உள்ளடக்கத்துக்குச் செல்

பாலைப்புறா/ஞாநியின் பார்வையில் சு.சமுத்திரம்

விக்கிமூலம் இலிருந்து


தமிழில் பல வகைப்பட்ட எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். பொதுவாக ஒவ்வொரு வகை, எழுத்தாளரும், தமக்கென்று வகுத்துக் கொண்ட பாணியிலிருந்து மாறி எழுதுவது, அபூர்வமானது. அப்படியே தங்கள் எழுத்து பாணியை மாற்றிக் கொண்டாலும், பழைய வகைக்குத் திரும்பிச் செல்வது இல்லை. நானும் எழுதுகிறவன்; என்றாலும், அடிப்படையில், நான் ஒரு வாசகனென்கிற விதத்தில், எனக்குப் பல வகைப்பட்ட எழுத்தாளர்களின் எழுத்துக்களைப் பிடிக்கும். எனக்குப் பிடித்த பல எழுத்துக்களின் சொந்தக்காரர்களான அந்த எழுத்தாளர்களில் பலருக்கும், ஒருவருக்கு மற்றவரின் பாணி எழுத்துக்களைப் பிடிக்காது என்பதையும் நான் அறிவேன்.

ஆனால், வாசகன் என்ற விதத்தில் எனக்கு, பல தரப்பட்ட கதைகளையும் படிக்கப் பிடிக்கும். புதுமைப் பித்தன், ஜெயகாந்தன், அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, தி.ஜானகிராமன், ஆதவன், சம்பத், இந்திரா பார்த்தசாரதி, அம்பை, சூடாமணி, காவேரி, இந்துமதி, வாசந்தி, வண்ணநிலவன், வண்ணதாசன், பிரபஞ்சன், ஜெயந்தன், சா.கந்தசாமி, விட்டல்ராவ், கி.ராஜநாராயணன், விமலாதித்த மாமல்லன், மேலாண்மை பொன்னுச்சாமி, தமிழ்ச் செல்வன், ராஜேந்திர சோழன், ஜெயமோகன், பாஸ்கர் சக்தி, கல்கி, தேவன், சுஜாதா, தாமரை மணாளன், கிருஷ்ணா, பி.வி.ஆர்., ரா.கி.ரங்கராஜன், பாக்கியம் ராமசாமி, புனிதன், சாவி, என்று பல எழுத்தாளர்களின் பல கதைகள் எனக்குப் பிடித்தமானவையாக இருந்து வந்திருக்கின்றன. சமுத்திரமும் அவர்களில் ஒருவர். இவர்கள் அத்தனை பேரும் பல விதங்களில் தமக்குள் மாறுபட்டவர்களான போதும், இவர்களிடம் எனக்குக் கிடைத்த, ஒவ்வொரு பிடித்தமான கதையும், ஏதோ ஒரு விதத்தில் வாழ்க்கை பற்றிய என் புரிதலை இன்னும் சற்று செழுமைப்படுத்திக் கொள்ள எனக்கு உதவியிருக்கினறன என்பது மட்டுமே, எனக்கு, இங்கு குறிப்பிட முக்கியமான விஷயம். மற்றவர்களைப் போலவே, சமுத்திரத்திடமும், எனக்குப் பிடித்த கதைகள் கிடைத்தது போல, எனக்கு ரசிக்க முடியாத கதைகளும் கிடைத்தது உண்டு. என் ரசனையும் தேர்வும், எனக்கே பிரத்யேகமானவை. சமயங்களில், சிலர் வைரங்கள் என்று கட்டிக் காட்டியவற்றை விட, என் மன நிலைக்கியைந்த கூழாங்கற்கைளயே நான் விரும்பி சேகரித்து வந்திருக்கிறேன். அவரவர் கூழாங்கற்கள் அவரவர் வைரங்கள்; இதற்காக என் கூழாங்கற்களை, அசுத்தம் தோய்ந்தவை என்று தப்புக் கணக்கு போட்டு விடக் கூடாது. அவை, தொடர்ந்து ஓடும் வாழ்க்கை ஆற்றின் இடையறாத சலனத்தால், மென்மையும், தூய்மையும் அடைந்தவை.

நாம் படிக்கக் கிடைக்கிற எல்லா எழுத்தாளரையும், நேரிலும் அறிந்திருக்கும் வாய்ப்பு கிட்ட முடியாது. அப்படி அறிய நேர்ந்த சிலரில், சமுத்திரமும் ஒருவர். நேரில் அவர் எப்படிப்பட்ட மனிதரோ, அதே இயல்புகள், அவரது எழுத்திலும் அப்படியே காணக் கிடைக்கின்றன. உரத்துப் பேசுவது போலவே, எதையும் உரத்துச் சொல்வது அவரது இயல்பு. சபை நாகரீகம் கருதி, பலரும் பேச்சில் தவிர்ப்பதை, குறிப்பாக மட்டுமே சொல்ல முற்படுவதை எல்லாம், அப்பட்டமாகப் போட்டு உடைப்பது சமுத்திரத்தின் பேச்சு பாணி மட்டுமல்ல; எழுத்து பாணியும் கூட. சமூக அவலங்கள் பற்றிய எரிச்சலையும், கோபத்தையும், சமயத்தில் ஆற்றாமையையும் வெளிப்படுத்த இந்த சிதறு தேங்காய் பாணி சமுத்திரத்துக்கு எப்போதும் கை கொடுத்து வந்திருக்கிறது. எனினும், மென்மையான உணர்வுகளில் சஞ்சரிக்க வேண்டிய தருணங்களிலும், சமுத்திரத்தின் எழுத்து இளநீரை நினைவு படுத்துவதை விட, காயின் மேல் விழுகிற வீச்சரிவாள் வெட்டையே நினைவு படுத்த முற்படுவதைப் பார்க்கலாம்.

பாலைப்புறா நாவல், சமுத்திரத்தின் அணுகு முறையில் வெளி வரும் மற்றொரு படைப்பு. நானறிந்த அளவில், எய்ட்ஸ் தொடர்பான முதல் தொடர்கதை இதுதான். எய்ட்ஸ், இன்று நமது சமூகத்தில், அரசாங்கத்தாலும், தனியார் அமைப்புகளாலும் பெரும் பணச் செலவில் மக்களிடையே பரப்பப்படுகிற ஒரு செய்தியாக விளங்குகிறது. நோய் பற்றிய ஆய்வுக்காகவும், சிகிச்சைக்காகவும் செலவிடப் படுவதை விட, அதிகத் தொகை, விளம்பரத்துக்குப் பயன்படுத்தப்படுகிறதோ என்ற சந்தேககம் எழும் அளவுக்கு இந்தப் பிரச்சாரம் நடக்கிறது.

கள விளம்பரத் துறை அதிகாரி என்ற முறையில், நண்பர் சமுத்திரம், எய்ட்ஸ் பற்றிய பல விழிப்புணர்வு கூட்டங்களை, முகாம்களை, பட்டறைகளை நடத்தும் பொறுப்பில் ஈடுபடவேண்டியிருந்தது. தனியாரும், அரசும் கூட்டாக செய்து வரும் விளம்பரங்களைப் பற்றி விமர்சிக்கும் வாய்ப்பை அப்போது அவர் எனக்குக் கொடுத்தார். அரசாங்கம் உபதேசிக்கும் ஒழுக்கம், எய்ட்ஸ் பற்றிய விளம்பரங்கள், விழிப்புணர்வு இயக்கங்கள்- ஆகியவை குறித்த எனது கருத்துக்களை, எல்லா அரசு மேடைகளிலும் பேசவும், விவாதிக்கவும், முழு சுதந்திரத்தோடு சொல்வதற்கும், காரணமாக இருந்தவர் சு.சமுத்திரம். இறுதி நோக்கம், சாதாரண மக்களின் வாழ்க்கையை ஒரு துளியாவது மேம்படுத்துவதற்கு உதவுவதாக இருக்குமானால், யாரும் மனதுக்குப்பட்டதை சொல்லலாம் என்பது சமுத்திரத்தின் ஆழமான நம்பிக்கை என்று எனக்குப் படுகிறது. இந்த அணுகு முறைதான் அவரது எழுத்திலும் வெளிப்படுகிறது.

எய்ட்ஸ் நோயாளிகளின் வலிகளை, வேதனைகளை வெளிப்படுத்துவதை விடவும், இந்த தொடர்கதையில், சமுத்திரம் அதிக வெற்றி பெறுவது எய்ட்ஸின் பெயரால் மோசடிகளில் ஈடுபடுகிற சில மருத்துவர்களையும், ‘தொண்டு’ நிறுவனங்களையும் அம்பலப்படுத்துவதிலேயேயாகும். கலைவாணி பாத்திரம், சமுத்திரத்தின் வேதனைகளுக்கும், தார்மீகக் கோபத்துக்கும் வடிகாலாய் விளங்குகிறது; குடும்பக் கட்டுப்பாடு திட்டம் எப்படி முறைகேடாகவும், அராஜகமாகவும் நடைமுறையில் ஒரு கால கட்டத்தில் இருந்ததோ, அதே திசையில் எய்ட்ஸ் திட்டம் போய்க் கொண்டிருப்பது பற்றி மருத்துவத் துறையிலும், சமூக நலப் பணித் துறையிலும், பலர் கவலையோடு இருக்கிறார்கள். அவர்களின் பிரதிநிதியாக சமுத்திரம், இந்த நாவலில் செயல்பட்டிருக்கிறார். அதே சமயம், வெவ்வேறு தளங்களில், மனித இயல்புகள், எப்படி செயல்படுகின்றன என்பதில் ஆர்வம் காட்டும் எழுத்தாளனாக, எய்ட்ஸ் நோயாளி மனோகருடன், விதவிதமான முறைகளில் உறவாடும் பல்வேறு மனிதர்களை நமக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

இந்த நாவலின் இலக்கியத் தரம், நயம் பற்றியெல்லாம் மாறுபட்ட கருத்துக்கள் இருக்கத்தான் செய்யும். எது இலக்கியம், எது அழகியல் என்பது பற்றிய விவாதங்கள் தொடர்ந்து நடப்பதால்தான், இலக்கியம் வளர்ச்சிப் போக்கில் இருப்பதே சாத்தியப்பட்டிருக்கிறது. சமுத்திரத்தின் மற்ற படைப்புகளைப் போல, இதுவும் அத்தகைய விமர்சனங்களுக்கு உட்படுத்தப்படத்தான் வேண்டும். என்னளவில், சமுத்திரத்தின் நாவல் தருகிற சுவை, பச்சை மிளகாயை திடீரென்று கடிக்க நேருவது போன்றது. தயிர் சோற்றின் சுவையை மேலும் அனுபவிக்க, அவ்வப்போது பச்சை மிளகாய் தேவைப்படுகிறது.

தினமணியில் இதழாசிரியராக 1996ல் நான் இருந்த போது, சமுத்திரத்தின் இந்த விவாதங்கள் தொடர்ந்து நடப்பதால்தான், இலக்கியம் வளர்ச்சிப் போக்கில் இருப்பதே சாத்தியப்பட்டிருக்கிறது. சமுத்திரத்தின் மற்ற படைப்புகளைப் போல, இதுவும் அத்தகைய விமர்சனங்களுக்கு உட்படுத்தப்படத்தான் வேண்டும். என்னளவில், சமுத்திரத்தின் நாவல் தருகிற சுவை, பச்சை மிளகாயை திடீரென்று கடிக்க நேருவது போன்றது. தயிர் சோற்றின் சுவையை மேலும் அனுபவிக்க, அவ்வப்போது பச்சை மிளகாய் தேவைப்படுகிறது.

தினமணியில் இதழாசிரியராக 1996ல் நான் இருந்த போது, சமுத்திரத்தின் இந்த தொடர்கதை ஆசிரியர் குழுவால் பிரசுரத்துக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கும் நிமித்தம், அவர் எனக்கு இந்த முன்னுரை எழுதும் வாய்ப்பை அளித்திருக்கிறார். மேடையானாலும், புத்தகமானாலும், அவர் தரும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு. எனக்கு மனதில் பட்டதை சொல்லிக் கொள்ள முடிவதற்காக, அவருக்கு எனது நன்றி.

எய்ட்ஸ் பற்றியும், அது தொடர்பாக நமது சமூகப் பார்வை பற்றியும், இன்னும் கொஞ்சம் அதிகமானப் புரிதலுக்கு ஒரு துளி உதவினாலும், இந்த நாவலின் நோக்கம் நிறைவேறி விட்டதாக சமுத்திரம் மகிழ்ச்சி அடைவார் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.

சென்னை - 41,

-ஞாநி

ஏப்ரல் 1998.