புதியதோர் உலகு செய்வோம்/அவலங்களுக்கு அடிப்படை

விக்கிமூலம் இலிருந்து

20.அவலங்களுக்கு அடிப்படை


இன்று நாட்டில் நாள்தோறும் நிகழும் பஸ், கார், லாரி மோதல் விபத்துகள், கொலைகள், தற்கொலைகள் ஆகியவற்றுக்கான மூலகாரணம் பெரும்பாலும் 'குடி'தான். மக்கள் வாழும் தெருக்கள், கோயில்கள், பள்ளிகள் என்ற விதிவிலக்கில்லாமல் மதுக்கடைகளும் வியாபாரமும் சமுதாய நலனைச் சூறையாடி வருகின்றன. நம்நாட்டு விடுதலைப் போராட்ட இயக்கத்தின் உயிர்நாடியாகச் செயல்பட்ட மதுவிலக்குக்கான மறியல் போராட்டங்களில் ஆண்கள் மட்டுமின்றி அடுக்களைகளில் இருந்த பெண்களும் இடுப்புக் குழந்தை, வயிற்றுக் குழந்தையுடன் ஓடிவந்து மறியல் போராட்டங்களில் பங்கேற்று, காவல்துறையினரின் இம்சைகளை ஏற்றுச் சிறை புகுந்தனர். அந்தப் பரம்பரை இன்று இல்லவே இல்லை.

உலகில் மனித சமுதாயம் நாகரிக மலர்ச்சியில் அடி வைக்கத் தொடங்கியிலிருந்து இன்று வரையிலும் தோன்றியுள்ள பல்வேறு சமயச் சான்றோரும் ‘மது’ விலக்கத்தக்கதென்றே உரைத்திருக்கின்றனர். அறிவை மயக்கி மனிதனை இழிவுக்குக் கொண்டுசெல்லும் என்பதை எல்லோருமே உணர்ந்திருக்கின்றனர்.

உடல் உழைப்பு, உழைப்பின் பயன் கண்டு மகிழ்ந்து பகிர்ந்துண்ணல், களித்தல் என்ற சீர்மையுடன் வாழ்ந்த மண்ணின் மைந்தர்களை, உலகெங்கும் கால் வைத்த (வெள்ளைக்) காலனியாதிக்கம் அடிமைகளாக மாற்றியது. வெள்ளையர்களுக்காகக் காடு மேடு திருத்தி, தேயிலைத் தோட்டங்களாகவும் காபித் தோட்டங்களாகவும் பயன் காண உழைக்க, கபடமில்லா மக்களின் தன்மானங்களைக் கொல்ல மதுவே கை கொடுத்தது.

நீலகிரி வாழ் தொல் குடிமக்களிடையே மதுப்பழக்கம் பரவலாக உண்டு. நான் இதைப் பற்றி நீலகிரியில் சில பெரியோரிடம் கேட்டதுண்டு. அதற்கு அவர்கள் 'எங்கள் மலையில்,தென்னை, பனை இல்லை. கரும்பும் இல்லை. கள், சாராயம் எல்லாம் கீழிருந்து வந்தவை. வெள்ளைக்காரர் வந்த பின்னரே, சாராயம், குடி எல்லாம் வந்தது’ என்றார்கள்.

கோவா சுதந்தரப் போராட்டத்தைப் பற்றிய ஒரு நூலில் உலகிலேயே மிக அதிகமாகக் குடிப்பழகம் உடையது கோவா பிரதேசம் என்ற கருத்துக்கு, நமது ராஜாஜியின் உரைகளிலிருந்து சான்று காட்டப்பட்டிருந்தது. உலகில் மிக அதிகமாக உல்லாசம்,கேளிக்கை என்று மதுபானம் ஓடும் ஃபிரான்ஸ் நாட்டின் சராசரி மூன்று லிட்டர் குடிக்கிறார்கள். கோவாவிலோ ஐந்து லிட்டர் என்று புள்ளி விவரம் தரப்பட்டிருந்தது. மக்களை எழுச்சியற்றவர்களாகச் செய்ய, அடிமைகளாகவே வைத்திருப்பதற்கு 'குடி'யே சிறந்த சாதனமாகப் பயன்படுத்தப்படுகிறது.

மதுவினால் பெருமளவுக்குப் பாதிக்கப்படும் சமுதாயம், அடித்தட்டு உழைப்பாளர் சமுதாயமே. பெரும்பாலான உழைப்பாளர் வேண்டுமென்று குடிப்பதில்லை. சுமை தூக்கும் பார வேலை செய்பவர், துப்புரவுத் தொழிலாளர், சலவை -இஸ்திரித் தொழில் செய்பவர், மீன் பிடித் தொழிலாளர், கட்டடத் தொழிலாளர், பழைய கட்டடங்களை இடிப்பவர்கள் ஆகியோரின் உடல் உழைப்பு சாதாரண மக்களால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாதது. அடித்தள சமுதாயத்தில் உழைப்புக்கேற்ற அதிகக் கலோரிகள் உள்ள ஊட்ட உணவு கிடைக்காத நிலையில் உழைப்பு மட்டும் கூடுதலாகி இருக்கிறது.

நகர்ப்புறங்களில் இந்நாள் இன்றியமையாததாகிவிட்ட சலவை இஸ்திரித்தொழில் ஓர் எடுத்துக்காட்டு. காலை ஏழரை அல்லது எட்டு மணிக்கு நின்று கொண்டு தேய்க்கத் தொடங்கினால் இரவு எட்டு மணி வரையிலும் இவர் வேலை செய்கிறார். இவர் மனைவியோ, சகோதரியோ, மகளோ துணிகளை வாங்கிக் கொண்டு கொடுத்து ஊழியம் செய்ய வேண்டும். இந்தத் தேய்ப்புத் தொழிலுக்கு ஒரு நாளைக்கு நூறு ரூபாய் பெற்றால் அதிகம். அதில் முப்பது விழுக்காட்டை 'கரி'யே சாப்பிட்டுவிடும். துணியைப் பொறுத்து வேலை என்பதால், மதிய உணவு நேரம், இடைவேளை என்பதெல்லாம் கிடையாது. அநேகமாக இரவில் மட்டும் தான் செலவு சாமான் வாங்கிச் சமையல் நடக்கும். முப்பது விழுக்காடு போனபின் எஞ்சிய வருமானத்தில்தான் அன்றாட உணவு, உறையுள், வாடகை, குடும்பச் செலவு, நல்லது, பொல்லாதது, திடீர் விருந்து, கல்யாணம், கருமாதி எல்லாம் அடங்க வேண்டும். வார வட்டிக்காரர் எதற்கு இருக்கிறார்? இருக்கும் காசுக்கேற்ப சாமான் வாங்கி இரவில் சமைக்கும் மனைவி, பகலுக்கு தெருவோரக் கடைகளில் இருந்து லெமன் சோறு அல்லது இட்லி வாங்கி வந்து உணவை ஒப்பேற்றி விடுவார். மாலையில் உணவுக்கு முன் தொழிலாளி நிச்சயமாகக் குடிக்க வேண்டும். வயிற்றுப் புண் ஆளை நிற்கவே வலுவில்லாமல் செய்வதுமட்டுமல்ல; வலியால் துடிதுடிக்க வைக்கும். வட்டிக் கடைக்கு மனைவியின் தாலி முதலில் போகும்.மருந்து மாத்திரை என்று இரண்டு மூன்று நாட்கள் தள்ளுவார்கள். பிறகு பழைய குருடிதான்.

இத்தகைய உழைப்பாளர்கள் குடும்பங்களில் நம்பிக்கைத் துரோகங்கள், அடிதடி, மோதல்கள், கொலைகள், தற்கொலைகள், குழந்தைத் தொழிலாளர் அவலங்கள் ஆகிய அனைத்துப் பரிதாபங்களுக்கும் அடிப்படை வறுமை, வறுமை, வறுமையே. இவர்களுடைய வருமானத்துக்கும், அடிப்படை வாழ்வாதாரங்களுக்கான விலைக்கும் சம்பந்தமே இல்லை. வறுமை குழிபறித்திருக்கும் இந்தப் பள்ளத்தைப் பல்வேறு நுகர்பொருள் ஆசைகள் வேறு மேலும் அகழ்ந்து மக்களைச் சின்ன பின்ன மாக்குகின்றன. இந்த இயலாத நிராசை நனவுலகை மறக்க, விஷச்சாராயத்தையும் அருந்துகிறார்கள். திருமணம், சாவு, கோயில் விழா போன்ற எல்லா நிகழ்ச்சிகளிலும் அழிவுக் கான சாராயக் கலாசாரம் தீவிரமாகப் பரவி வந்திருக்கிறது.

சின்னத்திரை, சினிமாக்களில், காக்கிச்சட்டை காவல் துறையே மதுவருந்துவதும், கற்பழிப்பதுமான செயல்களில் ஈடுபடுவது காட்டப்படுகிறது. குடிக்கும் காட்சிகள் இல்லாத தொடரோ கதையோ இல்லை. மக்களுக்குச் சேவை புரியும் தொழில் துறையினரை மோசமாகச் சித்திரிக்கும் காட்சிகள் எப்படி அனுமதிக்கப்படுகிறதோ தெரியவில்லை.

உழைப்பாளர் சமுதாயத்தை மதுக்கொடுமையில் இருந்து மீட்பதில்தான் நாளைய இந்தியாவின் நம்பிக்கையான எதிர்காலம் இருக்கிறது. மதுக்கொடுமையில் இருந்து அவர்களை மீட்க வேண்டுமானால் அவர்களுக்கேற்ற ஊட்டஉணவும் அடிப்படை வாழ்வாதாரங்களும் முதலில் கிடைப்பதற்கு உத்தரவாதம் வேண்டும். உடலுழைப்பு, உண்மையாக மதிப்புப் பெற வேண்டும்.

ஏறக்குறைய அறுபது ஆண்டுகளுக்கு முன் மறைந்த டாக்டர் ரங்காச்சாரியிடம் ஓர் ஏழை ரிக்ஷா ஓட்டி தாங்காத வயிற்றுவலியுடன் வந்தான். குடித்துவிட்டு ரிக்ஷா இழுப்பதாலும் ஏற்ற உணவு இல்லாததாலும் குடல் புண்ணாகி இருந்தது கண்டு, அவர் சிகிச்சை செய்தார். புண் ஆறி வீடு செல்லுமுன் அவனிடம் அவர், “இனி மேல் குடிக்கக்கூடாது; மூன்று மாதங்கள் ரிக்ஷா இழுக்கவும் கூடாது" என்றாராம். “அதெப்படி? ரிக்ஷா இழுக்காமல் பிழைப்பு எப்படி நடக்கும்?” என்று அவன் புலம்பினானாம். டாக்டர் அவன் மனைவியை அழைத்து அவனுக்கு என்ன உணவு, எப்படிக் கொடுக்க வேண்டும் என்று சொன்னதுடன் அவன் ரிக்ஷா இழுக்காமல் இருக்கப் பொருளுதவியும் செய்தாராம்.

இதை ஒருநாள் தற்செயலாகக் கண்ணுற்ற அந்நாளைய பிரபல வழக்கறிஞர் கே.எஸ்.ராமசுவாமி சாஸ்திரி "யமன் உயிரைத்தான் கவருவான். நீயோ உயிருடன் பொருளையும் கவர்ந்து செல்கிறாய்” என்று சுலோகத்தைச் சொல்லி, “நீர் உயிரைக் காப்பாற்றிக் கொடுத்து, பொருளையும் கொடுக்கிறீரே” என்று உருகினாராம்.

சேவைத் தொழில்கள் இந்நாளில் வெறும் வணிகத் தொழில்கள்!


‘தினமணி’,
3.8.2002