பாண்டிமாதேவி/முதல் பாகம்/நீலத் திரைக்கடல் ஓரத்திலே

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
பாண்டிமாதேவி

முதல் பாகம்

1. நீலத் திரைக்கடல் ஒரத்திலே

ன்பம் நிறைந்து பொங்கும் இயற்கையின் மகிழ்ச்சி வெள்ளம்போல் பொன்னிறம் போர்த்ததோர் அழகிய மாலைப் பொழுது. மேலே மஞ்சள் வானம்; கீழே நீலத் திரைக்கடல்; கரைமேல் குமரியன்னையின் ஓங்காரம் முழங்கும் தேவகோட்டம்.

ஏ!கடலே!சங்கமிருந்து தமிழ் வளர்த்த கபாடபுரத்தையும், தென் மதுரையையும் விழுங்கி உன் தமிழ்ப் பசியைத் தீர்த்துக்கொண்டாய்! இனி உன்னை இந்தத்தமிழ் மண்ணில் அணுவளவுகூடக் கவர விடமாட்டேன்’ என்று கடலுக்கு எச்சரிக்கை செய்வதுபோல் குமரி கன்னியா பகவதியார் கோயிலின் மணியோசை முழங்கிறது! சங்கொலி விம்முகிறது: ஆயிரமாயிரம் அலைக் குரல்களால் ஓலமிடும் அந்தப் பெருங்கடல் குமரித்தாயின் செந்தாமரைச் சிறு பாதங்களைப் பயபக்தியோடு எட்டித் தொட்டு மீள்வது போல் நீண்ட மதிற்கவரில் மோதி மீண்டு கொண்டிருக்கிறது.

அந்த மாலைப்போது ஒவ்வொரு நாளும் வந்து போகிற சாதாரண மாலைப் போதுகளில் ஒன்றா? அல்லவே அல்ல! பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் செந்தமிழ் நாட்டின் சரித்திரத்தில் காலத்தால் அழிக்கமுடியா நினைவுக்கும் நிகழ்ச்சிக்கும் இடமாக அமைந்த மாலைப்பொழுது அது!

தென்பாண்டிப் புறத்தாயநாடாகிய நாஞ்சில் நாட்டின் அரசுரிமையும், அமைதியும் குழப்பமான சூழ்நிலைகளால் அவதியுற்றுக் கொண்டிருந்தபோது அதற்கான நல்ல, அல்லது தீய முடிவை உருவாக்க வேண்டிய பொறுப்பு அந்த அழகிய மாலை நேரத்துக்கு ஏற்பட்டிருந்தது. தென் தமிழ்நாட்டின் காவற் பொறுப்பை ஏற்க வேண்டிய பொறுப்பு தம் வாழ் நாளில் அந்தப்புரத்தினின்றும் வெளியேறி யறியாத ஒரு பெண்ணின் தலையில் சுமத்தப்பட வேண்டிய நிலை.

அண்டை நாட்டில், சோழ அரசன் ஆதரவற்ற தென் பாண்டி நாட்டை எப்போது கைப்பற்றலாமென்று படை வசதிகளோடு துடித்துக் கொண்டிருக்கிறான். மகா மன்னரும், திரிபுவனச் சக்கரவர்த்தியும், சென்ற போரெல்லாம் வெற்றியே அடைந்தவருமான சடையவர்ம பராந்தக பாண்டியர் பள்ளிப்படை எய்தி இறைவனடி சேர்ந்துவிட்டார். பாண்டிய நாடு துயரத்தில் ஆழ்ந்திருக்கும் சமயம் பராந்தக பாண்டியரின் புதல்வராகிய இராசசிம்ம பாண்டியன் இளைஞன். காலஞ்சென்ற மகா மன்னரின் கோப் பெருந்தேவியான வானவன்மாதேவியார் கணவனை இழந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை. யாராவது படை யெடுத்து வந்தாலும் எதிர்த்துப் போர் செய்ய இயலாத இந்த நிலையில் சோழ அரசனும் கொடும்பாளுர்க் குறுநில மன்னனும் படையெடுத்து வடபாண்டி நாட்டைக் கைப்பற்றி விட்டனர். இளைஞனான இராசசிம்ம பாண்டியன் சோழனாலும், கொடும்பாளுர்க் குறுநில மன்னனாலும் துரத்தப்பட்டு அவர்களுக்கு அஞ்சி இலங்கைத் தீவுக்கு ஓடி விட்டான்.

கோப்பெருந்தேவியாகிய வானவன்மாதேவி தென் பாண்டி நாட்டில் பறளியாற்றின் கரையிலிருந்த புறத்தாய நாட்டுக் கோட்டையில் போய்த் தங்கியிருந்தார். கணவனை இழந்த கவலை, போரில் தோற்று இலங்கைத் தீவுக்கு ஓடிய மகனைப் பற்றிய வருத்தம், வடபாண்டி நாட்டை அபகரித்துக் கொண்ட எதிரிகள் தென்பாண்டி நாடாகிய நாஞ்சில் நாட்டுக்கும் படையெடுத்து வந்து விடுவார்களோ என்ற பயம் ஆகியவற்றால் தவித்துக் கொண்டிருந்த வானவன் மாதேவியைத் துணிவான ஒரு முடிவுக்கு வரச் செய்த பெருமை அந்த மாலை நேரத்துக்குத்தான் உண்டு.

புறத்தாய நாட்டுக் கோட்டையில் வந்து தங்கியிருந்த வானவன் மாதேவி தென் பாண்டிக் குலதெய்வமாகிய குமரியன்னையைத் தொழுவதற்காக வந்திருந்தார். பறளியாற்றின் கரையிலிருந்து குமரித்துறை வரையிலும் அங்கங்கே வாழையும், தோரணமும், பாளையும் கட்டி மகாராணியாரின் வருகையில் தங்களுக்குள்ள ஆர்வத்தை அலங்கரித்துக் காட்டியிருந்தனர் நாஞ்சில் நாட்டுப் பெருமக்கள். கோட்டையிலிருந்து இருபுறமும் திறந்த அமைப்புள்ள பல்லக்கில் பயணம் செய்த தேவியின் கண்களுக்கு வழி நெடுகிலும் அன்பு நிறைந்த மக்களின் கூட்டத்தைக் கண்டு புதிய ஊக்கம் பிறந்தது. கணவன் மறைந்த சோகமும், மகன் ஒடிப்போன துன்பமும் நினைவின் அடிப்பள்ளத்தில் அமுங்கிவிட்டன.

‘புவன முழுதுடைய மகாராணி வானவன்மாதேவி வாழ்க!’ என்று நாஞ்சில் நாட்டு வேளாளப் பெருமக்களின் பல்லாயிரம் பல்லாயிரம் குரல்கள் வாழ்த்தொலி செய்த போது, சோகத்தில் புழுங்கிய அரசியின் உள்ளம் பெருமித முற்றது.

‘எதிரிகள் கைப்படாமல் எஞ்சியிருக்கும் தென்பாண்டி நாட்டை என் உயிரின் இறுதி மூச்சு உள்ளவரையில் அன்னியர் வசமாக விடமாட்டேன்’ என்ற சபதத்தைத் தனக்குத் தானே செய்துகொண்டார், மகாராணி வானவன் மாதேவி. கன்னியாகுமரியை வானவன்மாதேவி அடைந்த போது ஏற்கெனவே வேறு சில முக்கியப் பிரமுகர்கள் அங்கு முன்பே வந்து காத்திருந்தனர். அப்படிக் காத்திருந்தவர்கள் எல்லோரும் நாஞ்சில் நாட்டு அரசியல், கலை, அமைதி ஆகிய பலப்பல துறைகளில் அக்கறையுள்ளவர்கள் ஆவர்.

கோட்டாற்றில் தங்கியிருக்கும் பாண்டியர்களின் தென்திசைப் பெரும் படைக்குத் தளபதியான வல்லாளதேவன், நிலந்தரு திருவிற் பாண்டியன் காலத்திலிருந்து வழிமுறை வழிமுறையாக அறிவுப்பணி புரிந்துவரும் ஆசிரிய மரபில் வந்த அதங்கோட்டாசிரியர், காந்தளூர்ச்சாலை மணியம்பலங்காக்கும் பவழக் கனிவாயர் முதலிய பிரமுகர்கள் மகாராணி யாரைப் பணிவன் புடன் எதிர்கொண்டு வரவேற்றனர்.

கன்னியாகுமரிக் கடலைக் காண வேண்டுமானால் பெளர்ணமி தினத்தின் மாலை நேரத்தில் காண வேண்டும். அன்று தற்செயலாக வாய்த்த ஒரு பெரும் வாய்பைப் போலப் பெளர்ணமியும் வாய்த்திருந்தது.

“மகாராணி ! இப்படி வாருங்கள்! உங்களுக்கு ஒர் அதிசயத்தைக் காட்டுகிறேன்” என்று சிரித்துக்கொண்டே கூறினார் அதங்கோட்டாசிரியர். வானவன்மாதேவியையும் மற்றவர்களையும் கடலோரத்துப் பாறை ஒன்றுக்கு அழைத்துச் சென்று கிழக்கிலும், மேற்கிலும் சுட்டிக் காட்டினார் அவர்.

மூன்று புறமும் நீல நெடுங்கடல் தரங்கங்கள் என்னும் கரங்கொட்டிப் பண்பாடும் அந்த இடத்தில் அவ்வற்புதக் காட்சியை மகாராணி அதற்கு முன் கண்டதில்லை. ஆசிரியப் பெருந்தகையே! இது என்ன விந்தை! இந்த இடத்தில் மட்டும் இரண்டு சூரியன்களா? என்று கிழக்கிலும் மேற்கிலும் தனித் தனியே கடலின் இரு கோடி விளிம்புகளிலும் தெரியும் இரண்டு ஒளி வட்டங்களைப் பார்த்துக் கொண்டே அதங்கோட்டாசிரியரை வியப்புடன் கேட்டார் அரசி.

அந்தக் கேள்வியைக் கேட்டு அதங்கோட்டாசிரியர் சிரித்தார்.

“மகாராணி! இவை இரு சூரியன்கள் அல்ல. ஒன்று சந்திரன்; மற்றொன்று சூரியன். பெளர்ணமி நாட்களில் மட்டும் குமரித்தாய் இந்த அற்புதக் காட்சியை முழு அழகோடு நமக்குக் காட்டுகிறாள். சந்திரோதயத்தையும், சூரியாஸ்தமனத்தையும் ஒரே சமயத்தில் இந்த இடத்தில் நின்று காணலாம். சக்கவரத்தி இங்கு வரும்போதெல்லாம் பெளர்ணமி நாளாகப் பர்த்துத்தான் வருவார். எத்தனை முறை பார்த்தாலும் இது அவருக்கு அலுக்காது"

காலஞ்சென்ற கணவரைப்பற்றிய பேச்சைக் கேட்க நேர்ந்ததும் மகராணியாருக்குக் கண் கலங்கி விட்டது. அதங்கோட்டாசிரியர் உதட்டைக் கடித்துக் கொண்டார். பேச்சுப் போக்கில் தாம் செய்த தவறு அவருக்குப் புரிந்து விட்டது.

“அடாடா, மகாராணியாருக்கு வருத்தத்தை நினைவு கூறும்படியான விதத்தில் அல்லவா சக்கரவர்த்தியைப்பற்றி ஞாபகப்படுத்தி விட்டேன்; என்னை மன்னிக்கவேண்டும்” என்று அவர் மெல்லிய குரலில் கூறினார்.

வானவன்மாதேவி கண்களைத் துடைத்துக்கொண்டார். மறுபடியும் அந்த அதிசயக் காட்சியைப் பார்த்தார். அதே சமயத்தில் தளபதி வல்லாளதேவன் மற்றொரு அதிசயக் காட்சியைக் கண் இமைக்காமல் உற்றுப் பார்த்துக் கொண்டே நின்றான்.

எந்தப் பாறையில் நின்று மகாராணியாரும், மற்றவர்களும் கடலில் தென்பட்ட அதிசயத்தை நோக்கிக் கொண்டிருந்தார்களோ, அதன் வடமேற்கு மூலையில் மாட்டுக்கொம்பு போலக் கீழே விரிந்து மேலே துணிகள் ஒன்று கூடும் பாறைகள் இரண்டு இருந்தன. அந்தப் பாறைகளின் முக்கோண வடிவான இடைவெளியில் இரண்டு சிவப்புத் தலைப்பாகைகள் தெரிந்தன. பாறையின் மேல் நின்ற மற்றவர்களுக்கு அது கண் பார்வையிலே பட்டிருக்க முடியாது. பாறையின் உயர்ந்த இடம் எதுவோ, அதில் வல்லாளதேவன் நின்று கொண்டிருந்ததனால் தற்செயலாக அது அவன் பார்வையில் பட்டது. தங்களோடு வந்திருந்த பரிவாரத்தைச் சேர்ந்த வீரர்க்ளில் யாராவது இருவர் கடற்காட்சியை வேடிக்கைப் பார்ப்பதற்காக இறங்கிப்போய் அந்தப் பாறை இடுக்கில் நின்று கொண்டிருக்கிறார்களோ என்ற இயல்பான எண்ணம் தளபதிக்கு உண்டாயிற்று. ‘பரிவாரத்து வீரர்கள் கோவில் வாசலிலேயே தங்கிவிட்டார்களே! தவிர அவர்களில் யாரும் சிவப்புத் தலைப்பாகை அணிந்தவர்கள் இல்லையே?’ என்ற ஐயம் மெல்ல அவன் மனத்தில் எழுந்தது. ‘தான், அதங்கோட்டாசிரியர், மகாராணியார், பவழக்கனிவாயர், ஆகிய நால்வரைத் தவிர வேறு வீரர்கள் எவரும் கடற்கரைப் பாறைக்கு வரவே இல்லை என்று உறுதியாகத் தெரிந்து கொண்டபின் தளபதியின் சந்தேகம் வலுப்பட்டது. பாறையை ஒட்டித் திடீர் திடீரென்று ஆள் உயரத்துக்கு அலைகள் எழும்போது அந்தத் தலைப்பாகைகள் அவன் கண் பார்வைக்குத் தெரியாமல் மறைந்துவிடும். அலைகள் தணிந்தபோது மறுபடியும் தெரியும்.

தளபதி வல்லாளதேவன் நீண்டநேரமாக அந்தப் பாறை இடுக்கையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். மற்ற மூவரும் தேவியின் ஆலயத்துக்குத் திரும்புவதற்காகப் பாறையிலிருந்து இறங்கத் தொடங்கிவிட்டனர்.

“என்ன ஐயா, தளபதி யாரே! கோவிலுக்கு வரவில்லையா? வீரர்களுக்கு அழகு உணர்ச்சி குறைவு என்று சொல்லுவார்கள். நீர், கடலின் அழகை வைத்த கண் வாங்காமல் காண்பதைப் பார்த்தால் வீரர்களுக்குத்தான் அழகு உணர்ச்சி அதிகமென்று துணிந்து கூறிவிடலாம் போலிருக்கிறேதே?” என்றார் அதங்கோட்டாசிரியர்.

“அழகை எங்கே அவர் பார்க்கப் போகிறார்? இந்தக் கடலில் எத்தனை போர்க் கப்பல்களை எப்படி எப்படியெல்லாம் செலுத்தலாம் என்பதைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருப்பார்” என்றார் பவழக் கனிவாயர்.

“உங்கள் இரண்டு பேருடைய அநுமானங்களுமே தவறு. நான் வேறொரு காரியமாக நிற்கிறேன். சிறிது தாமதமாகலாம். நீங்கள் மகாராணியாரை ஆலயத்துக்கு அழைத்துச் செல்லுங்கள்” என்று தளபதி அவர்களுக்கு மறுமொழி கூறி அனுப்பினான்.

அவர்கள் மூவரும் பாறையிலிருந்து இறங்கிச் செல்லத் தொடங்கிய அதே சமயத்தில் கீழே கடற்கரைப் பாறையின் பிளவில் தெரிந்த அந்தச் சிவப்புத் தலைப்பாகைகள் மெல்ல நகர்ந்து அசைவதை வல்லாளதேவன் கண்டான். எண்ணற்ற தீரச் செயல்களைச் செய்து பழக்கப்பட்டவனும், தென்கடற் கோடியில் பல கடற்போர்களில் வாகை சூடியவனுமான தென்திசைத் தளபதியின் மனத்தில் இனம் புரியாத திகில் பரவியது. சந்தேகங்களும், குழப்பங்களும் அடுக்கடுக்காகத் தோன்றின.

மாலை ஒளி குறைந்து பொழுது மங்கிக்கொண்டே வந்தது. ஆனாலும் முழுமதியின் நிலா ஒளியில் அந்த இடத்தை அவன் நன்றாகப் பார்க்க முடிந்தது. பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஒரு பெரிய அலை பாய்ந்து வந்து அந்தப் பாறைப் பிளவை மறைத்தது. வல்லாளதேவன் திரும்பிப் பார்த்தான். கோவில் வாயிலில் கண்ணைக் கவரும் தீபாலங்காரங்களுக் கிடையே அர்ச்சகர்களின் வாழ்த்தொலியும், மங்கள வாத்தியங்களின் இன்னிசையும், அடிகள்மார் பாடும் பண்ணிறைந்த பாட்டொலியுமாக மகாராணியாருக்கு வரவேற்பு நடந்து கொண்டிருந்தது.

ஒரே ஒரு கணம் ! அவன் மனத்தில் ஒரு சிறிய போராட்டம்! கோவில் வாயிலுக்குப் போய்க் கோலாகலமான வரவேற்பில் கலந்துகொள்வதா? கீழே இறங்கி அந்தக் கடலோரத்துப் பாறைப் பிளவில் மறைந்து கொண்டிருக்கும் ‘தலைப்பாகைகளைப் பின்தொடர்வதா? இன்னும் ஒரிரு விநாடிகள் தாமதித்தாலும் மேடும் பள்ளமுமாக முண்டும் முடிச்சுமாக நெடுந்துாரம் பரவியிருக்கும் அந்தப் பாறை பிரதேசத்தில் குறிப்பிட்ட உருவங்கள் எந்த வழியாகச் சென்று எப்படி மறையுமென்று கூறமுடியாது. ஆர அமரச் சிந்தித்து நிதானமாக ஒரு முடிவுக்கு வர அவனுக்கு அவகாசமில்லை.

அரைப் பனை உயரமுள்ள அந்தப் பாறை விளிம்புக்கு வந்து வேகமாகக் கீழே மணற் பரப்பில் தாவிக் குதித்தான். முழங்காலளவு கடல் நீரில் நடந்து சென்றால்தான் அந்தப் பாறைப் பிளவை நெருங்க முடியும். தளபதியின் கால்களில் அதற்கு முன்பில்லாத சுறுசுறுப்பும் விரைவும் ஏற்பட்டன. நீரைக் கடந்து செல்லும்போது குறுக்கிட்ட இரண்டொரு அலைகள் அவனை நன்றாக நனைத்துவிட்டன. வேகமாக வந்து முகத்தில் அறைந்த கடல் நீர் மூக்கின் வழியே வாயில் புகுந்து உப்புக் கரித்தது. கண்கள் காந்தின. எதிரே பார்க்காமல் நடந்ததால் பாறைகளில் இடித்து முழங்காலில் இரத்தம் கசிந்தது.

இடுப்பிலிருந்த உடைவாளை இறுக்கிப் பிடித்துக்கொண்டு தட்டுத் தடுமாறி ஏறி, முன்பு சிவப்புத் தலைப்பாகைகள் தெரிந்த பாறையின் இடைவெளியில் குதித்தான். சுற்றும் முற்றும் பார்த்தான்; யாரையும் காணவில்லை.

இதென்ன! மாயமா? மந்திரமா? இவ்வளவு வேகமாக அந்த உருவங்கள் எப்படி வெளியேறியிருக்க முடியும்? ஒருவேளை அவை பொய்த் தோற்றமாக நம்முடைய கண்களுக்கு மட்டும் தெரிந்த பிரமையா? என்று எண்ணிக் கொண்டே மற்றொரு வழியாகக் கீழே செல்லும் பாதையில் வேகமாக நடந்தான். இரண்டு மூன்று அடிகளே நடந்திருப்பான்; வழியின் திருப்பத்திலிருந்து இருபுறமும் இரண்டு வாள் துணிகள் பாய்ந்து நீண்டன!