பிரதாப முதலியார் சரித்திரம்/அத்தியாயம் 10

விக்கிமூலம் இலிருந்து


10-ஆம் அதிகாரம்
கடவுளின் நித்தியத்துவம், கல்வியின் பிரயோ
ஜனம், கடவுளை அறிதல்

அரசனுக்கும் கடவுளுக்கும் உள்ள பேதம்

உபாத்தியாயர் ஒரு நாள் எங்களுக்குப் பாடம் கொடுத்தபிறகு என்னைப் பார்த்து ““கடவுளுக்கு ஒரு நிமிஷம் எப்படி?” என்றார். உடனே நான் சொன்னதாவது: ““ஒரு பெரிய மணல் மலை இருக்கிறது; அந்த மலையிலிருந்து பதினாயிரம் வருஷத்திற்கு ஒரு மணல் வீதமாகக் கெட்டு, அந்த மலை முழுதும் நாசமாவதற்கு எத்தனை காலம் செல்லுமோ, அத்தனை காலங்கூட சுவாமிக்கு ஒரு நிமிஷம் ஆகமாட்டாது.” என்றேன். நான் சொன்னதை குரு அங்கீகரித்துக் கொண்டு, ஞானாம்பாளைப் பார்த்து, “நீயும் ஒரு திருஷ்டாந்தம் சொல்லு” என்றார். உடனே ஞானாம்பாள் ““லட்சம் வருஷத்துக்கு ஒவ்வொரு துளியாக வற்றி சமுத்திர ஜலம் முழுவதும் வற்றுவதற்கு எவ்வளவு காலம் செல்லுமோ, அவ்வளவு காலங்கூட சுவாமிக்கு ஒரு நிமிஷம் ஆகாது,” என்றாள். உடனே உபாத்தியாயர் எங்களைப் பார்த்து சுவாமிக்கு ஒரு நிமிஷம் அப்படி இருக்குமானால், அவருடைய நித்திய காலத்தை யார் அளவிடக்கூடும்? நாம் புண்ணியம் செய்வோமேயானால் முடிவில்லாத நித்திய சுகத்தை அனுபவிக்கலாம். பாவம் செய்வோமானால் முடிவில்லாத துன்பத்தை அநுபவிக்க வேண்டும்” என்றார்.

இவ்வகையாக நானும் ஞானாம்பாளும் அவளுடைய வீட்டிலே படித்துக் கொண்டுவரும்போது, எங்களுக்கு வயது அதிகரித்ததால் இனிமேல் நாங்கள் இருவரும் ஓரிடத்திலே படிக்கக் கூடாதென்று என் தாயார் அபிப்பிராயப்பட்டு, என்னை வீட்டுக்கு வரவழைத்துக் கொண்டார்கள். அதுமுதல் ஞானாம்பாளைப் பார்க்கும்படியான சந்தர்ப்பம் நேரிடாதபடியால், எனக்கு மகத்தான விசனகரமாயிருந்தது. எங்கள் உபாத்தியாயர் முந்தி ஞானாம்பால் வீட்டுக்குப் போய் அவளுக்குப் பாடம் கொடுத்தபிறகு, என் வீட்டுக்கு வந்து எனக்குப் பாடம் சொல்லிக்கொண்டு வந்தார். அவர் ஞானாம்பாளைப் பார்த்து வருகிறவரானபடியால் அவருடைய முகத்தைப் பார்க்கும்போதெல்லாம், ஒருவாறு எனக்குத் திருப்தியாயிருந்தது. அவர் ஒருநாள் என்னைப் பார்த்து ஞானாம்பாள் நல்லவள் என்று நினைத்தேன். அவள் உன் தாயாருக்கு ஒரு துரோகம் செய்துவிட்டாள் என்றார். இதைக் கேட்டவுடனே நான் மலைத்துப் போய்ப் பேசாமல் இருந்தேன். அவர் உடனே சிரித்துக் கொண்டு சொல்லுகிறார். “ஞானாம்பாள் பிறக்கிறதற்குமுன், குணத்தில் உன் தாயாருக்குச் சமமான ஸ்திரீகள் ஒருவரும் இல்லை. ஞானாம்பாள் பிறந்த பிற்பாடு அவள் உன் தாயாருக்குச் சமானம் என்று சொல்லும்படியாகப் பிரகாசிக்கிறாள். இது தான் ஞானாம்பாள் செய்த துரோகம் என்றார். இதைக் கேட்டவுடனே என் கவலை தீர்ந்து அகமகிழ்ச்சி அடைந்தேன்.

இவ்வண்ணமாகச் சில நாள் என் வீட்டில் தனிமையாய்ப் படித்த பிற்பாடு, ஒருநாள் உபாத்தியாயர் என்னை நோக்கி வசனிக்கிறார்: “”ஆசான் மாணாக்கனுக்கு எவ்வளவு கற்பிக்கலாமோ அவ்வளவு நான் உனக்குக் கற்பித்துவிட்டேன். இனி நீயே படித்துக் கல்வியைப் பூரணம் செய்யவேண்டும். ஆசானுடைய போதகம் முடிந்தவுடனே கல்வியும் முடிந்து போனதாகச் சிலர் நினைக்கிறார்கள். அப்படி எண்ணுவது தப்பு. உண்மையைச் சொல்ல வேண்டுமானால், பாடசாலையை விட்ட பிற்பாடு தான் படிப்பு ஆரம்பிக்கிறது. யுபள்ளிக் கணக்குப் புள்ளிக்கு உதவாதுரு என்பதுபோல் பள்ளிக்கூடத்தில் படிக்கிற படிப்பை அபிவிருத்தி செய்யாவிட்டால், அந்தப் படிப்பு ஒன்றுக்கும் உதவாது.

பாடசாலையிலே படிக்கிற படிப்பு அஸ்திவாரமாகவும், பாடசாலையை விட்ட பிற்பாடு, தானே படிக்கிற படிப்பு மேற்கட்டத்துக்குச் சமானமாயு மிருக்கின்றது. ஒரு ஊருக்குப் போகிற மார்க்கத்தை மட்டும் உபாத்தியாயர் போதிப்பதே அல்லாது கல்வியையே பூரணமாய்க் கற்பிப்பது சாத்தியமல்ல. உபாத்தியாயர் காட்டிய வழியைப் பிடித்துக் கொண்டு, அகோராத்திரம் படித்துக் கல்வியைப் பூர்த்தி செய்வது மாணாக்கனுக்குக் கடன். வித்தையை அபிவிர்த்தி செய்யாமல் பாடசாலைப் படிப்பே போதுமென்று இருக்கிறவன், மாளிகை கட்டாமல் அஸ்திவாரமே போதுமென்று இருக்கிறவனுக்குச் சமானமாகிறான். பூட்டிவைத்திருக்கிற பொக்கிஷத்திற்குத் திறவுகோல் கொடுப்பது போல, எந்தப் புஸ்தகத்தை வாசித்தாலும், அர்த்தம் தெரிந்துகொள்ளும்படியான ஞானத்தை உனக்குப் போதித்து, வித்தியா பொக்கிஷத்தின் திறவுகோலை உன் கையிலே கொடுத்துவிட்டேன். இனி மேல் நீ உன்னுடைய முயற்சியால் அந்தப் பொக்கிஷத்தைத் திறந்து அனுபவிக்கவேண்டுமே அல்லாது, நான் செய்யத்தக்கது ஒன்றுமில்லை. அரும்பதங்களுக்கு அர்த்தம் தெரியவேண்டுமானால், அகராதி, நிகண்டு முத்டலிய வியாக்கியான நூல்களும் இருக்கின்றன. திருவள்ளுவர், கம்பர் முதலிய மகாவித்துவான்கள், தங்களுடைய முயற்சியால் கவி சிரேஷ்டர்கள் ஆனார்களே தவிர, அவர்களுடைய உபாத்தியாயரிடத்தில் அவர்கள் கற்றுக்கொண்டது அற்பமாகவேயிருக்கும். அந்த வித்வான்களெல்லாம் மனுஷப் பிறப்பே அல்லாமல் தெய்வீகம் அல்லவே. அவர்களைப் போல நீயும் பிரயாசப்பட்டுக் கல்வி பயின்றால், அவர்களுக்குச் சமானம் ஆவதற்கு ஆடங்கம் என்ன?

““கல்வியின் பிரயோஜனம் எல்லாங்கூடிக் கடவுளை அறிவதுதான். சகல சாஸ்திரங்களும், வேதங்களும், வேதாகமங்களும், சமயகோடிகளும் சொல்லுவதெல்லாம், கடவுளே அல்லாமல் வேறல்ல. கல்விமானுக்குத் தெய்வ பக்தியே சிறந்த பூஷணமாயிருக்கின்றது. ஒருவன் கல்விமானாயிருந்தாலும், தனவானாயிருந்தாலும், அவனிடத்தில் தெய்வநேசம் இல்லாவிட்டால் அவனைப் போல் நிர்ப்பாக்கியர்கள் ஒருவருமில்லை. ஒவ்வொரு நிமிஷமும் கடவுளிடத்தில் நாம் உண்பது அவருடைய அன்னம்; உடுப்பது அவருடைய வஸ்திரம்; குடிப்பது அவருடைய ஜலம்; நாம் வசிப்பது அவருடைய வீடு; சஞ்சரிப்பது அவருடைய பூமி; நாம் சுவாசிப்பது அவருடைய சுவாசம்; நாம் காண்பது அவருடைய பிரகாசம்; நாம் அனுபவிக்கிற நமது தேகமும் பஞ்சேந்திரியங்களும் ஆத்துமாவும் அவருடைய கொடை. அவருடைய கிருபை இல்லாவிட்டால், ஒரு நிமிஷம் நாம் சீவிக்கக் கூடுமா? அவர் நம்மை அசைக்காமல் நாம் அசையக்கூடுமா? அவர் நம்மை நடப்பிக்காவிட்டால் நாம் நடக்கக் கூடுமா? பூமியைப் பார்த்தாலும் ஆகாயத்தைப் பார்த்தாலும் எங்கே பார்த்தாலும் அவருடைய உபகாரமயமே அன்றி வேறுண்டா? ஆகாயம் நம்மைச் சூழ்ந்திருப்பது போல் அவருடைய உபகரணங்கள் நம்மைச் சூழ்ந்திருக்கின்றன. சமுத்திரத்திலே பிறந்து, சமுத்திரத்திலே வளர்ந்து, சமுத்திரத்திலே சீவிக்கிற மீன்களைப் போல, கடவுளது கிருபாசமுத்திரத்துக்குள்ளாகவே நாம் ஜனித்து, வளர்ந்து, சீவிக்கிறோம்.

““அரசனுடைய ஊழியத்திற்கும் தெய்வ ஊழியத்திற்கும் இருக்கிற பேதத்தைப் பார். அரசனுக்கு நாம் நின்று சேவிக்கவேண்டும். கடவுளைத் தியானிக்க நிற்கவேண்டுவதில்லை. நாம் பசியாயிருக்க, அரசன் உண்ணுகிறான். கடவுள் தாம் உண்ணாமல் நம்மை உண்பிக்கிறார். அரசன் தூங்கும்போது நாம் தூங்காமல் அவனைக் காக்கவேண்டும். கடவுள் தாம் தூங்காமல் நம்மைத் தூங்கவைத்துக் காவலாயிருக்கிறார். அரசன் ஓயாமல் நம்மிடத்தில் வேலை கொள்ளுகிறான். கடவுள் நம்மிடத்தில் ஒருவேலையும் வாங்காமல், அவரே சகல வேலைகளையுஞ் செய்கிறார். அரசன் நம்மிடத்தில் வரி யாசகம் செய்கிறான். கடவுள் நம்முடைய அன்பைத் தவிர வேறொன்றும் அபேக்ஷிக்கவில்லை. அரசன் அற்பக் குற்றத்தையும் க்ஷமியான். கடவுள் நாம் தினந்தோறுஞ் செய்கிற எண்ணிறந்த குற்றங்களையும் பொறுத்துக் கொண்டு சாகிற வரையில் நம்மைத் தண்டியாமல் சகல உபகாரங்களுஞ் செய்து வருகிறார்.

அரசன் சுயபுத்தி இல்லாதவன் என்பதற்கு அவனுடைய மந்திரிகளே சாக்ஷி. அவன் சுயசூரன் அல்ல என்பதற்கு, அவனுடைய படைகளே சாக்ஷி. அவன் யாசகஸ்தன் என்பதற்கு, அவன் வாங்கும் குடி இறையே சாக்ஷி. அவன் நியாய பரிபாலனம் செய்யத் தெரியாதவன் என்பதற்கு அவனால் நியமிக்கப் பட்ட நியாயாதிபதிகளே சாக்ஷி. இப்படிப்பட்ட குறைவுகளில்லாமல், சர்வக்ஞத்துவமும் சர்வ சக்தியும் சர்வ சாம்பிராச்சியமும் உடைய கடவுளை, எப்போதும் தியானிக்க வேண்டும். அவரைத் தியானிப்பது நமக்கே ஆத்மானந்தமாகவும், அவரைப் புகழ்வது வாய்க்கு மாதுரியமாகவும் அவருடைய நாமத்தைக் கேட்பது காதுக்கு இனிமையாயுமிருக்கின்றது” என்று அமிர்த வருஷம் போற் பிரசங்கித்தார். அது முதல் உபாத்தியாயர் தினந்தோறும் வராமல் வாரத்துக்கு ஒரு முறைவந்து, எனக்குள்ள சந்தேகங்களைத் தெளிவித்துவிட்டுப் போவார். அவர் ஆஞ்ஞாபித்தபடி நான் ஒரு நிமிஷங் கூடச் சும்மா இராமல், எப்போதும் சிறந்த காலக்ஷேபம் செய்துவந்தேன்.