பாசமுள்ள நாய்க்குட்டி/முதற்பரிசு

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

அண்ணாமலை என்று ஒரு சிறுவன் இருந்தான். அவன் நல்ல கெட்டிக்காரன். பாடம் நன்றாகப் படிப்பான். விளையாட்டுகளிலும் சிறந்து விளங்குவான். நல்ல குரல். பாட்டுப் பாடுவதிலும் சிறப்பாகத் திகழ்ந்தான்.

அவனுடைய வீட்டில் எல்லோருமே ஒவ்வொரு வகையில் சிறந்தவர்கள். அப்பாவும் அம்மாவும் கல்லூரிப் பேராசிரியர்கள். இருவருமே மிஞ்சிய நேரத்தில் சமுதாயத் தொண்டு செய்து வந்தார்கள்.

அண்ணாமலையின் அக்கா கல்லூரியில் பொருளாதார வகுப்பில் படித்துக் கொண்டிருந்தாள். அண்ணன் பொறியியல் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான்.

 படித்த குடும்பம். நல்ல பழக்க வழக்கங்கள். அவர்கள் குடும்பத்தில் எல்லாருமே எதையும் நேரத்தோடு செய்வார்கள். அப்பாவும் அம்மாவும் நிறைய வேலைகள் இருந்தாலும், ஒவ்வொரு வேலையையும் குறித்த குறித்த நேரத்தில் செய்து முடிக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்கள். அண்ணனும் அக்காவும் கூடப் பெற்றோரை அப்படியே பின்பற்றினார்கள். அண்ணாமலை மட்டும் விதிவிலக்கு. எதையும் நேரத்தோடு செய்ய மாட்டான்.

“சாப்பிட வா” என்று அம்மா அழைப்பாள்.

“இதோ ஒரு நொடியில் வருகிறேன்” என்று கூறுவான் அண்ணாமலை. சிறிது நேரங்கழித்துத்தான் சாப்பிடச் செல்வான்.

“சீக்கிரம் குளித்து விட்டு வா” என்பாள் அம்மா.

“இதோ ஒரு நொடியில்” என்று கூறிவிட்டுச் சிறிது நேரம் கழித்தே குளிப்பான் அண்ணாமலை.

 கடைக்குப் போய் ஏதாவது பொருள் வாங்கி வரச் சொன்னாலும் இப்படித்தான்.

“இதோ ஒரு நொடியில்” என்று பதில் வரும்.

சிறிது நேரங்கழித்துத்தான் புறப்படுவான்.

“நீ எப்பொழுதுதான் திருந்தப் போகிறாயோ! வேறு எது போனாலும் திரும்பப் பெற்று விடலாம். ஓடிவிட்ட காலத்தைத் திரும்பப் பெற முடியாது. காலத்தோடு செய்ய நீ எப்பொழுது பழகப் போகிறாய்” என்று வருத்தப்படுவார் அப்பா.

“நீங்கள் சொன்ன வேலையை நான் செய்யவில்லையா? சிறிது நேரங்கழித்துச் செய்வதால் என்ன கெடுதல்?” என்று திருப்பிக் கேட்டான் அண்ணாமலை.

“அப்படியல்ல. காலத்தின் அருமையை நீ ஒரு நாள் உணரத்தான் போகிறாய்” என்று சொன்னார் அப்பா.

அந்த நாள் வந்துவிட்டது.

 பள்ளிக் கூடத்தில் ஆண்டுவிழா நடந்தது. ஆண்டு விழாவையொட்டி விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

அண்ணாமலை எல்லா விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்துகொண்டான். ஒன்றில் கூட முதல் பரிசு வாங்கவில்லை. ஒட்டப் பந்தயத்திலும், கோணிப்பை ஓட்டத்திலும் இரண்டாவது பரிசு பெற்றான். தடைப்பந்தயத்தில் மூன்றாவது பரிசு பெற்றான்.

விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்ற மறுநாள் ஆண்டு விழா. அன்று பரிசுகள் வழங்கினார்கள். பரிசு வழங்கும் விழாவிற்கு அப்பாவும் அம்மாவும் சென்றிருந்தார்கள். அண்ணாமலை மேடையில் போய் பரிசுகள் வாங்கிக் கொண்டு வந்தான். அப்பாவின் பக்கத்தில் பரிசுக்கோப்பைகளுடன் வந்து உட்கார்ந்தான்.

அப்பாவின் நண்பர் ஒரு பெரியவர். பக்கத்தில் உட்கார்ந்திருந்த அவர் அப்பாவை நோக்கி, “உங்கள் பையன் ஒரு போட்டியிலும் முதல் பரிசு வாங்கவில்லையே, ஏன்?” என்று கேட்டார் அந்தப் பெரியவர்.

 “ஒரு நொடி பிந்தி விட்டான். அவ்வளவு தான்” என்றார் அப்பா.

தான் முதல் பரிசு பெறாதது அப்பாவிற்கு எவ்வளவு வருத்தத்தை உண்டாக்கியுள்ளது என்பதை அந்தப் பதிலில் இருந்து தெரிந்து கொண்டான் அண்ணாமலை.

அன்று முதல் எந்த வேலையையும் உடனுக்குடனே செய்யும் வழக்கத்தை மேற்கொண்டான். சிறிது நேரங்கூட வீணாக்காமல் ஒவ்வொரு செயலையும் செய்தான்.

அடுத்த ஆண்டு அவன் தான் முதல் பரிசு வாங்குவான் என்று இப்பொழுதே உறுதியாகச் சொல்லலாம்.