பாசமுள்ள நாய்க்குட்டி/பெருமை பேசிய பனிக் கட்டி

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

பெருமை பேசிய பனிக்கட்டி


ஒரு நாள் காற்று வலுவாக வீசியது. பல மரங்கள் சாய்ந்து விட்டன.ஊரெங்கும் ஒரே புழுதியாக இருந்தது. கொடிமரங்கள் அறுந்து போயின. மக்கள், பறவைகள், விலங்குகள் யாவும் வெளியில் நடமாட முடியாமல் தவித்தன.

காற்று நிமிர்ந்து பார்த்தது. "உலகத்தில் நான் தான் பெரியவன். எல்லாரும் எனக்குப் பணிந்து நடக்கவேண்டும்” என்று கூவியது.

ஆ! ஆ! ஆ!

திடீரென்று ஒரு சிரிப்பொலி கேட்டது.

"யார் சிரிப்பது?" என்று காற்று சினத்துடன் கேட்டது.  ஆஆ! ஆஆ! ஆஆ! என்று அந்தச் சிரிப்பொலி பெரிதாகியது.

“என்னைப் பழித்துச் சிரிப்பவன் எவன்? எதிரில் வா! பார்க்கிறேன்!” என்று கூச்சலிட்டது காற்று.

வெள்ளை வெளேரென்று பனிக்கட்டி அதன் எதிரில் மலை போல் வந்து நின்றது.

"ஏ காற்றே! என்ன சொன்னாய்? உலகில் நீதான் வலுவானவனா? என்ன நெஞ்சுரம் உனக்கு? என்னைப்பற்றி உனக்குத் தெரியாதா? உன்னைக் காட்டிலும் நான்தான் வலுவானவன்! இனிமேல் நீ வலுவானவன் என்ற எண்ணத்தையே விட்டு விடு!"என்று கூறி நிமிர்ந்து நின்றது பனிக்கட்டி.

“இல்லை, நான் தான் வலுவானவன். நீ என்முன் மண்டியிட்டு வணங்கு. இல்லா விட்டால் சும்மாவிட மாட்டேன்!” என்று சீறியது காற்று.

“என்ன? நான் உன்முன் மண்டி யிடுவதா? மூடக் காற்றே! இப்பொழுது நான் கூறுகிறேன் கேள். பேசாமல் என் காலடியில் விழுந்து வணங்கு, உன்னை மன்னித்துவிடுகிறேன். இனிமேல் தற்பெருமை பேசாதே!" என்று கூறியது பனிக்கட்டி!

"நான் தான் பெரியவன்! நீ தான் என்னை வணங்க வேண்டும்” என்றது காற்று.

"இல்லை யில்லை. நீ தான் என்னை வணங்க வேண்டும். பேசாமல் அடங்கிப் போ” என்றது பனிக்கட்டி.

இப்படி நெடுநேரம் இரண்டும் நான் தான் வலுவானவன். நான் தான் பெரியவன் என்று மாறி மாறிக் கூறிக் கொண்டிருந்தன.

கடைசியில் காற்று சொன்னது!

"நாம் வாதாடிக் கொண்டிருப்பதில் பயனில்லை. பகலவனிடம் போவோம். அவன் யார் பெரியவர்-வலுவானவர் என்று தீர்ப்புக் கூறட்டும்” என்று கூறியது.

பனிக்கட்டியும் ஒப்புக் கொள்ளவே இரண்டும் பகலவனிடம் சென்றன.

"கதிரவனே! உண்மையைச் சொல். நான் தானே வலுவானவன்?’ என்று கேட்டது காற்று.  "பகலவனே, காற்றைக் காட்டிலும் நான் தான் வலுவானவன். இந்த உண்மையை நீ காற்றுக்கு எடுத்துக் கூறு” என்று கூறியது பனிக்கட்டி.

பகலவன் அவற்றைப் பார்த்துச் சிரித்தது.

"ஏன் வீண் சண்டை போடுகிறீர்கள். அசையும் தன்மையை வைத்துப் பார்த்தால் காற்றுத் தான் வலுவானது. அசையாத தன்மையை வைத்துப் பார்த்தால் பனிக்கட்டி தான் வலுவானது. உண்மை யிப்படி யிருக்க நீங்கள் ஏன் ஓயாமல் சண்டை போடுகிறீர்கள்?" என்று கேட்டது கதிரவன்.

"கதிரவனே நீ சொல்லது சரியல்ல. அசையாத பனிக்கட்டியை நான் அசைத்து விடுவேன்” என்றது காற்று.

"முடியாது! முடியவே முடியாது!” என்று கூறியது பனிக்கட்டி, கதிரவன் முன்னிலையிலேயே அவை மீண்டும் சச்சரவு செய்யத் தொடங்கின.

“உங்களுக்குள் ஏன் வீண் சண்டை? ஒரு போட்டி வைத்துப் பார்த்து விடலாமே!” என்று கூறியது பகலவன். “ஆம் ஆம்! போட்டி வைக்கலாம்" என்று இரண்டும் ஒப்புக் கொண்டன.

பகலவன் போட்டிக்கு விதி வகுத்தது.

பனிக்கட்டி ஓரிடத்தில் அசையாமல் நிற்க வேண்டும். காற்று தன் வலுவைக் கொண்டு அதை அசைக்க வேண்டும். அசைத்து விட்டால் காற்றுத்தான் வலுவானது என்று முடிவு செய்யலாம். அசைக்க முடியாவிட்டால்

பனிக்கட்டிதான் வலுவானது என்று தெரிந்து கொள்ளலாம்.

இந்தப் போட்டிக்கு இரண்டும் ஒப்புக் கொண்டன. பனிக்கட்டி ஓரிடத்தில் மலை போல வளர்ந்து நின்றது. காற்று அதை நோக்கி வீசியது. ஒஓ வென்றபேரிரைச்சலோடு காற்று மோதியது. காற்று வீச வீச பனிக்கட்டி இறுகியதே தவிர அசையவே யில்லை. காற்று தன் வலுவெல்லாம் சேர்த்து வீசியது. தன் ஆற்றலெல்லாம் கூட்டி ஆர்ப்பரித்தது. காலை ஆறு மணி முதல் மாலை ஆறு மணிவரை தொடர்ந்து மோதியது காற்று.

பனிக்கட்டி சிறிது கூட அசையவேயில்லை.

"பனிக்கட்டிதான் வலுவானது” என்று தீர்ப்புக் கூறிவிட்டுக் கதிரவன் மேற்குத் திசையில் மறைந்து விட்டது.

காற்று மனம் குன்றி ஒடுங்கிப்போய் விட்டது. அன்று இரவு முழுவதும் வெளியில் தலைகாட்டாமல் ஒடுங்கிப் போய் விட்டது.

மறுநாள் காலையில் கீழ்த்திசையில் தோன்றிய கதிரவன், பனிக்கட்டி போட்டியில் வெற்றி பெற்றதற்காகப் பாராட்டுத் தெரிவித்தது.

"நான் வலுவானவன் என்பதை நீ தரிந்து கொண்டாய் அல்லவா? இனி நீயும் எனக்கு அடங்கித்தான் நடக்க வேண்டும்” என்று பகலவனைப் பார்த்துக் கூறியது பனிக்கட்டி.

கதிரவன் மனத்துக்குள் சிரித்துக் கொண்டது. வீண் பெருமை பாராட்டும் பனிக்கட்டிக்குச் சரியான சூடு கொடுக்க வேண்டும் என்று திட்டமிட்டது. தன் கதிர்களைப் பனிக்கட்டியை நோக்கி நீட்டி விட்டது. நேரம் ஆக ஆகக் கதிர்கள் பனிக்கட்டியின் மீது பட்டு அதைத் துளைத்தன. கதிர்கள் படப் படப் பனிக்கட்டி கரைந்தது. மேலும் மேலும் கரைந்தது. கரைந்து கொண்டேயிருந்தது. கரைந்து கரைந்து மலைபோல நின்ற பனிக்கட்டி சிறு கூழாங்கல்போல ஆகி விட்டது.

அப்போது தான் பனிக் கட்டிக்கு அறிவு வந்தது.

கதிரவனின் காலில் விழுந்து வணங்கியது. "கதிரவனே! மன்னித்துவிடு, என்னை ஒரே யடியாகக் கரைத்து ஒழித்துவிடாதே! உலகில் நானும் வாழ இடங் கொடு” என்று கெஞ்சிக் கதறியது. கதிரவன் இரக்கங் காட்டியது.

"பனிக்கட்டியே கேள். இனி நீ வெறும் ஆர்ப்பாட்டம் செய்யாதே! உலகில் ஒவ்வொரு வரும் ஒவ்வொரு வகையில் உயர்ந்தவர்கள். எல்லாருக்கும் மேலாக நான்தான் உயர்ந்தவன் என்ற எண்ணத்தைக் கைவிட்டுவிடு. வீண் சண்டைக்கு வந்ததனால் உன்னை ஒழித்து விடநினைத்தேன். ஆனால், உன் அழுகையும், கெஞ்சலும் கண்டு மனம் இரங்குகிறேன். ஓர் ஆண்டில் நான்கு மாதம் மட்டும் நீ உலகில் நடமாட அனுமதி கொடுக்கிறேன். மீதி நாட்களில் இமயமலையின் மேல் போய்ப்படிந்து கொள். வெளியே தலைகாட்டாதே! உனக் கென்று ஒதுக்கப்பட்ட நான்கு மாதங்கள் பனிக்காலம் என்ற பெயரால் அமையும். அந்தக் காலத்தில் மட்டும் நீ உரிமையோடு உலகில் ஆட்சி செலுத்தலாம். மீதி நாட்களில் நீ அடங்கித்தான் கிடக்க வேண்டும். என்னையும் காற்றையும் எதிர்த்ததற்காக உனக்கு எட்டு மாத சிறைத்தண்டனை" என்று கூறிய கதிரவன் உச்சிநோக்கிச் சென்றது.  அதைப் பணிந்து வணங்கிவிட்டுப் பனிக்கட்டி இமய மலைக்குப் புறப்பட்டது.

அன்று முதல் அது வீண் சண்டைக்குப் போவதை விட்டுவிட்டது. தான் தான் உயர்ந்தவன் என்ற தற்பெருமையையும் விட்டு விட்டது. பாசமுள்ள நாய்க்குட்டி


எனக்குச் சின்ன வயதிலிருந்தே அழகான பறவைகள் விலங்குகள் என்றால் மிகப் பிடிக்கும்.

பச்சைக் கிளி, அணில், புறா, சிட்டுக் குருவி இவற்றைப் பார்க்கும் போது என் மனம் இன்பத்தால் துள்ளிக் குதிக்கும். பூனைக் குட்டிகளைக் கண்டால் எனக்கு மிகுந்த ஆசை. ஆனால் வீட்டில் பூனை வளர்க்கக் கூடாதென்று பெரியவர்கள் சொன்னதால் விட்டு விட்டேன்.

நாய்க்குட்டி ஒன்று தெருவில் கிடந்தது. அழகான நாய்க்குட்டி! அதை நான் வீட்டுக்குத் தூக்கி வந்தேன். அம்மா அதை வெளியே தூக்கி எறியும்படி கூறினாள். ஆனால் அப்பாதான், 'ஆசையாக இருக்கிறான்; வைத்துக் கொள்ளட்டுமே' என்றார்.