உள்ளடக்கத்துக்குச் செல்

பாண்டிமாதேவி/முதல் பாகம்/வசந்த மண்டபத்து இரகசியங்கள்

விக்கிமூலம் இலிருந்து

12. வசந்த மண்டபத்து இரகசியங்கள்

கன்னியாகுமரியிலிருந்து எவ்வளவோ அருமையாகப் பாதுகாத்துக்கொண்டு வந்த அந்த ஒலை கடைசியில் மகாமண்டலேசுவரர் மாளிகையின் அந்தரங்க அறையில் எரிந்து சாம்பலாகப் போகும்படி நேரிடுமென்று தளபதி வல்லாளதேவன் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.

ஒலையை எரித்துச் சாம்பலாக்கிவிட்ட பெருமையோ என்னவோ, இடையாற்றுமங்கலம் நம்பி அவனைப் பார்த்து மிக அலட்சியமாகச் சிரித்தார்.

“என்ன தளபதி நான் இப்படித் திடீரென்று உன்னுடைய அநுமதியில்லாமலே நீ கொண்டு வந்த ஒலையை அழித்துவிட்டேன் என்ற வருத்தமா? ஏன் பேசாமல் உம்மென்று உட்கார்ந்திருக்கிறாய்? கவலையை விட்டுவிட்டு உறங்கச் செல், மற்றவற்றைக் காலையில் பேசிக்கொள்ளலாம்.”

அவருக்கு அவன் ஒரு பதிலும் சொல்லவில்லை. அதற்குள் அவரே மேலும் கூறினார்: “சேந்தா! பாவம், தளபதி இன்று மாலையிலிருந்து அடுத்தடுத்துப் பல அதிர்ச்சிகளுக்கு ஆளாகித் தொல்லைப்பட்டிருக்கிறார். மிகவும் களைத்துப் போயிருப்பார். விடிந்தால் மந்திராலோசனைக் கூட்டத்துக்காக அரண்மனைக்குப் போயாகவேண்டும். சிறிது நேரமாவது அவர் உறங்கட்டும் போ! விருந்தினர் மாளிகையில் கொண்டு போய்ப் படுக்கை ஒழித்துக் கொடு, வேண்டிய வசதிகளைக் கவனித்துக்கொள்” என்று நாராயணன் சேந்தனை நோக்கிக் கூறிவிட்டு, வல்லாளதேவன் பக்கமாகத் திரும்பி, ‘போ. வல்லாளதேவா! போய் ஒய்வெடுத்துக்கொள்” என்று சொன்னார். அவருடைய பேச்சின் விரைவும் அவசரமும் கண்டு அவனுக்கு மனத்தில் ஏதோ ஒரு சந்தேகம் தோன்றியது.

எதற்காகவோ தன்னை அந்த இடத்திலிருந்து அவர் விரைவில் அனுப்பிவிட விரும்புகிறாரென்று அநுமானம் செய்தது அவனுடைய மனம்.

“நான் வருகிறேன் சுவாமி!” என்று அவருக்கு வணக்கம் செலுத்திவிட்டு, அங்கிருந்து எழுந்திருந்து நாராயணன் சேந்தனைப் பின்பற்றி விருந்தினர் மாளிகைக்கு நடந்தான் அவன். விருந்தினர் மாளிகை வசந்த மண்டபத்துக்கு அருகில் இருந்தது.

துாக்கம்? அது அன்றிரவு மட்டுமல்ல, அதற்கு அப்புறமும் பத்து இரவுகளுக்குத் தன்னை நெருங்க முடியாத அவ்வளவு கவலைகளாலும், ஐயங்களாலும் குழப்பங்களாலும் மண்டை கனத்துப் பாரமாகி வெடித்துவிடும்போலத் தோன்றியது தளபதிக்கு. விருந்தினர் மாளிகையில் கொண்டுவந்து விட்டு விட்டு நாராயணன் சேந்தன் போய்விட்டான். தளபதி வல்லாளதேவனைச் சுற்றி அவனுக்குத் துணை இருந்தவை இருளும் தனிமையும்தாம்.

சேர நாட்டு யானைத் தந்தத்தில் இழைத்துச் செய்த விருந்தினர் மாளிகையின் அழகான கட்டிலில் எண்ணெய் நுரையைப் போன்ற பஞ்சணை மெத்தையின் மேல் உறக்கம் வராமல் புரண்டுகொண்டிருந்தான் வல்லாளதேவன்.

மாளிகையின் பின்புறத்துச் சுவரில் பறளியாற்று நீர் அலைகள் மோதும் ஒலி சுவர்க்கோழிகளின் ங்ொய் என்ற ரீங்காரம் இவற்றைத் தவிர எங்கும் நிசப்தம் சூழ்ந்திருந்தது. அவன் கட்டிலில் புரண்டதைப் போலவே அவன் மனத்திலும் பலப் பல எண்ணங்கள் புரண்டுகொண்டிருந்தன.

‘எவ்வளவு அரும்பாடுபட்டு ஒற்றர்களிடமிருந்து நாம் அந்த இரகசிய ஒலையைக் கைப்பற்றினோம்? அதனுள் அடங்கியிருந்த செய்திதான் எவ்வளவு முக்கியமானது? பார்க்கப்போனால் எவ்வளவு பயங்கரமானது ? நமது திடமான உள்ளத்தின் நம்பிக்கையையே எரிப்பதுபோல் அல்லவா மகாமண்டலேசுவரர் அந்த ஒலையை எரித்துவிட்டார்! அவருக்கு எவ்வளவு நெஞ்சுரம்? ஒருவேளை அவரே வடதிசைப் பேரரசர்களுக்கு உள் கையைப்போல இருந்துகொண்டு சதி செய்கிறாரோ? அதனால்தான் இந்த ஒலையை மகாராணியாரோ கூற்றத் தலைவர்களோ பார்க்கக் கூடாதென்று எரித்து விட்டாரோ?’

மகாமண்டலேசுவரரைப்பற்றித் தென்பாண்டி நாட்டுத் தளபதி பதவியை ஏற்றுக்கொண்ட நாளிலிருந்து அவனுடைய மனத்தில் தோன்றியிராத சந்தேகங்களெல்லாம் இப்போது ஒன்றன்பின் ஒன்றாகத் தோன்றின.

எதை எதையோ நினைத்துக்கொண்டு படுக்கையில் தவித்துக்கொண்டு கிடந்தவன் குபிரென்று வாரிச் சுருட்டிக் கொண்டு துள்ளி எழுந்தான். அந்த மாளிகையின் இருட்டில் அவனுடைய செவிகள் எந்த ஒலியையோ கூர்ந்து கேட்பதற்கு முயன்றன. அவன் உடலில் நடுக்கமும் ரோமாஞ்சலியும் உண்டாயின. உற்றுக் கேட்டான். இதுவரை இயற்கையாகக் கேட்ட பறளியாற்றுத் தண்ணிர் பாயும் ஓசையோ, சில வண்டுகளின் சப்தமோ அல்ல அது; அவனுடைய கட்டிலுக்கு அடியில் தளத்தின்மேல் யாரோ திடும் திடுமென்று கால்வைத்து நடட்ப்பதுபோலக் கேட்டது. மாளிகைக்கு வெளியே நிலா ஒளி இரவைப் பகலாக்கிக் கொண்டிருந்தாலும், உள்ளே இருட்டாகத்தான் இருந்தது. சாளரங்களெல்லாம் சுவரில் மிக உயரத்தில் இருந்ததனால் உள்ளே ஒளியைத் தரமுடியவில்லை. அந்த அகால வேளையில் இருட்டில் அப்படிப்பட்ட ஓசையைக் கேட்டபோது தன் படுக்கைக்கு எதிரே நிற்கும் பெரிய வடிவுடன் கூடிய தூண்களெல்லாம் கருநெடும் பூதங்களாக மாறிக் கால்பெற்று மெதுவாக நடப்பனபோல ஒரு பயங்கரப் பிரமை உண்டாயிற்று அவனுக்கு.

ஒருவிதமாக இடையிலிருந்து வாளை உருவிக் கையில் வைத்துக்கொண்டு வேகமாக அடித்துக்கொள்ளும் இதயத்துடன் படுக்கையிலிருந்து கீழே இறங்கினான் தளபதி. தயங்கித் தயங்கி அடி எடுத்து வைத்தான். அந்த ஒலி மெல்ல மெல்லத் தேய்ந்து மங்கியது. படுக்கையின் கீழே கேட்ட ஒலி இப்போது மேற்கு நோக்கிச் செல்லுவது போல் திசை மாறியது. அந்த ஒலி கேட்ட இடங்களிலெல்லாம் விருந்தினர் மாளிகையின் தரையே அதிர்வது போல் ஒருவகைச் சலனம் உண்டாயிற்று. வல்லாளதேவனும் பொறுமை இழக்காமல், இருட்டில் தூண்களிலும், படிகளிலும் மோதித் தட்டுத் தடுமாறி விழுந்து கொண்டு அந்த ஒலியைப் பின்பற்றிச் சென்றான்.

மாளிகை முற்றத்தின் கடைசிச் சுவர்வரை அந்த ஒலியைப் பின்தொடர முடிந்தது. அப்பால் முற்றத்துக் கதவைத் திறந்தபோது, கதவு நிலையின் கீழே வாசற்படியைத் தழுவினாற்போல் பறளியாறு பொங்கிப் பெருக்கெடுத்து ஒடிக்கொண்டிருந்தது.

நிலா ஒளியின் மோகன மயக்கத்தில் வானுலகத்து அமுதக் குழம்பே பொங்கிப் பாய்வது போலிருந்த ஆற்றின் அழகை அப்போது அவன் கண்கள் அதுபவிக்க முடியவில்லை.

“இந்த மாளிகையில் இரவு வேளைகளில் ஏதாவது பிசர்சு நடமாட்டம் இருக்குமோ?” என்று முதலில் ஓர் எண்ணம் எழுந்தது. சை! இதென்ன ! சுத்த அசட்டுத்தனமான எண்ணம்? பிசாசாவது நடமாடுகிறதாவது? நாம் தான் இந்த அர்த்தராத்திரிப் பொழுதுக்குமேலே இந்த இருண்ட மாளிகையில் பிசாசுபோல் அலைந்துகொண்டிருக்கிறோம்’ என்று முதலில் தோன்றிய அந்த எண்ணத்தை அழிக்க முயன்றான்.

‘புது இடம்! எவ்வளவு களைப்பாக இருந்தாலும் உறக்கம் வராது’ என்று அவன் நினைத்திருந்தான். அதுவோ வெறும் புது இடமாக மட்டும் இருக்கவில்லை, புதுமைகளும் சூழ்ச்சிகளும் நிறைந்த இடமாகவும் இருந்தது.

‘எப்படியாவது இருந்து தொலைந்துவிட்டுப் போகட்டும்; நான் போய்ப் படுக்கையில் புரண்டு இந்த இரவைக் கழித்து விடுகிறேன்’ என்று தனக்குள் ஒரு தீர்மானத்துக்கு வந்தவனாக முற்றத்துக் கதவை மறுபடியும் வேகமாகச் சாத்திவிட்டுத் திரும்பிப் படுக்கையில் வந்து உட்கார்ந்தான்.

ஒரு சில விநாடிகளே கழிந்திருக்கும். மீண்டும் அதே ஒசை! அதே இடத்திலிருந்து தொடங்கி மேற்கு நோக்கிச் சென்றது. இப்போது பாதாளக் கிணற்றுக்குள்ளேயிருந்து கேட்கிறமாதிரி “கசுமுசு'வென்று பேச்சுக்குரலும் கேட்பது போலிருந்தது. மனப்பிரமைதானோ? என்று தன்னை நம்புவதற்கே மறுத்தது அவன் மனம், இது உண்மையா? அல்லது நமக்கு மட்டுமே ஏற்படக்கூடிய மனப்பிரமையா? நாராயணன் சேந்தனைப் போய் அழைத்துக்கொண்டு வந்து இந்த மர்மத்தைச் சோதித்துப் பார்த்துவிட்டால் என்ன? இதற்கு முன்பு பகலில் எவ்வளவோ தடவைகள் இந்த மாளிகையில் வந்து தங்கியபோது இம்மாதிரி மர்மமான அநுபவம் எதுவும் ஏற்பட்டதில்லையே! என்ன ஆனாலும் சரி! நம்பியும், நம்பாமலும் இப்படித் தவிப்பதற்குள் நானே எழுந்திருந்து போய் நாராயணன் சேந்தனைக் கூப்பிட்டு வந்துவிடுகிறேனே ? என்று ஒரு முடிவுக்கு வந்தவனாக, விருந்தினர் மாளிகைக் கட்டிலிலிருந்து இறங்கி வெளியேறினான் அவன்.

இருட்டில் நிதானமாக நடந்து மாளிகையின் வாசற்படிக்கு அவன் வந்தபோது ஆச்சரியத்தில் மூழ்கிப் போனான். எதிரே கையில் தீபத்துடன் நாராயணன் சேந்தனே அங்கு வந்து கொண்டிருந்தான். இதென்ன விந்தை! நெல் அளக்கும் தாழியைவிடக் குட்டையான இந்த மனிதன் ஏதாவது மாயம், மந்திரம் தெரிந்தவனா? இவனைச் சந்திக்கப் போனால் இவன் விழித்துக் கொண்டிருப்பானோ, அல்லது குறட்டை விட ஆரம்பித்திருப்பானோ என்று சந்தேகப்பட்டுக் கொண்டே நான் புறப்படுகிறேன். இவனோ நினைப்பதற்கு முன்னால் தானே கையில் சுடர்விடும் விளக்கோடு என் முன்னால் வந்து நிற்கிறான்’.

இவ்வாறு எண்ணிக்கொண்டு மாளிகையின் வாசலிலேயே நின்றுவிட்டான் வல்லாளதேவன். ஆனால் மறுவிநாடியே தன் அதுமானம் தவறு என்பது அவனுக்குப் புரிந்தது. அவன் ஏமாற்றமடைந்தான். அவன் நாராயணன் சேந்தன் வருவதைப் பார்த்துக்கொண்டு நின்றானே தவிர, வந்து கொண்டிருந்த நாராயணன் சேந்தன் அவன் நின்று கொண்டிருப்பதைக் கவனித்ததாகவே தெரியவில்லை. நேரே விருந்தினர் மாளிகையை நோக்கித்தான் அவன் வந்து கொண்டிருக்கிறானென்று வல்லாளதேவன் நினைத்தான்.

ஆனால் மாளிகைக்கு மிகப் பக்கத்தில் வந்ததும், சட்டென்று வலது பக்கமாகத் திரும்பி அங்கிருந்த கொடிமண்டபத்துக்குள் நுழைத்துவிட்டான் நாராயணன் சேந்தான்.

“ஓ! சேந்தா ! இப்படிக் கொஞ்சம் வந்துவிட்டுப் போயேன்!” சொற்கள் நுனி நாவரைக்கும் வந்துவிட்டன. என்ன தோன்றியதோ, தான் சொல்ல வந்ததைச் சொல்லாமல் தளபதி உடனடியாக அடக்கிக்கொண்டுவிட்டான். நின்ற இடத்திலிருந்தே நிலவின் ஒளியில் மரகதக் குன்றமெனக் காட்சியளிக்கும் அந்தக் கொடிமண்டபத்தை நன்றாகப் பார்த்தான் தளபதி. அதற்குள்ளிருந்து முரசடிப்பதுபோல் ஒலி வந்தது.

மல்லிகை, முல்லை, மாதவி ஆகிய கொடிகளை இயற்கையாக அந்த இடத்தில் மரங்களில் படரச்செய்து முற்றிலும் பசுங் கொடிகளாலானதோர் கட்டிடம் போலவே காட்சி தருமாறு அமைக்கப்பட்டிருந்தது லதா மண்டபமெனப்படும் அந்தக் கொடிமண்டபம்.

‘மழைக் குளிரும், ஈரம் மிகுந்திருக்கும் சூழலுமுள்ள அந்தச் சமயத்தில், உலகம் உறங்கும் நடு இரவில் நாராயணன் சேந்தனுக்கு அங்கே என்ன வேலை? பால்போல் நிலா ஒளி பரவியிருக்கும்போது அவனுக்கு விளக்கு எதற்கு? என்று சிந்தித்துத் திகைத்தான் வல்லாளதேவன். ஏ, அப்பா! இந்தக் குள்ளனும், இவனை ஆட்டிவைக்கும் இடையாற்று மங்கலம் நம்பியும் எவ்வளவு மர்மங்களை அடக்கி வைத்துக் கொண்டிருக்கிறார்கள்? இவைகளை முழுவதும் தெரிந்துகொள்வதற்கு வீரமும், வாளும், ஆள்பலமும் மட்டும் போதாது போலிருக்கிறது; அறிவு நுட்பத்தினாலும் சொந்தச் சாமர்த்தியம், சாதுரியம் இவைகளால் மாத்திரமே சாதிக்க முடிந்த காரியங்கள் இந்த உலகத்தில் நிறைய இருக்கின்றன. மாக மண்டலேசுவரரின் செயல்களெல்லாம் இந்த வகையைச் சேர்ந்தவை. - ஏனோ தெரியவில்லை. இடையாற்றுமங்கலம் நம்பியைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் அவனுடைய மனக்கண்ணுக்குமுன் உருவெளியில் உயரமும், அகலமும், பருமனும் அளக்கலாகா அளவும் பொருளும் துளக்கலாகா நிலையும் தோற்றமும் மாபெரும் மலைச்சிகரமொன் தோன்றியது.

லதா மண்டபத்துக்குள் நுழைந்த நாராயணன் சேந்தன் வெகு நேரமாகியும் வெளியே திரும்பிவரவில்லை. அங்கே அவன் என்னதான் செய்துகொண்டிருக்கிறான்? போய்ப் பார்ப்போமே என்று வல்லாளதேவன் விருந்தினர் மாளிகை வாசலிலிருந்து பதுங்கிப் பதுங்கி நடந்து லதா மண்டபத்துக்குள் புகுந்தான். அவனுக்கு ஒரே ஏமாற்றமாக இருந்தது. லதா மண்டபத்தில் நாராயணன் சேந்தன் இல்லை. வந்த வழியே திரும்பாமல் இந்தக் கொடிமண்டபத்திலிருந்து வெளியேறுவதற்கு வேறு வழி ஏதேனும் இருக்குமோ? அப்படி இருக்குமானால் இந்த வழியாகச் சேந்தன் வெளியேறியிருப்பானோ? எதற்கும் சந்தேகமறச் சுற்றிப் பார்த்துவிடலாம் என்று எண்ணியவனாய் வட்ட வடிவமாய் அமைக்கப் பட்டிருந்த ஒரு மேடையை நெருங்கினான்.

பளிங்கு மேடையில் ஓரிடத்தில் தீபத்தைக் கீழேவைத்து எடுத்ததற்கு அடையாளமாகிய எண்ணெய்க் கரை படிந்திருப்பது இலேசாகத் தெரிந்தது.

பளிங்கு மேடையின் நட்ட நடுவில் உட்கார்ந்த கோலத்தில் திருமகள் சிலை ஒன்று செதுக்கி வைக்கப்பட்டிருந்தது. சிலையின் கையிலிருந்த தாமரை மொட்டின் மேலும் கீழே படிந்திருந்ததுபோல் எண்ணெய்க் கறையின் தழும்பு தெரிந்தது. யாரோ எண்ணெய்ப்பட்ட விரல்களால் தொட்டிருக்க வேண்டுமென்று சிரமம் இல்லாமல் ஊகித்க முடிந்தது.

நாராயணன் சேந்தன் தன் கையில் கொண்டு வந்த எண்ணெய்த் தீபத்தைப் பளிங்குத் தரையில் வைத்துவிட்டு அந்தக் கைவிரல்களால் திருமகள் சிலையின் கையிலுள்ள தாமரை மொட்டையும் தொட்டிருக்கிறான்.

தளபதி வல்லாளதேவனுக்கு மின்வெட்டும் நேரத்தில் ஒரு யோசனை உண்டாயிற்று. நடுங்கும் கையால் திருமகள் சிலையின் வலதுபுறத்துத் தாமரை அரும்பைத் தொட்டான். தொட்ட வேகத்தில் அது நன்றாகத் திருகுவதற்கு வந்தது. அது தானாகத் திருகமுடியாமல் இறுகி நிற்கிறவரையில் அதைத் திருகினான் தளபதி.

பன்னிரண்டாவது முறையாக அவன் கைவிரல்கள் அந்த மலர் அரும்பைத் திருகுவதற்கு நெருடியபோது அவனுடைய உடலைச் சுமந்து கொண்டிருந்த பளிங்கு மேடை பூகம்பமடைந்தது போலக் கிடுகிடுவென்று ஆடியது. அடுத்த கணம் அந்தக் கருங்கல்லாலான திருமகள் சிலை யாரோ பிடித்து இழுத்துக்கொண்டு போவதைப்போலக் கிறுகிறுவென்று பின்னால் நகர்ந்தது. அது இருந்த இடத்தில் நாலுகோல் நீளமும் நாலுகோல் அகலமுமுள்ள சதுரமான இடைவெளி ஒன்று ஏற்பட்டது. மிரளும் கண்களால் குனிந்து பார்த்தான் அவன். வரிசையாகப் படிகள் தெரிந்தன. அதற்கப்பால் ‘கருங்கும் என்று ஓர் இருட்டுக் குகையாக இருந்தது. தன்னைச் சுற்றிலும் நாலுபுறமும் ஒரு பார்வை பார்த்துவிட்டு அந்தச் சுரங்கத்துக்குள் துணிந்து இறங்கினான் அவன்.

பத்துப் பதினைந்து படிகள் இறங்கி உள்ளே சென்றதும் மேலே பார்த்தது போலவே ஒரு திருமகள் சிலை. சிலையின் இடது கைத் தாமரை அரும்பைத் திருகினான் அவன். தளபதியின் எண்ணம் சரியாக இருந்தது. அவன் அதைத் திருகி முடிந்ததும் மேலே சுரங்க வாயில் நகர்ந்து மூடிக் கொண்டுவிட்டது. வெளியிலிருந்து வந்து கொண்டிருந்த சிறிதளவு நிலா ஒளியும் அடைப்பட்டுப் போகவே, மைக்குழம்பை வழித்து அப்பினாற்போல் இருட்டு கோரமாயிருந்தது.

எங்கோ ஒரு மூலையில் சிறு மின்மினிப் பூச்சுபோல் சுரங்கப் பாதையில் தொலை தூரத்தில் ஒரு வெளிச்சம் தெரிந்தது. அந்த வெளிச்சம் சிறிது சிறிதாக நகர்ந்து மேலே சென்று கொண்டிருந்ததனால் நாரயணன் சேந்தன் தீபம் ஏந்திய கையுடன் முன்னே சென்று கொண்டிருக்கிறா னென்று உய்த்துணர முடிந்தது.

தட்டுத் தடுமாறி வழியைத் தடவிக்கொண்டு தளபதி மேலே நடந்தான் . சிறிது தூரம் சென்றதும் கீழே பாறையும் மணலுமாக இருந்தன. அங்கே கலகலவென்று தண்ணிர் கசிந்து இனிய ஜலதரங்க நாதத்துடன் பாய்ந்து கொண்டிருந்தது. அதன் காரணமாக, வருகிறவர்கள் நடப்பதற்குக் கல்தூண்களை நிறுத்தி அவற்றின் மேல் வரிசையாக மரப்பலகைகளைப் பாலம் போலப் பிணைத்திருந்தார்கள். அதன் மேல் நடக்கும்போது திடும்’ ‘திடும்’ என்ற ஓசை உண்டாயிற்று. அது விருந்தினர் மாளிகையில் தான் படுத்திருந்த பகுதிக்கு அடியில் இருக்கவேண்டுமென்று வல்லாளதேவன் நினைத்தான். தான் படுத்திருந்த இடத்தில் அந்த மாதிரி ஓசை உண்டானதற்குக் காரணம் அந்தச் சமயத்தில் சுரங்கத்துக்குள் அதே மரப்பாலத்தில் யாரோ நடந்து சென்றிருக்கிறார்களென்று அவனுக்குத் தோன்றியது. பறளியாற்றில் நீர் நிறைந்து பாய்வதால் அந்தச் சுரங்கத்துக்குள் நீர ஊறிக் கசிவு ஏற்பட்டிருக்கிறதென்று தெரிந்துகொள்ள முடிந்தது.

முன்னால் விளக்குடன் போய்க் கொண்டிருக்கிற நாராயணன் சேந்தன் தான் நடக்கிற ஓசையைக் கேட்டுத் திரும்பிப் பார்த்துவிடக்கூடாதே என்பதற்காக, மரப்பாலத்தில் பாதங்களை அழுத்தி ஊன்றாமல் மெள்ள நடந்து சென்றான் வல்லாளதேவன். கால் நாழிகை நடைக்குப்பின் பூமிக்கு அடியிலேயே கட்டப்பட்டிருந்த ஒரு விசாலமான மண்டபம் போன்ற இடம் அவனுடைய கண்பார்வையில் பட்டது.

அந்த மண்டபத்தில் வெளிச்சமாக இருந்தது. பேச்சுக் குரல்கள் கேட்டன. சுரங்கப் பாதையின் முடிவில் மண்டபத்துக்குள் நுழையும் இடத்தில் சுவரோடு சுவராகப் பதுங்கி நின்றுகொண்டு பார்த்தான் வல்லாளதேவன்.

அந்தப் பாதாள மண்டபத்தின் நாற்புறத்து இருண்ட மூலைகளிலும் அம்பாரம் அம்பாரமாகக் குவித்து வைக்கப்பட்டிருந்த வாள்களையும், வேல்களையும், கேடயங்களையும், ஈட்டிகளையும், கவசங்களையும் பார்த்தபோது அவனுக்குத் திகைப்பு ஏற்பட்டது.

சற்றுமுன் அந்தரங்க மண்டபத்திலிருந்து அவனுக்கு விடைகொடுத்து அனுப்பிய மகாமண்டலேசுவரர் இப்போது இந்தப் பாதாள மண்டபத்துக்குள் நின்று கொண்டிருந்தார். அவருடைய திருப்புதல்வி குழல்மொழி நாச்சியார் இருந்தாள். இருட்டில் கொள்ளி ஏந்தி நிற்கும் குட்டைப் பேய் போல் நாராயணன் சேந்தன் தீபத்தைப் பிடித்துக்கொண்டு நின்றான். இவர்கள் மட்டும் இங்கே இப்போது இருந்திருந்தால் தளபதிக்கு ஆச்சரியம் ஏற்பட்டிருக்கக் காரணமே இல்லையே!

வடதிசை மூவரசருக்கும், அரச பாரத்தைத் தாங்கும் சுமைக்கும் பயந்து இலங்கைத் தீவுக்கு ஓடிவிட்டதாக நினைக்கப்பட்ட குமார பாண்டியன் இராசசிம்மனும் இங்கே இவர்களோடு நிற்பதுபோல் தளபதிக்கு ஒரு பிரமை கண்களில் ஏற்பட்டது. ஆனால் அந்த பிரமை மறுகணமே நீங்கிவிட்டது. அவனுக்குக் குமார பாண்டியரைப்போல் காட்சியளித்து அவன் கண்களை ஒரு கணம் ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியது அந்த இளந்துறவியின் தோற்றம்தான். படகில் வரும் போது துறவியை எங்கோ கண்டிருப்பதுபோல் வந்த நினைவு அவன் மனத்தில் இப்போது உறுதிப்பட்டது.

“சேந்தா! அது என்ன? அந்த மூலையில் யாரோ ஒளிந்து நிற்பதுபோல் தெரிகிறதே? இப்படி விளக்கைக் கொண்டுவா"- என்று மகாமண்டலேசுவரர் தளபதி நின்ற மூலையைச் சுட்டிக்காட்டினார்.

உடனே சேந்தன் விளக்கோடு வர, மகாமண்டலேசுவரர் அவனைப் பின்பற்றித் தளபதி நின்றுகொண்டிருந்த மூலைக்கு வேகமாக வந்தார்.

சுவரோரமாக நின்றுகொண்டிருந்த தளபதிக்கு மூச்சே நின்றுவிடும்போல் இருந்தது.


13. பகவதி காப்பாற்றினாள்

மேல் மாடத்து நிலா முற்றத்தில் எதிர்பாராத நிகழ்ச்சியால் அரைகுறையாக முடிந்த நாட்டியத்துக்குப் பின் மகாராணி யாரும் அவரோடு இருந்த பெண்களும் பரபரப்படைந்து அந்தப்புரத்துக்குச் சென்றார்களல்லவா? அதன்பின் இங்கு நடந்த தொடர்பான நிகழ்ச்சிகளைக் கவனிப்போம்.

திடீரென்று ஏற்பட்ட குழப்பத்தினால் சூதுவாதறியாத அந்தக் கன்னிப்பெண்களின் மனத்தில் தன்னைப்பற்றித் தவறான எண்ணம் ஏற்பட்டிருக்குமோ என்று மகாராணி வானவன்மாதேவி கலக்கமுற்றார். இந்தப் பரந்த உலகத்தில் எத்தனை கொடுமைகளைச் செய்தாலும் அவற்றிலிருந்து தப்பலாம். கள்ளங் கபடமற்ற நல்ல மனங்களில் தீமையை விதைத்தவர்கள் எந்தவிதத்திலும் தப்பமுடியாது. மகாராணி வான்வன்மாதேவியின் மனத்தில் எப்போதும் நிரந்தரமாக நிலைத்திருக்கக்கூடிய சிந்தனைகளில் இதுவும் ஒன்று.

“குழந்தைகளே! பகவதி விலாசினி! உங்களுடைய ஆடல் பாடல்களை இன்னும் சிறிது நேரம் காணவும், கேட்கவும் ஆவலாயிருந்தேன். என்னுடைய எத்தனை, எத்தனை கவலைகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டன. தெரியுமா? ஒரு தேசத்தின் மகாராணியாக இருந்து காணுகிற சுகத்தைவிட உங்களைப்போல் இரண்டு பெண்களின் தாயாக ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்திருந்தேனானால் இன்னும் எவ்வளவோ சுகத்தையும், நிம்மதியையும் கண்டிருப்பேன்’ என்று கூறினார் வான்வன்மாதேவி.

“மகாராணியாரின் திருவாயிலிருந்து இத்தகைய வார்த்தைகளைக் கேட்க நேரிடுவது எங்கள் பெரும் பாக்கியம் ! தாங்கள் சாதாரணக் குடும்பத்துத் தாயாகப் பிறந்திருந்தால் நாங்களெல்லாம் அஞ்சலி செய்யும் மதிப்புக்குரிய பாண்டிமாதேவியாகத் தங்களை அடைந்திருக்க முடியுமா !” என்று உபசாரமாக மறுமொழி கூறினாள் விலாசினி.

“எங்களுடைய ஆடலும், பாடலும் எங்கே ஒடிப்போய் விடப்போகின்றன? மகாராணியாருடைய அன்புக் கட்டளை எந்த விநாடியில் கிடைத்தாலும் ஓடிவந்து ஆடவும், பாடவும் காத்திருக்கிறோம். கலைகளை அர்ப்பணம் செய்ய வேண்டிய இடமே இதுதானே?” என்று விநயமாகக் கூறினாள் பகவதி.

அவர்கள் இருவரும் கூறியவற்றைக் கேட்ட வானவன் மாதேவியின் வதனத்தில் எத்தனையோ அர்த்தங்களை உள்ளடக்கிக் கொண்டிருக்கிற அற்புதமான புன்னகை ஒன்று மலர்ந்தது. உலக அநுபவங்களின் வாசனையை அதிகம் நுகர்ந்தறியாத அந்த இளம் பெண்களுக்கு மகாராணியின் சிரிப்புப் புரியவா போகிறது?

“குழந்தைகளே ! இந்த வயதில் உங்களைப் போன்றவர்களுக்கு இப்படித்தான் தோன்றும். பதவி, படாடோபம், இராஜபோகம் எல்லாவற்றாலும் கிடைக்கக்கூடிய ஆடம்பரம் இணையற்ற பெரும் பேறு என்று நினைப்பீர்கள். ஆனால் அவற்றுக்குப் பின்னால் மறைந்திருக்கக்கூடிய துன்பங்கள், ஆசாபாசங்கள் எல்லாம் உங்களுக்குப் புரியாதவை. விலாசினி! உன் தகப்பனார். உனக்குச் சிலப் பதிகாரம் கற்பித்திருப்பாரே? தொல்காப்பியத்தை அரங்கேற்றிய மாபெரும் அதங்கோட்டாசிரியரின் வழியில் வந்து இன்று தாமும் அதே பேர் பூண்டு விளங்கும் உன் தந்தை தமிழ் இலக்கியக் கடல். அவரிடம் அநேகமாக நீ எல்லா நூல்களையும் கற்றுக்கொண்டிருப்பாய். என்ன, நான் நினைப்பது சரிதானா?”

“ஆமாம். தேவி! என் தந்தை குழந்தைப் பருவத்திலிருந்து என்னை வற்புறுத்தி ஆவலோடு அவற்றையெல்லாம் எனக்குக் கற்பித்திருக்கிறார். சிலப்பதிகாரத்தைப் பலமுறை அவரிடம் பாடம் கேட்டிருக்கிறேன். அந்த முத்தமிழ்க் காவியம் என் மனத்தைக் கவர்ந்ததைப்போல் வேறு எதுவும் கவரவில்லை” என்றாள் விலாசினி.

“அந்த மகா காவியத்தில் ஒர் அருமையான கட்டம் எனக்கு நினைவுக்கு வருகிறது. குழந்தாய்! மதுரையில் கண்ணகிக்குத் தவறிழைத்த பாண்டியன் உயிர் துறந்த செய்தியைச் சாத்தனார் என்ற புலவர், சேரநாட்டில் பேராற்றங்கரைப் படுகையில் செங்குட்டுவன் வந்து தங்கியிருக்கும்போது அவனுக்குக் கூறுகிறார். அந்த அவலச் செய்தியைக் கேட்ட செங்குட்டுவன் இதயத்தில் பெருந்தன்மையான முறையில் அநுதாபம் சுரக்கிறது. அந்த அநுதாபத்தைச் சேரர் பெருவேந்தனான செங்குட்டுவன் எவ்வளவு நாகரிகமாக வெளியிடுகிறான், தெரியுமா?

‘ஆகா! என்னைப்போல் சக அரசனாகிய பாண்டியன் ஒரு பெண்ணுக்குத் தவறாக நியாயம் வழங்கியதற்கு நாணித் தன் உயிரையே விட்டுவிட்டான். அரசாளுகிற பரம்பரையில் பிறப்பது மகத்தான அதிருஷ்டம் என்று எத்தனை பேர்கள் கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள். மழை பெய்யாமற் போனால், ‘அரசன் சரியில்லை; மழை தவறிவிட்டது’ என்பார்கள். மழை அதிகமாகப் பெய்து வெள்ளச் சேதம் ஏற்பட்டுவிட்டாலோ அப்போதும், அரசன் சரியில்லை’ என்பார்கள். நியாயம் தவறி ஓர் உயிரைக் கொன்று விட்டால் பெரும்பழியை அரசன் சுமக்க நேரிடும். ஓர் அரசனுடைய தோளில் இத்தனை துன்பச் சுமைகள் சுமந்திருக்கின்றனவே? அப்படி இருந்தும், அரசாளும் குடியில் பிறக்கவில்லையே என்று இந்த அசட்டு மனிதர்கள் வீணாக ஏங்குகிறார்களே! என்று செங்குட்டுவன் சாத்தனாரிடம் கூறியதாகச் சிலப்பதிகாரத்தில் வருகிறது.”

“தேவி! இந்த இடத்தில் புலவர் பெருந்தகையான இளங்கோவடிகள் செங்குட்டுவனின் இதயப் பண்பை மிக அருமையாகச் சித்திரித்திருக்கிறார்; உயர்ந்த காவியப் பண்புக்காகப் பாராட்டுவதாயிருந்தால் இதை அல்லவா பாராட்டவேண்டும்?”