பிரதாப முதலியார் சரித்திரம்/அத்தியாயம் 44

விக்கிமூலம் இலிருந்து


44-ஆம் அதிகாரம்
ஆண்பால் பெண்பால் மயக்கம்—
பெண்ணைப் பெண் விரும்பல்—
இராஜாங்க பாரம்பரைப் பாத்திரம்

விக்கிரமபுரி குடியரசாவதற்கு முந்தி, அதை ஆண்டுவந்த அரசனுக்குப் புருக்ஷப்பிரஜை யில்லை யென்பதை முன்னமே தெரிவித்திருக்கிறேன். அவருக்கு அதிரூப செளந்தரியமான ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தது. அந்தப் பெண் பெயர் ஆநந்த வல்லி அந்தக் குழந்தை அதிபால்லியமாயிருக்கும் போது, தாயும் தகப்பனும்இறந்து போய் விட்டதால், பாட்டியாருடைய கையிலே வளர்ந்தது. ஞானாம்பாளுக்குப் பட்டாபிஷேகமான பிறகு, அந்தக் குழந்தையைத் தன் குழந்தைபோற் பாவித்து, மிகுந்த அன்போடுங் கரிசனத்தோடும் ஆதரித்துவந்தாள். தகுந்த உபாத்தியாயர்களைக் கொண்டு வித்தியாப்பியாசஞ் செய்வித்தது மின்றி, தன்னாற் கூடிய போதும், அந்தப் பெண்ணுக்குச் சன்மார்க்கங்களையும், ராஜ நீதிகைளையும் ஞானாம்பாள் போதித்து வந்தாள். அந்தப் பெண்ணுக்குப் பக்குவகாலஞ் சமீபித்த உடனே, அவளுக்கும் எங்களுக்கும் முக தரிசன மில்லாமல் அந்தப்புர வாசமா யிருந்தாள். அவளுடைய அந்தஸ்துக் குரிய காரியங்களில் ஒரு குறைவுமில்லாமல், சகல மேம்பாடுகளும் உபசார மரியாதைகளும் நடந்து வந்தன.

ஞானாம்பாள் ஆண்வேடம் பூண்டுகொண்டு அரசு செய்வது தனக்கு அரிகண்டமா யிருப்பதால், தான் பெண்பால் என்பதை ஜனங்களுக்குத் தெரிவிக்க வேண்டுமென்று அனேக ஆவர்த்தி அபேக்ஷித்தாள். நான் கூடாதென்று தடுத்தபடியால் என் பிரியத்துக்காக அவன் ஆண் வேஷத்துடன் அரசு செய்து வந்தாள். ஆனால் ராஜ்ஜியபாரத்தைச் சேர்ந்து பல கவலைகளினாலும் தன்னுடைய உற்றார் பெற்றாரைப் பிரிந்திருக்கிற ஏக்கத்தினாலும் ஞானாம்பாள் சிலநாளாய்ச் சந்தோஷமாயிராமல் தேகம் மெலிந்து போனாள். அவள் ஒருநாள் என்னை நோக்கி நெட்டுயிர்ப்புடன் சொல்லுகிறாள்:- “எப்படிப்பட்ட முழுமூட்சுக்களாயிருந்தாலும் பிரபஞ்ச மாயாவிகாரத்தில் மதிமயங்காதிருப்பது அதிதுர்லபமென்று பெரியோர்கள் சொல்லுகிறார்கள். நமக்குப் பிரபஞ்ச மாயையுடனே கூட ராஜயோகம் வந்துவிட்டதால் நாம் சித்தம் பேதித்து நம்முடைய உற்றார் பெற்றார்களையெல்லாம் மறந்துவிட்டோம். நாம் அவர்களை மறந்து விட்டது போல் அவர்கள் நம்மை ஒரு நிமிஷமாவது மறந்திருப்பார்களா? நாம் ஆதியூரை விட்டுத் தப்பிப் போன சமாசாரம் கேள்விப்பட்ட உடனே, அவர்கள் பிராணனையும் வைத்திருப்பார்களா? அவர்களை இன்னொரு தரங் காண்போமா? அவர்களுடைய அமிருத வாசகத்தைக் கேட்போமா? என்னுடைய அத்தையாரைப் போலப் புண்ணியவதிகளை நான் எந்த உலகத்திலே காணப்போகிறேன்?” என்று சொல்லி முத்துமாலைபோற் கண்ணீர் விட்டுத் தேம்பினாள். அதைக் கேட்டவுடனே எனக்குஞ் சகிக்கக் கூடாத சஞ்சலம் உண்டாகிச் சிறிது நேரம் பொருமினேன். மறுபடியும் ஞானாம்பாள் என்னைப் பார்த்து “உங்களுடைய பிரியத்துக்காக இதுவரையும் அபாரமான இந்த ராஜாங்க பாரத்தைச் சுமந்தேன். இனி மேற் சுமக்க என்னால் முடியாது. இருக்கிற இடந் தெரியாமல் எவ்வளவோ அடக்க ஒடுக்கமாயிருக்க வேண்டிய ஸ்திரீ ஜாதியாகிய நான் புருஷவேஷம் பூண்டுகொண்டு எத்தனை நாளைக்குக் கஷ்டப்படுவேன்? இனி என்னால் நிர்வகிக்கச் சாத்தியமில்லாதபடியால் நீங்கள் என் தலைமேலே தூக்கிவைத்த பாரத்தை இறக்கிவிடும்படி கிருபை செய்யப் பிரார்த்திக்கிறேன்” என்றாள் நான் அவளைப் பார்த்து ““நான் செய்ய வேண்டிய காரியம் இன்னதென்று சொன்னால் உடனே அந்தப்படி செய்கிறேன்”” என்றேன்.

ஞானாம்பாள் என்னைப் பார்த்து ““நம்முடைய ஊரில் நமக்கு என்ன பாக்கியங் குறைவாயிருக்கிறது? இந்த ஊர்க் குடிகளுடைய சௌக்கியத்துக்காக நாம் இந்த அரசாக்ஷியத்தை ஏற்றுக் கொண்டதே யல்லாது, நமக்கு ஏதேனும் லாபம் உண்டா? குடிகளுக்கு வேண்டிய சௌக்கியங்களையும் சட்ட திட்டங்களையும் நாம் ஏற்படுத்திவிட்ட படியால், இனி மேல் இந்த ஊரை ஆளுகிறவர்களுக்கு அதிகப் பிரயாசம் இராது. இந்த ஊரை முன்னே ஆண்ட ராஜாவின் புத்திரியாகிய ஆநந்தவல்லி கூடிய வரையிற் கல்வி கற்று குணசாலியாகவும் பட்டத்துக்கு யோக்கியமாயும் இருப்பதால், அவளுக்குப் பட்டாபிஷேகஞ் செய்வித்து நாம் நம்முடைய ஊருக்குப் போவது நன்மையென்று நினைக்கிறேன்”” என்றாள். நான் ஞானாம்பாளைப் பார்த்து 'உன்னுடைய இஷ்டப்படி நடக்க என்னால் ஆடங்கமில்லை. ஆனால், அந்த ஜனங்கள் அந்த ராஜபுத்திரிக்கு மகுடஞ் சூட்டச் சம்மதிப்பார்களோ, சம்மதியார்களோ தெரியவில்லை. அன்றியும் இந்த நாடு மலைகளாலும் சமுத்திரங்களாலும் சூழப்பட்டிருப்பதால் நம்முடைய ஊருக்கு எந்த மார்க்கமாய்ப் போகிறதென்றுந் தெரியவில்லை. அந்த விவரங்களெல்லாந் தெரிந்துகொண்டு பிறகு அந்த ராஜ கன்னிகைக்கு மகுடாபிஷேகஞ் செய்விப்பதைப் பற்றி யோசிக்கலாம். அது வரையில் நம்முடைய எண்ணம் பிறர் அறியாதபடி ரகசியமாயிருக்க வேண்டும். ராயரும் அப்பாஜியும் அரசாண்ட காலத்தில் டில்லிப் பாச்சா ஒரே மாதிரியான மூன்று விக்கிரகங்களை அனுப்பி அவைகளின் தாரதம்மியங்களைத் தெரிவிக்கும்படி நிருபம் அனுப்பினான். மூன்றும் ஒரே தன்மையாயிருந்தபடியால் அவைகளின் உயர்வு தாழ்வு தெரியாமல் எல்லோரும் மயங்கினார்கள். அப்பாஜி அந்த விக்கிரகங்களின் காதுத்தொளை வழியாக ஈர்க்குகளை விட்டுப் பார்த்தான். ஒரு விக்கிரகத்தின் காதிலே விட்ட ஈர்க்கு, மற்றொரு காது வழியாகப் புறப்பட்டது. இன்னொரு விக்கிரகத்துக்கு வாய் வழியாகப் புறப்பட்டது. மற்றொரு விக்கிரகத்தின் காது வழியாய் விட்ட ஈர்க்கு, வெளியே வராமல் உள்ளே தங்கிவிட்டது. அந்த மூன்றாவது விக்கிரகம் போல எவன் ரகசியங்களை வெளியே விடாமல் உள்ளே அடக்குகிறானோ, அவன் உத்தமனென்றும், எவர்கள் காதினால் கேட்டதை வெளியே விட்டு விடுகிறார்களோ, அவர்கள் மத்திமரும் அதமரென்றும் அப்பாஜி பொருள் விடுவித்தான். அப்படிப் போல் நாமும் ரகசியங் காப்பாற்றவேண்டும்” என்றேன். நான் சொன்னது சரியென்று ஞானாம்பாளும் அங்கீகரித்துக் கொண்டாள்.

அதற்குச் சிலநாளைக்குப் பின்பு ஒரு நாட்காலையில், மந்திரி பிரதானிகள் முதலிய பெரிய உத்தியோகஸ்தர்களும், பெரிய பிரபுக்களும், இன்னும் அநேக ஜனங்களும், அரண்மனையில் வந்து ராஜசேவைக்குக் காத்திருப்பதாகக் கேள்விப்பட்டு, நானும் ஞானாம்பாளும் எழுந்துபோய் வந்தவர்களுக்குப் பேட்டி கொடுத்தோம். அவர்கள் பெருங் கூட்டமாய் வந்திருந்தபடியால், நாங்கள் ஆச்சரியம் அடைந்து “என்ன விசேஷம்?” என்று வினவினோம். வயோதிகர்களான சில பிரபுக்கள் எழுந்து ஞானாம்பாளைப் பார்த்து “மண்டலேச்வரா! மகிபரிபாலா!! நாங்கள் ஒரு பெரிய காரியத்தை உத்தேசித்து வந்திருக்கிறோம். தாங்கள் ஒரு ஆக்ஷேபமுஞ் சொல்லாமல் எங்களுடைய மனோரதத்தை நிறைவேற்றவேண்டும்” என்றார்கள். ஞானாம்பாள் அவர்களை நோக்கி “நீங்கள் உத்தேசித்திருக்கிற காரியம் புக்தமாயும் சாத்தியமாயும் இருக்கிற பக்ஷத்தில் அந்தப்படி செய்யத் தடையில்லை. ஆனால் காரியம் இன்னதென்று தெரிந்துகொள்ளாமல், முந்தி வாக்குத்தத்தம் செய்வது சரியல்லவே” என்றாள். அந்தப் பிரபுக்கள் ஞானாம்பாளைப் பார்த்து “நீங்கள் கலியாணமில்லாமல் பிரமசாரியா யிருப்பது எங்களுக்குப் பெரிய மனோவியாகூலமா யிருக்கிறது. தக்க பருவத்தில் கலியாணஞ் செய்யாதிருப்பதால் உங்களுடைய தேகம் நாளுக்கு நாள் இளைத்துப் போகின்றது. நீங்கள் சுகமாயிருந்தால் தானே எங்களுக்குச் சுகம் உண்டு. நாங்கள் எத்தனையோ உபகாரங்களைப் பெற்றுக் கொண்டோம். உங்களுக்கு நாங்கள் என்ன உபகாரஞ் செய்யப் போகிறோம்? உங்களுடைய கலியாண மகோற்சவத்தைப் பார்க்க வேண்டுமென்று எங்கள் கண்கள் அபேக்ஷிக்கின்றன. எங்களுடைய முந்தின ராஜாவின் மகளுடைய அழகுங் குணமும் உங்களுக்கு நன்றாய்த் தெரியும். அந்தப் பெண்ணினுடைய பாட்டியார் முதலான பந்துக்களுடைய கருத்தையும் அறிந்தோம். அவர்கள் எல்லாரும் அந்தப் பெண்ணை உங்களுக்குக் கன்னிகாதானஞ் செய்யப் பூரண சம்மதமாயிருக்கிறார்கள். அந்தப் பெண்ணினுடைய கருத்துந் தங்களையே நாடியிருப்பதாகவுந் தெரிந்து கொண்டோம். உங்களையும் அந்தப் பெண்ணையும் அதிர்ஷ்டம் வந்து மடியைப் பிடித்து இழுக்கும்போது நீங்கள் வேண்டாம் என்பீர்களா? அந்தக் கன்னிகாரெத்தினத்துக்குத் தக்க மாப்பிள்ளை நீங்களே! உங்களுக்குத் தக்க பெண் அந்தப் பெண்ணேயன்றி வேறில்லை” என்றார்கள். இதைக் கேட்டவுடனே ஞானாம்பால் திடுக்கிட்டுத் திகைத்து ஒன்றும் பேசாமல் என் முகத்தைப் பார்த்தாள். அவள் பொய் பேசுகிறவளாயிருந்தால், சமயானுகூலமாக எப்படியாவது பொய் சொல்லித் தப்பித்துக்கொள்ளுவாள். பொய்யுஞ் சொல்லக் கூடாமல் மெய்யுஞ் சொல்லக்கூடாமல் இருந்தபடியால் அவள் இவ்வாறு மலைப்பதற்கு இடமாயிற்று. நான் அந்தப் பிரபுக்களைப் பார்த்து “நீங்கள் சொல்லுவது பெரிய காரியமானதால் உடனே எப்படி மறுமொழி சொல்லக்கூடும்?” என்றேன். அவர்கள் என்னைப் பார்த்து “உபராஜப் பிரபுவே! இந்த விஷயத்தில் ஆலோசிக்கவேண்டிய சங்கதி என்ன இருக்கிறது? பெண்ணினுடைய குணத்தைப் பற்றி விசாரிக்கப் போகிறீர்களா? அல்லது குலத்தைப் பற்றி விசாரிக்கப் போகிறீர்களா? எல்லா விஷயமும் உங்களுக்குத் தெரிந்தது தானே. இன்றைக்கு மறுமொழி சொல்லக் கூடாவிட்டாலும், நாளைக்காவது எங்களுடைய இஷ்டப்படி மறுமொழி சொல்ல வேண்டும். உபராஜாவாகிய நீங்கள் அந்த மகாராஜாவுக்குச் சொல்லி அகத்தியம் எங்கள் இஷ்டப்படி நிறைவேற்றவேண்டும். அந்த ராஜ கன்னியின் மனம் மகாராஜாவை நாடியிருப்பதால் மகாராஜா அந்தப் பெண்ணை வேண்டாமென்றால் பெண்பாவம் அல்லவா? ஆகையால் நீங்களும் முயற்சி செய்து இந்தக் காரியத்தை நிறைவேற்றினால் உங்களுக்கும் வேறே பெண் தேடி விவாகஞ் செய்விக்கிறோம். அநுகூலமான மறுமொழியைக் கேட்பதற்காக நாளைக்கு ஆவலுடனே வருவோம்” என்று சொல்லிவிட்டு எல்லாரும் போய்விட்டார்கள். அவர்கள் போன வகையைப் பார்த்தால் தங்களுடைய வார்த்தையை நாங்கள் அர்த்தாங்கீகாரம் பண்ணிக்கொண்டதாக நினைத்துப் போனதாகத் தோன்றிற்று. எனக்கும் பெண் தேடி விவாகஞ் செய்வதாக அவர்கள் சொன்னவுடனே துயர முகமாயிருந்த ஞானாம்பாளுக்கும் புன்னகை உண்டாகிப் பிறகு அடக்கிக் கொண்டாள்.

அவர்கள் எல்லாரும் போனபிறகு ஞானாம்பாள் என்னைப் பார்த்து துக்க முகத்துடனே சொல்லுகிறாள்:- “விளையாட்டுச் சண்டை வினைச் சண்டையானது போல நான் ஆண்வேஷம் பூண்டுகொண்டு பேடிசம் பண்ணினது இவ்வளவு பிரமாதமாய் விளைந்திருக்கிறது. நான் ஆதியிலே உண்மையைச் சொல்லியிருந்தால் இவ்வளவு விபரீதம் நேரிடுமா? என்னுடைய ஆண் வேஷத்தை எத்தனை நபர்கள் மோசம் போகிறார்கள்? முக்கியமாக அந்த ராஜபுத்திரியினுடைய நிலைமை மிகவும் பரிதாபத்திற்குரியதாக இருக்கிறது. அந்தப் பிரபுக்கள் சொல்வது வாஸ்தவமா யிருக்கிற பக்ஷத்தில் அவளை நான் கொள்ளமாட்டேனென்று நிராகரிப்பதாக கேள்விப்படும்போது அவளுக்கு எத்தனை துக்கத்திற்கு இடமாயிருக்கும்? தாய் தகப்பன் இல்லாத ஒரு அருமையான பெண்ணை, நாம் இவ்வகையாக துன்பப்படுத்துவது தகுமா? அது பெண் துரோகம் அல்லவா? ஆகையால் காரியம் இன்னும் பிரமாதமாய் வளருவதற்கு முன் உண்மையைச் சொல்லிவிடுவது உத்தமமாகக் காணப்படுகிறது. நாளைத்தினம் அவர்கள் வந்து கேட்கும்போது நான் பெண்ணென்பதை அவர்களுக்குத் தெரிவிக்க யோசித்திருக்கிறேன்” என்றாள். நான் அவளைப் பார்த்து “நீ சொல்வதெல்லாம் வாஸ்தவந்தான். ஆனால் இப்போது உண்மையை வெளிவிடுவது விவேகமாய்த் தோன்றவில்லை. ஜனங்கள் எல்லாரும் உன்னை புருஷனென்றே நினைத்துச் சகல உபசார மரியாதைகளும் வணக்கமுஞ் செய்து வருகிறார்கள். நீ பெண்ணென்று திடீரென்று கேள்விப்பட்ட மாத்திரத்தில் அவர்களுடைய புத்தி எப்படியிருக்குமோ தெரியாது. இந்தத் தேசத்தார் ஸ்திரீகளை நிதிருஷ்டமாக எண்ணி அவர்களைப் பட்டாபிஷேகத்துக்கு யோக்கியர்கள் அல்லவென்று நினைக்கிறார்கள். அன்றியும் நாம் அநேக உத்தியோகஸ்தர்களையும் படைகளையும் நீக்கி அநேக ருடைய விரோதங்களைச் சம்பாதித்துக் கொண்டிருக்கிறோம். ஆகையால் இந்தச் சமயத்தில் உண்மையைச் சொல்வது சரியல்லவென்று நினைக்கிறேன்” என்றேன். உடனே அவள் “நான் உண்மைக்காகத் தலை கொடுக்கச் சித்தமாயிருக்கிறேன். ஆனால் ஒரு காரியத்தைப் பற்றி மட்டும் யோசிக்கிறேன்” என்று சொல்லி அந்தக் காரியம் இன்னதென்று தெரிவிக்காமல் மௌனமாயிருந்தாள். அவள் குறித்துச் சொன்ன காரியம் இன்னதென்று எனக்கு நன்றாக விளங்கிற்று. அவள் உண்மைக்காகத் தன் தலை கொடுக்கச் சித்தமாயிருந்தாலும் எனக்கு என்ன பொல்லாங்கு விளையுமோவென்று மட்டும் ஆலோசிப்பதாகத் தெரிந்து கொண்டேன். ஞானாம்பாள் என்னிடத்தில் வைத்திருக்கிற அணைகடந்த அன்பின் நிமித்தம் அவள் பல சங்கடங்களுக்கு உட்பட்டிருப்பதை நினைக்கும்போது என் மனம் பதைத்து உலை மெழுகு போல் உருகிற்று. யாதொரு அபாயமுமில்லாமல் அவளை ரக்ஷிக்கவேண்டுமென்று அடிக்கடி நான் கடவுளைப் பிரார்த்தித்துக் கொண்டேன்.

மறுநாட் காலையிலும் மந்திரி பிரதானி முதலிய சகல உத்தியோகஸ்தர்களும் ஊரிலுள்ள சகல பிரபுக்களும் அரண்மனையில் வந்து கூட்டங் கூடினார்கள். அவர்கள் ஞானாம்பாளைக் கண்டவுடனே ““மகாராஜாவே! நாங்கள் நினைத்த காரியம் நிறைவேற வேண்டுமென்று கோயிலுக்குக் கோயில் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறோம். எங்களுடைய குலதெய்வம் இந்தக் காரியத்தை அகத்தியங் கூட்டி முடிக்குமென்று நிச்சயமாய் நம்பியிருக்கிறோம். அதற்குத் திருஷ்டாந்தமாக நாங்கள் வழியில் வரும்போது நல்ல நல்ல சகுனங்கள் கண்டோம். இந்தக் கலியாணம் முடியவேண்டுமென்று விரும்பாதவர்கள் ஒருவருமில்லை. அரைஞாண் கட்டின பிள்ளைகள் முதலாகச் சகலரும் ஆவலாகக் காத்துக்கொண்டிருக்கிறார்கள். இத்தனை ஜனங்களுடைய எண்ணத்துக்கு விரோதஞ் செய்ய மாட்டீர்களென்று நம்புகிறோம்”” என்றார்கள்.

ஞானாம்பாள் அவர்களை நோக்கி ““இத்தனை ஜனங்களுடைய அபேஷைக்கு விரோதம் செய்வது எனக்கு மெய்யாகவே வருத்தமாயிருக்கிறது. ஆனால் என்னாலே கூடாத காரியத்துக்கு நான் என்ன செய்வேன்? அந்தப் பெண்ணை நான் கொள்வதற்கு ஒரு பெரிய பிரதிபந்தமிருக்கிறது. அது ஒருவராலும் நிவர்த்தி செய்யக் கூடாததாயிருக்கிறது”” என்றாள்.

ஜனங்கள் ““அந்தப் பிரதிபந்தம் இன்னதென்று தெரிவித்தால் எங்களுடைய பிராணனைக் கொடுத்தாயினும் அல்லது எங்களுடைய ஆஸ்திகளையெல்லாஞ் செலவழித்தாயினும் அந்தப் பிரதிபந்தத்தை நிவர்த்தி செய்கிறோம்”” என்றார்கள்.

ஞானாம்பாள் “””அந்தப் பிரதிபந்தத்தை நிவர்த்தி செய்ய ஒருவராலுங் கூடாது. பெண்ணை ஆணாக்கவும் ஆணைப் பெண்ணாக்கவும் எப்படிக்கூடாதோ அப்படியே இதுவுங் கூடாத காரியந்தான். அன்றியும் நீங்கள் கலியாணமில்லாத பிரமசாரியென்று நினைத்து எனக்குக் கலியாணம் செய்விக்க முயலுகிறீர்கள். நான் பிரமசாரியல்ல””” என்றாள்.

ஜனங்கள் “””உங்களுக்கு முன்னமே கலியாணம் நடந்திருந்தாலுங் கூட அந்த ராஜகன்னியை உங்களுக்குத் துதிய விவாகஞ் செய்ய எல்லாரும் சம்மதிக்கிறார்கள். சகல சங்கதிகளையும் நாங்கள் முன்னமே கலந்து பேசிக்கொண்டு தான் உங்களிடத்தில் வந்தோம். ஒரு பெண்ஜாதி யிருக்கும்போது வேறு ஸ்திரீகளை விவாகஞ் செய்வது சாஸ்திரோக்தமே தவிர அசாஸ்திரியம் அல்லவே” என்றார்கள்.

ஞானாம்பாள் ““உங்களுடைய அபிப்பிராயப்படி பல ஸ்திரீ விவாகம் சாஸ்திரோக்தமாக யிருந்தாலும் கொள்ளுகிறவனுடைய சம்மதம் வேண்டாமா?”” என்றாள்.

ஜனங்கள் ””“கொள்ளுகிறவனுடைய சம்மதத்தைக் கேளாமலே, இந்தத் தேசத்தில் கலியாணங்கள் நடப்பது வழக்கமாயிருக்கின்றது. நாங்கள் அப்படிச் செய்யத் துணியாமல் உங்களுடைய சம்மதத்தை கேட்கவே வந்திருக்கிறோம். இத்தனை ஜனங்களுடைய பிரார்த்தனையை நிராகரிப்பது நியாயமா? எங்களை பாராவிட்டாலும் தாய்தகப்பன் இல்லாத அந்தப் பெண் முகத்தையாவது பாருங்கள்! அந்தப் பெண் உங்களை வேண்டுமென்று விரும்பும்போது நீங்கள் வேண்டாமென்று தள்ளிவிடுவது பெண் துரோகம் அல்லவா?”” என்றார்கள்.

ஞானாம்பாள் ““அந்தப் பெண்ணுக்காக இவ்வளவு பரிந்து பேசுகிற நீங்கள் அந்தப் பெண்ணுக்குச் செய்ய வேண்டிய ஒரு முக்கியமான நன்மையைச் செய்யாமலிருக்கிறீர்கள். அந்த நன்மையைச் செய்தால் ராஜராஜாக்களெல்லோரும் அந்தப் பெண்ணை விரும்புவார்களே!“” என்றாள்.

ஜனங்கள் ““அந்தப் பெண்ணுக்கு நாங்கள் என்ன நன்மை செய்யாமல் விட்டுவிட்டோம்? அது இன்னதென்று உத்திரவானால் இந்த நிமிஷத்தில் செய்கிறோம். இது சத்தியம் சத்தியம்“” என்றார்கள்.

ஞானாம்பாள் “““அந்தக் கன்னிகையினுடைய தகப்பனார் புருஷ சந்ததியில்லாமல் இறந்துபோன உடனே பாராம்பரை பாத்தியக் கிரமப்படி அந்தப் பெண்ணுக்கு பட்டாபிஷேகம் செய்யவேண்டியது நியாயமாயிருக்க, நீங்கள் அந்தப்படி செய்யத் தப்பிப் போய்விட்டீர்கள்! ஒரு ராஜா இறந்த உடனே பாராம்பரை பாத்தியகிரமத்தை அனுசரிக்காமல் புது ராஜாவை நியமிக்கிறதாயிருந்தால் பெரிய கலகங்களுக்கு ஆஸ்பதமாகும். எப்படியென்றால் பலவானாயிருக்கிற ஒவ்வொருவனுந் தன்னை நியமிக்கவேண்டும் தன்னை நியமிக்கவேண்டுமென்றும் வல்லடி வழக்குச் செய்வான். ஒவ்வொருவனுடைய கட்சியிலும் பலபேர் சேர்ந்து யுத்தந் தொடங்கி ஒருவரையொருவர் மாய்த்துக் கொள்வார்கள். நியாய பரிபாலனம் நடவாமல் நின்று போகுமானதால் ஊரிலே திருட்டுகளும் புரட்டுகளும் கொள்ளைகளும் கொலைகளும் அதிகரிக்கும். இதுதான் சமயமென்று அந்நிய தேசத்து சத்ருக்களும் பிரவேசித்துச் சர்வ கொள்ளையடிப்பார்கள். ஒரு ராஜா இறந்தவுடனே அவனுடைய சந்ததி ஆணாயிருந்தாலும் பெண்ணாயிருந்தாலும் அந்தச் சந்ததிக்கே பட்டமாகிறபக்ஷத்தில் ஒரு கலகத்துக்கும் இடமில்லை. அது சர்வஜன சம்மதமாயிருக்கும். ராஜாவினுடைய புத்திரன் அல்லது புத்திரிகை விஷயத்தில் சகல ஜனங்களுக்கும் அதிக கெளரவமும் மதிப்பும் பயபக்தியும் உண்டாகும். யுராஜாவுக்கு சாவில்லைரு என்கிற நீதி வாக்கியப்படி ஒரு அரசன் எந்த நிமிஷத்தில் இறந்து போகிறானோ அந்த நிமிஷத்தில் அவனுடைய வாரிசுக்குத் தேசாதிபத்தியம் உண்டாகிறபடியால், நியாயபரிபாலனங்களெல்லாம் நில்லாமல் தொடர்ச்சியாய் நடந்துவரும். ஆண் சந்ததியாவது பெண் சந்ததியாவது அல்லது வேறே உரிமைக்காரனாவது இல்லாமல் ஒரு அரசன் மாண்டுபோகிற பக்ஷத்தில், புது அரசன் நியமிக்கலாமே யல்லாது, தகுந்த சுதந்தரவாளிகளிருக்கும்போது புது அரசனை நியமிப்பது அசங்கதம். சகல விஷயங்களும் மகா மந்திராலோசனைச் சபையாருடைய அனுமதிப்படி நடக்கிறபடியால் ராஜாவின் வாரிசுகள் திறமையற்றவர்களாயிருந்தாலும்கூட அவர்களை நியமிக்கத் தடையில்லை. ராஜாவினுடைய வார்சுகளை நியமிப்பதினால் உண்டாகிற நன்மையையும் அதனால் விளையத்தக்க தீங்கையும் சீர்தூக்கிப் பார்க்குமிடத்தில் தீமையைப் பார்க்கிலும் நன்மைகள் அதிகமாயிருக்கிறபடியால் பாரம்பரை கிரமப்படி நியமிப்பதே உசிதமாயிருக்கிறது. அப்படியே புது அரசனையாவது அல்லது குடியரசையாவது நியமிப்பதனால் உண்டாகிற சாதக பாதகங்களை யோசிக்குமிடத்தில் சாதகத்தைப் பார்க்கிலும் பாதகம் பெரியதாயிருப்பதால் புதுராஜ நியமனத்தையுங் குடியரசையும் நிஷேதிக்கவேண்டியது, எல்லாருடைய கடமையாகவும் இருக்கிறது. யானையினுடைய கையிலே பூமாலையைக் கொடுத்து யார் கழுத்திலே போடுகிறதோ அவனை அரசனாக நியமிப்பது இந்த ஊர் வழக்கமாயிருக்கிற்து. மனுஷர்களுடைய யோக்கியதை யானைக்கு எப்படித் தெரியக்கூடும்? அது ஒரு மூடன் கழுத்திலே மாலையைப் போட்டாலும் அவனை அரசனாக ஏற்றுக் கொள்ளவேண்டியதுதானே! அதைப் பார்க்கிலும் இறந்து போன ராஜாவினுடைய பாத்தியஸ்தர்களையே நியமிப்பது சர்வ சிலாக்கியம் அல்லவா? உங்களுடைய அதிர்ஷ்ட வசத்தால் உங்களுடைய பழைய ராஜாவின் குமாரத்தி பட்டாபிஷேகத்திற்குச் சகல விதத்திலும் யோக்கியதை உள்ளவளாகயிருக்கிறாள். அந்தப் பெண்ணுக்கு மகுடஞ் சூட்ட நீங்கள் ஒரு ஆக்ஷேபமுஞ் சொல்லமாட்டீர்களென்று நம்புகிறேன்” என்றாள்.

ஜனங்கள் “மகாராஜாவே! உங்களைப் போல தர்மராஜாக்கள் இந்த பூமண்டலத்தில் இருப்பார்களா? தங்களுடைய பட்டத்தை வேறொருவருக்குக் கொடுக்க யாராவது சம்மதிப்பார்களா? தகப்பன் ஜீவந்தனாயிருக்கும்போதே தன் பிள்ைளைக்குப் பட்டாபிஷேகஞ் செய்யச் சம்மதிக்கிறதில்லை. இப்போது ரரஜாக்கள் ஒரு சொற்ப தேசத்தைச் சம்பாதிப்பதற்காக எத்தனை உயிர்களைக் கொன்று எவ்வளவோ பாடுபடுகிறார்கள். புராணங்களிலே சொல்லப்பட்ட இராமன், தர்மன், அரிச்சந்திரன், நளன் முதலிய அரசர்கள் கூட நிர்ப்பந்தத்தினால் சில நாள் ராஜாங்கத்தை விட்டு நீங்கியிருந்தார்களே யல்லாது மனப்பூர்வமாய் விட்டவர்கள் ஒருவருமில்லை. அந்த அரசர்கள் எல்லாரும் உங்களுக்குச் சமானமாவார்களா? இப்படிப்பட்ட தர்ம ராஜாவை நாங்கள் ஒருகாலத்திலும் விடுவோமா? எங்களுடைய அபீஷ்டப்படிக்கும் உங்களுடைய மனோபீஷ்டப்படிக்கும், அந்த ராஜ கன்னிகைக்கு மகுடமும் மாலையுஞ் சூட்டி, நீங்கள் மூவரும் கூடி அரசு புரிவதைக் காண விரும்புகிறோம்” என்று சொல்லி சர்வ ஜனங்களும் விடை பெற்றுக்கொண்டு போய்விட்டார்கள்.