பாண்டியன் நெடுஞ்செழியன்/கிளி பறந்தது

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
பாண்டியன் நெடுஞ்செழியன்
1. கிளி பறந்தது

“இவ்வளவு பெரிய நாட்டை விதி இந்தச் சின்னஞ் சிறிய பிள்ளையின் கையில் ஒப்படைத்திருக்கிறது. என்ன ஆகுமோ? நல்ல மந்திரிகள் அமைந்து அரசியல் ஒழுங்காக நடைபெற வேண்டும். இறைவன் திருவருள் துணையிருந்து காக்க வேண்டும்” என்றார் முதியவர்.

அவரைவிடச் சற்றே இளையவர் ஒருவர் அதைக் கேட்டுக் கொண்டிருந்தார்; “ஆண்டில் இளையவன் என்று எண்ணி அஞ்சவேண்டிய தில்லை. சிங்கக்குட்டி என்றால் வீரம் இராதா? பாண்டிய மரபில் தோன்றிய யாரும் கோழையான தில்லை. மதுரை மாநகரம் என்று தோன்றியதோ, அன்றுமுதல் திருமகளின் அரசிருக்கையாகத் திகழ்கிறது. பாண்டிய மன்னர்களும் குலப் பெருமை வீண் போகாமல் கோலோச்சி வருகிறார்கள்” என்றார்.

“பரம்பரை பெரியதுதான். ஆனால் அது ஒன்றே போதுமா? வித்து நல்லதாகவும் உரமுடையதாகவும் இருந்தாலும் நிலமும் நீரும் பொருந்தினால்தான் நன்கு விளையும். அரசர்கள் சிறப்பதும் தாழ்வதும் பெரும்பாலும் உடன் இருக்கும் அமைச்சர்களைப் பொறுத்து நிற்கும். இளைஞனாகிய மன்னனுக்கு நல்லவர்கள், கெட்டவர்கள் என்று தேர்ந்து நாடுவதற்கு அநுபவம் ஏது?”

“புதிய அமைச்சர்கள் சிலரே வருவார்கள். நாட்டின் நன்மையையே கருத்திற் கொண்டு அரசனுக்கு உறுதுணையாக நின்ற பழைய அமைச்சர்கள் இருக்கிறார்களே; அவர்கள் இதுகாறும் நடந்தபடியே அரசியலை ஒழுங்க்ாக நடத்த வழி வகுப்பார்கள் அல்லவா?”

“எல்லாம் போகப் போகத் தெரியும். நாம் நல்லதையே நினைப்போம். ஆண்டவனை வேண்டுவோம். அரசனை வாழ்த்துவோம்.”

மதுரை மாநகரில் ஒரு வீட்டில் இப்படி இரண்டு பேர் பேசிக்கொண்டார்கள். அதுகாறும் மதுரையை ஆண்டிருந்த பாண்டியன் உயிர் நீத்தான். அவனுடைய ஒரே மகனாகிய நெடுஞ்செழியன் அரசு கட்டில் ஏறினான். அப்போது அவன் இளம்பிள்ளையாக இருந்தான். கைக் குழந்தையாக இருந்தாலும் அவனுக்கே அரசுரிமை செல்வது மரபாதலால் அமைச்சரும் சான்றோரும் அவனுக்கு முடி சூட்டினார்கள்.

முடி சூட்டு விழா மிகச் சிறப்பாகவே நடைபெற்றது. பாண்டியர் குலத்தில் வரும் மன்னர்களுக்கு இயற்கையாகவே சில பண்புகள் இருக்கும். நுட்பமான அறிவும் வீரமும் தமிழ்க் காதலும் அவர்கள் குருதியிலே ஊறியவை. இந்த இளைய அரசனிடமும் அவை இருப்பதாகவே புலப்பட்டன. எப்படியும் சில ஆண்டுகள் அரசாட்சி செய்து அநுபவம் பெற்றுவிட்டால் பிறகு யாதோர் இடயூறுமின்றி அரசியற் கடமைகளைச் செவ்வனே ஆற்றும் திறமை பெற்று விடுவான். இந்த நம்பிக்கை அமைச்சர்களுக்கு இருந்தது.

அரசுக்குக் கேடு வரவேண்டுமென்றால் இரண்டு வகையாக வரும். ஒன்று அகப்பகையால் வரும். மற்றொன்று புறப்பகையால் வரும். அரசன் திறமையற்றவனாக, குடிமக்களுடைய நலம் கருதாதவனாக, தன்னுடைய இன்பம் ஒன்றனையே எண்ணுபவனாக இருந்தால் அகப்பகை தோன்றும்; நாட்டிற்குள் பல கட்சிகள் உண்டாகும்; அமைச்சரும் பிறரும் மனம் வேறுபட்டுச் சூழ்ச்சி செய்வார்கள். இதுவே அகப்பகையின் வளர்ச்சி.

பிற நாட்டவர்கள் அரசனிடம் பொருமை கொண்டாலும், அவனுடைய நாட்டிலுள்ள வளத்துக்கு ஆசைப்பட்டாலும், பழம் பகை இருந்தாலும், படைவன்மை இல்லாதவன் என்று உணர்ந்தாலும் போர் செய்து நாட்டைக் கைப்பற்ற எண்ணுவார்கள். புறப்பகை மூளும்.

இந்த இரு வகையிலும், அகப்பகை உண்டாக இப்போதைக்கு வழி இல்லை. அமைச்சரும் படைத்தலைவரும் சான்றோரும் பாண்டிய மரபினைப் பாராட்டிப் பெருமதிப்பு வைத்துப் போற்றுகிறவர்கள்; ஒரு பாவையைச் சிங்காதனத்தில் வைத்தாலும் அரசனென மதித்து ஒழுகுகிறவர்கள். அவர்களால் தீங்கு வர இடம் இல்லை. ஒருகால் சொன்னதைக் கேளாமல் அரசன் தான் போகிற போக்கிலே போய் மற்றவர்களைப் புறக்கணிப்பானானால், பல காலமாக இருந்து அரசியல் தேரை இழுக்க உதவும் சான்றோர்களுக்கு மனத்தில் சற்றே வெறுப்புத் தோன்றலாம். ஆனாலும் அவர்கள் கைவிடமாட்டார்கள்.

ஒரு விதத்தில் அரசன் இளைஞனாக இருப்பது நன்மைதான். நல்ல வகையில் அவனுக்கு அறிவுரை கூறிக் கோலோச்சும்படி செய்யலாம். மனிதன் வளர வளர ஆசையும் பாசமும் வளர்கின்றன. இளம் பருவத்தில் அவன் உள்ளத்தில் அத்தனை மாசு இருப்பதில்லை. ஆதலால்தான் இளமையில் கல்வி கற்கும் நல்ல வழக்கத்தை வைத்திருக்கிறார்கள். இந்த அரசனுக்கும் இப்போதிருந்தே நல்ல பழக்கங்கள் வந்துவிட்டால் பின்னால் மாறமாட்டான்; மற்றவர்களுடைய துணையின்றியே திறமையோடு அரசாட்சியை நடத்துவான்.

இவ்வாறெல்லாம் எண்ணிய அமைச்சரும் பிறரும் மிக்க மகிழ்ச்சியோடு நெடுஞ்செழியனுக்கு முடி சூட்டி அரசனாக்கி அவனை வணங்கினார்கள். நேற்றுவரையில் அரண்மனையில் ஓடியாடித் திரிந்த இளம் பிள்ளை இன்று அரசனாகிவிட்டான். நேற்றுவரையில் சிட்டுக் குருவிபோல ஒரு கவலையும் இல்லாமல் பறந்து திரிந்தவனுக்கு இன்று தலையின்மேல் பாண்டிய குலத்துக்குரிய முடி ஏறினவுடன் கவலைகளும் ஏறிவிட்டன. அரச பதவி யென்றால் எளிதா?

“அரசன் எப்படி இருக்கிறான்?” என்று கேட்டாள் அமைச்சரின் மனைவி. தம் அரசன் நன்றாக இருக்கவேண்டும், திறமையாக ஆட்சி புரிய வேண்டும் என்ற கவலை நாட்டிலுள்ள குடிமக்கள் அனைவருடைய உள்ளத்திலும் இருந்தது. பொறுப்புள்ள அமைச்சருடைய மனைவிக்கு அந்தக் கவலை இருப்பது வியப்பு அல்லவே!

“பாண்டிய குலத்தின் பெருமையை நாளுக்கு நாள் உணர்ந்து பாராட்டுகிறேன்” என்றார் அமைச்சர்.

“பழையவர்கள், முன்பு இருந்த பாண்டியர்களின் பெருமையையா? இப்போதுள்ள இளைஞனின் பெருமையையா?”

“அது வேறு, இது வேறா? கங்கையாற்று நீரைப் போல இரண்டும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது தானே? இடையறாது வருவது பாண்டிய பரம்பரை; அதனுடைய பெருமையும் நீரோட்டம்போல-கங்கையாற்றின் நீரோட்டம்போல-கோடை யென்று குறையாமல் தடையின்றி வருவது. இந்த உண்மையை இப்போது நன்றாக உணர்கிறேன்.”

“அரசன் பெரியவர்கள் சொல்வதைக் கேட்கிறானா? மனத்தில் வாங்கிக் கொள்கிறான?”

“அவன் சொல்வதை நாங்களும் வாங்கிக்கொள்கிறோம்.”

“நீங்கள் சொல்வது எனக்கு விளங்கவில்லை.”

“இத்தனை சிறிய பிராயத்தில் அறிவும் பெருந்தன்மையும் எவ்வளவு முழுமையாக அமைந்திருக்கின் றன! மற்றப் பூச்செடிகளில் இலை நன்றாகத் தழைத்து அரும்பு விட்டு மலர்ந்து மணக்கும். ஆனால் மருவோ இரண்டு இலை விடும்போதே மணக்கிறது. இந்தப் பாண்டியனும் அப்படித்தான் இருக்கிறான். அறிவும் அடக்கமும் பெருமையும் சால்பும் இவனுடன் கருவிலே உண்டாகி இருக்கின்றன.”

“அமைச்சர்கள் யாவருக்கும் மகிழ்ச்சிதானே?”

“உருவத்தைக் கண்டு நாம் எதையும் மதிப்பிடக்கூடாது என்பதைப் பலர் தெரிந்துகொண்டார்கள். அரசன் பிராயத்தால் சிறியவனாக இருந்தாலும் அறிவால் பெரியவனாக இருக்கிறான். யார் எது சொன்னாலும் பதற்றம் இல்லாமல் கேட்கிறான். அமைதியாக ஆராய்கிறான். தன்னுடைய கருத்தையும் துணிவாக எடுத்துச் சொல்கிறான். அப்படிச் சொல்வதில் துணிவும் இருக்கிறது; பணிவும் இருக்கிறது. சில சமயங்களில் அவன் எழுப்பும் ஐயங்களுக்கு எங்களாலே விடை கூற முடியவில்லை.”

“அறிவிற் சிறந்த பாண்டிய குலம் வாழட்டும்! புறப் பகைஞர் வராமல் இருக்கட்டும்!” என்று அமைச்சர் மனைவி வாழ்த்தினாள்.

அமைச்சர்கள் தமக்குள் கூடிக் கூடிப் பேசிக் கொண்டார்கள். அவர்கள் முகத்தில் கவலை தேங்கியிருந்தது. ஏதோ ஒரு செய்தியை அரசனுக்கு அறிவிக்க முடியாமல் மயங்குவதாகத் தெரிந்தது. ஒருவர், “நாம் எப்போதும் பாதுகாப்பாக இருக்கவேண்டும். போர் மூண்டுவிட்ட பிறகு ஆயத்தம் செய்வதால் பயன் இல்லை” என்றார்.

“இப்போதுதான் அரசு கட்டில் ஏறினான். விளையாட்டை விட்டு அரசியலில் புகுந்தான். அதற்குள் போர் என்றால் அவன் உள்ளம் அஞ்சாதா?” என்று கேட்டார் மற்றோர் அமைச்சர்.

“நம் அரசனுடைய அறிவைக் காணக் கான நமக்கு வியப்பு உண்டாகிறது; அதுபோலவே அவனுடைய வீரமும் நமக்கு வியப்பை உண்டாக்கலாம். எப்படியும் நாம் படைகளைப் போருக்கு ஆயத்தப்படுத்த வேண்டியதுதான். இந்தச் செய்தியை அரசனிடம் கூறி, மேற்கொண்டு செய்யவேண்டுவதைச் செய்வதே நம் கடமை” என்றார் முதல் அமைச்சர்.

அவர்களுடைய கவலைக்குக் காரணம் பாண்டி நாட்டைக் கைப்பற்றச் சேர அரசன் முயல்கிறான் என்ற செய்திதான். ஒற்றர்களின் வாயிலாக இது அமைச்சர்களுக்குத் தெரிய வந்தது.

பாண்டி நாட்டில் எல்லா வளங்களும் உண்டு. ஐந்து வகையான நிலங்களும் இருக்கின்றன. பல காலமாகப் பெரு மன்னர்களின் பாதுகாப்பில் இருந்தமையால் நாளுக்கு நாள் வளம் பெருகி வந்தது. பிற நாட்டரசர்கள் பாண்டியனோடு போர் செய்ய அஞ்சினார்கள். பாண்டி நாட்டைப் போலத் தம் நாட்டில் வளம் சுரக்க வேண்டும் என்றும், பாண்டியனைப் போலத் தாமும் புகழ் பெறவேண்டும் என்றும் அவர்கள் ஆசைப்பட்டார்கள். வெறும் ஆசை இருந்தால் போதுமா? அதற்கு ஏற்ற ஆற்றல் வேண்டாமா?

அக்காலத்தில் சேர நாட்டில் அரசனாக இருந்தவன் யானைக்கட் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்பவன். அவன் கொடையிலே சிறந்தவன்; புலவர்களைப் பாதுகாப்பவன்; நல்ல பண்புகளை உடையவன். ஆயினும், நிலத்தின் இயல்பு நீரை மாற்றுவதுபோல அவனுடைய அமைச்சர்களிற் சிலர் அவனுக்குத் தீய எண்ணத்தை உண்டாக்கினார்கள். மன்னனாகப் பிறந்தாலே மண்ணாசை பற்றிக்கொள்ளும். அமைச்சர்களுடைய தூண்டுதலும் சேர்ந்தால் அது பெருகித் தீயாக மூண்டுவிடும்.

மாந்தரஞ் சேரல் இரும்பொறையைச் சில அமைச்சர்கள் நெருங்கிப் பேசினார்கள். “பாண்டி நாட்டில் இப்போது ஒரு குழந்தை அரசாளுகிறது. பால்மணம் மாறாப் பாலகனை அரசனாகப் பெற்ற பாண்டிய மக்கள் எப்படித்தான் வாழப் போகிறார்களோ?” என்று பேச்சைத் தொடங்கினர்.

“இதுவரையில் வாழ்ந்தது போலத்தான் வாழ்வார்கள்” என்றான் சேரன்.

“அப்படிச் சொல்வதற்கில்லை. அரசன் திறமையுடையவனாக இராவிட்டால் ஆட்சி நன்றாக நடவாது. இளங்குழந்தைக்கு அரசியல் எப்படித் தெரியும்? உடனிருக்கும் அமைச்சரும் படைத்தலைவரும் தம்முடைய போக்கிலேதான் நாட்டை ஆள்வார்கள். ஒவ்வொரு வருக்கும் ஒவ்வோர் ஆசை இருக்கும். தன்னலம் பெருகிய உலகத்தில் ஒவ்வொருவனும் தனக்கு மிகுதியான ஊதியம் வரவேண்டும் என்று ஆசைப்படுவான். அவர்களுக்குள் மன வேறுபாடு நேரும்; ஒற்றுமை குலையும். ஆட்சி சிதைவுறும். இத்தகைய செவ்வியைக் கண்டு அருகில் உள்ள அரசர்கள் எளிதிலே நாட்டைக் கைப்பற்றிக் கொள்வார்கள்.”

“அதற்காக நாம் என்ன செய்வது? பாண்டி நாட்டுக்கு வந்த கவலையை நாம் ஏற்றுக்கொண்டு வருந்துவானேன்?” என்று கேட்டான் சேர மன்னன்.

“கவலைப்பட வேண்டாம். வேறு ஓர் அரசன் கொண்டு போகிறதை நாமே எடுத்துக்கொள்ளலாமே!”

“பாண்டிய நாட்டைக் கைப்பற்றலாம் என்று சொல்கிறீரா?”

“மன்னர் பிரானுக்கு நாடு விரிவடைய வேண்டும் என்று விருப்பம் இல்லாவிட்டால் அதைப்பற்றிக் கவலை வேண்டாம்.”

“இல்லை, இல்லை. உம்முடைய யோசனை என்ன? அதைத் தெளிவாகச் சொல்லும்.”

“நமக்கு வேண்டிய படைகள் இருக்கின்றன. பல காலம் போர் செய்யாமல் வீரர்கள் தோள் தினவெடுத்துக் கிடக்கிறார்கள். பாண்டி நாட்டு அரசனோ குழந்தை. இப்போது நாம் மதுரையை முற்றுகையிட்டால் எளிதில் கைப்பற்றலாம். இத்தகைய சந்தர்ப்பம் என்றும் இருந்ததில்லை. இனியும் நேராது.”

அரசனுக்கு மண்ணாசை தோன்றியது; அது வளர்ந்து பெரிய உருவம் எடுத்தது. யானையின் கண்ணைப் போன்ற சிறிய கண்ணை உடையவனாதலால் யானைக்கட் சேய் என்று அவனை வழங்கினார்கள். அவன் புறக்கண் சிறியதாக இருந்ததைப் போல அகக் கண்ணும் சிறியதாகிவிட்டது போலும்! அமைச்சன் கூறியதை நம்பி ஆசையை வளர்த்தானேயன்றித் தானே ஆய்ந்து பார்க்கவில்லை.

படைகளை ஆயத்தம் செய்தான்; புதிய படைகளையும் சேர்த்தான். பெரும் போராக மூள இடம் இல்லையென்று அமைச்சர்கள் சொன்னார்கள். ஆதலால் பெரும் படை திரட்டவில்லை.

‘சேரமான் படை திரட்டுகிறான்; மதுரையைத் தாக்கவேண்டும் என்பது அவன் எண்ணம்’ என்ற செய்தியை ஆராய்ச்சியில் வல்ல ஒற்றர்கள் கொண்டு வந்தார்கள். இந்தச் செய்தியை முதலில் நெடுஞ்செழியனிடம் தெரிவிக்காமல் அமைச்சர்கள் தமக்குள்ளே கலந்து ஆராய்ந்தார்கள். கடைசியில் அரசனுக்குத் தெரிவித்துத் தக்கபடி பாதுகாப்புக்குரியவற்றைச் செய்யவேண்டு மென்று தீர்மானித்தார்கள்.

அரசனிடம் செய்தியைத் தெரிவித்தபோது அவன் திடுக்கிடவில்லை. “நல்ல சந்தர்ப்பம் வருகிறது. பாண்டிய வீரர்களின் வீரத்தையும் உங்களுடைய அறிவையும் என்னுடைய மனத்திண்மையையும் பயன்படுத்திக்கொள்ள வாய்ப்புக் கிடைக்கிறது. இருந்த இடத்தில் இருந்தபடியே இந்தப் பயிற்சி கிடைப்பது எனக்குப் பெரிய ஊதியம்” என்று அதை வரவேற்றான். சிங்கக் குட்டி என்று ஒருவர் சொன்னது எவ்வளவு பொருத்தம்!

அரசன் இளையவனென்ற ஒன்றை மாத்திரம் எண்ணிச் சேரன் முற்றுகையிட வருகிறான் என்பதை மதுரையில் உள்ளவர்கள் உணர்ந்துகொண்டார்கள். “மற்றவர்களை அவன் மறந்துவிட்டான். மதுரை எப்போதும் மாற்றானுக்கு இடம் கொடாது என்பதை உணரப் போகிறான்” என்று பேசிக்கொண்டார்கள்.

போர் மூண்டது. மாந்தரஞ் சேரல் இரும் பொறை மண்ணாசைக்கு அடிமையாகித் தானே படைத்தலைமை தாங்கி நேரே பாண்டி நாட்டுக்குள் புகுந்து விட்டான். நாட்டின் எல்லையைக் கடந்து சிறிது தூரம் வந்துவிட்டான். நெடுஞ்செழியன் இளையவனாக இருந்தும் தானே போர் முனைக்குப் போக வேண்டுமென்று துடிதுடித்தான்.

சேரன் படையின் அளவை ஒற்றர்களின் வாயிலாக முன்பே தெரிந்துகொண்டிருந்தனர் படைத்தலைவர்கள். அந்தப் படையை எளிதில் புறங்கண்டு விடலாம் என்று தெளிந்தார்கள். அரசன் போருக்குச் செல்லவேண்டு மென்று துடிப்போடு இருப்பதை உணர்ந்த அமைச்சர் தலைவர் அவனை அணுகித் தம் கருத்தைக் கூறினார். இந்தப் போர் மிகவும் சிறிய போராகவே இருக்குமென்றும், மாற்றான் வலியைத் தெரியாமல் சிறிய படையுடன் சேரன் வந்திருக்கிறானென்றும் எடுத்துக் காட்டினார்.

“முதல்முதலாக நம்மை நாடி வரும் வெற்றி மகளை ஏற்றுக்கொள்ள வேண்டாமா?” என்றான் அரசன்.

“அதற்குரிய பருவம் உண்டு” என்று பணிவாகச் சொன்னார் அமைச்சர்.

“நான் இளையவன் என்று அஞ்சுகிறீர்களா?” என்று கேட்டான் நெடுஞ்செழியன்.

“இல்லை, இல்லை. இந்தப் போர் சிறு போர். இதில் பெறுவது பெரிய வெற்றி ஆகாது. அரசர்பிரானுடைய கன்னிப் போர் பெரிய போராக இருந்தால் வெற்றியும் பெரிதாக இருக்கும். இது காலில் குத்திய முள்ளை எடுத்தெறிவதுபோல முடியப் போகும் போர். இதைப் போர் என்று சொல்லுவதே நம் வீரத்துக்கு இழுக்கு. சில நாழிகைகளில் சேரனை அடி பணியச் செய்து சிறைபிடித்து வருகிறேன்” என்று படைத்தலைவர் கூறினார். அரசன் தன் ஆர்வத்தை அடக்கிக்கொண்டான்.

பாண்டி நாட்டின் எல்லையில் எதிர்ப்பு ஒன்றும் இல்லாததைக் கண்ட சேரமான் தன் படையை நாட்டுக்குள்ளே செலுத்தினான். பாண்டி நாட்டுப் படைத் தலைவருக்கு அவனைச் சிறை செய்ய வேண்டுமென்று ஆசை. ஆதலால் சிலந்தி தன் வலையில் ஈ விழுமட்டும் காத்திருப்பது போலச் சும்மா இருந்தார். தம் நாட்டு எல்லை தாண்டி உள்ளே சிறிது தூரம் வந்த பிறகு சென்று எதிர்த்தார். மதுரைப் படையும் சேரன் படையும் கை கலந்தன. சேரன் படையைப் பாண்டிப்படை நாற்புறமும் சூழ்ந்துகொண்டது.

சில நாழிகையே கடுமையாகப் போர் நிகழ்ந்தது. தம் நாட்டின் எல்லைக்குள்ளே அகப்பட்டுக்கொண்ட பகைவர் படையை எளிதிலே வென்றுவிடலாம் என்று படைத்தலைவர் எண்ணியது நிறைவேறியது. சேரமான் வகை தெரியாமல் அகப்பட்டுக் கொண்டான். போரில் மடிந்தவரும், தம் நாட்டை நோக்கி ஓடின வரும் போக எஞ்சியவர்கள் சிலரே. ஓடுவார் ஓடட்டும் என்று விட்டுவிட்டார் தலைவர். ஆனால் தாம் கூறிய வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டுமென்று கருதிச் சேர அரசனை வெளிச் செல்லாதபடி காக்குமாறு வீரர்களுக்குக் கட்டளையிட்டார். அவன் சிறைப்பட்டான்.

சிறைப்பட்ட சேரனுடன் வெற்றி மிடுக்கோடு படைத் தலைவர் நெடுஞ்செழியனை அணுகினார். அவனுடைய பெருந்தன்மையை என்னவென்று சொல்வது! சிங்காதனத்திலிருந்து எழுந்து வந்து எதிர் கொண்டழைத்தான் அந்த வீரனை. “இந்தச் சேரர் பெருமானை நல்ல மாளிகையில் ஊணுக்கும் உறக்கத்துக்கும் இடையூறு வராமல் பாதுகாத்து வர வேண்டும்” என்று அவன் கூறியபோது யாவரும் அவனுடைய பண்பை வியந்தனர்.

பெரிய அரசனாகிய சேரனைக் குற்றம் செய்தவரை இடும் சிறையிலா இடுவார்கள்? பெரிய மாளிகையில் சிறை வைத்தார்கள். வேண்டிய பொருளை வேண்டிய போதெல்லாம் அளிக்கத் திட்டம் செய்தார்கள். அவன் வெளியே தன் விருப்பப்படி செல்ல இயலாதேயன்றி வேறு வகையில் அவனுக்கு ஒரு குறையும் இல்லை. இசை பாடும் மகளிரும் கூத்தியற்றும் விறலியரும் அவனுக்கு முன் பாடியும் ஆடியும் அவனை மகிழ்வித்தனர்; சுவைமிக்க உணவு அளித்தனர்.

சுதந்தரம் இல்லாத வாழ்வில் அமுதமே கிடைத்தாலும் மானமுடையவர்கள் ஏற்றுக்கொண்டு வாழ்வார்களா? மாந்தரஞ்சேரலிரும்பொறை இப்போதுள்ள தன் நிலையை நினைந்து பார்த்தான். அறிவற்ற அமைச்சரின் வார்த்தைக்குச் செவி கொடுத்த தீமை இப்படி விளைகிறதென்று எண்ணி ஏங்கினான். தன் அருமைச் சேர நாட்டையும் நகரத்தையும் மனைவி மக்களையும் விட்டுப் பிரிந்து வாழும் வாழ்க்கையை நரக வாழ்க்கையாக உணர்ந்து தவித்தான். பாட்டும் கூத்தும் அவனுக்கு அப்போது இனிக்குமா? கூட்

பா-2 டுக்குள் கிளியை அடைத்துக் கொஞ்சுவதுபோல அவனுக்குத் தோன்றியது. அவன் எண்ணமெல்லாம் எப்படி அந்தச் சிறையினின்றும் விடுபட்டுச் செல்வது என்பதில் கவிந்திருந்தன.

கட்டுக் காவல் கடுமையாக இல்லை. பாண்டிய அரசனுடைய பெருந்தன்மையை அவன் தன் உள்ளத்துக்குள் பாராட்டினான். அவ் விளைய அரசன் அப்போது என்ன வேண்டுமானலும் செய்யலாமே! இது சிறையா? தன் நிலைக்குச் சிறையே ஒழிய வசதிகளில் ஏதேனும் குறைவுண்டா?-இந்த எண்ணங்கள் அவனுக்குத் தோன்றினாலும் அவை அவனுக்கு உரிமை வாழ்வில் உண்டான ஆசையை மாற்றவில்லை. எப்படியாவது அங்கிருந்து புறப்பட்டுவிட வேண்டும் என்று உறுதி கொண்டான். ஒருவருக்கும் தெரியாமல் காவலாளர் சோர்ந்திருக்கும் செவ்வி அறிந்து ஓடி விட வேண்டுமென்று திட்டமிட்டான். தன் வீரத்துக்கு அடுக்காத செயல்தான். ஆயினும் வேறு வழி இல்லையே!

அவன் எண்ணம் கைகூடியது. பாண்டிய அரசனுக்கும் இவனை வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைத்து வைக்கவேண்டும் என்ற எண்ணம் இல்லை. இதற்குள் அவன் தன் பிழையை எண்ணி வருந்துவான் என்று நினைத்தான். ஆதலால் அவனுக்கு எந்த விதமான தீங்கும் நடவாமல் இருக்க வேண்டுமென்று வற்புறுத்தினான். விருந்தினனைப்போல உபசாரம் செய்ய வேண்டுமென்று பணித்தான். இந்த நிலையில் கடுமையான காவல் எவ்வாறு இருக்கும்?

ஒரு நாள் கிளி தப்பி ஓடிவிட்டது. அதில் வியப்பு ஒன்றும் இல்லை. சேரமான் மாந்தரஞ் சேரல் இரும் பொறை சிறையினின்றும் தப்பி ஓடிவிட்டான்; பெற்றேன், பிழைத்தேன் என்று தன் மாநகரைப் போய் அடைந்தான்.

சிறைப்பட்ட சேரன் தப்பி ஓடிவிட்டான் என்று பாண்டியன் நெடுஞ்செழியன் அறிந்தான். காவலரளர்கள், அரசன் என்ன செய்வானோ என்று அஞ்சி நடுங்கினார்கள். படைத் தலைவரது தண்டனைக்குத் தாம் ஆளாகவேண்டும் என்பதில் அவர்களுக்குச் சிறிதும் ஐயம் உண்டாகவில்லை.

ஆனால் அரசன் பெருந்தன்மை இப்போதும் புலப்பட்டது. “நாம் சேரனை விருந்தாளியாக வைத்துப் பாதுகாத்தோம். சிறைப்பட்டவன் என்ற எண்ணம் யாருக்கும் தோன்றாதபடி அவன் சுகமாக இருந்தான். காவலர்களுக்கே அவன் சிறைப்பட்டிருக்கிறான் என்ற நினைவு இல்லாமற் போயிருக்கும். அதனால் சோர்ந்து விட்டார்கள். குற்றம் இல்லை. இனிமேல் இப்படி நடவாமல் இருந்தால் போதும்” என்று சொல்லி அருள் பாலித்தான்.

“சேரன் ஓடிப் போய்விட்டானே!” என்று ஓர் அமைச்சர் அங்கலாய்த்தார்.

“போனல் போகட்டுமே. எத்தனை நாளைக்கு அந்த யானையைக் கட்டித் தீனி போடுவது? நாமாக ஒரு நாள் பெருந்தன்மையோடு உன் ஊருக்குப் போய் வா என்று அனுப்பியிருப்போம். அதனால் நமக்குப் பெருமை வந்திருக்கும். அந்தப் பெருமையை நமக்கு அளிக்காமல், ‘திருட்டுத்தனமாக ஓடிவிட்டான்’ என்ற சிறுமையைத் தான் பெற்றுக்கொண்டு போய் விட்டான். அவன் செய்த பேதைமைச் செயலுக்கு இதுகாறும் உரிமையை இழந்து பிணிப்புற்றிருந்ததே போதும். பாவம்! இனியாவது தன் வலிமை அறிந்து தன் நாட்டில் செய்யவேண்டியதைச் செய்யட்டும்.”

‘அரசனா பேசுகிறான்? இளமைப் பிராயத்தில் இத்தனை அறிவும் சால்பும் எப்படி வந்தன இவனுக்கு?’ என்று, கேட்ட சான்றோர்கள் வியந்தார்கள். அரசவைப் புலவர் மாங்குடி மருதனார் உள்ளம் பூரித்தார். பாண்டி நாடு நல்ல பண்புடைய மன்னனைப் பெற்றிருக்கிறதென்று உணர்ந்துகொண்டதனால் வந்த மகிழ்ச்சி அது.