பாண்டிமாதேவி/முதல் பாகம்/அடிகள் கூறிய ஆருடம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

22. அடிகள் கூறிய ஆருடம்

துறவியை நீராடச் சொல்லிவிட்டு அவருடைய பூசைக்கு வேண்டிய மலர்களைக் கொய்வதற்காக நந்தவனத்துக்குச் சென்ற குழல்மொழியை அம்பலவன் வேளான் சந்தித்தான் அல்லவா? மகாமண்டலேசுவரர் உங்களிடம் சொல்லும்படி முக்கிய செய்தி கூறியனுப்பியிருக்கிறார் என்று வேளான் கூறவும் என்ன அவசரச் செய்தியோ?” எனப் பதறிப் போனாள் அவள்.

“அம்மா! வசந்த மண்டபத்தில் தங்கியிருக்கும் துறவியைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொள்ளச் சொன்னார். அடிகள் மாபெரும் சித்துவித்தைகள், மந்திர தந்திரங்கள் எல்லாம் கைவரப்பெற்றவராம். சிறிது மனங்கோணினாலும் சொல்லாமல் இங்கிருந்து மறைந்து விடுவாராம். அவர் இங்கிருந்து மறைந்து விட்டால் அதனால் தென்பாண்டி நாட்டுக்கே பலவிதத்திலும் தீங்குகள் உண்டாகுமாம். கண்ணை இமை காப்பதுபோல் இந்தத் தீவிலிருந்து வெளியேறி விடாமல் அவரைப் பத்திரமாகக் காக்க வேண்டும் என்று கூறி அனுப்பினார்” என்றான் படகோட்டி அம்பலவன் வேளான்.

இதைக்கேட்டதும் குழல்மொழிக்கு நிம்மதி ஏற்பட்டது. “அப்பா! இவ்வளவுதானா? என்ன பிரமாதமான செய்தியோ என்று பயந்து போனேன். இதைத்தானா திரும்பவும் அப்பா உன்னிடம் சொல்லிவிட்டுப் போனார். ஏற்கனவே என்னிடம் அவர் கூறிய செய்திதானே!” என்று அவனுக்குப் பதில் சொல்லிவிட்டு நந்தவனத்துக்குள் நுழைந்தாள் அவள்.

வேளான் வந்த வழியே திரும்பிப் படகுத்துறைக்குப் போய்ச் சேர்ந்தான். இடையாற்று மங்கலம் அரண்மனை நந்தவனத்தில் இல்லாத மலர் வகைகள் தென்பாண்டி நாட்டிலேயே இல்லை என்று சொல்லிவிடலாம். தீவின் நிலப் பரப்பில் கட்டடங்களும், மாளிகைகளும் அமைந்திருந்த பகுதிபோக எஞ்சிய பகுதி முழுவதும், வானளாவிய மரங்களும் மலர்ச் சோலைகளும், பசும் புல்வெளிகளும், மலர்வாவிகளும் நிறைத்துக் கொண்டிருந்தன. நந்தவனத்துக்குள் சென்ற குழல்மொழி கால் நாழிகைக்குள் பலவகை மலர்களாலும் குடலையை நிரப்பிக்கொண்டு திரும்பிவிட்டாள்.

அடிகள் நீராடி வழிபாடுகளை முடித்துக்கொண்டபின் குழல்மொழி அவரை அட்டிற்சாலை சமையலறைக்கு அழைத்துச் சென்று உணவு பரிமாறினாள். உணவு முடிந்ததும் குழல்மொழி அவரை நோக்கி, “அடிகளே! தாங்கள் இனி வசந்த மண்டபத்தில் சென்று ஒய்வெடுத்துக் கொள்ளலாம். மாலையில் நான் அங்கு வருவேன். வேளானிடம் சொல்லிப் படகில் சிறிது நேரம் பறளியாற்றில் சுற்றி வரலாம்” என்றாள்.

“பெண்னே! பகலில் உறங்கும் வழக்கம் எனக்குக் கிடையாது. இப்போது நீ எனக்கு ஒர் உதவி செய்யவேண்டும். இந்த இடையாற்று மங்கலம் மாளிகையைச் சுற்றிப் பார்க்க வேண்டுமென்று எனக்கு ஆசையாக இருக்கிறது. நீ என்னோடு கூட வந்து சுற்றிக் காட்ட முடியுமா?” என்றார் அவள் முகத்தை உற்றுப் பார்த்துக்கொண்டே.

அவருடைய விருப்பத்தைக் கேட்டுக் குழல்மொழி திகைத்தாள். அவருக்கு என்ன பதில் சொல்வதென்று தயங்கினாள். அவர் வெளியிட்ட விருப்பம் அத்தகையதாக இருந்தது. தென்பாண்டி நாட்டின் படைத் தலைவனான தளபதி வல்லாளதேவன் கூட வெளியிட முடியாத விருப்பம் அது. இன்றுவரை இடையாற்று மங்கலம் மாளிகையின் ஒவ்வொரு மூலை முடுக்குகளையும் குறைவின்றி முழுமையாகப் பார்த்தவர் மகாமண்டலேசுவரரைத் தவிர வேறு யாருமில்லை. அவருடைய அருமைப் புதல்வியான குழல்மொழிக்கும் அந்தரங்க ஒற்றனான நாராயணன் சேந்தனுக்கும் கூடத் தெரியாத இரகசியப் பகுதிகள், பாதுகாப்புக்குட்பட்ட இடங்கள் எத்தனையோ அந்த மாளிகையில் உண்டு. அப்படி இருக்கும்போது ஊர் பேர் தெரியாத இந்தத் துறவிக்கு மாளிகையைச் சுற்றிக் காட்டுவது எப்படி முடியும் சுற்றிக் காட்டலாம் என்றே வைத்துக்கொண்டாலும் எவற்றைக் காட்டுவது? எவற்றை மறைப்பது? குழல்மொழி இரு தலைக்கொள்ளி எறும்பாகத் தவித்தாள்.

“நீ தயங்குவதைக் கண்டால் என்னுடைய விருப்பத்தை நிறைவேற்றுவதில் ஏதோ சில இடையூறுகள் இருப்பதாக அல்லவா தெரிகிறது? முடிந்தால் சுற்றிக் காட்டலாம். இல்லாவிட்டால் நான் வற்புறுத்தவில்லை” என்று தணிவான குரலில் மன்னிப்புக் கேட்டது போன்ற தொனியில் கூறினார் துறவி.

‘இடையூறுகளா ? அப்படி ஒன்றுமில்லை. இந்த மாளிகையைப் பொறுத்தவரையில் என்னுடைய தந்தை சில கட்டுப்பாடுகளும் வரையறைகளும் வைத்திருக்கிறார்...”

“என்ன கட்டுப்பாடுகளென்று நான் அறியலாமோ?”

“எல்லா இடங்களையும் எல்லோருக்கும் சுற்றிக் காட்டுவதில்லை! அரண்மனையில் இருப்பவர்களும் சரி, வந்து போகிற விருந்தினர்களும் சரி, இன்னார் இன்ன பகுதிகளில் தான் பழக வேண்டுமென்று கடுமையான கட்டுக்காவல் வைத்திருக்கிறார்.”

அவள் கூறியதைக் கேட்டுத் துறவி மறுமொழி கூறாமல் இலேசாகப் புன்முறுவல் செய்தார்.

“என்ன நீங்களாகவே சிரித்துக் கொள்ளுகிறீர்கள்?"

“மகாமண்டலேசுவரரின் கூர்மையான அறிவு எப்படியெல்லாம் வேலை செய்கிறதென்று நினைத்துப் பார்த்தேன், சிரிப்பு வந்தது.”

“பரவாயில்லை அடிகளே! உங்கள் விருப்பத்தை நான் கெடுக்கக்கூடாது. எழுந்து வாருங்கள். இந்த மாளிகையில் எந்த இடங்களையெல்லாம் காட்டமுடியுமோ அவற்றைக் காட்டுகிறேன்.”

“நீ காட்டாத இடங்களையெல்லாம் நான் என்னுடைய தவ வலிமையைக் கொண்டு ஞான நோக்கத்தால் பார்த்து விட்டால் என்ன செய்வாய்?”

“அப்படி ஞான நோக்கத்தால் பார்க்கிற சாமர்த்தியமுள்ளவர் எல்லா இடங்களையும் இருந்த இடத்திலிருந்தே பார்த்துக்கொள்ளலாமே?” என்று பச்சைக் குழந்தைபோல் கைகொட்டிச் சிரித்து அவரைக் கேலி செய்தாள் மகாமண்டலேசுவரரின் புதல்வி.

“நீ பெரிய குறும்புக்காரப் பெண்! உன் தந்தையின் சூழ்ச்சி, சாதுரியம் ஆகியவற்றில் முக்கால் பங்கு உனக்கு வந்திருக்கிறது” என்று சிரிப்புக்கிடையே கூறிக்கொண்டே சுற்றிப் பார்ப்பதற்காக எழுந்திருந்தார் துறவி.

குழல்மொழி அவரை அழைத்துக்கொண்டு அவருக்கு முன் நடந்தாள்.

“அடிகளே! துறவிகளுக்கு முக்காலமும் உணரும் திறன் உண்டென்று கேள்விப்பட்டிருக்கிறேன். இத் தென் பாண்டி நாட்டின் எதிர்காலத்தைப் பற்றிய சில முக்கியமான செய்திகளைப் பற்றி நான் உங்களிடம் ஆருடம் கேட்கப் போகிறேன்.”

“ஆகா! தாராளமாகச் சொல்கிறேன். எதிர்காலம் ஒளி நிறைந்ததாக இருக்கப்போகிறது. வெற்றிகளும் செல்வங்களும் விளையப்போகின்றன. மாதந் தவறாமல் மூன்று மழை பொழியப் போகிறது....”

“போதும்! போதும்! நிறுத்திக் கொள்ளுங்கள். உலகத்தில் முதல் சோதிடன் பிறந்ததிலிருந்து இன்றுவரை பொதுவாக எல்லோரும் வைத்துக்கொண்டிருக்கிற நாலைந்து புளுகு மூட்டைகளையே நீங்களும் அவிழ்த்து விடுகிறீர்களே? மாதம் மூன்று மழை பெய்வதை இன்னொருவர் கூறியா அறிந்து கொள்ள வேண்டும்? வளத்துக்கு இருப்பிடமான நாஞ்சில் நாட்டில் மாதம் முப்பது நாளும் எங்கேயாவது மழை பெய்து கொண்டுதான் இருக்கிறது. முன்னால் நடந்து கொண்டிருந்த குழல்மொழி திரும்பி நின்று அவரைக் கேலி செய்தாள்.

அப்போது அவர்கள் இருவரும் இடையாற்று மங்கலம் மாளிகையில் தெற்கு மூலையில் ஒரு முக்கியமான பகுதிக்கு வந்திருந்தார்கள். கண்ணாடி போன்ற சுவர்களில் தீட்டியிருந்த உயிர்க் களை சொட்டும் ஒவியங்களை யெல்லாம் பார்த்துக்கொண்டே நடந்தார் துறவி. மகாமன்னராகிய பராந்தகப் பாண்டியரின் வீரச் செயல்கள் அந்த ஒவியங்களில் தீட்டப்பட்டிருந்தன. இன்னும் தென்பாண்டி நாட்டின் அரச மரபைச் சேர்ந்த வீரர்களின் போர்ச் செயல்கள், வாழ்க்கைக் காட்சிகள், அறச் செயல்கள், திருப்பணிகள் எல்லாம் தீட்டப்பட்டிருந்தன. அந்த ஓவியங்களை நிமிர்த்து பார்க்கும்போது இளந் துறவியின் மயக்கும் முகத்தில் பெருமி தச் சாயல் படர்ந்தது. விரிந்து அகன்ற வீர மார்பும், செறிந்து உயர்ந்த தோள்களும் விம்மிப் புடைத்தன. விழிகளில் அற்புதமானதொரு ஒளி மின்னியது. துறவிக்கு மனதில் சுய நினைவு, சூழ்நிலைகளை மறந்த ஒரு பெரும் பரவசம் உண்டாயிற்று. தன்னோடு குழல்மொழி என்ற பெண் வந்து கொண்டிருப்பது கூட அவருக்கு மறந்து போய்விட்டது. சுவர்ப்பரப்பில் துடிக்கும் உயிர்களாக நின்று அந்த ஒவியங்களில் பந்தபாசங்கள் இல்லாத துறவியின் உணர்ச்சியைக் கவர அப்படி என்னதான் இருந்ததோ! எதிரே பார்க்காமல் சுவரைக் கண்டுகொண்டே நடந்தவரை “நில்லுங்கள்! இதற்குமேல் போகக்கூடாது. இனிமேல் கடுமையான பாதுகாப்புக்கு உட்பட்ட இடம்” என்று குறுக்கே கை நீட்டி வழிமறித்தாள் குழல்மொழி.

சுவர்ச் சித்திரங்கள் என்ற கனவுலகத்திலிருந்து விடுபட்டு எதிரே பார்த்தார் துறவி. அந்த இடத்துக்கு எதிரே இருந்த அறை வாயிலில் தூய வெள்ளைத் திரை தொங்கியது. திரையில் பாண்டிப் பேரரசின் அடையாளச் சின்னமாகிய மீனின் உருவமும் நாஞ்சில் நாட்டுக் கலப்பை, மேழி வடிவங்களும் பெரிதாக வரையப்பட்டிருந்தன. திரைக்கு இப்பால் மின்னல் தண்டுபோல் ஒளி வீசும் உருவிய வாள்களுடன் இரண்டு யவன வீரர்கள் காவல் புரிந்து கொண்டிருந்தனர். அடல் வாள் யவனர்’ என்ற சங்கத் தமிழ் நூல்களின் வர்ணனைக்கு ஏற்பக் கருமெழுகில் பிடித்துப் பிடித்து உருவாக்கிய இரண்டு பயங்கரச் சிலைகள் நிற்பதுபோல் ஆடாமல், அசையாமல் நின்று கொண்டிருந்தனர் அந்த யவன நாட்டுக்காவல் வீரர்கள்.

“ஏன் இதற்குமேல் போகக்கூடாது என்கிறாய்? போனால் என்னவாகிவிடும்?” என்று கேட்டார் துறவி.

“நான்தான் முன்னமேயே சொன்னேனே! இந்த மாளிகையில் என் தந்தையாரின் விருப்பத்துக்கு இணங்கத்தான் ஒவ்வொருவரும் நடந்து கொள்ளவேண்டும். அவருடைய உத்திரவை மீறினால் அவருக்குக் கோபம் வந்துவிடும். என்ன செய்வார் என்றே சொல்லமுடியாது.”

“யாரும் பார்க்கக்கூடாத அறைகளில் இதுவும் ஒன்றோ?”

“ஆமாம்!”

“அப்படியானால் சரி! இதற்குமேல் நாம் போகவேண்டாம். உன் வார்த்தைக்கு நான் கட்டுப்படுகிறேன். ஆனால் அந்தத் திரைக்குப் பின்னால் என்ன இருக்கிறது என்பதையாவது தெரிந்து கொள்ளலாமோ?-துறவி கேட்டார்.

குழல்மொழி கொற்கைத்துறை ஒளி முத்துக்களைப் போன்ற தன் அழகிய பல்வரிசை தெரியச் சிரித்தாள். “அடிகளே! நீங்கள் பெரிய தந்திரக்காரர். அந்த இடத்துக்கே போகக்கூடாதென்று நான் சொல்கிறேன். நீங்களோ அங்கே என்ன இருக்கிறதென்று கேட்கிறீர்கள்? கெட்டிக்கார மனிதர்தாம் நீங்கள்.”

“சொல்லாவிட்டால் போயேன். நான் ஆருடத்தால் கண்டுபிடித்துத் தெரிந்து கொண்டால் அப்போது என்ன செய்வாய்? இதோ கண்டுபிடித்து விடுகிறேன் பார்!” சொல்லி ஏதோ மந்திரத்தை உச்சரிக்கிறவர்போல் பாவனை செய்தார். “அடே அப்பா! கண்டுபிடித்துவிடுவீர்களோ? எங்கே, கண்டுபிடித்துச் சொல்லிவிடுங்களேன், பார்ப்போம்”

“இதோ கேட்டுக்கொள், தென்பாண்டி வேந்தர் மரபின் சுந்தர முடியும் வீர வாளும், பொற் சிம்மாசனமும் ஆகிய அரசுரிமைச் சின்னங்கள் இருக்கின்றன அங்கே”

துறவியின் ஆருடத்தைக் கேட்டு அதிர்ந்துபோய் நின்ற குழல்மொழியின் முகத்தில் ஈயாடவில்லை.