பிரதாப முதலியார் சரித்திரம்/வாழ்க்கை வரலாறு
மாயூரம் நீதிபதி வேதநாயகரின்
வாழ்க்கை வரலாறு
எழுதியவர்: ஆ. பி. அந்தோணி இராசு, எம்.ஏ.,
முன்னோர்:
சோற்று வளமுடைய சோழ நாட்டிலே, திருச்சிராப்பள்ளிக்குத் தெற்கே 16 கி.மீ. தொலைவில் ‘வேளாண் குளத்தூர்’ என்றோர் ஊர் உண்டு. அஃது இக்காலத்தில் குளத்தூர் என்று குறுகி வழங்குகிறது. அவ்வூரில் மதுரநாயகம் பிள்ளை என்பவர் பெரிய பண்ணையாராக இருந்தார். அவருக்கு 50 வயது நடந்தபோது தீராத சூலைநோய் ஒன்று ஏற்பட்டது. நாட்டு மருத்துவமும், கோயில் வழிபாடுகளும் குறையைத் தீர்க்கவில்லை. அவர் ஆவூருக்குச் சென்று, அங்கிருந்து மேலை நாட்டுக் கத்தோலிக்க குருக்களிடம் தனது குறையைக் கூறினார். அவர்கள் மருந்தளித்ததோடு இயேசுவை மன்றாடினால் நோய் நீங்கும் என்று உரைத்தனர். அவரும் இயேசுவை மன்றாடி மருந்துண்டார். தனது நோய் நீங்கப் பெற்றார். அதனால் அவரும் அவரது குடும்பத்தாரும், சைவ சமயத்தை விட்டுக் கத்தோலிக்க சமயத்தைத் தழுவினர்.
பிறப்பு:
அந்த மதுரநாயகத்தின் மடியிலே உதித்த சவரிமுத்துப் பிள்ளை என்பவருக்கும், ஆரோக்கியமரி என்பவருக்கும் மகனாக, 1826ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 14ஆம் நாள்
உதித்தவரே நம் வேதநாயகர். பெற்றோராலும் மற்றேராலும் சீராட்டியும் பாராட்டியும் வளர்க்கப்பெற்ற வேதநாயகர், பள்ளிப் பருவம் எய்தியதும் தமது ஊரில் இருந்த திண்ணைப் பள்ளிக்கு அனுப்பப்பட்டார். அங்கு அருமைத் தமிழையும் நெடுங் கணக்கையும் ஐயந் திரிபின்றிக் கற்றுத் தேர்ந்தார்.ஆங்கிலக் கல்வி :
ஆங்கிலேயர் ஆட்சி நடத்திய அக்காலத்தில் “அரைக் காசு வேலையானாலும், அரசாங்க வேலையாகுமா?” என்ற கொள்கையே எங்கும் நிலவியது. ஆதவால், தன் மகன் ஆங்கிலம் சுற்று அரசாங்க வேலை பார்க்க வேண்டும் என்று வேதநாயகரின் தந்தை விரும்பியதில் வியப்பில்லை. இக்காலம் போல் ஆங்கிலம்கற்பிக்கும் பள்ளிகள் ஊர்தோறும் இல்லாத காலம் அது. திருச்சிராப்பள்ளி போன்ற பெருநகரங்களில் கூட இரண்டொரு பள்ளிகளே இருந்தன. அரசாங்கத்தில் வேலை பார்த்த சிலர் மாணவர்களுக்குத் தம் வீட்டில் ஆங்கிலம் சொல்லிக் கொடுக்கும் வழக்கமும் இருந்தது.
திருச்சிராப்பள்ளியில் இருந்த தென் மாநில வழக்கு மன்றத்தில் (Southern Provinceal Gourt) தியாகப் பிள்ளை என்பவர் மொழி பெயர்ப்பாளராக வேலை பார்த்து வந்தார். அவர் ஆங்கிலமும் அருந்தமிழும் நன்கு கற்றவர். சவரிமுத்துப் பிள்ளை, தக்கார் சிலரின் பரிந்துரையுடன் தியாகப்பிள்ளையை அணுகித் தன் மகனுக்கு ஆங்கிலம் கற்றுத் தருமாறு வேண்டினார். வேதநாயகரின் அறிவுத்திறன் அவரது முகத்தில் தோன்றவே, தியாகப் பிள்ளை அவரைத் தன் மாணவனாக ஏற்றுக் கொள்ள இசைந்தார்.
வேதநாயகர் அவர் வீட்டிலேயே தங்கியிருந்து, ஒரு குல முறைப்படி ஆங்கிலமும் அன்னைத் தமிழும் கற்கலானார். ஆங்கிலத்தில் அருமையாகப் பேசவும் எழுதவும் வல்லவர் தியாகப் பிள்ளை. அருந்தமிழ் இலக்கண இலக்கியங்களில் ஆழ்ந்த பயிற்சியும் தேர்ச்சியும் உடையவர். அத்தகைய கூட்டுறவால் நம் வேதநாயகரும் இரு மொழி வல்லுநர் ஆனார். இளமையிலேயே தமிழ்க் கவிகள் இயற்றும் திறமையும் பெற்றார். தியாகப் பிள்ளையிடம் வடமொழியும் பிரெஞ்சும்கூட ஓரளவு கற்றுக் கொண்டார்.இளமைக் கவி :
ஒரு முறை, குளத்தூரிலிருந்து வேதநாயகரின் பெரியன்னை மகன் அடைக்கலம் என்பவர், ஓர் அலுவலாகத் திருச்சிராப்பள்ளிக்கு வந்தார். நம் வேதநாயகர் பின்வரும் கவிதையைப் பாடி, அவரை வீதியில் எதிர்கொண்டு வரவேற்றார்.
“சீர்பெருகு குளத்தூர்வாழ் அடைக்கல அண்
ணாகருணைத் தியாகா வாநீ
ஏர் பெருகு நின் சுமுகங் கண்டு (உ) வந்தேன்
இன்பமிகு நீயு நானும்
ஓர்திறமே உடன்பிறவாத் தோடமொன்றே
மாமணியும் ஒளியும் போல
நேர் உறவே நிலைத்திருக்கும் எந்நாளும்
நம்மிருவர் நேசந் தானே”
மற்றொரு முறை, தனக்கு மைத்துனன் முறையாகவுள்ள ஒருவருக்குத் திருமணம் நடைபெற்றபோது, நகைச்சுவை ததும்ப அவரை வாழ்த்திப் பின்வரும் பாடலைப் பாடினார்.
“உழவுத்தொழில் செய்து உமக்கு உடம்பெல்லாம் சேறு.
ஊத்தையைக் கழுவப் பற்றுமோ ஒன்பது ஆறு
பழங்கூழ் உமக்கு பாலுடன் சோறு
பயப்படாதிரும் உமக்கு ஆயுசு நூறு”
அரசாங்க அலுவல்:
வேதநாயகரின் ஆசிரியரான தியாகப் பிள்ளை அலுவல் பார்த்துவந்த தென் மாநில வழக்கு மன்றத்தில் கார்டன் (Mr. Gorden) என்பவர் நீதிபதியாக இருந்தார். தியாகப் பிள்ளையின் பரிந்துரையை ஏற்று, அந்நீதிபதி நம் வேதநாயகரை அந்நீதி மன்றத்திலே ஆவணக் காப்பாளராக (Record keeper) அமர்த்திக் கொண்டார். இங்ஙனம் தன் 22ஆம் அகவையில் (1848இல்) வேதநாயகர் அரசாங்க அலுவலில் அமர்ந்தார். அறிவும் இளமையும் கொண்ட அவர் சோம்பலின்றி ஊக்கத்துடன் தன் அலுவல்களைச் செய்து, தன் மேலதிகாரிகளின் அன்புக்கும் நம்பிக்கைக்கும் உரியவர் ஆனார். தன் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்ட ஆவணங்களை முறைப்படுத்தி அடுக்கிப் பாதுகாத்து வந்ததோடு, அவற்றைப் பகுத்துப் பார்த்து அரசாங்க தடைமுறைகளையும், நீதிமன்ற நெறிமுறைகளையும் அறிந்தார். ஈராண்டுகள் இங்ஙனம் கழித்தன.
திருச்சிராப்பள்ளியிலிருந்த மாவட்ட நீதிமன்றத்திற்கு (District Court) 1850ஆம் ஆண்டில் மொழி பெயர்ப்பாளர் ஒருவர் தேவைப்பட்டார். ஆங்கிலமும் அருந்தமிழும் அறிந்த பலர் அவ்வேலைக்காக விண்ணப்பித்தனர். அங்கு நீதிபதியாக இருந்த பாய்லோ என்பவர், விண்ணப்பித்தவர்களை அழைத்து நேர்முகத் தேர்வு ஒன்று நடத்தினார். ஆங்கிலத்தில் உள்ளதைத் தமிழிலும், தமிழிலுள்ளதை ஆங்கிலத்திலும் எழுதிக் காட்டுமாறு கட்டளையிட்டார். வேதநாயகரின் மொழி பெயர்ப்பு மற்றவர்களுடைய மொழி பெயர்ப்புகளை விடச் சிறந்திருந்ததாவ் வேதநாயகர் தேர்வு செய்யப்பட்டு மொழி பெயர்ப்பாளராக அமர்த்தப்பட்டார்.
அலுவலில் ஓர் அல்லல் :
ஆங்கிலேயர் ஆட்சி நடைபெற்ற அக்காலத்தில் ஆங்கிலமே ஆட்சிமொழியாக அமைந்திருந்தது. ஆகவே அரசாங்க சட்டங்களும் ஆணைகளும் நீதிபதிகளின் தீர்ப்புகளும் ஆங்கிலத்திலேயே இருந்தன. ஆங்கிலம் அறியாத மக்களுக்காக இவற்றைத் தமிழிலே மொழி பெயர்க்க வேண்டியிருந்தது. நீதி வேண்டி நீதிமன்றத்திற்கு வரும் நம் மக்கள், தங்கள் முறையீடுகள் முதலியவற்றைத் தாமறிந்த தாய்மொழியாம். தமிழிலேயே எழுதித்தந்தனர். தமிழறியா ஆங்கிலேயர் நீதிபதிகளாய் இருந்ததால், அவர்களுக்காக அவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டியிருந்தது. இந்த மொழி பெயர்ப்பு வேலையே வேதநாயகரின் முழுநேர வேலையாயிற்று.
கடமையுணர்வும் கடும் உழைப்பும் உடையவேதநாயகர் தன் வேலைகளைத் திறம்படச் செய்ததோடு, அந்தந்த நாள் வேலைகளை அந்தந்த நாளே முடித்து வந்தார். இதனாள் தன் மேலதிகாரிகளின் அன்புக்கும் பாராட்டுக்கும் அருகர் ஆனார். சில ஆண்டுகள் இப்பணி இடையூன்றி இனிதே சென்றது. ஆனாலும் வேலைப்பளு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வந்ததால், அன்றைய வேலைளை அன்றே முடிக்க இயலாத நிலை நேர்ந்தது. ஆயினும் அத்தடையை வெல்ல, வேதநாயகர் வேறு ஒரு முறையைக் கையாண்டார். தனக்கு உதவியாக எழுத்தர் ஒருவரைத் தன் சொந்த முறையில் அமர்த்திக் கொண்டு, தான் மொழிபெயர்த்துச் சொல்வதை அவரை எழுதச் செய்தார். இதனால் மொழிபெயர்ப்பு அலுவல் முட்டின்றிச் சென்றது.
அக்காலத்தில் மாவட்ட வழக்கு மன்றங்களில், வழக்குகளுக்குத் தீர்ப்பளிப்பதில் நீதிபதிக்கு உதவ, “காசியார்” என்ற சான்றாளர்கள் நியமிக்கப்பட்டு இருந்தார்கள். வழக்கின் முடிவில், நீதிபதியின் கருத்தும். காசியாரின் கருத்தும் ஒருமித்து இருந்தால், அத்தீர்ப்பு ஏற்றுக் கொள்ளப்படும். இன்றேல், மேலாணை நீதி மன்றமாகிய மாநில நீதி மன்றத்திற்கு வழக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு மறுபடியும் ஆராயப்படும்.
மேஸ்தர் டேவிட்சன் என்பவர் மாவட்ட நீதிபதியாயிருந்தபோது, இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடைவே சமைய அடிப்படையில் மூண்ட கலகவழக்கொனறு ஆராயப்பட்டு வந்தது. அதன் முடிவில், நீதிபதியும், காசியாரும் கருத்துவேறுபாடு கொண்டனர். அதனால் அவ்வழக்கு மாநில நீதி மன்றத்திற்கு அனுப்பப்பட வேண்டியதாயிற்று. அதன் தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கவேண்டிய வேலை வேதநாயகருடையதாயிற்று. அவரும் அவற்றைச் செவ்வனே முடித்து, நீதிபதியிடம் ஒப்படைத்தார். அதுபோது நீதிபதி டேவிட்சன் வேற்றூருக்கு மாற்றலாகிச் செல்ல நேர்ந்ததால், அவர் அந்த ஆவணங்களைப் பார்வையிட்டு, மேலாணை நீதி மன்றத்திற்கு அனுப்புவதற்காகத் தன்னுடன் எடுத்துச் சென்றார். இறைவன் திருவருள் வேறாக இருந்ததால், டேவிட்சன் எதிர்பாரா வகையில் நோயுற்று இறந்தார். அவர் எடுத்துச் சென்ற ஆவணங்கள் மேலதிகாரிகளுக்கு அனுப்பப்படாமல் அவரிடமே தங்கிவிட்டன. வேதநாயகர் இதனை அறியார்.
சிறிது காலம் சென்றபின், இந்து முஸ்லீம் கலக வழக்கு மாநில நீதி மன்றத்தால் ஆய்வு செய்யப்பட்டபோது, அது தொடர்பான ஆவணங்கள், மாவட்ட நீதி மன்றத்திலிருந்து வரவில்லை யென்பது புலனாயிற்று. அவற்றை உடனே அனுப்பி வைக்குமாறு மாவட்ட நீதிபதிக்கு ஆணை அனுப்பப்பட்டது. அப்போது நீதிபதியாயிருந்தவர் மேஸ்தர் கிரீன்வே என்பவர். அவர் டேவிட்சனுக்கு எதிர்மறையான கயமைக் குணம் படைத்தவர். ஆதலால், அரசாங்க ஆணை கிடைத்தவுடன், அவ்வழக்குத் தொடர்பான ஆவணங்கள் அனுப்பப்படாமைக்கு வேதநாயகரே காரணமானவர் என்று முடிவு செய்து, அவரை வேலையினின்று விலக்கினார். இதனைத் தன் மேலதிகாரிகளுக்கும் தெரிவித்தார். இங்ஙனம், வேதநாயகர் தான் இழைக்காத குற்றத்திற்கான தண்டனையை ஏற்க வேண்டியவரானார்.
உண்மைக்கு வெற்றி :
வேலையிழந்த வேதநாயகர் வேதனையுற்றார். ஆயினும் அநீதியை எதிர்த்துப் போராட எண்ணினார். ஆவணங்களை மொழி பெயர்த்து அப்போதைய நீதிபதியிடம் கொடுத்த செய்தியை மாநில நீதி மன்றத்தார்க்குத் தெரிவித்து மனுவொன்று எழுதினார். மாதங்கள் பல கடந்தன. மறுமொழியொன்றும் கிடைக்கவில்லை. மீண்டும் அதே உண்மைகளை விளக்கிக் கூறி மற்றொரு மனுவையும் அனுப்பினார். அது சென்று சேர்ந்தபோது, காலஞ்சென்ற நீதிபதியின் பெட்டியில் இருந்த ஆவணங்கள் மாநில நீதி மன்றத்திற்கு அந்நீதிபதியின் உறவினரால் அனுப்பப்பட்டு வந்து சேர்ந்து, வேதநாயகரின் கூற்றுக்குச்சான்று பகர்ந்தன. மாநில நீதி மன்றத்தார் வேதநாயகர் குற்றமற்றவர் எனக் கண்டு, அவரை மீண்டும் வேலைக்கு அமர்த்திக்கொள்ளுமாறு மாவட்ட நீதிபதிக்கு ஆணை அனுப்பினர்.
அப்போது நீதிபதியாயிருந்தவர் மேஸ்தர் கவிண்டன் என்பவர். அவர் பண்பாட்டில் கிரீன்வேயைவிடக் கீழானவர். ஆகவே, அரசு ஆணையை மதித்து வேதநாயகரை வேலைக்கு அமர்த்திக் கொள்ளாமல், அவர் நோயுற்றவர் என்றும், மொழிபெயர்ப்பு வேலைகளைத் தாம் செய்ய இயலாமல் மற்றொருவரின் துணையுடனே செய்தவர் என்றும் காரணம் காட்டி மேலதிகாரிகளுக்குக் கடிதம் எழுதினார். அவரது முடிவை ஏற்றுக்கொள்ளாத மேலதிகாரிகள், அவருக்கு ஓய்வு கொடுத்து அவரை இலண்டனுக்கு அனுப்பிவிட்டு, மேஸ்தர் ஆரிஸ் என்ற நல்லாரை நீதிபதியாக நியமித்தனர். ஆரிஸ் பொறுப்பேற்றுக் கொண்டவுடன் வேதநாயகரை அழைத்து வேலையில் அமர்த்திக் கொண்டார்.
மாவட்ட நீதிபதி :
சில ஆண்டுகட்குப்பின், 1856இல் மாவட்ட நீதிபதி (Dt. Munsiff) வேலைக்கு மனுக்கள் கோரப்பட்டன. நம் வேதநாயகர் மனு செய்தார். மற்றும் அறுபதுக்கு மேற்பட்டோரும் மனுச் செய்தனர். மனுக்களை ஆய்ந்த அரசினர் மூவரை மட்டுமே தேர்ந்தெடுத்தனர். அந்த மூவரில் ஒருவர் நம் வேதநயாகர் என்பதை விளம்பத் தேவையில்லை. மற்ற இருவர்: சென்னைள உயர்நீதி மன்ற நீதிபதியாக இருந்த முத்துசாமி ஐயரும், திருவாங்கூர் திவானாக இருந்த ரகுநாதராவும் ஆவர். நம் வேதநாயகர் முதலில் 1857இல் தரங்கம்பாடியில் மாவட்ட நீதிபதியாகப் பொறுப்பேற்றார். பின்னர், 1859இல் சீர்காழிக்கு மாற்றப்பட்டார். ஓராண்ருக்கு பின் மாயூரத்திற்குமாற்றப்பட்டார். அங்கு 1872ஆம் ஆண்டுவரை தொடர்ந்து நீதிபதியாக வேலை பார்த்தார்.
“நீதியென்பது மதில்மேல் பூனை” என்று பலரும் சொல்லக் கேட்டிருக்கிறோம். துலாக் கோலின் ஊசிபோல ஒருபக்கமும் சாயாது நடுநிலையில் நின்று நீதி வழங்கப்பட வேண்டும் என்று அறநூல்கள் அறிவிக்கின்றன. ஆயினும் அவ்வாறு நீதி வழங்கப்படுகிறதா என்பது பெரும் கேள்விக் குறியாகவே இருந்து வருகிறது. நீதிமன்றங்கள் நேர்மையாக இயங்க இயலாமைக்குப் பல காரணங்கள் இருக்கின்றன வழக்குத் தொடுப்பவர்கள், பல பொய்யுரைகளையும் புனைந்துரைகளையும் சேர்த்தே வழக்குத் தொடுப்பார்கள். அவர்களின் சார்பாக வாதாடுகின்ற வழக்குரைஞர்களும், வாக்கு வன்மையால் மெய்யைப் பொய்யாகவும் பொய்யை மெய்யாகவும் மாற்றுவார்கள். சாட்சிகளாக வருகின்றவர்களோ. பொய் சொல்லும்படியாகப் போதனை செய்யப்பட்டு அழைத்து வரப்படுவார்கள். இவர்களின் கூற்றுகளை அலசி, ஆராய்ந்து உண்மையைக் கண்டுபிடிப்பது என்பது முயற்கொம்புதான். இவையெல்லாம் போதாது என்பதுபோவ, நீதிபதிக்குக் கையூட்டு (இலஞ்சம்) கொடுத்துத் தம் சார்பாகத் தீர்ப்பளிக்கவேண்டுமென்று வேண்டுகிற ‘பெரியவர்களும்’ உண்டு. இவற்றிற்கெல்லாம் தப்பிப்பிழைத்தால்தான் நீதி என்று ஒன்று கிடைக்கும்.
நம் வேதநாயகர் நீதிபதியாக இருந்த காலத்திலும் இதே நிலைதான். நீதித்துறையில் நிலவியிருந்தது. ஆனாலும், இறைப்பற்றும், நற்பண்புகளும் நிறையப்பெற்ற வேதநாயகர் நல்ல நீதிநாயகராகவே விளங்கினார். தம்மிடம் வந்த வழக்குகளைத் தம் நுண்மாண் நுழை புலத்தால் நுணுகி ஆராய்ந்து உண்மையறிந்து தீர்ப்பு வழங்கினார். வழக்குரைஞர்களோ, கையூட்டோ அவரது நேர்மையைக் கெடுக்க அவர் இடந்தரவில்லை. ஆகவே, “அவரிடம் நீதிகிடைக்கும்“ என்ற பேச்சு எங்கும் பரவியது, “ஏழைக்கு இரங்கிடும் வேதநாயகர் எப்போது வருவாரோ- கச்சேரிக்கு எப்போது வருவாரோ?“ என்று ஒரு நாடோடிப் பாடலே தோன்றுமளவுக்கு நீதி அவரது நீதிமன்றத்தில் நிலைத்திருந்தது.
அவர் தீர்காழியில் வேலை பார்த்து வந்தபோது ஒரு வழக்கு அவரது நீதிமன்றத்தில் நெடுநாட்களாக நடைபெற்று வந்தது. வழக்கின் உண்மையை அறிய முடியாமல் அவரும் கவங்கலானார். அந்நிலையில் இறையுதவியை வேண்டத் தவறவில்லையவர். தீர்ப்பு வழங்கவேண்டிய நாளுக்கு முந்தைய நான் மாலையில், அவர் வீட்டிற்கு அவ்வழக்கைத் தொடுத்தவன் வாந்தான். நூறு (வெள்ளி) ரூபாய்கள் கொண்ட பணமுடிப்பு ஒன்றை அவரிடம் கொடுத்து தனக்குச் சார்பாகத் தீர்ப்பு வழங்க வேண்டுமென்று வேண்டினான். வழக்கின் உண்மையை அறிய, இறைவன் தளக்கு உதவிய முறையை எண்ணி வியந்தார் வேதநாயகர். இறைவனுக்கு நன்றி நவின்றார். வாதிக்கு மகிழ்வு தரும் மறுமொழியைச் சொல்லியனுப்பினார். மறுநாள் காலையில் வழக்கு மன்றத்திற்கு வந்திருந்த வாதியின் முகத்தில் காணப்பட்ட மகிழ்ச்சிக்குக் கரையேயில்லை. ஆனால் வேதநாயகர் முந்தையநாள் மாலையில் நூறு வெண்பொற்காசுகள் உண்மையை வெளிப்படுத்திய வகையை விளக்கிக் கூறி வாதிக்கு எதிராகத் தீர்ப்பு கூறியதோடு, அத்தொகையை வழக்குச் செலவுகளுக்காக எதிரிக்கு அளித்தார். தனக்கு என்ன தண்டனை கிடைக்குமோ என்றெண்ணி நடுங்கிய வாதியை எச்சரிக்கை செய்து மன்னித்து அனுப்பினார். இந்நிகழ்ச்சி அவரது புகழை எங்கும் பரப்பியது.
அவர் மாயூரத்தில் நீதிபதியாக இருந்தபோதும், இங்ஙனமே நேர்மையோடு பணியாற்றி வந்தார். இதனால் பிற நீதி மன்றங்களில் நீதி கிடைக்காது என்று அஞ்சிய பலர், தம் வழக்குகளை மாயூரத்திற்கு மாற்றும்படி அரசியலாருக்கு மனு செய்தனர். இவற்றையெல்லாம் ஆராய்ந்த அரசியலார், நம் வேதநாயகரை முதல்தர நீதிபதியாக உயர்த்தி உத்தரவு பிறப்பித்தனர். அவருடன் நீதிபதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற இருவரும் உயர் பதவிகளையே நோக்கமாகக் கொண்டு உழைத்து உயர்ந்த நேரத்தில், நம் வேதநாயகர் நீதியொன்றையே குறிக்கோளாகக் கொண்டு நிம்மதியடைந்தார்.
வேலையினின்று விலகல் :
வேதநாயகர் நேர்மையாக நீதி வழங்குவதையும் அவர் புகழ் வளர்ந்தோங்குவதையும் விரும்பாதபுல்லர் பலர் இருந்தனர். அவர்கள் அவரின் வேலைக்கு உலை வைக்கக் காலங்கருதிக் காத்திருந்தனர். அவர்களுக்கு வாய்ப்பாக நெல்சன் என்ற நீதிபதி ஒருவர் மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அவர் நேர்மையற்றவர், நல்லெண்ணம் இல்லாதவர். புறங்கூற்றைப் பொருட்படுத்தும் பொல்லாதவர். அவர் பொய்யர்களின் புளைந்துரைகளை நம்பி வேதநாயகரை வேலையினின்று தொலைக்க விரும்பினார். முன்னறிவிப்பு இன்றி மாயூரம் நீதிமன்றத்தைச் சோதனை செய்ய ஒருநாள் வந்தார். உடல் நலங்குன்றியிருந்த வேதநாயகர், அன்று விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்தார். நீதிபதி நெல்சனோ, அலுவலக ஆவணங்களைச் சோதனை செய்து, இல்லாத பல குற்றங்களைக் கண்டுபிடித்துக் குறிப்பெடுத்துக் கொண்டு, தனது தலைமையிடமாகிய கும்பகோணத்திற்குச் சென்றார். அக்குற்றச் சாட்டுகளுக்கு நேரில் வந்து விளக்கம் தருமாறு வேதநாயகருக்கு ஆணையிட்டார். அதனைப் பெற்ற வேதநாயகர், அவை குற்றமில்லையென்பதை விளகக் கடிதம் ஒன்றைத் தயாரித்து நெல்சனுக்கு அனுப்பினார். உடல்திலை காரணமாக, அவர் நேரில் செல்லவில்லை. நேரில் வந்து தம்மைக் காணாது புறக்கணித்ததைப் பெருங்குற்றமாகக் கருதிய நெல்சன், அவர் விளக்கங்கள் ஏற்றுக்கொள்ளத் தக்கவையல்ல என்றும், அவரை வேலையினின்றும் விலக்கவேண்டும் என்றும் அரசியலாருக்குப் பரிந்துரை செய்தார்.
வேதநாயகர் குற்றமற்றவர் என்று அரசியலார் அறிந்திருந்தாலும், வெள்ளையனான ஒரு மேலதிகாரிக்கு மதிப்பு தரவேண்டும் என்பதற்காக, வேலையினின்று தாமே விலகிச் கொள்ளுமாறும் ஆயுட்காலம் முழுவதும் ஓய்வூதியம் பெற்றுக் கொள்ளுமாறும் வேதநாயகருக்கு (Pension) அறிவுரை கூறிக் கடிதம் ஒன்றை வரைந்தனர். உடல் நலக்குறைவையும், குடும்பப் பொறுப்புகளையும், தமிழ்த் தொண்டு, பொதுநலத்தொண்டு ஆகியவற்றில் தனக்கிருந்த ஈடுபாட்டையும், ஆங்கில ஆட்சியில் நடைபெற்று வந்த அந்தப் போக்குகளையும்; மனத்தில் கொண்டு, வேலையிலிருந்து விலகிக்கொள்ள வேதநாயகர் விரும்பினார். ஆகவே, அரசியலாரின் அறிவுரைக்கு இணங்கி, ஓய்வூதியம் பெற்று, வேலையினின்றும் விலகிக் கொள்ள விரும்புவதாக விடை எழுதினார். நெறியற்ற நெல்சனோ, அவருக்கு ஓய்வூதியம் தருதல் கூடாது என்று தடை கூறினான். ஆயினும், அரசியலார் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. இத்தகைய சூழ்நிலையில், பதினாறாண்டுகள் நல்ல நீதிநாயகராக விளங்கிய வேதநாயகர் 1872ஆம் ஆண்டு வேலையினின்றும் விலகினார்.
இல்லறம் :
“இல்லறமே நல்லறம்” என்றெண்ணி நம் வேதநாயகர் தம் 25 ஆம் அகவையில் (1851 இல்) இல்வாழ்வை மேற்கொண்டார். காரைக்காலை சேர்த்த பாப்பம்மாள் என்பவரை மணந்தார். சிறிது காலத்திற்குப்பின், அவர் காலமாகவே, தன் தமக்கையான ஞானப்பூ அம்மாளின் மகள் இலாசர் அம்மையாரை இரண்டாம் தாரமாக ஏற்றார். சில ஆண்டுகள் கழித்து, அவர் இறையடி எய்தவே, புதுச்சேரியைச் சேர்ந்த மாணிக்கத்தம்மையாரை மணந்தார். அவர் ஞானப்பிரகாசம், சவரி முத்தம்மாள், இராசாத்தியம்மாள் என்ற மூன்று மக்களைப் பெற்றபின், முன்னவர் வழியே சென்றபோது புதுவை அண்ணுக்கண்ணம்மாளை மணந்தார். அவரது மறைவுக்குப் பின் அம்மாளம்மாள் என்பவரை மணந்தார். அவரும் தன் கணவனுக்கு முன்னதாகவே காலமாகிவிட்டார். இங்ஙனம் அருமை மனைவியர் ஐவரைப்பெற்றும், தம் இறுதிக் காலத்தில், தனியராகவே வாழ்த்தார் நம் தண்டமிழ் நாயகர்.
எனினும் அவரது இல்லறம் இனிதே இயன்றது. அவரைத் தேடி அவரது இல்லத்திற்கு வந்த விருந்தினர் எண்ணற்றவர். அவர்களையெல்லாம் இன்முகத்தோடு வரவேற்று, இன்சொல்கூறி, உண்டியும் உறையுளும் உவந்தளித்து ஓம்பினார் நம் வேதநாயகர், தமது வருவாயில் சிறுகச் சிறுகச் சேர்த்த தொகையைக் கொண்டு, மாயூரத்தில் ஒரு மாடி வீட்டை விலைக்கு வாங்கி, அதில் தம் இறுதிக் காலம்வரை வாழ்ந்து வந்தார். அவ்வீடு இதுபோழ்து. மாயூரம் பேருந்து நிலையத்தையொட்டி முதன்மைத் தெருவில் ஒரு கடையாக மாற்றப்பட்டுக் காட்சியளிக்கிறது.
தொண்டுகள்
. சட்டத்துறைத் தொண்டு:
வேதநாயகர் மொழி பெயர்ப்பாளராக வேலை பார்த்து வந்த காலத்தில் மாவட்ட நீதி மன்றங்களுக்கு மேலாணை நீதி மன்றமாக விளங்கிய மாநில நீதி மன்றத்தில் (Sadar- Court) வழங்கப்பட்ட தீர்ப்புகள் பல, மாவட்ட நீதி மன்றம் களில் மேற்கோள்களாகக் காட்டப்பட்டு வந்தன. அவ்வழக்கு விவரங்களும், அவை தொடர்பான சட்டங்களும் ஆங்கிலத்திலேயே இருந்ததால், ஆங்கில அறிவு போதிய அளவு இல்லாத வழக்குரைஞர்களும் மக்களும் அவற்றை அறியக்கூடவில்லை.
ஆகவே 1805 ஆம் ஆண்டுக்கும் 1861ஆம் ஆண்டுக்கும் sடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த முதன்மையான சட்டங்கள், வழக்குகள், தீர்ப்புகள் ஆகியவற்றைத் தெரிந்தெடுத்து அவற்றைத் தமிழில் மொழி பெயர்த்தார். அலுவல் ஒழிந்த ஓய்வுநேரங்களிலேயே இதனைச் சிறுகச்சிறுகச் செய்து முடித்தார். இதனை, அவர் மாயூரம் நீதிபதியாக இருந்த காலத்தில் : 1862இல் '(“சித்தாந்த சங்கிரகம்”) (சித்தாந்த = சட்டம்; சங்கிரகம் = தொகுப்பு) என்ற பெயரில் ஒரு நூலாக வெளியிட்டார். தமிழ் மொழியில் வெளிவந்த முதல் சட்டத்துறை நூல் என்ற பெருமை இதற்கேயுண்டு.
தமிழிசைத் தொண்டு :
அக்காலத்தில்—வேதநாயகர் மொழி பெயர்ப்பாளராக இருந்த காலத்தில்— தமிழ் நாட்டில் இசையரங்குகளில்— கச்சேரிகளில்—பாடப்பட்ட இசைப்பாடல்கள் தமிழ் மொழியில் அமைந்தவையல்ல. திருவாரூர் இசை மும்மணிகளான தியாகராயர், முத்துசாமி தீட்சதர், சாம சாத்திரி ஆகியோர் தெலுங்கு மொழியில் இயற்றிய கீர்த்தளைகளே அவை. தமிழ் நாட்டில் தமிழிசையில் பாடப்படும் தமிழ்ப் பாடல்கள் இல்லையே என்று தமிழ்ப்பற்று மிக்க வேதநாயகர் வேதனையுற்றார். இதனைப் போக்கத் தாம் ஏதேனும் செய்ய இயலுமா என்று எண்ணினார். தாமே இசைப் பாடல்கள் இயற்றித் தமிழிசைத் துறைக்குத் தொண்டு செய்ய விரும்பினார். இசையறிவு இல்லாத தன்னால் இசைப் பாடல்கள் இயற்ற இயலாமையையும் எண்ணினார். அதனால், இசைப் புலவர் இருவரிடம், தன் ஓய்வு நேரத்தில் இசை பயின்றார். பின்னர், இசைப் பாடல்களை—கீர்த்தனங்களைத்— தமிழில் இயற்றினார். அவற்றை இசையரங்குகளில் பாடச் செய்தார். அவை தெலுங்கு கீர்த்தவங்களைவிடச் சிறந்திருப்பதைப் பலரும் ஏற்றுக்கொள்ளச் செய்தார். தமிழில் இசைப் பாடல்களை இயற்ற முடியாது என்றிருந்த குறையைப் போக்கினார். தொடர்ந்து முயன்று பல இசைப்பாடல்களை உருவாக்கித் தமிழுலகுக்குத் தந்தார்.
இங்ஙனம், இயற்றப்பட்ட 200க்கு மேற்பட்ட கீர்த்தனைகளைத் தொகுத்து ஒரு நூலாக்கினார். அவை மக்கள் அனைவரும் சாதி, சமய வேறுபாடின்றிப் பாடி மகிழத்தக்கவை. எனவே, அந்நூலுக்குச “சர்வ சமய சமரசக் கீர்த்தனைகள்” எனப் பெயரிட்டு, அதனை 1878இல் வெளியிட்டார். இத்தொகுதியில், குடும்ப சபந்தமான கீர்த்தனைகள், இதோப தேசக் கீர்த்தனைகள் என்பன போன்ற உட் பிரிவுகளும் உண்டு. கிறிஸ்து சமயச் சார்பாகத் தாம் பாடிய பல கீர்த்தனைகளைத் தொகுத்து ஒரு தனி நூலாக்கினார். அதற்குச் “சத்திய வேத கீர்த்தனைகள்” எனப் பெயரிட்டு 1889இல் வெளியிட்டார்.
அவர் மொழி பெயர்ப்பாளராக இருந்த காலத்தில் தொடங்கப்பட்ட தமிழிசைத் தொண்டு, அவரது இறுதிக் காலம்வரை தொடர்ந்து இயன்றது. அவரின் இசைப்பாடல்ளை இன்றும் இசையரங்குகளிலும் வானொலியிலும் நாம் கேட்டு மகிழ்கிறோம்.
பெண்கள் முன்னேற்றம் :
சங்க காலத்தில் தமிழ்நாட்டில் ஆண்களைப்போல் பெண்களும் கல்வி கற்றுச் சிறந்திருந்தனர். கவி பாடும் திறமையும் பெற்று விளங்கினர். ஆனால் முஸ்லிம் ஆட்சி இங்கு பரவிய காலத்தில் ‘பெண்ணடிமை’ ஏற்பட்டது. “பெண்கள் படித்தல் கூடாது;படித்தால் கெட்டு விடுவார்கள்” என்ற பல்லவி எங்கும் பாடப்பட்டது. வாழ்வில் சரி பங்காகிய பெண்களும் கல்வி கற்று அறிவுடையோராக இருக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர்கள் நற்குண, நற்செயல்கள் உடையோராகஇருக்க வேண்டியதன் அவசியத்தையும் வேதநாயகர் உணர்ந்தார்.
இத்தகைய பெண்கள் முன்னேற்றத்தின் இன்றியமையாமையைப் பெண்களுக்கும் ஆண்களுக்கும் அறிவிக்க விரும்பினார். பெண்களுக்கு அறிவுறுத்த வேண்டிய செய்திகளை இனிய இசைப் பாடல்களாக எழுதி, “பெண்மதி மாலை“ என்ற சிறு நூலாக 1809 ஆம் ஆண்டில் வெளியிட்டார். பெண்கள் முன்னேற்றத்தில் அனைவரும் அக்கறை கொள்ள வேண்டும் என்பதை அறிவுறுத்தி “பெண் கல்வி“, “பெண் மானம்“ என்ற இரு உரைநடை நூல்களை எழுதி, அவற்றை ஒரே நூலாக, 1870இல் வெளியிட்டார். பெண்கள் கல்வி கற்க வசதியாக, 1869இல் பெண்களுக்கெனத் தனிப்பள்ளியொன்றை மாயூரத்தில் தன் சொந்த முறையில் தொடங்கி நடத்தி, பின்னர் தான் நகர மன்றத் தலைவரானபோது அதனை நகராட்சியின் பொறுப்பில் ஒப்படைத்தார்.
இங்ஙனம், பெண்கள் முன்னேற்றத்திற்காக இவர் அமைத்த அடிப்படையின் மீதுதான். திரு.வி.க., பாரதியார் போன்ற பிற்காலப் பெரியோரின் தொண்டுகள் தூண்களாக எழுத்து, இன்று மாதர் முன்னேற்றம் ஒரு பெரும் மாளிகையாகி நிற்கிறது.
தமிழில் புதினங்கள் இயற்றுதல் :
ஆங்கிலம் முதலிய அயல் மொழிகளில் உரைநடையில் அமைந்த புதுமைக் கதைகள் இயற்றப்பட்டிருப்பதையும் தமிழ மொழியில் அத்தகைய கதைகள் தோன்றாமையையும் வேதநாயகர் வேதனையோடு நோக்கினார். தமிழ் உரைநடை, பண்டிதர் நிலையிலிருந்து பாமரர் நிலைக்கு வர அத்தகைய கதை நூல்கள் பெருக வேண்டியதன் தேவையையும் எண்ணினார்.
இதனைத் தாமே செய்து, பிறருக்கும் வழிகாட்ட எண்ணினார். நீதி நூலிலும், பெண் கல்வி முதலிய பிற நூல்களிலும் தான் வெளியிட்டிருந்த அரிய கருத்துக்களைக் கதை மாந்தர்களின் பண்புகளாக்கி ஒரு புதினக் கதையைப் புனைந்தார். அதனைப் “பிரதாப முதலியார் சரித்திரம்” என்ற பெயரில் 1879இல் வெளியிட்டார். அதனை இயற்ற தேர்ந்த காரணத்தையும் நோக்கத்தையும் அதன் முதற் பதிப்பிற்கு எழுதிய ஆங்கில முன்னுரையில் அழகாகக் குறிப்பிட்டிருக்கிறார். அதனைத் தொடர்ந்து, அதனைப் போன்ற ஆனால் அளவில் சற்று சிறிய புதினம் ஒன்றையும் எழுதி, “சுகுண சுந்தரி“ என்ற பெயரில் 1887 ஆம் ஆண்டில் வெளியிட்டார்.
இவையிரண்டுமே, தமிழ் மொழியில் அமைந்த முதல் புதினக் கதைகளாகும். இன்று தமிழில் உரைநடையில் இயற்றப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான புதினக் கதைகளுக்கு இவைகளே முன்னோடிகளும் வழிகாட்டிகளுமாகும் இதனால் இவரைத் “தமிழ்ப் புதினத்தின் தந்தை” என்று போற்றுவதும் பொருத்தும்.
நீதி நூல்:
மக்களுக்கு நீதியை அறிவிக்கும் நூல்கள் தமிழ் மொழியில் பல உண்டு. அவற்றுள் திருக்குறள் பெரிதும் போற்றப்படுகிறது. ஆயினும், நீதிகளை அறிவிக்கும் நூல் எதுவும் தன் காலத்தில் தோன்றாமையை வேதநாயகர் நினைத்தார். கையூட்டு - இலஞ்சம் - போன்ற பிற்காலத்திய தீய பழக்கங்களைக்கடிய ஒரு நீதிநூல் தேவை என்பதையும் எண்ணினார். . காலத்திற்கேற்ற தேவையாகிய அத்தகைய நூலொன்றைத் தானே இயற்ற முன் வந்தார். தனக்கு நேரம் கிடைத்தபோதெல்லாம் செய்யுட்கள் இயற்றிச் சேர்த்தார். இறுதியில் 400 செய்யுட்கள் கொண்ட அந்நூலை,“நீதி நூல்” என்னும் பெயரில் 1859 இல் தான் சீர்காழியில் நீதிபதியாக இருந்தபோது வெளியிட்டார்.
அதளைப் படித்த மகா வித்துவான் மீனாட்சி சுந்தரனார் உள்ளிட்ட, தமிழறிஞர் அனைவரும் அவரைப் பாராட்டினார்கள். மகா வித்துவான் அவர்கள், அதனை மேலும் சிறிது விரிவு செய்யக் கோரினார். ஆகவே, வேதநாயகர் மாயூரத்தில் நீதிபதியாக இருந்த காலத்தில் மேலும் 200 செய்யுட்களை எழுதிச் சேர்த்து, 600 பாடல்களைக் கொண்டதாகத் திருந்திய பதிப்பாக, 1860 இல் வெளியிட்டார். நீதிபதி, “நீதி நூல்“ இயற்றியது நிறை பொருத்தம் உடையதே!
கிறிஸ்து சமயச் சார்பு நூல்கள் :
வேதநாயகர் வேலையிலிருந்து ஓய்வு பெற்றபின், வேலை போயிற்றேயென்று வேதனைப்படவில்லை. மாறாக, தனக்குத் தன் வாழ்நாள் முழுவதும் கருணை புரிந்து வந்த, மேலும் கருணை காட்டி வழி நடத்தக் காத்திருந்த இறை இயேசுவையும், அவரை ஈன்ற அன்னை, கன்னி மரியையும் பெரிதும் நினைந்தார். நீதிபதியாக வேலை பார்த்தபோது, இறைவனை எண்ணிப் போற்ற நேரம் போதாக் குறையை நினைத்து, “அப்பா இதென்ன அதிகாரம் ஐயோ! எப்போதும் பக்தி செய்ய இல்லையே நேரம்” என்று நெஞ்சுருகிப் பாடியவருக்கு இப்போது நிறைய நேரம் கிடைத்தது.
ஆகவே, இறைவனின் திருவருளை நினைந்து, “திருவருள் மாலை“ “திருவருள் அந்தாதி“ என்ற செய்யுள் நூல்களையும், தேவ அன்னையின் அருளைப் போற்றித் “தேவ மாதா அந்தாதி, என்ற செய்யுள் நூலையும் யாத்து, 1873 ஆம் ஆண்டில் வெளியிட்டார்.
ஒருமுறை தம் தொழில் தொடர்பாகச் சென்னை சென்றிருந்த போது, சென்னையிலிருந்து 12கல் தொலைவிலிருந்த பெரியபாளையம் சென்று, அவ்வூர் பெரியநாயகி மாதா பேரில் ஒரு பதிகம்-10 பாக்கள் பாடினார். அதனையும் அத்தொகுப்பில் சேர்த்து வெளியிட்டார்.
பின்னர் தேவனைத் தோத்தரிக்கும் மாலையாக, “தேவ தோத்திர மாலை“ என்ற செய்யுள் நூலையும் எழுதி, 1889ஆம் ஆண்டில் வெளியிட்டார். இவை இறையன்பில் ஈடுபட்ட அவரது இதயத்தின் எதிரொலிகளாக இலங்குகின்றன. இவற்றைப் படிப்பவர்க்கும் இதே உணர்வு இன்றும் ஏற்படும்.
தனிப் பாடல்கள் :
இவை தவிர, வேதநாயகர் தன் நண்பர்களுடன் உரையாடியபோதும், அவர்களுக்குக் கடிதங்கள் - சீட்டுக்கவிகள்- எழுதிய போதும், திருமண நிகழ்ச்சிகளின் போதும், பல்வேறு பிற நிகழ்ச்சிகளின் போதும், பாடிய பாடல்கள் கணக்கற்றவை. அவற்றைத் தொகுத்து வெளியிட்டால். அவை ஒரு நூலாகக் கூடும்.பொதுநலத் தொண்டு:
நீதிபதிப் பொறுப்பிலிருந்து விலகிய வேதநாயகர், ‘நிம்மதி’யாக வீட்டிலிருக்கவில்லை. தன்னால் இயன்ற அளவு போதுநலத் தொண்டும் செய்தார். மாயூரத்தைச் சேர்த்த பெரியோரி பலர், அவரை அந்நகர் மன்றத்தின் தலைவராக்கினர். அவரும் அவர்களின் அன்பைத் தட்ட முடியாமல் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டார். தனது பதவிக் காலத்தில் சாலைகள் அமைத்தல், கல்விச் சாலைகள் அமைத்தல், குடிநீர் வசதியளித்தல், துப்புரவு, சுகாதாரம் பெருகச் செய்தல் முதலிய பல்வேறு துறைகளிலும் பாராட்டத்தக்க பணிகளைச் செய்து, “பொது நலத்தொண்டு செய்வது எப்படி?” என்று பிறருக்கு அறிவுறுத்தினார்.
வறுமைக் காலத்துத் தொண்டு:
1876ஆம் ஆண்டு முதல் மூன்றாண்டுகள் மாயூரத்திலும் அதன் சுற்றுப்புறங்களிலும் கடும் பஞ்சம் ஏற்பட்டது. முதல் ஆண்டில் வறட்சியும், இரண்டாம் ஆண்டில் வெள்ளமும், மூன்றாம் ஆண்டில் விட்டில் பூச்சிகளும் இப்பெரும் பஞ்சத்திற்குக் காரணமாயின. இப்பஞ்ச காலத்தில் மாண்டோர் எண்ணிக்கை எண்ணி மாளாது. மனித உயிர்கள் பட்ட பாட்டைக் கண்டு மனம் பதறினார் வேதநாயகர். சோற்று வளமுடைய சோழநாட்டில், சோறில்லாது மக்கள் வருந்தும் நிலைமை நீக்க நினைந்தார்
பெரும் நிலக்கிழார்கள். பெருஞ் செல்வர்கள், சைவ மடத்துத்தலைவர்கள் ஆகியோர் அளித்த உதவிகளுடன் தன் சேமிப்பையும் சேர்த்து, மாயூரத்திலும், சுற்றுப்புறச்சிற்றூர்களிலும் கஞ்சித் தொட்டிகள் வைத்து நடத்தினார். கத்தோலிக்க சமய உலகத் தலைவராகிய பாப்பரசர் மூலமாக ஐரோப்பிய நாட்டு உதவியையும் பெற்று உதவினார். அம்மூன்றாண்டுகளும் முழு நேரப் பணியாகச் செய்தார். இவரது இத்தகு தொண்டுகளைக் கண்டு வியந்து, “பரனைப் பாடிய வாயால் ஒரு நரனைப் பாடமாட்டேன்” என்று நோன்பு கொண்டிருந்த முடிகொண்டான் கோபாலகிருட்டின பாரதியார், விதிவிலக்காக, “நீயே புருஷ மேரு“ என்று தொடங்கும் பாடல்-கீர்த்தனை-ஒன்றைப் பாடிப் பாராட்டினார். இக்காலத்தில், பஞ்சத்திலிருந்து மக்களைக் காக்குமாறு இறைவனை வேண்டி வேதநாயகர் பாடிய, “பஞ்சம் தீர் ஐயா, உம்மையன்றித் தஞ்சம் ஆர் ஐயா“ என்று தொடங்கும் பாடல் போன்ற பாடல்களும், பிற தனிப் பாடல்களும் தனிச் சிறப்புடையவை.
நல்லறிஞர் நட்பு :
வேதநாயகர் வாழ்ந்தகாலத்தில், தமிழகத்தில் வாழ்ந்த நல்லறிஞர் பலருடனும் தொடர்பும் நட்பும் கொண்டிருந்தார். அவருள் முதன்மையாகக் குறிப்பிடத்தக்கவர், திருசிரபுரம் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையாவார். இவரது நட்பை இவர் வாழ்ந்த காலத்து மட்டுமன்றி இவரது இறப்பிற்குப் பின்னும் நம் வேதநாயகர் போற்றி வந்தது புதுமையேயாகும்.
வேதநாயகர் மொழி பெயர்ப்பாளராக விளங்கிய காலத்தில், திருச்சிராப்பள்ளியில் மகாவித்துவான் அவர்கள் மிகச் சிறந்த தமிழ்ப் புலவராய் விளங்கினார். தமிழ் இலக்கண இலக்கியங்களில் வல்லவராய் விளங்கியதோடு, கவி பாடும் திறமையும் பெற்றுத் திகழ்ந்தார். இவரது நட்பு நம் வேதநாயகருக்கு எதிர்பாரா வகையில் கிட்டியது. பின்னர் அது வளர்பிறை போல் வளர்ந்து முழுமை பெற்றது.
வேதநாயகர் திருச்சியில் வாழ்ந்த காலத்து இருவரும் அடிக்கடி கண்டு அளவளாவி மகிழ்ந்தனர். தமிழ் இலக்கிய இலக்கண ஆராய்ச்சிகளில் ஈடுபட்டனர். வேதநாயகர் தரங்கம்பாடியில் இருந்த குறுகிய காலத்து மட்டுமே இவ்விருவரும் சிறிது பிரிந்து வாழ நேர்ந்தது. ஆனால் வேதநாயகர் சீர்காழிக்கு வந்தபோது, மகா வித்துவானைச் சீர்காழிக்கு . வந்துவிடுமாறு அழைத்தார். அவரும் நண்பரின் அழைப்பையேற்றுச் சீர்காழிக்கு வந்து சேர்ந்தார். “பிரித்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ?” என்பது போல, அவ்விருவரும் அங்கு ஒருங்கு ஆற்றிய பணிகள் உயர்வானவையே!
மகா வித்துவான் அவர்கள் அங்கிருந்தபோது, சீர்காழி இறைவன் மீது ”சீர்காழிக் கோவை” என்ற சிறந்த ஒரு நூலைப் பாடினார். அதனை அக்கோயிலிலே கூடிய அவையில் அரங்கேற்றினார். அவ்வரங்கேற்றத்திற்கு நம் வேதநாயகரே தலைமையேற்று, அது சிறப்புற நிகழ்வுறச் செய்ததோடு. அந்நூலைப் போற்றிச் சாற்றுக் கவிகள் பாடினார். மகாவித்துவான் அவர்கள், வேதநாயகர் மீதும் ஒரு கோவை பாடினார். அவரது பிறப்பிடத்தின் பெயரால், அதற்குக் ”குளத்தூர்க் கோவை” எனப் பெயரிட்டார். அகப் பொருள் துறை இலக்கணங்கள் அமைய இயற்றப்பட்ட 438செய்யுட்கள்கொண்ட அந்நூலில், அவர் வேதநாயகரின் விழுமிய புகழை விளம்பியிருக்கிறார்.
பின்னர், மகா வித்துவான் அவர்கள், திருவாவடுதுறை ஆதீனத்திற்கு அருகில் இருக்கக் கருதி மாயூரத்திற்குச் சென்றபோது அவரைப் பிரிய நேர்ந்தமைக்கு வேதநாயகர் வருந்தினார். தனக்கு மாயூரத்திற்கு மாற்றம் கிடைத்த போது மகிழ்ந்தார். அவரோடு உறவாடியும் உரையாடியும் உவகை கொண்டார். 1-2-1876 இல் மகாவித்வான் அவர்கள் காலமானபோது ஆராத் துயரில் ஆழ்ந்தார். அவரது குடும்பத்தாருக்கு தன்னால் இயன்ற வகைகளில் எல்லாம் உதவினார். மாயூரம் துணை ஆணையரிடம் பரிந்துரைத்து, அவரது மகனுக்குக் கணக்கர் வேலை பெற்றுத் தந்தமை அவற்றுள் குறிப்பிடத் தக்கதாகும்.
பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழ்ப் புலவர்களிலே சிறப்பிடம் பெறுபவர், கிறிஸ்தவக் கம்பர் என்று போற்றப் பெறும் ஹென்றி ஆல்பிரட் கிருட்டிணப் பிள்ளையாவார். பாளையங்கோட்டைக் கல்லூரியிலே தமிழாசிரியப் பணியாற்றிய அவர், தாம் யாத்த ”இரட்சணிய யாத்திரிகத்தை” அச்சிட, சென்னை செல்லவிருப்பதை அறிந்த நம் நாயகர், சென்னை செல்லும் வழியில், மாயூரத்தில் தன்னைக் கண்டு, தன்னுடன் சில நாட்கள் தங்க வேண்டும் என்று கோரி அவருக்குக் கடிதம் எழுதினார். வேதநாயகரைப் பற்றிக் கேள்வியுற்றிருந்த கிருட்டினப் பிள்ளையும் அவ்வேண்டுகோளுக்கு இசைந்து மாயூரம் வந்தார். அவரைத் தன் இல்லத்தில் தங்கச் செய்து இனிதாக விருந்தோம்பியதோடு அமையாமல், மாயூரத்திலிருந்த மகாவித்துவான் உள்ளிட்ட தமிழறிஞர் அனைவரையும் ஓர் அவையாகக் கூட்டி அவர்கட்ருக் கிறிஸ்தவக் கம்பரை அறிமுகம் செய்துவைத்து அவர் பாடல்களை அவர் பாடிக் காட்டி விளக்கம் செய்ய வாய்ப்பளித்தார். கிறிதைவக் கம்பரின் கவித்தேனை மாந்திக் களித்தார், மகாவித்துவான் முதலியவர்களுடன் சேர்ந்து கிருட்டினப் பிள்ளைக்குப் புகழாரம் சூட்டினார். இந்நிகழ்ச்சிக்கு முன் ஒருவரை யொருவர் நேரில் பார்த்தறியாத இவ்விருவரும், அதுமுதல் உணர்ச்சி யொத்த நண்பராயினர்.
மாயூரத்தை அடுத்திருந்த திருவாவடுதுறை மடத்துத் தலைவராகிய சுப்பிரமணிய தேசிகர், நந்தனார் சரித்திரக் கீர்த்தனை பாடிய முடிகொண்டான் கோபாலகிருட்டின
பாரதியார், புதுக்கோட்டை மாவட்டத் தலைமை நீதிபதியாயிருந்த, யாழ்ப்பாணம், சி. வை. தாமோதரம் பிள்ளை. புதுவை வித்துவான் சவரிராயலு நாயகர் முதலாக, நம் நாயகரோடு நட்பு பாராட்டி, அவரோடு நேரிலும், கடிதங்கள் மூலமாகவும் தொடர்புகொண்ட நல்லறிஞர், பட்டியல் மிகவும் நீளும். அவர்களெல்லாம் நம் நாயகரைப் பற்றியும், அவர் நூல்களைப் பற்றியும், அவர் தொண்டுகளைப் பற்றியும் பாராட்டி உரைத்த உரைகளும், பாடிய பாடல்களும் ஒரு தனி நூலாகும் தகுதியுடையவை.நிறை வாழ்வு பெறுதல்:
இங்ஙளம் நல்லறிஞர் பலரின் நட்புக்கும், பாராட்டுக்கும் உரிய பண்பாளர், நல்ல நீதியாளர், நற்றமிழ்ப் புலவர், உரைநடை வேந்தர், புதின முதல்வர், பெண்ணினத்திற்குப் பெருமை தந்தவர், உண்மைக் கிறிஸ்தவர் ஆகிய நம் வேதநாயகருக்கும் வாழ்வின் இறுதி நெருங்கியது. மண்ணில் எவர்க்கும் மரணமிலாப் பெருவாழ்வு வாய்க்காதன்றோ? . வேதநாயகர் தம் இறுதிக் காலத்து, ‘மகோதரம்’ (Dropsy) என்ற வீக்க நோயால் வேதனைப்பட்டார். மருத்துவம் பயனளிக்கவில்லை. தனது இறுதிநேரம் நெருங்குவதை உறுதியாக உணர்ந்தார். திருமறை குருக்களைத் தன் இல்லத்திற்கு அழைத்து, இறுதித் திருவருட் சாதனங்களைப் பெற்றார். தனது நல்ல நண்பர்களுக்கும் தனக்கு உதவியவர்களுக்கும் உரிய வகையில் நன்றி தெரிவித்துக் கடிதங்கள் எழுதி அவர்களிடமிருந்து விடை பெற்றார். 1889 ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் 21 ஆம் நாள் இரவு 11 மணிக்கு மண்ணுலகை நீத்து விண்ணுல எய்தினார். அவரது ஆன்மா இறைவனோடு நிறை வாழ்வு வாழ்வதாக!
நன்றி: வேதநாயகம் பிள்ளை நினைவுக் குழு