பாண்டிமாதேவி/இரண்டாம் பாகம்/கொடும்பாளூர்க் கழுமரத்தில் கோட்டாற்றான் குருதி
29. கொடும்பாளுர்க் கழுமரத்தில் கோட்டாற்றான் குருதி
கொடும்பாளுர்க் கோட்டைக்குள் அரண்மனைக் கூத்தரங்கத்தில் ஆடிக்கொண்டிருந்த தேவராட்டி பயங்கரமாக அலறிக்கொண்டே தன் கையிலிருந்த திரிசூலத்தை மான்கண் சாளரத்தை நோக்கிச் சுழற்றி எறிந்தபோது அந்தச் சாளரத்துக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருந்தவனைப் பிடிப்பதற்காக ஐந்து பேருடைய பத்துக் கால்கள் விரைந்து சென்றன. ஒடத் தொடங்கிய அந்தப் பத்துக் கால்கள் யாருடையவை என்று இங்கு சொல்லித்தான் தெரியவேண்டுமென்பதில்லை. இடையாற்றுமங்கலத்து மகாமண்டலேசுவரர் மாளிகையிலிருந்து தென்பாண்டி நாட்டு அரசுரிமைப் பொருள்கள் காணாமற் போய்விட்டன என்ற செய்தியைக் கொடும்பாளூர் மன்னன் வாயிலிருந்து கேட்டு வியந்து நின்றுகொண்டிருந்த சோழன் உள்பட மற்ற நான்கு பேரும் ஓடினார்கள்.
அந்த மான்கண் பலகணியின் மறுபுறம் கொடும்பாளுர் அரண்மனையின் சித்திரக்கூடம் அமைந்திருந்தது. கோனாட்டு அரச பரம்பரையின் வீரச் செயல்களை விளக்கும் அற்புதமான ஒவியங்கள் அந்தக் கூடத்துச் சுவர்களை நிறைத்துக் கொண்டிருந்தன. சித்திரக் கூடத்தின் பின்புறம் கோட்டை மதிற்கூவரை ஒட்டினாற்போல் பெரிய தோட்டம் இருந்தது. மதிற்கூவரின் உட்புறத்தைப் போலவே வெளிப்புறத்திலும் அகழிக் கரையை ஒட்டித் தென்னை மரங்கள் அடர்ந்து வளர்ந்திருந்தன.
ஒளிந்திருந்தவனைப் பிடிப்பதற்காகச் சித்திரக் கூடத்துக்குள் ஓடி வந்தவர்கள், நாற்புறமும் மூலைக்கொருவராகச் சிதறிப் பாய்ந்தனர். ஆனால் அங்கே ஒளிந்து கொண்டிருந்த ஆள் அவர்கள் வருவதற்குள், சித்திரக்கூடத்து எல்லையைக் கடந்து தோட்டத்துக்குள் புகுந்துவிட்டான் என்பது அவர்களுக்குத் தெரியாது. சித்திரக் கூடத்தின் மூலைமுடுக்குகளிலெல்லாம் தேடிப் பார்த்துவிட்டு ஓரளவு ஏமாற்றத்தோடு அவர்கள் தோட்டத்துக்குள் நுழைந்தபோது, “அதோ! அங்கே பாருங்கள்; மதில் சுவர்மேல் என்று ஒரு துள்ளுத்துள்ளிக்கொண்டே சுட்டிக் காட்டிக் கூச்சலிட்டான் கீழைப் பழுவூர்க் கண்டன் அமுதன். அந்தக் கணமே மற்ற நான்கு பேருடைய பார்வையும் நான்கு வில்களிலிருந்து ஒரே குறியை நோக்கிப்பாயும் அம்புகள்போல் அவன் சுட்டிக்காட்டிய திசையிற் போய்ப் பதிந்தன. அங்கே ஒரு மனிதன் மதில் மேலிருந்து சுவரை ஒட்டி வளர்ந்திருந்த அகழிக்கரைத் தென்னை மரம் ஒன்றின் வழியாக வெளிப்புறம் கீழே இறங்க முயற்சி செய்துகொண்டிருந்தான். அவனுடைய முதுகுப்புறம்தான் சித்திரக் கூடத்துக் கொல்லையில் நின்று கொண்டு பார்த்த அவர்களுக்குத் தெரிந்தது. முகம் தெரியவில்லை. உட்பக்கத்திலும் மதில் சுவர் அருகே அதே மாதிரி மற்றொரு தென்னை மரம் இருந்ததனால், அந்த ஆள் அதன் வழியாகத்தான் மதில் மேல் ஏறியிருக்க வேண்டுமென்று அவர்கள் அநுமானித்துக் கொண்டார்கள். மிக வேகமாகத் தென்னை மரங்களில் ஏறிப் பழக்கப்பட்டவனாக இருந்தாலொழிய அவ்வளவு விரைவில் மேலே ஏறி மதில் சுவரை அடைந்திருப்பது சாத்தியமில்லை.
“திருட்டு நாய்! மதில்மேலிருந்தே செத்துக் கீழே விழட்டும்!” என்று கடுங்கோபத்தோடு இரைந்து கத்திக் கொண்டே பாம்பு படமெடுத்து நெளிவதுபோல் இருந்த ஒரு சிறு குத்துவாளை இடையிலிருந்து உருவிக் குறிவைத்து வீசுவதற்கு ஓங்கினான் கொடும்பாளுர் மன்னன். சோழன் அருகிற் பாய்ந்து வந்து வாளை வீசுவதற்கு ஓங்கிய அவனது கையைப் பிடித்துக்கொண்டான்.
“பொறுங்கள்! நீங்கள் விவரம் தெரிந்த மனிதராக இருந்தால் இப்படிச் செய்யமாட்டீர்கள். திருட்டுத்தனமாக இங்கே அவன் எப்படி நுழைந்தான் என்பதையும் முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டுமானால், அவன் வந்த வழியே அவன் போக்கில் அவனை வெளியேறவிட்டுக் கடைசியில் பிடித்துக்கொண்டு உண்மை அறிய வேண்டும். கையில் அகப்பட்ட ஒரு காடையை (ஒரு வகைப் பறவை) வெளியே விட்டால் காட்டிலுள்ள காடைகளையெல்லாம் அதைக் கொண்டே பிடித்துவிடலாம். ஒசைப் படாமல் திரும்பி வாருங்கள். அவன் சுதந்திரமாகக் கவலையின்றித் தென்னைமரத்தின் வழியாக மறுபக்கம் அகழிக்கரையில் போய் இறங்கட்டும். நாம் அங்கே போய்க் காத்திருந்து அவனைப் பிடித்துக்கொள்ளலாம்” என்றான் சோழ மன்னன். எல்லோரும் உடனே அங்கிருந்து அகழிக்கரைக்கு விரைந்தனர்.
“கொடும்பாளூராரே! எனக்கு ஒரு சந்தேகம். இவ்வளவு வேகமாகத் தென்னை மரம் ஏறி இறங்கத் தெரிந்தவனாக இருந்தால் தென்னை மரங்கள் அதிகமாக இருக்கும் பகுதியைச் சேர்ந்தவனாக இருக்கவேண்டும். ஒருவேளை தென்பாண்டி நாட்டு நாஞ்சிற் பகுதியைச் சேர்நதவனாக இருக்கலாம்” என்று அகழிக்கரைக்குப் போகும்போது சோழன் கொடும்பாளூர் மன்னனிடம் சந்தேகம் தொனிக்கும் குரலில் மெதுவாகச் சொன்னான்.
“சந்தேகமே இல்லை! எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது” என்று கொடும்பாளுரானிடமிருந்து பதில் வந்தது.
அகழிக்கரைத் தென்னை மரத்திலிருந்து அவன் கீழே இறங்கவும் அவர்கள் ஐந்து பேரும் ஒடிப் போய்ச் சுற்றி வளைத்துக் கொள்ளவும் சரியாக இருந்தது. அவன் தப்பி ஒட முடியவில்லை. ஆ! இப்போது அவனுடைய முகத்தையும் முழு உருவத்தையும் நன்றாகப் பார்க்க முடிகிறது. இந்தக் கோணல் வாயையும், நீளமூக்கையும், கோமாளித்தனமான தோற்றத்தையும் பார்த்ததுமே நமக்கு இதற்கு முன்பே எங்கோ பார்த்திருக்கிறாற் போன்ற நினைவு வருகிறதல்லவா? ஆம்! இந்தக் கோமாளி ஏற்கெனவே நமக்கு அறிமுகமானவன்தான்.
வடதிசையில் ஒற்றறிவதற்கும், வேறு சில இரகசியக் காரியங்களுக்காகவும் மெய்க்காவற் படை வீரர்களை ஐம்பது பேர்களைத் தேர்ந்தெடுத்து மகாமண்டலேசுவரர் வடக்கே அனுப்பினாரல்லவா? அப்போது பொய் கூறுவதில் சிறந்தவனைத் தேர்ந்தெடுப்பதற்கு அவர் வைத்த சோதனையில் வெற்றிபெற்ற கோமாளிதான் இப்போது சிக்கிக்கொண்டு விழிக்கிறான்.
தன்னைச் சுற்றி நான்கு புறமும் ஓடமுடியாமல் எதிரிகளால் வளைத்துக் கொள்ளப்பட்ட நிலையில் அன்று தாங்கள் புறப்பட்டபோது வழியனுப்பிய மகா மண்டலேசுவரரின் சில சொற்களை அவனுடைய அகச்செவிகள் மானசீகமாகக்
"அகப்பட்டுக் கொண்டால் சதையைத் துண்டு துண்டாக்கினாலும் உண்மைகளைச் சொல்லி நாட்டைக் காட்டிக் கொடுக்கும் துரோகத்தைச் செய்யக்கூடாது. உயிர், உடல், பொருள் எதையும் எந்த வினாடியும் இழக்கத் தயாராயிருக்க வேண்டும்-" இந்தக் கணிரென்ற குரலோடு அந்தக் கம்பீமான முகம் தோன்றி எதிரிகளிடையே மாட்டிக் கொண்ட அவன் மனத்துக்கு உறுதியின் அவசியத்தை நினைப்பூட்டி வற்புறுத்தின.
“அடே! அற்பப் பதரே! இந்தக் கொடும்பாளுர்க் கோட்டைக்குள் புகுந்து ஒற்றறிய முயன்றவர்கள் எவரையும் இதுவரையில் நான் உயிரோடு திரும்ப விட்டதில்லை. நீ யார், எங்கிருந்து வந்தாய், என்பதையெல்லாம் மரியாதையாகச் சொல்லிவிடு. என்னுடைய கோட்டைக் கழுமரத்துக்கு நீண்ட நாட்களாக இரத்தப் பசி ஏற்பட்டிருக்கிறது. அதைத் தணிக்கத்தான் நீ வந்து சேர்ந்திருக்கிறாய்” என்று தன் இரும்புப் பிடியில் அகப்பட்டவனின் இரண்டு கைகளையும் இறுக்கிப் பிடித்துக்கொண்டு இரைந்தான் கொடும்பாளுர் மன்னன். ஆனால் அகப்பட்டவனோ முற்றிலும் ஊமையாக மாறிவிட்டான். அன்றிரவு நெடுநேரம் வரையில் அவனை ஓரிடத்தில் கட்டிப் போட்டு என்னென்னவோ சித்திர வதைகளெல்லாம் செய்தார்கள். அவன் பேசவே இல்லை. கடைசியாகக் கொடும்பாளுரான் ஒரு பயங்கரமான கேள்வி கேட்டான் “அடே! ஊமைத் தடியா நாளைக் காலையில் இரத்தப் பசியெடுத்துக் காய்ந்து உலர்ந்து கிடக்கும் இந்தக் கோட்டையின் கழுமரத்தில் நீ உன் முடிவைக் காண வேண்டுமென்றுதான் விரும்புகிறாயா?”
“செய்யுங்கள் அப்படியே!”- எல்லோரும் ஆச்சரியப்படுமாறு அதுவரை பேசாமல் இருந்த அவன் இந்த இரண்டே வார்த்தைகளை மட்டும் முகத்தில் உறுதி ஒளிர உரக்கப் பேசிவிட்டு மீண்டும் வாய் மூடிக்கொண்டு ஊமையானான். அவனிடமிருந்து உண்மையைக் கறக்கும் முயற்சியில் அவர்கள் ஐந்து பேருமே தோற்றுப் போனார்கள். கொடும்பாளுரான் பயமுறுத்தி மிரட்டினான். சோழன் நயமாகப் பேசி அரட்டினான். கண்டன் அமுதனும், பரதுTருடையானும் அரகுருடையானும் அடியடியென்று கைத்திணவு தீர அடித்தார்கள். பார்ப்பதற்குக் கோமாளி போல் இருந்த அந்த ஒற்றனோ தன் கொள்கையில் தளராமல் திடமாக இருந்தான்.
கோட்டைக்குள் ஏறிக் குதிக்க வசதியாக உள்ளும் புறமும் வளர்ந்திருந்த அந்த இரண்டு தென்னை மரங்களையும் இரவோடிரவாக வெட்டிச் சாய்க்குமாறு தன் ஆட்களுக்கு உத்தரவு போட்டான் கொடும்பாளுர் மன்னன். மறுநாள் வைகறையில் கீழ்வானில் செம்மை படர்வதற்கு முன்னால் கொடும்பாளூர்க் கோட்டைக் கழுமரத்தில் செம்மை படர்ந்துவிட்டது. கோட்டாற்றுப் படைத்தளத்தில் வீரனாக உருவாகி அரண்மனையில் மெய்க் காவலனாகப் பணியாற்றிய தென்பாண்டி நாட்டு வீரன் ஒருவனின் குருதி அந்தக் கழுமரத்தை நனைத்துச் செந்நிறம் பூசிவிட்டது.