உள்ளடக்கத்துக்குச் செல்

பிரதாப முதலியார் சரித்திரம்/அத்தியாயம் 2

விக்கிமூலம் இலிருந்து


2ஆம் அதிகாரம்
பால லீலை

நான் படிப்பு விஷயத்தில் மந்தமாயிருந்தாலும், விளையாடுகிற விஷயத்தில் அதிக முயற்சி உள்ளவனாக இருந்தேன். என்னுடைய பால்ய சேஷ்டைகள் யாவருக்கும் வியப்பாயிருக்குமானதால் அவைகளை அடியில் விவரிக்கிறேன்.

என் வீட்டில் என்னைத் தவிர, மற்றவர்கள் எல்லாரும் சுரத்தினாலும் அம்மையினாலும் உபாதை பட்டார்கள். அவர்களைப் பல பேர் வந்து விசாரிக்கிறதும் உபசாரம் செய்கிறதுமா யிருந்தார்கள். என்னை ஒருவரும் விசாரிக்காதபடியால் நான் ஒரு மூலையில் அழுதுகொண்டு இருந்தேன். எல்லாரும் ஓடிவந்து, "ஏன் அப்பா!`அழுகிறாய்" என்று கேட்டார்கள். "எனக்குச் சுரமாவது அம்மையாவது வரவில்லையே!" என்று தேம்பித் தேம்பி அழுதேன்.

நானும் சில பிள்ளைகளும் தெருவில் விளையாடிக் கொண்டிருக்கும்பொழுது, அவர்களில் ஒரு பையன் என்னைப் பார்த்து, "நான் இரண்டு கண்களையும் மூடிக்கொண்டு ஒரு வித்தை செய்கிறேன்; நீ அந்த வித்தையை இரண்டு கண்ணையுந் திறந்துகொண்டு செய்வாயா?" என்று கேட்டான். அதற்கு நான், "நீ இரண்டு கண்களையும் மூடிக்கொண்டு செய்கிற வித்தையை, நான் கண்ணைத் திறந்துகொண்டு செய்யக் கூடாதா? அப்படி நான் செய்யாவிட்டால் உனக்கு நான் இவ்வளவு பந்தயம் கொடுப்பேன்" என்று ஒப்புக்கொண்டேன். உடனே அந்தப் பையன் நடுத் தெருவில் உட்கார்ந்து, இரண்டு கண்ணையும் மூடிக்கொண்டு மண்ணை அள்ளி அள்ளித் தன் கண்மேலே போட்டுக் கொண்டான். பிற்பாடு என்னைப் பார்த்து, "நீ இரண்டு கண்களையும் திறந்துகொண்டு இந்த வித்தையைச் செய்" என்று மண்ணை அள்ளி என் கையில் கொடுத்தான். நான் கண்ணை இழந்துபோவதைப் பார்க்கிலும் காசை இழப்பது நலமென்று நினைத்துப் பந்தயக் காசை அவனுக்குக் கொடுத்துவிட்டேன்.

எங்கள் வீட்டு மேல் மாடியில் அதிக விலை பெற்ற நிலைக் கண்ணாடிகள் மாட்டியிருந்தன. ஒரு கண்ணாடியில் நானும் சில பிள்ளைகளும் எங்களுடைய முக அழகைப் பார்த்தபோது எல்லாருடைய முகமும் அழகாயிருக்க, என் முகம் மட்டும் எனக்கே பார்க்கச் சகிக்காமல் விகாரமாயிருந்தது. அது கண்ணாடியினுடைய பிசகென்றெண்ணிக் கையை ஓங்கிக்கொண்டு அந்தக் கண்ணாடியில் பலமாக ஒரு குத்து குத்தினேன். அந்தக் கண்ணாடி ஆயிரம் துண்டாக உடைந்து போயிற்று.

எந்த வேலையிலும் சோம்பலாக இருக்கக் கூடாதென்றும் தொட்ட காரியத்தை உடனே முடித்துவிட வேண்டுமே தவிர நாளைக்கென்று நிறுத்தி வைக்கக் கூடாதென்றும் என் தாயார் எனக்கு அடிக்கடி புத்தி சொல்லி வருவார்கள். நான் அந்தப் புத்தியை பக்ஷண விஷயங்களில் உபயோகப் படுத்தி, எத்தனை பக்ஷணங்கள் அகப்பட்டாலும், நாளைக்கென்று வையாமல் உடனே சாப்பிட்டு, மந்தப் பட்டு வைத்தியர்களுக்கு ஓயாது வேலை கொடுத்து வந்தேன்.

எல்லாரிடத்திலும் மரியாதையாய்ப் பேசவேண்டுமென்றும், யாராவது வந்தால் அவர்களுக்கு உடனே ஆசனம் கொடுத்து உபசாரம் செய்ய வேண்டுமென்றும் என் தாயார் எனக்கு அடிக்கடி சொல்லி வருவார்கள். நான் அந்தப்படி வண்ணான், அம்பட்டன், தோட்டிக்குக் கூட ஆசனம் கொடுத்து மரியாதை செய்யத் தலைப்பட்டேன்.

தினமும் பொழுது விடிந்தவுடனே, உபாத்தியாயர் வந்து படிக்கச் சொல்லித் தொந்தரவு செய்தபடியால், பொழுது விடியாமலிருப்பதற்கு, என்ன உபாயமென்று யோசித்துப் பார்த்தேன். கோழி கூவிப் பொழுது விடிகிறபடியால், கோழி கூவாவிட்டால் பொழுது விடியாதென்று நினைத்து, கோழி வளர்க்கவேண்டாமென்று அக்கம் பக்கம் வீட்டுக்காரர்களுக்கு உத்தரவு செய்தேன்.

ஒரு நாள், ஒரு பையனிடத்தில் நான் இரண்டு வராகன் கடன் வாங்கினதாகவும், அவன் என்னை அடித்ததாகவும் சொப்பனங் கண்டு விழித்துக்கொண்டு, அந்தப் பையனை மறுநாள் பார்த்தபோது, அந்தச் சொப்பனத்தை அவனுக்குத் தெரிவித்தேன். உடனே அவன் “அந்தக் கடனைக் கொடு" என்று என் மடியைப் பிடித்துக் கொண்டான். நான் அவனுடைய கன்னத்தில் பளீர் பளீர் என்று இரண்டு மூன்று அறைகள் கொடுத்தேன். அவன் "ஏன் அடிக்கிறாய்?" என்று கேட்டான். "இராத்திரி நீ என்னை சொப்பனத்தில் அடித்தபடியால் அதற்காக நான் இப்போது நான் உன்னை அடித்தேன்" என்றேன். அவன் "கடனுக்கும் அடிக்கும் சரியாய்ப் போய்விட்டது" என்று சொல்லிப் போய்விட்டான்.

ஒரு நாள், நான் வீதியில் விளையாடிக் கொண்டிருந்த போது ஒரு துஷ்டன் அவனுடைய மாட்டை ஓங்கி ஓங்கி அடித்து ஓட்டிக் கொண்டு போனான். நான் "ஏன் அடிக்கிறாய்?" என்று கேட்டதற்கு அவன் "என் மாட்டை எப்படியாவது நான் உபயோகிக்கிறேன். உனக்கென்ன?" என்றான். நான் உடனே என் கையில் இருந்த கழியால் அவனை அடித்து, "என் கழியை நான் எப்படியாவது உபயோகிக்கிறேன். உனக்கென்ன?" என்று சொல்லிப் போய்விட்டேன்.

எங்கள் வீட்டில் ஒரு பெரியவருக்கு அசாத்திய ரோகம் நேரிட்டு, வைத்தியர்களும் கைவிட்டுவிட்டார்கள். எமன் வந்து உயிரைக் கொண்டு போகின்றதென்று நான் கேள்விப் பட்டிருந்த படியால், கதவை மூடி வைத்திருந்தால், எந்த வழியாய் வருவான் என்று நினைத்து, அந்தப் பெரியவர் படுத்திருந்த அறையின் கதவை மூடி, துவாரங்களை யெல்லாம் அடைத்துவிட்டேன். அப்படிச் செய்தும் அந்தத் துஷ்ட யமன், எந்த வழியாகவோ வந்து பிராணனைக் கொண்டுபோய்விட்டான்.

நான் ஒரு நாள், கண்ணாடியில் என் முகத்தைப் பார்த்தபிறகு, முதுகின் அழகைப் பார்க்கும் பொருட்டு கண்ணாடியை எனக்குப் பின்புறத்தில் வைத்து, முதுகாலே பார்த்தேன். ஒன்றும் தெரியாமல் மயங்கினேன்.

என்னுடைய நேசன் ஒருவன், ஒரு புஸ்தகம் அனுப்ப வேண்டுமென்று எனக்குத் தபால் வழியாய்க் கடிதம் அனுப்பினான். நான் அந்தப் புஸ்தகத்தை அனுப்பவில்லை. சில நாளைக்குப் பிறகு நான் அவனைக் கண்டபோது "புஸ்தகம் அனுப்பும்படி நீ எழுதிய கடிதம் என்னிடத்தில் வந்து சேரவில்லை" என்றேன். "கடிதம் வந்து சேராவிட்டால், நான் புஸ்தகம் வேண்டுமென்று எழுதிய சமாச்சாரம் உனக்கு எப்படித் தெரிந்தது?" என்று அவன் கேட்க, நான் ஆடு திருடிய கள்ளன் போல் விழித்தேன்.

ஒரு முக்கியமான சங்கதியைப் பற்றி, ஒரு சிநேகிதனுக்கு நான் கடிதம் எழுதி அதன் கடைசியில் "இந்தக் கடிதம் வந்து சேரா விட்டால், உடனே எனக்குத் தெரிவி" என்று எழுதினேன். கடிதம் போய்ச் சேராவிட்டால் என்ற அந்தக் கடைசி வாக்கியத்தால் என்ன பிரயோசனமென்பதை நான் கவனிக்கவில்லை.

ஒரு பிரசித்தமான பொய்யன் என்னிடத்தில் வந்து, தன்னுடைய ஆயுசு முழுமையும் தான் ஒரு நிசம் சொன்னதில்லை என்றான். "நீ ஒரு நிசம் சொல்லியிருக்கிறாய்" என்று நான் சொல்ல, அவன் "இல்லை, இல்லை" என்றான். "ஆயுசு முழுமையும் நிசம் சொன்னதில்லையென்று நீ சொல்வது நிசம் அல்லவா?" என்றேன். அவன் சரியென்று ஒப்புக் கொண்டு என்னைப் பார்த்து "நீ ஒரு பொய் சொல்ல வேண்டும்" என்றான். நான் உடனே "நீ, யோக்கியன்" என்றேன்.

ஒரு நாள் இராத்திரி, நான் தங்கக் காப்புகளும் கொலுசுகளும் போட்டுக்கொண்டு நித்திரை செய்தேன். ஒரு திருடன் எவ்விதமாகவோ உள்ளே நுழைந்து, எல்லாரும் தூங்குகிற சமயத்தில் என்னுடைய கைக் காப்பையும் கொலுசையுங் கழற்றிக்கொண்டு ஓடினான். நான் உடனே "திருடரே! திருடரே!! இன்னொரு கைக் காப்பையுங் கொலுசையும் மறந்துவிட்டீரே" என்று கூவினேன். அந்த அரவம் கேட்டு, எல்லாரும் விழித்துக் கொண்டார்கள். திருடனும் ஓடிப்போய்விட்டான்.

என் பாட்டியாருக்கு, மூன்றாம் முறை சுரம் வந்து கொண்டிருந்தது. எங்கள் வீட்டிலிருந்த கடியாரம், மத்தியானம் இரண்டு மணி அடித்தவுடனே, சுரம் வருவது வழக்கமாயிருந்தபடியால், கடியாரம் ஓடாமல் நின்று விட்டால் சுரமும் வராமல் நின்றுபோகுமென்று நினைத்து கடியாரத்தை நிறுத்தி விட்டேன். அப்படிச் செய்தும் அந்தத் திருட்டுச் சுரம் வராமலிருக்கவில்லை.

நானும் கனகசபையும் பின்னும் சில பிள்ளைகளும் எங்களுக்குத் தேகபலம் உண்டாவதற்காகச் சில நாளாய்ச் சிலம்பம் பழகிக்கொண்டு வந்தோம். ஒரு நாள் இராத்திரி வெகுநேரம் வரையில், நாங்கள் சிலம்பம் விளையாடிக் கொண்டிருந்து வீட்டுக்கு வந்தபோது, எங்கள் வீட்டுக்கு எதிரேயிருக்கிற மைதானத்தில் கூத்தாடிகள் வேஷம் போட்டுக்கொண்டு, இராம நாடகம் ஆடிக்கொண்டிருந்தார்கள். நாங்கள் வந்தபோது இராமரும், சீதையும், லட்சுமணரும் நகரத்தை விட்டுப் புறப்பட்டுக் காட்டுக்குப் போகிற சமயமாயிருந்தது; அப்போது தசரதர், கௌசலை முதலான சகல ஜனங்களும், அழுது பிரலாபித்துக் கொண்டிருந்தார்கள். அதைக் கண்டவுடனே, நான் கனகசபையைப் பார்த்து, "அந்தப் பொல்லாத கைகேசியினாலே இராமர் பட்டத்தை இழந்து மனமுருகி வாடவும் சம்பவித்திருக்கின்றதே! இந்த அநியாயத்தைப் பார்த்துக் கொண்டு நாம் சும்மா இருப்பது தர்மமா?" என்று கேட்க, அவன் "இந்த அக்கிரமத்தைத் தடுக்க முயற்சி செய்யாமல் நாம் சும்மா இருப்பது அழகல்ல" என்றான். நானும், அவனும் மற்றப் பிள்ளைகளும், எங்கள் கைகளிலிருந்த சிலம்பக் கழிகளுடனே சென்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஜனங்களின் தலைமேல் ஏறி மிதித்துக் கொண்டு, நாடகசாலைக்குள்ளே பிரவேசித்து விட்டோம். அங்கே தன் பிள்ளைக்குப் பட்டாபிஷேகம் ஆகுமென்கிற அகக்களிப்புடன் உட்கார்ந்துகொண்டிருந்த கைகேசியை வளைத்துக் கொண்டு, எங்கள் கை சலிக்கிற வரையில் அடித்தோம். அவள் "பரதனுக்குப் பட்டம் வேண்டாம், வேண்டாம்" என்று சொல்லிக் கொண்டு ஓட்டம் பிடித்தாள். அப்போது கூனி அகப்பட்டிருந்தால் அவளை எமலோகத்துக்கு அனுப்பியிருப்போம். அவளுடைய அதிர்ஷ்ட வசத்தால் அகப்படாமல் தப்பித்துக் கொண்டாள்; காட்டுக்குப் போகிற இராமரிடத்துக்குப் போய், நகரத்துக்குத் திரும்பும்படி சொன்னோம். அவர் "பிதுர் வாக்கிய பரிபாலனம் செய்வதற்காக நான் காட்டுக்குப் போவது அகத்தியம்" என்றார். நீர் போனால் காலை ஒடித்துவிடுவோமென்று வழி மறித்துக் கொண்டு அவருக்கு நியாயத்தை எடுத்துக் காட்டி மெய்ப்பித்தோம். எப்படி என்றால் "சும்மா இருந்த உம்மை உம்முடைய தகப்பனார் அழைத்து உம்மைப் பட்டங் கட்டிக்கொள்ளும்படி சொல்லி, நீரும் அதற்குச் சம்மதித்து ஊரெங்கும் முரசறைவித்த பிற்பாடு, உமக்குக் கொடுத்த இராச்சியத்தைப் பரதனுக்குக் கொடுக்க அவருக்கு அதிகாரம் உண்டா? அப்படி அவர் கொடுத்திருந்தால் அது அசத்தியமல்லவா? உமக்குப் பட்டாபிஷேகம் ஆனால் தான் உமது தந்தையாருடைய சத்தியம் நிலைக்கும்.

"என்னே அரசர் இயற்கை யிருந்தவா
தன்னே ரிலாத தலைமகற்குத் தாரணியை
முன்னே கொடுத்து முறைதிறம்பத் தம்பிக்குப்
பின்னே கொடுத்தாற் பிழையாதோ மெய்யென்பார்"

என்று கம்பரும் சொல்லியிருக்கிறபடியால், ஊருக்குத் திரும்பும்" என்றேன். இராமர் நான் சொன்ன வாய் நியாயத்தைப் பார்க்கிலும், தடியடி நியாயத்துக்குப் பயந்து உடனே நகரத்துக்குத் திரும்பினார். நான் வசிட்டர் முதலானவர்களை அழைத்து இராமருக்கு மகுடாபிஷேகம் செய்வித்தேன். இந்தப் பிரகாரம் இராமாயணம் சப்த காண்டத்தை ஒன்றரைக் காண்டத்துக்குள் அடக்கி, இராமரும் அவருடைய தம்பியும் சீதையும் வனத்துக்குப் போகாமலும், தசரதர் இறவாமலும், இராவணன் சீதையைச் சிறை எடுத்தானென்னும் அபவாதம் இல்லாமலும், இராவணாதிகளை ராமர் கொலை செய்தாரென்கிற பழிச் சொல் இல்லாமலும், சிறு பிள்ளையாகிய பரதன் ராஜ்ஜியபாரம் தாங்கி வருந்தாமலும் செய்து, பிரதாப முதலி என்னும் பேரை நிலை நிறுத்தினேன்.

ஒரு நாள் எங்கள் குடும்ப வைத்தியர் வீதியில் வருகிறதைக் கண்டு, அவர் கண்ணில் படாமல் நான் ஓடி ஒளிந்துகொண்டேன். கனகசபை "ஏன் ஒளிகிறீர்கள்?" என்று கேட்டான். "நமக்குச் சில நாளாய் வியாதி வரவில்லையே! வைத்தியருக்குக் கோபமாயிருக்குமென்று பயந்து ஒளிந்துகொண்டேன்" என்றேன். மறுபடி ஒரு நாள் அந்த வைத்தியர் என்னைக் கண்டு, "பூர்வீக மனுஷர்களெல்லாரும் தீர்க்காயுசாயிருந்தார்கள்; இந்தக் காலத்து மனுஷர்களுக்கு ஆயுசு குறைந்து போனதற்குக் காரணம் என்ன?" என்று கேட்டார். நான் அவரைப் பார்த்து "பூர்வீகத்தில் வைத்தியர்கள் இல்லாதபடியால் பூர்வீக மனுஷர்கள் நீடிய ஆயுசு உள்ளவர்களாயிருந்தார்கள்; இந்தக் காலத்தில் வைத்தியர்கள் அதிகமாயிருப்பதால் ஆயுசு குறைந்து போய்விட்டது" என்றேன்.

நானும் சில பிள்ளைகளும் நீந்தக் கற்றுக் கொள்வதற்காக ஒரு குளத்துக்குப் போனோம்; "நானும் நீந்தக் கற்றுக் கொள்வதற்கு முன் தண்ணீரில் இறங்கமாட்டேன்" என்று கரையில் உட்கார்ந்தேன். "தண்ணீரில் இறங்காமல் எப்படி நீந்தக் கற்றுக்கொள்கிறது?" என்று எல்லாரும் என்னைப் பரிகாசம் செய்தார்கள்.

நானும் சில பிள்ளைகளும் குதிரைப் பந்தயம் விட்டபோது என் குதிரை எல்லாருடைய குதிரைகளுக்கும் பிந்திப் போய்விட்டதால், எல்லாரும் என்னைப் பார்த்துக் கை கொட்டிச் சிரித்தார்கள். நான் "என்னுடைய குதிரை எல்லாருடைய குதிரைகளையும் துரத்துகிறது” என்று சொல்லி அவர்களுக்கு மேல் அதிகமாகச் சிரித்தேன்.

ஒரு நாள் நானும் கனகசபையும் பின்னுஞ் சிலரும் எங்களுடைய வீரப் பிரதாபங்களைக் குறித்துப் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது நான் கனகசபையை நோக்கி "அநேக சத்துருக்களை நான் ஓடும்படி செய்தேன்" என்றேன். அவன் "எப்படி ஓடச் செய்தீர்கள்?" என்று கேட்க, "நான் சத்துருக்களைக் கண்டவுடனே ஓட ஆரம்பித்தேன்; அவர்கள் என்னைத் துரத்திக்கொண்டு ஓடி வந்தார்கள்; இப்படி நான் சத்துருக்களை ஓடச் செய்தேன்" என்றேன். கனகசபை என்னுடைய சவுரியத்தை மெச்சிக்கொண்டு, "நீங்கள் சத்துருக்களை எப்படி வெல்லுவீர்கள்?" என்று கேட்க, "நான் சத்துருக்களைக் கண்டவுடனே அதிவேகமாக ஓடுவேன்! என்னுடைய ஓட்டத்தைப் பிடிக்க அவர்களாலும், அவர்கள் பாட்டனார்களாலும் முடியாது; இவ்வகையாக அவர்களை நான் வெற்றி கொள்வேன்" என்றேன். அப்போது கூட இருந்த ஒரு சிப்பாய், தான் சண்டையில் எதிரியினுடைய காலை வெட்டினதாக வீரம் பேசினான். நான் அவனைப் பார்த்து "எதிரியினுடைய தலையை வெட்டாமல் காலை வெட்டின காரணம் என்ன?" என்று கேட்க, அந்தச் சிப்பாய் "நான் என்ன செய்வேன்? எதிரியினுடைய தலையை வேறொருவன் முன்னமே வெட்டிக் கொண்டு போய்விட்டான்; பிறகு நான் காலை வெட்டினேன்" என்றான்.

சில காலத்துக்கு முன் நானும் கனகசபையும் சேர்ந்து சில கவிகள் உண்டு பண்ணினோம். அந்தக் கவிகளை இந்தக் கிரந்தத்திலே சேர்க்கலாமென்று யோசித்து, அவைகளைப் பார்வையிட்டோம். சில கவிகளின் அர்த்தம் எனக்கு மட்டும் தெரிகின்றது. கனகசபைக்குத் தெரியவில்லை. சில கவிகளின் அர்த்தம் கனகசபைக்கு மட்டும் புலப்படுகின்றது; எனக்குப் புலப்படவில்லை. சில கவிகளின் பொருள் அவனுக்கும் விளங்கவில்லை; எனக்கும் விளங்கவில்லை. அன்றியும் அநேக கவிகளுக்குச் சந்தமே தெரியவில்லை. சந்தந் தெரிகிற கவிகளுக்குப் பொருள் தெரியவில்லை. பொருள் தெரிகிற கவிகள், இலக்கண விதிக்கு ஒத்திருக்கவில்லை. ஆகையால் அந்தக் கவிகளை, இந்தப் புஸ்தகத்தில் சேர்க்காமல் விட்டு விட்டேன்.ரு புலவர், நான் பாடின ஒரு கவியைப் பார்த்து, அதை நான் கம்பராமாயணத்திலிருந்து திருடிக் கொண்டதாகக் குறை கூறினார். "நான் திருடவே யில்லை" என்றேன். அவர் அந்தக் கவி, கம்பராமாயணத்திலிருப்பதாகக் காட்டினார். நான் உடனே அவரைப் பார்த்து, "நான் அந்தக் கவியைக் கம்பராமாயணத்திலிருந்து திருடி எடுத்துக் கொண்டு போனால், பிறகு அந்தக் கவி கமபராமாயணத்தில் எப்படி இருக்கக் கூடும்? ஆகையால் நான் திருடவில்லையென்பதற்கு அந்தக் கவி, கம்பராமாயணத்திலிருப்பதுவே சாக்ஷி" என்று மெய்ப்பித்தேன்.

ஒரு மூடன் என்னைப் பார்த்து, "சகல மனுஷர்களும் பிழை செய்வது சகஜம்; இந்த விஷயத்தில் விவேகிக்கும் அவிவேகிக்கும் என்ன பேதம்?' என்றான். நான் அவனை நோக்கி "அவிவேகியின் குற்றம், அவனுக்கு மட்டுந் தெரியாது; உலகத்துக்கெல்லாம் தெரியும்; விவேகியின் குற்றம், அவனுக்கு மட்டுந் தெரியும்; உலகத்துத் தெரியாது" என்றேன்.