பாண்டிமாதேவி/இரண்டாம் பாகம்/நினைப்பென்னும் நோன்பு
33. நினைப்பென்னும் நோன்பு
தன் உள்ளக் கருத்து நிறைவேறுமா, நிறைவேறாதா என்று அறிவதற்காகத் தான் கூடல் இழைத்ததை அத்தை பார்த்துவிட்டாளே என்ற வெட்கம் கூடல் கூடிய மகிழ்ச்சியில் சிறிது சிறிதாகப் புதைந்துவிட்டது மதிவதனிக்கு. தன் எண்ணங்களை நோன்புகளாக்கி வலிமையான அன்புத் தவத்தை உறுதியாக நோற்றுக்கொண்டிருந்தாள் அவள். செம்பவழத் தீவில் நாட்கள் வழக்கம்போலத்தான் கழிந்து கொண்டிருந்தன. மதிவதனி கவலையே இல்லாதவளைப் போல மகிழ்ச்சியோடு துள்ளித் திரிந்துகொண்டிருந்தாள். இடையில் சில நாட்களாக அவளுக்கு ஏற்பட்டிருந்த சோர்வு இப்போது இல்லை. தன் நினைவுக்குத் தன் உள்ளத்தை கேள்விக்களமாக்கி, இடைவிடாமல் தான் இயற்றிக் கொண்டிருக்கும் நினைவாகிய வேள்வி நோன்பிற்குப் பயன் உண்டு என்ற திடநம்பிக்கை அவளுக்குத்தான் அன்றே வந்துவிட்டதே.
உற்சாகமாகக் கடையில் போய் உட்கார்ந்து கொண்டு சங்குகளையும் பவழங்களையும் விற்றாள். தந்தை கடையைப் பார்த்துக்கொண்ட சமயங்களில் தனது சிறிய தோணியைச் செலுத்திக் கொண்டு தீவின் கரையோரமாகக் கடலைச் சுற்றி வந்தாள். இன்னும் சில சமயங்களில் ஏழு கன்னிமார் கோயில் புன்னை மரத்தடியில்போய்ப் பெரிய முனிவர்போல் கண்மூடி உட்கார்ந்து தியானம் செய்தாள். பைத்தியக்காரப் பெண்போல் தன் அருகில் யாருமில்லாத தனிமையான சமயங்களில் ‘நினைப்பதை அடைவது ஒரு தவம்’ என்று மெதுவாகத் தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள்.
மதிவதனி அன்று மாலையில் ஒருவிதமான மகிழ்ச்சியோடு தோணியில் ஏறிக்கொண்டு கரையோரமாகவே அதைச் செலுத்திக்கொண்டிருந்தாள். அப்போது அலங்காரமான சிறிய கப்பல் ஒன்று தீவை நோக்கி வந்து கொண்டிருப்பதை அவள் கண்டாள். அதில் வருவது யாரென்று அறிந்து கொள்ள வேண்டும் என்று இயல்பாக அவள் மனத்தில் ஒர் ஆசை
உண்டாயிற்று. தற்செயலாகச் செலுத்திக்கொண்டு போகிறவளைப்போல் அந்தக் கப்பலுக்கு அருகில் தன் தோணியைச் செலுத்திக்கொண்டு போனாள் மதிவதனி,
முன் குடுமியும், பருத்த உடம்பும், குட்டைத் தோற்றமுமாக ஓர் ஆள் அந்தக் கப்பலின் தளத்தில் நின்றுகொண்டிருப்பதை மதிவதனி தோணியில் நின்று பார்த்தாள். அவள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே கப்பலின் தளத்தில் அரசகுமாரி போன்ற அலங்காரத்தோடு அழகிய இளம் பெண் ஒருத்தியும், பெண்மைச் சாயல்கொண்ட முகமுடைய இளைஞன் ஒருவனும் வந்து அந்த முன் குடுமிக்காரருக்குப் பக்கத்தில் நின்றார்கள். மதிவதனி கடலில் துணிவாகத் தோணி செலுத்திக்கொண்டு வரும் காட்சியை ஏதோ பெரிய வேடிக்கையாக எண்ணிப் பார்க்கிறவர்களைப்போல் அந்த மூன்றுபேரும் கப்பல் தளத்தில் நின்று பார்த்தார்கள்.
முன்குடுமிக்காரர் அவளை நோக்கிக் கைதட்டிக் கூப்பிட்டு ஏதோ விசாரித்தார். கடல் அலைகளின் ஒசையில் அவர் விசாரித்தது மதிவதனியின் செவிகளில் விழவில்லை. தோணியை இன்னும் பக்கத்தில் கொண்டுபோய் நிறுத்திக் கொண்டு, “ஐயா! என்ன கேட்டீர்கள்? காதில் விழவில்லை” என்று அண்ணாந்து நோக்கி வினவினாள் அவள்.
“தோனிக்காரப் பெண்ணே! இதோ அருகில் தெரியும் இந்தத் தீவுக்குப் பெயர் என்ன கப்பலோடு இரவில் தங்குவதற்கு இங்கே வசதி உண்டா?” என்று முன்குடு மிக்காரர். அவளிடம் இரைந்து கேட்டார்.
“ஆகா! தாராளமாகத் தங்கிவிட்டுப் போகலாம். இந்தத் தீவுக்குப் பெயர் செம்பவழத் தீவு! பார்த்தாலே உங்களுக்குத் தெரியுமே!” என்று மதிவதனி பதில் சொன்னாள். அந்தக் குட்டையான முன்குடுமிக்காரரைப் பார்க்கப் பார்க்க வேடிக்கையாக இருந்தது அவளுக்கு .
“கூத்தா இடையாற்றுமங்கலத்தில் எங்கள் மாளிகைக்கும் அக்கரைக்கும் இடையிலுள்ள பறளியாற்றைப் படகில்
கடப்பதற்கே எனக்குப் பயமாக இருக்கும். தண்ணிரை மொத்தமாகப் பரப்பாகப் பார்க்கும்போது அவ்வளவு தூரம் பயப்படுவேன் நான். இதோ இந்தப் பெண் கொஞ்சங்கூடப் பயப்படாமல், இவ்வளவு பெரிய கடலில் சிறிய தோணியைச் செலுத்திக்கொண்டு எவ்வளவு உரிமையோடு சிரித்துக் கொண்டே மிதந்து வருகிறாள் பார்த்தாயா? எனக்கு வியப்பாக இருக்கிறது!” என்று கப்பலின் தளத்தில் நின்ற பெண் தன் அருகில் இருந்த பெண் முகங்கொண்ட இளைஞனிடம் கூறினாள். தோணியிலிருந்த மதிவதனி அதைக் கேட்டுப் பலமாகச் சிரித்தாள்.
“பெண்னே! நீ ஏன் சிரிக்கிறாய்?” என்று அந்த இளைஞன் மதிவதனியைப் பார்த்துக் கேட்டான். அந்தக் குரல் அசல் பெண் குரல் போலிருப்பதை எண்ணி வியந்து கொண்டே, “ஒன்றுமில்லை; உங்கள் பக்கத்தில் நின்று கொண்டிருக்கும் அம்மையார் சற்று முன் உங்களிடம் கூறிய வார்த்தைகளைக் கேட்டேன். சிரிப்பு வந்தது. இவ்வளவு தூரம் தண்ணிருக்குப் பயப்படுகிறவர்கள் கப்பலில் வர எப்படித் துணிந்தார்களென்று எனக்குத் தெரியவில்லை!” என்று பதில் கூறினாள் மதிவதனி.
‘அதற்கென்ன செய்வது ? எது எதற்கெல்லாம் பயப்படுகிறோமோ, அதை வாழ்வில் செய்யாமலா இருந்து விடுகிறோம்? பயப்படுவது வேறு வாழ்க்கை வேறு!” என்று சொல்லி விட்டுச் சிரித்தான் இளைஞன், அந்த இளைஞனுடைய உதடுகள் பெண்ணினுடையவை போல் சிவப்பாகச் சிறிதாய், அழகாய் இருப்பதை மதிவதனி கவனித்தாள்.
அவர்களுடைய கப்பலுடனேயே தன் தோணியையும் செலுத்திக்கொண்டு கரைக்குத் திரும்பினாள் அவள். அந்தக் கப்பலில் வந்தவர்கள் யார் என்பதை நேயர்கள் இதற்குள் புரிந்துகொண்டிருப்பார்கள். விழிஞத்திலிருந்து புறப்பட்ட நாராயணன் சேந்தனும், குழல்வாய்மொழியும் அவர்களிடம் வம்பு செய்து அந்தக் கப்பலிலேயே தனக்கும் இடம்பிடித்துக் கொண்ட கூத்தன் என்னும் வாலிபனும்தான். இப்போது
செம்பவழத் தீவை நெருங்கிக் கொண்டிருந்தார்கள். கப்பலை நிறுத்திவிட்டுக் கரையில் இறங்கியதும், “பெண்ணே ! உன்னோடுகூட வந்தால் எங்களுக்கு இந்தத் தீவைச் சுற்றிக் காண்பிப்பாய் அல்லவா?” என்று மதிவதனியைப் பார்த்துக் கேட்டான் நாராயணன் சேந்தன். ‘ஆகட்டும்” என்று புன்னகையோடு பதில் சொன்னாள் மதிவதனி, கப்பலைக் கவனமாகப் பார்த்துக்கொள்ளுமாறு ஊழியர்களிடம் சொல்லி விட்டுச் சேந்தனும் குழல்வாய்மொழியும், கூத்தனும், மதிவதனியோடு ஊர் சுற்றிப் பார்க்கக் கிளம்பினார்கள்.
எல்லா இடங்களையும் சுற்றிக் காண்பித்துவிட்டு இறுதியாகத் தீவின் கடைவீதிக்கு அவர்களை அழைத்து வந்தாள் மதிவதனி, அணிகலன்களிலும், அலங்காரத்திலும் அதிகம் பிரியமுள்ளவளாகிய குழல்வாய்மொழி நவரத்தின நவமணிகளும் பொன்னும், புனைபொருள்களும் விற்கும் ஒரு பெரிய கடைக்குள் எல்லாரையும் அழைத்துக்கொண்டு ஆவலோடு நுழைந்தாள். செம்பவழத் தீவிலேயே பெரிய கடை அது.
சாத்ரூபம், கிளிச்சிறை, ஆடகம், சாம்பூநதம் என்னும் நால்வகைப் பொன்னும், வயிரம், மரகதம், மாணிக்கம், புருடராகம், வயிடுரியம், நீலம், கோமேதகம், பவழம், முத்து -என்னும் ஒன்பது வகை மணிகளும் நிறைந்திருந்தன. அங்கே. ஆடவர் அணிந்துகொள்ளும் தாழ்வடம், கண்டிகை, சுரி, பொற்பூ, கைக்காறை, திருப்பட்டிகை, குதம்பை, திருக்கம்பி, கற்காறை, சுருக்கின வீர பட்டம், திருக்கு தம்பைத் தகடு, திரள்மணி வடம் ஆகியவைகள் ஒருபுறம் இலங்கின. பெண்கள் அணிந்து கொள்ளும் திருக்கைக்காறை மோதிரம், பட்டைக்காறை, தாலி, திருக்கம்பி, திருமகுடம், வாளி, உழுத்து, சூடகம், திருமாலை, வாகுவலயம், திருக்கைப்பொட்டு பொன்னரிமாலை, மேகலை ஆகியவை மற்றொருபுறம் இலங்கின.
வயிரத்தின் பன்னிரு குற்றமும், ஐந்து குணமும் மரகதத்தின் எட்டுக் குற்றமும் எட்டு குணமும், மாணிக்கத்தின் பதினாறு குற்றமும் பன்னிரு குணமும், நீலத்தின் எட்டுக்
குற்றமும் பதினொரு குணமும் முத்துகளின் இரண்டு குணமும் நான்கு குற்றமும் தெரிந்து சொல்லவல்ல இரத்தினப் பரிசோதக வித்த கர்கள் அங்கு நிறைந்திருந்தனர். குழல்வாய்மொழி அந்தக் கடையில் அவ்வளவு நின்று நிதானித்து ஒவ்வொரு பகுதியாகச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தது சேந்தனுக்குப் பிடிக்கவில்லை. வெறுப்போடு முகத்தைக் கடுமையாக வைத்துக்கொண்டு ஒரு மூலையில் ஒதுங்கி நின்று விட்டான் அவன். மதிவதனியும், குழல்வாய்மொழியும், கூத்தனும் சுற்றிப் பார்த்து விட்டு நாராயணன் சேந்தன் நின்று கொண்டிருந்த மூலைக்குத் திரும்பிவந்தனர்.
‘இந்த மாபெரும் செல்வக்களஞ்சியம் போன்ற கடையைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று வியப்பு நிறைந்த குரலில் சேந்தனை நோக்கிக் கேட்டாள் குழல்வாய்மொழி. --
“பெண்களின் நகை ஆசையால் உலகம் எப்படிக் குட்டி சுவராய்ப் போய்க்கொண்டிருக்கிறதென்று நினைக்கிறேன். இவைகளால் ‘ஏழைகளாகப் போனவர்களின் தொகையை நினைக்கிறேன்” என்று சேந்தன் கடுகடுப்போடு பதில் சொன்னான். அவனுடைய முரட்டுத்தனமான பதிலைக் கேட்டுக் கூத்தன் உட்பட மற்ற மூவரும் முகத்தைச் சுளித்தார்கள். -
“அம்மணி! நீங்கள் ஏன் முகத்தைச் சுளிக்கிறீர்கள்? சில பேர்கள் தங்களுக்குக் கிடைக்காத பொருள்களைக் கிடைக்க வில்லையே என்பதற்காகக் கிடைக்கிறவரை பொறுத்துக் கொண்டிருப்பார்கள். இந்த மனிதர் கூறிய கடுமையான பதிலிலிருந்து இவர் திருமணமாகாதவர் என்று நினைக்கிறேன்” என்று அந்தக் கடையின் வணிகர் சேந்தனைக் கேலி செய்தார். சேந்தன் அவரை வெறுப்போடு பார்த்தான். -
“சகோதரி! நம் ஐயாவுக்கு நகை என்றால் ஏன் இவ்வளவு வெறுப்போ? தெரியவில்லையே?’ என்று குழல்வாய் மொழியிடம் நாராயணன் சேந்தனைக் குறிப்பிட்டு நகைத்துக் கொண்டே கேட்டான் கூத்தன்.
அவனை அடிப்பதற்குக் கையை ஓங்கிக்கொண்டு பாய்ந்துவிட்டான் சேந்தன. அவனைச் சமாதானப் படுத்துவதற்குள் மதிவதனிக்கும் குழல்வாய்மொழிக்கும் போதும் போதும் என்றாகிவிட்டது. கடைவீதியில் தங்களுடைய கடைக்கும் அவர்களைக் கூட்டிக்கொண்டு போய்க் காண்பித்தாள் மதிவதனி, -
“ஐயா! பெண்கள்தான் ஆடம்பரத்துக்காக கைமீறிச் செலவு செய்வார்கள் என்று நீங்கள் தவறாகக் கருதுவதாகத் தெரிகிறது. அது தவறு. உதாரணமாக நான் ஒன்று சொல்லுகிறேன். கேளுங்கள்: சில தினங்களுக்கு முன் செல்வச் செழிப்புள்ள அழகிய இளைஞர் ஒருவர் ஒரு முதியவரோடு இலங்கைக்குப் போகிற வழியில் கப்பலை நிறுத்தி இந்தத் தீவில் இறங்கியிருந்தார். எங்கள் கடையில் வந்து ஆயிரம் பொற்கழஞ்சுகள் விலை மதிப்புள்ள ஒரு வலம்புரிச் சங்கை வீண்பெருமையைக் காட்டுவதற்காக இரண்டாயிரம் பொற்கழஞ்சுகளைக் கொடுத்து வாங்கிக்கொண்டு போனார். எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. இப்போதாவது ஒப்புக் கொள்ளுங்கள். ஆடவர்களிலும் கைமீறிய செலவு செய்பவர்கள் இருக்கிறார்கள்” என்று அந்த மூவரையும் கப்பலில் கொண்டுபோய் விடுவதற்காகத் திரும்பிச் சென்றபோது மதிவதனி சேந்தனிடம் ஒரு பேச்சுக்காகச் சொன்னாள். உடனே, “அந்த இளைஞர் எப்படியிருந்தார்? அவரை நீ பார்த்ததிலிருந்து ஏதாவது அடையாளம் கூறமுடியுமா, பெண்ணே ?” என்று மூன்று பேருமாக மதிவதனியைத் துளைத்தெடுத்து விட்டார்கள். அவர்களிடம் அதை ஏன் கூறினோம் என்றாகிவிட்டது அவளுக்கு.
“ஐயா! எனக்கு அவருடைய அடையாளம் ஒன்றும் நினைவில்லை. சும்மா பார்த்த நினைவுதான்” என்று கூறி மழுப்பிவிட்டு, அதற்குமேல் அவர்களோடு தங்கியிருக்க விரும்பாமல் விடைபெற்றுக் கொண்டு வீட்டுக்குப் போய் விட்டாள் அவள்.
மறுநாள் காலை அவள் கடற்கரைக்கு வந்தபோது புறப்படத் தயாராயிருந்த கப்பலிலிருந்து முன் குடுமிக்காரர் மீண்டும் அவளைத் தூண்டிக் கேட்டார். அவள் தனக்குத் தெரியாதென்று கூறிவிட்டாள்.