பாண்டிமாதேவி/இரண்டாம் பாகம்/குழைக்காதன் திரும்பி வந்தான்

விக்கிமூலம் இலிருந்து

27. குழைக்காதன் - திரும்பி வந்தான்

கோட்டாற்றுப். படைத்தளத்தின் பிரும்மாண்டமான முரச மேடையில் நின்று கொண்டு கண்களின் எதிரே கடல் போல் பரந்து தோன்றும் படையணிவகுப்பைப் பார்த்துக் கொண்டிருந்த தளபதி வல்லாளதேவன், படைக்கோட்டத்தின் வாசலில் ஆபத்துதவிகள் தலைவனின் உருவத்தைப் பார்த்ததுமே பரபரப்படைந்தான். அவனைச் சந்தித்து அவன் கொண்டுவரும் விவரங்களை அறிந்து கொள்ள வேண்டுமென்ற ஆவலினாலும், பரபரப்பினாலும் ஒரு கணம் தன் நிலை, தான் நின்றுகொண்டிருந்த சூழல் எல்லாவற்றையுமே மறந்துவிட்டான் தளபதி. அப்படியே இறங்கி ஓடிப்போய்க் குழைக்காதன் கொண்டு வரும் செய்திகளை அங்கேயே அவனை நிறுத்தித் தெரிந்து கொண்டு விட வேண்டும் போலிருந்தது. பல்லாயிரக்கணக்கான படைவீரர்கள் தனக்கு மரியாதை செய்வதற்காகக் கூடி அணிவகுத்து நிற்கும் சூழ்நிலையை உணர்ந்து அப்படி இறங்கிச் செல்லாமல் சமாளித்துக் கொண்டான். பெரிய சூழ்நிலைகளில் சிறிய ஆசைகளை அடக்கிக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.

முரச மேடைமேல் தன் பக்கத்தில் நின்று கொண்டிருந்த படையணித் தலைவர்களில் ஒருவனைக் குறிப்புக் காட்டி அருகே அழைத்தான். “அதோ, வாயிற்புறமாகக் குதிரையிலிருந்து இறங்கி வந்து கொண்டிருக்கும் ஆபத்துதவிகள் தலைவனை நேரே இங்கே அழைத்து வா” என்று சொல்லி அனுப்பி வைத்தான். அவன் மேடையிலிருந்து இறங்கி வேகமாக வாயிற் பக்கம் நடந்தான். அந்த மாபெரும் அணிவகுப்பின் நடுவே-அசையாது நிற்கும் சிலைகளைப் போன்று வரிசை வரிசையாக நிற்கும் வீரர்களை வகிர்ந்துகொண்டு ஒரே ஒர் ஆள் நடந்து சென்றது, நெற்குவியலினிடையே ஒரே ஓர் எறும்பு ஊர்கிற மாதிரித் தெரிந்தது. உயரமான மேடை மேலிருந்து பார்க்கும்போது தளபதிக்கு அப்படித் தான் மனத்துக்குள் உவமை தோன்றியது. அத்தனை ஆயிரம் வீரர்களின் கூட்டத்தில் மூச்சுவிடுகிற ஒசையாவது கேட்க வேண்டுமே! அவ்வளவு அமைதி. தளபதி என்ற ஒரு மனிதனுக்கு அத்தனை மனிதர்களும் கட்டுப்படவேண்டியிருக்கிறது. அவ்னுடைய ஒரு சுட்டு விரலின் அசைவுக்குக்கூட அந்தக் கூட்டத்தில் விளைவு உண்டு. இதை நினைத்துக் கொண்டபோது திடீரென்று தான் மிகமிகப் பெரியவனாக மாறி உயர்ந்து விட்டது போலவும் அந்த உயரத்தின் நீண்ட நிழலில் மகாமண்டலேசுவரர் என்ற அறிவின் கூர்மை சிறியதோர் அணுவாய்த் தேய்ந்து குறுகி மங்கி மறைந்துவிட்டது போலவும் தளபதி வல்லாளதேவனுக்கு ஒரு பொய்யான பூரிப்பு ஏற்பட்டது. ஒரே ஒரு கணம்தான் அந்தப் பூரிப்பு நிலைத்தது. அடுத்த கணம் ஆழங்காண முடியாத மகாமண்டலேசுவரரின் அந்தக் கண்களும், ஒரு திசையைப் பார்த்துக் கொண்டிருந்தாலும் எட்டுத்திசையை உணர்ந்து கொள்ளும் பார்வையும், உரு வெளியில் பெரிதாகத் தோன்றி அவன் சிறுமையை அவனுக்கு நினைவுபடுத்தின. தென்பாண்டி நாட்டின் எத்தனையோ ஆயிரம் வீரர்களுக்கு வாய் கட்டளையிடும் அவனை, வாய் திறவாமல் கண் பார்வையாலேயே நிற்கவும், நடக்கவும், செயலாற்றவும் ஏவுகிற அரும் பெரும் ஆற்றல் அந்த இடையாற்றுமங்கலத்து ‘மலைச்சிகரத்தினிடம் இருந்தது.

மனத்தைத் தடுக்க முயன்றாலும், முடியாமல் மறுபடியும் மறுபடியும் அவன் சிந்தனை இடையாற்றுமங்கலம் நம்பியையே சுற்றிக்கொண்டு மலைத்தது. ஆபத்துதவிகள் தலைவனைக் கூட்டிக்கொண்டு வர வாயிற்புறம் சென்றவன் கூட்டிக் கொண்டு வந்துவிட்டான்.

நெடுந்துாரம் பயணம் செய்து வந்த அலுப்பும், களைப்பும் குழைக்காதனிடம் தெரிந்தன. அலைந்து திரிந்து வந்தவன் முகத்தில் காணப்படும் ஒரு கருமை அவன் முகத்தில் பதிந்து ஒளி மங்கியிருந்தது. மேடையில் ஏறி அருகில் வந்து தளபதியை வணங்கினான் அவன். “நேரே அங்கிருந்துதான் வருகிறீர்களா? தளபதி கேட்டான். ஆம்’ என்பதற்கு அறிகுறியாகக் குழைக்காதனின் தலை அசைந்தது.அந்த இடத்தில் பொதுவாக எல்லோரும் காணும்படி நின்று கொண்டு குழைக்காதனிடம் ஒரு அந்தரங்கமான செய்தியைப் பற்றி விசாரிப்ட்து நாகரிகமற்ற செயலாகும் என்று தளபதிக்குத் தோன்றியது.

“குழைக்காதரே! கொஞ்சம் இப்படி என் பின்னால் வாருங்கள்” என்று குறிப்பாக மெதுவான குரலில் கூறிவிட்டு முரச மேடையின் பின்புறத்துப் படிகளில் இறங்கி ஆயுதச் சாலையை நோக்கி நடந்தான் வல்லாளதேவன். குழைக்காதனும் மெளனமாக அவனைப் பின்பற்றிப் படியிறங்கிச் சென்றான். அந்த இரண்டு பேர்கள் படியிறங்கி நடந்து செல்லும் திசையில் அங்கே கூடியிருந்த வீரர்களின் பல ஆயிரம் விழியிணைகளின் பார்வைகள் இலயித்துப் பதிந்தன. ஆயுதச்சாலையின் தனிமையான ஒரு மூலையில் வந்து தளபதியும் குழைக்காதனும் நின்றார்கள்.

“குழைக்காதரே! இரகசியமான செய்திகளைப் பொதுவான இடங்களில் பேசுவது காய்ந்த வைக்கோற்போரில் நெருப்பைப் பத்திரப்படுத்திவைக்க முயல்வதுபோல மடமையான செயல். சில சந்தர்ப்பங்கள் நம்மைத் தவறாகப் பயன்படுத்திக் கொண்டுவிடும். அதனால்தான் இவ்வளவு முன்னெச்சரிக்கை. சரி. நீங்கள் போன காரியம் என்ன ஆயிற்று? அதைப் பற்றிச் சொல்லுங்கள்.”

“ஆவது என்ன? இந்த விநாடி வரை எல்லாம் சரியாகத்தான் நடைபெற்றிருக்கின்றன. இனிமேல் எப்படியோ? காரியத்தை முடித்துக்கொண்டு வெற்றியை நம்முடையதாக்கிக் கொண்டு வரவேண்டிய திறமை தங்களுடைய திருத் தங்கையாரின் கைகளில் இருக்கிறது.”

“நீங்கள் எதுவரை உடன் சென்றிருந்தீர்கள்?”

"விழிஞம் வரை நானும் கூடப் போயிருந்தேன். அவர்களுடைய கப்பலில் தங்கள் தங்கையார் ஏறிக்கொள்கிற வரை மறைந்திருந்து பார்த்துவிட்டுத்தான் திரும்பினேன்.”

"தங்கள் கப்பலில் ஏறக்கூடாதென்று அவர்கள் மறுக்கவில்லையா?”

“மறுக்கவில்லையாவது? அவர்களாவது மறுக்காமல் விடுவதாவது மகாமண்டலேசுவரருக்கு மதியமைச்சன் போல் திரிகிறானே அந்தக் குட்டையன், அவன் தங்கையாருக்கு இடமி ல்லை என்று கடைசி வரையில் சாதித்து விட்டான்.”

“அடடே! அப்புறம் எப்படி இடம் கிடைத்தது?”

“நேர்மையாக இடம் கிடைக்கவே இல்லை. அவர்கள் பார்க்காத நேரத்தில் தங்கள் தங்கையார் கப்பலின் கீழ்த்தளத்தில் ஏறி ஒளிந்துகொண்டு விட்டார்கள். கப்பல் புறப்படுகிறவரை நான் மறைந்திருந்து பார்த்துவிட்டுத்தான் வந்தேன். விழிஞத்தில் புறப்பட்டவன் நேரே இங்கே குதிரையை விரட்டிக் கொண்டு வந்து சேர்ந்தேன்.”

“குழைக்காதரே! என் தங்கையின் ஆண் வேடத்தைப் பார்த்து மகிழும் வாய்ப்பு எனக்குக் கிடைக்காமற் போய் விட்டதே என்று இந்த நெருக்கடியான நிலையிலும் எனக்குச் சிறிது மனக்குறைவு உண்டாகத்தான் செய்கிறது” என்று சொல்லிவிட்டுச் சிரித்தான் தளபதி.

"மகாசேனாதிபதி அப்படி ஒரு குறையை உணரவேண்டியது அவசியம்தான். ஏனென்றால் தங்கள் உடன்பிறந்த தங்கையார் அவ்வளவு தத்ரூபமாக ஆண் வேடத்தோடு பொருத்திக் காட்சியளிக்கிறார்கள். அவர்கள் அந்த மாறு வேடத்தோடு அன்றிரவு அரண்மனைத் தோட்டத்தில் வந்து என் முன் நின்றபோது எனக்கே அடையாளம் புரியவில்லையே? மிக அருமையாக நடிக்கிறார்கள். விழிஞத்தில் அந்தக் குறுந்தடியனுக்கும் மகாமண்டலேசுவரரின் புதல்விக்கும் முன்னால் ஆண் வேடத்தோடு தங்கள் தங்கையார் சிரித்துப் பேசிய சீரைப் பார்த்து அடியேன் அயர்ந்து போனேன்.”

“என்ன செய்யலாம்? வேடம்போட்டு நடித்துப் பிறரை ஏமாற்றி வாழ்வதெல்லாம் அறத்தின் நோக்கத்தில் பாவம்தான். சில சமயங்களில் வாழ்வதற்காகப் பொய்யாக நடிக்க வேண்டியிருக்கிறது. நடிப்பதற்காகவே வாழ்கிற வாழ்வை மகாமண்டலேசுவர்ரைப் போன்றவர்களே வைத்துக் கொண்டிருக்கிறார்களே!”

"ஆ! தாங்கள் மகாமண்டலேசுவரரைப் பற்றிப் பேச்செடுத்ததும் தான் எனக்கு நினைவு வருகிறது; இப்போது அரண்மனையின் எல்லா அரசியல் காரியங்களும் அவர் பொறுப்பில்தான் நடக்கின்றன. அதங்கோட்டாசிரியர் பவழக்கனிவாயர் எல்லோரும் ஊருக்குப் போய்விட்டார்கள். மகாராணியாருடைய நினைவுகளெல்லாம் சமயத் தத்துவங்களில் திரும்பியிருக்கின்றன. கூற்றத் தலைவர்கள் இருந்தாலாவது ஏதாவது கேள்வி கேட்டு அவர் மண்டையில் குட்டிக் கொண்டே யிருப்பார்கள். அவர்களும் திரும்பி வந்து விட்டனர். கரவந்தபுரத்துக்குச் செய்தி அனுப்புவது, வடதிசைப்போர் நிலவரங்களைக் கண்காணிப்பது எல்லாம் மகாமண்டலேசுவரரே பார்த்துச் செய்கிறார்”

“செய்யட்டும்; நன்றாக அவரே முழுச் சர்வாதிகாரமும் நடத்தட்டும். நான் ஒருவன் அங்கேயிருந்தால் தனக்கு இடையூறாக இருக்குமென்றோ என்னவோ என்னையும் படை ஏற்பாடுகளைக் கவனி’ என்று இங்கே அனுப்பிவிட்டார். எதற்கெடுத்தாலும் மகாராணி கூட அவர் பக்கமே தலையசைக்கிறார். ஒவ்வொரு வீட்டிலும் நாய்களைக் காவலுக்கு மட்டும்தான் வைத்துக் கொள்வார்கள், குளிப்பாட்டி மஞ்சள் தடவி மரியாதை செலுத்துவதற்கு பசு மாட்டை வைத்திருப்பார்கள்.” தளபதி வல்லாளதேவன் தாழ்வு மனப்பான்மையோடு பேசினான்.

தகுதியாற் பெரியவர்கள் தங்களைவிடத் தாழ்ந்தவர்களிடம் பலவீனமான சமயங்களில் மனம் திறந்து தங்களைத் தாழ்வாகச் சொல்லிவிட நேர்ந்தால், அதைக் கேட்பவர் பதில் கூறாமல் அடக்கமாக இருந்துவிடுவதுதான் அழகு. ஆபத்துதவிகள் தலைவன் அந்த மாதிரி தளபதிக்குப் பதில் கூறாமல் அடக்கமாக நின்றான்.

சிறிது நேரம் அமைதியில் கழிந்தது. எதையோ சிந்தித்துக் கொண்டிருப்பதுபோல் நின்ற தளபதி திடீரென்று முகபாவத்தை மாற்றிக்கொண்டு, “பரவாயில்லை? மகா மண்டலேசுவரர் அரண்மனையிலிருந்தும், குழல்வாய்மொழி நாராயணன் சேந்தன் ஆகியோர் தெற்கேயிருந்தும் இடையாற்றுமங்கலத்துக்குத் திரும்பு முன் நீங்கள் அங்கே போய் ஒரு காரியத்தைச் சாதித்துக் கொண்டு வரவேண்டும். இடையாற்றுமங்கலம் தீவில் வசந்த மண்டபத்துக்கு அருகில் விருந்தினர் மாளிகைக்குக் கீழே ஒரு நிலவறை உண்டு. அதில் ஏராளமான ஆயுதங்களை மகாமண்டலேசுவரர் சேர்த்து வைத்திருக்கிறார். எப்படியாவது அவற்றை இங்கே கிளப்பிக் கொண்டு வந்துவிடவேண்டும். பரம இரகசியமாக இதைச் செய்யுங்கள். வேண்டிய ஆட்களையும் கூட்டிக் கொள்ளுங்கள். அறிவு தங்கியிருக்கிற இடத்தில் ஆயுதங்களும் தங்கவேண்டாம்” என்றான் தளபதி வல்லாளதேவன்.