பிரதாப முதலியார் சரித்திரம்/அணிந்துரை

விக்கிமூலம் இலிருந்து


செ. அரங்கநாயகம், எம்.ஏ., பி.எல்.பிடி.
கல்வி அமைச்சர், தமிழ்நாடு அரசு.

புனித ஜார்ஜ் கோட்டை

சென்னை-600009,

27-9-1979.

அணிந்துரை

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தலை சிறந்த தமிழ் இலக்கியப் பேரறிஞர் மாயூரம் திரு. வேதநாயகம் பிள்ளை ஆவார்கள். அன்னார் இயற்றிய கவிதைகள், இசைப் பாடல்கள், புதினங்கள் இவையெல்லாம், அவரது சிறந்த தமிழ்ப் பற்றுக்கும், புலமைக்கும் எடுத்துக் காட்டாக இன்றும் திகழ்கின்றன. தமிழ் மொழியைப் படித்தாலே “பாவம்” என்று பலர் கருதிய அந்த நாளில் திரு. வேதநாயகம் அவர்கள் தமிழ் மொழியின் நந்தாவிளக்காகத் திகழ்ந்தார்கள். . இன்றைக்குச் சற்றேறக் குறைய 100 ஆண்டுகட்கு முன்னர் 1879ம் ஆண்டில் அவர் எழுதிய “பிரதாப முதலி யார் சரித்திரம்“ எனும் புதினம் தமிழ் இலக்கிய உலகில் ஒரு புரட்சியையே தோற்றுவித்து, அறிஞர் வேதநாயகம் அவர்களைத் தமிழ்ப் புதினங்களின் தந்தை என்று உஙகுக்கு அறிவித்தது.

அவரது அரிய நூல்களான பிரதாப முதலியார் சரித்திரம், சுகுண சுந்தரி எனும் புதினங்கள் இன்று நாம் காணும் தமிழ் நாவல்களுக்கு (புதினங்களுக்கு) வழி காட்டிய முன்னோடிகளாகும்.

ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் எழுதப்பட்ட போதிலும் இன்னும்கூட பிரதாப முதலியார் சரித்திரத்தின் சுவை குன்றவே இல்லை. படிக்கப் படிக்கத் தெவிட்டாத சீரிய நெடுங்கதையாக அது மிளிர்கிறது. நூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகத்தின் பழக்க வழக்கங்களை எடுத்துக் காட்டும் கண்ணாடியாகவும் அது திகழ்கிறது பக்கந்தோறும் திரு. வேதநாயகம்பிள்ளை அவர்களின் சொல்லாற்றலும், நகைச்சுவை ஆற்றலும் நம்மைப் பரவசரப்படுத்துகின்றன. அவரது எளிய தமிழ் நடை, சம்பவங்களைச் சுவைபடக் கூறும் பேராற்றல் இவையெல்லாம் ஒன்று சேர்ந்து “பிரதாப முதவியார் சரித்திரத்துக்குத்” தமிழுலகத்தின் முதல்நாவல் (புதினம்) என்ற உயர்வை அளிக்கின்றன.

தமிழுக்கும், தமிழ் நூல்களுக்கும் இன்றைய அரசு ஏற்றம் கொடுத்து வரும் இவ்வேளையில் இம்மாதிரியான முதல் நூல்களை மறுபதிப்பிட்டு வழங்குவது மாபெரும் சேவையாகும். அரசு உதவியுடன் இந்நூல் வெளிவருவது குறித்து மகிழ்கிறேன்.

மாயூரம் திரு. வேதநாயகம் பிள்ளையவர்களின் தமிழ்ப் பற்று அளவிட முடியாதது. 1862 ஆம் ஆண்டிலேயே அன்னார் வெளியிட்ட ”சித்தாந்த சங்கிரகம்” எனும் நூல் நீதி மன்றங்களில் நடைபெற்ற வழக்குகளின் சாரத்தைத் தமிழிலே தந்தது. தமிழில் எதையும் சிறப்பாகச் செய்ய முடியும் என்ற திரு. வேதநாயகத்தின் அசைக்க முடியாத. தம்பிக்கைக்கு இந்நூல் ஒரு எடுத்துக் காட்டு. நீதி மன்றங்களில் தமிழ் ஆட்சிமொழியாக வரவேண்டும் என்று சிறந்த நீதிமானாகிய திரு. வேதநாயகம் அன்று கனவு கண்டார். அது இன்று நனவாகிக் கொண்டிருக்கிறது.

இப்படித் தமிழ் இலக்கிய உலகின் விடிவெள்ளியாக விளங்கிய இத்தமிழ்ப் பெரியாரைப் பற்றி இன்றையத் தமிழ் கூறும் நல்லுலகம், அதிலும் குறிப்பாக நம் இளைஞர் உலகம் அறிந்து போற்றும் வகையிலும், அன்னாரது தமிழ்த் தேவை யாவரும் பருகி உவக்கும் வகையிலும் அவரது வழித் தோன்றல் அருமை நண்பர் திரு. வே. ஞா. ச.இருதயநாதன் அவர்கள் பிரதாப முதலியார் சரித்திரத்தை இன்று மறுபடியும் தமிழுலகத்துக்கு அளிக்க இருப்பது கண்டு மட்டற்ற மகிழ்ச்சி கொண்டேன். இவரது இந்தத் தமிழ்ப் பணிக்காகத் தமிழுலகம் இவருக்கு நன்றிக் கடன் பட்டதாகிறது. இவர்தம் தொண்டு சிறக்க எனது வாழ்த்துக்கள். இந்நூல் ஒவ்வொரு தமிழ்மகன் கையிலும் இருக்கவேண்டிய நூல் என்பது என் துணிபு.

செ. அரங்கநாயகம்