பாப்பா முதல் பாட்டி வரை/019-024
காது, மூக்கு, தொண்டையைப் பொறுத்த அளவில், குழந்தைகளுக்கு இரண்டு அல்லது மூன்று வயது வரை உள்ள பொதுவான பிரச்சனை காது, குழந்தை சரியாகத் தூங்காமல் காதைப் பிடித்து இழுத்தல், காதில் விரலை வைத்து அழுத்துதல், தூங்காமல் அழுது கொண்டே இருத்தல் ஆகியவை காதுக் கோளாறுகளின் அறிகுறிகள். முகத்துக்குப் பூசும் பவுடர், தலைக்குத் தேய்க்கும் எண்ணெய் ஆகியவை காதில் அடைத்து நின்று, அதற்குள் நோய்த் தொற்று (infection) ஏற்படுகிறது.
பட்ஸும் வேண்டாம் : இதைத் தவிர்க்க, காதுப் பகுதிக்கு அதிகமாக பவுடர் உபயோகிக்க கூடாது. பிறந்த குழந்தைகளுக்கும் சரி, பெரியவர்களுக்கும் சரி, ‘பட்ஸ்’ பயன்படுத்தி காதைச் சுத்தப்படுத்துவது, மேலும் கஷ்டத்தையே கொடுக்கிறது. காதுக்கு உள்ளே இருக்கும் அழுக்கைச் சுத்தம் செய்வதாக நினைத்து, இவற்றைக் குழந்தைகளுக்குப் பயன்படுத்தும் போது, மேல்புறத்தில் உள்ள அழுக்கு, உள்ளே தள்ளப்பட்டு, பாதிப்பு ஏற்பட ஏதுவாகிறது.
படுத்துக்கொண்டு தாய்ப்பால் கொடுப்பதால் ஏற்படும் காதுக் கோளாறு : பிறந்த குழந்தைகளுக்குப் பால் கொடுக்கும் போது, சரிவான நிலையில், அதாவது குழந்தையின் தலையை உயர்த்தி, காலைத் தாழ்த்திக் கொடுக்க வேண்டும். சமமாகப் படுத்த நிலையில் குழந்தை பால் குடிக்கும்போது, காது பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இதைவிட முக்கியமான ஒன்று. பிறந்த குழந்தைக்குச் செவித்திறன் சரியாக உள்ளதா எனப் பெற்றோர் அறிந்து கொள்ள வேண்டும். இதைக் கண்டறியும் வசதி மிகக் குறைவான மருத்துவமனைகளில் மட்டுமே உள்ளது. குறைப் பிரசவம் ஆன குழந்தைகள், குழந்தை தாயின் வயிற்றில் இருந்தபோது தாய்க்கு ஏதேனும் வியாதி ஏற்பட்டிருத்தல், போன்ற பிரச்சினைகள் உள்ள குழந்தைகளுக்கு மட்டுமே, டாக்டர்கள் செவித் திறனைப் பரிசோதிக்கின்றனர்.
ஆனால், சுகப் பிரசவம் ஆன குழந்தைக்கு, இதுபோன்ற பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. ஆனாலும், காது கேளாத குறை மட்டும், இறந்துபிறக்கும் குழந்தைகளும் உள்ளன. கை தட்டும் சத்தம் கேட்டு குழந்தை திரும்பிப் பார்ப்பது. டம்ளர் கீழே விழுவது போன்ற, சத்தத்துக்குக் கண்ணை மூடுவது, கை, கால்களை அசைத்து அதிர்ச்சியை வெளிப்படுத்துவது (State response) மூலம், குழந்தைக்குக் காது கேட்கிறதா என எளிதாக அறிந்து கொள்ளலாம்.
சந்தேகம் இருந்தால், ஒரு வயது ஆகும் முன்பு, செவித்திறன் சரியாக உள்ளதா என அறிந்துகொள்ளச் சோதனை செய்யலாம்.
பேச்சுத் திறன் போகும் அபாயம் : காது கேளாத குழந்தைகளைக் கண்டறியத் தவறினால், எதிர்காலத்தில் அந்தக் குழந்தை பேசும் சக்தியையும், முற்றிலும் இழந்துவிடும். காரணம், பிறந்த ஐந்து ஆண்டுக்குள், காதின் மூலம் கேட்கும் மொழி, சத்தங்களை வைத்துப் பேச்சுத் திறனை மூளை பெறுகிறது. ஐந்து வயதுக்கு மேல் காது கேட்பதற்கான சிகிச்சைகள் செய்தாலும், பேசும் திறனைப் பெறும் வாய்ப்பை மூளை இழந்துவிடுகிறது.
தற்போது குழந்தைகளை 3-4 வயதிலிலேயே பள்ளியில் சேர்க்கின்றனர். தனியாகப் பெற்றோருடன் இருந்த குழந்தை, பள்ளியில் பல குழந்தைகளுடன் சேரும்போது, அக் குழந்தைக்கு அதிக சளி, தொண்டை வலி, சாய்ச்சல் ஆகியமூச்சு தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும்.
இதற்குக் காரணம் இதுபோன்ற வியாதிகளை ஏற்படுத்தும் கிருமிகள், பலவித ரூபங்களில் நம்மிடையே உலவுகின்றன. குறிப்பிட்ட ஒரு கிருமி, குழந்தைக்கு நோயை ஏற்படுத்தும் போது, அக் குழந்தைக்கு அதை எதிர்க்கும் Antibodies எதிர்ப்புசக்தி ரத்தத்தில் உண்டாகிறது. பல குழந்தைகள், ஒரே அறையில் இருக்கும் போது ஒரு குழந்தையிடமிருந்து இன்னொரு குழந்தைக்கு வைரஸ் கிருமிகள் பரவுகின்றன.
எனவே, வீட்டில் தனியாக இருந்தபோது, பெற்றோர் மற்றும் சகோதர சகோதரிகளிடம் மட்டும் இருந்த கிருமிகளால் பாதிக்கப்பட்டு, எதிர்ப்பு சக்தி கொண்ட குழந்தை, பள்ளியில் பல்வேறு கிருமிகளையும் எதிர்கொண்டு பாதிக்கப்பட்டு, அதனால் தேவையான எதிர்ப்புச் சக்தியையும் அடைகிறது.
குழந்தைகளுக்கு இதுபோன்ற அதிகமான இடையூறுகள், பள்ளியில் சேர்த்த ஒன்று அல்லது ஒன்றரை ஆண்டுகளுக்கு நீடிக்கும். இந்தக் காலகட்டம் முடியும்போது, பரவலாக, வெளியே உள்ள கிருமிகளுக்குக் குழந்தையின் உடலில் எதிர்ப்பு சக்தி ஏற்படுகிறது. அந்த நேரத்தில் வைட்டமின் பிகாம்ப்ளக்ஸ் டானிக்குகளைத் தினமும் கொடுப்பதால், நோயின் பாதிப்புக் குறைய உதவும். அதே நேரத்தில் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கும்.
சிறுமூக்கு உடைதல் : ஐந்து வயதுக்கு மேல், மூக்கில் சிறுமூக்கு உடைந்து ரத்தம் வருவது, 20-40 சதவீதம் குழந்கைளுக்கு ஏதோ ஒரு காலகட்டத்தில் உண்டாகிறது. மூக்கில் ரத்தம் வரும்போது, படுக்க வைத்து, மூக்கின் மேல் ஐஸ் கட்டி போன்றவற்றை வைப்பது தவறு.
சிறுமூக்கு உடைந்து ரத்தம் வரும்போது, உட்கார வைத்து, இரண்டு விரல்களால் மூக்கை அழுத்தி, வாயால் மூச்சுவிடச் செய்து, இரண்டு நிமிடம் பொறுத்திருக்க வேண்டும். அதே நேரம், குனியச் செய்ய வேண்டாம். இவ்வாறு செய்யும்போது, அடிக்கொரு முறை மூக்கை அழுத்திப் பிடித்துள்ள பிடியை விட்டு ரத்தம் நின்று விட்டதா என்று பார்க்கக் கூடாது. ஐஸ் இருந்தால் மூக்கின் பக்கவாட்டில், ஒரு துணியில் ஐஸ்துண்டை உடைத்து வைக்க வேண்டும்.
கன்னத்தில் அடித்தால் காது ஜவ்வு கிழியும் : குழந்தைகளின் கன்னம், காதுப் பாகங்களில் அறைவது (pal.slap) மிகவும் ஆபத்தானது. இது தவிர, தவறுதலாக விளையாட்டின்போதும், காதுகளின் மீது இது போன்று அடிபடலாம். இதன் காரணமாக, காதின் ஜவ்வு கிழிய வாய்ப்பு உள்ளது. அடி பலமாக இருந்தால், காது நரம்பு முற்றிலும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இது போன்ற சம்பவம் நடந்தால், காதில் எந்த வகையான மருந்தையும் (Ear drops) போடக்கூடாது. கட்டாயமாக காது, மூக்கு, தொண்டை மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும்.
அதனால், அடிபட்ட நரம்பு, பாதிக்கப்பட்ட நிலையில், பொதுவாக, ஒரு காது மட்டும் பாதிக்கப்படுவதால் மற்றவர்கள் பேசுவதைக் கேட்பதில், எந்தப் பாதிப்பும் இல்லாதது போலத் தோன்றும். சில நாள்களுக்குப் பிறகே, ஒரு காது சரியாகக் கேட்பதில்லை என்பது தெரியவரும். எனவே சிகிச்சை அவசியம்.
மூக்கே பிரதானம்: காது, மூக்கு, தொண்டையில் மூக்கே பிரதானமான உறுப்பு. ஏனெனில், மூக்கில் உண்டாகும் நோயின் அடிப்படையிலேயே, காதிலும், தொண்டையிலும், நோய்கள் ஏற்படுகின்றன.
தொந்தரவுகள் எதுவும் இல்லாத போது, மூக்கு என்ற உறுப்பே, நமது கவனத்துக்கு வருவதில்லை. ஆனால், சாதாரண சளி ஏற்பட்டாலே, மூக்கடைப்பு, தலைபாரம் உண்டாவதால் ஒருவருக்குப் பெரிதும் பாதிப்பு ஏற்படுகிறது.
சளி நீடித்தால் : இந்தச் சாதாரணச் சளி, வைரஸ் கிருமிகளால் உண்டாகிறது. சாதாரணமாக, ஒரு வாரம் வரை பாதிக்கப்பட்ட நபர், இந் நோயின் பிடியிலிருந்து, பிறகு மருந்து கொடுப்பதாலோ, அல்லது கொடுக்க விட்டாலோ, தானாக உடலில் எதிர்ப்புச் சக்தி வருவதால், குணமாகிவிடுகிறார். ஆனால், இரண்டு வாரங்களுக்கு மேல் சளி நீடித்தாலோ அல்லது மாதம் ஒன்று அல்லது இரண்டு முறை பாதித்தாலோ, அந்த நபரின் மூக்கு, மற்றும் சைனஸ் பாகங்களில் குறைபாடு இருப்பதாகச் கொள்ளலாம்.
சைனஸ் பிரச்சினைக்குக் காரணம் : இதுபோல, மூக்கில் உண்டாகும் குறைபாடுகளுக்கு, மூக்குத் தண்டு வளைவு (Deviated Nasal Septum) சைனஸ் பாகங்களில் இயற்கையான, மூக்கிற்கும், சைனஸிற்கும் உண்டான துவாரங்களில் அடைப்புப் போன்றவை காரணங்களாகும். இதுபோன்ற குறைபாடுகளை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி, பூரண குணமடையலாம். மூக்கு, சைனஸ் பாகங்களுக்கு இடையிலுள்ள, இயற்கையான துவாரங்கள் அடைப்பட்டுப் போவது, மீண்டும், மீண்டும் சைன ஸைட்டில் (Sinusitis) வருவதற்குக் காரணமாகும்.
இந்தக் குறைபாடுகளைக் கண்டறிய, மற்றும் அறுவை சிகிச்சை மூலம் அகற்ற, என்டோஸ்கோபிக் சைனஸ் சர்ஜரி எனும் நவீன சிகிச்சை முறை உள்ளது. இதன் மூலம் 95 சதத்துக்கு மேல், மீண்டும் சைனஸ் வராமல் தடுக்கும் அளவுக்குச் சிகிச்சை செய்ய வசதி உள்ளது.
ஒவ்வாமை ஒரு தனி நோய் - சைனஸ் அல்ல : மேற்கூறிய வியாதிகள், ஒருவருடைய மூக்குப் பகுதியின் உடல் அமைப்பில் உள்ள சிறிய குறைபாடுகளைச் சரி செய்வதன் மூலம் குணப்படுத்தப்படுகின்றன. ஆனால், ஒவ்வாமை (allergy) உள்ளவர்களுக்கு, இந்தச் சிகிச்சை முறைகள் உபயோகிக்கப்பட்டாலும், ஒவ்வாமைக்குக் கொடுக்கும் மருந்துகள், தொடர்ந்து கொடுக்கப்பட வேண்டும். பார்த்தீனியம், நூல் பஞ்சு, தூசு போன்ற பொருள்களால், கடுமையான அளவு ஒவ்வாமை உள்ளவர்கள், மூக்கு வியாதிகள் தவிர, ஆஸ்துமா எனப்படும் நுரையீரல் பாதிப்புக்கும் உள்ளாகின்றனர்.
இதுபோன்றவர்களுக்கு, அவர்களைப் பாதிக்கும் பொருள் என்ன எனக் கண்டறிந்து அதிலிருந்து விலகியிருப்பதே சிறந்தது. இதுபோல, பாதிக்கும் பொருள்களைக் கண்டுபிடிக்கும் பரிசோதனை அலர்ஜி டெஸ்ட் Allergy test என அழைக்கப்படுகிறது. பெரும்பாலானவர்கள், ஒவ்வாமை வியாதியையே, ‘சைனஸைட்டில்’ எனக் கருதுகின்றனர். சிகிச்சை பெறாமல், நெடுங்காலம் ஒவ்வாமையால் அவதிப்பட்ட ஒருவருக்கு, சைனைஸ்டின் வியாதிகள் வர வாய்ப்புகள் அதிகம். ஆனால், ஒவ்வாமை உள்ள எல்லோருக்கும் சைனஸைட்டிஸ் இருப்பதில்லை.
தொண்டை : பொதுவாக, புகை பிடித்தல், குரலை உயர்த்தி அதிக நேரம் பேசுதல், வயிற்றில் அமிலத் தன்மை, (Acidity) போன்ற காரணங்களால், தொண்டையில் நோய்கள் உண்டாகின்றன. புகை பிடித்தலுக்கும் மேலாகப் பாதிப்பது, வயிற்றில் அமிலத் தன்மை,அதன் காரணமாக உண்டாகும் புளி ஏப்பம், மற்றும் நெஞ்சு எரிச்சல் எனத் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருத்தல், தேவையான ஓய்வு இல்லாதது. மன அழுத்தம். மது வகைகள் அதிகம் உட்கொள்ளுதல் போன்ற காரணங்களால், வயிற்றில் அமிலத்தன்மை ஏற்படுகிறது. மேற்கூறிய அறிகுறிகள் உள்ளவர்கள், உணவு, வாழ்க்கை முறைகளில் தேவையான மாற்றங்களைச் செய்து கொள்வதன் மூலம் உணவுக் குழாய் மற்றும் தொண்டைப் பாகத்தில் பிற்காலத்தில் உண்டாகும் கொடிய வியாதிகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.
தொண்டையில் உண்டாகும் வியாதிகள், கிருமிகளால் உண்டாகும்போது, தொண்டையில் வலி, காய்ச்சல் போன்ற அறிகுறிகளின் ஆரம்ப நிலையிலேயே வந்துவிடுகின்றன. ஆனால், தொண்டையில் உண்டாகும் புற்றுநோய் போன்ற வியாதிகளால், அதிகமான வலி உண்டாவதில்லை. மாறாக, குரலில் மாற்றம், உணவு விழுங்கும் போது, ஏதோ ஒரு காதில் வலி தொடர்ந்து எந்தக் காரணமும் இல்லாமல், வறட்டு இருமல் போன்ற அறிகுறிகள் தொண்டைப் புற்றுநோயாக மாறுவதற்கு வாய்ப்புகள் உண்டு.
ஆரம்ப நிலை தொண்டைப் புற்று நோய்களைக் கண்டறிய ‘Video laryngoscope’ எனும் கருவி மிக உதவியாக உள்ளது. காண்பதற்குச் சிரமமான தொண்டைப் பாகங்களை, இக் கருவியின் மூலம், பல மடங்குகள் பெரிதாக்கி, அந்தப்படங்களை வீடியோவில் பதிவு செய்து, மருத்துவரும், நோயாளியும் காண இயல்கிறது.
தொண்டை அழுத்தம் : தொண்டையின் உள் பாகத்தில், எல்லாச் சமயங்களிலும், ஏதோ ஒரு பொருள் அழுத்துவதுபோல் தோற்றம், பலருக்கும், குறிப்பாகப் பெண்களுக்கு வர வாய்ப்பு உண்டு. இதுபோன்ற அறிகுறி உள்ளவர்கள் உணவு விழுங்குவதற்கு அடைப்பு இல்லாதவரை, பீதியடைய வேண்டியதில்லை. ரத்தத்தில் இரும்புச் சத்து குறைவதாலும், மன அழுத்தம் அதிகம் உள்ளோருக்கும், உணவுக் குழாயின் மேல் பாகம் அடையும் சில மாற்றங்களினால், இந்த அறிகுறி வருகிறது. தகுந்த மருந்துகளின் மூலம், இதிலிருந்து குணமடையலாம்.
மேலும் சிலருக்குத் தொண்டைப் பாகங்களில் உண்டாகும் வியாதிகள், கழுத்துப் பாகத்தில் கட்டிபோல வீக்கமடைந்து, தோற்றம் கொள்கின்றன. அந்த பாகத்தில் 15 நாளுக்கு மேல் தொடர்ந்து வீக்கம் இருந்தால், தொண்டையின் உள் பாகம், மூக்கின் பின் பாகம் போன்றவற்றையும், அவசியம் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். ஏனெனில், அறிகுறிகள் இல்லாத உடலின், உள் வியாதியின் ஒரு பிரதிபலிப்பாக இந்தக் கழுத்து வீக்கம் இருக்கலாம்.
குரல் மாற்றம் : ஆண்களுக்குப் பெண்குரல், பெண்களுக்கு ஆண்குரல், போன்ற தன்மைகள் உள்ளவர்களுக்கு Speech Therapy எனப்படும் பேச்சுப் பயிற்சி மருத்துவம் பரவலாக, பல்லாண்டுக் காலமாகச் செய்யப்பட்டு வந்தது. இந்த முறையில் குணமடையாதவருக்கு தற்போது (Phono surgery) எனும் நவீன சிகிச்சைமுறை, ஜப்பானிய டாக்டர், விஞ்ஞானி இஷிகி என்பவரால் சீரமைக்கப்பட்டு, நடைமுறையில் உள்ளது. ஆச்சரியமான இந்த முறையில், நோயாளியின் கழுத்துப் பாகத்தில் மரத்துப் போகச் செய்யும் (Local anaesthesia) மருந்துகள் செலுத்தப்பட்டு, கழுத்தின் வழியாகக் குரல் நாண்களை இறுக்கவோ, தளர்த்தவோ, அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
அறுவை சிகிச்சை நடக்கும் போதே, நோயாளி குரலை உண்டாக்கச் செய்து தகுந்த குரலமைப்பு வர (Turning) செய்யப்படுகிறது. இதுவே, நவீன சிகிச்சை முறை. தற்போதுள்ள காது சிகிச்சை முறைகளால் நோயாளிகளுக்குச் காதில் சீழ் நிற்பது, காதின் கேட்கும் தன்மை அதிகப்படுத்தப்படுவது, காது வியாதி, மூளைப் பாதிப்பு ஏற்படுத்தாமல் தடுப்பது எனப்படும் மூன்று முக்கிய காரியங்களையும், ஒரே அறுவை சிகிச்சை (Micro surgery) மூலம் செய்ய இயலுகிறது.
காதுச் சீழுக்கு உடனடி சிகிச்சையே நல்லது : நீண்ட நாள்கள் இதுபோன்ற வியாதிகளுக்குச் சிகிச்சையளிக்காமல் இருக்கும்போது, காதுச் சீழில் உண்டாகும் நச்சுப் பொருள்களால், காது நரம்புகள் பாதிக்கப்பட்டு, நரம்புத் தளர்ச்சி உண்டாகிறது. இதுபோல நரம்புத் தளர்ச்சி உண்டான நபர்களுக்கு, அறுவை சிகிச்சை மூலம் காதுகளில் சீழ் வராமல் இருக்கத்தான் செய்ய முடியும். மீண்டும் காது கேட்க வைக்க முடியாது.
காதில் இதுபோன்ற வியாதிகளில்,காதின் ஜவ்வு (செவிப்பறை), அதன் பிறகு உள்ள மூன்று சிறிய காது எலும்புகள், பாதிக்கப்பட்டு உருக்குலைந்து போக வாய்ப்புள்ளது. இவற்றை ஈடு செய்ய, அதே நோயாளியின் காதில், மேல்புறம் உள்ள சதை, காது மடலில் உள்ள நொறுக்கெலும்பு (Carblage) பயன்படுத்தப்படுகிறது. வேறு சிலருக்கு, மற்ற நோயாளிகளின் காதிலிருந்து எடுக்கப்பட்ட மூக்குத் தண்டின் எலும்புகள், மைக்ரோஸ்கோப் கருவி மூலம் உருமாற்றி, பொருத்தப்பட்டு, மீண்டும் காதுகள் கேட்க வகை செய்யப்படுகிறது.
தொழில் காரணமாகத் காது பாதிப்பு: அதிகமான சத்தத்தில், அதாவது ஜெனரேட்டர், துளையிடும் இயந்திரம் போன்ற தொழில்களில் உள்ளவர்களுக்குக் காது நரம்புகள் ஒரு குறிப்பிட்ட வகையில் பாதிக்கப்படுகின்றன. காதுகள் கேட்டாலும், மற்றவர் பேசுவது என்ன எனத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியாது; இந்த ஆரம்ப அறிகுறி வரும் முன்பு, காதுகளில் அதிக சத்தம் பாதிக்காமல் இருக்கத் தேவையான தடுப்பு (Earut) உபயோகித்துப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.