பிரதாப முதலியார் சரித்திரம்/அத்தியாயம் 12
12-ஆம் அதிகாரம்
விவாகம் பேசல்-சம்பந்திகளின் சம்மதம்
குலத்தினும் தனத்தினும் குணமே விசேடம்
காந்தர்வ விவாக கண்டனம்
என்னுடைய சம்மதத்தை என் தாயார் என் தகப்பனாருக்குத் தெரிவித்த வுடனே, என் தகப்பனார் சம்பந்தி முதலியார் வீட்டுக்குப் போய் ஞானாம்பாளை எனக்குக் கன்னிகா தானம் செய்ய வேண்டுமென்று கிரமப்படி கேட்டார். அதற்குச் சம்பந்தி முதலியார், யாதொரு ஆக்ஷேபமுஞ் சொல்லாமல் உடனே சம்மதித்தார். பிற்பாடு நிச்சயதாம்பூலம் மாற்றுவதற்காக, பந்துக்கள் இஷ்டமித்திரர்களுக்கெல்லாம் தாம்பூலம் அனுப்பி, அவர்கள் எல்லாரும் சம்பந்தி முதலியார் வீட்டில் வந்து கூடினார்கள். நிச்சய தாம்பூலம் மாற்றுவதற்குமுன் சம்பந்தி முதலியார் என் பிதாவை நோக்கி "கலியாணத்துக்குப் பின்பு மாப்பிள்ளையும் பெண்ணும் ஆர் வீட்டில் இருக்கிறது?" என்று கேட்டார். உடனே என் தகப்பனார் "இந்த விஷயத்தில் உமக்கென்ன சந்தேகம் வந்தது? மாடு மேய்க்கிறவன் கூட மாமனார் வீட்டில் இருக்க மாட்டானே! என் பிள்ளை உம்முடைய வீட்டில் இருப்பானா?" என்றார். "அப்படியானால் பெண் கொடுக்கச் சம்மதமில்லை" என்று சம்பந்தி முதலியார் சொன்னார். "என் பிள்ளைக்குப் பெண் பஞ்சமா? உன் பெண் வேண்டியதில்லை" என்று என் பிதா மொழிந்தார். சம்பந்தி முதலியார் அவர் பாட்டன் காலமுதற் பிரபுவாகவும், என் தகப்பனார் அவருடைய தகப்பன் காலமுதற் பிரபுவாகவும் இருந்தபடியால், சம்பந்தி முதலியார் தம்மை ஒருபடி உயர்ந்தவராக எண்ணிக்கொண்டு, என் தகப்பனாரைப் பார்த்து "உன் பூர்வோத்தரம் தெரியாதா? உன் தகப்பனுடைய நாள் முதல்தானே நீ பிரபு; அதற்கு முன் உனக்கு ஜாதியேது?" என்று தூஷித்தார். அவரை என் தகப்பனார் "நீ அம்பட்டன் கோத்திரம் அல்லவா?" என்றார். இவரை அவர் "நீ வண்ணான் கோத்திரம் அல்லவா?" என்றார். இப்படியாக "அம்பட்டன் குப்பையைக் கிளறினால் அத்தனையும் மயிர்" என்பதுபோல் இவர்களுடைய சம்வாதத்தால் மறைந்து கிடந்த எங்கள் பூர்வோத்தரங்க ளெல்லாம் வெளியாகி விட்டன.
அன்று முதல் சம்பந்தி முதலியாருக்கும் எங்களுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லாமற் போய்விட்டது. அவர்கள் வீட்டுக்கு நாங்கள் போகிறதுமில்லை; எங்கள் வீட்டுக்கு அவர்கள் வருகிறதுமில்லை. அவர்களுடைய சிநேகிதர்கள் எங்களுக்கு விரோதிகள்; அவர்களுடைய பகைவர்கள் எங்களுக்கு இஷ்டர்கள். அவர்களுடைய வேலைக்காரர்களுக்கும் எங்கள் வேலைக்காரர்களுக்கும் பகை. அவர்களுடைய ஆடு மாடுகளுக்கும் எங்களுடைய ஆடு மாடுகளுக்கும் பகை. இப்படிப் பிரமாதமாகக் கலகம் மூண்டுவிட்டது. ஆனால் இந்தக் கலகத்தில் நானும் ஞானாம்பாளும், என் தாயாரும் அவள் தாயாரும், இந்த நாலு பேர் மட்டும் சம்பந்தப்படவில்லை. எங்கள் தாய்மார்கள் தங்கள் கணவர்களைச் சமாதானப்படுத்தக் கூடியவரையில் முயன்றும் பயன்படவில்லை.
சம்பந்தி முதலியார் தம்முடைய சபதத்தை நிறைவேற்றும் பொருட்டு, பல ஊர்களுக்குக் கடிதம் அனுப்பி, தன் மகளுக்கு மாப்பிள்ளை விசாரிக்க ஆரம்பித்தார். அதைக் கேட்டு என் தகப்பனாரும் பல ஊர்களுக்குக் கடிதம் போக்கி, எனக்குப் பெண் விசாரிக்கத் தொடங்கினார். ஞானாம்பாளைத் தவிர வேறே தேவ ஸ்திரீயாயிருந்தாலும் விவாகஞ் செய்கிறதில்லையென்றும், என் தகப்பனார் பிரயத்தனங்களுக்கு இடங் கொடுக்கிறதில்லையென்றும் எனக்குள்ளே நிச்சயித்துக் கொண்டேன். ஆனால் ஞானாம்பாள் ஸ்திரீ ஜாதி ஆனதால் அவளுடைய தகப்பனார் அவளுக்கு வேறே புருஷனைத் தேடி, பலவந்தமாய்க் கலியாணம் செய்துவிட்டால் என்ன செய்கிறதென்ற கவலை என்னை வாதித்தபடியால், அவளை ரகசியத்தில் எங்காவது அழைத்துப் போய் விவாகஞ் செய்துகொண்டு திரும்பி வருகிறதென்று தீர்மானித்துக் கொண்டு இந்தத் தீர்மானத்தை அவளுக்குக் கடித மூலமாகத் தெரிவித்தேன். நான் எங்கே கூப்பிட்டாலும், அவள் சந்தோஷமாக வருவாளென்றும் யாதொரு ஆக்ஷேபமும் சொல்ல மாட்டாளென்றும் நம்பி, இந்தக் கடிதத்தை அனுப்பினேன். ஆனால் அவளுடைய மறுமொழியைப் பார்த்த உடனே என்னுடைய ஆசை நிராசையாய்ப் போய் விட்டது. அந்த மறுமொழி வருமாறு:—
என் பிரியமுள்ள அத்தான்
தாங்கள் அனுப்பிய கடிதத்தைப் பார்த்துத் துக்க சாகரத்தில் முழுகினேன். தாங்கள் எனக்கு எழுதிய கடிதம் போல், ஒரு தாசிக்குக் கூட ஒருவரும் எழுதத் துணியார்கள். என்னிடத்தில் என்ன துர்மார்க்கத்தைக் கண்டு, அப்படிப்பட்ட கடித்தை எனக்கு எழுதினீர்கள்? நாம் இருவரும் எங்கேயாவது போய், அந்தரங்கத்தில் கலியாணத்தை முடித்துக்கொள்ளலாமென்று எழுதி இருக்கிறீர்கள். விவாகம் இல்லாத ஒரு கன்னிகையும் பிரமசாரியும் சேர்ந்துகொண்டு வெளிப்படுவதினால் உண்டாகிற அவமானமும், அபவாதமும் உலகம் உள்ளவரையில் நீங்குமா? என்னை இந்த அவமானத்துக்கு உட்படுத்த, நான் உங்களுக்கு என்ன துரோகம் செய்தேன்? இந்த விஷயத்தில் புருஷர்களுக்குண்டாகிற அவமானத்தைப் பார்க்கிலும், ஸ்திரீகளுக்குண்டாகிற அபவாதம் நூறு பங்கு பெரிதென்று தாங்கள் ஏன் யோசிக்கவில்லை? ஐரோப்பியர்களுக்குள்ளே நடக்கிற காந்தர்வ விவாகத்தைப் புகழ்ந்து பேசுகிறீர்கள். அவர்களுக்குள்ளே பெண்ணுக்கும் புருஷனுக்கும் வயது முதிர்ந்த பின்பு விவாகம் நடப்பதுந்தவிர, விவாகத்துக்கு முன்பு அவர்கள் ஒருவரை ஒருவர் அந்தரங்கத்தில் சந்திப்பதும், சம்பாஷிப்பதும் வழக்கமாயிருக்கின்றது. ஸ்திரீ புருஷர்கள் ஒருவரை ஒருவர் பாராமலே அதிபால்யத்தில் கலியாணம் நடக்கிற வழக்க முள்ள இத்தேசத்துக்குக் காந்தர்வ விவாகம் தகுதியா?விவாகத்துக்கு முன்பு ஸ்திரீ புருஷர்களுக்குள் நடக்கிற அந்தரங்க சல்லாபத்தினால் விளைகிற தீமைகளைக் குறித்து, ஐரோப்பியர்களே முறையிடுகிறதுந் தவிர, நியாய ஸ்தலங்களில் வரும் வழக்குகளிலும் அந்தத் தீமைகள் இன்னவையென்று நாம் அறிகிறோமல்லவா? அந்தத் துர்வழக்கத்தை இத்தேசத்துக்குக் கொண்டுவர யாராவது முயற்சி செய்வார்களானால், அவர்கள் தேசாபிமானிகள் அல்லவென்பது ஸ்பஷ்டம். பெரும்பாலும் தாய்தந்தைமார்கள், தங்களுடைய பிள்ளைகளின் நலத்தையே கருதுவார்கள். ஆகையால், தாய் தகப்பன்மார்களுடைய அபிப்பிராயப்படி நடப்பது உசிதமாயிருக்கின்றது. ஆனால் ஆடு மாடுகளுடைய சம்மதத்தைக் கேளாமல், அவைகளை விலை கூறுவது போல், தகுந்த வயது உள்ள பிள்ளைகளுடைய இஷ்டத்தை எவ்வளவும் மதியாமல் தாய் தந்தைமார்கள் தங்கள் இஷ்டப்படி நடத்த முயலுவார்களானால், அப்படிப்பட்ட விவாகத்துக்குச் சம்மதிக்காமல், நிராகரிக்கப் பிள்ளைகளுக்குப் பூரண சுதந்தரம் உண்டாயிருக்கின்றது. தங்களுக்குக் கன்னிகையாகிய நான் கடிதம் எழுதுவது அநுசிதமாயிருந்தாலும், என்னுடைய அபிப்பிராயம் தெரியும் பொருட்டு இந்தக் கடிதம் மட்டும் எழுதினேன். இனிமெல் எழுதமாட்டேன். தாங்கள் ஒருதரம் எனக்குச் செய்த உபகாரத்தையும் மறவேன்.
இங்ஙனம்
தங்கள் விதேயை
ஞானாம்பாள்
இந்தக் கடிதத்தைப் பார்த்தவுடனே, என்னுடைய புத்தி எந்த ஸ்திதியில் இருந்திருக்குமென்று நீங்களே உணர்ந்துகொள்ளுங்கள். இந்தக் கடிதத்தைத் திருப்பித் திருப்பி ஆயிரந்தரம் படித்தேன். நான் என்னுடைய கடிதத்தை எவ்வளவு நம்பிக்கையோடு கூட எழுதியிருந்தேனோ, அவ்வளவுக்கு அவளுடைய மறுமொழி முழுதும் பிரதிகூலமாயிருந்தது. என்னை விவாகஞ் செய்துகொள்ள அவள் சம்மதம் உள்ளவளென்பதுகூடச் சந்தேகத்தில் வந்துவிட்டது. ஆனால் தகுந்த பிராயமுள்ள பிள்ளைகளுடைய இஷ்டத்தைத் தாய் தகப்பன்மார்கள் எவ்வளவும் கவனிக்காவிட்டால், அப்படிப்பட்ட விவாகத்தைப் பிள்ளைகள் நிராகரிக்கலாமென்று அவள் எழுதிய ஒரு வாக்கியமட்டும், கொஞ்சம் நம்பிக்கைக்கு ஆஸ்பதமாயிருந்தது. தண்ணீரில் வீழ்ந்து தத்தளிக்கிறவர்கள் ஒரு துரும்பு அகப்பட்டாலும் அதைப் பிடிப்பதுபோல, நான் அந்த அற்ப நம்பிக்கையைக் கொண்டு என் மனதைத் திடப்படுத்திக் கொண்டேன். அவளுடைய கடிதத்தின் முதற்பாகங்கள் கோபமாயிருந்தாலும், நீங்கள் செய்த உபகாரத்தை மறவேன் என்கிற கடைசி வாக்கியத்தைக் கொண்டு அவள் கோபம் தணிந்துவிட்டதாக நிச்சயித்துக் கொண்டேன்.