பாண்டிமாதேவி/இரண்டாம் பாகம்/கருணை வெள்ளம்

விக்கிமூலம் இலிருந்து

19. கருணை வெள்ளம்

காந்தளூர் மணியம்பலத்திலிருந்து இருளில் புறப்பட்ட சிவிகைப் பயணம் தொடர்ந்தது. பல்லக்குத் தூக்குகிறவர் களுடைய துவண்ட நடையையும் வாடித் தொங்கினாற்போல் இருந்த புவனமோகினியின் முகத்தையும் கவனித்தபோது தான் மகாராணிக்குத் தான் செய்துவிட்ட பெருந்தவறு புரிந்தது.

தன் ஒருத்தியோடு போகாமல் காலையில் புறப்பட்டதிலிருந்து அவர்கள் வயிற்றைக் காயப்போட்டு விட்டோமே என்ற உணர்வு அப்போதுதான் அவர் நெஞ்சில் உறைத்தது. அவருடைய மிக மெல்லிய மனம் வருத்தமுற்றது. அரண்மனையிலிருந்து சுசீந்திரத்துக்கும் , சுசீந்திரத்திலிருந்து காந்தளூருக்கும். காந்தளூரிலிருந்து மீண்டும் அரண்மனைக்குமாகப் பல்லக்குத் தூக்கும் ஆட்களை இழுத்தடித்து அலைய வைக்கிறோம் என்ற உணர்வைத் தாங்கிக் கொள்ளக்கூட முடியவில்லை.

‘எனக்குத்தான் ஏதேதோ கவலைகளில் பசியே தோன்றவில்லையென்றால் எல்லோருக்குமா அப்படி இருக்கும்: இதோ இந்த வண்ணமகளின் முகத்தில் பசியின் சோர்வுக்களை படர்ந்து பரிதாபகரமாகத் தோன்றுகிறேதே என்னிடம் பசியைச் சொல்வதற்குப் பயப்பட்டுக்கொண்டு பேசாமல் உட்கார்ந்திருக்கிறாளென்று தெரிகிறது. பல்லக்குத் தூக்கிகள் பாவம்! மகாராணி சொல்லும்போது மறுக்கக் கூடாதேயென்று பயத்தினாலும் பதவி, பெருமை காரணமாக உண்டாக்கிக் கொண்ட மரியாதைகளாலும் பசியை, நடையை-சுமைக் களைப்பைக் கூறாமல் ஏவியபடி நடக்கிறார்கள். அடடா! சிலபேர் பதவியினாலும், அறிவு மிகுதியாலும் வயது மூத்ததினாலும், மற்றவர்களுடைய துன்பங்களையும், எண்ணங்களையும் பொருட்படுத்தாமல், புரிந்துகொள்ளாமல், தங்களை அறியாமலே பிறருக்குத்துன்பம் தருவதுபோல் நானும் நடந்துகொண்டுவிட்டேனே. அழுதாலும் வாய்விட்டுக் கதறினாலும்தான் துன்பமா? அழாமலும் கதறாமலும் விளாம். பழத்துக்கு வெளியே தெரியாமல் உள்ளுக்குள்ளேயே வரும் நோய்போல் நெஞ்சிலேயே ஏங்கி மாய்ந்து வேதனைப்பட்டுக் கொண்டிருப்பவர்கள் இந்த உலகில் எத்தனை பேர்கள் இருக்கிறார்கள்?

மகாராணி பல்லக்கை நிறுத்தச் சொல்லிவிட்டு அதைச் சுமப்பவர்களை விசாரிப்பதற்காகத் தலையை வெளியே நீட்டிக் கேட்டார்: “அப்பா! நீங்களெல்லாம் எப்போது சாப்பிட்டீர்கள்? எனக்குப் பயந்துகொண்டு ஒளிக்காமல் மறைக்காமல் உங்கள் துன்பங்களைச் சொல்லுங்கள். உங்களுக்குக் களைப்பும் பசியும் அதிகமாயிருக்குமே?”

“தாயே! நாங்கள் காலையில் அரண்மனையிலிருந்து புறப்பட்டபோது சாப்பிட்டதுதான். பசியையும், களைப்பையும் பற்றி நாங்கள் கவலையே படவில்லை. மகாராணியாருக்குப் பணிபுரியும் பாக்கியமே போதும்” என்று விநயமாக மறுமொழி கூறினான், பல்லக்கின் முன்கொம்பைச் சுமந்துகொண்டு நின்ற இருவரில் ஒருவன்.

“புவனமோகினி! உன் முகத்திலும் பசிக்களை படர்ந்து விட்டது. நீ சொல்லாமல் இருந்தாலும் எனக்குத் தெரிகிறது. ‘மகாராணியோடு இனிமேல் எங்குமே வெளியில் புறப்பட்டு வரக்கூடாது. வந்தால் வயிறு காயவேண்டியதுதான் என்று உன் மனத்துக்குள் என்னைத் திட்டிக்கொண்டிருப்பாய்’ என்றார் மகாராணி.

“தாங்களே வெறும் வயிற்றோடு இவ்வளவு இடமும் சுற்றிக் கொண்டிருக்கும்போது நாங்கள் அப்படியெல்லாம் நினைக்க முடியுமா? பயண அலுப்பினால் கொஞ்சம் தளர்ந்து போனேன். வேறொன்றுமில்லை” என்று சிறிது வெட்கத்தோடு தலை தாழ்த்திக்கொண்டு பதில் சொன்னாள் புவனமோகினி. தான் சொல்லக்கூடாதென்று அடக்கிக் கொண்டிருந்தாலும் தன் வயிற்றுப் பசி வேதனை மகாராணிக்கு எப்படியோ தெரிந்துவிட்டதே என்று நாணினாள் அவள்.

'இவர்களுடைய பசிக்கு ஏதாவது வழி செய்துதான் ஆக வேண்டும். இல்லாவிட்டால் பெரும் பாவத்தைச் செய்தவள் ஆவேன்’ என்ற உடனடியான உணர்ச்சித் துடிப்பு மகாராணியின் மனத்தில் ஏற்பட்டது. அந்தக் காந்தளூர் நெடுஞ்சாலையில் ஒரு கேந்திரமான இடத்தில் நான்கு கிளை வழிகள் பிரிந்தன. நான்கில் எந்த வழியாகச் சென்றாலும் பாதை சுற்றி அரண்மனைக்குப் போய்ச் சேர முடியும். வழிகள் பிரிகிற இடத்துக்கு வந்ததும், "முன் சிறை வழியாக அரண்மனைக்குச் செல்லும் பாதையில் செல்லுங்கள்” என்று ஏதோ ஒரு தீர்மானத்துக்கு வந்த கருத்தோடு சுமப்பவர்களிடம் கூறினார் மகாராணி. புவனமோகினி குறுக்கிட்டு அதைத் தடுக்க முயன்றாள்:-

“முன்சிறை வழியாகச் சுற்றிக்கொண்டு சென்றால் அரண்மனையை அடைவதற்கு நள்ளிரவு ஆகிவிடுமே ! வேண்டாம் தேவி! எங்களுடைய பசியைப்பற்றி ஏதோ நினைத்துக் கவலைப்பட்டுக்கொண்டு நீங்கள் முன்சிறைப் பாதையாகப் போகலாமென்று சொல்கிறீர்கள் போலிருக்கிறது. இந்தப் பசி ஒன்றும் பிரமாதமில்லை. இதை எங்களால் தாங்கிக்கொள்ள முடியும். நாங்களாவது ஒருவேளை சாப்பிட்டிருக்கிறோம். பச்சைத் தண்ணிரால்கூட வயிற்றை நனைத்துக்கொள்ளாமல் மகாராணியாரே எங்களோடு வரும்போது எங்கள் பசியும் களைப்புமா எங்களுக்குப் பெரிது?”

“இல்லை, அம்மா! நீ சொல்வது தவறு. என்னையறியாமலே இன்று காலையிலிருந்து இந்தக் கணம் வரை உங்களையெல்லாம் துன்புறுத்திக் கொண்டிருந்து விட்டேன் நான். நீங்கள் எல்லாம் பசியும் களைப்பும் அடைந்திருக்கிறீர்கள் என்பதை நான் உணராமலும், நினைக்காமலும் இருந்தது எவ்வளவு பெரிய தவறு? பிறரைத்துன்புறுத்துகிறதை உணராமல் நாகரிகமாகவும், கெளரவமாகவும் இருந்துவிடுகிறோம் சில சமயங்களில்.”

“தேவி! தங்கள் கவலைகள் ஆயிரமாயிரம். அவற்றுக் கிடையிலும் கருணையும், இரக்கமும் எங்கள் மேலிருக்கின்றன என்று அறிவதே எங்களுக்கெல்லாம் வயிறு நிறைந்த் மாதிரி. முன்சிறைக்குப் போய் நேரத்தை வீணாக்க வேண்டாம். தவிர, நமது சிவிகை போய்ச் சேருகிற நேரத்துக்கு அறக்கோட்டத்தில் உணவு வைத்திருப்பார்களா என்பது சந்தேகம் தான்!”

“எல்லாம் வேண்டிய உணவு இருக்கும். என் சொற்படி கேளுங்கள், தடுத்துப் பேசாமல் முன்சிறைக்கே செல்லுங்கள்” என்று உறுதியான குரலில் மகாராணி உத்தரவிட்டபின் புவனமோகினியால் தடுக்க முடியவில்லை. சிவிகை வழிமாறி விரைந்தது. வெள்ளம்போல் பெருகும் இந்தக் கருணை உள்ளத்த்ை நினைத்தபோது சிவிகை சுமப்பவர்களுக்குக்கூட மனம் உருகியது. அதிகாரம் செய்பவர்களுக்கு அதுதாபப்படும் பண்பு குறைவாயிருக்கும்; ஆனால் மகாராணி வானவன்மாதேவிக்கு அநுதாபப்படும் பண்பு அதிகமாக இருந்தது. அதிகாரம் செய்யும் பண்பு மிகக் குறைவு என்பது அவரோடு சிறிது நேரம் பழகினாலும் தெளிவாகத் தெரிந்துவிடும்.