கு வைக்கக் கூடாது. சனி, ஞாயிறு, செவ்வாய் ஆகிய மூன்றுநாட்களில் சங்கு வைக்க ஆகாது.

சதயம், திருவோணம், உத்திரம், அஸ்தம், ரேவதி, சுவாதி, ரோகிணி, மிருகசீரிடம், சித்திரை, பூரம், புனர் பூசம், அனுஷம், அவிட்டம் ஆகிய நட்சத்திரங்கள் சங்கு வைக்க ஏற்றவை.

இப்படிச் சங்கு வைக்க ஏற்றவை என மேலே கூறிய நாள், நட்சத்திரம், காலங்கள் வீட்டிற்கான கடைக்கால் எடுக்கவும் சிறந்தவை ஆக அமையக்கூடும் எனக்கொள்ளலாம்.

இராசியும் மனைவும்

கட்டடம் கட்டுமுன் மனைக்குரியவரது இராசியோடு ஒத்த இடமும் திசையும் கவனிக்கப்பட வேண்டும் என மனைநூல் எடுத்துக்கூறுகிறது. அது பற்றிய விவரங்கள் கீழ்வருமாறு அமையும். 60

1. மேஷ ராசி — ஊரின் வடக்குப் பக்கம் ஆகாது - ஏனைய திசைகளில் அமைக்கலாம்.
2. ரிஷப ராசி — ஊரின் நடுப்பகுதி ஆகாது.
3. மிதுன ராசி — மத்தியப் பகுதி கூடாது.
4. கடக ராசி — தெற்குப் பகுதி ஆகாது.
5. சிம்ம ராசி — மத்தியப் பகுதி ஆகாது.
6. கன்னி ராசி — தென்மேற்குப் பகுதி ஆகாது.
7. துலா ராசி — வடமேற்குப்பகுதி ஆகாது.
8. விருச்சிக ராசி — கிழக்குப் பகுதி ஆகாது.
9. தனுசு ராசி — மேற்குப்பகுதி ஆகாது.
10. மகர ராசி — ஊரின் நடுப்பகுதி ஆகாது.
11. கும்ப ராசி — வடகிழக்கு அதுகூலப் பலனில்லை.
12. மீன ராசி — தென்கிழக்கு யோகம் தராது. 61

ஒவ்வோர் இராசிக்காரரும் ஊரின் திசை அறிந்து அவரவர் இராசிகளுக்கு ஏற்ப வீடு அமைப்பதுதான் அநுகூலமானப் பலனைத் தரும் என்பது மனைநூல் வழக்கு. வீட்டுக்குரிய கட்டடம் கட்டப்பட இருக்கும் மனை ஒழுங்காக இருக்க வேண்டும். கோணல் மாணலாக இருக்கக் கூடாது.

மத்தளம் போன்றும், கொட்டைப் பாக்கு உருவம் போன்றும், கத்தரிக்கோலைப் போன்றும் உள்ள மனை களில் வீடு கட்டக்கூடாது. கோயில் நிலம், வளைகள் உள்ள நிலம், தண்ணிர் இடையறாது பாயும் நிலம் ஆகியவற்றைக் கட்டடம் கட்டுவதிலிருந்து அறவே தவிர்க்க வேண்டும். கிழக்கு மேற்கு அகலங்கள் குன்றிய மனையில் கண்டிப்பாகக் கட்டடம் கட்டக்கூடாது. இவை மரபுகள், நம்பிக்கைகளாகக் கூறப்பட்டிருப்பினும் நடைமுறைப்படி பார்த்தாலும் மேலே கூறிய கோணல் மாணலான மனைகளில் கட்டடம் கட்ட இயலாதென்பது புலப்படும்.

கிணறு - வாசல் - சுவர்கள்

வீட்டின் மேற்குப்புறத்தில் கிணறு வெட்டுவதே நற்பலன் தரும். வடமேற்கு முனையில் கிணறு வெட்டி னால் புத்திரர்களுக்குக் கெடுதல் உண்டாகும். வடக்குத் திசையிலோ, ஈசான்யமூலையிலோ கிணறுகள் அமைத்தால் வாழ்வு வளம் பெற்று ஏற்றமும் முன்னேற்றமும் தொடர்ந்து கிடைக்கும். வீட்டின் கிழக்குத் திசையில் கிணறுகள் அமைப்பதுகூட நற்பலனையே தரும் என்பது மனைநூல் நம்பிக்கை.

அக்கினி மூலையில் (தென்கிழக்கு) கிணறு அமைத்தால் தீப்பட்ட பண்டம் சிறிது சிறிதாக எரிந்து கருகி அழிவதுபோல் நாளுக்கு நாள் அந்தக் குடும்பம் அழியும் என்கிறது. மனைநூல்.

வீட்டின் தெற்குத் திசையில் கிணறு அமைத்தால் குடும்பத்தில் உயிர்ச்சேதம் விளையும். அடிக்கடி அப்படிப் பட்ட சேதங்கள், நிகழலாம். நிருதி மூலையில் (தென் மேற்கு மூலை) கிணறுவெட்டினால் குடும்பத்தில் உள்ள வர்கள் நோயால் துன்புற்று மருத்துவச் செலவுகள் ஏற்பட்டபடி இருக்கும்.

இக்காலத்தில் எந்த இடத்தில் நிலத்தடி நீர் நன்றாயிருக்கும் என்று காணும் நீரறி நிபுணர் (Water Divine) போல் அக்காலத்திலும் கண்டறிய ஏற்பாடுகள் இருந்தன வீட்டில் கிணறு வெட்டும் யோகமுள்ள திசையில் பசுவின் கன்று ஒன்றை இட்டுச் செல்ல வேண்டும், கன்றிற்குப் பூவும் சந்தனமும் இட்டு வழிபட்டபின் அதன் கழுத்துக் கயிற்றைப் பற்றியபடி மனைக்குரியவர் நிற்க வேண்டும். சிறிது நேரம் கழித்துக் கன்று எப்பக்கம் போக முனைகிறதோ அப்பக்கம் விட்டுவிட வேண்டும். விடுபட்டுப் போன கன்று எங்கு சென்று நின்று கோமியம் (கோமூத் திரம்) கழிக்கிறதோ அந்த இட்த்தில் பூமிக்குள் நல்ல நீரோட்டம் இருக்கும் என்று உய்த்துக்கொண்டு அகழ வேண்டும். பசுவின் கன்று சிறுநீர் கழித்த இடத்தினை அகழ்ந்தால் நல்ல நீரோட்டமும் ஊற்றும் கீழிருக்கும் என்பது நம்பிக்கை. இவ்வாறு நிகழாமல் பசுவின் கன்று ஒரிடத்தில் நின்று சாணம் கழிக்குமாயின் அவ்விடத்தில் கீழே அகழ்ந்து பார்த்தால் கற்பாறைகள் இருக்கும் என்பதும் நம்பிக்கை. அப்படிப்பட்டஇடத்தில் கிணறு அகழ்ந்தால் அல்லலும் துன்பமும் நேரும், வீட்டின் வாசற்படிகளின் எண்ணிக்கை ஒற்றைப்படையாக இருப்பதே நல்லது. வீட்டின் நான்கு திசைகளிலும் வாசற்கால்கள் வைக்கப்பட்ட வீட்டில் அதிக அநுகூலங்கள் உண்டாகும் என்பது முன்னோர் நம்பிக்கை. 63

ஆனால் வடக்குப் பக்கம் வாசல் இல்லாமல் மற்ற மூன்று பகுதிகளில் வாசல்கால் வைப்பது அரசனின் கோபத்தையும் தொல்லைகளையும் தரும்.

மேற்குப் பகுதி வாசல் இல்லாமல் மற்ற மூன்று பகுதிகளில் வாசல் வைப்பது முன்னேற்றம், செல்வச் சேர்க்கை அனைத்தையும் உண்டாக்கும்.

கிழக்குப் பகுதியில் வாசல் இல்லாமல் மற்ற மூன்று பக்கங்களில் வாசல் வைப்பது அவ்வீட்டில் கால்நடைகள், விருத்தி, முன்னேற்றம் யாவும் ஏற்படச்செய்யும்.

தெற்குப் பகுதி வாசல் அமைக்காமல் மற்ற மூன்று பக்கங்களிலும் வாசல் வைப்பதால் செல்வமும் நலப் பெருக்கமும் உண்டாகும்.

வீட்டினுள் நுழையும்போது வாசலில் தலை குனியாமல் நிமிர்ந்தபடி நுழைவது நல்லதில்லை என்கிறது மனைநூல். அதாவது வாசல்களை மிகவும் உயர்வாக வைக்கக்கூடாது. அப்படிப்பட்ட வாசல்களால் சஞ்சலமும் கவலையுமே உண்டாகுமாம்.

வீட்டினுள் நுழையும் போது சிரம் குனிந்து வண்ங்குவது போல் புக ஏற்றபடி வாசல்கள் தணிவாக அமைவதே நல்லது என்கிறது மனைநூல். இலக்குமி கடாட்சம் இப்படியான வாசல்களில்தான் நிலைக்குமாம்.

கட்டிய சுவர் பிளவுபட்டுத் தெரிந்தால் வீட்டுக்கு நல்லதில்லை. வீட்டின் சுவர்கள் நான்கு பக்கமும் சம உயரமாக மேல் சாயையாக இருப்பதும் தாழ்வாரம் போன்றவை சம அகலமாக இருப்பதுமே ஏற்றமான பலன் ஆகும். பாதி வீடு கட்டுகையில் சுவர் சிதைவது நல்ல அறிகுறி இல்லை. பிரதானமான சுற்றுச்சுவர் தாய்ச்சுவர் எனப்படும். தாய்ச்சுவர் முதல் உள்புறம் உள்ள சுவர்கள் எல்லாம் ஒன்றரை அடி அகலத்திற்குக் குறையாமல் அமைய வேண்டும். அதுபோல வீட்டிற்குப் பட்டறை மட்டம் ஒன்பதடி உயரத்திற்குக் குறையாமல் அமைய வேண்டும்.

வீட்டின் வாசற்படிக்கு எதிரில் (மேலே மூளியான சுவர் - இது குட்டிச் சுவர் எனவும் கூறப்படும்) கட்டைச் சுவர் இருப்பது நற்பலனைத் தராது. வீட்டுக்குள் ஏறி வரும்படி உயர்வாகவும் உள்பகுதிக்கு வரும்படிகள் தாழ் வாகவும் அமையும்படி வீடு கட்டினால் நலிவும் நட்டமுமே ஏற்படும் என்பர். * .

கதவுகள்

வீடு கட்டியதும் வாசற்படிக்கும் அறைகளின் முகப்புக்களுக்கும் கதவு பொருத்துகிறோம். இக் கதவுகள் குறையின்றி ஒட்டுப் போடப்படாமல் - ஒருவகை மரத்தில் அமைய வேண்டும்.

கதவைத் திறந்து வைத்தவுடன் கதவு தானாகவே இரைச்சலுடன் திரும்பச் சென்று மூடிக்கொள்வது நற். பலன் தராது. அப்படிப்பட்ட வீட்டில் உயிரிழப்பு நேரிடும். சில ஆண்டுகளில் வீடே பாழடைந்து விடும்.64

ஒரு கதவு நின்ற நிலையில் அப்படியே நிற்குமாயின் அம்மனையிலுள்ளோர் நிலை பேறுள்ள நல்வாழ்வு வாழ்வார்கள்.

கதவைச் சாத்தும்போது கழுதை கணைப்பது போன்ற குரல் அல்லது செக்கு ஆடுவது போன்ற ஓசை எழுமானால் தீராத கவலைகள் உண்டாகும்.

யானைக்குரல் போலவும் சங்கொலி போலவும் ஓசை உண்டானால் சகல நலங்களும் விளையும்.

கதவை அடைக்கும்போது மந்த கதி கொண்டு. உடலில் காணும் வாதம், பித்தம் என்னும் இரண்டு நாடி போல நடந்தாலும் அல்லது கிளியைப் போலக் கீச்சிட்டாலும் நடுக் கட்டத்தில் ஆணி ஒன்று ஊனமாகியிருக்க வேண்டும். அவ்வாறாயின் அம்மனைக்குரியோனுக்கு நோயை உண்டாக்கும்.

கதவைச் சாத்தும்போது சிக்கிக்கொண்டு செக்கோசை போல இரைச்சலிட்டால் அம்மனையில் மக்கட்பேறு வாய்க்காது. மனைவி மரணமடைவாள். மனக்கவலை நேரிடும்.

கதவைச் சாத்தும்போது கரும்பாலை எந்திரம் போல ஓசை எழுமாயின், புத்திர நாசம், பெண்பழி, மிக்க துயர் யாவும் நேரிடுமாம்.

நாய் ஊளை இடுவது போலவும், பேய் அழுவது போலவும், கதவு சத்தமிட்டால் வீட்டுக்கு உரியவர் பிணி மிகுந்து நொந்து தொல்லைப்படுவார்கள். செல்வம் அழிந்துபடும். நாரை கத்துவது போல் ஒலியுண்டானால் நீண்டகாலம் செல்வம் நிலைத்திருக்கும். புதையல் வைக்கு மளவு தனம் பெருகும்.

தள்ளிய கதவு சடக்கென்று வலியன்போல் துள்ளிக் கத்தினால் துக்கம் அதிகரிக்கும். மனைவி சோரம் போவாள். புத்திரர்கள் நாசமடைவர். பல துன்பங்கள் திடுமென நேரிடும்.

நரியைப் போல் கதவு ஊளையிடுமானால் பெண்கள் துன்பப்படுவர். சில காரியங்கள் கைகூடும் எனினும் திடி ரென மக்கள் மாள்வர். வீரியம் குன்றும்.

கழுதை ஒலி பழுதைக் கொணரும். பகை, மெலிவு அழுகை, சிறுமை, இறப்பு நேரிடும்.

வண்டுபோல் ஒலி நன்மை தரும். மக்கட்பேறு சிறப் பாக வாய்க்கும். ஆமை போல் ஒலி மனைவியின் உயிருக் குச் சேதம் விளைவிக்கும். நீண்ட கதவு, ஊழிபோல முழங்குமானால் பொன்னும் பொருளும் மணியும் நிறைந்து வாழ்வர். சங்குபோல் சாத்தித் தாளம்போல் மூடுமானால் பொலிவோடு வாழ்வர். நன் மனையாள் கிட்டுவாள். புத்திரப்பேறு மிகுதி. பொன்னும் பொருளும் கொழிக்கும்.

கரும்பாலைச்செக்கு போலச் சிக்கிச் சிக்கிக் கதறும் ஒசை எழுந்தால் மனைக்குரியோன் ஊரை விட்டே ஓட நேரிடும். மைந்தன் நோயுற்று அழிவான். குடும்பம் கெடும். ஆண்குரற் செக்குப் போல் ஓசை எழுமாயின் குபேரன் போல் மனைவி மக்களுடன் நீடு வாழ்வர். பெண்குரற் செக்கு போல் ஓசை எழுமாயின் மனையில் செல்வம் கொழிக்கும்.

தும்பி போல் கதவு ஒலி எழுமாயின் மனையில் வம்பும் பேய்க் கூட்டமும் மிகுந்து பொலிவு குன்றும். சிறுமை மிகும்.65

பேரிகை மேளம் போல் கதவு ஒலி உண்டானால் பெண்கள் துயரடைவர். நோய் மிகும். காரியம் கை கூடாது. ஊரை விட்டு அகலத்துரத்தும்.

வேறு சில நம்பிக்கைகள் வழக்கங்கள்

வீடு கட்டுமுன் நட்சத்திரப் பொருத்தம், இராசிப் பொருத்தம் தவிர்த் தமிழர் வேறு சில பொருத்தங்களை யும் பார்த்தனர். பெயர் எழுத்துக்களை வைத்தும் பொருத் தம் பார்க்கப்பட்டிருக்கிறது.

திங்கள் கிழமை கால் நாட்டி புதன் கிழமை கை வைத்து வெள்ளியன்று கூரை வேய்ந்து, வியாழக்கிழமை குடி புகுந்தால் இந்திரபோகத்தோடு வாழமுடியும் எனப் பொதுவாக ஒரு நம்பிக்கை நிலவி வந்தது. மாதம் இராசி, திசை ஆகியவற்றிற்கு ஏற்ப வாசற்கால் வைக்கும் வழக்கமும் தமிழர்களிடையே நெடுங்காலமாய் நிலவி வந்திருக்கிறது. ஒவ்வொரு திசை நோக்கி வைத்த வாசற்படிக்கும் சில லட்சனங்கள் கூறப்பட்டுள்ளன.

கிழக்குப் பார்த்த - வடக்கிழக்கு மூலை முதல் தென் கிழக்கு மூலை வரை அளந்து எட்டு பாகம் செய்து பலன் கர்ண வேண்டும்.
மேற்குப் பார்த்த - தென்மேற்கு மூலை முதல் வடமேற்கு மூலை வரை
வடக்குப் பார்த்த - வடமேற்கு மூலை முதல் வட கிழக்கு மூலை வரை
தெற்குப் பார்த்த - தென்கிழக்கு மூலை முதல் தென் மேற்கு மூலை வரை.

இதற்கு நவக்கிரகப் பலன் காண மேற்படி முறையே ஒன்பது பாகம் செய்து பலன் காண வேண்டியிருக்கும்.86

ஏழு சாண் நீளம் மூன்று சாண் அகலம் உள்ள வாசற் காலே உத்தமம். ஒன்பதுசாண் நீளம் ஐந்து சாண் அகலமுள்ள வாசற்காலும் உத்தமம். வாசற்காலில் இருவகை மரம் கலக்கலாகாது.

வாஸ்துபுருஷன் என்றால் நிலக்கடவுள். பூமியின் அதிதேவதை. வீடு கட்டு முன் இக்கடவுளை வணங்கித் தொடங்க வேண்டும். இக்கடவுள் படுத்திருக்கும் நிலைகள், எழும் நிலைகள் பற்றி நூலில் விரிவாகக் கூறப் பட்டுள்ளது. அந்நிலைகளுக்கு ஏற்பக்கட்டடம் கட்டுவோர் இசைந்து செயல்படவேண்டும்.

கருப்புப் பேழை

நண்டு தோண்டிய மண், யானைக்கொம்பால் கீறிய மண், குளத்து மண், எருதுக்கோட்டால் கீறிய மண் ஆகியவற்றைச் சேர்த்து ஐந்து அறை, ஏழறை, ஒன்ப தறை, பதினைந்து அறை ஆகியவற்றுள் ஒரே அளவுடைய ஒரு பெட்டியைச் செய்துகொண்டு அப்பெட்டியின் நடு அறையில் பொன்னும் மணியும் இட்டுத் தானிய வகைகளை நிரப்பி மனையின் நடுப்பகுதியை அறிந்து பதித்துவிடும் வழக்கமும் இருந்துள்ளது. 87

மனையின் அளவு அளந்து ஆதாயம் விரயம் காணும் பழக்கமும் இருந்துள்ளது. நட்சத்திரங்களை வைத்துத் தாராப் பலன் பார்க்கும் பழக்கமும் இருந்துள்ளது.

வீட்டின் உள்பகுதியில் 1,5,9 ஆகிய ஏதேனும் ஓர் எண்ணிக்கைப்படி அறைகள் இருப்பது நல்லது.3,7, 11 என்ற எண்ணிக்கையில் அறைகள் இருப்பது மத்திமப் பலனையே தரும். 2, 4, 6, 8, 10, 12, 14, 16 ஆகிய எண்ணிக்கையில் அறைகள் அமைவது அநுகூலமில்லை. 1, 3, 5, 7, 9, 11 எண்ணிக்கையில் இருப்பது ஏற்றம்.

வீடு, கேணி குத்தல், சந்து குத்தல், கோடிக்குத்தல், கட்டைக் குத்தல் என்பது நேர் எதிரே இருப்பது.

மேலே கூறிய இவற்றில் பல நம்பிக்கைகளாக மட்டும் கட்டடம் தொடர்பான நம்பிக்கைகளாதலின் இங்கு ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. மிகப் பல விரிவான சோதிட விவரங்கள் ஆய்வுக்கு அவசியமின்மைக் கருதி விடப்பட்டன.

மனைநூலும் ஆசிரியரும்

மனை என்னும் சொல்லுக்கு வீடு, இல்லம், மனைவி மனை வாழ்க்கை, இல்வாழ்க்கை, குடும்பம், வெற்றிடம், நற்றாய், இரண்டாயிரத்து நானூறு குழி கொண்ட ஒரு நிலப்பரப்பு,சிற்றில், நில அளவின் வகை, சூதாடு பலகையின் அறை ஆகிய பல பொருள்களை நிகண்டுகளிலும் அகராதிகளிலும் காண்கிறோம். மனையடி சாத்திரம் என்ற நூலுக்குப் பொருள் காண்பது எளிது.68


மனைப்பட்டுக் கலங்கிச் சிதைந்தவழித் தோழிக்கு 69 எனத் தொல்காப்பியரும்,

மனைத்தக்க மாண்புடையள் ஆகித் தற்கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை 70

எனத் திருவள்ளுவரும் மனை என்ற சொல்லை வீடு என்னும் பொருளில் வழங்கியுள்ளார்.

அடி என்னும் சொல்லுக்கு அளவு, காலடி, காற்சுவடி, செய்யுள் உறுப்பிலொன்று என்பன பொருள். இங்கு அளவு என்னும் பொருள் பொருந்துகிறது.

சாத்திரம் என்று வழங்கும் சொல்லுக்கு ஒழுங்கு, கட்டளை, கலை, நூல், மறை எனப் பல பொருள்கள் உண்டு. எப்பொருள் கொள்ளினும் அங்கு ஏற்கிறது.

மனையடி சாத்திரம் என்பதற்கு வீடு கட்டும் கலை என்பது பொருளாகிறது.

இதே நூல் சிற்ப நூல், சிற்ப சிந்தாமணி, சிற்ப ரத்தினம் என்னும் வேறு பெயர்களிலும் வழங்கி வருகிறது. 71

இம்மூல நூலை வடமொழியில் மயன் எழுதியிருக்கிறார். தமிழ் விருத்த யாப்பிலான நூல் முதல் முதலாக 1888ம் ஆண்டில் அச்சாகி வெளிவந்துள்ளது.

மயன் ஒரு தேவதச்சன். நுண்கலை வல்லுநன். சிற்பி. இவன் தந்தை காசியப முனிவன் என்றும் தாய் திதி என்றும் அரசுப் பெண் என்றும் கூறுவர். சிற்ப சாத்திர மூல நூலை இயற்றியவன் இவனே. இவன் மாளிகைகளும் அரண்மனைகளும் நகரங்களும் அமைப்பதில் வித்தகனாக விளங்கியிருக்கிறான். இவனுக்கு மாயாவி துந்துபி என இரு புதல்வர்களும் மண்டோதரி என ஒரு மகளும் இருந்தனர். மண்டோதரி இராவணனை மணந்தாள்.

ஒரு காலை மயனின் உயிரை அருச்சுனன் காப்பாற்றி உதவியதற்கு நன்றியாக மயன் ஓர் அலங்கார மண்டபம் நிர்மாணித்துப் பாண்டவர்களுக்கு அளித்ததாகப் பாரதம் கூறும்.

மயனுக்குப் பின்வந்த வம்சாவளியினரும் அதே பெயரால் அழைக்கப்பட்டனர்.

மயனுடைய மரபினர் தெய்வகம்மியராகிய துவஷ்டா என்னும் விசுவகர்மாவுடைய மரபினருக்கு பயந்து ரோகமபுரியிற் குடியேறி அசுர கம்மியராகிய அவர்களுக்குப் .

படைக்கலங்களும் தேர்களும மாட மாளிகைகளும் செய்து கொடுத்து வாழ்ந்தனர்.

ரோகமபுரி கடல்கோளுக்குட்பட்டு அழிந்தபோது அந்த மரபினர் பலர் தப்பிப் பிழைத்து மீண்டும் ஆரியா வர்த்தத்தை (பாரத நாடு) அடைந்தனர் என்பது வரலாறு.72

மனை நூலில் உள்ள விவரங்களில் பெரும் பகுதி நம்பிக்கைகள், சோதிட விவரங்களாகவே அமைந்துவிடினும் மண் பரிசோதனை தொடங்கி வேறு பல கட்டடக் கலைக் கூறுபாடுகள் தெளிவாகவே விளக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில நம்பிக்கைகள், வழக்கங்கள் என அமையினும் பல அறிவியற் கூறுபாடுகளோடு பொருந்திவர எக்காலத்துக்கும் ஏற்றவையாகவே விளங்குவதைக் காண்கிறோம்.

மன நூலைப் பதிப்பித்துள்ள அறிஞர் பூ. சுப்பிரமணியன் அவர்கள் இது பற்றித் தமது முன்னுரையில் கூறும் போது, மண் கட்டட வேலை தொடங்கும் முன்பே சோதிக்கப்பட வேண்டும். இது தொடர்பாகப் பல முறைகள் கூறப்பட்டுள்ளன. மனையில் குழி அகழ்ந்து அதே மண்ணால் குழி நிரம்புகிறதா இல்லையா என்று பார்க்கும் முறை ஒன்று. முன் மாலையில் குழியில் நீரை நிரப்பி அது வற்றுதல் வற்றாமை, சேறு முதலியவற்றை மறுநாள் காலை பார்த்து முடிவு செய்வது மற்றொரு முறை மண்ணின் வலிவை இம்முறை மூலம் நன்கு பரிசோதித்து விட்வும் கட்டடத்தைத் தாங்கும் ஆற்றல் அம்மண்ணுக்குண்டா என்பதைக் காணவும் இது பயன்படுகிறது.

நிலம் நல்லதா கெட்டதா என அறியவும் மற்றொரு முறை பயன்பட்டது. ஒரு வட்ட வடிவமான குழி அகழ்ந்து நீரூற்றி அதில் மலரை இட்டு அம்மலர் எப்படி நகருகிறது என்பதைக் கொண்டு விளைவறியும் முறை இந்நூலில் கூறப்படுகிறது என்று கூறுகிறார். 72 பன்னெடுங்கால வழக்கிலும் நடைமுறையிலும் மனைநூல் வழக்கங்களும், முறைகளும் தமிழரிடையே ஒரு கலையாகவே பதிந்து பழகி வளர்ந்திருப்பதை நன்கு அறிய முடிகிறது.

குறிப்புகள்

1. மதுரைத் தமிழ்ப் பேரகராதி, ப. 771

2. சூடாமணி நிகண்டு, ப. 28.

3. வாஸ்து வித்யா கலைஞானம், காஞ்சிமடவெளியீடு, ப .21.

4. மதுரைத் தமிழ்ப் பேரகராதி, ப. 771.

5. விஸ்வகர்மாவாகிய மயனென்பவர் திருவாய் மலர்ந்தருளிய சிற்ப நூல் என்னும் மனையடி சாஸ்திரம் 1, கடவுள் வணக்கப்பாட்டு.

6. டாக்டர் ச. வே. சுப்பிரமணியன், மனை நூல் (முன்னுரை) ப. 1.

7. மனை நூல், ப. 8 செய்யுள் 3-5.

8. மனை நூல், ப. 8-9, செய்யுள் 6-8.

9. மனை நூல், ப. 6.

10. மனைநூல், ப. 7.

11. மனைநூல், ப. 8, 9.

12. மனைநூல், ப. 10, செய்யுள் 11.

13. மனைநூல், ப. 10, செய்யுள், 12.

14. மனைநூல், ப. 11, செய்யுள் 16.

15. மனைநூல், ப. செய்யுள் 18.

16. மனைநூல், ப. 11, செய்யுள் 17-20.

17. மனைநூல், ப. 18.

18. மனைநூல், ப. 19.

19. மனைநூல், ப. 17.

20. மனைநூல், ப. 12, செய்யுள் 21.

21. மனைநூல், ப. 13.

22. மனைநூல், ப. 13.

23. மனைநூல், ப. 22, செய்யுள் 22-25.

24. மா. ஆறுமுகம், தொழில் நுட்பம், ப.44.

25. மா. ஆறுமுகம், தொழில் நுட்பம், ப.45.

26. மனைநூல், ப. 15.

27. மனைநூல், ப. 14-15.

28. மனைநூல், ப. 23, செய்யுள் 26-27.

29. மனைநூல், ப. 23, செய்யுள் 28-29,

30. மனைநூல், ப. 24, செய்யுள் 31.

31. மனைநூல், ப. 26-27, செய்யுள் 40-46.

32. மனைநூல், ப. 15-16.

33. மனைநூல், ப. 29, செய்யுள் 47.

34. மனைநூல், ப. 29, செய்யுள் 48.

35. மனைநூல், ப, 30-31, செய்யுள் 51-53.

36. மனைநூல், ப. 33-34, செய்யுள் 62

37. முல்லை முத்தையா. மனையடி சாஸ்திரம்,ப. 29.

38. மனைநூல், ப. 34, செய்யுள் 63-64-66,

39. மனைநூல், ப. 20-21.

40. மனைநூல், செய்யுள் 63-66.

41. மனைநூல், செய்யுள் 67.

42. மனைநூல், செய்யுள் 28.

43. மனைநூல், ப. 87, செய்யுள் 189-212.

44. நெடுநல்வாடை 72-75, நச்சினார்க்கினியர் உரை, ப. 335

45. மனைநூல், ப. 36-42, செய்யுள் 67-93.

46. மதுரைத் தமிழ்ப் பேரகராதி, ப.31.

47. மனைநூல். ப. 44-45.

48. முல்லை முத்தையா, மனையடிசாஸ்திரம், ப.43.

49. சாஸ்திரம் பார்த்து வீடு கட்டுவது எப்படி? ப. 50.

50. சாஸ்திரம் பார்த்து வீடு கட்டுவது எப்படி? ப. 10.

51. சாஸ்திரம் பார்த்து வீடு கட்டுவது எப்படி? ப. 11.

52. மனைநூல், ப. 47-62, செய்யுள் 100-133.

53. மனையடி சாஸ்திரம், ப. 47-48.

54. மனைநூல், ப. 63-83, செய்யுள் 134-188.

55. மனைநூல், ப. 64.

56. பொரு. பொருள் மரபு 640.

57. மனைநூல், ப. 46 , செய்யுள் 94-99.

58. மனைநூல், ப. 106. செய்யுள் 228-36.

59. மனைநூல், ப. 98, செய்யுள் 222-227.

60. மனைநூல், ப. 127-132, செய்யுள் 293-316.

61. மு. முத்தையா, மனையடி சாஸ்திரம், ப.71.

62. மனைநூல், ப. 213, செய்யுள் 405-410.

63. மு. முத்தையா, மனையடி சாஸ்திரம், ப. 51-56

64. மனைநூல், ப. 80-83, செய்யுள் 167-188.

65. மு. முத்தையா, மனையடி சாஸ்திரம், ப.80-83.

66. மு. முத்தையா, மனையடி சாஸ்திரம், ப.51.

67. மு. முத்தையா, மனையடி சாஸ்திரம், ப. 61.

68. மு. முத்தையா, மனையடி சாஸ்திரம், ப. 9.

69. தொல். பொருள். களவியல் 111-121.

70. திருக்குறள் 6-51.

71. சூடாமணி நிகண்டு 110-51.

72. மு. முத்தையா, மனையடி சாஸ்திரம், ப. 1-6.

73. Soil is to be tested before construction. Many methods are narrated in this regard. One is to dig, a pit and fill it with the earth removed from the pit. Another one is to fill the pit with water in the evening and observing the quantum of water in the next morning. This method shows the strength of the soil to withstand the weight of the Building to be Constructed.

Good and bad effects of a plot is also decided by another method which is precisely narrated in this work. Hence a circular pit is dig around a partion of the earth, and water and flower is put in the circular pit. The movement and direction of the water along with the lower which indicate the results whether good or bad.

–P. subramanian, Manai Nool, p. XLVI.