பாண்டிமாதேவி/மூன்றாம் பாகம்/புதியதோர் பெருவாழ்வு

விக்கிமூலம் இலிருந்து

25. புதியதோர் பெரு வாழ்வு

மகாராணியை வஞ்சிமா நகரத்துக்குச் சிவிகை ஏற்றியனுப்பி விட்டுப் போர்க்களம் நோக்கிப் புறப்பட்ட குமாரபாண்டியன் நடு வழியிலேயே அந்தத் துன்பச் செய்தியைத் தெரிந்துகொண்டான். வேதனைப்படுகிற அளவுகூட அவன்

உள்ளத்தில் அப்போது தென்பில்லை. “முதல் நாள் காலை பதினொரு நாழிகையளவில் வெள்ளுரை வடதிசைப் படைகள் கைப்பற்றி விட்டனவாம். சக்கசேனாபதியும் அவரோடு எஞ்சியிருந்த ஈழநாட்டு வீரர்களும் விழிஞத்துக்கு ஓடிக் கப்பலேறி விட்டார்களாம்” என்ற செய்திதான் அது. அதைத் த்ெரிந்து கொண்டவுடன், “சக்கசேனாபதியின் மேல் குற்றமி ல்லை! அவர் என்ன செய்வார்? பாவம், பதினொரு நாழிகை வரை என்னை எதிர்பார்த்திருப்பார். நான் மட்டுமென்ன? நானும் போக வேண்டியதுதான். எனக்கு மட்டும் இங்கே என்ன வைத்திருக்கிறது? வெற்றியை நினைத்து வந்தேன், எல்லா வகையிலும் தோல்விதான் கிடைத்தது. பரவாயில்லை, இந்தப் பரந்த உலகத்தில் எங்கேயாவது ஒரு மூலையில் என் ஏக்கங்களையும் நிராசைகளையும் சுமந்துகொண்டு வாழ்வதற்கு இடமில்லாமலா போய்விடப் போகிறது? ஏக்கங்களும், நிராசைகளும், தோல்விகளும், அவநம்பிக்கைகளும் இருக்கின்றவரை நான் வெற்றியை எண்ணித் துடித்துக் கொண்டே இருப்பேன்!” என்று தனக்குத்தானே மெல்லச் சொல்லிக் கொண்டான். தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டு வேறு ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவன்போல் திரும்பி விழிஞத்துக்குப் புறப்பட்டான் அவன். சோர்வும், துயரமும் தன் மனத்திலிருந்து நீங்கித் தோல்விகளை மறந்துபோக வேண்டுமானால் அப்படி மறக்கச் செய்வதற்குரிய ஏற்ற பரிபூரணமான உல்லாச நினைவு ஒன்று அப்போது அவனுக்குத் தேவைப்பட்டது. முழுமையும், செழுமையும் நிறைந்த அந்த உல்லாசம் தனக்குக் கிடைக்க முடியுமென்றே அவனுக்குத் தோன்றியது. கண்களை மெல்ல மூடி மனத்திலிருந்த மற்ற எண்ணக் குப்பைகளையெல்லாம் ஒதுக்கியெறிந்து நினைவை ஒருமைப்படுத்தி எதையோ நினைக்க முயன்றான் அவன்.

அடுத்த கணமே அந்த முயற்சிக்கு வெற்றி கிடைத்தது. கொவ்வைச் செவ்வாயும் அதில் குமிண் சிரிப்புமாக மண்ணுலகத்துச் சூதுவாதுகள் பதியாத மதிவதனம் ஒன்று குமாரபாண்டியனின் உருவெளித் தோற்றத்தில் தெரிந்தது. ‘காலம் காலமாய் வளர்ந்தோடும் நாட்களின் சுழற்சியைக் கணக்கிட்டுக் கொண்டு உங்களுக்காகவே தேய்ந்து ஓய்ந்து

போய்க்கொண்டிருக்கிறேன். நீங்கள் எப்போது வந்து என் தவத்துக்கு வெற்றியைக் கொடுக்கப் போகிறீர்கள்?-என்று அந்த அழகு முகத்தின் பவழ இதழ்கள் திறந்து தன் காதருகே மெல்ல வினவுவதுபோல் ஓர் உணர்ச்சிப் பிரமை அவனுக்கு ஏற்பட்டது. ‘மின்னலில் ஒளியெடுத்து முகில்தனில் குழல் தொடுத்து என்ற அந்த மகா செளந்தரியத்தை வியந்து அதனால் துண்டப்பெற்றுத் தான் முன்பு பாடிய கவிதையை அவன் முணுமுணுத்தான். இவ்வாறாக விழிஞத்துக்குச் செல்லும்போது அவன் நடந்து செல்லவில்லை. மதிவதனி என்னும் இனிய நினைவுகளைத் தென்றல் காற்றின் அலைகளாக்கித் தன் உண்ர்வுகளை மிதக்கச் செய்து விரைந்தான். அந்த விரைவில் அவன் மனம் தாங்கிக் கொண்டிருந்த நினைவும் கனவும், உணர்வும் எல்லாம் ஒன்றே ஒன்றுதான். அதுதான் மதிவதனி என்னும் எழில்.

குமாரபாண்டியன் விழிஞத்தை அடையும்போது இரவு நீண்டு வளர்ந்திருந்தது. விழிளுத்து அரச மாளிகைக்குப் போய் அங்கிருந்த குதிரைக்காரக் கிழவனை எழுப்பி அவனிடம் இருந்து வலம்புரிச் சங்கைப் பெற்றுக் கொண்டு துறைமுகத்துக்குச் சென்றான் அவன். ஆள் நடமாட்டம் குறைந்திருந்த அந்த இரவு நேரத்தில் தன்னை இன்னாரென்று எவரும் அடையாளம் கண்டு கொள்ளவிடாமல் ஒதுங்கித் தயங்கி நடந்தான் அவன். ‘தென்பாண்டி நாட்டின் வளமும் பெருமையும் மிக்க ஒரே துறைமுகப்பட்டினமாக மேற்குக் கடற்கரையில் இலங்கும் அந்த நகரம் இன்னும் இரண்டொரு நாட்களில் வடதிசையரசர்களின் ஆதிக்கத்துக்கு உட்பட்டு விடும். அதன்பின் எங்கு நோக்கினும் சோழர் புலிக்கொடி பறக்கும்! அதற்கப்புறம் சிறிது காலத்தில் அவ்வழகிய துறைமுக நகரம் ஒரு காலத்தில் பாண்டியர்களுக்குச் சொந்தமாக இருந்தது என்று பழங்கதை பேசுவதோடு நின்றுபோகும் என்று இப்படியெல்லாம் நினைத்தபோது குமாரபாண்டியனுக்கு மனம் கொதிக்கத்தான் செய்தது. துயரத்தோடு நடந்துபோய்ப் புறப்படுவதற்குத் தயாராக இருந்த ஒரு யவனக் கப்பலில் ஏறினான் அவன். இருளாயிருந்தாலும் அவன் ஏறுவதைக் கப்பலின் தளத்திலிருந்து பார்த்துவிட்ட மீகாமன் ஓடிவந்து ஏறக்கூடாதென்று விழிகளை உருட்டிக்கோபத்தோடு பார்த்துப் பயமுறுத்தினான்.

அவன் தடுப்பதன் குறிப்பைப் புரிந்து கொண்ட குமாரபாண்டியன் மெல்லச் சிரித்துக்கொண்டே தன் இரண்டு முன் கைகளையும் அழகுசெய்திலங்கும் விலை மதிப்பற்ற பொற் கடகங்களைக் கழற்றி, “இந்தா, இதை வைத்துக் கொள்! என்னை இக்கப்பலில் பயணம் செய்யவிடு'-என்று சொல்லிக் கொடுத்தான். அவற்றை வாங்கிக்கொண்டதும் கண்கள் வியப்பால் விரியக் குமாரபாண்டியனைப் பார்த்தான் அந்த மீகாமன். மரியாதையோடு விலகி நின்று ஏறிக்கொள்ள வழிவிட்டு வணங்கினான், குமாரபாண்டியன் கப்பலில் ஏறி அதிகம் ஒளி பரவாத ஓரிடம் தேடித் தளத்தில் உட்கார்ந்து கொண்டான். அங்கிருந்து பார்க்கும்போது, அந்த இருளில் விழிளும் துறைமுகமும் அதற்கு அப்பால் பன்னெடுந் தொலைவு இரவால் மூடுண்டிருக்கும் தென்பாண்டி நாடும், தன்னைக் கைவிட்டு நீக்கி எங்கோ விலக்கி அனுப்புவதுபோல் அவனுக்கு ஒர் ஏக்கம் உண்டாயிற்று. அந்த ஏக்கம் சில சொற்களாக உருப் பெற்றது. நிராசையைச் சொற்களாக்கிக் கப்பலிலுள்ள மற்றவர்கள் காதில் விழுந்து விடாதபடி மெல்லத் தனக்குள் முணு முணுத்தான் அவன். -

திருமுடியும் அரியணையும் பெருவீரத்

திருவாளும் நினைப்பொழியக் கருதரிய தென்பாண்டி நிலம் மறந்து . கருணைமிகு தாய் மறந்து சிறுதெரிவை மதிவதனி சிரிப்பினுக்குச்

செயல்தோற்று நினைவலைந்து பொருதுமணம் பிடித்திழுக்கப் பிடித்திழுக்கப்

போகின்றேன் போகின்றேன். உணர்ச்சித் துடிப்பில் உருவான சொற்களைத் திரட்டி இப்படி முணுமுணுத்தபோது இந்தச் சொற்களின் மூலம் தலைதாய்த் திருநாடாகிய தென்பாண்டி நாட்டினிடமே விடைபெற்றுக்கொண்டு விட்டதுபோல் அவனுக்கு ஒரு திருப்தி ஏற்பட்டது. கப்பல் புறப்பட்டுவிட்டது. செம்பவழத் தீவில் தன்னை இறக்கிவிடுமாறு மீகாமனிடம் போய்ச் சொல்லிவிட்டு

மறுபடியும் அந்த இருண்ட மூலைக்கு வந்தான். தன்னிடமி ருந்த வலம்புரிச் சங்கை மார்போடு சேர்த்துத் தழுவினாற்போல் வைத்துக்கொண்டு சாய்ந்து படுத்தான். அந்தக் கப்பலில் யாரோ ஏளனமாகச் சிரித்துக்கொண்டே பேசிய சில வார்த்தைகளை அவன் செவிகள் கேட்டன.

‘மறுபடியும் தென்பாண்டி நாடு போரில் தோற்றுவிட்டதாம் ஐயா! தளபதியே பாண்டியப் பேரரசுக்கு எதிராக மாறிவிட்டானாம். எல்லோரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த மகாமண்டலேசுவரர் இறந்து விட்டாராம். மகாராணி வஞ்சிமா நகரத்துக்குத் தப்பிப் போய்விட்டாராம். அந்தப் பயந்தாங்கொள்ளி இளவரசன் இராசசிம்மன் எங்கோ போய்விட்டானாம்.”

“தெரிந்த விஷயம்தானே ஐயா! யார் தோற்றாலென்ன? யார் வென்றாலென்ன? நம்முடைய கப்பல் விழிஞத்துக்கு வந்து போவது நிற்கப் போவதில்லை. பேச்சை விடுங்கள்!” என்று மீகாமன் அலட்சியமாகப் பதிலளித்ததையும் இருளில் முடங்கிப்படுத்திருந்த குமாரபாண்டியன் கேட்டான். அந்தச் சொற்கள் சுளிர்சுளிரென்று தன் நெஞ்சில் அறைவது போலிருந்தது அவனுக்கு தென்பாண்டி நாடு, வெற்றி, தோல்வி, போர், இளவரசப்பட்டம், மரபு எல்லாவற்றையும் பழங் கனவுகள் போல் மறந்துவிடத் துடித்தது அவன் உள்ளம்.

‘மறக்கத்தான் போகிறேன்! நாளைக்குச் செம்பவழத் தீவில் இறங்கி அந்த வெண்முத்துப் பற்களின் சிரிப்பைப் பார்த்தபின் எல்லாவற்றையும் மறந்து புதிய வாழ்க்கையைத் தொடங்கத்தான் போகிறேன்!” என்று வற்புறுத்தி நினைத்துக் கொண்டு மனச்சாந்தி பெற்று உறங்கினான் அவன். உறக்கமென்றால் தானாக உண்டாக்கிக் கொண்ட உறக்கம்தான் அது. அந்தப் போலி உறக்கத்திலும் நினைவுகளின் மூட்டத்திலுமாகக் கப்பலின் இரவுப் பயணத்தைக் கழித்து விட்டான் குமாரபாண்டியன். விடித்ததும், “ஐயா! எழுந்திரு! இதோ செம்பவழத் தீவு வந்துவிட்டது” என்று மீகாமன் வந்து எழுப்பினான். கப்பல் செம்பவழத் தீவின் கரையோரமாக நிறுத்தப்பட்டிருந்தது. மீகாமனும் மற்றவர்களும் தன் முகத்தைப் பார்த்துவிடாமல் மேலாடையால் தலையைப் போர்த்தியதுபோல்

முக்காடிட்டுக்கொண்டு கப்பலிலிருந்து இறங்கினான் குமாரபாண்டியன். அந்த உள்ளம் இன்பக் கிளர்ச்சி கொண்டு பொங்கியது. அவலக் கவலைகளற்ற வெற்றி தோல்விகள் இல்லாத ஒரு புதிய போக பூமியை மிதித்துக்கொண்டு நிற்பது போல் அவன் பாதங்கள் உணர்ந்தன. கவலையற்றுப் பொங்கும் உற்சாகத்துடன் வலம்புரிச் சங்கின் ஊதுவாயை இதழ்களில் வைத்து முழக்கினான் அவன். நீராடி எழுந்த கன்னிகைபோல் வைகறையின் மலர்ச்சியில் அந்தத் தீவின் அழகு பன்மடங்கு சோபித்தது. அந்தத் தீவின் கடைவீதித் திருப்பத்தில் நின்று கொண்டு கப்பல் வந்து நிற்பதையும், அதிலிருந்து ஒருவர் இறங்குவதையும் பார்த்தவாறு இருந்தாள் ஒர் இளம்பெண். குமாரபாண்டியனின் சங்கொலி அந்தப் பெண்ணின் செவிகளில் அமுதமாகப் பாய்ந்தது. அந்த ஒலியைக் கேட்ட மறுகணமே அவள் பேதைப் பருவத்துச் சிறுமிபோல் உற்சாகத்தோடு கடற்கரையை நோக்கி ஒடலானாள். அந்தப் பெண்ணின் ஒட்டம் காட்டில் தன் போக்கில் ஒடும் புள்ளிமானை நினைவுபடுத்தியது. அவள் அவனை நெருங்கிவிட்டாள். சங்கநாதம் செய்துகொண்டு மணல் திடலில் நின்ற குமாரபாண்டியன் அவளைக் கண்டதும், “மதிவதனி!” என்று கூவினான். அந்தக் கூவலில்தான் ஊழிஊழியாகத் தேங்கி நின்று சுமந்துபோனது போன்ற அன்புத் துடிப்பின் தொனி எத்தனை உருக்கமாக ஒலிக்கிறது? அவள் வந்து அவனெதிரே நின்று பார்த்தாள். பார்த்துக் கொண்டேயிருந்தாள். முழு மதியைக் கறைதுடைத்தாற் போன்ற முகத்தில் மலர்ந்து அகன்று கயல்விழிகளால் அவனைப் பருகிவிடுவதுபோல் நோக்கிய நோக்கம் பெயரவே இல்லை.கல்பகோடி காலம் பிரிந்து நின்று விரகதாபத்தில் நலிந்து அன்பு தாகத்தால் வாடிய காதலிபோல் அவள் கண்கள் காட்சியளித்தன. х . . . -

மதிவதனி! நான் வந்துவிட்டேன். இனி உன்னைப் பிரிந்து போகமாட்டேன். அன்றொரு நாள் நீ என் உயிரைக் காப்பாற்றினாய்! உன்னைக் காப்பாற்றுவதற்கு இன்று நான் வந்திருக்கிறேன்!” என்று கூறியவாறே அவள் அருகில் நெருங்கி அவளைத் தழுவிக் கொண்டான் குமாரபாண்டியன். அன்புப் பெருக்கில் பேச்செழாமல் வாய்மூடி நின்ற மதிவதனி “என்

தவம் வெற்றி பெற்று விட்டது” என்று மெல்ல வாய்திறந்து நாக்குழறச் சொன்னாள். -

“வா, போகலாம்! நம்முடைய வாழ்க்கை இனி இந்தத்

தீவின் எல்லைக்குள் ஆரம்பமாகிறது!” என்று அவளைத் தழுவி அணைத்தவாறே நடந்தான் குமாரபாண்டியன்.

அவளோடு அப்படி நடந்தபோது அன்பையும் இன்பத் தையும் அனுபவித்துச் சுதந்திரமான எளிமையுடன் காதல் வாழ்வு வாழ்வதற்காகவே ஒரு புதிய பிறவி எடுத்திருப்பது போல் குமாரபாண்டியனுக்குத் தோன்றியது. கடல் அலைகளும், இளஞாயிற்றின் மாணிக்கச்செங்கதிர்களும், காற்றும் வானமும், பூமியும், அந்தக் காதலர்களுக்கு நல்வரவு கூறுவதுபோல் அதியற்புதமானதொரு சூழ்நிலை அன்று காலையில் அந்தத் தீவில் நிலவியது. எல்லா இன்பமும் துய்த்துப் பல்லூழி காலம் வாழட்டுமென்று அந்தக் காதல்ர்களை வாழ்த்திவிட்டு வஞ்சிமா நகருக்குச் செல்வோம். நாம் மகாராணி வானவன்மாதேவியைப் பார்க்கவேண்டுமல்லவா?

தென்பாண்டி நாட்டை வடதிசை மன்னர்கள் கைப்பற்றியபின் சோழப் பேரரசுக்குட்பட்ட நிலமாகிவிட்டது அது. தளபதியும், கழற்கால் மாறனாரும் கலகக் கூட்டத்தைக் கலைத்துவிட்டு எங்கோ ஒடிப் போய்விட்டார்கள். இந்த நிகழ்ச்சிகளெல்லாம் நடந்து முடிந்து ஆறு திங்கட்காலம் கழிந்துவிட்டது. சேந்தனும் குழல்வாய்மொழியும், அன்பு மயமான இல்லற வாழ்க்கையை முன்சிறையில் நடத்தி வருகிறார்கள். காந்தளூர் மணியம்பலத்தில் சோழ அரசின் ஆட்சிக்குட்பட்டு அதங்கோட்டாசிரியரும் பவழக்கனிவாயரும் எப்போதும் போல் தமிழ்ப்பணி புரிந்து வருகிறார்கள். அதங்கோட்டாசிரியர் விலாசினிக்குத் திருமணம் முடிப்பதற்காகத் தக்க மணமகனைத் தேடிக் கொண்டிருக்கிறார். தென்பாண்டி நாடு பழைய அமைதியும், வளமும் பெற்றுச் செழிப்பாக இருக்கிறது. இவ்வளவும் தெரிந்தபின், இனி வஞ்சிமா நகருக்குப் போனால் நம்முடைய உள்ளத்தை உருக்கும் உண்மை ஒன்றை தெரிந்துகொள்ள நேருகிறது. வஞ்சிமா நகரத்தின் கீழ்பால் ஊர்ப்புறத்தில் குணவாயிற் கோட்டமென்னும் தவ்ப்பள்ளி ஒன்று நெடுங்காலமாக இருந்துவருகிறது. தூய

தோற்றமும், அருளொளி திகழும் முகமும் கொண்ட துறவியர் பலர் அக்கோட்டத்தில் வசித்து வருகின்றனர். இதோ அக்கோட்டத்தினுள் நுழைந்து உள்ளே போகிறோம் நாம். திருக்குண வாயிலாகிய இத் தவச் சாலையின் வாயிலில் பிரம்மாண்டமான மரங்களின் நிழலில் இதோ ஆடவரும் பெண்டிருமாக எத்தனை துறவியர் வீற்றிருக்கின்றனர், பாருங்கள். மரங்கள் அடர்ந்த இம் முன் பகுதியைக் கடந்து உள்ளே செல்வோம். அதோ, தாமரைப்பூ வடிவாக அமைத்த ஒரு பெரிய பளிங்கு மேடை! அதன்மேல் அமர்ந்திருக்கும் மூதாட்டியை நன்றாக உற்றுப் பார்த்தால் இன்னாரென்று தெரிந்து கொள்ளலாம். நன்றாகக் கூர்ந்து பாருங்கள்.

ஆம்! மகாராணி வானவன்மாதேவி அங்குத் தவக்கோலம் பூண்டு வீற்றிருக்கிறார். வேறோர் இளம் பெண்ணும் தவக்கோலத்தில் அவரருகே இருந்து பணிவிடை புரிந்து கொண்டிருக்கிறாள். சற்று நெருங்கிப் பார்த்தால் அவளைப் புவனமோகினி என்று அடையாளம் கண்டுகொள்ளலாம். மகாராணி விழிகளை மூடித் தியானத்தில் ஆழ்ந்திருக்கிறார். அமைதியான இந்தச் சமயத்தில் அங்கு ஒர் ஆச்சரியம் நிகழ்கிறது. சீரழிந்து உருத் தெரியாது தோற்றம் மாறிப்போய் வல்லாளதேவனும், கழற்கால் மாறனாரும் அங்கு ஓடி வருகிறார்கள். ‘தேவி! எங்களை மன்னிக்கவேண்டும். எங்களுடைய வெறியால் எத்தனையோ கெடுதல்களைச் செய்துவிட்டோம். மகா பாவிகள் நாங்கள்” என்று கதறியவாறே ஒடி வந்து வணங்கினார்கள்! அவர்கள் கண்கள் கலங்கி அழுகை முட்டிக் கொண்டு வர இருந்தது. மகாராணி கண்களைத் திறந்து அவர்களைச் சிரித்துக்கொண்டே பார்த்தார். அவர் முகத்தில் சிறிதும் மாறுதல் ஏற்படவில்லை. ஒரே சாந்தம் நிலவியது, “ஓ நீங்களா? உட்காருங்கள்” என்று அருளின் கனிவு நிறைந்த குரலில் கூறினார். அவர். - -

“நாங்கள் பாவிகள், கெட்டவர்கள், உங்களுக்கு முன் உட்காரக் கொஞ்சமும் தகுதியற்றவர்கள்!”

‘சந்தர்ப்பம் மனிதர்களைப் பாவிகளாகவும் கெட்டவர்களாகவும் ஆக்கலாம். இனியாவது நல்லதாக இருக்கட்டும். போய் நல்வினையைத் தேட முயலுங்கள். இந்த விசாலமான தவப்பள்ளியில் இன்னும் நிறைய இடம் இருக்கிறது. உங்களையும் உங்களைப்போல வர இருக்கும் இன்னும் எத்தனையோ பேரையும் இந்தத் திருக்குண வாயிலின் கதவுகள் எப்போதும் திறந்தவண்ணம் வரவேற்கக் காத்திருக்கின்றன’ என்று புன்னகையோடு சொல்லிவிட்டு அவர்கள் பதிலை எதிர்பாராமல் மறுபடியும் கண்மூடித் தியானத்தில் ஆழ்ந்தார் மகாராணி.

வல்லாளதேவனும், கழற்கால் மாறனாரும் அந்தத் தவக்கோலத்தை வணங்கிவிட்டு அந்தக் குணவாயிற் கோட்டத்தின் உள்ளே சென்றனர். சில நாழிகைகளுக்குப்பின் அவர்களும் தவக்கோலத்தோடு வந்து அமர்ந்தபோது தியானத்தில் ஆழ்ந்திருந்த மகாராணி கண்திறந்து பார்த்தார். அவர் வதனத்தில் அருள் நகை மலர்ந்தது. ஒரு கணம்தான்! மறுபடியும் அவர் விழிகள் மூடிக்கொண்டன. அப்போது அந்தப் பக்கமாகக் குணவாயிற் கோட்டத்தைச் சுற்றிப் பார்க்க வந்திருந்த வஞ்சிமா நகரத்துப் பொதுமக்கள் சிலர் கீழ்க்கண்டவாறு தங்களுக்குள் உரையாடிக்கொண்டு சென்றது அவர் செவியிலும் விழுந்தது.

“அதோ பத்மப்பளிங்கு மேடையில் அருளொளி திகழ வீற்றிருக்கும் அந்தத் தவ மூதாட்டி யார் தெரியுமா?


“அவர் சேரநாட்டு மன்னன் மகளாய்ப் பிறந்து பாண்டி நாட்டு மாமன்னன் பராந்தகனுக்கு வாழ்க்கைப்பட்டுப் பாண்டிமாதேவியாகப் பெருவாழ்வு வாழ்ந்தவர். இப்போது தவவாழ்வு வாழ்கிறார் இங்கே!”

இந்த உரையாடலைச் செவியுற்றபோது துன்பம் நிறைந்த முன் பிறவி ஒன்றை யாரோ நினைவுபடுத்தினாற் போலிருந்தது அவருக்கு அவர் சிரித்துக்கொண்டார்.

“உலகம் உயிர்ப்பூக்களின் நந்தவனம்! அங்கே துன்பங்கள் எல்லாவற்றையும் பார்த்தும் பார்க்காததுபோல் நடுவாக நடந்து போய்விடவேண்டும்” என்று தியானத்துக்கு நடுவே நினைத்துக் கொண்டு மெய்யுணர்வில் மூழ்கினார் அவர். காலம் சுழன்று வளர்ந்து பெருகிக் கனத்து நீண்டு கொண்டே இருந்தது.

(முற்றிற்று)