உள்ளடக்கத்துக்குச் செல்

பாண்டியன் நெடுஞ்செழியன்/போரில் ஊக்கம்

விக்கிமூலம் இலிருந்து
4. போரில் ஊக்கம்

தலையாலங்கானத்தில் வெற்றி மகளைக் கைப்பிடித்தபின் பாண்டியன் நெடுஞ்செழியனுக்குத் தோள்திவுை மிகுதியாகிவிட்டது. அது மிகப் பெரிய போராக இருந்ததனால் போர்த் தொழிலின் துறைகளையெல்லாம் நன்கு உணரும் வாய்ப்பு அவனுக்குக் கிடைத்தது. முடியுடை மன்னர்கள் முறிந்தோட வீர விளையாட்டு நிகழ்த்திய அவன் புகழ் தமிழக முழுவதுமே பரவியது. ‘இளைஞன் இவன்; எப்படி நாட்டை ஆளப் போகிருனோ!’ என்று ஐயுற்றவர்கள் இப்போது அவனது இளமையை எண்ணியே பெருமிதம் அடைந்தார்கள். நெடுங்காலம் அவன் ஆட்சி செய்வான் அல்லவா? இனியும் எங்கேனும் பகைவர் இருந்தால் அவர்களை அடியோடு தொலைப்பேன் என்று வீர முழக்கம் செய்தான் வழுதி.

அக் காலத்தில் பாண்டி நாட்டின் வட கிழக்கே சோழ நாட்டின் எல்லையில் கடற்கரையை அடுத்த பகுதி ஒன்றை எவ்வி என்பவன் ஆண்டு வந்தான். நீழல் என்னும் ஊரில் அவன் வாழ்ந்தான். பெரும் போர் நடந்து முடிந்த இந்தச் சமயத்தில் பாண்டிப் படை இளைப்பாறும் என்று அவன் எண்ணிக் கொண்டான். தன் நிலப் பகுதியை அடுத்துள்ள பாண்டி நாட்டுப் பகுதி ஒன்றின்மேல் படை, யெடுத்துச் சென்று அதைத் தனதாக்கிக்கொண்டு கொடி நாட்டினான்; இந்தச் செய்தி பாண்டியனை எட்டியவுடன் அவன் கொதித்தெழுந்தான். யானைகளைப்பொருது வென்ற கோளரிக்கு முயல் எம்மாத்திரம்? ஒரு சிறு படையை அனுப்பி வேள் எவ்வியை ஓட்டச் செய்ததோடு அவன் நாட்டையும் அகப்படுத்தச் செய்தான். அப்போதுதான் எவ்விக்கு உணர்வு வந்தது. இவ்வளவு பெரிய அரசை எதிர்த்தது எவ்வளவு பேதைமை என்று தெரிந்துகொண்டான். ‘இனி இத்தகைய, செயலைச் செய்யேன். இப்போது நான் செய்த பிழைக்காக எனக்குரிய மிழலைக்கூற்றத்தைப் பாண்டியனுக்கு அளித்துவிடுகிறேன்’ என்று சமாதானம் பேசினான். பாண்டியனுக்கு நாடாசை இல்லாமையால் அவன் விருப்பப்படியே அவனை மன்னித்து, அவன் வழங்கிய மிழலைக்கூற்றத்தை மட்டும் தன் நாட்டுடன் சேர்த்துக்கொண்டான்.

இவ்வாறு வேறு சிவ பழைய வேளிர் குறும்பு செய்தனர். அவர்களையும் அடக்கி அவர்களுடைய முத்தூற்றுக்கூற்றம் என்ற நிலப் பகுதியைத் தன்னுடைய தாக்கிக்கொண்டான்.

நாளுக்கு நாள் பாண்டிய மன்னனுடைய வீரம் ஓங்கி வளர்ந்தது. இளமை மிடுக்கும் குலத்திற்கேயுரிய திறலும் சந்தர்ப்பமும் சேரச் சேர அவனுக்கு எப்போதுமே போரில் நாட்டம் இருந்து வந்தது. மிகச் சிறிய பகையானாலும் பெரும் பகையானாலும் தானே நேரில் சென்று போர் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் அவனிடம் வளர்ந்தது. அவ்வாறே சென்று போரிட்டு வெற்றி பெற்றான்.

நெடுஞ்செழியன் அரியணை யேறியது முதல் தொடர்ந்து பெரும் போர்களும் சிறு போர்களுமாகவே நிகழ்ந்துகொண்டிருந்தன. பாண்டி நாட்டு வீரர்களுக்கு ஊக்கம் குறையவில்லை. போர் வீரர்களுக்கு வெற்றி உண்டாக உண்டாகப் போரில் புகும் ஆர்வம் வளர்ந்து வரும்.

ஆனால் புலவரும் சான்றோரும் இந்த நிலையை விரும்பவில்லை. விடிந்து எழுந்தால் வேல் பிடிப்பதும் வில் பிடிப்பதுமாக அரசன் தன் வாழ்நாளைக் கழித்தால் அவனுடைய வாழ்க்கையில் பிற துறைகள் என்னாவது? அவன் திருமணம் செய்துகொள்ள வேண்டாமா? கலையின்பம் நுகர வேண்டாமா? புலவர்களைப் பாதுகாத்து அவர்கள் கவிதையைக் சுவைக்க வேண்டாமா? தமிழ்ப் புலவர்கள் கூடித் தமிழ்ச் சங்கத்தில் தமிழ் ஆராய்ந்தனர். மாங்குடி மருதனார், நக்கீரனார் முதலிய புலவர் பெரு மக்கள் தமிழை வளம்படுத்தினர். அந்தப் புலவர்களோடு புலவராக வீற்றிருந்து தமிழை ஆராய்ந்து இன்பம் காணும் திறமை பெற்றவர்கள் பாண்டிய மன்னர்கள். நெடுஞ்செழியனிடமும் அந்த ஆற்றல் இருந்தது. அவனே ஒரு புலவன். அப்படி இருந்தும் அதைப் பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பை அவன் உண்டாக்கிக்கொள்ளவில்லை. போர் வேட்கை அவனைக் கடுமையாகப் பற்றிக்கொண்டது.

இந்த நிலையில் புலவரும் சான்றோரும் மதியமைச்சரும் சேர்ந்து, பாண்டியனுடைய போர் வெறியைத் தணிக்க என்ன செய்யலாம் என்று ஆராய்ந்தார்கள். அப்போது அறிவிலும் அநுபவத்திலும் சிறந்த மாங்குடி மருதனார், “நம் மன்னன் வீர மகளின்பால் கொண்ட காதலை மாற்ற வேண்டுமானால் அவனுக்கு ஒரு தேவியைத் திருமணம் முடிப்பதுதான் தக்க வழி; வீரம் மிக்கவர்கள் அமைதி பெறுவது காதலிலேதான்” என்று கூறினார். மற்றவர்களும் அந்த உண்மையை உணர்ந்தார்கள். அரசனுக்குத் திருமணத்தின் இன்றியமையாமையை எடுத்துரைக்கத் தீர்மானித்தார்கள்.

புலவர்கள் மனம் வைத்தால் எதையும் செய்துவிடுவார்கள். மாங்குடி மருதனார் திருமணத்தைப் பற்றிய செய்தியைச் சொல்லியபோது முதலில் அரசன் ஆர்வமுள்ளவனாகக் காட்டிக்கொள்ளவில்லை. பேரரசர்கள் திருவோலக்கம் கொள்ளும்போது மாதேவியுடன் வீற்றிருத்தல் மரபென்றும், கோலோச்சும் மன்னன் இல்லறம் நடத்திக் காட்டினால் குடி மக்களும் இல்லறத்தை நன்கு நடத்துவார்கள் என்றும் புலவர் எடுத்துக் காட்டினார். நக்கீரனாரும் சேர்ந்துகொண்டார். அறிவும் மதிப்பும் உடைய அவர்களுடைய வாய்மொழி வென்றது. அரசன் திருமணம் புரிந்துகொள்ள உடன்பட்டான்.

பாண்டியப் பேரரசனுக்கு மணம் என்றால் எத்துணைச் சிறப்பாக நடைபெற்றிருக்கவேண்டும்! நாட்டு மக்கள் அவ்வளவு பேரும் அவனைத் தம் உயிரைப் போல எண்ணிப் போற்றினார்கள். அதனால் ஒவ்வொரு வீட்டிலும் திருமணம் நிகழ்ந்தது போன்ற உவகையில் அவர்கள் மிதந்தார்கள். பிற நாட்டு மக்களும் அரசரும் புலவரும் கலைஞரும் திருமணத்துக்கு வந்திருந்தனர். தம்முடைய வாழ்நாளில் அத்தகைய சிறந்த நிகழ்ச்சியைப் பார்த்ததே இல்லை யென்று முதியவர்கள் கூறிக் களிக்கூத்தாடினர்.

புலவரும் பிற கலைஞரும் பெற்ற வரிசைகளைச் சொல்வதா? அயல்நாட்டு மக்கள் கொணர்ந்து அளித்த காணிக்கைகளைச் சொல்வதா? குடிமக்கள் தங்கள் அன்புக்கு அறிகுறியாக அரிய பண்டங்களைக் கையுறையாகக் கொணர்ந்து அளித்த அன்பைக் கணக்கெடுக்க முடியுமா? அவர்கள் அளித்ததற்குமேல் அரசன் பல்வகைப் பொருள்களை அவர்களுக்கு வழங்கிய சிறப்பைத்தான் அறுதியிட்டுச் சொல்ல இயலுமா?

திருமணத்தில் அணங்கினர் நடனமிட்டனர்; அவர்களுடன் திருமகளும் களிக்கூத்தாடினள். புலவர்கள் புகழ்பாடிப் பாராட்டிப் பரிசுகளை மலையெனப் பெற்று உவகைக் கடலில் மூழ்கினர்; கலைமகள் குதுகலித்தாள். சான்றோர்கள் தெய்வத் திருவிழாவிலே கலந்து கொண்டது போன்ற இன்பத்தை அடைந்தார்கள்; தெய்வத் திருக்கோயில்களில் சிறப்பாக விழாக்கள் நடைபெற்றன.

மன்னனுடைய குலப் பெருமையை முதியோர் பாராட்டினார்கள்; அவனுடைய வீரச் சிறப்பைப் படைத் தலைவர்கள் புகழ்ந்தார்கள்; அவனுடைய வள்ளன்மையைப் புலவர்கள் கவிதையில் வைத்துப் போற்றினார்கள்; அவனுடைய கலைநுகர் திறத்தைக் கலைஞர்கள் எடுத்துரைத்துக் களிகூர்ந்தனர்; அறிவுச் சிறப்பை அமைச்சர் எடுத்துரைத்தனர்; அன்பின் மிகுதியைக் குடிமக்கள் பலபடியாகப் பாராட்டினர். குழந்தையும் கிழவனும், ஆணும் பெண்ணும், உள்நாட்டாரும் புற நாட்டாரும் தங்கள் தங்களுக்குத் தோற்றிய வகையில், அரசனைத் தம் அன்புக்குரியவன் என்பதை உணர்ந்து தெளிந்து, மனத்தால் போற்றியும் வாக்கால் புகழ்ந்தும் பெருமிதம் கொண்டார்கள்.

திருமணம் நிகழ்ந்த பின்னரும் பல மாதங்கள் அதைப்பற்றியே யாவரும் பேசிக்கொண்டிருந்தனர். அரசன் காதலின்பத்தை நுகரத் தொடங்கினான். ஆயினும் அவனுக்கு வெற்றி மகளிடம் இருந்த ஆராக் காதல் தணியவில்லை. மீண்டும் மீண்டும், யார் எங்கே குறும்பு செய்கிறார்கள் என்று ஆராய்ந்தான். யாரேனும் முணுக்கென்றால் ஓடினான்; பகைவரை எதிர்த்துப் போரிட்டு வெற்றியோடு திரும்பினான்.

பாண்டி நாட்டின் தெற்கே கடற்கரையை அடுத்த பகுதியில் பரதவர் என்னும் வகுப்பினர் இருந்து வாழ்ந்தனர். கடல் வாணிகம் செய்தும் முத்தும் பவளமும் எடுத்தும் அவர்கள் தம் திறமையைக் காட்டினர். தாம் செய்யும் தொழில்களிலே வரும் ஊதியத்தில் ஒரு பகுதியை அரசனுக்குத் திறையாகச் செலுத்தினர். இது வழி வழியே நடந்துவந்த முறை.

“அரசன் போர் புரிவதிலே பேரூக்கமுடையவனாக இருக்கிறான்; நாடாட்சியைத் தக்கவண்ணம் கவனிப்பதில்லை” என்ற பேச்சை அங்கங்கே சிலர் பேசத் தலைப்பட்டார்கள். அதனைக் கேள்வியுற்ற பரதவர், ‘அப்படியானால் நாம் திறை அளிக்காமல் நிறுத்தி விடலாமே. அதை அவன் எங்கே ஆராயப்போகிறான்?’ என்ற எண்ணம் கொண்டனர். ஒருகால் போர் நிகழ்ந்தாலும் தம்மினத்தார் யாவரும் கூடி எதிர்த்துத் திறை வழங்கும் வழக்கத்தை மாற்றிவிடலாம் என்பது அவர்கள் நினைவு.

பரதவர் இறை இறுக்கவில்லையென்பதை அதிகாரிகள் அரசனுக்கு அறிவித்தனர். உடனே இறையை இறுக்க வேண்டும் என்று அரசன் ஓலை போக்கினான். பரதவர் அதனைப் பொருட்படுத்தவில்லை. மீண்டும் நினைவுறுத்தினான். அவர்கள் முன்பே உறுதி செய்து கொண்டபடி வாளாவிருந்தனர். ‘எங்கே யார் வாலை ஆட்டுகிறார்கள்?’ என்று காத்து நின்ற அரசன் உடனே புறப்பட்டுவிட்டான்.

பரதவருக்கும் பாண்டியருக்கும் போர் மூண்டது. இனப்பற்று எவ்வளவு உறுதியானது என்பதை அரசன் அன்று உணர்ந்தான். பரதவர் அனைவரும் ஒன்று சேர்ந்துகொண்டனர். ஒருவனவது மரபையும் நியாயத்தையும் எடுத்துச் சொல்லக் கூடாதோ? பாண்டி நாட்டுக் கடற்கரை நீளமானது. அங்குள்ள பரதவர்களில் ஒருவர் விடாமல் யாவரும் போரில் சேர்ந்தனர். கடல் வாணிகத்தால் பரதவர் தலைவர் பலர் பெரும் பொருள் ஈட்டியிருந்தார்கள். அவர்களுடைய உதவியைப் பெற்று வாழும் மக்கள் பலர் அங்கங்கே இருந்தனர். அவர்களிற் பலர் பரதவர் கட்சியிலே சேர்ந்து போர் புரிந்தனர்.

‘இது மிகச் சிறிய போராகத்தான் இருக்கும்’ என்று எண்ணிய பாண்டி நாட்டுப் படைத் தலைவர்கள் ஏமாந்து போனார்கள். பரதவர் படைப் பெருக்கம் பொருளின் ஆற்றலை எடுத்துக்காட்டியது.

நினைத்தபடி அந்தப் போர் விரைவில் முடியவில்லையே யன்றி, முடிந்தபோது வெற்றி, பாண்டிய மன்னனுக்கே உண்டாயிற்று என்று சொல்லவும் வேண்டுமா? தென் பரதவர் மிடலைச் சாய்த்து மீட்டும் பழையபடியே திறை செலுத்தும்படி ஆணையிட்டு விட்டு, மதுரையை அடைந்தான் நெடுஞ்செழியன்.

ஒன்று போக ஒன்றாகப் போர் எழுவதையும், திருமணம் செய்துகொண்ட பிறகும் அரசனுக்குப் போர் புரிவதில் உள்ள வெறி அடங்காமல் இருப்பதையும் கண்ட சான்றோர் கவலை கொண்டனர். தக்க வழியில் இந்தப் போக்கைத் தடை பண்ண வேண்டும் என்ற அவா அவர்கள் உள்ளத்தே முறுகி எழுந்தது. புலவர்கள் இத்துறையில் தம்மால் ஆன முயற்சிகளைச் செய்தால் நலம் பிறக்கும் என்று தேர்ந்தார்கள். நக்கீரரையும் மாங்குடி மருதனாரையும் மற்ற நல்லிசைப் புலவர்களையும் அணுகித் தங்கள் கருத்தைத் தெரிவித்துக் கொண்டனர். ‘என்ன செய்வது? எப்படிச் சொல்வது? யார் சொல்வது?’ என்ற வினாக்கள் முன் நின்றன.

‘கவிதையிலே நம் ஆர்வத்தைத்தெளிவாகத் தெரிவிக்கலாம். அது அத்துணைச்சிறப்பன்று. நேர்முகமாகச் சொல்வதைவிட மறைமுகமாகச் சொல்வதே கலையின் பண்பு. அரசன் உள்ளத்தில் படும்படி கவிதை பாட வேண்டும்’ என்று புலவர்கள் தமக்குள் ஆய்ந்து பேசினார்கள். கடைசியில் நக்கீரர் தாம் ஒருபாட்டுப் பாடுவதாக ஒப்புக்கொண்டார். தலைவனாகிய அரசன் போர் செய்யப் புக்குப் பலகாலம் பாசறையிலே தங்கி விடுகிறான். அப்போது அவனுடைய காதலி அரண்மனையில் இருந்து வருந்துகிறாள். குளிர்காலம் வருகிறது. வாடை வீசுகிறது. ‘இன்னும் அவர் வரவில்லையே!’ என்ற வருத்தத்துடன் அவனுடைய வரவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாள். ‘இவள் வருத்தம் தீர அரசன் வெற்றி பெற்று மீள்வானாக!’ என்று துர்க்கையை வழிபட்டுப் பிரார்த்தனை செய்கிறாள் ஒரு முதியவள். அவள் சொல்வதாக ஒரு பெரிய பாட்டைப் பாடினார் நக்கீரர். அதற்கு நெடுநல்வாடை என்றுபெயர்.