பாண்டிமாதேவி/மூன்றாம் பாகம்/வெள்ளணி விழா

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

2. வெள்ளணி விழா

குமாரபாண்டியன் இராசசிம்மனும் சக்கசேனாபதியும் ஏறி உட்கார்ந்திருந்த மரக்கிளை பூகம்பம் ஏற்பட்டு ஆடுவதுபோல் ஆடியது! ஒரு யானைக் கூட்டமே சுற்றி மொய்த்துக் கொண்டு ஆட்டினால் மரம் பிழைக்குமா? அவர்கள் ஏறக்குறையத் தங்கள் உயிரின் மேல் வைத்திருந்த முழு நம்பிக்கையையும் இழக்கத் தொடங்கிய சமயத்தில்தான் விசிதபுரத்துச் சாலையில் அந்த ஒளி உதயமாயிற்று.

கையில் தீபங்களோடு ஒரே மாதிரி மஞ்சள் உடை அணிந்த பெளத்தமதத் துறவிகளின் பெருங்கூட்டமொன்று அந்தச் சாலையிலிருந்து வந்து கொண்டிருந்தது. ஒன்றுக் கொன்று உயர்வு தாழ்வு ஒலி வேறுபாடின்றி ஒரேவிதமான தொனியில் அந்தத் துறவிகள் சேர்ந்து பாடிக்கொண்டு வந்த பெளத்த சமய சுலோகங்கள் அந்தக் காடு முழுவதும் சாந்தி உணர்வை அள்ளிப் பரப்புவது போலிருந்தது. ‘அமைதி அமைதி என்று பெருங் குரலெடுத்து முழங்கிய அந்த இனிமை முழக்கம் கருணை மயமாக ஒலித்தது. உயிரினங்களின் வெறித்தனங்களையெல்லாம் அடக்கிக் கட்டுப்படுத்தித் தன் வசமிழக்கச் செய்து முடிவற்ற பேரமைதியில் ஆழ்த்தும் ஆற்றல் அந்த இன்னொலியில் இருந்தது போலும் “ஐயோ! பாவம் இத்தனை பிட்சுக்களும் வந்து இந்த யானைக் கூட்டத்தில் மாட்டிக் கொண்டு திண்டாடப் போகிறார்களே’ என்று மெல்லிய குரலில் இராசசிம்மன் சக்கசேனாபதியின் காதருகில் சொன்னான். சக்கசேனாபதி அதைக் கேட்டுப் பலமாகச் சிரித்தார்.

“ஏன் சிரிக்கிறீர்கள்?”

“பார்த்துக்கொண்டே இருங்கள்; என் சிரிப்பின் காரணம் உங்களுக்குப் புரியும்.”

விளக்கொளியும், கீத ஒலியும், பிட்சுகளின் கூட்டமும் அருகில் நெருங்க நெருங்க அங்கே ஓர் அற்புதமான மாறுதல்

ஏற்பட்டது. யானைகளின் பிளிறல்கள் சிறிது சிறிதாகக் குறைந்து, முடிவில் ஒலியற்று ஒய்ந்தன. மரங்கள் ஆட்டப்படவில்லை; கிளைகள் முறிக்கப்படவில்லை. ஒலி ஓசைகளையெல்லாம் அடக்கிக்கொண்டு நிற்கும் ஒரு பேரமைதி தானாகத் திடீரென்று அந்தக் காட்டின்மேல் கவிழ்வதுபோல் இருந்தது. குமாரபாண்டியன் வியப்புடன் கீழே பார்த்தான். மந்தை மந்தையாகச் சாலையை அடைத்துக் கொண்டு நின்ற யானைக் கூட்டம் மெதுவாக அடங்கி ஒடுங்கி, விலகி, காட்டுக்குள் புகுந்து மறைவது தெரிந்தது. யானைகள் நடந்துபோவதற்குரிய முரட்டுத் தனமும், கூப்பாடும் சிறிதாவது இருக்க வேண்டுமே! இருளில் வாயும், உணர்வுமில்லாத கருங்குன்றுகள் சில எதன்போக்கிலோ கவரப்பட்டு விலகிச் செல்வதுபோல் மெல்ல மறைந்தது யானைக் கூட்டம். புத்த பிட்சுக்கள் அந்த இடத்தை அணுகும்போது சாலை வெறிச்சோடித் தூய்மையாக இருந்தது.

“சக்கசேனாபதி ! இது என்ன விந்தை’ என்று வியப்புமேலிட்ட குரலில் கேட்டான் இராசசிம்மன்.

“விந்தையுமல்ல, தந்திரமுமல்ல! புலன் உணர்வுகளை வென்ற தூய்மைக்கு உயிர்களின் மரியாதை! அன்பும், கருணையும் நிறைந்த குரல்கள் ஆயிரக்கணக்கில் ஒலிக்கும்போது அந்த ஒலி வெள்ளத்தில் மிருகத்தன்மை தேய்ந்து நெகிழ்ந்துவிடுகிறது. தவத்துக்கு மட்டுமே உள்ள வலிமை இது.”

“ஆச்சரியமான நிகழ்ச்சிதான்!”

“இப்போதே நாமும் கீழே இறங்கி இந்தப் புத்தபிட்சுக் களைத் தொடர்ந்தே அனுராதபுரம் போய்விடுவது நல்லது. இவர்கள் கூட அரசருடைய நாண்மங்கலத்துக்காக அனுராதபுரம் போகிறவர்களாகத்தான் இருக்கவேண்டும். வாருங்கள், இறங்கி விசாரிக்கலாம்” என்று சக்கசேனாபதியும், இராசசிம்மனும் கீழே இறங்கினார்கள். அவர்களுடைய குதிரைகள் மரத்தின் கீழிலிருந்து சிறிது தொலைவு தள்ளி மூலைக்கொன்றாக நின்றுகொண்டிருந்தன. புத்தபிட்சுக்கள்

அவர்களிருவரும் நின்றுகொண்டிருந்த இடத்துக்கு மிக அருகில் வந்துவிட்டனர். சாலையில் நெடுந்துாரத்துக்குத் தெரிந்த பிட்சுக்களின் வரிசையைப் பார்த்தபோது ஆயிரம் பேருக்குக் குறையாமல் இருக்கும்போல் தோன்றியது.

“இளவரசே! இவர்கள் எல்லோரும் விசிதபுரத்து மகாபெளத்த சங்கத்தைச் சேர்ந்த பிட்சுக்கள். இதோ, கூட்டத்தில் எல்லோருக்கும் முன்னால் கையில் சுவடியோடு நடந்து வருகிறாரே, இவர்தான் மகாபெளத்த சங்கத்தின் தலைவர் தத்துவசேன அடிகள். வாருங்கள். உங்களை அவருக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறேன்’ என்று குமாரபாண்டியனின் கையைப் பற்றி அழைத்துக்கொண்டு பிட்சுக்களின் கூட்டத்துக்கு முன்னால் சென்றார் சக்கசேனாபதி. r * . . . . -

மரத்தடி இருட்டிலிருந்து யாரோ இருவர் வேகமாகத் தங்களை நோக்கி வந்து கொண்டிருப்பதைப் பார்த்ததும், சாலையில் முன்னேறிக் கொண்டிருந்த பிட்சுக்களின் கூட்டம் தயங்கி நின்றது. சக்கசேனாபதியும், குமாரபாண்டியனும் தத்துவசேன அடிகளுக்கு முன்னால் போய் வணங்கி நின்றார்கள்.

“நான் என் கண்களுக்கு முன்னால் காண்பது உண்மை தானா? விடிந்தால் அரசருடைய நாண்மங்கல விழாவுக்கான ஏற்பாடுகளைக் கவனிக்க வேண்டிய ஈழநாட்டுப் படைத் தலைவர் காட்டில் காட்சியளிக்கிறாரே ?’ என்று கலகலவென்று சிரித்தவாறே சக்கசேனாபதியை நோக்கிக் கேட்டார் பிட்சுக்களின் தலைவரான தத்துவசேன அடிகள். “அடிகளே! கடந்த சிலநாட்களாகத் தென்பாண்டி நாட்டில் சுற்றிக்கொண்டு இருந்துவிட்டு இன்றுதான் இலங்கை மண்ணிலேயே கால் வைத்தேன். இதோ என் அருகே நிற்கும் இளைஞர் குமாரபாண்டியர் இராசசிம்மன் ஆவார்” என்று தொடங்கி, காட்டில் வந்துகொண்டிருக்கும்போது யானைகள் குறுக்கிட்டதால் தங்களுக்கு ஏற்பட்ட துன்பம் முதலான வற்றையும் கூறினார் சக்கசேனாபதி. குமாரபாண்டியனை

அன்புடன் அருகில் அழைத்துத் தட்டிக்கொடுத்து ஆசி கூறினார் அடிகள். அவருடைய கருணை நிறைந்த மலர்ந்த முகத்தைப் பார்க்கும்போது அனுராதபுரத்துக் காட்டில் அங்கங்கே கண்ட புத்தர் சிலைகளின் முகங்களையெல்லாம் ஒன்று சேர்த்துப் பார்ப்பது போலிருந்தது குமார பாண்டினுக்கு.

“பரவாயில்லை! நீங்கள் இருவரும் விரும்பினால் எங்களுடனேயே அனுராதபுரத்துக்கு வரலாம். நாண்மங்கல விழாவுக்காக நாங்களும் அனுராதபுரம் தான் போகிறோம். கூட்டமாகப் போகும்போது வனவிலங்குகளின் தொல்லை இருக்காது!” என்று கூறிவிட்டுச் சிரித்தார் அவர். அந்தத் துறவியின் மலர்ந்த முகத்தில் சிரிப்புத் தோன்றி மறையும் அந்த ஒரு கணம் எதிரே இருந்து காண்பவர்களின் கண்களில் ஒரு புனிதமான ஒளியைக் காட்டி மறைத்தது. தூய வெள்ளை நிறத்துப் பூ ஒன்று மலர்ந்த வேகத்தில் மறைந்து விடுவது போன்றிருந்தது அந்தச் சிரிப்பு. இராசசிம்மன் கையில் இருந்த வலம்புரிச் சங்கைச் சற்று வியப்புடன் பார்த்தார் அடிகள்.

“இது நல்ல பயன்களைத் தரும் உயர்ந்த சாதி வலம்புரிச் சங்காயிற்றே? உங்களுக்கு எங்கே கிடைத்ததோ?” என்று குமார பாண்டியனை நோக்கிக் கேட்டார் அவர். அவன் துறவிக்கு மறுமொழி சொல்லத் தயங்கிக்கொண்டே சக்கசேனாபதியின் முகத்தைப் பார்த்தான். .

“அடிகளே! குமாரபாண்டியர் இந்தச் சங்கின்மேல் மிகவும் ஆசைப்பட்டு இரண்டாயிரம் பொற்கழஞ்சுகளை வாரிக்கொடுத்து இதை வாங்கியிருக்கிறார்கள். யானைக் கூட்டத்துக்குப் பயந்துகொண்டு மரத்தில் ஏறும்போதுகூட இதைக் கீழே போட்டுவிட்டு ஏற மனம்வரவில்லை இவருக்கு இதையும் இடுப்பில் கட்டித் தொங்கவிட்டுக் கொண்டு ஏறினாரே பார்க்கலாம்!” என்று பிட்சுக்களின் தலைவருக்கு மறுமொழி கூறிவிட்டு ஓரக்கண்ணால் குறும்புத்தனமாகக் குமாரபாண்டியனைப் பார்த்தார் சக்கசேனாபதி. இராசசிம்மன் அந்தப் பார்வைக்கு நாணி எங்கோ நோக்குவது

போல் தலையைக் குனிந்தான். குதிரைகளை அவரவர் பக்கத்தில் நடத்திச் செலுத்திக்கொண்டே அவர்களும் பிட்சுக்களோடு பயணத்தைத் தொடர்ந்தார்கள். பிட்சுக்களின் பிரயாண காலத்தில் பாடிக்கொண்டு சென்ற கீதங்களை அவர்களும் சேர்ந்து பாடினார்கள். அருள் நிறைந்த மனிதர்களோடு நடந்து சென்ற அந்தப் பயணத்தில் பொழுது கழிந்ததே தெரியவில்லை.

கிழக்கு வெளுக்கத் தொடங்கும் புலர் காலை நேரத்தில் அவர்கள் அனுராதபுரத்துக்குள் நுழைந்தார்கள். அந்தப் பெரும் நகரம்தான் அன்றைக்கு வைகறையிலே எவ்வளவு கோலாகலமாக இருந்தது! எங்கு பார்த்தாலும் புதுமணல் பரப்பிய அலங்காரப் பந்தல்கள்; வாழையும், பனையும் கமுகும், மாவிலையும் கட்டிய திருத்தோரணங்கள், செவிகள் நிறைய இடைவிடாமல் கேட்கும் மங்கல வாத்தியங்களின் இனிய ஒலிகள், நகரம் முழுவதும் பூக்களின் நறுமணமும் அகிற்புகை வாசனையும் பரவின. தெருக்களெல்லாம் ஒரே கூட்டம். முகபடாம் அணிந்த யானைகள், நன்றாகச் சிங்காரம் செய்துகொண்ட பெண்கள், குழந்தைகள், ஆண்கள், தாம் அணிந்திருக்கும் மஞ்சள் நிற ஆடையின் காரணமாக அவ்வளவு கூட்டத்திலும் தனியாகத் தெரியும் பிட்சுக்கள். எல்லாக் காட்சிகளும் சேர்ந்துகொண்டு அந்த ஊரை அன்றைக்குக் கந்தர்வ நகரமாக மாற்றியிருந்தன.

பெளத்த விஹாரங்களிலெல்லாம் ஒளிச் சுடர்கள் பூத்தது போல் தீபாலங்காரம் செய்திருந்தார்கள். பிட்சுக்களின் கீத ஒலிகள், அரசருக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்குமாறு’ வேண்டிக் கொண்டிருந்தன. தெரு ஓரங்களிலும் பெளத்த விஹாரங்களுக்கு அருகிலும், வண்ணக் காடுகள் முளைத்துப் படர்ந்து மலர்ந்ததுபோல் பூக்களை மலை மலையாகக் குவித்திருந்தார்கள். பொன் நிற உடலும், மின்னலென இடையும் புன்னகை இதழ்களும் அன்னநடையுமாகத் தேவலோகத்து நாட்டிய சுந்தரிகளைப் போல் இளம் பெண்கள் இரண்டு உள்ளங் கைகளிலும் மலர்களை ஏந்திக்கொண்டு புத்தர் பெருமானை வழிபடச் சென்று கொண்டிருந்தார்கள்.

அக நகரத்துக்குள் நுழையும் எல்லை வந்தவுடனே பெளத்தத் துறவிகள் விடைபெற்றுக்கொண்டு சென்றார்கள். அவர்களுடைய மடம் புறநகரத்தில் இருந்ததால், அங்கே போய் நீராடல் முதலிய காலைக் கடன்களை முடித்துக் கொண்டு அதன்பின் அரசரைக் காண வருவதாகக் கூறிச் சென்றார் தத்துவசேன அடிகள். குமாரபாண்டியனும், சக்கசேனாபதியும் தங்கள் குதிரைகளில் ஏறிக்கொண்டு அரசரைக் காண விரைந்தார்கள். வீதிகளில் கூட்டமாக இருந்தவர்களில் அடையாளம் புரிந்துகொண்டு சிலரும், புரிந்துகொள்ளாமற் சிலரும் குதிரைகளில் செல்லும் அவர்களை வியப்போடு ஏறிட்டு நோக்கினார்கள். நன்றாக ஒளி பரவாத அந்த மெல்லிருள் நேரத்தில் நகரத்தின் அலங்கார ஒளிகள் அங்கங்கே இருந்த ஏரிகளின் நீர்ப் பரப்பில் பிரதிபலித்தன. நகரின் கிழக்கே தொலைவில் மகிந்தலைக் குன்றத்தின் உச்சியில் பெரிதாக எரிந்து கொண்டிருந்த சோதியைக் காணும்போது குமாரபாண்டியனுக்கு ஏதேதோ முன் நினைவுகள் உண்டாயின. பழமையான காலத்தின் சுவடுகளும், கலைச் சுவடுகளும் படிந்த பெளத்த நாகரிகத்தின் கம்பீரத்தைக் காட்டும் அந்த நகரத்தின் வீதிகளில் குதிரையில் சென்றபோது சோர்வை விரட்டும் உற்சாகமும், சுறுசுறுப்பும் வந்துவிட்டாற்போலிருந்தது இராசசிம்மனுக்கு.

அவர்களுடைய குதிரைகள் அரச மாளிகையின் அண்மையில் திரும்பியபோது முற்றிலும் யானைத் தந்தத்தினால் இழைத்துச் சித்திர வேலைப்பாடுகள் செய்யப்பட்ட அழகிய பல்லக்கு ஒன்று எதிரே வந்தது. பூம்பட்டுத் திரையை விலக்கிக்கொண்டு அந்தப் பல்லக்கிலிருந்து ஒரு செந்தாமரை முகம் வெண் முல்லைச் சிரிப்போடு கருங்குவளைக் கண்களை விழித்துக் குமாரபாண்டியனைப் பார்த்தது. “அடேடே! கனகமாலையல்லவா? நீ எப்போது இவ்வளவு பெரிய பெண்ணாக வளர்ந்தாய்” என்று, பல்லக்கிலிருந்து தலை நீட்டிய அந்தப் பெண்ணை விசாரித்துக்கொண்டே குதிரையை நிறுத்திக் கீழே குதித்தான் இராசசிம்மன். -

“ஓ! இளவரசி பெளத்த விஹாரத்துக்கு வழிபாடு செய்வதற்குப் புறப்பட்டு விட்டாற் போலிருக்கிறது” என்று

புன்சிரிப்புடன் அந்தப் பெண்ணை நோக்கிக் கூறியவாறே சக்கசேனாபதியும் கீழே இறங்கினார். -

காணும் கண்களை மயக்கி அறிவிழக்கச் செய்யும் அபூர்வ எழில் நிறைந்த அந்த இளம் பெண், மேட்டிலிருந்து பள்ளத்துக்குத் தாவும் புள்ளி மானைப்போல் பல்லக்கிலிருந்து துள்ளிக் குதித்துக் கீழே இறங்கினாள். அவள் கையில் ஒரு பூக்கூடை இருந்தது. பனித்துளி நீங்காத புது மலர்ச்சியோடு கூடிய தாமரைப் பூக்கள் அந்தக் கூடையில் நிறைந்திருந்தன. நிலவின் குளிர்ச்சியும், கதிரின் ஒளியும், பூவின் மலர்ச்சியும், கருவண்டின் துறுதுறுப்பும் பொருந்திய தன் காவிய நயனங்களால் தலையை ஒரு பக்கத்தில் நளினமாகச் சாய்த்துக் குமாரபாண்டியனை நோக்கி முறுவல் பூத்தாள் அந்தப் பெண். சிவந்த வாயிதழ்களுக்கு நடுவே வரிசையாக முல்லை மலர்ந்தது. அந்தச் சிரிப்பில், அந்தப் பார்வையில் இங்கிதமான நளினத் தலையசைப்பில் இளம் பெண்ணுக்கே உரிய நாணத்தின் கனிவு துடித்தது.

“சக்கசேனாபதி காசிப மன்னரின் பெண் கனகமாலை தானா என் முன்னே நிற்கிறாள்? இவ்வளவு நாணமும், வெட்கமும் வாய் திறந்து பேசமுடியாத கூச்சமும் இவளுக்கு எங்கிருந்து வந்தன” என்று கேட்டான் குமாரபாண்டியன்.

“சேனாபதித் தாத்தா குமாரபாண்டியருக்காக அரசர் அரண்மனையில் காத்துக் கொண்டிருக்கிறார். விரைவாக அவரை அழைத்துக்கொண்டு செல்லுங்கள்” என்று குமார பாண்டியனின் முகத்தை நேருக்கு நேர் பார்த்துக்கொண்டு, பேச வெட்கப்படுகிறவளைப் போல் சக்கசேனாபதியிடம் கூறினாள் 3:తfజీSLDFF33}{a} . . . .

மதமதவென்று வளர்ந்து கனிந்து நிற்கும் அந்தப் பெண்மையின் செழிப்பு இராசசிம்மனின் கண்களைக் கூசச் செய்தது. தன் கையிலிருந்து பூக்கூடையை அவர்கள் இருவருடைய கையிலும் கொடுத்துத் திருப்பி வாங்கிக் கொண்டாள் அவள். கோவிலுக்குப் புறப்பட்டுச் செல்லும் போது எதிரே தங்களுக்கு வேண்டிய மனிதர்களைச் சந்தித்தால் பூக்களை அவர்கள் கையில் கொடுத்துத் திருப்பி வாங்கிக்

கொள்வது ஒரு மரியாதையான வழக்கம். குமாரபாண்டியன் பூக்கூடையைக் கையில் வாங்கிக்கொண்டு திருப்பிக் கொடுப்பதற்கு ஒரு குறும்பு செய்தான்.

“கனகமாலை! இந்த நாண நாடகங்களெல்லாம் என்னிடம் வேண்டாம்! நான் உனக்கு அந்நியனில்லை. என்னிடம் வாய் திறந்து பேசினாலொழிய, கூடை திரும்பக் கிடைக்காது!” என்றான்.

“ஆகா! அதற்கென்ன? இப்போது பூக்கூடையைத் திருப்பிக் கொடுங்கள், கோவிலுக்குப் போய்விட்டு அரண்மனைக்குத் திரும்பியதும் உங்களிடம் வட்டியும் முதலுமாகப் பேசித் தீர்த்து விடுகிறேன்” என்று தலையைக் குனிந்துகொண்டு வெட்கத்தோடு பதில் கூறினாள் அவள், குமாரபாண்டியன் சிரித்துக் கொண்டே பூக்கூடையை அவளிடம் திருப்பிக் கொடுத்தான். அவள்துள்ளிக் குதித்துப் பல்லக்கில் ஏறி உட்கார்ந்துகொண்டாள். பல்லக்குப் புறப்பட்டது. அவர்கள் குதிரைகளும் அரச மாளிகையை நோக்கி

சக்கசேனாபதி இராசசிம்மனை நோக்கிக் கேட்டார். “இளவரசே, நீங்கள் முதன்முறையாக இலங்கைக்கு வந்திருந்தபோது இந்தப் பெண்ணுக்குச் சிறிது காலம் தமிழ் இலக்கியங்களைக் கற்பித்தீர்களே, நினைவிருக்கிறதா?”

“நன்றாக நினைவிருக்கிறது! ஆனால் இவ்வளவு மாறுதலை எதிர்பார்க்கவில்லை” என்றான் இராசசிம்மன்.

“பெண்கள் பருவ காலத்தில் கலியாண முருங்கை மரம் போல் மிக வேகமாக வளர்வது இயல்பு இளவரசே!” என்று கூறி நகைத்தார் சக்கசேனாபதி.

அரச மாளிகையின் வாசலில் காசிப மன்னர் பிறந்த நாளுக்குரிய வெள்ளணித் திருக்கோலத்துடன் அமைச்சர்கள் பிரதானிகள் புடைசூழ இராசசிம்மனைக் கோலாகலமாக வரவேற்றார். அவன் குதிரையிலிருந்து இறங்கியதுமே ஓடிவந்து அன்போடு அணைத்துத் தழுவிக் கொண்டார். ஈழ நாட்டு மன்னர். “இராசசிம்மா! நீ இன்று வந்தது மிகப் பொருத்தமான வரவு. என்னுடைய பாக்கியம்” என்று பெருமிதத்தோடு கூறினார். அவன் தங்குவதற்கான ஏற்பாடுகளெல்லாம் பிரமாதமாகச் செய்யப்பட்டிருந்தன. அதன்பின் அன்று முழுதும் குமாரபாண்டியனுக்குத் தன்னை நினைத்துப் பார்க்கவே நேரம் இல்லை. வெள்ளணிவிழாவின் உற்சாகத்தில் மூழ்கிப் போனான் அவன். காசிபமன்னர் அனுராதபுர நகரத்திலுள்ள ஒவ்வொரு பெளத்த விஹாரத்துக்கும் அவனையும் உடன் அழைத்துக் கொண்டு சென்று வழிபாடு செய்துவிட்டு வந்தார். கலைஞர்களுக்கும், புலவர்களுக்கும் பிறந்த நாள் பரிசளிப்புக்களை வழங்கினார். அந்த ஆரவாரங்களுக்கு நடுவே குமாரபாண்டியனுக்கு அவரிடம் அதிகம் பேச நேரமில்லை. அவருக்கும் குமாரபாண்டியனிடம் விரிவாக எதையும் விசாரித்துத் தெரிந்துகொள்ள அவகாசமில்லை. கனகமாலை இரண்டொருமுறை அவனைச் சந்தித்தபோது புன்முறுவல் புரிந்தாள். இப்படியாகக் குமாரபாண்டியன் அந்த நாட்டில் கால் வைத்த முதல்நாள் உல்லாசமாகக் கழிந்தது.