பாண்டிமாதேவி/இரண்டாம் பாகம்/சதி உருவாகிறது
21. சதி உருவாகிறது
கொடும்பாளுர் அரச மாளிகையின் ஒரு புறத்தே தனியாக அமர்ந்து, பல செய்திகளையும் பேசியபின் வடதிசையரசர்கள் வாளை உருவி நீட்டிச் சூளுரை செய்து கொண்டிருந்த சமயத்தில் அந்த வீரன் வந்து அப்படிக் கூறியது பரபரப்பை உண்டாக்கிவிட்டது.
“அரசே! அவசரமாக ஓர் ஒற்றன் தேடிக்கொண்டு வந்திருக்கிறான். அவனை இங்கே அனுப்பலாமா?” என்று சோழனிடம் மட்டும்தான் கேட்டுத் தெரிந்துகொண்டு போக வந்தான் அவன். கொடும்பாளுர் மன்னன் தன் வாள் நுனியால் அடித்துத் தள்ளிய வண்டு வந்தவன் முகத்தில் போய் விழுந்ததனால் அவன் ‘ என்னவோ, ஏதோ என்று எண்ணி ஒரு கணம் பொறி கலங்கிப் போய்விட்டான்.
“ஒற்றன் எங்கிருந்து வந்திருக்கிறானாம்?” என்று சோழன் கேட்ட கேள்விக்குத் தன்னைச் சமாளித்துக் கொண்டு மறுமொழி சொல்லச் சிறிது நேரம் பிடித்தது அவனுக்கு.
“அந்த ஒற்றனை இங்கேயே அனுப்பிவை” என்று வந்தவனுக்குக் கூறி அனுப்பினான் சோழன். ஒற்றன் கொண்டு வரும் செய்தி என்னவாக இருக்குமோ என்ற பரபரப்பு ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டது. ஒவ்வொருவருடைய கண்களும் தங்கள் முகத்தைத் தவிர மற்ற நான்கு பேருடைய முகங்களையும் பார்ப்பதில் ஆவல் காட்டின. எல்லோரும் எல்லோரையும் பார்த்துவிட முயல்கின்ற அந்த நிலை ஒருவர் மனத்தையும், உணர்ச்சியையும் அறிய முற்படுவதில் மற்றவருக்கு எவ்வளவு துடிப்பு இருக்கிறது என்பதைக் காட்டியது. அந்தத் துடிப்பின் வேகத்துக்கு உச்சநிலை உண்டாக்குகிறவனைப் போல் ஒற்றன் அவர்களுக்கு முன்னால் வந்து பணிவாக வணங்கியபடியே நின்றான்.
இப்போது எல்லோர் கண்களும் ஒற்றன் முகத்தை ஊடுருவின. சோழன் உரிமையையும், அதிகாரம் செய்யும் ஆற்றலையும் காட்டும் பாவனையில், “என்ன செய்தி கொண்டு வந்தாய்? விரைவில் சொல். எங்கள் ஆவலை வளர்க்காதே” என்று ஒற்றனை அதட்டினான். நடுங்கும் குரலில் ஒற்றன் கூறத் தொடங்கினான்.
“வேந்தர் வேந்தே! தென்பாண்டி நாட்டின் வடக்கு எல்லைப் பகுதிகளில் முன்பு போல் இப்போது எங்களால் கலவரமும், குழப்பமும் செய்யமுடியவில்லை. கரவந்தபுரத்து வீரர்கள் எல்லைப்புறப் பகுதிகளில் விழிப்புடன் காத்து நிற்கிறார்கள். முத்துக்குளிக்கும் துறையைச் சுற்றித் தேவையான படை வீரர்களைக் காவல் வைத்துக்கொண்டு, முத்துக்குளிப்பைத் தொடர்ந்து நடத்துகிறார்கள். நாம் படையெடுக்கப் போகிறோம் என்ற செய்தியைப் பரவ விட்டபோது தொடக்கத்தில் அங்கேயிருந்த பரபரப்பு இப்போது இல்லை. மகாமண்டலேசுவரரான இடையாற்று மங்கலம் நம்பி அரண்மனையிலே வந்து தங்கியிருந்து எல்லாக் காரியங்களையும் தம்முடைய நேரடி மேற்பார்வையில் செய்கின்றாராம். போர் நேரிட்டால் ஈழ நாட்டுப் படைகளும், சேர நாட்டுப் படைகளும் தென்பாண்டி நாட்டுக்கு உதவியாக வந்து சேர்ந்து கொள்ளலாமென்று ஒரு தகவல் காதில் விழுகிறது. இதோ அந்தச் செய்திக்கு ஆதாரமாக ஓர் ஒலையும் கைப்பற்றினோம்.” என்று சொல்லிக் கொண்டே, தான் கொணர்ந்திருந்த ஒலையை எடுத்துக் கொடுத்தான் ஒற்றன்.
சோழன் அதை வாங்கி விரித்தான். மற்ற நால்வரும் ஓடி வந்து அவனைச் சூழ்ந்து கொண்டார்கள். அந்தத் திருமுகவோலை இடையாற்றுமங்கலம், நம்பியால் கரவந்த, புரத்துச் சிற்றரசனுக்கு அனுப்பப்பட்டதாகும். மிகமிக முக்கியமான இரகசிய ஒலை என்பதைக் காட்டும் அரசாங்க இலச்சினைகளெல்லாம் அதில் இருந்தன. வடதிசையரசர் படையெடுப்பு நேர்ந்தாலும் அதை நினைத்து அதிகம் கவலை கொள்ள வேண்டிய அவசியிமில்லையென்றும் ஈழப் பெரும் படையும், மலைநாட்டுச் சேரர் படையும் தங்களுக்கு உதவி புரியும் என்றும் மகாமண்டலேசுவரர் கரவந்தபுரத்துப் பெரும்பெயர்ச்சாத்தனுக்குப் பரம இரகசிமாக எழுதி யிருந்தார் அந்த ஒலையை.
“கரவந்தபுரத்துத் தூதனிடமிருந்து கைப்பற்றியதென்று முன்பே ஒரு செய்தித் திருமுகத்தை நம் ஆட்கள் அனுப்பியிருந்தார்கள். அதில் கண்ட செய்திகளுக்கும், இதில் காணும் செய்திகளுக்கும் முழு அளவில் முரண்பாடு இருக்கிறதே? நாம் படையெடுக்கப் போகிறோமென்ற செய்தியைக் கேட்டு அவர்கள் பீதியும் பரபரப்பும் அடைந்திருப்பதை அந்த ஒலையிலிருந்து அநுமானித்தோம், ஆனால் இப்போது கிடைத்திருக்கும் இந்த ஒலையிலோ போரைப் பற்றியே கவலைப்படாமல் பாராமுகமாக இருப்பது போலத் தெரிகிறது. இதன் மர்மம் என்னவாக இருக்கும்?"
சோழ கோப்பரகேசரி பராந்தகன் அந்த ஒலையைப் படித்து முகத்தில் சிந்தனைக் குறியுடன் மற்றவர்களைப் பார்த்து இப்படிக் கேட்டான்.
“எனக்கு ஒரு சந்தேகம்: இவ்வளவு அந்தரங்கமான அரசாங்கச் செய்தி அடங்கிய திருமுகத்தை நம் ஒற்றர் கையில் சிக்கிவிடுகிற அளவு சாதாரணமான முறையில் மகா மண்டலேசுவரர் எப்படிக் கொடுத்தனுப்பினார்? நாம் சிந்திக்க வேண்டிய இடம் இதுதான்!” என்று கொடும்பாளுரான் தன் சந்தேகத்தைத் தெரிவித்தான். உடனே ஒற்றன் குறுக்கிட்டுப் பதில் சொன்னான். — “அரசே! முன்பு கைப்பற்றிய திருமுகத்தையாவது அதிகம் சிரமப்பட்டு அந்தத் தூதனைப் பாழ்மண்டபத்து இருளில் நடுக்காட்டில் அடித்துப் போட்டு விட்டுக் கைப்பற்றினோம். ஆனால் இரண்டாவது திருமுகத்தைக் கொண்டு வந்த தூதன் சரியான பயந்தான் கொள்ளிப் பயல் போலிருக்கிறது. நடுவழியில் நாங்கள் அவனுடைய குதிரையை மறித்துக்கொண்டதுமே, 'ஐயோ! என்னை விட்டுவிடுங்கள். ஒன்றும் செய்யாதீர்கள். நான் என்னிடம் இருக்கும் அரசாங்க ஒலையைக் கொடுத்து விடுகிறேன்’ என்று அவனாகவே ஒலையை எடுத்துக் கொடுத்துவிட்டு ஓடிப்போய் விட்டான்.”
“யார் யார் சேர்ந்துகொண்டு அவனை வழி மறித்தீர்கள்? எந்த இடத்தில் வழி மறித்தீர்கள்?”—கொடும்பாளுரான் அந்த ஒற்றனைக் குறுக்குக் கேள்வி கேட்டு மடக்கினான்.
“கரவந்தபுரத்துக்கும் அரண்மனைக்கும் செய்தித் தொடர்பு தொடங்கிய நாளிலிருந்து நம் ஆட்களாகிய செம்பியன், இரும்பொறை, முத்தரையன் ஆகியோரும் நானும் கரவந்தபுரம், கொற்கை ஆகிய பகுதிகளிலும் இவற்றுக்கு நடுவழியிலுள்ள வனாந்தரப் பிரேதசங்களிலும் ஓயாமல் சுற்றிக் கொண்டே இருக்கிறோம். தெற்கேயிருந்து கரவந்தபுரத்துக்கு வரும் வழியில் மேற்கு மலைச் சரிவிலுள்ள காடுகள் தான் நம் திட்டங்களை மறைந்திருந்து செய்ய ஏற்ற இடமென்று தீர்மானித்துக்கொண்டு பெரும் பகுதி நேரம் அங்கேயே இருக்கிறோம். நம்முடைய மற்ற ஆட்கள் பொதியமலைப் பகுதிகளிலும் பொருநைநதிக் கரையோரங்களிலுள்ள சிற்றுார்களிலும் தனித்தனிக் குழுவாகப் பிரிந்து மறைந்திருக்கிறார்கள்.”
“போதும்! நீ போய் வெளியே இரு. நாங்கள் மறுபடியும் கூப்பிட்டு அனுப்பினால் மட்டும் உள்ளே வா.”
சோழனுடைய குரல் கடுமையாகவும், கண்டிப்பாகவும் இருந்தது. அந்த ஒற்றன் வணங்கிவிட்டு, அங்கிருந்து வெளியேறிச் சென்றான். அவர்கள் ஐந்து பேரும் தனிமையில் மறுபடியும் ஒன்றுபட்டுச் சிந்தனையில் ஆழ்ந்தார்கள். சற்று முன் வீராவேசமாக வாட்களை உருவி உயர்த்திச் சபதமும், உடன்படிக்கையும் செய்துகொண்டபோது இருந்த வீறாப்பு இப்போது அவர்களிடம் இல்லை. சோழன் கேட்டான்: “கொடும்பாளுர் மன்னரே! உங்களுக்கு என்ன தோன்றுகிறது? இலங்கை மன்னனும், சேரனும் அவர்களுக்குப் படை உதவி செய்வார்களென்று நம்புகிறீர்களா?”
"நம்பாமல் எப்படி இருக்க முடியும்? குமார பாண்டியனுக்குச் சேரன் தாய்வழிப் பாட்டன் முறையினன், ஈழநாட்டுக் காசிபன் குமாரபாண்டியனைத் தன் உயிரினும் இனிய நண்பனாகக் கருதி வருகிறான். இராசசிம்மனும் காசிப மன்னனுக்கும் இந்தக் கெழுதகைமை நட்பு எப்போது, எதன் மூலம் ஏற்பட்டதென்றே தெரியவில்லை. தென்பாண்டி நாட்டு அரசியல் சூழ்நிலைகளில் துன்பங்களும், தோல்விகளும் ஏற்படும் போதெல்லாம் இராசசிம்மனைத் தன்னிடம் வரவழைத்து இருக்கச் செய்து கொள்கிறான் ஈழ நாட்டு மன்னன். ஈழ மண்டலப் பெரும் படையின் தலைவனாகிய சக்கசேனாபதி ஒரு பழம் புலி, கடற்போரிலும் தரைப்போரிலும் பலமுறை வெற்றி பெற்ற அநுபவமுள்ளவன். ஆகவே இவர்கள் எல்லோரும் ஒன்றுசேருவதாயிருந்தால் அந்த ஒற்றுமையின் விளைவைப் பற்றி நாம் சிந்தித்தே ஆக வேண்டியிருக்கிறது” என்று மற்ற நான்கு பேர் முகங்களையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டே சொன்னான் கொடும்பாளூர் மன்னன்.
“இந்த ஒற்றுமையே ஏற்பட முடியாதபடி இதைத் தகர்ப்பதற்கு நாம் முயற்சி செய்தால் என்ன?”— அரசூருடையானின் கேள்வி இது.
“நமக்குள் நம் நன்மைக்காக ஒற்றுமையாக இருக்கவேண்டு மென்று நினைக்கிற ஒவ்வொரு கூட்டமும், ஒவ்வொரு இனமும், அடுத்தவர்கள் அப்படி ஒற்றுமையாக இருக்க விடாமல் செய்யவே முயல்கிறது. வடக்கே நமக்குள் பெருங் கூட்டணி ஒன்று அமைத்து நாம் உடன்படிக்கை செய்து கொள்கிற மாதிரி தெற்கேயும் செய்ய நினைப்பார்கள் அல்லவா?” என்று குறும்புத்தனமாக–ஆனால் கோபத்தோடு–மறுமொழி சொன்னான் கீழைப் பழுவூர்க் கண்டன் அமுதன்.
“எனக்கென்னவோ இப்படித் தோன்றுகிறது; தெற்கே அவர்கள் மூவரும் ஒன்றுபடுவதால் படைப்பலம் பெருகினாலும் அதைப்பற்றி நாம் கவலைகொள்ள வேண்டியது இல்லை. நம் ஐவருடைய உடன்படிக்கையும், ஒற்றுமையும் சாதிக்கிறதைவிட அவர்கள் அதிகமாகச் சாதித்துவிட முடியாது!” என்று பரதூருடையானின் கருத்து வெளிப்பட்டது.
“யார் என்ன வேண்டுமானாலும் கூறுங்கள். முன்பு உறையூரில் நடந்த மந்திராலோசனைக் கூட்டத்தில் நான் கூறி ஏற்பாடு செய்த திட்டப்படி எல்லாம் நடந்திருந்தால் இப்போது இப்படியெல்லாம் நடந்திருக்காது. இந்தப் புதிய கவலைகளும் கிளம்பியிருக்க வழியில்லை” என்று சிறிது படபடப்போடு பேசிய கொடும்பாளூர் மன்னனைச் சோழன் கையமர்த்தி நிறுத்தினான். “நாம் என்ன செய்ய முடியும்? உங்கள் திட்டத்தை அப்படியே ஏற்றுக்கொண்டு குமார பாண்டியனையும், மகாராணியையும், ஒழித்து விடுவதற்கு ஆட்களை அனுப்பினோம். மகாராணியைக் கொலை செய்யும் முயற்சியும், இடையாற்றுமங்கலம் நம்பியை நம்மவராக ஆக்கிக் கொள்ளலாம் என்ற எண்ணமும் சாத்தியமில்லை என்று ஆகிவிட்டது. உங்கள் திட்டத்தில் ஒரே ஓர் அம்சத்தைப்பற்றிய முடிவுதான் இன்னும் தெரியவில்லை, அதாவது குமாரபாண்டியனைக் கொல்வதற்காகத் தேடிச் சென்றவர்கள் இன்னும் திரும்பி வரவில்லை. அவர்களும் திரும்பி வந்துவிட்டால் உங்கள் திட்டம் முழு வெற்றியா, அல்லது முழுத் தோல்வியா என்பது தெரிந்துவிடும்” என்று சோழன் விவரமாகப் பதில் கூறியபின்பே கொடும்பாளுரானின் படபடப்பு அடங்கியது. அப்படியிருந்தும் அவன் விட்டுக்கொடுக்காமல் பேசினான்:—“என் திட்டம் தோல்வியா, வெற்றியா என்பதற்காக இங்கு வாதிடுகிற நோக்கம் எனக்கு இல்லை. நம்முடைய கனவுகள் விரைவில் நனவாகவேண்டும் என்பதற்காகத்தான் அந்தத் திட்டத்தைக்கூடச் சொன்னேன். இளவரசன் இராசசிம்மனும், மகாராணி வானவன்மாதேவியும் உயிரோடு இருக்கிறவரை சேரர் படை உதவி, இலங்கைப் படை உதவி முதலிய உதவிகளெல்லாம் தென்பாண்டி நாட்டுக்குக் கிடைத்தே தீரும். பாண்டிய மரபின் எஞ்சிய இரு உயிர்களான மகாராணியும், இளவரசனும் அழிந்து போய்விட்டால் அதன் பின்னர் மகாமண்டலேசுவரருக்காகவோ, தளபதி வல்லாள தேவனுக்காகவோ, கரவந்தபுரத்தானுக்காகவோ யாரும் படை உதவி செய்யமாட்டார்கள். உதவியற்ற அந்தச் சூழ்நிலையில் மிக எளிதாகத் தென்பாண்டி நாட்டை நாம் கைப்பற்றிவிடலாம். அதற்காகத்தான் அந்தத் திட்டத்தையே அப்போது நான் கூறினேன்.”
“இப்போதும் காரியம் ஒன்றும் கைமீறிப் போய்விடவில்லை. இராசசிம்மனைத் தேடிச் சென்ற நம் ஆட்கள் காரியத்தை முடித்துவிட்டு வந்தால் எல்லாம் சரியாகிவிடும். இராசசிம்மனே இறந்தபின் தென்பாண்டி நாட்டுக்கு எவன் படை உதவி செய்யப்போகிறான்?" என்று கூறிய அரசூருடையானை வன்மையாக எதிர்த்துப் பேசினான் கண்டன் அமுதன். “அரசூருடைய சென்னிப் பேரரையரே நீங்கள் இப்போது போடுகிற கணக்குத்தான் தப்புக் கணக்கு இராசசிம்மன் இருப்பதால் எவ்வளவு கெடுதலோ அதைப்போல் நான்கு மடங்கு கெடுதல் அவன் இறப்பதால் ஏற்படும். அவன் உயிருக்குயிராகப் பழகும் இலங்கைக் காசிபனும், பாட்டனாகிய சேரனும் அவனுடைய சாவுக்கு வட திசையரசராகிய நாம் காரணமாயிருந்தோமென்று அறிந்துகொள்ள நேர்ந்தால் எவ்வளவு கொதிப்படைவார்கள் என்று நினைத்துப் பாருங்கள்! அந்தக் கொதிப்பின் பயன் யார் தலையில் விடியுமென்று நீங்கள் சிறிதாவது சிந்தித்தீர்களா?"— கண்டன் அமுதனுடைய பேச்சை ஆதரிப்பவன்போல் சோழனும் தலையாட்டினான்.
“கீழைப் பழுவூரார் சொல்வதையும் நாம் சிந்திக்கத்தான் வேண்டும். இப்போதிருக்கிற சூழ்நிலையை மட்டும் வைத்துக் கொண்டு இராசசிம்மனுடைய பெருமையை நாம் கேவலமாக மதிப்பிட்டு விடுவதற்கு இல்லை. இப்போதிருக்கிறதைவிட இன்னும் இளைஞனாயிருந்த அந்தக் காலத்திலேயே வைப்பூரிலும், நாவற்பதியிலும் நடந்த இரண்டு பெரிய போர்களில் இராசசிம்மன் என்னைத் தோற்கச் செய்திருக்கிறான். உவப்பிலிமங்கலத்தில் நடந்த போரில் நம் எல்லோரையுமே வென்றிருக்கிறான். இதோ இன்றைக்கு நம்மிடையே இவ்வளவு வீரமாகப் பேசுகிறாரே, இந்தக் கொடும்பாளுர் மன்னரையே பாண்டிநாட்டுப் படைகள் ஓட ஓட விரட்டியிருக்கின்றன. அதை அவரும் மறந்திருக்க மாட்டாரென்றே நினைக்கிறேன்: இப்படிச் சொல்லியவாறே விஷமத்தனமாக நகைத்துகொண்டே கொடும்பாளுரானின் முகத்தைப் பார்த்தான் சோழன். அந்த முகத்தில் எள்ளும் கொள்ளும் அள்ளித்துவினால் பொரிந்து வெடிக்கும்போலிருந்தது. அவ்வளவு ஆத்திரம் கனன்று கொண்டிருந்தது.
“தஞ்சைப் பெருமன்னர் அவர்கள் இன்னொரு போரைக் கூற மறந்துவிட்டார்கள். வஞ்சிமாநகரத்தில் நடந்த மாபெரும் போரில் இராசசிம்மன் தன் பாட்டனுக்கு உதவி செய்து வாகை சூடியிருக்கிறான். கடைசியாக அவன் நம்மிடம் ஒருமுறை மதுரையில் தோற்று, நாட்டின் ஒரு சிறு பகுதியை இழந்து விட்டிருப்பதனால் பலத்தைக் குறைவாக மதிக்கக் கூடாது” என்று மேலும் தன் கருத்தை வற்புறுத்தினான் கீழைப் பழுவூர்ச் சிற்றரசன்.
அவர்கள் இவ்வாறு பேசிக்கொண்டு அமர்ந்திருந்த போது வாயிற் பக்கம் தெரிகிறாற் போன்ற இடத்தில் அமர்ந்திருந்த அரசூருடையான் திடீரென்று, “ஆ! அதோ நல்ல சமயத்தில் அவர்களே வந்துவிட்டார்கள்!” என்று வியப்புடன் கூறிக் கொண்டே வாசற் பக்கம் கையைக் காட்டினான்.