புதியதோர் உலகு செய்வோம்/நிறைவேறுமா ஒதுக்கீட்டு உத்தரவாதம்?

விக்கிமூலம் இலிருந்து



22. நிறைவேறுமா ஒதுக்கீட்டு
உத்தரவாதம்?


மகளிருக்கு ஆட்சி உரிமை வேண்டும்; நாடாளுமன்றத்தில் மூன்றில் ஒரு பங்கு பிரதிநிதித்துவம் பெற ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கை, ஒவ்வோர் ஆட்சி மலரும் போதும் ஒலிக்கிறது. உண்மையான ஜனநாயகம் என்பது, மக்களுக்காக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட ஆட்சி அமைப்பிலே ஏற்படுவதாகும். இதையே அமரகவி பாரதி, 'எல்லோரும் இந்நாட்டு மன்னர்' என்ற குறிப்பில் உணர்த்தியிருக்கிறார். ‘அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும்' என்ற அடிப்படை உண்மையை, ஆன்மிகவாதிகளும், இன்றைய அறிவியலாரும் ஒப்புகின்றனர். மக்களுக்காக, மக்களே ஆட்சி நடத்துவதாகிய ஜனநாயகமும் இக்கருத்தையே அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. இச்சமுதாயக் கட்டமைப்பு, தேசிய நோக்கில், பல்வேறு இன, மத, மொழி, சாதி வேறுபாடுகளைக் கொண்டதாகும். இத்துணை வேறுபாடுகளையும் கடந்த இந்தியத்தன்மை என்ற உணர்வுதான் ஒவ்வொரு மனிதரையும் பிணைத்திருக்கிறது. கூர்ந்து நோக்கினால், ஒவ்வொரு தனி மனிதரும், ஊடும்பாவும் போல் இணைக்கப்பட்டிருக்கவில்லை. ஆனால் இந்திய தேசிய மக்கள் குரோஷே என்ற கொக்கி ஊசியினால் சங்கிலிப் பின்னல்களால் இணைக்கப்பட்ட அற்புத மாதிரிகள் போல் இந்திய சமுதாயக் கட்டமைப்பு அமைகிறது. ஒவ்வொரு சங்கிலிப்பின்னலும் ஒரு குடும்பம் எனலாம்.

ஜனநாயக ஆட்சியின் ஒரு சின்னஞ்சிறு உயிர்க் கருவாகவே குடும்ப அமைப்பு திகழவேண்டும். எந்தச் சாதி, சமயம், ஆதிவாசி ஆனாலும் எல்லாச் சமுதாயங்களிலும் குடும்பமாகிய உயிர்க் கருவே சமுதாய மேன்மையை அல்லது இழிவை நிர்ணயிக்கிறது. குடும்ப அமைப்பில் இரு சக்திகள் இயங்குகின்றன. இந்தச் சக்திகளே, ஆண், பெண் என்ற இரு பாலருக்குரியதாக, ஒன்றுக்கொன்று ஏற்றவையாக இணைந்து, உடல்-மன ரீதியாக முழுமையில் மலருகின்றன. இந்த அமைப்பில் தோன்றும் சந்ததி, சமுதாயத்தின், நாட்டின், உலகின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் நாற்றுகளாகின்றன. இந்தக் குடும்ப சக்தியே சமுதாய மாற்றத்துக்கு உந்து சக்தி எனலாம். குடும்ப அமைப்பில் ஆண்-பெண் இரு உறுப்பினரும் முழு உரிமைபெற்றவர்களாய், விட்டுக் கொடுத்தல், அன்பு செலுத்தல், அவரவர் இயல்புக்கேற்ப சுயநலமின்றி தங்கள் உழைப்பை ஈந்து, சந்ததியின் மேன்மைக்காக வாழ்தலே இலட்சியமாக வேண்டும். ஆனால், மனிதகுல வரலாற்றை ஆய்ந்து பார்க்கும்போது, பெண்ணின் ஆற்றல் உடல்பரமாக, போகப் பொருளாக மட்டும் முடக்கப்பட்டு, ஆணின் உடமையாகவே இயங்குவது தெளிவாகத் துலங்குகிறது. சோதிடக்காரனின் சிறகொடிக்கப்பட்ட கிளியாய், அவனுக்குச் சீட்டு எடுத்துக் கொடுத்து விட்டு, நெல்மணியை வாங்கிக் கொண்டு கூண்டுக்குள் செல்லும் மனப்பாங்கிலேயே குடும்பத்தில் பெண் இயங்குகிறாள். ஆணும் பெண்ணும் ஒரு முழுமையின் சரிபாதியல்ல. சில கூறுகளில் அவனும் சில கூறுகளில் அவளும் முனைப்பாகச் செயல்பட இயற்கை உடற்கூறியலை அமைத்திருக்கிறது. எனினும் இயற்கையில் ஓர் ஆணைவிடப் பெண்ணே ஆற்றல் மிக்கவளாக இருக்கிறாள். இந்த உண்மை, இந்நாள் எல்லாத் துறைகளிலும் பெண்கள் தங்கள் ஆற்றலை நிரூபித்திருப்பதில் துலங்குகிறது.

இதனாலேயே, பெண்ணை உடல்பரமான நுகர் பொருள் கலாசாரத்தில் அழுத்துவதற்கான முயற்சிகள் ஒருபுறம் மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன. மக்கள் தொடர்பு சாதனங்கள் அவளை முதலாக்கியே வாணிபம் செய்கின்றன. இந்தியத்துவம், பண்பாடு என்ற பெயரில், அவள் சிந்தனைகளை முடமாக்கும் புறவயமான மங்கல அணிகளை அவள்மீது பதிக்கின்றன. உண்மையில் பண்பாடு என்பதற்கும் ஆணின் ஒழுக்கத்துக்கும் தொடர்பில்லையா? ஒரு குடும்ப அமைப்பில் முதல்வியாகிய பெண்ணின் நிலை யாது? ஆணின் ஒட்டுமொத்த ஆதிக்க சிந்தனைகளிலிருந்து சமூகம் விடுதலை பெற்றிருக்கிறதா? ஓர் ஆண் வீட்டு வேலையைப் பகிர்ந்து கொள்வது, மனைவியின் சேலையைத் துவைப்பது பத்திரிகைத் துறைகளுக்கு நகைச்சுவை!

இன்றைய குடும்ப அமைப்புகளில், பொருளாதார உற்பத்தியில் பெண் பெரும் பங்கேற்றிருக்கிறாள்.தாயாகும் தன்மை இயற்கை கொடுத்ததாகும். ஆனால் அதைத் தீர்மானிக்கும் குறைந்தபட்ச உரிமையும்கூட அவளுக்கு இல்லை; அவனுக்கு இருக்கிறது. எந்தப் பெண்ணையும் எவனும் குலைக்கலாம். கருவழிப்புகள், தொட்டில் குழந்தைகள், அங்கும் இங்கும் தாய்மாரால் விடப்படும் சிசுக்கள், தற்கொலைகள், கொலைகள் எல்லாம், ஆணாதிக்க சமுதாய அவலங்களை அன்றாடம் பிரதிபலிக்கின்றன. இன்றைய லட்சுமிகளையும், சரஸ்வதி களையும் மனமார ஏற்று நேசித்துத் துணைகளாக ஏற்றுக் கொள்ளும் இளைஞர் இல்லாதது, வருந்தத்தக்க உண்மை. ‘நீ மலையில் வளர்ந்தாலும் உரலில் மசிய வேண்டும்’ என்பதுதான் ஆணின், அல்லது அவளை வளர்த்த அடிமைத் தாயின் சித்தாந்தம். சட்டியில் இல்லாத உரிமை, அகப்பையில் எங்கிருந்து வரும்?

சகல உரிமைகளும் உண்டு என்று ஜனநாயகத் தன்மையைப் பறையடிக்கும் அமெரிக்கநாட்டிலும்கூட, கருக்கலைப்பு உரிமைக்குப் பெண் போராடுகிறாள்.இங்கே எந்த ஒரு குடும்பத்திலும் இந்நாள் ஜனநாயகத்துக்கான கரு இல்லை. வறுமைக்கோட்டுக்குக் கீழ் உரிமை என்றால் என்னவென்று தெரியாத உழைப்பாளிப் பெண் ஆணின் மேலாதிக்கத்தால் அன்றாடம் செத்துப் பிழைக்கிறாள். தாலி, வேலி போன்ற ஓராயிரம் பண்பாட்டுப் பாரங்களை, உயிரைக் கொடுத்துக் காப்பாற்றி ஆண் அக்கிரமங்களை மேலும் வலிமைப்படுத்துகிறாள்; மடிகிறாள். இங்கே நிகழும் பெண் கொலைகளை, சாவுகளை மாற்ற எந்த அரசியல் கட்சியேனும் முயற்சி செய்திருக்கிறதா? அன்றைய காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் மதுவிலக்கை நெறிப்படுத்தி இருந்தது.ஆனாலும் வறுமை ஒழிப்புத் திட்டங்கள் என்று வகுக்கப்பட்ட ஐந்தாண்டுத் திட்டங்களின் ஆதாயங்கள், செல்வம் படைத்தவர் மேலும் நிதியைச் சேர்த்துக் கொள்ளவே ஒழுகிப் போயின. வெற்றி என்று ‘புள்ளி விவரங்கள்' காட்டப்படலாம். அந்த வெற்றி, சமுதாயத்தில் கானும் மேம்பாட்டில் பிரதிபலிக்க வேண்டும். மேம்பாடு பொருளியல் சார்ந்தது மட்டுமில்லை.

ஐந்தாண்டுத் திட்ட காலங்களில், கிராமங்களில் இருந்து பெருவாரியாக மக்கள் நகரங்களை நோக்கிப் பெயர்ந்தார்கள். பெண், நகரத்து நடைபாதைகளில், ஒதுங்க இடமில்லாமல் சீரழிந்தாள்; சீரழிக்கப்பட்டாள். மதுபானம் தங்குதடையின்றி திறந்துவிடப்பட்டது. ஆண் போதையில் அழிய, அழிக்க, பெண்ணே கருவியானாள். இந்த மாயக் கொள்ளையின் பலனாக இன்று வளர்ச்சி பெற்ற, அறிவுபெற்ற லட்சுமி - சரசுவதிகளால் சுயநலங்கள் மட்டுமே வளர்க்கப்படுகின்றன. தங்கள் சொந்த இனம், சகோதரிகள் அழிவதைத் தடுக்க முடியவில்லை. ஏனெனில் இவர்களே ஆணாதிக்க ஒழுக்க விலங்குகளைப் பூண்டிருக்கிறார்கள். இணங்க மறுத்தால், மணவிலக்குப் பெற்றவள், ஒழுங்கீனமானவள், திருமணமாகாதவள் என்ற பட்டங்களோடு சொந்த இனத்தாராலேயே அன்னியப் படுத்தப்படுகிறாள்.

‘பாரத மாதாவின் கைவிலங்கை ஒடிப்போம், வாருங்கள்!” என்று அறைகூவி வெகுண்டெழுந்த வீரர்களும் வீராங்கனைகளும் இன்று இல்லை.

இன்று பாரதமாதாவின் அருமைச் செல்வியர் பலர், சுயநலம் கோரும் லஞ்ச வஞ்சகப் புதல்வர்களைப் பெற்று வளர்த்த, வளர்க்கும் தாய்மாராக மாறிப் போயிருக்கிறார்கள்.

உண்மையான மக்களரசின் பிரதிநிதிகளாக, மகளிரை ஏற்க ஒதுக்கீட்டு உத்தரவாதம் நிறைவேறுமா?


‘தினமணி’, 4.6.2004