பாண்டிமாதேவி/இரண்டாம் பாகம்/கூடல் இழைத்த குதூகலம்
24. கூடல் இழைத்த குதூகலம்
அன்றைக்கொரு நாள் செம்பவழத் தீவின் கடை வீதியில் அந்த மூன்று முரட்டு மனிதர்கள் பேசிக்கொண்டு போன பேச்சைக் கேட்டதிலிருந்து மதிவதனிக்குக் கவலையும் பயமும் அதிகமாயிருந்தன. அந்தப் பேச்சை ஒட்டுக் கேட்பதனால்
இப்படிப் புதுக் கவலைகளும், பயமும் ஏற்படும் என்று தெரிந்திருந்தால் முதலிலேயே ஒட்டுக் கேட்காமல் இருந்திருப்பாள்.
கொம்பு முளைக்காத குட்டிப் பருவத்துப் புள்ளிமான் போல் அவலமற்றுக் கவலையற்று அந்தத் தீவின் எழிலரசியாய்த் துள்ளித் திரியவேண்டிய அவளுக்குக் கவலை ஏன்? பயம் ஏன்? கலக்கம் ஏன்? எவனைப் பற்றிய நினைவுகள் அவள் நெஞ்சில் நிரந்தரமாக ஓடிக் கொண்டிருக்கின்றனவோ, அவனையே கொலை செய்வதற்கு முயல்கிறவர்களைப்போல் அவர்கள் பேசிக்கொண்டு சென்றதனால்தான் அவள் கவலைப் பட்டாள், பயந்தாள், கலங்கினாள். அந்த முரடர்களுடைய பேச்சை ஒட்டுக்கேட்ட நாளிலிருந்து அவளுக்கு ஒரு காரியமும் ஒடவில்லை.
ஐயோ! அந்த முரடர்களால் நடுக்கடலில் அவருடைய கப்பலுக்கு ஒரு துன்பமும் நேராமலிருக்க வேண்டுமே! அவர்கள் கையில் அகப்பட்டுக்கொண்டால் அவரைக் கொல்லாமல் விடமாட்டார்களே? அவருடைய விரோதிகள் எவரோ அவரைக் கொன்றுவிடுவதற்கென்றே அந்த முரட்டு ஆட்களைத் துாண்டிவிட்டு அனுப்பியிருக்கிறார்கள் போலிருக்கிறது. எல்லா நன்மையும் கொடுக்கும் . அந்த வலம்புரிச் சங்கு அவர் கையிலிருக்கிறவரை அவரை எந்தப் பகை என்ன செய்துவிட முடியும்? கடவுளின் கருணையும், அவரையே நினைத்துக் கொண்டிருக்கும் எனது நல்ல காலமும்தான் அவரைக் காப்பாற்ற வேண்டும் என்று தானே தனக்குள் சிந்தித்துச் சிந்தனைச் சூட்டில் - வெந்து கொண்டிருந்தாள் மதிவதனி, அதன் காரணமாக எந்தக் காரியத்தைச் செய்தாலும் சுயநினைவு இன்றிச் செய்துகொண்டிருந்தாள் அவள் சிந்தனை ஓரிடத்திலும், செயல் ஓரிடத்திலுமாகப் பைத்தியக்காரி போல் கடையிலும் வீட்டிலும், கடற்கரை மணற் குன்றுகளிலும் திரிந்து கொண்டிருந்தாள் அவள். அந்தத் தீவின் கரையோரத் தென்னை மரங்களிலிருந்து பறந்து செல்லும் கிளிகளின் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம், “என் மனத்துக்கும் இப்படி
வாணவெளியில் நீந்திக் கீழேயுள்ள கடலைக் கடந்து பறந்து செல்லும் ஆற்றல் இருந்தால் வேகமாகப் பறந்துபோய் அவருடைய தோளின் மீது உரிமையோடு உட்கார்ந்துகொண்டு, அந்த முரடர்கள் அவரைத் தேடிக் கொண்டிருக்கும் இரகசியத்தைக் காதோடு சொல்லி எச்சரித்து விடுவேன்” என்று எண்ணி ஏங்குவாள். அவளும் ஒரு கிளிதான். ஆனால் பறக்கும் கிளி இல்லையே, பேசிச் சிரித்து உணர்ந்து நடக்கும் பெண் கிளியாயிற்றே அவள்!
“தலையை அழுத்தும் பாரமான சுமைகளைத் தாங்கிக் கொண்டுக.டப் பொறுமையாக நீண்ட தூரம் நடந்துவிட முடிகிறது. ஆனால் கனமோ, பாரமோ உறைக்காத எண்ணங்களையும், ஆசைகளையும், ஏக்கங்களையும் சுமந்து கொண்டு மட்டும் பொறுமையாக வாழ முடிவதில்லையே? நினைவின் சுமைகளுக்கு அவ்வளவு கனமா? அவ்வளவு பாரமா? மதிவதனியால் தாங்கமுடியவில்லை.
சில நாட்களாகவே அவள் ஒரு மாதிரி ஏக்கம் பிடித்துப் போய்க் கிடப்பதை அவளுடைய தந்தையும், அத்தையும் உணர்ந்து கொண்டனர். அந்தப் பெண்ணின் முரண்டுக்கும் பிடிவாதத்துக்கும் பயந்து அவளிடம் ஒன்றும் கேட்கவில்லை அவர்கள். எதையாவது வற்புறுத்திக் கேட்டால் அழுது விடுவாளோ என்று பயம் அவர்களுக்கு.
அன்று நண்பகலில் மதிவதனியின் அத்தை ஒரு குடலை நிறைய அடுக்குமல்லிகைப் பூக்களைக் கொண்டுவந்து கொடுத்து, “மதிவதனி, இவற்றை உன் கையால் அழகாகத் தொடுத்துக் கொடு, பார்க்கலாம். இன்று மாலை நான் கடற்கரையிலுள்ள ஏழு கன்னிமார் கோவிலுக்குப் போய் நேர்த்திக் கடன் செலுத்தி வழிபட்டுவிட்டு வரவேண்டும். எல்லாம் உனக்கு நல்ல இடத்தில் நல்ல கொழுநன் வாய்த்துப் பெருவாழ்வு வாழவேண்டுமே என்பதற்காகத்தான்” என்று கூறி வேண்டிக்கொண்டாள்.
அத்தையின் வேண்டுகோளை மறுக்க முடியாமல் மதிவதனி உட்கார்ந்துகொண்டு நாரை எடுத்து மலரைத் தொடுக்க ஆரம்பித்தாள். கை மலர்களைத் தொடுத்துக்
பா.தே.30
கொண்டிருக்கும்போதே மனம் நின்ைவுகளைத் தொடுக்க ஆரம்பித்தது. மனம் ஏதாவதொன்றில் ஒருமையாகக் குவியும் போது அந்த ஒன்றைத் தவிர இரண்டாவதாகச் செய்யப்படும் காரியம் சரியாக நடைபெறாது. பராக்குப் பார்த்துக்கொண்டே சிந்தனையில் மூழ்கியிருந்த மதிவதனி பூக்களை எடுத்து முடிவதை மறந்து வெறும் நாரையே மாற்றி மாற்றிச் சுருக்கிட்டு முடிந்துகொண்டிருந்தாள். தற்செயலாக அந்தப் பக்கமாக வந்த அவளுடைய அத்தை, அவள் பூத்தொடுத்துக் கொண்டிருந்த அழகைப் பார்த்ததும் பொறுக்க முடியாமல் சிரித்துவிட்டாள். “நீ பூத்தொடுக்கிற சீரைப் பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது. ஏதோ நினைவில் எங்கேயோ கவனத்தை வைத்துக் கொண்டு வெறும் நாரை வளைத்து வளைத்து முடிந்து கொண்டிருக்கிறாயே அம்மா! நீ காளியம் செய்கிற அழகு மிகவும் நன்றாக இருக்கிறது; நானும் பார்த்துக்கொண்டே தான் இருக்கிறேன். நாலைந்து நாட்களாக நீ பித்துப் பிடித்தவளைப் போல் இருக்கிறாய். வேளா வேளைக்கு உண்ண வருவதில்லை. இந்த வயதான காலத்தில் அண்ணனுக்கு உதவியாகக் கடைக்குப் போக மாட்டேனென்கிறாய். வேலையற்றுப் போய்க் கடற்கரை மணல் மேடுகளிலெல்லாம் கால் கடுக்கச் சுற்றிக் கொண்டிருக்கிறாய். நீ எப்போது வீட்டுக்குத் திரும்பி வருவாய் எப்போது வெளியே போவாய் என்பதே எனக்கும் அண்ணனுக்கும் தெரியாமற் போய் விட்டது. உன்னைப் போல் பருவம் வந்த பெண்ணுக்கு இந்தப் போக்கு நல்லதில்லை.” . . . .
அவளைப்பற்றித் தன் மனத்திலிருந்த குறைகளை அவள் முன்பே சொல்லித் தீர்த்துவிட்டாள் அத்தை. -
பூக்களையே தொடாமல் தான் வெறும் நாரை முடிந்து கொண்டிருப்பதை உணர்ந்தபோது மதிவதனிக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. முதலில் ஐந்தாறு கண்ணிகள் பூ வைத்துத் தொடுத்திருந்தாள். அதன் பின்பு வெறும் நாரில்தான் வரிசையாக முடிச்சுக்கள் விழுந்திருந்தன. தப்பித்தவறி இது மாதிரி அத்தையின் வாயில் விழுந்துவிட்டால் நிறையப் பேச்சு வாங்கிக் கட்டிக் கொள்ளாமல் மீள முடியாதென்று அவளுக்குத் தெரியும்.
“ஏதோ தெரியாமல் செய்து விட்டேன் அத்தை கொஞ்சம் நினைவு தடுமாறி விட்டது. இன்னும் சிறிது நேரத்தில் எல்லாப் பூக்களையும் விரைவாகத் தொடுத்துக் கொடுத்து விடுகிறேன்” என்று முகத்தில் மலர்ச்சியை வர வழைத்துக் கொண்டு கூறினாள் மதிவதனி,
“கொஞ்சம் என்ன? சில நாட்களாகவே நீ முழுக்க முழுக்க நினைவு தடுமாறிப் போய்த்தானே திரிகிறாய்? அந்த வலம்புரிச் சங்கை விலைக்கு வாங்கிக் கொண்டுபோன இளைஞனை நீ இன்னும் மறக்கவில்லை போலிருக்கிறது. அவனை நினைத்துக்கொண்டுதான் நீ இவ்வளவு ஆட்டமும் போடுகிறாய். நானும் அண்ணனும் உன்னை எவ்வளவோ கண்டித்துப் பார்த்துவிட்டோம். நீ எங்கள் கண்டிப்பைக் கேட்டுத் திருந்துகிற பெண்ணாகத் தெரியவில்லை. நடக்கக் கூடிய காரியத்தையா நீ நினைக்கிறாய்? நீயும் உன் தந்தையும் சொல்வதிலிருந்து அந்த இளைஞன் பெரிய செல்வக் குடும்பத்துப் பிள்ளையாயிருக்க வேண்டுமென்று தெரிகிறது. தென் திசைக் கடலில் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் இந்தச் சிறு தீவில் உன்னைப்போல் ஒரு பெண்ணைச் சந்தித்ததை எப்போதோ மறந்து போயிருப்பான் அவன். அவனையே நினைத்துக் கொண்டு ஏங்கும் அசட்டு எண்ணங்களை இந்த விநாடியிலேயே விட்டுவிடு. நமக்கு எட்டாத பொருளை, நம்மால் எட்டி எடுக்க முடியாத உயரத்தில் இருக்கும் அழகை, நாம் நினைத்து உருகிப் பயனென்ன ? இரண்டு கைகளும் முடமாகிக் கால் நொண்டியான ஊமை ஒருவன் தனக்கு எதிரே உள்ள பாறையில் சுவையான ‘பசுவெண்ணெய் உருட்டி வைத்திருப்பதைப் பார்க்கிறான். வெயிலில் வெண்ணெய் உருகிப் பாறையில் வீணாகி வழிகிறது. அவனால் என்ன செய்ய முடியும்? தான் உண்ணக் கைகள் இல்லை; நடந்து செல்லக் கால்கள் இல்லை, பிறரைக் கூப்பிடலாமென்றாலோ வாய் ஊமை, சாத்தியமில்லாத ஆசைகளோடு போராடி என்ன நன்மை விளையப்போகிறது.பெண்னே? அந்த இளைஞனைப் பற்றிய ஆசையைத் தொலைத்துத் தலை முழுகிவிட்டு எப்போதும்போல் நீ பழைய மதிவதனியாக மாறிவிடு. நான் உன் முகத்தில் மலர்ச்சியைக் காணவேண்டும். உன் உதட்டில் சிரிப்பைக் காணவேண்டும். உன் வாயில் கலகலப்பு நிறைந்த பழைய குறும்புப் பேச்சைக் கேட்கவேண்டும். உன் நடையில் பழையதுள்ளலைக் காணவேண்டும். இன்றே இந்தக் கணமே நீ பழைய மதிவதனியாக மாறிவிடு. கடைக்குப்போ பழைய சுறுசுறுப்போடு விற்பனையைக் கவனி. அண்ணனுக்கு மகள், மகன் இரண்டாகவும் இருப்பவள் நீ ஒருத்திதான். இப்படிச் சோக நாடகம் நடித்து அண்ணனையும் என்னையும் வேதனைப்படுத்தாதே,”– அத்தை தன் உள்ளத்தின் உணர்ச்சிகளாகயிருந்த ஆத்திரம், வேதனை, ஆவல் எல்லாவற்றையும் அடக்க முடியாமல், அந்தப் பெண்ணின் முன்பு கொட்டித் தீர்த்து விட்டாள். அத்தையின் பேச்சுக்கு மதிவதனியிடமிருந்து பதில் வரவில்லை. முழங்காலைக் குத்தவைத்து அதன்மேல் முகத்தைப் புதைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள் அவள், மெல்லிய விசும்பல் ஒலி அத்தையின் செவிகளில் விழுந்தது.
“என்னடி, பெண்ணே? இதற்காகவா அழுகிறாய்? அழுகை வரும்படி நான் என்ன சொல்லிவிட்டேன் இப்போது?” என்று கேட்டுக்கொண்டே கீழே குனிந்து அவள் முகத்தை நிமிர்த்தினாள் அத்தை. அவளுடைய விழிகள் கண்ணிர்க் குளங்களாக மாறியிருந்தன. கண்களில் அரும்பிய கண்ணிர் அரும்புகள் செடிகளில் அரும்பி மலர்ந்த மலர்களில் உதிர்ந்தன.
“யாராவது இதற்காக அழுவார்களா? கோவிலுக்குக் கொண்டு போகவேண்டிய மலர்களின் தூய்மை கெடும்படி யாக இப்படி இவற்றின்மேல் கண்ணிரைச் சிந்துகிறாயே! நீ செய்கிற காரியம் உனக்கே நன்றாயிருந்தால் சரிதான்” என்று கடிந்துகொண்டே அவள் கூந்தலைக் கோதிவிட்டுச் சரி செய்தாள் அத்தை.
அந்தச் சமயத்தில் வெளியே சென்றிருந்த மதிவதனியின் தந்தை வீட்டுக்குள் நுழைந்தார்.
“மதிவதனி, எதற்காக அம்மா இப்படி உன் அத்தையிடம் அழுது முரண்டு பிடித்துக்கொண்டிருக்கிறாய்?” என்று அவர் கேட்டார்.
“அண்ணா! உங்கள் பெண்ணுக்கு நீங்கள்தான் சொல்ல வேண்டும். அவளுடைய நினைவுகளும், கனவுகளும் இப்போது இந்தத் தீவிலேயே இல்லை. முன்னைப்போல் சிரிக்காமல், பேசாமல், கலகலப்பாக இராமல் எப்போதும் அவனையே நினைத்துப் புழுங்கிக் கொண்டிருக்கிறாள். கடற்கரைக் கன்னிமார் கோயிலுக்குப் போவதற்காகப் பூத்தொடுக்கச் சொன்னேன். தொடுப்பதற்காக உட்கார்ந்தவள் சுய நினைவே இல்லாமல், பூவை மறந்து வெறும் நாரை முடிந்து கொண்டிருக்கிறாள். இப்படியெல்லாம் இருக்காதே. அவனை மறந்துவிட்டு முன்போல் இரு’ என்று கண்டித்தேன். அதற்குத்தான் இந்தப் பலமான அழுகை!”
தன் தங்கை கூறியதைக் கேட்டு மதிவதனியின் தந்தை சிரித்தார். “இந்த மாதிரி வயதுப்பெண்களை இத்தகைய அநுபவங்களிலிருந்து கண்டித்துமட்டும் திருத்திவிட முடியாது. தன்னை நினைக்காதவனைத் தான் நினைத்து ஏமாந்த பெண்களின் கதைகள் உலகத்தில் அதிகமாக இருக்கின்றன. அந்தக் கதைகளில் ஒன்றாக என் அருமைப் பெண்ணின் நினைவுகளும் ஆகிவிடக்கூடாதே என்பது தான் என்னுடைய கவலை. நினைப்பதை அடைவது ஒரு தவம்; ஒரு புனிதமான வேள்வி அது. நினைத்து நினைத்து அந்த நினைவுகளை உருவேற்றி வலுவேற்றி, எண்ணியதை அடைந்தே தீரும் ஆசைத் தவத்துக்குப் பிடிவாதம் நிறைய வேண்டும். அந்த அன்புமயமான தவத்தை விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டு செய்து வெல்லும் தெம்பு இதிகாச காலத்துப் பெண்களுக்கு இருந்தது. சீதைக்கும், பாஞ்சாலிக்கும், ஓரளவு சகுந்தலைக்கும் இருந்த அந்தத் தெம்பு செம்பவழத் தீவின் ஏழைப் பரதவனான என்னுடைய மகளுக்கு இருந்தால் அவளுடைய நல்வினைதான் அது. சீதையும் பாஞ்சாலியும் சகுந்தலையும் நினைத்தவர்களை அடைய மட்டும்தான் முடிந்தது. சாவித் திரியோ அவர்களினும் ஒருபடி மேலே போய்விட்டாள். தான் அடைந்த ஆடவனைத் தன் நினைவுத் தவத்தால் கூற்றுவனிடமிருந்தே மீட்க முடிந்தது அவளால் தெய்வீகக் காதலின் வெற்றிக்கு இத்தகைய நினைவு வன்மை
பெண்களுக்கு வேண்டும். சிறிய ஆசைகளில் மனம் வைத்துவிட்டால் நினைவுகளுக்கு ஆற்றலே உண்டாவதில்லை. நீயும் நானும் இவளைக் கண்டிப்பதை இன்றோடு விட்டுவிட வேண்டும். இவ்வளவு வயது வந்த பெண்ணைக் கண்டிப்பதும் அநாகரிகமானது. இவளுடைய நினைவுகளே இவளுக்கு விளைவு கற்பிக்கட்டுமென்று விட்டு விடுவது தான் நல்லது.” ஒன்றிலும் பட்டுக் கொள்ளாதவர்போல், தன் தங்கையிடம் கூறிய அவர் மதிவதனியின் பக்கமாகத் திரும்பி, “மதிவதனி! நீ ஏன் அழுகிறாய்? நீ இன்னும் குழந்தையில்லையே? தாயைத் தவிர வேறு நினைவில்லாதவரை பெண் பேதையாயிருக்கிறாள். தந்தை, உடன்பிறந்தோர், விளையாட்டுப் பொருள்-எல்லாவற்றையும் கடந்து தன்னைத் தவிர இன்னொரு ஆண்மகனை நினைக்கத் தொடங்கும்போது பேதை முழுமைபெற்ற பெண்ணாகி விடுகிறாள். இப்போது நீ ஒரு பெண். உன் நினைவுக்கு நீ ஓர் ஆண்மகனைத் தேடிக்கொண்டுவிட்டாய். அந்த நினைவுக்கு ஆற்றலைத் தேடி உறுதியாக்கு.அதுதான் நான் உனக்குக் கூறும் அறிவுரை. இனிமேல் நான் உன்னைக் கண்டிக்கப் போவதில்லை, பயமுறுத்தப்போவதில்லை. அந்த இளைஞன் உன்னை மறந்துவிடுவானென்று சொல்லிக் கலக்கமடையச் செய்யும் வழக்கத்தையும் இந்த விநாடியிலிருந்து நான் விட்டுவிடுகிறேன்” என்றார். “ . . . . - - -
தந்தையின் அந்தப் பேச்சைக் கேட்டவுடன் மதிவதனிக்கு உடல் சிலிர்த்தது. தை மாதத்து வைகறையில் கடலில் நீராடினதுபோல் இருந்தது.
“அப்பா!’ என்று உணர்ச்சி மேலிட்டுக் கூவிக்கொண்டே எழுந்து ஓடிவந்து அவர் காலடியில் சுருண்டு விழுந்தாள் அவள். “நினைவை உறுதியாக்கு நினைப்பதை அடைவது ஒரு தவம்” என்ற சொற்கள் அவள் செவிகளை விட்டு நீங்காமல் நித்திய ஒலியாகச் சுழன்றுகொண்டிருந்தன. தன் எண்ணத்தின் இலட்சியமான காதலில் வெற்றிபெற ஒரு புதிய கருவி கிடைத்துவிட்டது. அவனை அடைவதற்கு அவளுக்கு ஒரு புதிய உண்மையை அவள் தந்தை கூறிவிட்டார். . s'
“அப்பா ! இதிகாச காலத்துக்குப் பின்பும் நினைவைத் தவமாக்கி, நினைத்தவனை அடையும் இலட்சியக் காதலுக்கு உதாராணமாகச் செம்பவழத் தீவில் ஒரு பெண் பிறந்திருந்தாள் என்று என்னையும் எடுத்துக்காட்டாகக் கூறுவதற்குத் தகுந்தபடி நான் வாழ்ந்து காட்டிவிடப் போகிறேன். அப்பா! அப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்துவிட வேண்டுமென்ற பிடிவாதம் இப்போதே எனக்கு உண்டாகிவிட்டது” - அவருடைய பாதங்களில் தன் கண்ணிர் ஒழுக ஆவேசத்தோடு உறுதியான குரலில் கதறினாள் மதிவதனி. -
“எழுந்திரு, அம்மா! காலம் உன் நினைவுக்கு வெற்றியைக் கொடுக்கட்டும்” என்று அமைதியாகக் கூறி, அவள் பிடியிலிருந்து தம் பாதங்களை விடுவித்துக்கொண்டு வீட்டின் உட்பக்கமாக நடந்தார் அவர் மதிவதனியின் அத்தை ஒன்றும் சொல்லத் தோன்றாமல் சூனியத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றாள். - - - .
அன்றைக்கு மாலையில் தன் அத்தையோடு கடற்கரையிலுள்ள ஏழு கன்னிகைகளின் கோயிலுக்குப் போயிருந்தாள் மதிவதனி, ஏழு கன்னியர் கோவிலின் வாசலில் ஒரு பழைய புன்னை மரம் இருந்தது. மிகவும் வயதான மரம் அது. அதனடியில் மணற் பரப்பில் திருமணமாகாத கன்னிப் பெண்கள் தங்கள் மனத்திலுள்ள எண்ணம் நிறைவேறுமா என்றும், நினைவுக்கு இசைந்த கணவன் கிடைப்பானா என்றும் ‘கூடல் இழைத்துப் பார்ப்பது வழக்கம். கூடல் இழைத்துப் பார்த்தலாவது மணற்பரப்பில் கிழக்குத் திசைநோக்கி அமர்ந்து கொண்டு, இரண்டு கண்களையும் மூடி வழிபடும் தெய்வத்தை மனத்தில் தியானித்து, வலது கை ஆள் காட்டி விரலால் மணற்பரப்பில் குருட்டாம் போக்கில் ஒரு வட்டம் போடுவது. கோட்டைத் தொடங்கிய நுனியில் விலகாமல் ஒழுங்காக வந்து பொருந்தி வட்டம் முழுமையாக முடிவு பெற்றால், எண்ணிய காரியம் வெற்றிபெறும் என்று தீர்மானித்துக் கொள்ளலாம்.
அத்தைக்குத் தெரியாமல் புன்னை மரத்தடியில் கூடல் இழைத்துப் பார்த்துவிட வேண்டும்போல் ஆவல் குறுகுறுத்தது, மதிவதனிக்கு. வரிசையாக இருந்த ஏழு கன்னியரின் சிலைகளுக்கும் பூவணிந்துவிட்டு அத்தை கண்களை மூடித் தியானித்துக்கொண்டு நின்றபோது, மெல்ல வெளிப் பக்கமாக நழுவிப் புன்னை மரத்தடி மணற்பரப்புக்கு வந்தாள் அவள். அத்தை திரும்பி வந்து பார்த்துவிடப் போகிறாளே என்ற பயமும், வெட்கமும் பதற்றத்தை உண்டாக்கின. அவசரம் அவசரமாக அத்தை வரும் வழியை மிரண்டு திரும்பிப் பார்த்துக்கொண்டே மணற்பரப்பில் கிழக்கு நோக்கி உட்கார்ந்தாள். கண்களை மூடினாள். பளபளப்பான இமைத் தோல்களின் கரும் பசுமைச் சிறு நரம்புகள் மூடிய கண்களின் அழகைக் காட்டின. வலது கை விரல்கள் பயத்தால் நடுங்கின. உடல் வியர்த்தது. நெஞ்சு ஆவலால் வேகமாக அடித்துக்கொண்டது. வலது கை ஆள் காட்டி விரலால் வட்டத்தை மணலில் கீறிவிட்டுக் கண்களை ஆசையோடு திறந்து பார்த்தாள். என்ன ஆச்சரியம்? ஆரம்பித்த நுனியோடு கோடு சரியாகப் போய்ப் பொருந்தி வட்டம் ஒழுங்காக முடிந்திருந்தது. அந்த வட்டத்தை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கும்போதே தன் அன்புக்குரியவன் அன்று கப்பல் மேல் தளத்திலிருந்து ஊதிய சங்கின் ஒலி மறுபடியும் கேட்டதுபோல் ஒரு பிரமை ஏற்பட்டது அவளுக்கு. கூடல் கூடியதால் உண்டான குதுாகலத்தால் மதிவதனி அதையே பார்த்துப் பூரித்துக் கொண்டிருந்தபோது பின்னால் யாரோ சிரிக்கும் ஒலி கேட்டது. திரும்பிப் பார்த்தாள். அவளுடைய அத்தை நின்று கொண்டிருந்தாள். அவளுக்கு வெட்கம் தாங்க முடியவில்லை.