பாண்டிமாதேவி/இரண்டாம் பாகம்/கடலில் மிதந்த கற்பனைகள்

விக்கிமூலம் இலிருந்து

7. கடலில் மிதந்த கற்பனைகள்

டிவானத்து விளிம்பு கடற்பரப்பைத் தொடுமிடத்தில் சிறிதாய், இன்னும் சிறிதாய், மிகச் சிறியதாய் அந்தக் கப்பல் மறைகின்றவரையில் செம்பவழத்தீவின் கரையோரத்து மணல் திடலில் நின்று அதைப் பார்த்துக் கொண்டிருந்தாள் மதிவதனி, இன்னும் அந்தச் சங்கொலி அவளுடைய செவிகளில் புகுந்து மனத்தின் பரப்பெல்லாம் நிறைப்பது போலிருந்து. பருகுவதற்குத் தண்ணிரே கிடைக்காத பாலை நிலத்தில் பயணம் செய்யப்போகிறவன் சேகரித்து வைத்துக் கொள்ளுகிறமாதிரி அந்த ஒலியையும், அதற்குரியவனின் அழகிய முகத்தையும் மனச் செவிகள் நிறைய, மனக் கணகள் நிறையச் சேகரித்து வைத்துக்கொள்ள முயன்றாள் அவள். பின்னால் அவளுக்குப் பழக்கமான குரல் ஒலித்தது.

“பெண்ணே! இதென்ன? உனக்குப் பித்துப் பிடித்து விட்டதா? விடிந்ததும் விடியாததுமாக உன்னை வீட்டில் காணவில்லையே என்று தேடிக்கொண்டு வந்தால், நீயோ மணல்மேட்டில் நின்று கடலைப் பார்த்துக் கொண்டிருக்கிறாய்!”

தன் நினைவு வரப்பெற்றவளாய்த் திரும்பிப் பார்த்தாள் அவள். மணல் மேட்டின் கீழே அவளுடைய தந்தை நின்று கொண்டிருந்தார்.

“அப்பா! அவருடைய கப்பல் புறப்பட்டுப் போய்விட்டது.” எதையோ இழந்துவிட்ட ஏக்கம் அவளுடைய சொற்களில் ஒலித்தது.

வாழ்க்கையின் எல்லா அனுபவங்களையும் எண்ணி, பேசி—அனுபவித்து உணர்ந்திருந்த அந்தப் பெரியவர், தம் பெண்ணின் பேதைமையை எண்ணி மனத்துக்குள் இலேசாக சிரித்துக்கொண்டே சொன்னார்—

“அதைப் பார்க்கத்தான் சொல்லாமல் கொள்ளாமல் இவ்வளவு அவசரமாக எழுந்திருந்து ஓடிவந்தாயா? அங்கே உன் அத்தை உன்னைக் காணவில்லையே என்று கிடந்து தவித்துக்கொண்டிருக்கிறாள்’ .

மதிவதனி அவருடைய பேச்சைக் காதில் போட்டுக் கொண்டதாகவே தெரியவில்லை. “அப்பா; நான் இங்கே கரையில் வந்து நின்றதும் கப்பல் மேல் தளத்திலிருந்து என்னைப் பார்த்துவிட்ட அவர் மகிழ்ச்சியோடு அந்தச் சங்கை எடுத்து ஊதினார், அப்பா!” என்று அந்த மகழ்ச்சித் திளைப்பிலே தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தாள் அவள். . . . . . .

“சரியம்மா!... போதும் அவருடைய பெருமை! வா, வீட்டுக்குப் போகலாம். இங்கே சிறிது தாமதித்தால் உன் அத்தையே நம் இருவரையும் தேடிக்கொண்டு வந்து விடுவாள்." மகளைக் கடிந்து கொள்பவர்போல் சினத்துடன் பேசி அழைத்துக் கொண்டு சென்றார் அவர். அந்தப் பெண்ணின் கால்கள் தரையில் நடந்தன. எண்ணங்களோ கடலில் மிதந்து சென்ற அந்தக் கப்பலோடு மிதந்து சென்றன.

வீட்டுக்குப் போனதும் அவளுடைய அத்தை வேறு அவளைக் கோபித்துக் கொண்டாள். “வயதுதான் ஆகி விட்டது உனக்கு, உன் வயதுக்கு இவ்வளவு அசட்டுத் தனமும், முரட்டுத்தனமும் வேறு எந்தப் பெண்ணுக்காவது இருக்கிறதா, பார். யாரோ ஊர் பேர் தெரியாதவன் கடையில் வந்து சங்கு வாங்கிக்கொண்டு போனான் என்றால் இப்படியா அவனையே நினைத்துக் கொண்டு பைத்தியம் பிடித்துப்போய் அலைவார்கள்! கிழக்கே ஒரு மூலை விடிவதற்குள் உனக்குக் கடற்கரையில் என்ன வேலை?”

அத்தையின் சீற்றத்துக்கு முன் தலைகுனிந்து நின்றாள் மதிவதனி, கால் கட்டை விரலால் தரையைத் தேய்த்துக் கொண்டு நின்ற அவளுக்குக் கண்கள் கலங்கிவிட்டன. பக்கத்தில் நின்ற தந்தை அனுதாபத்தோடு அவளைச் சமாதானப் படுத்தினார்.

“அசடே இதற்காக வருத்தப்படலாமா? அத்தை உன் நன்மைக்காகத்தானே சொல்லுகிறாள்! எவரோ மூன்றாவது மனிதரை நினைத்து ஏங்கிக்கொண்டிருந்தால் அவர் நம்மவர் ஆகிவிடுவரா? நீதான் இப்படி நினைத்து நினைத்துக் குமைகிறாய் ! இரண்டாயிரம் பொற்கழஞ்சுகளை அலட்சியமாகத்துக்கிக்கொடுத்து ஒரு சங்கை வாங்கிக்கொண்டு போகும் செல்வச் சீமான் அந்த இளைஞன். நேற்றிரவு நீ அவன் உயிரையே காப்பாற்றியிருக்கிறாய்! ஆனாலும் என்ன? இந்தத் தீவு பார்வையிலிருந்து மறைந்ததுமே உன்னையும், என்னையும் இந்தத் தீவையும் மறந்துவிடப் போகிறான் அவன். செல்வர்களுக்கு நினைவு வைத்துக்கொள்வதற்கு நேரம் ஏது, அம்மா!”

“அப்பா! நீங்கள் நினைப்பது தவறு; அவர் என்னையும் இந்தத் தீவையும் ஒரு போதும் மறக்கமாட்டார்” என்று உடனே பதில் சொல்லிவிடத் துடித்தது அவள் நாக்கு. ஆனால் சொல்லவில்லை, தந்தையின்மேல் கோபம் கோபமாக வந்தது அவளுக்கு காற்றில் மேலும் கீழுமாக ஆடும் இரண்டு மாதுளை மொட்டுக்களைப் போலத்துடித்தன அவள் இதழ்கள். வலம்புரிச் சங்கோடு தன் நெஞ்சையும் கொண்டு போனவனை அவ்வளவு சுலபமாக- அவர் மதிப்பிட்டதை அவளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அடிபட்ட புலி சீறுவதுபோல் தந்தையை எதிர்த்துச் சீறின. அவள் சொற்கள். “உங்களையும் இந்தத் தீவையும் எந்நாளும் மறக்கமாட்டேன் என்று நேற்று அவர் நமக்கு நன்றி கூறும்போது நீங்களும்தானே உடன் இருந்தீர்கள் அப்பா?”

பெண்ணின் சினம் அவருக்குச் சிரிப்பை உண்டாக்கியது.

"பேதைப் பெண்ணே மனிதர்கள் சொல்லுகிற வார்த்தைகளை எல்லாமே நூற்றுக்கு நூறு உண்மையாக எடுத்துக் கொண்டு ஏமாறக்கூடாது! செல்வந்தர்கள் எதையுமே சீக்கிரமாக மறந்துவிடுவார்கள். உலகத்தில் தாங்கள் செல்வர்களாக இருப்பதற்குக் காரணமாக எங்கோ சிலர் துன்பப்பட்டுக் கொண்டிருப்பதையே அவர்கள் மறந்து விடும்போது உன்னையும் என்னையுமா நினைத்துக்கொண்டே இருக்கப்போகிறார்கள்?”

“இல்லை! இல்லவே இல்லை, அவர் என்னை மறக்க மாட்டார்”—குழந்தைபோல் முரண்டுபிடித்துப் பேசினாள் அவள். என்னவோ தெரியவில்லை, தன்னடக்கத்தையும் மீறிப் பேசும் ஒரு துணிவு வெறி அவளுக்கு அந்தச் சமயத்தில் உண்டாகியிருந்தது.

“மதிவதனி! 'அனிச்சம்' என்று ஒரு வகைப்பூ இருக்கிறது. அது மோந்து பார்த்துக் கொண்டிருக்கும்போதே வாடிப் போய்விடும். செல்வந்தர்கள் கொடுத்துவிட்டுச் செல்லும் உறுதிமொழிகளும் அப்படித்தான். அவற்றை உண்மை என்று நம்ப முயலும்போதே அவை பொய்யாகி வாடிவிடும். செல்வந்தனான ஆண் மகன் ஒருவனின் வார்த்தையை நம்பிக் கொண்டு ஏங்கிக் கால வெள்ளத்தில் கரைந்து கொண்டிருந்தாள் ஒரு பெண். பெயர் சகுந்தலை. அந்த ஆண் மகனோ அவளை மறந்தே போனான், அந்தப் பெண்ணின் ஏக்கத்தை உலகத்துக்கு எடுத்துக்கூற ஒரு மகாகவி தேவையாயிருந்தது. உனக்குத்தான் தெரியுமே, இந்தக் கதை?”— பெரியவர் மறுபடியும் அவளிடம் விவாதித்தார்.

"தெரியாது, அப்பா! தெரிந்துகொள்ளவும் ஆசை இல்லை.” அழுகை வெடித்துக் கொண்டு கிளம்பும் எல்லைக்குப் போய்விட்டது அவள் குரல்.

“அண்ணா! இதென்ன? நீங்களும் அவளுக்குச் சரியாகப் பேச்சுக் கொடுத்துகொண்டு நின்றால் என்ன ஆவது?” என்று மதிவதனியின் அத்தை கூப்பாடு போட்ட பின்பே அவரும் தம்முடைய பேச்சை நிறுத்தினார்.

முகத்தை மூடிக்கொண்டு ஒரு மூலையில் போய் உட்கார்ந்து தேம்பித் தேம்பி அழத் தொடங்கிவிட்டாள் மதிவதனி, அந்தப் பெரியவர்களுக்கு அவளை எப்படித் திருப்தி செய்வதென்றே திகைப்பாகிவிட்டது. நயமாகவும், பயமாகவும் அவள் அழுகையைத் தணித்து வழிக்குக் கொண்டு வந்தார்கள். அவர்களுக்கு அவள் ஒரே குலக்கொழுத்து, செல்லப்பெண். அந்தப் பெரியவர் வாழ்க்கையில் பல துயர அனுபவங்களைக் கண்டவர். இதோ வளர்ந்து பெரியவளாகி மதிவதனி என்ற பெயருடன் நிற்கும் இப்பெண் சிறு குழந்தையாக இருக்கும்போதே தாயை இழக்க நேரிட்டது. குழந்தைக்குத் தாய்மைப் பேணுதல் மட்டும்தான் இல்லாமற்போய்விட்டது. ஏறக்குறைய அதே சமயத்தில் பக்கத்துத் தீவில் ஒரு பரதவனுக்கு வாழ்க்கைப்பட்டிருந்த அவருடைய இளைய சகோதரி அமங்கலியாகி அண்ணனைத் தேடிக் கொண்டு பிறந்தவீடு வந்து சேர்ந்தாள். இந்த இரண்டு துன்பங்களும் அவருக்கு வாழ்க்கையிலேயே பெரிய அதிர்ச்சிகள்.

தங்கை வீட்டோடு இருந்து அவருடைய பெண் குழந்தையைப் பேணி வளர்த்து விட்டாள். அத்தையின் ஆதரவில் மதிவதனி வளர்ந்து உருவாகிவிட்டாள். கண்டிப்பும், கண்காணிப்பும் அதிகமாக இருந்தாலும் அவளுடைய கண் கலங்கினால் மட்டும் அவர்களால் பொறுக்க முடியாது.

“மதிவதனி! உனக்கு நல்ல கைராசி இருக்கிறது. நீ போய் உட்கார்ந்து வியாபாரம் செய்தால் கடையிலும் நன்றாக விலை போகிறது. இன்றும் நீயே கடையில்போய் இரு நான் வேறு வேலையாகக் கொஞ்சம் வெளியே போய்வருகிறேன்.” பெண்ணின் அழுகையையும் கோபத்தையும் தணித்து ஒரு வழியாக அவளைத் தமது கடையில் வாணிகத்தைக் கவனித்துக் கொள்வதற்கு அனுப்பிவைத்தார் அந்தப் பெரியவர்.

கடையில் போய் உட்கார்ந்த பின்பும் அவளுடைய நினைவுகள் எல்லையற்ற கடலில்தான் இருந்தன.

மதிவதனியின் சிந்தனைகள் இளவரசன் இராசசிம்மனைச் சுற்றியே வட்டமிட்டன. “இந்த நேரத்துக்கு அவருடைய கப்பல் எவ்வளவு தூரம் போய் இருக்கும்? எத்தனை தடவை அவர் என்னைப்பற்றி நினைத்துக் கொண்டிருப்பார்! எத்தனை தடவையாவது? மறந்தால்தானே பல தடவைகள் நினைக்க முடியும்? அவர்தான் என்னை மறந்திருக்கவே மாட்டாரே? அவராக நினைக்காவிட்டாலும் அந்தச் சங்கு அவர் கையிலிருந்து நினைப்பூட்டிக்கொண்டே இருக்கும்!” தும்மல் வரும்போதெல்லாம் அவர் தன்னை நினைப்பதாகக் கற்பனை செய்துகொண்டாள் அவள். அத்தையும், தந்தையும் அன்று காலை சொல்லியது போல் அவர் தன்னை உடனே மறந்துவிடுவாரென்பதை அவளால் நம்பவே முடியவில்லை! கடலுக்கு அப்பாலிருக்கும் உலகத்தை அறியாத அந்த அப்பாவிப் பெண்ணின் மனத்தில் அசைக்க முடியாததொரு நம்பிக்கையை, சிதைக்க முடியாததொரு கனவை, வேரூன்றச் செய்துவிட்டுப் போய்விட்டான் முதல்நாள் சங்கு வாங்க வந்த அந்த இளைஞன். அவன் ஒருவனுக்காகவே தன் உள்ளமும், உணர்வும் தோற்றுத் தொண்டுபடவேண்டுமென்று தன்னைக் காக்கவைத்துக் கொண்டிருந்ததுபோல் அவளுக்குத் தோன்றியது. கால ஓட்டத்தின் இறுதிப்பேருழிவரை கழிந்தாலும் அவனை மறுபடியும் அங்கே காணாமல் தன் கன்னிமை கழியாதுபோல் நினைவு குமுறிற்று. அவளுக்கு. “நீ அவனைக் காணலாம்: பன்முறை காணலாம். பிறவி, பிறவியாகத் தொடர்ந்து விலாசம் தவறாமல் வந்துகொண்டிருக்கும் உயிர்களின் வினைப் பிணிப்புப்போல் விளக்கிச் சொல்ல முடியாததோர் பிணைப்பு உங்களுக்கிடையே இருக்கலாம். இருக்க முடியும் என்பதுபோலத் தற்செயலான ஒரு தெம்பு அவள் நெஞ்சில் நிறைந்து

கொண்டிருந்தது. அவநம்பிக்கையின் தளர்ச்சியை மறைக்க அவளாக உண்டாக்கிக்கொண்ட நினைவன்று அது. புனல் ஒடும் வழியில் புல் சாய்ந்தாற்போலவும் நீர்வழி மிதவை போலவும், துளையிட்ட காசுகள் கயிற்றில் கோவை பெறல் போலவும், தற்செயலான ஒரு தவிர்க்க முடியாத நினைவு என்று அதைக் கூறவேண்டும். . வடகடலில் இட்ட நுகத்தடி ஒன்று பல்லாண்டுக் காலமாகத் தள்ளுண்டு மிதந்து மிதந்து தென்கடலில் இட்ட துளையுள்ள சுழி ஒன்றில் வந்து பொருந்திக் கொள்வது மாதிரிப் பொருந்திய நினைவு அது. -

ஒவ்வொரு நாளும் செம்பவழத்தீவின் கடைவீதியில் கலகலப்புக்குக் குறைவே இருக்காது! அன்றும் அவளுடைய கடைக்கு யார் யாரோ வந்தார்கள்; சங்கு வாங்கினார்கள். முத்து, பவழம் வாங்கினார்கள். வருபவர்களுக்கு விற்பதற்காகச் சங்கை எடுத்துக் கொடுக்கும்போது எல்லாம் சங்கோடு சேர்த்துப் பிடித்துக்கொண்ட அந்த ஆண்மகனின் கைகள் நினைவுக்கு வரும். உச்சிமரக் கிளையில் நின்றுகொண்டு தன் உயிரைக் காப்பாற்றியதற்காக நன்றி கூறி அவளுடைய வளைக்கரங்களைப் பற்றிக்கொண்டு ஆனந்தக் கண்ணிர் சிந்திய காட்சி நினைவுக்கு வரும். அந்த நினைவுகளெல்லாம் வரும்போது மதிவதனி தன்னை மறந்து தான் இருக்கும் கடையையும், கடையிலுள்ள பொருள்களையும் மறந்து எங்கோ போய் மீள்வாள்.

நேற்றுக்காலைவரை தன்னையும், தன்னுடைய வர்களையும் தன் சூழ்நிலையையும் பற்றித்தான் அவளுக்கு நினைக்கத் தெரிந்திருந்தது. இப்போதோ, நினைப்பதற்கும் நினைவுகளை ஆளுவதற்கும் வேறு ஒரு புதியவன் கிடைத்துவிட்டான். செம்மண் நிலத்தில் மழை பெய்தபின் நீருக்குத் தன் நிறம் ஏது? தன் சுவை ஏது? தன் மணம் ஏது? மாலையில் அவளுடைய தந்தை கடைக்கு வந்துவிட்டார். “பெண்ணே கடையை நான் பார்த்துக் கொள்கிறேன்; உன்னுடைய அத்தை உன்னை வீட்டுக்கு வரச்சொன்னாள், நீ போ” என்று அவள்ை வீட்டுக்கு அனுப்பினார்.

வீட்டுக்குச் செல்வதற்காக அவள் வீதியில் இறங்கி நடந்துகொண்டிருந்தபோது அவளுக்குச் சிறிது தொலைவு முன்னால் நடந்துகொண்டிருந்த யாரோ இரண்டு மூன்று பேருடைய பேச்சு அவளுடைய கவனத்தைக் கவர்ந்தது. வேகமாக நடந்து அவர்களைக் கடந்து முன்னே சென்று விடாமல் அவர்களது பேச்சைக் கேட்டுக்கொண்டே பின் பற்றினாள் அவள். -

“அடே! உன்னைப்போல் பெரிய முட்டாள் உலகத்திலேயே இருக்க முடியாதடா? ஆள் தானாக வலுவில் தேடிக் கொண்டுவந்து நிற்பதுபோல் நின்றான். நீ வம்பு பேசி நேரத்தைக் கடத்தியிருக்காவிட்டால் உடனே அங்கேயே ஆளைத் தீர்த்திருக்கலாம்.” -

“போடா மடையா! நாம் தீர்ப்பதற்குத் தயாராகிக் கொண்டிருக்கும்போது அவன்தான் உயிர் தப்பினால் போதுமென்று ஒட்டமெடுத்து விட்டானே?”

“நாமும் துரத்திக்கொண்டுதானே போனோம்! ஒடிக் கொண்டிருந்தவன் திடீரென்று மாயமாக மறைந்து விட்டானே? நாம் என்ன செய்யலாம்? பக்கத்துப் புதர்களிலெல்லாம் துருவிப் பார்த்தும் அகப்படவில்லையே?”

‘கடலில் குதித்திருப்பானென்று எனக்குத் தோன்றுகிறதடா!” -

“எப்படியோ தப்பிவிட்டானே? வேறொருவர் காணாமல் உலாவும் சித்து வித்தை-மாய மந்திரம் வசியம் ஏதாவது அவன் கையிலிருந்த அந்தச் சங்கில் இருந்திருக்குமோ என்னவோ?”

“மாயமாவது, வசியமாவது: அதெல்லாம் ஒன்றுமில்லை. கடலில்தான் குதித்திருப்பான். அப்படியில்லையானால் இன்று காலையில் விடிந்ததிலிருந்து இவ்வளவு நேரமாக இந்தத் தீவு முழுவதும் சுற்றி அலைந்தும் எங்கேயாவது ஒரிடத்தில் நம் கண்ணில் அகப்படாமல் போவானா?”

“நாகைப்பட்டினத்தில் போய் இறங்கியதும் நம்மை அனுப்பியவர்களுக்கு நாம் பதில் சொல்லியாக வேண்டும்!

இல்லையானால் நாம் செய்யாதுபோன செயலை நமக்கே செய்துவிடுவார்களே!”

கடைசியாகப் பேசியவனுடைய குரலில் பயம் மிதந்தது. தெருக்கோடி வரை வீதியில் போய்க்கொண்டும், வந்து கொண்டும் இருக்கும் மற்றவர்களைப் பற்றி கவலையில்லாமல் இரைந்து பேசிக்கொண்டு நடந்தார்கள் அந்த மூவரும். மதிவதனி தற்செயலாகத் தெருவில் நடந்து செல்பவள் போல் கேட்டுக்கொண்டே சென்றாள். அந்த மூன்று பேரும் ஒரே மாதிரிச் சிவப்பு நிறத்தில் தலைப்பாகை அணிந்திருந்தனர். பார்ப்பதற்கு முரடர்களாகத் தோன்றினர். அவர்கள் பேச்சைக் கேட்டு எந்தச் சந்தேகத்தோடு அவள் பின்தொடர்ந்தாளோ அது சரியாக இருந்தது. நேற்றிரவு கடற்கரையில் அந்த இளைஞனை அவர்கள் துரத்தும்போதும், அவன் வலை மூலம் தன்னால் மரக்கிளைக்குத் தூக்கப்பட்டபின் தாழம் புதரில் தேடியபோதும், அந்த முரடர்களுடைய உருவத்தைச் சரியாகக்கண்டு நினைவு வைத்துக்கொள்ள அவகாசமில்லை அவளுக்கு இப்போது அவர்களைக் காணும்போது அவளுக்கே அச்சமாக இருந்தது. அவர்கள் பேச்சிலிருந்து அனுமானித்துக் கொண்ட உண்மையால் கொலை செய்யவேண்டுமென்றே அவர்களை யாரோதுாண்டிவிட்டு அனுப்பியிருக்கும் விவரமும் அவளுக்குப் புரிந்தது. வீட்டுக்குப் போவதை மறந்து மேலும் பின்தொடர்ந்தாள் அவள். அவர்கள் உரையாடல் மேலும் வளர்ந்தது. - . . . . -

“ஈழத்தில் போய்ச் செய்யவேண்டிய கொலையை இடைவழியிலேயே செய்வதற்கு நல்ல வாய்ப்புக் கிடைத்தது, தவற விட்டுவிட்டோம்.” . . . - . . . .

“கொல்லாவிட்டால் என்ன? அவன் மட்டும் நமக்குப் பயந்து ஓடிக் கடலில் குதித்திருந்தால் கொன்றது மாதிரித்தான்! இந்தப் பக்கத்துக் கடல் ஓரங்களில் முதலைகளின் புழக்கம் அதிகம். அதனால்தான்.எங்கு பார்த்தாலும் கரையோரங்களில் இரும்பு வலைகள் விரித்திருக்கிறார்கள். அவன் கடலில் குதித்தது மெய்யானால் நாம் செய்ய வேண்டிய காரிய்த்தை முதலைகள் செய்திருக்கும்.” - .

ur, G5.22

மதிவதனி இதைக் கேட்டுத் தனக்குள் சிரித்துக் கொண்டாள். அவர்கள் பேச்சு தொடர்ந்தது.

“நம் கதைதான் இப்படி ஆயிற்றென்றால் நாம் விழிஞத்தில் இறக்கி விட்டு வந்த அந்த மூன்று தோழர்களும் என்ன செய்திருக்கிறார்களோ?”

“என்ன செய்தால் நமக்கென்ன? நாம் திரும்பிவிட வேண்டியதுதான். நமக்கு இனி வேலை இல்லை.”

வீதியின் ஆரவாரம் குறைந்து கடற்கரை தொடங்கும் திருப்பத்தில் அவர்கள் திரும்பிவிட்டனர். மதிவதனி சிறிது பின் தங்கினாள். அதுவரை தெருவில் ஆள் நடமாட்டமுள்ள கலகலப்பான பகுதியில் அவர்கள் சென்றதால் ஒட்டுக் கேட்டுக் கொண்டே பக்கத்தில் ஒட்டி நடக்க வசதியாக இருந்தது. இனி அப்படி முடியாது. ஆகவே அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று தீர்மானித்து வீட்டுக்குப் போய்விட்டாள் அவள்.

பொழுது மறையும் நேரத்துக்குத்தான் வலை விரிக்கும் பகுதியை ஒட்டியிருந்த கடற்கரைக்கு அவள் சென்றபோது கடல் திருப்பத்தில் புலிச் சின்னமும், பனைமரச் சின்னமும் உள்ள கொடி, உச்சியில் அசைய அந்தக் கப்பல் புறப்பட்டுக் கொண்டிருந்தது. அதன் மேல்தளத்தில் அவர்களுடைய சிவப்புத் தலைப்பாகைகள் தெரிந்தன.

“ஐயோ! கடலில் எங்கேயாவது அவருடைய கப்பலும் இதுவும் சந்தித்துக் கொண்டால்?” பேதமையான இந்தக் கற்பனை மதிவதனிக்குத் தோன்றியபோது அவள் உடல் நடுங்கியது. அவளுடைய கற்பனைகளோ கையில் சங்கோடு நிற்கும் அவனைச் சுற்றி அவனுடைய கப்பல் போகும் கடலில் மிதந்தன.