பாசமுள்ள நாய்க்குட்டி/செல்வ மகன்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

நீண்ட நெடுங் காலத்திற்கு முன் குன்றக்குடியில் சங்கரன் என்ற பெரியவர் இருந்தார். சங்கரன் பெரிய பணக்காரர். அவருக்கு வீடு, நிலம், தோட்டம், சொத்து எல்லாம் இருந்தன. ஆனால் ஒரே ஒரு குறை மட்டும் இருந்தது. அவருடைய ஒரே மகன் கணபதி பெருஞ் சோம்பேறியாக இருந்தது தான் அந்தப் பெரிய குறை.

தன்னிடம் நிறைய சொத்து இருந்தாலும் தன் மகன் கணபதி உழைக்காத சோம்பேறியாய் இருப்பது சங்கரனுக்குத் துன்பமாய் இருந்தது.

“குந்தித் தின்றால் குன்றும் மாளும்” என்று பழமொழி சொல்வார்கள். உழைக்காத சோம்பேறியான தன் மகன் பிற்காலத்தில் தன் சொத்துக்களைக் காப்பாற்ற முடியாமல், துன்பப் படுவானே என்று நினைத்துப் பார்க்கவே அவருக்கு வருத்தமாய் இருந்தது.

இதே கவலையாய் அவர் நோய் உற்றுப் படுத்துவிட்டார்.

அவரை ஊர் பெரிய மனிதர்கள் பலர் வந்து,பார்த்தும் போயினர். அவர் உடம்பை ஆய்ந்து பார்த்த மருத்துவர், அவருக்கு உடல் நோய் எதுவும் இல்லை என்றும், மனநோய் தான் அவரை வருத்துகிறது என்றும் கூறினார். உடனே அந்தப் பெரியவர்கள் அவருடைய மனக்கவலை என்ன என்று கேட்டார்கள். தன் மகனைப் பற்றிய கவலையை அவர் வெளியிட்டார்.

ஒரு பெரிய மனிதரிடம் அவர் இவ்வாறு கூறினார்.

"ஐயா, என் மகன் சோம்பேறியாய் இருப்பது தான் எனக்குக் கவலையளிக்கிறது. என்றாவது ஒரு நாள் என் மகன் உழைத்துப் பொருள் ஈட்டி ஒரு ஐந்து ரூபாய் கொண்டு வந்து கொடுத்தால் கூடப் போதும். என் கவலை ஒழிந்து போகும். உழைத்துப் பிழைக்க வேண்டும் என்கின்ற எண்ணம் அவனுக்கு வந்து விட்டது என்று தெரிந்தால்தான் என் கவலை தீரும்” என்றார் சங்கரன்.

இரண்டு நாள்கள் கழித்து அவர் மகன் கணபதி தந்தை படுத்திருக்கும் அறைக்கு வந்தான்.

"அப்பா” என்று குழைவாக அழைத்தான். சங்கரன் அவனைக் கூர்ந்து நோக்கினார்.

மகன் கணபதி ஐந்து ரூபாய் நோட்டு ஒன்றை நீட்டினான். "அப்பா இது என் பணம். நான் உழைத்துத் தேடிய பணம். வைத்துக் கொள்ளுங்கள்” என்று நீட்டினான்.

சங்கரன் அவனை வெறித்து நோக்கினார்.

“ஆம் அப்பா. வயலில் நேற்று நாற்று நட்டேன். அதற்குக் கூலியாகப் பெற்ற பணம் தான் இது. வாங்கிக் கொள்ளுங்கள் அப்பா" என்று மகன் ரூபாய் நோட்டை நீட்டினான். சங்கரன் அந்த நோட்டை வாங்கினார்: சுக்கல் சுக்கலாகக் கிழித்தார். குப்பைக் கூடையை நோக்கி வீசினார்.

"நீ சோம்பேறியாக மட்டும் இல்லை; பொய்யனாகவும் மாறி விட்டாய்!” என்று பெருந்துயரத்தோடு கூறினார். அப்படியே மயக்கம் போட்டுச் சாய்ந்து விட்டார்.உடனடியாக மருத்துவருக்கு ஆளனுப்பி, அவருடைய மயக்கத்தைத் தெளிவிக்க ஐம்பது ரூபாய் செலவாயிற்று.

கணபதி அந்த ஐந்து ரூபாயை உழைத்து ஈட்டவில்லை. தன் மாமாவிடம் இலவசமாக வாங்கி வந்தான். அறுவடை செய்ய வேண்டிய காலத்தில் நாற்றுகட்டதாகப்பொய் சொன்னால் தந்தை எப்படி நம்புவார்! அதனால்தான் கிழித்து எறிந்தார்.

சில நாட்கள் கழிந்தன. மீண்டும் கணபதி அப்பாவிடம் வந்தான். அப்போது அவன் கையில் ஐந்து ரூபாய் நோட்டு இருந்தது.

"அப்பா, உண்மையில் நான் உழைத்துத் தேடிய பணம் இது. வாங்கிக் கொள்ளுங்கள்" என்று கெஞ்சினான். சங்கரன் அவனைக் கூர்ந்து நோக்கினார்.

“கட்டிடங்கட்டும் இடத்தில் செங்கல் தூக்கிக் கொடுத்துக் கூலியாக வாங்கி வந்த பணம் இது” என்றான் கணபதி.

சங்கரன் அந்த நோட்டை வாங்கி அப்படியே கிழித்துக், குப்பையில் போட்டார். உண்மையில் அந்தப் பகுதியில் யாரும் அப்போது கட்டிடம் கட்டவில்லை. தந்தையின் நண்பர் ஒருவரிடம் கணபதி கெஞ்சி வாங்கிய பணம் அது.

"இனி உன்னை நான் நம்ப மாட்டேன். என்னிடம் வராதே" என்று கடுமையாகச் சொன்னார் சங்கரன். இவன் எப்படிப்பிழைக்க போகிறான் என்ற எண்ணமே அவரை மேலும் நோய்க்கு உள்ளாக்கியது.

பத்து நாள் கழித்து மீண்டும் கணபதி சங்கரன் அறைக்கு வந்தான். அப்போது அவர் உடல் நிலை மிகவும் கவலைக் கிடமாய் இருந்தது. கணபதி கண்களில் நீர் வழிய தந்தையை நோக்கினான். "அப்பா என்னை நம்புங்கள். நான் திருந்திவிட்டேன். இதோ இந்த ஐந்து ரூபாய் நான் உண்மையில் உழைத்துப் பெற்ற பணம்.” என்று ஐந்து ருபாய் நோட்டை நீட்டினான்.

வெறுப்போடு சங்கரன் அந்த நோட்டைப் பிடுங்கினார். அதைக் கிழிக்கப் போனார்.

"அப்பா! அப்பா! கிழிக்காதீர்கள்! உங்கள் மகனின் உண்மையான உழைப்பு அது” என்று அவர் கையைப் பற்றினான் கணபதி.

அவன் கைகள் அவரைத் தொட்டவுடன் சங்கரன், அது உண்மையான உழைப்புதான் என்பதைப் புரிந்து கொண்டார். ஏனெனில் கணபதியின் கைகள் காய்த்துப் போயிருந்தன. கல்லுடைத்துக் கல்லுடைத்து அவன் கைகள் காய்த்துப் போயிருந்தன. கைகளால் அவன் தன்னைத் தொட்டவுடன் சங்கரன் அதைப் புரிந்து கொண்டார்.

அந்தக் கைகளை எடுத்துக் கண்களில் ஒத்திக் கொண்டார். "மகனே! நீ திருந்தி விட்டாய்! இனி நான் மன நிறைவோடு சாவேன்” என்றார்.

ஆனால் உண்மையில் அவர் அப்போது சாகவில்லை. சில நாட்களில் அவர் குணம் அடைந்து விட்டார். நீண்ட நாட்கள் உயிரோடு இருந்தார். மகன் பொறுப்புடன் உழைத்து மேலும் தன் செல்வத்தைப் பெருக்கியதைக் கண்டு மனநிறைவுடன் வாழ்ந்தார்.

கணபதியும் பெரிய மனிதர்கள் பாராட்டும் சிறந்த பிள்ளையாக வளர்ந்து, பெருமையும் செல்வாக்கும் பெற்று விளங்கினான்.