புதியதோர் உலகு செய்வோம்/மெய்ப்படாத முப்பது சதவிகிதம்!

விக்கிமூலம் இலிருந்து

21. மெய்ப்படாத
முப்பது சதவிகிதம்!


ஐந்து மாநிலங்களில் பெண்ணரசு ஏற்பட்டதைக் குறிப்பாக்கி, வியத்தகு முன்னேற்றம் என்று, எல்லாப் பத்திரிகைகளும் கருத்துரைத்திருக்கின்றன. ஆனால் ஜனநாயக ஆட்சியில் பிரதிநிதித்துவம் பெற வேண்டும் என்று முப்பது சதவிகிதம் ஒதுக்கீடு கேட்டுப் போராடிய இலட்சியத்துக்கு இது ஒருவகை வெற்றியா? உண்மையாகவே பெண்குலம் பெருமைப்படக்கூடிய முன்னேற்றம்தானா? எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஒரு நிறை. எல்லோரும் ஓர் விலை, எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்று மும்முறை அடித்து முழங்கிய அமரகவியின் வாக்கு மெய்ப்பட்டிருக்கிறதா? பெண்களும் ஆண்களும், வயது வந்தோர் அனைவரும் வாக்குரிமை பெற்று, தங்கள் அரசைத் தாமே தீர்மானித்துக் கொள்ளும் பிரதிநிதித்துவம் பெற்றிருப்பதன் விளக்கமா, ஐந்து மாநிலப் பெண்ணரசுகள்?

இந்திய ஜனநாயகத்தின் முதல் பெண் பிரதமராக, இந்திரா காந்தி பதவியேற்றபோது, உலகமே வியந்தது. நாமும் மகத்தான சாதனை என்று பெருமை அடைகிறோம்.

அவர் பதவிக்கு வருவதற்கு நேரு குடும்பம், பிரதமராக இருந்தவரின் மகள் என்ற பின்னணியே பெரிதும் வலுவாக இருந்தது. இதை மறுக்க முடியாது. இந்தியாவின் வாக்குரிமை பெற்ற மக்கள் அனைவரும் ஏறக்குறைய வேனும் ஒரே தரத்தில், அரசியலுணர்வு பெற்றவர்களாகச் செயல்படும்போதுதான் ஜனநாயகப் பிரதிநிதித்துவம் உண்மையாக மலரமுடியும். ஆனால், சுதந்திரம் பெற்று, நாம் குடியாட்சி உரிமையைப் பெற்றபோது, எழுத்தறியாமையும், வறுமையும் மூடநம்பிக்கைகளும் மிகுந்த மக்களை, சிறந்த வாக்காளராக முன்னேற்றுவதற்கான எந்த ஒரு திட்டமும் கூர்மையாகச் செயல்படுத்தப்பட்டிருக்கவில்லை. இந்த ஐம்பத்தாறு ஆண்டுகளில், பல தேர்தல்களையும் கட்சி அரசியல்களையும் கண்டிருக்கும் மூன்று தலைமுறை வாக்காளர்கள், இன்னமும் ஜனநாயக ஆட்சி பற்றியோ, உரிமை பற்றியோ, பொறுப்பு பற்றியோ உணராதவர்களாகவே இருக்கின்றனர்.

மக்கள் தொகையில் சரிபாதி பெண்களாக இருந்தபோதும், சட்டசபைகளில் நாடாளுமன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் பத்து சதவிகிதம்கூட இல்லாத நிலைதான். எனவே ஒதுக்கீடு தேவை என்று எல்லாக் கட்சிகளிலும் பெண்கள் வலியுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில், பெண்கள் தங்களுக்குரிய மனித மதிப்புகளைக் கோருவதே ஆண்களுக்கு எதிரான கோஷம் என்று கருதப்படுகிறது. இலக்கியம் போன்ற தளங்களில் பெண்ணினம் என்று ஒதுக்கப்படுகிறது.

'ஜனநாயகம்’ என்ற இலக்கை வைத்து நாம் ஆய்வு செய்யும்போது, இந்தியாவின் முதல் பெண் பிரதமர், அப்படிப் பதவிக்கு வரவில்லை. செல்வாக்குப் பெற்ற அரசியல் கட்சி, அக்கட்சித் தலைமையின் செல்வாக்கு இரண்டுமே தலைமைப்பதவியை நிர்ணயிக்கின்றன. இந்திரா காந்தியைப் போல் அல்லது அவரிலும் சிறந்த அனுபவம் பெற்ற பெண்மணிகள் அப்போது இல்லாமல் இல்லை. அவர்கள் சார்ந்த கட்சி, பின்னணி இரண்டும் மட்டுமே பெண்களின் பதவிகளைத் தீர்மானிக்கின்றன. இந்த ஐம்பத்தாறு ஆண்டுகளில் ஜனநாயகத்தின் மிகச் சிறந்த பண்புகளையும் பொறுப்புகளையும் உணர, சாதாரண மக்களுக்கு வாய்ப்புகள் இல்லை. எனினும் மக்கள் தலைமையைத் தேர்ந்தெடுப்பதிலோ நிராகரிப்பதிலோ அந்நாளைவிட, இப்போது அதிக அனுபவம் பெற்றிருக்கிறார்கள். ஜனநாயகம் என்ற அமைப்பை அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ள கொள்கைகள், சட்டவிதிகள், ஆட்சியியல் நுணுக்கங்கள் எல்லாவற்றிலும் புகுந்து விளையாடுகிறார்கள்.

முதன்முதலில், நேரு ஆட்சிக்காலத்தில் ஜனநாயக முறையில் கேரளத்தில் இடதுசாரிக் கட்சி ஆட்சியைப் பிடித்தது. ஜனநாயகவாதி என்று உலகம் புகழ்ந்த நேரு, அந்த ஆட்சியைக் கலைக்க, மகளைக் காங்கிரஸ் தலைமைப் பதவியை ஏற்கச் செய்தார். அந்த ஆட்சி கலைக்கப்பட்டது.

பின்னாளில் மகளும் தன் பதவிக்கு இடையூறு வந்ததும், நெருக்கடி நிலையைப் பிரகடனம் செய்தார். தடங்கல்களாக இருந்த சான்றோரைச் சிறைக்குள் தள்ளவும் அவர் தயங்கவில்லை. நீதி நிர்வாகத்துறையே வளைந்தது. ஜனநாயகத் துரண்கள் வளைந்து கொடுக்க, அவர் பதவி நீடிப்புக் கறுப்புத் துணியைக் கட்டிக் கொண்டார். அந்தப் பேராயக் கட்சியே அவர் காலத்தில் தான் உடைந்தது. தனிப்பட்ட முறையில் மிகுந்த திறமையும் வீரமும் செயலாற்றலும் கொண்ட பெண்மணியாக இருந்தும், ஜனநாயக நோக்கில் அவர் மிகச் சிறந்த ஆட்சி தந்தவராக விளங்கவில்லை.

நேர்மைப் பின்புலத்தில் எந்த ஆண் அரசியல்வாதியுமே உறுதியாக நிற்க முடியாமல் குடியாட்சிக்களம் புரையோடிவிட்டநிலையில் காலம் காலமாகப் பின்தள்ளப்பட்ட பெண் எப்படி வேறுபடுவாள்?

எல்லா அரசியல் கட்சிகளிலும் பெண்கள் அணிகள் இயங்குகின்றன. பதவியைப் பிடிப்பதைத் தவிர வேறு எந்தக் கொள்கையுமே இல்லாத அரசியல் கட்சிகளின் பெண்கள் அணிகள், அவர்கள் சார்ந்த கட்சித்தலைவர் வெற்றி பெற வாக்காளரை வாக்குப்படுத்துவதற்காகவே இயங்குகின்றன. பெண்களுக்கே உரிய, பெண் கல்வி, வேலைவாய்ப்பு சம வேலை, சம கூலி போன்ற கோரிக்கைகளும், பிற்பட்ட வர்களுக்கான ஒதுக்கீட்டுக் கோரிக்கைகளும் எல்லா அரசியல் கட்சிகளும் தூக்கிப்பிடிக்கும் அட்டைகள். இங்கே சம்பந்தப்பட்ட வாக்காளருக்குத் தனிப்பட்ட சிந்தனையோ, அரசியல் அறிவோ தேவையில்லை! ஒரு வகையில் அந்த முதிர்ச்சி வழிதவறிப்போகும் அபாயங்களாகலாம்!

தகுதி பெற்று, அவர்கள் அரசியல் பதவிகளுக்கு வருவதென்பதோ அலை ஓய்ந்து கடல் நீராட்டுக்குக் காத்திருக்கும் கதைதான். எனவே, தள்ளிவிட்டால் நீச்சல் அடிக்க முக்குளித்துப் போராடுவார்கள்: அல்லது முழுகிப் போகலாம். இப்படித்தான், பஞ்சாயத்து ஆட்சிகளில் பெண்கள் வந்திருக்கிறார்கள். கையெழுத்துப் போடத் தெரியாத பெண்களும்கூடச் சிலுவை சுமந்து போராடும் கதைகள் வருகின்றன. இதனால் பெண்களின் திறமைகளும் போராட்டங்களும் அம்பலத்துக்கு வருகின்றன. இது ஒருவகை முன்னேற்றமே.

கணவன் குற்றவாளி என்று தீர்மானிக்கப்பட்டால், மனைவியே அந்த அரசை ஏற்று நடத்தும் 'ஜனநாயகமாக'த் திகழச் செய்கின்றனர். எந்தச் சவாலையும் சமாளிக்க, குடியாட்சி உரிமைகளிலும் புகுந்து விளையாட முடியும் என்ற திறமைகளில் ஆணுக்குப் பெண் நிகர் மட்டுமில்லை; மேலாகவும் திகழ முடியும் என்று நிரூபித்து வருகின்றனர். எல்லா மாநிலப் பெண் முதலமைச்சர்களும் இந்த வகையில் வெற்றி பெற்று இருக்கின்றனர். இப்படியும் இந்தியக்குடியாட்சி இயங்கி ஏதோ ஒருவகையில் முன்னேறி வருகிறது.

ஆனால், உண்மையான ஜனநாயகத்தில் முப்பது சதவிகிதம் பெண்களுக்கான ஒதுக்கீடு என்ற இலட்சியம் மெய்ப்படவில்லை. சொல்லப் போனால், பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்த பெண்களுக்கிடையே கூட, அந்த ஒதுக்கீடு பற்றிய தெளிந்த ஒருமித்த சிந்தனை இல்லை என்பதே வெளிப்படை


‘தினமணி',
15.01.2004