பாண்டிமாதேவி/இரண்டாம் பாகம்/சுசீந்திரம் கைமுக்குத் தண்டனை
13. சுசீந்திரம் கைமுக்குத் தண்டனை
குணவீரபண்டிதர் வந்து உரையாடிவிட்டுப்போன மறுநாள் காலை மகாராணி வானவன் மாதேவிக்கு அரண்மனையில் இருப்புக் கொள்ளவில்லை. அரசபோக ஆடம்பரங்களின் நடுவே எல்லோரும் வணங்கத்தக்க நிலையில் இருந்தும் உள்ளத்தின் ஏதோ ஒரு பகுதி நிறையாமலே இருந்து கொண்டிருந்தது. நிறைந்த வசதிகள் நிறையாத நெஞ்சம், உயர்ந்த எதிர்கால நினைவுகள், உயராத நிகழ்காலச் சூழ்நிலை இப்படித் தவித்துக்கொண்டிருந்தது அந்தப் பேருள்ளம். அந்தத் தவிப்பை மாற்ற விலாசினியும், பகவதியும் உடன் இருந்தது எவ்வளவோ ஆறுதலாக இருந்தது. அந்த ஒரே ஆறுதலும் இப்போது இல்லை.
அன்று விடிந்ததும் வானவன்மாதேவிக்கு விலாசினி திடீரென்று தந்தையோடு ஊருக்குச் சென்றுவிட்ட செய்தி தெரிந்தது. பகவதியாவது அரண்மனையில் இருப்பாள் என்று எண்ணி அவளை அழைத்துவரச்சொல்லி வண்ணமகளை அனுப்பினார் மகாராணி, பகவதி அரண்மனை எல்லையிலேயே காணப்படவில்லை என்று அறிந்ததும் அவருக்குப் பயமும் கவலையும் உண்டாயிற்று. புவனமோகினியின் மூலம் அந்தச்செய்தியை மகாமண்ட லேசுவரருக்குச் சொல்லி அனுப்பினார்.
கோட்டாற்றுத் துறவி எழுதிக் கொடுத்துவிட்டுப்போன அந்தப் பாடலைத் திரும்பத் திரும்ப பாடச் சொல்லிக் கேட்க
வேண்டுமென்று தோன்றியது மகாராணிக்கு. உலக வாழ்வின் அடிமூலத்துக்கும், அடிமூலமான கருத்தை அந்தப் பாட்டுக்குள் பொதிந்து வைத்திருப்பதாக அதைக் கேட்கும்போதெல்லாம் அவருக்கு ஒரு மனத்தோற்றம் உருவாயிற்று.
குமார பாண்டியனைப்பற்றி மகாமண்டலேசுவரர் வந்து கூறிய விவரங்கள் அவருக்கு மிகுந்த வேதனையைக் கொடுத்திருந்தன. மகனைப்பற்றிய கவலை, மகன் ஆளவேண்டியதாயிருந்தும் அவனால் ஆளப்படாமல் இருக்கிற நாட்டைப்பற்றிய கவலை, மலர் போன்ற உள்ளம் கொண்ட மகாராணிக்கு இத்தனை கவலைகளையும் சற்றே மறந்து புனிதமான சிந்தனைகளில் ஈடுபட அந்தப் பாடல் உதவி செய்தது. விலாசினியாவது, பகவதியாவது உடனிருந்தால் மனம்விட்டுப் பேசிக்கொண்டிருக்கலாம். அல்லது ஆடல் பாடல்களில் சுவையான அனுபவத்தில் தன்னை மறக்கலாம், அவர்களும் அரண்மனையில் இல்லை? மகாமண்டலேசுவரர் அந்தப்புரப் பகுதிக்குள் அதிகம் வருவதில்லை! அன்று குமார பாண்டியனைப் பற்றிய உண்மை நிலைகளை அவர் வந்து தனிமையில் கூறிய போதே, மகாராணிக்குத் தாங்கமுடியாத துயரம் அழுகையாகப் பொங்கிக்கொண்டு வந்தது. வீணாக அடிக்கடி மகாராணியாரைச் சந்திக்கச் சென்று எதையாவது கூறி அவர் மனத்தை உணர்ச்சி நெகிழுமாறு புண்படுத்தக் கூடாதென்றுதான் அரண்மனைக்குள்ளேயே இருந்தும் அதிகமாக மகாராணியைக் காணாமல் இருந்தார் மகாமண்டலேசுவரர். கோட்டாற்றுப் பண்டிதரையும் நினைத்தபோதெல்லாம் வரவழைத்து அவர் பெருமை குறையும்படியாக நடந்து கொள்ள முடியாது.
சொன்னதைக் கேட்கவும், கேட்டதைக் கொடுக்கவும் எத்தனை பணிப் பெண்களோ இருந்தார்கள்? யார் இருந்தால்தால் என்ன ? யார் போனால் என்ன ? நாட்டுக்கெல்லாம் அரசி கூட்டுக்குள் கிளியாக உள்ளம் குலையவேண்டியிருந்தது. மண்ணின் உலகத்தில் பாண்டி
நாட்டுக்குத் தேவியாயிருக்க முடிகிறது. மனத்தின் உலகத்திலோ ஏழையிலும் ஏழைபோல வெறுமை சூழ்கிறது. ஒரே சுவைக் கலப்பற்ற தனிமை உள்ளும் புறமும் நினைவும் கனவும், எங்கும், எதுவும் சூனியமாய்ப் பாழ்வெளியாய்ப் போய்விட்டது போன்ற தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கும் தனிமை அது. ஏழை கந்தல் துணிகளை இழுத்துப் போர்த்திக் குளிரைப் போக்கிக்கொள்ள முடியாததுபோல் வலுவில்லாத நினைவுகளால் மனத்திடம் கிட்டமாட்டேனென்கிறது.
மகாராணி அந்தப் பெரிய மாளிகையில் சிறிதும் நிம்மதியின்றி இருந்தார். குமார பாண்டியனைப் பற்றிய நினைவுகள், நாட்டின் எதிர்காலம் போர் வருமோ என்ற பயம் எல்லாம் ஒன்றாய்க் கூடி நின்று, ‘ஒடு! ஒடு!” என்று அந்தத் தனிமையிலிருந்து எங்கோ துரத்துவதுபோல் இருந்தது. சொற்களின் பொருள் வரம்புக்குள் இழுத்துப் பிடித்து விளக்கமுடியாத ஒரு தாபம்-ஆத்மதாபம், அகன்ற மாளிகையின் நீண்ட இடங்களைக் கடந்து உயர்ந்த மதில்களுக்கு அப்பால் எட்டமுடியாத உயரத்துக்குப் போய்விட வேண்டும் என்று உந்தித்தள்ளுவதுபோல் உள்ளத்தில் குமிழியிட்டது.
“தேவி! உணவருந்துவதற்கு எழுந்தருள வேண்டும்” என்று ஒரு பணிப்பெண் வந்து அழைத்தாள். மகாராணி பதில் சொல்லவில்லை!
“நீ போய் வண்ணமகள் புவனமோகினியை வரச்சொல்” பணிப்பெண் உணவருந்துவதற்கு அழைத்ததையே காதில் போட்டுக்கொள்ளாமல் அவளை வேறொரு பணிக்கு ஏவினார் மகாராணி. சிறிது நேரத்தில் வண்ணமகள் வந்தாள். ‘புவனமோகினி! நான் உடனே தர்ணுமாலய விண்ணகரத்துக்குப் புறப்பட வேண்டும். சுசீந்திரத்துக்குச் சிவிகை ஏற்பாடு செய். நீயும் உடன் வரவேண்டும்.”
முன் தகவல் இல்லாமல், உணவருந்தாமல், திடீரென்று இப்படி மகாராணி கோவிலுக்குப் புறப்படவேண்டுமென்று கூறியதைக் கேட்டுப் புவனமோகினி திகைத்தாள்.
“தேவி தாங்கள் இன்னும் உணவைக்கூட முடித்துக் கொள்ளவில்லையே? அதற்குள்.”
“பசி இப்போது வயிற்றுக்கு அல்ல, ஆன்மாவுக்கு! கேள்வி கேட்டுக்கொண்டு நிற்காதே, போய் உடனே ஏற்பாடு செய்.”
வண்ணமகள் பதில் பேச வாயிழந்து சிவிகை ஏற்பாடு செய்வதற்காகச் சென்றாள். படை வீரர்கள் துணை வராமல் தனியாக மகாராணி எங்கும் புறப்படக் கூடாதென்று அன்று கன்னியாகுமரியில் வந்த ஆபத்துக்குப் பின் ஏற்பாடு செய்திருந்தார்கள். ஆனால் அப்போதிருந்த மனநிலையில் யாருக்கும் தெரியாமல், யாருடைய பாதுகாப்பும் இன்றிச் சுசீந்திரத்துக்குப் போய்வர முடிவு செய்திருந்தார் மகாராணி. மகாமண்டலேசுவரருக்கோ, மெய்க் காவற் படை வீரர்களுக்கோ தன் புறப்பாட்டைப்பற்றி அவர் தெரிவிக்கவே இல்லை! பரிவாரங்கள் புடைசூழ ஆரவாரம் நிறைந்த அரச மரியாதைகளோடு கோயிலுக்குச் செல்வது, “நான் மகாராணி. எனக்குப் பெருமை, பீடு, பதவி எல்லாம் உண்டு” என்று பெருமையை அநாவசியமாக அறிவித்துக்கொண்டு போவதுபோல் வெறுப்பை உண்டாக்கிற்று. அவர் எண்ணினார்; -
‘உலகத்தின் கண்களுக்கு நான் பாண்டிமாதேவி, இராசசிம்மனின் கண்களுக்கு அன்னை. ஆனால் தெய்வத்தின் கண்களுக்கு நான் ஓர் அபலைப் பெண். எளியவன் செல்வந்தனுக்கு முன் இரவல் நகைகளையும், ஆடை அணிகளையும் பூண்டு தன்னைப் பெரிதாகக் காண்பித்துக்கொள்ள முயல்வது போல் அபலையாக இருந்துகொண்டு அரசியாகப் பெருமை கொண்டாடக் கூடாது: - - -
சிவிகையில் புவனமோகினி ஒருத்தியை மட்டும் துணைக்கு ஏற்றிக்கொண்டு தனிமையாகப் புறப்பட்டார் வான்வன்மாதேவி. கோட்டையின் இரண்டு வாயில்களிலும் மிகுந்த காவல் வீரர்கள், “ ஐயோ! இப்படி மகாராணி தனிமையாகப் போகிறார்களே?’ என்று வருந்தத்தான்
முடிந்தது. தடுப்பதற்கு அவர்கள் யார்? எல்லாப் பெருமையும் உள்ளவள், இல்லாதவளைப்போல் போக விரும்பும்போது யார்தான் அதைத் தடுத்து நிறுத்த முடியும்?
அது நன்றாகப் பட்டுத் திரையிட்டு மூடப்பெற்ற சிவிகை யாதலால் சுசீந்திரத்தை அடைகிறவரையில் அதில் மகாராணி வானவன்மாதேவியார் போகின்றார் என்ற பெரிய உண்மை இடைவழி ஊர்களில் இருந்த மக்களுக்குத் தெரியாமலே போய்விட்டது. தெரிந்திருந்தால் எவ்வளவு பெரிய கோலாகலமான வரவேற்புகள் கிடைத்திருக்கும்? எத்தனை ஆரவாரமும் மக்கட் கூட்டமும் சிவிகையின் இருபுறமும் நிரம்பி வழிந்திருக்கும்? அந்த மாதிரிச் சாலைகளில் எத்தனையோ செல்வக்குடும்பத்துப் பெண்கள் அந்த மாதிரிப் பல்லக்குகளில் போவது வழக்கம். அதுபோல் நினைத்துக்கொண்டு அதை விசேடமாகக் கவனிக்கவில்லை மக்கள். சிவிகை சுமந்துசெல்வோருக்கும் கூறக்கூடாது என்று முன்னெச்சரிக்கை செய்யப்பட்டிருந்தது. .
தானுமாலய விண்ணகரத்தின் கோபுரவாயிலில் மகாராணியும், புவனமோகினியும் இறங்கிக் கொண்டார்கள். கோயில் முன்புறமும், உள்ளேயும் கூட்டம் அதிமாக இருந்தது. “தேவி! இன்றைக்கு இந்தக் கோயிலில் உள்ள தெய்வ நீதி மண்டபத்தில் எதோ ஒரு முக்கியமான வழக்கில் தீர்ப்புக் கூறி கைமுக்குத் தண்டனை நிறைவேற்றப் போகிறார்களாம். இவ்வளவு கூட்டமும் கைமுக்குத் தண்டனையைக் காண்பதற்குக் கூடியிருக்கிறது’ என்று புவனமோகினி விசாரித்துக் கொண்டு வந்து கூறினாள் சாதாரண உடையில் சாதாரணப் பெண்கள்போல் கூட்டத்துக்குள் புகுந்து சென்ற அவர்கள் யாருடைய பார்வைக்கும் படாமல் தப்பியது வியப்புதான். -
“புவனமோகினி! இந்தக் கோயிலுக்கு வந்தால் மட்டும் - ஒரு சிறப்பு. இங்கே படைத்துக் காத்து அழிக்கும் முப்பெருங்கடவுளரின் ஒன்றுபட்ட அம்சத்தைத் தெய்வமாக வணங்குகிறோம்'-மகாராணி வண்ண மகளிடம்
கூறிக்கொண்டே சந்நிதிக்கு முன் சென்று வணங்கினார். அர்ச்சகர் அருகில் வந்து பார்த்து அடையாளம் கண்டுகொண்டார். அவருக்குக் கையும், காலும் பதறி நடுங்கின. .
“தேவி! இதென்ன கோலம்..? இப்படித் தனியாக.” சரியாகப் பேச முடியாமல் வாய் குழறியது அவருக்கு ஆள் காட்டி விரலை இதழ்வாயிற் பொறுத்திப் பேசாமல் இருக்குமாறு அர்ச்சகருக்குச் சாடை காட்டினார் மகாராணி. அவர் அடங்கினார். கைகூப்பி வணங்கிக் கொண்டே நெடுநேரம் நின்றிருந்தார் மகாராணி. முகத்திலும், கண்களிலும் தெய்வீக நிலை ஒளிர்ந்தது, உலகத்தில் மறந்த பெருநிம்மதியில் திளைக்கும் ஒர் அருள் இன்பம் சிறிது நாழிகை தொடர்ந்தது. வழிபாடு முடிந்தது. r
“அர்ச்சகரே இன்று ஏதோ கைமுக்குத் தண்டனை நடை பெறுகிறதாமே? வரும் வழியில் இருந்த கூட்டத்தைப் பார்த்து இவள் விசாரித்துக் கூறினாள். அது என்னவென்று விவரம் சொல்லுங்கள்.” மகாராணி கேட்டார். .
“தேவி! தங்களுக்குத் தெரியாததொன்றும் இல்லை. நாஞ்சில் நாட்டின் எப்பகுதியில் தெய்வக் குற்றம், ஒழுக்கக்கேடு முதலிய பேரநீதிகள் செய்தவர் மீது அவ்வநீதிக்கு ஆளான எவர் வழக்குத் தொடர்ந்தாலும் அவ்வழக்கைப் பன்னெடுந் தலைமுறைகளாக இந்தக் கோயிலில் உள்ள தெய்வநீதிமன்றத்தார் தீர விசாரித்துத் தீர்ப்புக் கூறி வருகிறார்கள். குற்றம் செய்தவர்கள் கைமுக்குத் தண்டனை- பெறுகிறார்கள். இக்கோவிலில் தெய்வ நீதிமன்றத்தார் கைமுக்குத் தண்டனைக்கென்றே ஒரு பெரிய நெய்க் கொப்பரையும் பொன்னாற் செய்த நந்திச்சிலை ஒன்றும் வைத்திருக்கின்றதைத் தாங்கள் அறிவீர்கள். தண்டனைக்குரியோராகத் தீர்ப்புப் பெறுவோர் கொப்பன்ர நிறையக் காய்ந்து கொதிக்கும் நெய்க்குள் கையை விட்டு, அடியில் கிடக்கும் பொன் நந்தியை வெளியே எடுக்கவேண்டும். தென்பாண்டி நாட்டிலேயே பெரிதாக நினைக்கப்படும் இந்தத் தண்டனை கடந்த நான்கைந்து
வா.தே.25 - . . .
ஆண்டுகளில் எவருக்குமே அளிக்கப்பட வில்லை. அதாவது “கைமுக்குத் தண்டனை பெறும் அளவுக்கு இந்தச் சில ஆண்டுகளில் இந்தப் பகுதியில் யாரும் குற்றம் செய்யவில்லை. ‘சென்ற திங்களில் திருவாட்டாறு ஆதிகேசவ விண்ணகரத்தில் வழிபாட்டுரிமை பெற்ற சோழிய அந்தணர் ஒருவருடைய புதல்வன் அதே விண்ணகரக் கோயிலின் விலைமதிப்பற்ற பொன் அணிகலன்களைத் திருடிக்கொண்டு யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் திடீரென்று எங்கோ மறைந்து விட்டான். சோழிய அந்தணர் தம் மகன்தான் திருடிச்சென்றிருக்கிறான் என்பதனை அறிந்துகொண்டு விட்டார். புதல்வன் செய்தது குற்றமே என்று தயக்கமின்றிச் சுசீந்திரம் தெய்வ நீதிமன்றத்தாருக்கு அக்குற்றத்தை அறிவித்துவிட்டார் அவர். எனினும் குற்றம் செய்த சோழிய இளைஞன் அகப்படவில்லை. இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னால் காந்தளூரில் ஒரு பொற்கொல்லன் வீட்டில் விண்ணகரத்துப் பொன் நகைகளை அழித்து உருக்கி விடுவதற்கு முயன்று கொண்டிருந்தபோது அந்தச் சோழிய இளைஞனைப் பிடித்து விட்டார்கள். இன்று தீர்ப்புக் கூறுகிறார்கள். நீண்ட நாட்களுக்குப் பின்னர் நடைபெறும் ‘ ைகமுக்குத் தண்டனை யாகையால் மக்கள் திருவிழாக்கூட்டம் போல் பார்ப்பதற்குக் கூடிவிட்டார்கள். கைமுக்கு மண்டபத்துப் பக்கம் போவதற்கே பரிதாபமாக இருக்கிறது” என்றார் அர்ச்சகர். . . . . . .
கல்மனம் படைத்த அந்தச் சோழிய அந்தணர் என் மகனானால் என்ன? வேறெவனானால் என்ன? செய்தது . தவறு. பெற வேண்டியது தண்டனைதான் என்று பாசத்தை மறந்து நியாயத்தை ஒப்புக்கொள்கிறார். ஆனால். நான் உங்களிடம் எப்படிச் சொல்வேன், மகாராணி! அவனைப் பெற்ற அந்தச் சோழிய நங்கையின் கதறல் அந்த மண்டபத்தையே சோக,வெள்ளத்தில் மூழ்கச் செய்திருக்கிறது. அந்தத் தாய் தூணில் முட்டிக்கொள்கிறாள், முறையிடுகிறாள். என் மகன் கையை நெய்க் கொப்பரைக்குள் விடுமுன் நானே ‘கொப்பரையின் கொதிக்கும் நெய்க்குள் பாய்ந்து உயிரை
விட்டு விடுவேன்’ என்று அடம் பிடிக்கிறாள். அவளுக்கு ஒரே மகன் அவன். தந்தைக்கு நியாயம் பெரிதாகத் தெரிகிறது! தாய்க்குப் பாசம் பெரிதாகத் தெரிகிறது. தாய் ஈரைந்து திங்கள் வயிற்றில் சுமந்தவள், என்னசெய்வது, தேவி, தாயாக இருந்தால்தான் மகனை உணர முடிகிறது. அடியானாக இருந்தால்தான் தெய்வத்தை உணர முடிகிறது. ஆண்டவனாக இருந்தால்தான் அடியானின் வேதனை தெரிகிறது. வாழ்க்கை நியதி எப்படி அமைந்து கிடக்கிறது.” -
அர்ச்சகர் உணர்ச்சிகரமாக, உருக்கமாகத் தம் மனத்தில் புதைந்து கிடந்த துன்பங்களை மகாராணிக்கு முன் கொட்டினார். அவர் முடித்ததும் மகாராணி ஆவலோடு கேட்டார்:- “ அதெல்லாம் சரி! முடிவு என்ன ஆயிற்று? “கைமுக்குத் தண்டனை'யை நின்றவேற்றினார்களா, இல்லையா?” . . .
“நீதி மன்றத்தார் தண்டனையை அளித்துவிட்டார்கள். ஆனால் தண்டனையை நிறைவேற்ற முடியாமல் ஒரு தாயின் இரண்டு கைகள் தடுத்து அடம் பிடிக்கின்றன. நெய்க்கொப்பரை கொதித்துக் கொண்டிருக்கிறது. இவ்வளவு கூட்டமும் அதைதான் வேடிக்கை பார்க்க போகிறது. முடிவு என்ன ஆகுமோ தெரியவில்லை.” -
அர்ச்சகருடைய வார்த்தைகளைக் கேட்டு முடிந்ததும், மகாராணி வானவன்மாதேவியார் பெருமூச்சுவிட்டார். அவருடைய பேச்சு மகாராணியின் மனத்தில் இரண்டொரு சொற்களை ஆழப் பதித்துவிட்டது.
“தாயாக இருந்தால்தான் மகனை உணர முடிகிறது. ஆண்டவனாக இருந்தால்தான் அடியானின் வேதனை தெரிகிறது.” . - .
யாரும் அறியாமல் புதையல் எடுத்த எளியவன் அதனைத் திரும்பத்திரும்பத் தனிமையில் தான் மட்டும் பார்த்து மகிழ்வதுபோல் இந்த உயிரோட்டமுள்ள வாக்கியங்கள் அவர் மன ஆழத்தைத் தொட்டுத் துடிப்பு
ஊடடின. -
தெய்வ நீதிமன்றம் அந்தக் கோவிலின் வேறொரு பகுதியில் இருந்தது. ஏக்கத்தோடும், அனுதாபத்தோடும் நிராசையோடும் அந்தப் பக்கம் திரும்பிப் பார்த்தார் மகாராணி. கூட்டம் திரள்திரளாகத் தெய்வ நீதிமன்றம் இருந்த பகுதிக்குள் சென்று கொண்டிருந்தது. இவ்வளவு கூட்டமும் கைமுக்குத் தண்டனையை வேடிக்கை பார்க்கப் போகிறது. ஆனால் இவ்வளவு பேரும் அடையாத சோக உணர்ச்சி தண்டனை அடைந்தவனைப் பெற்ற தாய்க்கு மட்டும் ஏற்படுகிறது. உலகத்துக்கு வேடிக்கை. தாய்க்கு வேதனை. தாயாக இருந்தால் எத்தனை துன்பங்கள்? ஆனாலும் தாயாக இருப்பதில்தான் எவ்வளவு பெருமை !
யாரையோ அடிப்பதற்காக ஓங்கிய கை, யார் மேலேயோ விழுந்ததுபோல், எந்தத் தாயையோ நினைத்துக்கொண்டு அர்ச்சகர் கூறிய அந்த வாக்கியம் தம் இதயத்தையே கசக்கிப் பிழிவதை வானவன்மாதேவி உணர முடிந்தது. அந்த விநாடி வானவன்மாதேவியின் மனத்தில் மின்னலைப் போல் ஓர் எண்ணம் உண்டாயிற்று. முகம் மலர விழிகளில் சத்தியம் ஒளிர அர்ச்சகரை நிமிர்ந்து பார்த்தார்.
“அர்ச்சகரே! நீங்கள் எனக்கு ஒரு சிறு உதவி செய்ய வேண்டும். இவ்வளவு பெரிய கூட்டத்தைக் கடந்து உள்ளே போய்க் கைமுக்குத் தண்டனை நிறைவேறும் இடத்தில் நான் இங்கு வந்திருப்பதை வெளிக்காட்டிக் கொள்ள எனக்கு விருப்பமில்லை. நீங்கள் தயவுசெய்து, இந்தப் பணிப் பெண்ணையும் உடன் அழைத்துச் சென்று அந்தச் சோழிய நங்கையை மட்டும் இங்கே தனியாகக் கூப்பிட்டுக்கொண்டு . வர ஏற்பாடு செய்யுங்கள்.”
அர்ச்சகருக்கு மகாராணியின் அந்த வேண்டுகோள் ஆச்சரியத்தை உண்டாக்கிற்று. ஆனாலும் அதை அடக்கிக் கொண்டு, “அப்படியே அழைத்து வரமுயல்கிறேன் தேவி” என்று கூறி புவனமோகினியையும் உடன் அழைத்துக் கொண்டு கூட்டத்துக்குள் புகுந்தார். சந்நிதிக்கு முன் தனியாக நின்ற மகாராணி பிறருடைய கவனம் தம்மால் கவரப்படக் கூடாதென்று நினைத்து யாரோ தரிசனத்துக்கு
வந்தவள்போலத் தோன்றும்படி ஒரு தூண் ஒரமாக ஒதுங்கி ஒடுங்கி நின்றாள். பாண்டிநாட்டின் மாபெருந் தாய்போன்ற அந்தத் தேவியின் மனம் எங்கோ ஒரு சிறிய ஊரில் கோவிலில் தொண்டு செய்யும் அர்ச்சகரின் மனைவியான மற்றொரு தாய்க்காக நெகிழ்ந்து உருகியது. உலகத்தில் எங்குமே எதற்காகவும் தாய்க்குலம் மனவேதனைப்படக் கூடாதென்கிற மாதிரி ஒரு பரந்த கருணை அந்த மகாராணியின் நெஞ்சில் அந்தச் சில கணங்களில் வந்து நிறைந்துகொண்டது. ஒரு தாயின் துன்பத்தை உணர இன்னொரு தாய். ஆகா! உலகத்துத் தாய்க் குலத்தின் இணையற்ற பெருமை அது.
அர்ச்சகரும், புவனமோகினியும் எப்படியோ அந்தச் கோழியநங்கையை அழைத்து வந்துவிட்டனர். அவளைச் சுற்றி ஒரு சிறு கூட்டமும் வந்தது. அழுது அழுது சிவந்த கண்கள், வெளிறிய முகம், கலைந்த கூந்தல், முகம் முழுவதும் தன் மகனின் உயிர் காப்பதற்கு வீறுகொண்டெழுந்த தாய்மை வெறி, “பார்! இதுதான் உலகத்தில் தாய்மைத் துடிப்பின் உண்மை ஒவியம்” என்று எழுதி ஒட்டியிருப்பது போன்ற முகம் அவளுக்கு, அவளைச் சுற்றிலும் பைத்தியத்தைப் பார்க்க வருவதுபோல் தொடர்ந்து வந்த கூட்டத்தை அர்ச்சகர் ஏதோ சொல்லி அதட்டி விரட்டினார்.
அந்தத் தாயும், அர்ச்சகரும் புவனமோகினியும், மகாராணி நின்றுகொண்டிருந்த துணுக்கு அருகே வந்தனர். அர்ச்சகரையும், புவனமோகினியையும் ஒதுங்கிச் செல்லுமாறு குறிப்புக் காட்டிவிட்டு அவளை நோக்கி, “வா அம்மா! உன் துன்பத்தைக் கேள்விப்பட்டேன். என் மனம் பெரிதும் கலங்கியது. எனக்கு மட்டுமில்லை, அம்மா! உலகத்துத் தாய்மார்களெல்லாரும் துன்பப்படவே பிறந்திருக்கிறோம். இந்த நாட்டு மகாராணி வானவன்மாதேவியைப் பற்றி நீ கேள்விப்பட்டிருப்பாய். அவர் கூடத் தம் மகனை எண்ணித் தான் ஓயாமல் கலங்கிக்கொண்டிருக்கிறார். நாம் என்ன செய்வது? நாம் பெற்ற பிள்ளைகள் அசடுகளாக இருந்து விட்டால் அவைகளுக்கும் சேர்த்து நாம்தான் வருத்தப்பட வேண்டியிருக்கிறது” என்று, தாம் இன்னாரெனக் காட்டிக் கொள்ளாமல் மூன்றாவது மனிதர் தற்செயலாக அனுதாபப் படுவதுபோல் பேசினார் மகாராணி.
அந்தச் சோழிய நங்கை விக்கலும், விசும்பலுமாக வெடித்து கொண்டு வரும் அழுகையோடு சீறினாள்;
“இவ்வளவு ஆறுதல் சொல்கிறீர்களே! உங்களுக்கு ஒரு மகன் இருந்து அவனும் இம்மாதிரித் திருடிக்கொண்டு ஓடி அகப்பட்டுவிட்டால் அவன் கைமுக்குத் தண்டனை அடைவதைக் கண்டு உங்களால் பொறுமையாக இருந்துவிட முடியுமா ? பெரிய ஒளவை மூதாட்டியைப் போல் கூப்பிட்டுவிட்டு இருந்த இடத்திலிருந்து கொண்டே எனக்கு அறிவுரை சொல்ல வந்து விட்டீர்களே!. யார் நீங்கள்? உங்களுக்கென்ன அக்கறை இதில்?”
“அம்மா! நானும் உன்னைப்போல் ஒரு தாய். எனக்கும் ஒரு மகன் இருக்கிறான்!” மகாராணி ஒவ்வொரு சொல்லாக நிறுத்திப் பதில் கூறினாள். வானவன்மாதேவியின் உள்ளத்தில் பேரிடியைப் பாய்ச்சியிருந்தாள் அந்தச் சோழிய நங்கை'உனக்கும் ஒரு மகன் இருந்து அவனும் இப்படித் திருடிக்கொண்டு ஓடி அகப்பட்டிருந்தால்- சரியாகக் கேட்டிருந்தாள் அவள். ஆம்! எனக்கும் மகன் இருக்கிறான். அவனும் ஒருவிதத்தில் திருடியிருக்கிறான்! மகாராணி மனத்துக்குள் சொல்லிக் கொண்டார். அவருடைய மனம் வலித்தது, மிகவும் வலித்தது.