உள்ளடக்கத்துக்குச் செல்

பாச்சோறு, குழந்தைப்பாடல்கள்/பத்துக் கட்டளைகள்

விக்கிமூலம் இலிருந்து

பத்துக் கட்டளைகள்!


 உண்மைக்குப் புறம்பாய்
உரைகள்செய் யாதே!
ஊக்கத்தை என்றும்
குறைத்து விடாதே!
திண்மையாய் எதனையும்
தேர்ந்திட முயற்சிசெய்!
தேர்ந்ததை என்றும்
செய்திட பழகு!


நல்லவர் நட்பையே
நயந்து பெற்றிடு!
நம்பிடும் முன்னர்
நால்வழி எண்ணு!
வல்லவர் துணையை
வலிந்து போற்றிடு!
வறுமையால் உள்ளம்
வாடி விடாதே!


எவரையும் அன்பால்
இன்புறச் செய்வாய்!
எதனையும் அறிவால்
எண்ணிமேற் கொள்வாய்!
இவற்றை நினைவில்வை
என்றும் மறவாதே!
எதிர்ந்த நாளெல்லாம்
இன்புறும் நாள்களே!