உள்ளடக்கத்துக்குச் செல்

பாண்டியன் நெடுஞ்செழியன்/வஞ்சினம் வெடித்தது

விக்கிமூலம் இலிருந்து
2. வஞ்சினம் வெடித்தது

இந்த முறை சோழனுக்குப் பாண்டி நாட்டின் மேல் ஆசை விழுந்தது. ஆனால் அவன் மாந்தரஞ் சேரல் இரும்பொறையைப்போல ஆராயாமல் செயலிற் புக விரும்பவில்லை. அரசன் புதியவனாக வந்திருந்தாலும் பழம் படைகள் மதுரையில் மிகுதியாக இருக்கும் என்று அவனுக்குத் தெரியும். ‘எவ்வளவு படைகள் இருந்தாலும் தக்க தலைவன் இருந்தாலன்றிப் படையின் ஆற்றல் பயன்படாது. இளமைப் பருவமுடைய நெடுஞ்செழியனுக்கு என்ன அநுபவம் இருக்கிறது? ஏதோ பைத்தியக்காரத்தனமாக மாந்தரஞ் சேரல் ஆராயாமல் சென்று அகப்பட்டுக் கொண்டான். எப்படியோ தப்பி வந்துவிட்டான். தக்கபடி படைப் பலத்தைக் கூட்டிக்கொண்டு சென்று எதிர்த்தால் தடையின்றிப் பாண்டி நாட்டை அடிப்படுத்திவிடலாம்.’-இந்த நெறியிலே சென்றன, அவன் எனணங்கள்.

சோழ அரசனிடம் படை இருந்தது. ஆனால் அது போதாதென்று தோன்றியது. எத்தனைக் கெத்தனை மிகுதியான படைகளைச் சேர்த்துக்கொள்ள முடியுமோ அத்தனைக்கத்தனை வெற்றி உறுதி யென்று தேர்ந்து, அதற்கு ஆகும் வழி என்னவென்று ஆராய்ந்தான். தான் மாத்திரம் படையைப் பெருக்கிக்கொண்டால் போதாதென்று நினைத்தான். மற்ற நாட்டு மன்னர்களையும் துணையாகப் பெற்றால் பாண்டியனை வெல்லலாம். சேரன் முன்பே பாண்டியனிடம் தோல்வியுற்றவன். அவன் தனியே இனிப் போர்க்குச் செல்லமாட்டான். ஆயினும் அவன் உள்ளத்தில் பகைக் கனல் அவிந்திராது; கொழுந்து விட்டெரிந்து கொண்டேயிருக்கும். அவனைத் துணைக்கு அழைத்துக் கொள்ளலாம். போதுமா? இன்னும் பலரைத் துணைவராகச் சேர்த்துக்கொள்ள விரும்பினான்.

“பாண்டியனை வெற்றி கொள்ள யார் யார் வருகிறீர்கள்?” என்று வெளிப்படையாக முரசறைந்து விளம்பரப் படுத்தவில்லையே ஒழிய ஊருக்கு ஊர் ஆள் அனுப்பித் தன் கருத்தைத் தெரியப்படுத்தி அவர்களுடைய கருத்தை அறிந்துவரச் செய்தான்.

அந்தக் காலத்தில் தமிழ்நாட்டில் முடியுடை மன்னர்கள் மூவர் இருந்தார்கள். தொன்று தொட்டு வரும் அரச குலத்தைச் சார்ந்த சேர சோழ பாண்டியர்களாகிய மூவரையும் சிறப்பித்துப் பாராட்டுவது வழக்கு. அவர்களையல்லாமல் அங்கங்கே உள்ள கொங்கு நாடு முதலிய நாடுகளை ஆண்ட சிற்றரசர்களும் இருந்தார்கள்.

இந்த இரு வகையினர்களை யல்லாமல் வேளிர் என்று வழங்கும் தலைவர்கள் பலர் பல இடங்களில் இருந்தார்கள். அவர்கள் தம்முடைய ஊர்களில் உள்ள மக்களையும் சுற்று வட்டாரத்திலுள்ள மக்களையும் ஆண்டு வந்தார்கள்; இக்காலத்தில் ஜமீன்தார்கள் என்றும் பாளையக்காரர்கள் என்றும் வழங்குபவர்களைப் போன்ற நிலை படைத்தவர்கள். ஆனால் அவர்கள் யாருக்கும் அடங்கியவர்கள் அல்லர். நிலவளமுடைய வேளாண்குடியிலே பிறந்தவர்கள் அவர்கள் வேளிர்களுக்குள் ஒழுக்கத்தாலும் கொடையாலும் சான்றாண்மையாலும் சிறந்தவர்கள் பலர் இருந்தார்கள். சிலர் தமக்குள்ளே சண்டையிட்டார்கள். பெரு மன்னர்களுக்குள் போர் நிகழ்ந்தால் அவர்களுக்குத் துணையாகச் சென்று போரில் ஈடுபடுவதும் உண்டு. போர் வீரர்களையும் யானை முதலிய படைகளையும் அவர்கள் வைத்துத் தம் ஆட்சிக்குட்பட்ட ஊர்களைப் பாதுகாதது வந்தார்கள்.

சோழ நாட்டிலும் பிற இடங்களிலும் உள்ள வேளிரையும் குறுநில மன்னரையும் சேரனையும் தனக்குப் படைத் துணையாகச் சேர்த்துக்கொள்ளும் முயற்சியைச் சோழன் மிக வேகமாகச் செய்து வந்தான். எத்தனை பேர் சேர்ந்து போரிட்டாலும் வெற்றியிலே பங்கு கொடுக்கலாம். பாண்டி நாடு எவ்வளவு விரிந்தது! இருபது பேர்கள் போரிட்டு வெற்றி பெற்றால் அந்த இருபது பேர்களுமே அந்த நாட்டைப் பங்கிட்டுக் கொள்ளலாம். அந்த நாட்டிலே எந்தப் பொருள் இல்லை?

சோழன் முயற்சி பலிக்கும் என்றே தோன்றியது. முதலில் அவன் சேரனுடைய உடன்பாட்டைப் பெற்றான். “போர் பாண்டி நாட்டு எல்லைக்கு வெளியே நடந்தால் நான் அவசியம் படையுடன் வந்து சேர்ந்து போரிடுகிறேன்!” என்று சேரன் உறுதி கூறினான். ஒருமுறை பாண்டி நாட்டின் எல்லைக்குள்ளே புகுந்து அகப்பட்டுக் கொண்டவன் அல்லவா?

சோழ நாட்டில் அழுந்தூர் என்ற ஊரில் திதியன் என்னும் வேள் ஒருவன் இருந்தான். அவன் வீரத்திற் சிறந்தவன். குறுக்கை யென்னும் இடத்தில் அன்னியென்பவனோடு போர் செய்து அவனை வென்றவன் அவன். கோசர் என்னும் கூட்டத்தினரோடு பொருது அழித்தவன். அவனிடம் சோழன் தன் கருத்தைத் தெரிவித்தபோது, அவன் தன்னிடமுள்ள படைகளோடு துணை வருவதாக ஒப்புக் கொண்டான். சேரனும் திதியனும் இணங்கி வந்தபோது சோழனுக்குப் போரில் வெற்றியே கிட்டியது போன்ற மகிழ்ச்சி உண்டாகிவிட்டது. பொருநன் என்ற வேள் ஒருவனும் இந்த முயற்சியில் சேர்ந்துகொண்டான்.

வேற்று நாட்டில் உள்ள வேளிர்களையும் சேர்த்துக்கொண்டால் நலம் என்று அவர்கள் எண்ணினார்கள். எருமையூரனைக் கேட்டால் ஒருகால் அவனும் சேரலாம் என்று சேரன் சொன்னன். இன்று மைசூர் என்று வழங்கும் ஊருக்கு வடமொழியில் மஹிஷபுரம் என்று பெயர். அதுவே எருமையூர் என்று தமிழில் வழங்கியது. அக்காலத்தில் அது பெரிய அரசாக இருக்கவில்லை. அதை ஒரு வேளே ஆண்டு வந்தான்; குறுநில மன்னனென்றே சொல்ல வேண்டும். அவனிடம் சிறந்த படை ஒன்று இருந்தது. சோழன், திதியன், பொருநன் மூவரும் அவனிடம் சென்றனர்; சேரன் துணை வருவதாக இருப்பதையும் சொல்லித் தம் கருத்தைத் தெளிவாகச் சொன்னார்கள்.

வலிய வரும் செல்வத்தை வேண்டாம் என்று சொல்வார் யார்? பாண்டி நாட்டின் வளத்தைப்பற்றி எருமையூரன் முன்பே கேட்டிருக்கிறான். மதுரை மாநகர் இந்நாட்டில் வேறு எங்கும் காணாத சிறப்புடைய தென்பதைப் புலவர்கள் சொல்லக் கேட் டிருக்கிறான். “அரசனே இளையவன்; நாடோ பெரிது; நாம் வென்றால் நமக்குக் கிடைக்கும் பொருள் அளவற்றது” என்று சோழனும் பிறரும் சொல்லச் சொல்ல எருமையூரனுக்கு நாவில் நீர் ஊறிற்று; “உங்கள் கருத்துக்கு இணங்குகிறேன்” என்று உடன்பட்டான்.

“இன்னும் யார் யாரைச் சேர்த்துக்கொள்ளலாம்?” என்று கேட்டான் சோழன். அந்தப் பக்கங்களில் யாரேனும் தக்க படை வலிமையுடன் இருந்தால் துணையாகச் சேர்த்துக்கொள்ளலாமே என்பது அவன் எண்ணம். படை பெருகப் பெருக வெற்றி உறுதிப்படும் அல்லவா? விரைவிலும் நினைத்த காரியத்தை நிறைவேற்றி விடலாம்.

எருமையூரன் இரண்டு பேரைச் சொன்னான். “துவார சமுத்திரத்தில் புலிகடிமால் மரபில் வந்த இருங்கோவேள்மான் இருக்கிறான்; அவனைக் கேளுங்கள். தகடூரில் எழினி யென்னும் வேள் இருக்கிறான்; அவனை உங்களுக்கு முன்பே தெரிந்திருக்கலாம். அவனையும் துணை சேர்த்துக்கொள்ளலாம்... இன்னும்..."

“போதும், போதும். இப்போதே நாம் ஐந்து பேர் இருக்கிறோம். ஐந்து பேர் சேர்ந்து நூற்று வரை முறியடித்த நாடு இது. நீங்கள் சொன்ன இரு வரையும் அணுகிக் கேட்கிறோம். உடன்பட்டால் சேர்த்துக்கொள்கிறோம்; இல்லையானால் நாம் ஐவரும் போதும்; இந்த உலக முழுவதுமே வென்றுவிடலாம்” என்றான் சோழன்.

எருமையூரன் சிரித்துக்கொண்டான். “பல காலமாகப் புகழ் படைத்து விளங்கும் பாண்டியனது பேரரசை எளிதிலே குலைத்துவிடலாம் என்று நான் நினைக்கவில்லை. பலருடைய துணைவலி இருந்தால் அது இயலும்” என்றான்.

சோழன் முதலில் இருங்கோவேள்மானிடம் சென்றான். மிகப் பழங் காலத்தில் வடநாட்டிலிருந்து வந்து குடியேறிய வேளிர்களில் ஒருவனுடைய வழி வந்தவன் அவன். அவனுடைய குல முதல்வன் ஒரு முனிவரைக் காப்பாற்றும் பொருட்டுப் புலியோடு, பொருது அதனைக் கொன்றான். அதனால் அவனுக்குப் புலிகடிமால் என்ற சிறப்புப் பெயர் வந்தது. அப்பெயரை அவன் வழி வந்தவர்களுக்கும் சார்த்தி வழங்குவது மரபாகி விட்டது. துவார சமுத்திரம் என்னும் ஊரைத் துவரை என்று தமிழ்ப் புலவர்கள் பாடியிருக்கிறார்கள். புலிகடிமால் மரபை ஹொய்ஸால வம்சம் என்று இப்போது சரித்திர ஆசிரியர்கள் குறிக்கிறார்கள். வீரம் செறிந்த மரபு அது.

இருங்கோவேள்மானிடம் சோழனும் பிறரும் சென்று பேசி அவனையும் தம் கட்சியில் சேர்த்துக் கொண்டனர். தகடூரை ஆண்ட எழினியும் அவர்களுக்குத் துணையானான்.

முடியுடை மன்னராகிய சோழனும் சேரனும், திதியன், பொருநன், எருமையூரன், இருங்கோவேள்மான், எழினி என்னும் ஐம்பெரு வேளிரும் ஒன்றுபட்டுப் பாண்டியனை எதிர்த்து வென்று பாண்டி நாட்டைத் தமக்குள்ளே பங்கு போட்டுக்கொள்ளத் திட்டமிட்டனர். அவரவர்கள் தம்மால் இயன்ற அளவுக்குப் படையைக் கூட்டுவதாக உறுதி பூண்டனர்.

எல்லாருக்கும் ஊக்கம் உண்டாக்கி முன் நின்று போரை நடத்த முன் வந்தான் சோழன். சோழனும் பாண்டியனும் பரம்பரை வைரிகள். தன்னுடைய முயற்சி வரவர எண்ணிய திசையிலே எண்ணியபடி நிறைவேறி வருவதை எண்ணி எண்ணி இறுமாந்தான் சோழன். தன் தலையில் பாண்டி நாட்டு மணி முடியே ஏறிவிட்டது போன்ற கற்பனையில் அவன் கிடந்து தடுமாறினான். உடனே மதுரைக்குச் சென்று முற்றுகையிட்டுப் பாண்டியனைச் சிறைபிடிக்க வேண்டுமென்ற ஆத்திரம் அவனிடம் உண்டாயிற்று. நினைத்தவுடன் நடப்பதாக இருந்தால் இவ்வளவு முயற்சியும் அல்லலும் எதற்கு?

ஒருவாறு அவர்கள் ஏற்பாடுகள் நிறைவேறின. யார் யார் எப்போது எப்படி வந்து சேர்வது என்று யோசித்தார்கள். அவரவர்கள் வெவ்வேறு திசையில் வந்து தாக்கலாம் என்று முதலில் பேச்சு எழுந்தது. அப்படியானால் ஒவ்வொருவரையும் எளிதில் பாண்டிப் படை வென்றுவிடக்கூடும் என்று அஞ்சினர். படையின் சிறு சிறு பகுதியை ஒவ்வோரிடத்திலும் அனுப்பிப் பொழுது போக்கச் செய்துவிட்டுப் பெரிய படை இருக்கும் இடத்தில் பெரும்பாலான படைகளைக் கொண்டு சென்று பொருது அழித்து, அடுத்து வேறிடத்துக்கு வந்து பொரலாம். இப்படியே யாவரையும் பாண்டியன் அழித்துவிடலாம். ஆதலின், எல்லோரும் ஒருங்கே ஒரு திசையிற் சென்று போர் செய்தலே நலம் என்று தீர்மானித்தனர்.

இரு பெரு மன்னரும் ஐம்பெரு வேளிரும் போர் முழக்கம் செய்துவிட்டனர். முன் அறிவிப்பு இல்லா மல் போர் செய்வது அக்காலத்தில் வழக்கம் அன்று. போர் நிகழ்வதற்கு முன் அதனை அறிவிப்பதோடு, பகையரசன் நாட்டிலுள்ள பெரியோர்களையும் மங்கையரையும் குழந்தைகளையும் வேறு இடத்துக்குப் போய் விடும்படி எச்சரிப்பார்கள். போரில் அவர்களுக்கு ஊறுபாடு நிகழக் கூடாதென்பது பகைவர்கள் கருத்து. பிறகு ஆநிரைகளை ஓட்டிவந்துவிடுவார்கள். அவற்றுக்குத் தீங்கு நேரக்கூடாது. “சண்டைக்கு எடுபிடி மாடு பிடி” என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. அது இந்த ஆநிரை கொள்ளும் வழக்கத்தையே புலப்படுத்துகிறது. இவ்வாறு ஒரு முறையை மேற்கொண்டு போர் நிகழ்த்தியதால் அறப் போரென்று சொன்னார்கள்.

போர் முழக்கம் நெடுஞ்செழியன் காதில் விழுந்தது. ஏழு பேர் ஒன்றாகச் சேர்ந்துகொண்டார்கள் என்பதை உணர்ந்தான். குடிமக்களிற் சிலருக்குச் சற்றே அச்சம் தோன்றியது. “இன்னும் பிள்ளைப் பிராயம் நீங்கவில்லை. அதற்குள் இவ்வளவு பேரோடு எப்படிப் பொருவது?” என்று தமக்குள் பேசிக்கொண்டார்கள். ஆனால் பாண்டிய மன்னன் குதித்தெழுந்தான். உலகமே எதிர்த்து வந்தாலும் அஞ்சாதவனைப் போல மிடுக்கோடு பேசினான். “ஆயிரம் எலிகள் வந்துவிட்டனவே என்று பாம்பு அஞ்சுவதில்லை. பெரிய யானை ஆயிற்றே என்று சிங்கக் குட்டி சோர்ந்து போவதில்லை. மூட்டை மூட்டையாகப் பஞ்சு இருக்கிறதே என்று நெருப்பு நிற்பதில்லை. ஏழு பேர் தலைவர் ஒரு படைக்கு என்றால், அதுவே அதற்குக் குறை. படை முழுவதும் ஒருவர் தலைமையில் இயங்கினால்தான் அதன் வீரம் அனைத்தும் பகைவனை எதிர்ப்பதில் பயன்படும். தலைவர்கள் பலரானால் கருத்து வேறுபாடு ஒவ்வொரு கணத்தும் எழும்” என்று அறிவிலும், அநுபவத்திலும் சிறந்தவனைப் போல் அவன் பேசினான். அத்தனையும் உண்மை. அமைச்சரும் படைத் தலைவர்களும் வியந்தார்கள் என்று மட்டும் சொன்னால் போதுமா? அவர்களுக்குச் சிறிதளவு இருந்த ஐயமும் பஞ்சாய்ப் பறந்து போய்விட்டது. “இந்த அரசனைத் தலைவனாகப் பெற்றுப் போர் செய்யக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்” என்று யாவரும் ஒருமுகமாகக் கூறினர்.

அரண்மனையில் இருந்த சிலர் நெடுஞ்செழியனது இளமையை நினைந்து அஞ்சியது அவனுக்குத் தெரியவந்தது. பகைவர்களும், “இவன் சிறிய பையன்” என்று எள்ளியதாகக் கேள்வியுற்றான். அவன் கண்களில் கனல் கொப்புளித்தது. நெஞ்சில் வீரம் கனன்றது. அரச குலத்தின் மிடுக்கு அவன் நாவில் உருவாகியது. வஞ்சினம் கூறத் தொடங்கினான்:

“இதை யாவரும் கேளுங்கள். ‘இவன் நாட்டைப் பெரிதென்று பாராட்டிச் சொல்கிறவர்களைப் பார்த்துச் சிரிக்கத்தான் வேண்டும். இவன் சிறியவன். இவனால் என்ன செய்ய முடியும்?’ என்று அவ்வேந்தர்கள் பேசிக்கொள்கிறார்களாம். பெரிய பெரிய யானைகளும் தேரும் மாவும் படை வீரர்களும் மிகுதியாக இருப்பதாக எண்ணி இறுமாந்துகொண்டிருக்கிறார்கள். பாண்டி நாட்டு வீரர்களுடைய வலிமையை எண்ணி அவர்கள் அஞ்சவில்லை. சேரனுக்குப் பழைய கோபம் வேறு இருக்கும். என்ன என்னவோ சிறுசொற் சொல்லி எள்ளி நகையாடுகிறார்களாம்!”

“ஆம், ஆம்; அப்படித்தான் அந்த நாட்டிலிருந்து வந்தவர்கள் சொன்னார்கள்” என்று அரசவையில் சிலர் தமக்குள் கூறிக்கொண்டனர்.

“அவர்கள் உண்மையை அறியாதவர்கள். பாண்டி நாட்டின் சிறப்பை உணராதவர்கள். இந்த மண்ணின் வீரத்தைத் தெரிந்து கொள்ளாதவர்கள். என் இளமையையும் சிறிய உருவையும் பார்த்து ஏமாந்து போய் விட்டார்கள். இந்தச் சிறிய உடம்பில் இமய மலையைப் பதம் பார்த்த வழுதியின் ரத்தம் ஓடுவது அவர்களுக்குத் தெரியவில்லை. கடலளவும் தன் நாட்டை விரித்து முந்நீர் வடிம்பிலே தன் அடியை வைத்து அது தன் பாதத்தை அலம்ப நின்ற பெருவிறல் படைத்த பாண்டியன் உடம்பிலே அன்று இருந்த மிடுக்கு இந்த உடம்பிலும் இருப்பதை அவர்கள் நினைத்துப் பார்க்கவில்லை. மன்னரைப் புறங் கண்டு வெற்றிக் கொடி நாட்டி வேள்வி செய்த முதுகுடுமிப் பெருவழுதியின் வலிமை இன்னும் பாண்டிய பரம்பரையிலே குன்றாமற் சுடர் விடுவதை எண்ணிப் பார்க்க அவர்களுக்கு நேரமில்லை; அறிவில்லை; விதியும் இல்லைபோலும்!”

பாண்டியன் நெடுஞ்செழியனுடைய பேச்சில் மிடுக்கு ஏறியது; கனல் குமுறியது; வீரம் வெடித்தது. சொற்கள் அம்புகளைப்போல அடுக்கடுக்காக, வேகமாக, சூடாக வெளி வந்தன. அவையில் இருந்தவர்கள் மூச்சையும் அடக்கிக்கொண்டு கேட்டார்கள். “என்னுடைய வலிமை தெரியாமல் சிறுசொல் சொல்லிய வேந்தரைப் பொருது, அவர்கள் அவ்வளவு பேரையும் வென்று, அவர்கள் முரசத்தையும் அவர்களையும் ஒருங்கே கைக்கொள்ளாவிட்டால், என் குடை நிழலில் வாழ்கிற குடிமக்கள், பாதுகாப்பைக் காணாமல், எங்கள் அரசன் கொடியவன் என்று கண்ணீர் விட்டுத் தூற்றும் கொடுங்கோலை உடையவனாகுக! உயர்ந்த பெருமையையும், சிறந்த கேள்வியையும் உடைய மருதனாரை முதல்வராக உடைய உலகத்தோடு நிலை பெற்ற பலர் புகழும் சிறப்பையுடைய புலவர்கள் என் நாட்டைப் பாடாமல் போகட்டும்! என்னுடைய பாதுகாப்பில் இருக்கும் உறவினர்கள் துன்புறும்படியும், என்னிடம் இரப்பவர்களுக்கு ஈயாமற் போகும்படியும் வறுமை என்னை வந்து அடையட்டும்!” என்று அரசன் வஞ்சினம் கூறி முடித்தான். சிறிது நேரம் அவையில் ஊசி விழுந்தாலும் கேட்கும் மெளனம் நிலவியது.

மெல்ல மாங்குடி மருதனார் பேசினார். “அரசே, பாண்டிய குலத்தின் குருதி எப்படிக் கொதிக்கும் என்பதை இன்று நன்றாக உணர்ந்தேன்” என்றார். அவர் ஒருவர்தாம் அப்போது பேசமுடியும். அவரும் சுருக்கமாகப் பேசினார். “குலத்தின் பெருமைக்கு ஏற்ற வஞ்சினம் இது. உனக்கு வெற்றி கிடைப்பது நிச்சயம். நீ நீடு வாழ்க!” என்று வாழ்த்தினார். அவை கலைந்தது. போருக்கு ஆயத்தங்கள் நடைபெற்றன.

அரசன் தான் கூறிய வஞ்சினத்தைக் கவியாகவே அமைத்து விட்டான். அவனும் தமிழ்ப் புலமையிற் சிறந்தவன். உணர்ச்சிக் கொந்தளிப்பை உருவாக்கிக் காட்டும் அந்தக் கவிதை புறநானூற்றில் இன்று ஒளிர்கிறது.

‘நகுதக் கனரே நாடுமீக் கூறுநர்;
இளையன் இவன்’ என உளையக் கூறிப்
படுமணி இரட்டும் பாவடிப் பணைத்தாள்

நெடுநல் யானையும் தேரும் மாவும்
படையமை மறவரும் உடையம் யாம்’ என்று
உறுதுப்பு அஞ்சாது உடல்சினம் செருக்கிச்
சிறுசொல் சொல்லிய சினங்கெழு வேந்தரை
அருஞ்சமம் சிதையத் தாக்கி முரசமொடு
ஒருங்ககப் படேஎன் ஆயின், பொருந்திய
என் நிழல் வாழ்நர் செல் நிழற் காணாது
‘கொடியன்எம் இறை’ எனக் கண்ணீர் பரப்பிக்
குடிபழி தூற்றும் கோலேன் ஆகுக!
ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவன் ஆக
உலகமொடு நிலையஇய பலர்புகழ் சிறப்பிற்
புலவர் பாடாது வரைகஎன் நிலவரை! புரப்போர் புன்கண் கூர,
இரப்போர்க்கு ஈயா இன்மையான் உறவே!


  • இவன் ஆளும் நாட்டை உயர்வாகக் சொல்பவர்கள் எள்ளி நகையாடற்குரியவர்கள்; இவன் இளைய சிறு பையன்’ என்று நான் வருந்தும்படி சொல்லி, ‘ஒலிக்கின்ற மணி மாறி மாறி இசைக்கும் பரந்த அடியைபும் பருத்த காலையும் உடைய யானையையும், தேரையும், குதிரையையும், படைக்கலங்களைப் பெற்ற வீரர்களையும் உடையோம் யாம்’ என்று என்னுடைய மிக்க வலிமைக்கு அஞ்சாமல் பெரும் சினம் மிக்குச் சிறுமைப் பண்பைக் காட்டும் சொற்களைச் சொல்லிய சினமுடைய மன்னரை, வெல்லற்கரிய போரிலே சிதையும்படி தாக்கி அவர்களுடைய முரசத்தோடு ஒருங்கே அகப்படுத்தாமல் இருந்தேனானால், இதுகாறும் பொருந்தி நிற்கும் என் குடை கிழலில் வாழ்வார்களாகிய குடி மக்கள் தாங்கள் பாதுகாப்பின் பொருட்டுச் சாரும் நிழலைக் காணாமல், ‘எம் வேந்தன் கொடியவன்’ என்று கண்ணீர் விட்டுப் பழி தூற்றும் கொடுங்கோலுடையவனாகுக! உயர்ந்த பெருமையையும் மேம்பட்ட கேள்வியையுமுடைய மாங்குடி மருதன் தலைவனாக உலகத்தோடு நிலைபெற்ற பலர் புகழும் சிறப்பைப் பெற்ற புலவர் என் நில எல்லையைப் பாடாமல் நீங்குக! என்னால் காப்பாற்றுவதற்குரிய உறவினர் துன்பம் மிக, என்னிடம் வந்து இரப்பவர்களுக்குக் கொடுக்க மாட்டாத வறுமையை யான் அடைவேனாகுக!