பாசமுள்ள நாய்க்குட்டி/பாசமுள்ள நாய்க்குட்டி
அந்த நாய்க்குட்டியை நான் அன்பாக வளர்த்து வந்தேன். அதற்குக் கண்ணன் என்று பெயரிட்டேன். 'கண்ணா கண்ணா' என்று அன்பாகக் கூப்பிடுவேன்.
முதன் முதலில் என் சிறுவயதில் நான் வளர்த்த அந்த நாய்க்குட்டி தெருநாய் இனத்தைச் சேர்ந்தது தான். ஆனாலும் எவ்வளவு அருமையான நாய்! அறிவுள்ள நாய்! நன்றியுள்ள நாய்! அதை இன்று நினைத்தாலும் எனக்குப் பெருமையாக இருக்கிறது. அது என் நண்பனைப் போல் பழகியது. என் குழந்தையைப் போல் வளர்ந்தது. காவல் வீரனைப் போல் கடமை ஆற்றியது. வீட்டுக்கு மிகப் பயன் உள்ள ஓர் உறுப்பாகி விட்டது.
வீட்டுக்கு உறவினர்கள் வந்தால் வாலை ஆட்டிக் கொண்டு அவர்களைச் சுற்றிச் சுற்றி வரும். குழந்தைகள் வந்தால் அவர்களோடு ஒடியாடி விளையாடும். வேற்று ஆட்கள் வந்தால் உறுமி உறுமிப் பாயும். பிச்சைக்காரர்கள், ஊர்க் காலிகள் யாரேனும் தெரு முனையில் வந்தால் கூட பெருங்குரல் கொடுத்துக் குரைக்கத் தொடங்கிவிடும். அதற்குரிய தட்டில் வைக்கும் உணவைத் தான் தின்னும். வேறு பொருள்களில் வாய் வைக்காது. மாலையில் நான் வெளியில் செல்லும் போது கூடவே ஓடிவரும்.
நீண்டநாட்கள் அது எங்கள் வீட்டில் இருந்தது. ஒருநாள் நோயுற்றுப் படுத்தது; கால் நடை மருத்துவரிடம் கொண்டு போய்க் காண்பித்தேன். மருந்துகளால் அதை ஒரு வாரம் வரைதான் காப்பாற்ற முடிந்தது. பிறகு அது இறந்து போய் விட்டது.
அந்த நாய் இறந்த பிறகு, வீடே வெறிச் சோடிப் போன மாதிரி இருந்தது. இழப் புணர்வு என்னைப் பெரிதும் ஆட்டிப் படைத்தது. என்னால் நீண்டநாள் இப்படி இருக்க முடியாது என்று தோன்றியது.
ஒரு நாள் பக்கத்து ஊருக்கு ஒரு நண்பன் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அவன் வீட்டில் ஓர் உயர்ந்த சாதி நாய் இருந்தது. அது குட்டி போட்டிருந்தது. ஐந்து குட்டிகள். ஐந்தும் அழகான குட்டிகள். அவற்றை நான் விருப்போடு பார்த்துக் கொண்டிந்தேன். உடனே அந்த நண்பன், அதில் ஒரு குட்டியை மட்டும் வைத்துக் கொண்டு நான்கை விற்றுவிட இருப்பதாகக் கூறினான். நான் ஒன்றை விலைக்கு வாங்கிக்கொள்வதாகக் கூறினேன். அவன் விலை வாங்காமலே எனக்குத் தந்து விட்டான். அதை வளர்க்கும் முறைகளை விளக்கிச் சொன்னான்.
அந்த நாயையும் அன்பாக வளர்த்தேன். அது கண்ணனைப் போல் சாதுவல்ல. வேண்டாத ஆட்களைக் கண்டால் உறுமும், உறுமுவதைக் கண்டு அவர்கள் ஓடிப் போக வேண்டும். ஒடா விட்டால், இது பாய்ந்து கடித்துக் குதறி விடும். வீர முள்ள நாய். எனவே இதற்கு, நான் மிக மிக மதித்திருந்த வரலாற்று நாயகராகிய சிவாஜி மன்னரின் பெயரை வைத்தேன். சிவாஜி என்று கூப்பிட்ட வுடன் அது பாய்ந்தோடிவரும் அப்போது அந்த மாவீரரைப் போலவே காட்சிதரும்.
சிவாஜி வந்த பிறகு நான் பழைய கண்ணனை மறந்துவிட்டேன் என்றே சொல்லலாம். அது எனக்கு மிக நெருங்கிய தோழனாகி விட்டது. இறைவன் மனிதர்களுக்கு நீண்ட ஆயுளைக் கொடுத்ததுபோல், நாய்களுக்குக் கொடுக்க வில்லை. அதிலும் அவை குறுகிய காலத்தில் இறந்து போகும்படியும் விதித்து விடுகிறான். அப்படித் தான். என் சிவாஜியும் தன் ஐந்தாவது வயதில் திடீரென்று நோய் உண்டாகி இறந்து விட்டது. சிவாஜியை இழந்து நான் தவித்த தவிப்பு சொல்லி முடியாது.
ஒரு நாள் அறிவழகன் என்ற என் நண்பன் வந்திருந்தான்.
சிவாஜி இறந்ததிலிருந்து மிக மெலிந்து விட்டாய். நீ வேறொரு நாய்வாங்கி வளர்க்கலாம் என்றான்.
“வளர்த்து வளர்த்துச் சாகக் கொடுப்பது பெரிய வேதனையாக இருக்கிறது. யாராவது வளர்த்து விற்பதாக இருந்தால் வாங்கிக் கொள்ளலாம்” என்றேன் நான்.
நண்பன் தேடிப் பார்த்துச் சொல்லுவதாகக் கூறிச் சென்றான். மூன்றாவது நாள் தொலைபேசி மணியடித்தது. நண்பன் அறிவழகன் தான் பேசினான்.
“அழகான நாய், அறிவுள்ள நாய், உயர்ந்த சாதி நாய், நன்றாக வளர்ந்த நாய் ஒன்று விலைக்குக் கொடுக்கிறார்களாம், போய்ப் பார்த்து வாங்கிக் கொள்” என்று கூறி முகவரியை எழுதிக் கொள்ளச் சொன்னான்.
மறுநாளே நான் அந்த வீட்டுக்குச் சென்றேன். நாயைக் காட்டினார்கள், அப் படியே என் சிவாஜியைப் போலவே இருந்தது. அதே முகம், அதே கண்கள், அதே பார்வை, அதே சாதி, அதே உயரம் எல்லாம் அதுபோலவே! நிறம் தான்வேறு. என் சிவாஜி பழுப்பு நிறம் முதுகுப் பக்கம் மட்டும் திட்டாக வெள்ளை. இந்த நாய் வெள்ளை நிறம் காதுகளில் மட்டும் பாதி பாதி பழுப்பு நிறம்.
"இந்த நாய்க்கு என்ன பெயர் வைத்திருக்கிறீர்கள்?" என்று கேட்டேன்.
"சிவாஜி!” என்று சொன்னார்கள். வியப்பாய் இருந்தது. கேட்ட விலையைப் பேரம் பேசாமல் கொடுத்தேன். அன்போடு அதன் முதுகில் தடவிக் கொடுத்தேன்.
அந்த வீட்டுக்காரர் நாயை அழைத்துக் கொண்டுவந்து என் வண்டியில் ஏற்றி விட்டார். நானும் ஏறிக் கொண்டேன். வண்டி புறப்பட்டது.
நாய் பின்பக்கம் திரும்பிப் பார்த்தது. நானும் திரும்பிப் பார்த்தேன். அந்த வீட்டுக்காரர் வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்தார்,
என் அருகில் இருந்த நாய் அங்கேயே பார்த்துக் கொண்டிருந்தது. அவர்கள். வீடு கண்ணுக்கு மறைந்த பிறகும் கூட வண்டி வேறு சந்தில் திரும்பிய பிறகும் கூட, அதன் பார்வை திசைமாற வில்லை. என் வீட்டிற்கு வரும் வரையில் அதன் கழுத்து காரின் பின் பக்கம் திரும்பியபடியே இருந்தது.
நான் வண்டியை விட்டு இறங்கி வீட்டுக்குள் நுழைந்தேன். 'சிவாஜீ'என்று அழைத்தேன். வண்டியிலிருந்து குதித்து என் பின்னால் வந்தது.
நான் சாய்வு நாற்காலியில் போய்ச் சாய்ந்து கொண்டேன். புதிய சிவாஜி என்னைத் தொடர்ந்து வந்து அந்த நாற்காலி ஒரத்தில் படுத்துக் கொண்டது. அதன் கண்கள் வாசல் பக்கத்தையே பார்த்துக் கொண்டிருந்தன.
வேலைக்காரன் மோர் கொண்டுவந்தான், நாய் அழகாயிருக்கிறது என்று பாராட்டினான். பிறகு நான் என் வேலைகளைப் பார்க்க வெளியில் சென்றேன் பகல் உணவுக்கு வீட்டுக்கு வந்தேன். சமையல்காரரை நோக்கி "நாய்க்கு ஏதாவது தின்னக் கொடுத்தீர்களா?” என்று கேட்டேன்.
"கொடுத்தேன்; அது தின்னவில்லை! தட்டில் வைத்தது அப்படியே இருக்கிறது!"என்றார் சமையால்காரர்.
நான் திரும்பிப் பார்த்தேன். நாயின் எதிரில் இருந்த தட்டில், பிசுக்கோத்துகள், சுட்ட உப்புக் கண்டத் துண்டுகள் வைத்தது வைத்தபடியிருந்தன. நாய் வாசற் கதவையே வெறித்துப் பார்த்துக் கொண்டு படுத்திருந்தது.
“ஒரு குவளை பால் கொண்டு வாருங்கள்” என்றேன். சமையற்காரர் கொண்டு வந்தார். தட்டில் ஊற்றி அதன் வாயருகில் தூக்கிப் பிடித்தேன். அதன் நாக்கு வெளியில் வரவேயில்லை.
"சிவாஜி! சிவாஜி! பால்குடி” என்றேன். அது திரும்பிப் பார்க்கவேயில்லை.
மூன்று நாட்கள். அது படுத்திருந்த இடத்தை விட்டு எழுந்திருக்கவேயில்லை. எதையும் தின்ன வில்லை. கூப்பிட்ட குரலைக் கவனிக்கவேயில்லை,பழைய வீட்டுப் பாசத்தை அது மறக்க வில்லை என்பதை நான் புரிந்துகொண்டேன்.
தொலை பேசியில் அந்த வீட்டுக்காரரை அழைத்தேன். "உங்கள் நாய் மூன்று நாட்களாக ஒன்றும் தின்னவில்லை. நீங்கள் கொஞ்சம் வருகிறீர்களா?" என்று அழைத்தேன்.
உடனே அவர் புறப்பட்டு வந்தார்.
வாசற் படியில் அவர் கால் வைத்தது தான். உடனே, சிவாஜி எழுந்து பாய்ந் தோடியது. வாலை யாட்டிக் கொண்டே அவரைச் சுற்றிச் சுற்றி வந்தது. முன் கால்களைத் தூக்கி யவர் மீது வைத்துக் கொண்டு நின்றது.
“இவ்வளவு அன்பான தோழனை ஏன் விற்க நினைத்தீர்களோ தெரியவில்லை. உங்கள் துன்பம் எதுவோ அதை நான் கேட்டுத் தெரிந்து கொள்ள விரும்பவில்லை. உடனே உங்கள் நாயை வீட்டுக்கு அழைத்துச் சென்று ஏதாவது தின்னக் கொடுங்கள்.இங்கிருந்தால் அது இறந்து போகும்” என்றேன்.
அவர் தலை குனிந்தார். விதியை நோக்கி நடந்தார். சிவாஜி பின் தொடர்ந்தது.
ஒரு நல்ல பணி செய்த நிறைவு என மனத்தில் ஏற்பட்டது.
வந்தவரை வரவேற்று மோர் கூடக் கொடுத்து உபசரிக்காமல், சினந்து பேசியனுப்பி விட்டேனே என்ற உணர்வு பிறகு தான் எனக்குத் தோன்றியது.
யாரிடமாவது நாய்க்குட்டி யிருந்தால் சொல்லுங்கள். நானே வளர்க்க ஆசைப் படுகிறேன்.