புதியதோர் உலகு செய்வோம்/புதியதோர் உலகு செய்வோம்!

விக்கிமூலம் இலிருந்து
27. புதியதோர் உலகு செய்வோம்
1

சுதந்தரம் பெற்று ஐம்பதாவது ஆண்டை நாம் ஆறாண்டுகட்கு முன் சிறப்பாகக் கொண்டாடினோம். ஐம்பது ஆண்டுகள் என்பது இரண்டு தலைமுறைக்காலம். 1947-க்கு முன்பு நாம் எப்படி இருந்தோம், அன்று நாம் முன்னேற்றமே காணமுடியாமல் இருந்த தடைகள் இன்று போயிருக்கின்றனவா? என்று பார்க்கலாம். நாம் அரசியல் சுதந்தரம் பெற வேண்டும்; பாரத நாட்டை பிரிட்டிஷார் ஆங்கிலேயர் ஆள்கின்றார்கள் என்ற நிலைமை மாற வேண்டும் என்று அந்நாளில் காந்தியடிகள் அறப்போரைத் துவங்கினார். இந்தியாவில் உள்ள கிராமங்களின் உயிர் நாடியை உணர்ந்தவர் காந்தியடிகள். அந்நாளைய ஏழைமையை இப்போது நினைத்துப் பார்க்கலாம். ஒரு குடிலில் இரண்டு பெண்கள் வாழ்கிறார்கள். அண்ணலைப் பார்க்க, ஒரு பெண்மணி மட்டுமே பழைய சேலை ஒன்றினால் உடலை மறைத்துக் கொண்டு, தலையில் போட்ட மரியாதை முக்காட்டுடன் வந்து கும்பிடுகிறாள். இவள் உள்ளே சென்றபின், மகள் அதே சேலையை அணிந்து அண்ணலைப் பார்க்க வருகிறாள். இப்படி ஒரு வறுமை.

அடிகள் உடனே புரிந்து கொண்டு மனமுருகினார். நகரங்களில் விதேசித்துணிகளும் பட்டுப் பட்டாடைகளுமாக, குதிரை வண்டிகளில் போகலாம். அங்கே ஆங்கிலேயருக்குச் சமமாக உணவருந்துபவர் இருக்கலாம். ஆனால் அந்த நகரத்து முன்னேற்றங்கள் இந்த நாட்டை முன்னே கொண்டு செல்லுமா?

அரசியல் விடுதலை என்பது, இந்தக் கோடானு கோடிக் கிராமங்களுக்கு வந்துவிட்ட விடுதலையாக இருக்க வேண்டும். இந்தக் கிராமங்களின் வறுமை தொலைய வேண்டும் என்ற இலட்சியத்தையே அவர் பற்றினார். நமது அமரகவி பாரதி இதை எவ்வளவு தெளிவாகத் தன் பாட்டிலே கொண்டுவருகிறார்? 1908-ம் ஆண்டு மார்ச் மாதம் 8-ந் தேதி வாக்கில் அந்நாளைய தீவிரப் போராட்ட வீரர் விபினசந்திரபாலர் சிறை வாசம் முடித்து வெளிவருகிறார். அவர் வெளிவந்த நாளை நாடுமுழுவதும் விடுதலை நாளாகக் கொண்டாடுவதென்று தீவிரப் போராட்டவாதிகள் தீர்மானம் செய்கிறார்கள். இதில் முன்னே நிற்பவர், நம் அமரகவி பாரதி.

ஓ, விடுதலை அடைந்து விட்டால் நாம் எப்படி இருப்போம்?

விடுதலை என்பது யாருக்கு? யார் அதன் பயனை அடைய வேண்டும்?

சமுதாயத்தில் கெளரவத்தில் கடை கோடியாக இருப்பவர்கள். ஆனால் அவர்களில்லாமல், நாம் - இந்த சமுதாயம் முழுவதும் உயிர் வாழ முடியாது.

கிராமங்களில், மண்ணின் மைந்தர்களாகப் பயிர்த் தொழிலில் ஈடுபட்ட ஆண் பெண்களே அவர்கள். விடுதலையடைந்ததும் அவர்கள் எப்படி மகிழ்வார்கள்?

இதையே அன்று, ஆடுவோமே பள்ளுபாடுவோமே - ‘ஆனந்த சுதந்தரம் அடைந்து விட்டோமென்று’ என்று துவங்கிப் பாடினார் அமரகவி பாரதி. உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம். வெறுமே உழைப்பில்லாமல் உண்பதும் களிப்பதுமான வாழ்க்கையைக் கண்டனம் செய்வோம். இனிமேல் நம் உழைப்பை அந்நியர் கொண்டு செல்ல விடமாட்டோம். நமக்குள்ளே கீழ்ச்சாதி மேல்சாதி, ஆண்டான், அடிமை, ஆண், பெண் என்ற பாகுபாடுகள் இல்லை என்றெல்லாம் காட்டுகிறார். எல்லோரும் சமம் என்ற வெற்றிச்சங்கை ஊதுகிறார். அவர் இப்பாட்டைப் பாடி ஏறக்குறைய நாற்பது ஆண்டுக்காலம் சென்று விடுதலை பெற்றோம்...

இந்நாட்களில் - பின்னும் ஐம்பது ஆண்டுக்காலம் சென்றிருக்கிறது.

“புதியதோர் உலகு செய்வோம் - கெட்ட போரிடும் உலகினை வேருடன் சாய்ப்போம்” என்ற பாவேந்தர் பாரதிதாசனின் வாக்கு. எந்த மட்டில் மெய்யாக இருக்கிறது? 'புதியதோர் உலகு செய்வோம்’ என்று முயற்சிகள் நடந்திருக்கின்றன. அதுவும், எழுபது, எண்பதுகளுக்குப் பிறகு, இந்த முயற்சிகள் தீவிரமாகியிருக்கின்றன. புதியதோர் உலகு செய்வதற்கு அடி நிலையாக என்ன அமைய வேண்டும்? நாம் அறியாமையை முதலில் கெல்லி எறிய வேண்டும். கல்வி என்ற அடிநிலை அமைக்க வேண்டும்.

கல்வி என்ற அடி நிலை நன்கு அமைந்துவிட்டால், புதிய உலகை, இலட்சியங்களை நாம் அடைந்து விட்டதாகவே நினைக்கலாம். சுதந்தரம் பெற்றபின், நமது அரசு, பல வளர்ச்சித் திட்டங்களைத் தீட்டி, செயல்படுத்தி இருக்கின்றன. இன்றும் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றன. கிராமப்புறங்கள், சுயதேவைப் பூர்த்தி அடைய வேண்டும் என்பது, நல்ல உணவு, உடை, இருப்பிடம். இவை அடிப்படைத் தேவைகள். கிராமங்களே இந்தத் தேவைகளுக்கான உற்பத்தி மையங்கள். நாம் சுதந்தரம் பெற்ற நிலையில், உணவுக்காக வெளிநாட்டிலிருந்து வரும் கப்பலை எதிர்பார்த்திருந்தோம். அன்றைய மக்கள் தொகை ஏறக்குறைய நாற்பது கோடி. ஆனால் இன்று, தொண்ணுறுக்கும் மேல் போய்விட்டது. இருந்தும், நம் கடைகளில் தானியங்கள் இருக்கின்றன. சர்க்கரை இருக்கிறது; ஒரு போகம் விளைவித்த இடங்களில் புதிய தொழில் நுட்பமும், அறிவியலும், மூன்று போகம் காண முன்னேறி இருக்கிறது. பொருளாதாரம் என்று நோக்கினால், நிச்சயமாக நாம் முன்னேற்றம் பெற்றிருக்கிறோம். ஒரே சேலையை இரண்டு பெண்கள் உபயோகிக்கும் அவலம் இன்று நிச்சயமாக வறுமையினால் இல்லை. பஞ்சினிலாடைகளும் பட்டினிலாடைகளும் இன்று கடைகளில் நிறைந்திருக்கின்றன.

ஆடை மட்டுமில்லை. எத்தனை விதமான கவர்ச்சிப் பொருட்கள்? பெண்கள் கூந்தல் அலங்காரம் செய்து கொள்ள உதவக்கூடிய வண்னவண்ணப் பூக்கிளிப்புகளிலிருந்து பல்வேறு அழகுசாதனங்கள் பட்டி தொட்டி எங்கும் விற்பனையாகின்றன. எதுவுமே இல்லாமை இல்லை. ‘இல்லாமை என்ற சொல்லை இல்லாததாக ஆக்குவோம்’ என்ற கவிவாக்கு பலிக்காமல் இல்லை.

ஆனால்... ஆனால்?

எல்லாம் இருந்தும், வளமைகள் கொழித்தும், கிராமங்களில் இருந்து மக்கள், இந்த நகரங்களில் நெருங்குகிறார்கள். நகரங்கள், சாக்கடை நகரங்களாகின்றன. கிராமத்துப் பெண் இன்னும் விடுதலை காணவில்லை. படிப்பு, வேலை வாய்ப்பு, பணம்... விதவிதமான ஆடைகள்; சினிமா, தொலைக்காட்சி களிப்பு, அடுப்படியில் வாடாமல், கல்லைக் கட்டி இழுக்காமல், அரைக்காமல் கரைக்காமல், குளுகுளு அறையில் உட்கார்ந்து, கண்டும் கேட்டும், உண்டும் ருசித்திராத பண்டங்களின் சுவைகள், இதெல்லாம் கிராமத்தில் சாத்தியமில்லை.

பட்டணக் கனவில், ஆணும் வருகிறான்; பெண்ணும் பெயர்ந்து விடுகிறாள். கனவுகள் இங்கே வந்தபின் தான் வெறுமை என்று புரிகிறது. இங்கு தங்க இடமில்லை; தண்ணீர் இல்லை, காற்று இல்லை. வேலை வாய்ப்பைக் காட்டினும், சூதும் வஞ்சகமும் மோசடியுமே இருக்கின்றன.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இருந்த மக்கள் தொகை, இந்நாள் நகரத்தில் பத்துமடங்குகள் பெருகிவிடுகிறது. கிராமங்கள் சுயதேவைப் பூர்த்தியடையவில்லை. கிராமங்களை நகரங்கள் சுறண்டிப்பிடுங்கி விழுங்கித் திணறுகிறது. கிராமங்களில் விளையும் பொருட்கள், கிராமங்களுக்குப் பயன்பட்டு, அவர்களை மேம்படுத்தவில்லை. நமது பொருளாதாரம் உற்பத்திகளும் மக்களுக்கு ஆதாரமான உணவு, உறையுள் என்ற தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக இல்லாமல், லாபமாகிய பணத் தேவைகளின் அடிப்படையில் தான் பெருகி இருக்கிறது. பயிர்த்தொழிலை உயிர் நாடியாகக் கொண்ட கிராமத்து மக்களிடம் மனிதத் தன்மை உண்டு. கிராமத்து வீடுகள் மண்சுவர்களும், ஓலைக் கூரையும் கொண்டவையானாலும், வந்தவர்கள் இளைப்பாறத் திண்ணைகள் உண்டு. தாகத்துக்குத் தண்ணீர் உண்டு. பசித்து வந்தவரை விட்டுவிட்டு அவர்கள் உண்ணமாட்டார்கள். அவர்களிடம் பணம் இருக்காது; மனம் உண்டு. எழுத்தறிவு இருந்திருக்கவில்லை. எனினும், வாழ்க்கையனுபவங்களில் பெற்ற விவேகம் உண்டு. பரம்பரையாகத் தொடர்ந்து வந்த சில பழக்கங்களை அவர்களால் விடமுடியாது. சிலவற்றுக்கு அறியாமையாதாரமாக இருந்தாலும், சிலவற்றில் பரம்பரை அநுபவம், இன்றும் தள்ளிவிடும்படி இல்லை. எடுத்துக் காட்டாக, சுற்றுப்புறச்சுகாதாரம் பேணும் வழக்கங்கள், சில.

பொழுது விடிந்ததும் வீட்டையும் வாயிலையும் சுற்றுப்புறத்தையும் சாணநீர் தெளித்துப் பெருக்குவார்கள். அந்நாட்களில் கிராமங்களிலும் வெட்ட வெளிகள், தரிசுகள், இருந்ததனால், வீடுகளருகே அசுத்தம் செய்யாமல், எங்கோ செல்வார்கள். கோயில்கள் ஏறக்குறைய பொது இடங்களாக சமுதாயத்தினர் கூடும் இடங்களாக, கலாசார மையங்களாக இருந்தன. சமுதாயத்தில் பழங்காலத்தில் இருந்த நிலைக்கேற்பச் சில சட்டதிட்டங்கள் இருந்தன. அறிவியலும் தொழில் நுட்பமும் இந்த ஐம்பதாண்டுக் காலத்தில் எத்தனையோ மாற்றங்களை அன்றாட வாழ்வில் கொண்டு வந்துவிட்டன. ஆனால், ஒரு குறிப்பிட்ட வழக்கத்தை, வழக்கங்களை ஏனென்று கேட்கும் மனமே இல்லாமல், விடாப்பிடியாகப் பற்றிக் கொள்ளும் அறியாமை, எழுத்தறிவு கூடிப் பட்டங்கள் பதவிகளாகக் காய்த்த பின்னரும் அழியவில்லை.

கிராமங்களில், மனிதரை மனிதர் இழிவு செய்யும் வழக்கத்தை ஒழிப்போம் என்று சொல்லப்பட்டது. சட்டபூர்வமாகத் தீண்டாமை ஒழிக்கப்பட்டது. ஆணும் பெண்ணும் சமம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். உண்மையில் 'தீண்டாமை' நகரச்சந்தையில் நசித்துப் போயிற்று. ஓட்டல்களில், போக்குவரத்து சாதனங்களாகிய பஸ்-ரெயில் நெருக்கடிகளில், அது வாழமுடியவில்லை.

ஆனால், கிராமங்களில் இன்னும் அது சாகவில்லை!

தேநீர்க் கடைகளில், பொது இடங்களில் அது சாகாத நோய்க்கிருமிகள் போல் சமுதாயத்தைப் பீடித்துள்ளது. பெண்மக்களிடம் அது பற்றிக் கிடக்கிறது. இந்நாட்களில் சட்டபூர்வமாக, எல்லா மக்களும் எல்லாத் தெருக்களிலும் குடியேறலாம். ஆனால் குடியேறி இருக்கிறார்களா?

பொருளாதார வசதிகூட, ‘காலணி' ஆட்கள் என்ற முத்திரை இட்டே அவர்களை ஒதுங்கச் செய்கிறது.



மனதளவில் ஏன் இந்த வறுமை? பழைய வஞ்சங்கள் புதுப்பிக்கப் படுகின்றன. புதிய பணவசதி, சுயநலத்தையும் ஆணவத்தையும் வளர்க்கிறது. உணவுப்பயிரில் பசியாறும். பணப்பயிரின் வண்மை, சக மனிதர்களையே அந்நியமாக்குகிறது.

குடும்பங்கள் உடைபடக்கூடாது என்று, ஒன்றுக்குள் ஒன்று என்று சம்பந்தம் செய்து கொண்டார்கள். அத்தை மகன் - மாமன் மகள் - மாமன் மகன் - அத்தை மகள் என்ற பிணைப்பு எக்காலத்திலும் முதல் உரிமையாக இருந்தது. ஆனால் இந்நாள், பெண்ணை, எடைபோடுவது, 'பவுன்', பட்டு, ரொக்கம் ஆகியவற்றுக்கே. ஏழைக்குடிசைகள் கடனில் தத்தளிக்கின்றன. ஒரு பெண் பிறந்தால், ‘வீட்டுக்கு லட்சுமி வந்திருக்கா' என்று கொண்டாடிய வீடுகள் இன்று கிராமங்களிலும் இல்லை; நகரங்களிலும் இல்லை. அது கண் விழிக்குமுன்பே, அது 'ஆளாகி’, பெற்றோருக்குப் பாரமாக, செலவுக்குரிய மலையாக நிற்பதே உறுத்துகிறது.

‘வயிற்றுப் பிள்ளைக்காரியைப் பொன்மணி போலும் கண் மணி போலும் பார்க்க வேண்டும்’ என்று போற்றி மகிழ்ந்த மரபுகள் இன்று அழிந்துவிட்டன. ‘ஆசுபத்திரில சோதிச்சிப் பாக்குறாங்களாமே? பொட்டபுளையானா எதுக்கு? ஆனானப் பட்ட பட்டணத்து ஆளுவளே பொம்புளப் புள்ள வானம்னு கலைச்சிடுறாங்களாமே? நமக்குக் கைக்கு வாய் எட்டல. வெள்ளாம செஞ்சி கட்டல. துண்டு துண்டு பூமியாகி அவங்கவங்க பட்டணம் பாக்கப் பிழைக்கப் போயிட்டாங்க. பேசாம வித்துப்போட்டு, எதுனாலும் வியாபாரம் பண்ணிப் பிழைச்சிக்கலாம்னு நாமும் போயிடவேண்டியது தா.இதென்னாத்துக்கு? ஊசி போட்டுக் கிட்டு வா, இன்னொரு பொட்ட எதுக்கு? இப்ப வசதி இருக்கில்ல? எங்க காலத்தில தா, இந்த வசதி இல்ல... என்று முடிவெடுப்பதன் வாயிலாக, அறிவியல் வசதியால் கண்களில் ஒன்று குத்தப்படுகிறது. எப்படிப் புதியதோர் உலகம் காண்போம்? அல்லது படைப்போம்? இந்த ஐம்பது வருட வரலாற்றைப் பார்க்கும்போது, பெண்கள் சுயச்சார்பு ஆற்றலும் பெறாமல், எந்த அறிவியல் முன்னேற்ற வளமையும் சமுதாயத்தை மாற்றி அமைக்காது முடியாது என்று நன்றாகத் தெளிவாகிறது. பெண் அறிவு பெற்றிருந்தால், அறியாமையில் மலரும் பல குருட்டு நம்பிக்கைகள் ஒழிந்திருக்கும்; பெண் சுயச்சார்பும் சக்தியும் பெற்றிருந்தால் அவள் யாரோ காப்பாற்றி வாழ்வளிக்க வேண்டும் என்று, வீனுக்கு உழைத்துத் தன்னை இழக்கமாட்டாள். இத்துணை பெண் சிசுக் கொலைகளும் பாலியல் வன்முறைகளும், கதைகளில் கூட இடம் பெற இயலாதபடி, சமுதாயம் விழிப்பாக இருக்கும். அடி தடி, கொலை, வன்முறைகள், நிச்சயம் வந்திருக்காது.

எனவே, இன்றையச் சிறுமைகளெல்லாம், பெண் பூச்சியாக ஒடுங்கி இருந்ததனால் கிளைத்த முட்கள்..."எனக் கொண்ணுந் தெரியாது. அவுக இருக்காங்க, பெத்தவங்க, ஊர்ப் பெரியவங்க, அவங்க ஆம்புளங்க, நா பொம்பள.” என்ற தாழ்வுமனப்பான்மையைத் தூக்கி எறிய வேண்டும்.

காலம் காலமாக வேரோடிவிட்ட இந்தத் தாழ்மையுணர்வைத்துக்கி எறிவது எளிதில்லை தான். மேலாதிக்கம் செலுத்திய இனம் அப்படி அதை எளிதாக்காதுதான். ஆனால், இது முனைந்தால் சாத்தியம். நம்பிக்கை நட்சத்திரங்கள், உறுதி சொல்கின்றன. அவற்றைப் பார்ப்போம்.

முதலில், பெண்கள் எப்படிச் சக்திபெற முடியும்?

துணிவு அறிவுச் சுயச் சார்பு.

இவள் தன் காலால் நிற்கும் துணிவு பெற்றாலே, மக்களை உறுதியுடன் முன்னுக்கு நடத்திச் செல்ல முடியும். தடைகளையும் எதிர்ப்புகளையும் வெல்லும் வேகம் வரும். புதிய சமுதாயம் அமைக்கப் புறப்படலாம்.

2

சக்திக்கு ஆதாரம், பொருளாதார சுயச்சார்பு

பெண் உழைக்கிறாள். வீட்டிலும் உழைக்கிறாள்; வெளியிலும் உழைக்கிறாள். ஆனால் அதற்கு ஏற்ற மதிப்பு அவளுக்கு இருக்கிறதா? இது கேள்விக்குறிதான். ‘பொருளாதாரம்’ என்ற உற்பத்தியில் பெண் இன்று எல்லாப் படிகளிலும் உழைப்பைக் கொடுக்கிறாள்.

மிகக் குறைவான சதவிகிதத்தினர்தாம் மேல் வருக்கங்களில் உட்கார்ந்து அதிகாரம் செய்து உண்பவர்கள், அநுபவிப்பவர்கள்.

ஆனால் நகர்ப்புறங்களில் பெண்கள் பட்டமும் பதவியும் பெற்று, போக்குவரத்து நெரிசல்களில் பிதுங்கிக் கொண்டு அலுவலகங்களுக்குச் சென்று உழைக்கிறார்கள். இந்த உழைப்பு மாதச் சம்பளம் ஊதியம் பெறும் உழைப்பு.

ஆனால் அதிகாலையில் எழுந்து இயந்திரம் போல் வீட்டுக்குள், குழந்தைகள் என்று தேவைகளைக் கவனிப்பதும், சமைப்பதும், பகலுணவு கட்டுவதும், நிர்வாகம் செய்வதும், அவள் செய்ய வேண்டிய வேலைகள். இந்த வேலைக்கு விடுப்பு சலுகை எதுவும் கிடையாது.

இதேமாதிரி கிராமப்புறங்களில் பெண் செய்யும் வேலைகள் என்று பல தீர்ந்து இருக்கின்றன. அன்றும், இன்றும், என்றும், வீட்டுக்கான உணவு சமைக்க... தீ... சக்தி... விறகு, அவள் பொறுப்பாக இருக்கிறது. அடுத்தது தண்ணிர். பல கிராமங்களில், ஊருணியோ, ஏரியோ, வற்றும் காலங்களில், இவள் குடி தண்ணீருக்காகப் பல காதங்கள் நடக்க வேண்டியவளாகிறாள். இன்னமும், குழாய் வசதி செய்தும் அது சரியில்லாததாலும், பொறுப்பற்றவர்களின் அடாவடித்தனங்களாலும், பெண் இரவும் பகலும் தண்ணிருக்காக நடக்கும் சோகம் மாறவில்லை. நாடு முழுவதும் தண்ணீர்ச் சுமையைத் தங்கள் தலைமேல் வைத்துச் சுமக்கும் கோடானு கோடி பெண்களுக்கும் சக்தி இல்லையா? அவர்கள் முனைந்து மனது வைத்தால், இயங்காத சக்கரத்தையும் இயக்க முடியாதா? முடியும்.

ஆனால் இந்த உழைக்கும் பெண்கள், தண்ணீர் சுமப்பது கடன். விறகு தேடுவது கடன். புருஷன் நம் கையிலிருப்பதைப் பிடுங்கிக் கொண்டு போய்க் குடித்து விட்டு வந்து அடித்தால் பொறுப்பது கடன் என்று கருதுகிறார்கள். இது தருமம் என்று ஒரு பாசி பிடித்துப் போன நியதியில் தன்னுணர்வே இல்லாமல் புதைந்திருக்கிறார்கள். கிராமங்களில், முக்கிய தொழிலான உழவு, பயிர்த் தொழிலில் முக்காலும் பெண்களே ஈடுபட்டிருக்கிறார்கள். இல்லையேல், அதுசார்ந்த துணைத் தொழில்கள் அவர்கள் வாழ்க்கைக்கு ஈரம் பாய்ச்சுகின்றன. மாடு வைத்துப் பராமரித்து பால், தயிர், வெண்ணெய் என்று வண்மை காண்பது நெடுங்காலமாகப் பெண்கள் மேற்கொள்ளும் தொழில் என்றாலும் அவள் பாலும் தயிரும் உண்டு, கொழு கொழுவென்றோ, மினுமினுவென்றோ இருப்பதில்லை. முக்காலும் பொறுப்பற்ற ஆணின் காரணமாக, குடும்பத்து வறுமையை ஈடுகட்ட அவள் அந்த உழைப்பால் பொருள் தேட வேண்டி இருக்கிறது; கட்டாயமாகிறது; காய்கறித் தோட்டம் போடுகிறாள். ஒன்றுமில்லை எனினும் வீட்டுப் புறத்தில் கீரையேனும் விதைக்கிறாள். கோழி வளர்க்கிறாள். ஆடு வளர்க்கிறாள், ஆனால் அவற்றின் பயனை இந்நாட்களில் பெரும்பாலும் அவள் அடைவதில்லை.

வாழ்க்கைத்தரம் எளிமையாக இருந்த நாட்களில், பணத்தின் தேவை கட்டாயமாக இருக்கவில்லை. திருமணங்கள் மிக எளிமையாக நடைபெற்றன. தங்கம், வெள்ளி கட்டாயமில்லை. உறவும், பாசமும்தான் குறிப்பாக இருந்தன. வீட்டுக்கு மிக அவசியமான, அண்டா, குண்டான், செம்பு, விளக்கு ஆகிய பொருட்கள் பொருளாதார வளமையைப் பொறுத்துப் பித்தளை, வெண்கலம் என்று வாங்கினார்கள். ஆனால் இந்நாட்களில் திருமணங்கள், சமூகத்தில் ஒரு கவுரவத்தைத் தேடிக் கொள்ளும் வாய்ப்பாக மாறிவிட்டது. “கூலி வேலை செய்யும் பயல், அவனுக்குரிஸ்ட்வாட்ச், மோதிரம், செயின், பான்ட் சட்டை, இருபத்தோரு ஸில்வர் ஏனங்கள், ரேடியோ - எல்லாம் வாங்கித் தந்து கலியாணம் கட்டி யிருக்காங்க. ஃபோட்டோக்காரர் வந்து, போட்டோ பிடிச்சாங்க. மைக்கு செட்டு, வீடியோ என் பையன் படித்தவன்” என்று பிள்ளையைப் பெற்றவள் அடுக்குகிறாள். தேவையற்ற ஆடம்பரங்கள், தெய்வ விழாக்களிலும் கூட அதிகமாகிவிட்டன. பக்திப் பெருக்கு என்பது, ஆடம்பர வெறியாகவும், நான் பெரிசா, நீ பெரிசா என்று பெருந்தலைகள் கட்சி சேர்ந்து போடும் போட்டிப் பரீட்சைக் களங்களையே தோற்றுவித்திருக்கின்றன. பலன், பல கிராமங்களில் தெய்வவிழாக்கள் வெட்டு குத்து, கோர்ட்டு வழக்கு என்று கிராமப் பொருளாதாரத்தையே குழி பறிக்கிறது.

இத்தகைய பலப்பரிட்சைகளுக்கும், பழி பாவங்களுக்கும் பெண்ணின் உடலும் உழைப்புமே பலியாகின்றன. விவசாயம் என்பது வரவுக்கும் செலவுக்கும் கட்டுப்படியாகாத தொழில் என்று, சிறு விவசாயிகள் சோர்ந்து போகும்படி ஆணின் உழைப்புக்குக் கூலியும் அதிகமாகிவிட்டது. பெரும்பாலும் ஆண் எட்டாவது படித்துத் தேறிவிட்டால், அழுக்கு ஒட்டாத வேலை தேடி மண்ணை விட்டு பெயர்ந்து செல்கிறான். இல்லையேல், குறுக்கு வழியில், பணம் சம்பாதிக்கக்கூடிய சட்டத்திற்குப் புறம்பான தொழில்களில் ஈடுபடுகிறான். தனக்கு அடங்கிய பெண்களையும் ஈடுபடுத்துகிறான். இம்மாதிரியான ஆண் மேலாதிக்கங்களை எதிர்க்கும் நியாய உணர்வே பெண்களிடம் இல்லை. அவளே கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடுத்தப்படுகிறாள்; பிடிபட்டு மான அவமானங்களைச் சகிக்கிறாள். வாழ்க்கையே நரகமாகிறது. எனவே பெண் உழைத்தும் பயன் காணாமலிருக்கும் நிலையை மாற்ற வேண்டியது அவசியமாகிறது. அந்த மாற்றம், அவள் தன்னுணர்வு பெற்றாலே சாத்தியமாகும்.

நாம் இவ்வளவு உழைக்கிறோமே? பாடுபட்டுத் தேடி, ஆக்கியதைக் கணவன் குழந்தைகள் என்று போட்டுவிட்டு, எஞ்சியிருந்தால் மட்டும் கரைத்துக் குடித்துவிட்டு, அரை வயிறானாலும் போதும் என்று படுக்கிறோமே, அது சரியா என்று எந்தப் பெண்ணும் நினைப்பதில்லை. இந்த நிலைக்கு என்ன காரணம் என்று அவள் ஆராயாமலேயே பல நூற்றாண்டுகள் கழிந்திருக்கின்றன.

கடந்த பத்தாண்டுகளில் கிராமங்கள் தோறும் பள்ளிகள் பெருகி இருக்கின்றன. ஆண் குழந்தைகளுடன், பெண் குழந்தைகளும் படிக்க வேண்டும் என்ற பிரச்சாரம் பலனளித்துக் கொண்டிருக்கிறது. தலைவாரிப் பூச்சூடி, பாடசாலைக்குப் போவென்று பெண் குழந்தையைப் பள்ளிக்கு அனுப்பச் சொன்ன பாவேந்தர் வாக்கு மெய்யாகி வருகிறது. இன்று ஒரு விவசாயக் கிராமத்துக் குடும்பத்தில் புதிதாக மணம் புரிந்து வந்திருக்கும் பெண் ஒருத்தியை “ஏம்மா, படித்திருக்கிறாயா?” என்று கேட்டால்,

“ஆம் நான் எஸ்.எஸ்.எல்.ஸி பாஸ் பண்ணி யிருக்கிறேன்” என்று பதில் வருகிறது.

ஆகா! எத்தனை தெம்பாக இருக்கிறது?

“உங்களுக்கு எவ்வளவு நிலம் இருக்கு”

“ஒரு ஏகரா?”

“தண்ணீர் வசதி இருக்குதா?”

“ம். ஏரிப்பாசனம் கிணறும் இருக்கு பொதுவிலே...”

“நீ, வயலில் இறங்கி வேலை செய்வாயா?”

"ம்..."

“உங்க வீட்டுக்காரர்.”

“அவுரு வேலை செய்யமாட்டாரு. சைக்கிள் கடை வச்சிக்காரு.”

“அப்ப நீ மட்டும் என்ன வேலை செய்வே?”

“நா, நாத்து நடுவேன், களைபறிப்பே, அல்லாந்தான் செய்வேன்... மாமியாருக்கு உடம்பு சுகமில்ல. இல்லன்னா அவுங்களும் வருவாங்க...”

“உழவு...?”

“அது கூலிக்கித்தா வைப்போம். ஆம்புள கூலி எம்பது ரூபா. ஒரு நாளைக்கி...”

“பொம்புளக்கி..?”

“பொம்புள... நடவாளுங்கதானே? முன்ன பன்னண்டாம். இப்ப பதினைஞ்சி...”

“ரொம்பக் குறவாயிருக்கு?

“அதெப்படி? கட்டுப்படியாகணுமில்ல? இதே அதிகமாயிருக்குது...”

“ஏம்மா, ஆம்புளயும் உன்னப்போலதானே உழைக்கிறான்? அவன் கூலி நாலு, அஞ்சு மடங்கு மேலா இருக்கு?

“அது உழவுங்க. பொம்புள ஏரு புடிக்க முடியுங்களா?”

“முடியாதா?....”

“தொடக்கூடாதுங்க. பொம்புள வேல இதெல்லாந்தா”

"அறுவடை?..."

“அது செய்யலாம். ஆம்புளயும் செய்வாங்க; பொம்புளயும் செய்வாங்க.”

“அதுக்கு ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரி கூலியா?”

“அதெப்படிங்க? அவங்களுக்கு நாப்பது ருபா, ஒரு மயக்கா நெல். இவங்களுக்கு நெல்லு கிடையாது...”

"என் பொம்பிளங்க உழைப்பு மட்டும் குறைச்சல்னு நினைக்கிறே”

“அதப்படித்தாங்க... என்னன்னாலும் பொம்புள தாங்களே..." சிரிக்கிறாள்

மாதர் சங்கக்காரர்களும், பெண்ணியம் பேசுகிறவர்களும், 'சம வேலை, சம கூலி' என்று கூச்சல் போட்டுப் பயனில்லை.

“ஏம்மா, நீ எந்த வருசம் படிச்சே.? அதாவது பாஸ் பண்ணின?"

“தெரியலிங்க ஞாபகமில்ல.”

“என்னம்மா, இதுகூட ஞாபகமில்ல? உனக்கு எப்ப கலியாணமாச்சி?"

“அஞ்சி வருசம் ஆச்சுங்க..."

“முன்னியே படிச்சி முடிச்சிட்ட?”

"ம்..."

“அப்ப எத்தினி வருசம் கழிச்சிக் கலியாணம்?"

“இருக்குமுங்க, ஒரு ரெண்டு வருசம்...”

“ரெண்டு வருசம் என்ன செஞ்கிட்டிருந்தே?”

“சும்மாதா இருந்தேங்க...”

“இந்தப் பயிர் வேலை எல்லாம் அப்பவே தெரியுமா?"

“தெரியுங்க. இவரு என் அத்த மகன்தான்....” என்று நாணத்துடன் தலை குனிகிறாள்.

எஸ்.எஸ்.எல்.எஸி. படிப்பு, இவளுக்கு எந்த வருசம் தேர்ச்சி பெற்றாள் என்பது நினைப்பில்கூட நிற்கவில்லை.

“ஏம்மா, உனக்கு என்ன வயசாகுறது?..."

“தெரியலீங்க...” நமக்கு அதிர்ச்சியாக இருக்கிறது.

“உன் டேட் ஆஃப் பர்த், நினைப்பில்ல?”

“சர்ட்டிபிகேட்ல இருக்குமுங்க நினைப்பில்ல.”

எஸ்.எஸ்.எல்.சி.க்களின் நிலை இதுதான் என்பதைச் சீரணிக்க முடியவில்லை. இவளுடைய பாட்டியிடம்,"உங்க வயசென்னம்மா?” என்று கேட்டாலும் இதே பதிலைத்தான் சொல்கிறாள். இந்த எஸ்.எஸ்.எல்.சி. வீட்டில் இரண்டு வருஷம் சும்மா இருந்தபோது, வீட்டு வேலை எல்லாம் செய்திருப்பாள். தாய், உழவு, நடவு, களை எடுத்தல் என்று போனால், பத்து இருபது பேருக்குச் சோறு பொங்கி எடுத்துக் கொண்டு போயிருப்பாள். மாடு கன்று பார்த்திருப்பாள். வீட்டு வேலை பலவும் செய்திருப்பாள். ஆனால், எதுவும் நினைவில்லாத இவள் கல்யாணமாகி அந்து வருஷம் ஆவதை மட்டும் சரியாக எப்படிச் சொ ல்கிறாள்?

“எம்மா, உனக்குக் குழந்தை இருக்கா?”

“இல்லீங்க...”

ஒரு மாதிரி துக்கம் துருத்துகிறது.

“ஏம்மா, உண்டாகவே இல்லையா?”

“இல்லீங்க...”

அழுதுவிடுவாள் போல் இருக்கிறது.

இந்த ஐந்து வருசம் என்ற கணக்கு மட்டும் எப்படி நினைவிருக்கிறது என்று புரிகிறது. இது சொல்லிக் காட்டப்பட்டிருக்கும்.

“டாக்டர்கிட்டக் காட்டினிங்களா?”

"உம்"

“என்ன சொன்னாங்க?”

"ஒண்ணும் குறையில்ல... ஆவும்னு சொன்னாங்க?"

“பின்னென்ன? அஞ்சு வருசம்தானே ஆவுது? உனக்கென்ன, இப்ப இருபத்திரண்டு வயசிருக்கும்; பிறக்கும்...” என்று தேற்ற வேண்டி இருக்கிறது. புருஷன் டாக்டரிடம் பரிசீலனை செய்து கொண்டானா என்று கேட்டால் என்ன பதில் இருக்குமோ? அதுதான் துயரத்துக்குக் காரணமோ? அல்லது, இவள் பாட்டி, முப்பாட்டிக் கிழவிகள், இன்னொரு கல்யாணம் என்று நிற்கிறார்களோ?

ஆக, படிப்பு, இவள் தன்னுணர்வுக்குக் கை கொடுக்கவில்லை.

“கோயிலுக்கெல்லாம் போயி வந்தாச்சி. பெறக்கும்னு சொல்றாங்க. அந்த ஆண்டவன் எப்ப கண் தொறந்து பாக்குறானோ? எங்க வமுசத்துல இப்புடி ஆரும் இல்ல. நா மனுசியாயி மறுமாசமே இவுங்க தாத்தா வூட்டுல கேட்டு வந்துட்டாங்க. அடுத்த வருசம் என் பொண்ணு பெறந்தாச்சி...” என்று அருகிலிருக்கும் பாட்டி, வேதனைக்கு வெந்நீர் ஊற்றுகிறாள். இப்போது இந்த முதிய தலைமுறைகளைச் சாடத் தோன்றுகிறது. ஆனால் பயனில்லை.

இந்தப் புதிய தலைமுறை, கல்வியினாலும், புதிய தொழில் நுட்பங்களாலும் பயனடைய வேண்டும்.

இத்தனை ஆண்டுகள், கிராமங்களில் விவசாயிகளுக்கு என்று, உழவர் பயிற்சித் திட்டங்கள் பல வகைகளிலும் செயல்பட்டிருக்கின்றன. புதிய ஆய்வுகளின் பயன் பயிர்த் தொழில் செய்பவர்களிடம் சென்று சேர்க்கப்பட்டிருக்கிறது.

புதிய சோதனைகள், புதிய தொழில்நுட்பங்கள், புதிய அறிவியல் கண்டுபிடிப்புக்கள், எளிய கிராம விவசாயியையும் எட்டும் வகையில், வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகை சாதனங்கள் இவர்களுக்கென்றே தனித் துறையாக இயங்குகின்றன. ஆனால் இந்தப் பயன்களும் கிராம மகளிரை சுயச்சார்பும், தன்னுணர்வும் பெறுவதற்கு உதவியிருக்கவில்லை என்பதே உண்மை.

ஆனால், கடந்த சில ஆண்டுகளில், மகளிருக்கென்று, பண்ணை மகளிருக்கென்று புதிய தொழில் நுட்பங்களையும், முறைகளையும் பயிற்றுவிக்கும் திட்டம் செயல்படத் தொடங்கிய பிறகு, அந்தத் தன்னுணர்வையும் சுயச்சார்பையும் அவர்களிடையே தோற்றுவிக்க முடியும் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது. கிராமங்களில் புதிதாக மலர்ந்துவரும் அறிவொளி இயக்கத்தின் பயன் தன்னம்பிக்கை ஆண்கள் தாம் செய்யலாம் என்று கூசியிருந்த கூச்சத்தை அது துடைத்துவிட்டது. இன்று, கிராமத்துப் பெண், சைக்கிளில் பால் 'கேனை'க் கட்டிக் கொண்டு வாடிக்கையாளரிடம் போகிறாள். நடவு செய்யும் பெண்களுக்கு வீட்டில் சோறு பொங்கி எடுத்துச் சைக்கிளில் கட்டிக் கொண்டு விவசாயப் பெண் போகிறாள். இது மிகப் பெரிய மாற்றம். இந்த மாற்றம், தண்ணீரில் சிதறவிட்ட எண்ணெய்த்துளிகளாய், சமுதாய முழுமைக்குமாகப் பரவும் என்று எதிர்பார்க்கலாம்.

3

டென்மார்க்... வடக்கு ஐரோப்பாவில், உள்ள வளர்ச்சி பெற்று முன்னேற்றம் எய்திய நாடு. இந்திய மகளிர் சமுதாயம் மேன்மை பெற அந்நாட்டின் வாயிலாகப் பாரதநாடு உதவி பெறுகிறது. அந்த உதவி கொண்டுதான் பண்ணை மகளிர் பயிற்சித் திட்டம், கடந்த ஒன்பது ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த பண்ணை மகளிர் பயிற்சித் திட்டம், கிராமப்புற மகளிருக்கு, விவசாயம், கால்நடை, கோழி வளர்ப்பு ஆகிய தொழில்களில், புதிய தொழில் நுணுக்க - அறிவியல் பயிற்சியைக் கொடுக்க இருநூறு விவசாயத் துறை ஆய்வில் தேர்ச்சி பெற்ற மகளிர் அலுவலர்களைப் பயிற்சியாளராக்கியிருக்கிறது. இவர்கள் நாடு முழுதுள்ள விவசாயத்துறை இயக்ககத்துடன் இணைந்து, பயிற்சி பெறுவதற்குரிய பண்ணைமகளிரை அணுகித் தேர்வு செய்கின்றனர். தன் நிலத்தில் தானே வேலை செய்யவும் நிர்வகிக்கவும், இந்தப் புதிய தொழில் துணுக்கங்களில் பயன்பெறவும் மிகுந்த ஊக்கத்துடன் முன்வந்திருக்கின்றனர். கல்லூரிப் பட்டமும், மேல் தகுதிகளும் பெற்று, உயர்தரம் என்று வட்டத்துள் அடங்கிய பெண் அலுவலர், இந்தக் கிராமத்து அறியாமைக்குள் முடங்கி இருந்த பெண்களை விரிந்த எல்லைகளில் ஒருங்கிணையச் சேர்த்திருக்கின்றனர். ஐந்து நாட்கள் பயிற்சி. இருபத்தைந்து பேர் பயிற்சி பெறுபவர். இவர்களில் சாதி-மத பேதங்கள், மேல் கீழ் என்ற பிளவுகள் மறைகின்றன. மண்பரிசீலனை செய்வதும், நாற்றங்கால், விதைத்தேர்வு செய்வதும், நடவு வயல் பராமரிப்பு, அடியுரமிட்டு நாற்று எடுத்து நடவு செய்தல், மேலுரம் இடுதல், ஈறாக அறுவடை செய்து சேமிப்பு வரையிலும் இந்தப் பயிற்சியில் அடங்குகிறது.

“ஏம்மா, விவசாயக் குடும்பம்னுறீங்க. நீங்க வேலை செய்திருக்கீங்களா?...”

“இல்லீங்க. நா வயல்ல எறங்கி வேலை செய்யமாட்டே சோறு கொண்டாருவே. கூடமாட எடுத்துப் போடுவேன். இருபது வருசம் இப்பிடித்தான்,,. ஆனா இப்ப அரைஏக்கர், இவங்தசொல்லிக் கொடுத்தபடி, பார்த்து செய்தேங்க. வழக்கத்தை வுடக்கூடப் பத்துமுட்டை நெல் கண்டிருக்கு”

இந்தப் பெண்மணிக்கு முகத்தில் புதிய ஒளி மின்னுகிறது.

"மண் பரிசோதனைக்கு அனுப்பினேன். எல்லாம் நானே, செய்தேங்க... அதுக்குத்தக்கனபடி, தழைச்சத்து போடச் சொன்னாங்க. இவங்க சொன்னாப்பல விதைக்கு திரம் மருந்து போட்டுக் குலுக்கி விதைச்சோம். அது பூச்சிகளை வராம கட்டுப்படுத்திடிச்சி. நாத்து நடுறப்ப, நடுவே ஓரடி விட்டு பத்தி நடவு செய்தோம். முன்னெல்லாம் நெருக்க நெருக்கமா குத்துக்குத்தாக வச்சிடுவோம். இப்ப குத்துக்கு ரெண்டு இல்லாட்டி மூன்று நாத்துத்தான். அடியுரமா யூரியா போடுறப்ப, அளவா, வேப்பம் புண்ணாக்குக் கலந்து வச்சோம். பிறகு உயிருரம் போடுறோம் இல்ல? பசபசன்னு பயிரு வந்திச்சி. ஒருகள, ரெண்டுகள 25ம் நாளு, முப்பத்தஞ்சாம் நாளு எடுத்து மேலும் போட்டோம். நம்ம புள்ள வளக்கிறாப்பில தாங்க பயிரும் முதமுதல்ல அதுக்கு கொஞ்சம் கொஞ்சமாத்தான் செரிசிக்கும். முதல்லல்லாம் தெரியாதுங்க. எங்கூட்டுக் காரம் ஊரியாவ நெறயப்போட்டத்தான் நெல்லுதுன்னு நெறய நெறயப் போடுவாருங்க. இப்ப பாருங்க, பூச்சி, அது முப்பதிதஞ்சு நாப் பயிரா வரப்பதான் வேப்பம் புண்ணாக்கு இல்லாம சீரணிக்குச்சிக்குனு தெரியிது. பிறகு பாருங்க. மேடம் சொன்னாங்க, முப்பத்தஞ்சு நாளைக்குமேல, அம்பது நாள் பயிரிலே மேலோ, உரம்தானேன்னு போட வேண்டாம். முப்பத்தஞ்சாம் நாளில் உங்களுக்கு வீட்டில் அசவுரியம், கல்யாணம் காட்சின்னு ஊருக்குப் போறீங்க, பத்துநாள் கழிச்சி வந்து போட்டுக்கலாம்னு இருக்க முடியாதுங்க. ஏன்னா, அது பச்சை பிடிச்சி, பூத்து, பால் பிடிக்கும் பருவத்திலேயே, கதிர்மணி எத்தனைனு தீர்மானிச்சிக்குது. அப்பவே ஊட்டம் குடுத்திடணும்னு சொன்னாங்க. பின்னால குடுக்கிறது வீண்ணு சொன்னாங்க. அத்த கெட்டிமா முடிஞ்சிட்டேங்க. பதினஞ்சு, மிஞ்சினா பதினெட்டு மூட்டை கெடச்ச அதே வயல்ல முப்பது மூட்டை மணி ஒரு பதரு. பூஞ்சை இல்லீங்க சின்ன சின்ன விசயம்தான்.” என்று பெருமையுடன் கூறுகிறாள்.

இந்த இருபத்தைந்து பேர்களும், ஒவ்வொருவரும் பத்துப் பெண்களுக்குத் தாமே இந்தத் தொழில் நுட்பத்தை இரண்டுநாள் பயிற்சியாகச் சொல்லிக் கொடுக்கிறார்கள். இதை அந்தப் பெண் அலுவலர் மகிழ்ச்சியுடன் மேற் பார்வை செய்கிறார்கள். இந்தப் பட்டம், இந்த ரகம் உகந்தது என்று இவர்களே. இந்தப் பெண்களே தீர்மானிக்கிறார்கள். தங்களால் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை, இந்த கிராமப்பெண்களிடம் மிகப் பெரும் மாறுதலைக் கொண்டு வந்திருக்கிறது.

இதுவரை, மேற்குடிப் பெண், காலனியாட்கள் என்று இருந்த மனதளவிலான தீண்டாமை இங்கே அடிபட்டுப்போகிறது. “அக்கா? புதுமாதிரி பத்தி நடவு செய்யிறது எப்பிடின்னு கொஞ்சம் வந்து சொல்லுறீங்களா?” என்று கேட்டால், இவள் யோசனை கூறி மேற்பார்வை செய்ய, அடுப்பை இழுத்து வைத்துவிட்டுப் போகிறாள். கணவனின் கோபமும், கடும் பேச்சும் நியாயமில்லை என்று அதைப் பொருட்டாக்காமல் தான் கற்றதைப் பிறருக்குச் சொல்லப் போகிறாள்.

“த, யார்னாலும் வந்து கூட்டா ஓடுற?” என்று குடிப்பிறப்பு அங்கே குறுக்கிட்டால், “யோவ், சும்மா இருங்க! அல்லாக் குடியும் ஒண்னுதா, அல்லா ஒடம்பிலும் சேப்பு ரத்தம்தான் ஒடுது!" என்று சொல்லத் தயங்குவதில்லை.

அவன் ஆத்திரத்தில் இவள் பயன்படுத்தும் சாமானை உடைத்தால், இவள் புதிய சாமானை வாங்கிக் கொள்ள முடியும் என்று அச்சுறுத்த முடிகிறது. ஏன்? இது வெறும் பொருளாதார சுயச்சார்பு மட்டும் இல்லை. தானும் ஒரு மனுஷி. ஒரு கணவனின் கைப்பாவை இல்லை, மேலாதிக்கத்துக்கு அடிமை இல்லை என்ற உணர்வு வந்துவிடுகிறது. ‘கொல்லைமேடு' என்று அசட்டையாக விட்ட இடங்களிலும், வேர்க்கடலை, எள், பயறு, உளுந்து, புன்செய்ப் பயிரெல்லாமும், புதிய தொழில் நுணுக்கங்களைக் கையாண்டு பயன் அதிகமாகப் பெறலாம் என்று உற்சாகத்துடன் இந்தப் பெண்கள் இயங்குகிறார்கள். சந்திப்புகள், மாநாடுகள், இவர்களை ஒருங்கிணைக்கிறது. மேலும் மேலும் முன்னேற்றம் காண அடிவைக்கிறார்கள்.

ஒன்றுமில்லாத சப்பு சவறு, கந்தல் சாக்கு இவற்றைக் கறையான் வளர்க்கப் பயன்படுத்திக் கோழிகளை ஊட்டமாக வளர்க்கலாம் என்று கண்டு கொள்ளும் செவந்திக்கு எத்தனை மகிழ்ச்சி! “ஆனா பூச்சி மருந்து, காரமான எறும்புத்துள் இதெல்லாம் இல்லாத எடத்துல வையி!” என்று கவனமாகப் பயிற்சி பெற்றவள் சொல்கிறாள். கறவை மாட்டுக்குப் போடும் வைக்கோலில், யூரியா கரைத்த நீர் தெளித்து, நுண்ணுயிர் ஊட்டம் ஏற்றும் முறையை இன்னொருத்தி காட்டுகிறாள்.

“பண்ணைமகளிர் பயிற்சி எடுத்து அஞ்சு வருசம் ஆவுதுங்க. இப்பதாங்க இந்த வீட்டைக் கூரை எடுத்து மச்சு வூடாக் கட்டிட்டிருக்கிறோம்.” என்று பிரேமா கொல்லத்துக்காரர்கள் இடையே நின்று ஐந்து வருஷங்களில், ஐம்பதாயிரம் திரட்ட முடிந்த வெற்றியைத் தன் முகத்தில் தேக்கிக் கொண்டு பேசுகிறாள்.

“யம்மா. ஒரு விசயம். ஏரியில கண்டமானிக்கும் மணல் எடுக்கிறாங்க. ஒரு பக்கம் பூராப் பள்ளமாயி, மதகுப்பக்கம் தண்ணிர் பாய எடமில்லாம செய்யிறாங்க. அத்தோட, விளை நிலமெல்லாம் வித்துப் போட, ரியல் எஸ்டேட்காரங்க வந்து ஆசை காட்டுறாங்க கூலி கொடுத்துக் கட்டுப்படியாவுல, வித்துப்போடலாம்னு விக்கிறாங்க. நாங்க என்ன ஆனாலும், இனி இந்த மண்ணை வுட்டுப் போகமாட்டோம்.”. இவர்களில் சிலர் சங்கம் என்று இயங்குகிறார்கள். பொதுநலம், சுத்தம், சுகாதார வசதி, விளக்கு வசதி குறித்து பஞ்சாயத்து நிர்வாகத்துடன் மின்துறைக்காரருடன் பேசித் தீர்வு காண்பதும் உண்மை. இவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் தன்னம்பிக்கையும், பொது அக்கறையும், கண்டு வியப்பாக இல்லை?

ஒரு பெண் வங்கியில் 'லோன் எடுத்து' மாடு வாங்கினாள். அந்த மாடு வந்த நாளிலிருந்து சரியாகக் கரக்கவில்லை. ஐந்தாறுமாதங்கள். அப்படியும் இப்படியும் தள்ளினாள்.ஒருநாள் அது நோவு கண்டு இறந்துபோயிற்று. டாக்டர் பார்த்து, அதன் நோவு, சாவு இரண்டுக்கும் கொடுத்த சான்றிதழ் இருக்கிறது. வங்கியினரிடம் அதற்கான காப்பீட்டுத் தொகையினால் கடனை ஈடுசெய்ய வேண்டும் என்று போகிறாள்.

வங்கியினரோ, அதன் காதில் கடன் பெற்றதற்கான வளையம் இருக்குமே, அந்த அத்தாட்சியைக் கேட்கிறார். மாடு மேயப்போன இடத்தில் எங்கோ அது விழுந்து தொலைந்து போயிற்று. அதைத் தேடிப் பார்த்துக் கிடைக்கவில்லை. அவளுக்கு அந்தக் கடனை அடைக்க வழியில்லை என்று சொல்கிறார்கள்.

‘தான் எந்த வருஷம் பிறந்தோம்’ என்றுகூடத் தெரியாமல் இருந்த நிலை மாறிவிட்டது. இவள் இன்று வங்கிக்காரரிடம் இதற்காக நியாயம் கேட்கப் போகத் தயங்கவில்லை. டாக்டர் நோவுக்குச் சிகிச்சை செய்ததும் அது இறந்து போனதற்கான அத்தாட்சியும் பொய்யா? அதைவிட அந்தக் கம்மல் பெரிதா? அது மாடு மேயப் போன இடத்தில் புதரிலோ எங்கோ, குட்டையில்கூட விழுந்திருக்கக்கூடாதா? என்று எதிர்த்துச் சட்டம் பேசத் துணிவு பெற்றிருக்கிறாள்.

இந்தப் பயிற்சி பெற்ற பெண்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் முதிய பெண்மணியொருத்தி ஆச்சரிய மாக, “இப்படி ஒரு அதிசயம் பார்க்கலாம்னு எங்களுக்குத் தெரியலியே? நாங்களும் சாணி - எருச் செமந்தோம், ஆடுமாடு மேச்சோம். ஆனான பாடும் பட்டோம். பாதியும் சாவியும் பதருமாப் போச்சு உழுதவன் கணக்கு ஒழக்குத் தேன்னு இருந்தமே?” என்று முணுமுணுக்கிறாள்.

இவளுக்கென்றிருந்த கையகல பூமியையும் விற்று எடுத்துக் கொண்டு மகன் பட்டணம் பெயர்ந்துவிட்டான். இப்போது இந்தத் தள்ளாத காலத்தில் புல்லறுத்தும் களையெடுத்தும் ஊர்த்தயவில் கால் வயிற்றுக் கஞ்சி குடிக்கிறாளாம்.

கிராமத்துப் பெண்கள் சக்தி பெறுகிறார்கள். அறிவியலும் தொழில் நுட்பமும் இவர்களை மேலும் சமுதாயப் பொறுப்புடையவர்களாக இயங்கச் செய்யும். இவர்கள் தங்கள் மக்களைக் கல்வி கற்க அனுப்புவதில் மிகவும் கருத்தாக இருக்கிறார்கள்.

“ஏம்மா? எத்தினி பிள்ளைங்க உங்களுக்கு?”

“ரெண்டு பொண்ணுங்க.”

“பெரியவங்களா?”

“ஒண்ணு ஆறு வயசு, இன்னொன்னு நாலு வயசு. ரெண்டும் ஸ்கூலுக்குப் போகுது.”

‘மூணாவது புள்ள வேணுன்னு ஆசையா?”

"இல்லங்க. ஆபரேசன் செய்துக்கிட்டேன்.”

"ஏ.? உங்கூட்டுக்காரர், மாமனார், மாமியார் பிள்ள வேணும்னு சொல்லல?”

"அவங்க சொன்னா, ஆருங்க இமுசப்படுறது? ஏற்கனவே இந்த காக்காணியும் வித்துப் போட்டாங்க. குடிச்சிக் குடிச்சி, குடல் ஆபரேசன் பண்ணிட்டு வேலைக்குப் போக முடியாம உக்காந்திருக்காங்க இப்பத் தான் எதுனாலும் வாரத்துக்குப் பயிர் பண்ணலான்னு தோணுது. இந்தப் புதுமுறை வந்த பெறகு தெரிஞ்சிட்ட பெறகு, அந்தக் காக்கானிய ஏன் வித்துப் போட்டோம்னிருக்கு.”

பெண் தானே முடிவெடுக்கும் வளர்ச்சி பெற்று வருகிறாள்.

இவளால் குடும்பத் தலைமையை ஏற்க முடியும். குடிக்கும் புருசனை, அறியாமை இருளில் மூடப்பழக்கங்களைப் பற்றி இருக்கும் முதிய பெண்களை, மாற்ற முடியும். பொது நிர்வாகங்களில் பொறுப்புடன் பங்கெடுக்க முடியும். ஊருக்கு எது நன்மை, சமுதாயத்துக்கு எது நன்மை என்பதை நான்கு பேருடன் கூடிச் சிந்தித்துத் தெளிவாக ஒரு முடிவு செய்து செயலாற்ற முடியும்.

சில இடங்களில் இப்பெண்கள், கூடிப் பொருள் சேகரித்து முதல் போட்டு, தொழில் பண்ணவும் முன் வந்திருக்கிறார்கள்.

உழவு கடினம். ஆனால் பெண் எளிதாக உழவு செய்யும்படியாக ஒரு சாதனம் உருவானால் அந்தப் பிரச்னை தீருமே?

பெண் தொழில் சாதனையாளர் ஒருவர், அதற்கான புதிய இயந்திர சாதனம் ஒன்றை உற்பத்தி செய்ய முனைகிறார். அதைக் கிராமத்து எளிய விவசாயப் பெண் ஒட்டிப் பார்த்து குறை நிறை கண்டு, மேலும் தரமாக்க யோசனைகள் நல்குகிறாள். தலைமுறை இடைவெளிகள், மேல்-கீழ், அதிகாரி, ஊழியர், பயிற்சியாளர் - மாணவி - நகரம் - நாட்டுப்புறம் என்ற எல்லா நிலைகளிலும் உள்ள இடைவெளிகள் பரிவாலும் சமுதாய அக்கறையினாலும், முன்னேற்ற ஆர்வத்தினாலும் அடிப்பட்டுப் போகின்றன.

பயிர் வளர்ச்சியைத் திசைமாற்ற களைகள் முளைக்கின்றன; பூச்சிகள் வருகின்றன. சுற்றுப்புறச் சூழலின் நச்சுக்கிருமிகள் அதன் துளிரையே வேரையே கடிக்கின்றன.

இது நெற்பயிரை மட்டும் குறிப்பாக்கவில்லை.

சமுதாய மேம்பாடாகிய புதிய வளர்ச்சியின் ஆரம்ப கட்டத்திலேயே இந்தச் சூழல் பாதிக்கக்கூடும்.

வீட்டில் ஆண் பொருளிட்டி நிர்வாகம் செய்யும் போது, வீட்டுச் செலவுக்குக் கொடுத்த பணத்தில் பெண் எப்படியும் மிச்சம் பிடித்திருப்பாள் என்று நிச்சயமாகத் தேடுவான். அவள் கைப்பொருள் நாசமாகாது. மிஞ்சினாலும் அது கம்மலாக, மூக்குத்தியாக, கைவளையலாக, ஆபத்துக் காலத்தில் கை கொடுக்கக்கூடிய பொருளாகவே இருக்கும். இன்று பெண்ணே நிர்வாகம் செய்ய முன்வந்தபிறகு, அவளுக்கு முன்னெப்போதைக் காட்டிலும் பொறுப்பும் அதிகமாகிறது.

ஆனால், இவர்கள் சிந்தனையைக் கவர்ந்து இழுக்க, கைப்பொருளைப் பறிக்க, ஆசை காட்டும் எத்தனையோ தந்திரங்களை இன்றைய வாணிப உலகு கையாள்கிறது. வானொலிப் பெட்டியும், தொலைக்காட்சிச் சாதனமும், இன்று குடிசையிலும் கோலோச்சும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. அது நியாயம். வெளி உலகை அறிய முடிகிறது.

ஒரு பயிற்சி பெற்ற பெண் சொல்கிறாள். “நா காலையிலே ரேடியோ கேட்பேன். அதுல உழவர்களுக்கு சொல்லுவாங்க. இப்பதா, ஒரு டி.வி.வாங்கிருக்கிறோம். கலரில்ல. எப்பன்னாலுந்தா பாக்க நேரம் இருக்கும். ஆனா, கண்டமானிக்கும் பொம்புளகள ஆடவுடுறாங்க புள்ளங்க ரெண்டும் பாக்குதுங்க.நெல்லால்ல." ஆனால் அதில் வரும் சோப்பு, முகப்பசை, பவுடர், நகை, காபி, டீ, மால்ட், சாக்லேட் எல்லாம் வாங்கி அநுபவிக்கும் ஆசை பெரும்பாலான பெண்களுக்கு அடங்காமல் இருக்கிறது.

“பொட்டிபோல இருக்கு மாவ வச்சி மூடி சுச்சி போட்டா, ரொட்டி வருது, கிளாசுகுப்பி போல ரெண்டு செவுத்துல மாட்டி குழாய் போடுறாங்க சுத்தமா தண்ணி வருமாம். இட்டிலி மாவரைக்கிற கிரைண்டர்போல வூடு துடைக்கிற மிசினு, துணி துவைக்கிற மிசினு இதெல்லாம் வூட்டுல கொண்டாந்து வய்க்கிறாங்களா - இங்கியே வந்திருக்குதாம்”

“அரியாமனையில் உக்காந்து, எல்லாம் சீவிப் போடுவோம். அரிஞ்சி போடுவோம். அதுக்கு ஒரு மிசினாமில்ல?”

“ஐயோ அது எவ்ளோ நெல்லா சுத்தமா சக்குசக்குனு சீவுது? எப்படிண்ணாலும், அது ஒண்னு வாங்கனும். இட்டிலி ஆட்டுற மிசினு கிரைண்டர் புது மாதிரியா வந்திருக்கு. துக்கவே வேணாம். சலிச்சி மாவக் கொட்டிடலாம். புதுசாப் பொட்டிபோல கிளாஸ் மூடி. அஞ்சாயிரம்.”

“அதெல்லாம் வாணாம். தோச சுடுற கல்லு, ஒட்டாம வருது. அது ஒண்னு மட்டும் வாங்கனும்க்கா. அது நானுத்துச் சில்லறைதே.”

“ஆங். எங்கூட்ல கெடக்குது, எங்க மாமியா காலத்துக் கல்லு. நெல்லா தோசைவரும். இதெல்லாம் சும்மா. அதுல ஏதோ பூசிருக்காங்களாம். அது பூடிச்சின்னா ஒட்டும்.”

“அப்ப டிவில வர்ற தெல்லாம் பொய்யா?” “அடச்சீ! அதுல வர பொம்புள சீவிச்சிங்காரிச்சிட்டுச் சிரிச்சுப் பேசுறா. ஆயிரம் சோப்புக் காட்டுறா. நாம வாங்கிபோட்டுப் பாக்குறப்பதான பிரியுது. நமக்குத் தேவை எதுவோ அத்தத்தான் நாம தீர்மானிச்சிக்கணும். புள்ளங்களுக்குச் சத்துள்ள சாப்பாடு குடுக்கணும். தானியம் முளைட்டி தேங்காய் வெங்காயம் போட்டு தாளிச்சிக்குடு. பாலு பாய்ச்சிக் குடு புள்ளிக்கும் உனுக்கும் பால் இல்லாம காசுக்கு வித்து, காசு வாங்கி, அவம் போடுற புட்டா மாவெல்லாம் வாங்கனுமா? கொல்ல கீரை, ஆராக் கீரை, தவசுக் கீரை, பண்ணைக் கீரை, பொன்னாங்கண்ணி, இதெல்லாம் சேத்துச் சாப்புடறோம்.."

"ஆமா நெலத்துக்குக்கூட உயிர் உரம்னுசொல்லுறாங்க. வேப்பம் புண்ணாக்கு பூச்சி வராதுன்னு சொல்றாங்க போடுறம். நம்ம சுத்துப்புறத்துக்கு, மரம் நட்டுப் பயிர் பண்ணச் சொல்றாங்க. இதெல்லாம் சரி, நம்ம சுத்துப்புறத்தை, தூய்மையா வச்சிக்கணும். ரெண்டு புள்ளதான்னு தீர்மானிச்சிட்டோம். ஆணானாலும் பொண்னானாலும் படிக்க வைக்கிறோம். ஒரு தொழில் செய்ய ஆளாக்குறோம். அதெல்லாஞ்சரி, ஆனா, முகத்துல அழுத்திக்கிற மிசின் வேணும் - தலையச் சுருட்டிவுட்டுக்கிற- ஏதோ ஒண்ணு வேணும், மத்து இழுக்கிறாப்போல ஒண்ணு அதுல பயிற்சிப் பண்ணா, ஒடம்பு நல்லாவும்ன்னு காட்டுறாங்க. இப்பவே பணம் கட்டுங்க, பொருள் உங்கூட்டுக்குத் தேடி வரும்னு சொல்றாங்க. ஒடனே, பாலுவித்த பணத்தையோ, சீட்டுநாட்டு எடுத்த காசையோ, கட்டி வாங்கிட்டு வரதா?"

“அட இல்லம்மா, நமக்கு என்ன வருமானம்? நமக்கு முதத் தேவை என்ன? அத்தப் பாக்கணும். குடிக்கக் கூழு அடிப்படைத் தேவை. அதே கஷ்டமா இருக்கறப்ப, நாலு பேருக்கு மெய்ப்பா இருக்கணும்னு கொப்புளிக்க பன்னீரு வாங்கறது தா தப்பு:”

“நம்ம ஊரு நல்லா இருக்கணும். புள்ளங்க நல்லா வளரணும். அவங்க வெளில போறாங்க. நல்லதவுட கெட்டதுதா நெறிய இருக்கு. வளர்ற புள்ளங்க சூதுவாதறியாம வுழறாங்க. போதை மருந்து, கஞ்சா, மாத்திரை இதெல்லாம், நல்லது கெட்டது தெரியாம, பயந்தெரியாம எதையும் புதுசா அனுபவிக்கனும்னு தா வுழறாங்க. அதுக்கு நாமத்தான் அவங்களுக்குச் சின்ன புள்ளலேந்து, நல்லது கெட்டது தெரிஞ்சிக்க, ஒழுக்கம்ங்கறது நம்மப் பாத்துதா தெரிஞ்சிக்க நடக்கணும். அப்பன் நிதம் குடிச்சிட்டு வந்து ஆத்தாள உதச்சாப் புள்ளை எப்பிடி நல்லொழுக்கம் கத்துக்கும்? பொம்புள புருசன்கிட்டப் பொய் சொல்லிட்டு, ஒரு தப்பான காரியம் செஞ்சா, அத்தைப் பாத்திட்டிருக்கிற புள்ளைங்க எப்படி ஒழுக்கம் கத்துக்கும்?

“இன்னைக்கு மொத்த சமுதாயத்திலும், பொய்யும் புரட்டும் வஞ்சகமும் மோசடியும் வந்திருக்குதுன்னா, அது இப்படி வீடுகளிலிருந்துதான் பிரச்னைகளால் சீர் குலைவாப் பெருகுது. நாம வீட்டை ஆரோக்கியமா ஆக்கணும்.”

“ஆரோக்கியமா ஆக்கணும்னு பொம்புள மட்டும் சொன்னாப் போதுமா? இத சரோசா வூட்டுக்காரரு, இந்த மண்ணு வாணாம்னு லாரி ஓட்டப் போறாரு லாரில சரக்குக் கொண்டுட்டு, ஆந்திரா போறேன், மைசூரு போறேன்னு சொல்றாரு, அப்பப்ப வாரப்ப, ஏதோ ஒரு பூவு, அலுவா, புள்ளைங்களுக்குத் துணின்னு கொண்டிட்டு வராரு, அத்தோட பயமில்லாம இருக்க முடியிதா?.”

“ஆமாம்மா. குட்சிப்போட்டு வண்டி ஓட்டுறாங்க. லாரி கவுந்திச்சி, வண்டி மோதிச்சி, ரோட்டு சாவுன்னு டி.வி.ல போட்டுக் காட்டுறப்பலாம் கப்பு கப்புன்னு நெஞ்சடிக்குது. முருகா....ன்னு சொல்லிக்கிறேம்மா..."

"அதொண்ணுமட்டுமில்லைம்மா... இப்ப எட்டுப் பது நா வூட்டுக்கு வாராம, ஒரு நெல்ல சோறு காணாம, இருக்காரு இல்ல? . அவுரு எங்கே போறாரு, என்ன சாப்பிடுறாருன்னு தெரியுமா?"

"இல்ல மெய்தாம்மாதா, போன தபா ஒருமாசமாயிட்டது இன்னொரு ஆளு இல்ல. நானே இன்னொரு ட்ரிப் போயிட்டு வாரன்னாரு. சம்பாதன இன்னாவோ நெறியதா. ஆனா, வெளியில ரொம்ப செலவுப் பண்ணிடறாரு இப்பதா தோணுது. இந்த உழைப்பை மண்ணுல இவரு குடுத்தா, நா உழவோட்ட, நாத்துக்கட்ட, அறுப்பு அறுக்கன்னு ஆளு தேடிட்டுப் போக வாணாமில்ல?..”

சரோசாவின் இந்தக் கவலை மேலோட்டமானது இல்லை. இதற்கு வேரோட்டம் இருக்கிறது.

“சரோசா.... இப்பதா, டி.வி. வானொலிலல்லாம் போடுறாங்க. கூச்ச நாச்சமே இல்லாம போச்சின்னு ஒரு பக்கம் சொல்லுறம், முன்னெல்லாமும், கட்னவள வுட்டுப் போட்டு எங்கியோ போயி, சீக்குக் கொண்டாந்த ஆம்புளைங்க உண்டு. ஆனா அப்பல்லாம் இப்பிடி இந்த மாதிரி 'எய்ட்ஸ்' சீக்கு இல்லை. இது எப்படியோ, நம்ம நாட்டில வந்திடிச்சி. இதுக்கு மருந்தே இல்ல. மருந்தே கெடயாது. அப்பிடின்னு சொல்றாங்க....”

“அப்படித்தான் சொல்றாங்க. ஒருவனுக்கு ஒருத்தின்னு வாழணும்னு நெறியும் சொல்லிட்டே இருக்காங்க. இப்படி ஒரு புரையோடுற ஓட்டய வச்சிட்டு நாம என்னத்த முன்னேற்றம் காணுவம்? நெனைச்சா பயம்மா இருக்கு. ஆம்புள ஒருமாசம் கழிச்சி வாராங்க. ஏதோ கண்ணுல கண்டத ஆசயா வாங்கிட்டு வாராங்க... இன்னும்... எத்த வாங்கிட்டுவாராங்கன்னு எப்பிடிம்மா தெரியிது? அது முதமுதல்ல தெரியவே தெரியாதாமே? ‘எச்.ஐ.வி.' தொற்று இருக்குதான்னு கண்டாலே கவனமாக இருக்கணும்...”

“அது மூச்சுப்பட்டாக்கூட ஒட்டிக்கும்ங்கறாங்க? புள்ளங்கள எடுத்துக் கொஞ்சுவாங்க, முத்திக்குவாங்க. நா எப்பிடி வாணான்னு சொல்ல? புள்ளங்களுக்குகூடத் தொத்திக்கும்னு சொல்றாங்க...”

“அப்டில்லாம் இல்லியாம். புள்ள தாய் கருப்பத்திலே பத்திட்டாத்தான் அப்படி இது ரத்தத்தின் ஒட்டு மூலமாத்தான் வருமாம். அதான் இப்பல்லாம் ஊசி போட்டா ஒடனே அத்தைக் குப்பத் தொட்டில போடுறாப்பில அல்ல வச்சிருக்காங்க? முன்ன மாதிரி ஊசியே போடுறதில்ல. ஒரே ஊசியில பலருக்கும் குத்துனா, ரத்தம் மூலமா அது பரவ வழி இருக்குதாம்...”

“மெய்யாலுமா?... இப்ப, எங்க மூத்தாரு மவ, போன மாசம், இத இங்க மெயின் ரோட்டுல போறப்ப வண்டி மோதி வுழுந்திட்டா, ஆசுபத்திரிக்கு செங்கல்பட்டுக்கு இட்டுப்போயி ரத்தம் குடுத்தாங்க. அதுல இருக்காதா? ஆரோடயோ ரத்தம்தான?”

“...அதெல்லாம் ஆசுபத்தியில இப்பல்லாம் 'எய்ட்ஸ்’ கிருமி இல்லாத ரத்தம் தா வச்சிருப்பாங்கன்னாலும், பொம்புளங்க நாமதா காபந்தா இருக்கணும்மா... நாமதான் அநுபவிக்கிறவங்க...? நாமல்லாமே சுகாதார நிலையத்துக்கு போயி இதெல்லாம் வெவரமா தெரிஞ்சிட்டு வரணும். பொம்புளதா இன்னைக்கு மலபோல நிக்கணும். இந்தக் குடிச்சிட்டு வர ஆம்புளகளயெல்லாம் பொம்புளகள்ளாம் ஒண்ணா சேந்து தெருமுனையில் நின்னு மடக்கினா என்ன?.”

“அது நெல்ல யோசனதா. ஆனா, ஏம் புருசன் குடிக்க மாட்டாரு அவுரு இராமர். நா ஏண்டி வாரணும்னு குடிக்காத ஆளுன்னுற பொருளில இருக்கிறவ வருவாளா?”

“அதாங் கூடாது. இத பாரு; நாம, எத்தினியோ விதத்திலே வேறவேறன்னு நினைச்சிட்டிருந்தோம். இந்தப் பண்ணை மகளிர் திட்டம், நமுக்கும் ஒரு கவுரதி, பவுர் குடுத்திருக்கு ஏ எல்லாரும் வித்தியாசமில்லாம, ஒருத்தொருத்தர் உதவிசெஞ்சிக்கிட்டு, கூட்டா, இருந்ததாலதான், அப்படி, இதுலயும் கூட்டா நிக்கணும்....... லச்சுமி வூட்டுக்காரு, மின்ன வூட்ட வுட்டு அவ வெளியே போனா கூச்சல் போடுவாரு இப்ப?. உழவர் பயிற்சின்னு புதுசா, தொண்ணு வந்தாலும் அவருக்குத் தா காயிதம் வருது. போயித் தெரிஞ்சிட்டு வாரா. அவுரு ஒண்ணுமே சொல்லுறதில்ல. ஏன் லச்சுமி?”

‘கம்மாவா? அஞ்சு வருசத்துல, வூடுகட்டியாச்சி, பையனும் படிக்கிறா, பொண்ணுக்குக் கலியாணம் செய்யப் பேறா.”

“அதா, அவ அண்ண மகந்தானே?”

“அதில்ல.”

“ஏ...?”

“அண்ணிக்காரிக்கு முப்பது சவரன் வேணுமாம். கையில முப்பதாயிரம். எங்க பொண்ணு சொல்லிடிச்சி. அவன் படிப்பு நானும் படிச்சிருக்கிற, அவனைவிட உழைக்க முடியும். எனக்குதா அவ சவரனும் பணமும் குடுக்கணும்னு கண்டிப்பா சொல்லிடிச்சி! பின்னென்ன?”

பெண்கள், இப்போதெல்லாம், யாருக்கோ தன்னை ஒப்புக் கொடுத்தபின், இயந்திரம் போல் தன்னுணர்வின்றி இயங்குவதில்லை.

அவள் தன்னைப் புரிந்து கொள்கிறாள்; தன் உழைப்பைப் புரிந்து கொள்கிறாள்; தன்னை முடக்கும் சக்திகளை, ஆரவாரமின்றியே கழற்றிவிட அவள் தெரிந்து கொண்டுவிட்டாள். அவள் இப்போது தன்னை, தாயை, தாய்மண்ணை, மக்களை, குடும்பத்தை, தன்னை மதித்துப் போற்றும் புருஷனை நேசிக்கத் தெரிந்து கொண்டு விட்டாள். எனவே, இவள் முன்னேற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் குறுக்கே வரும் எந்தச் சக்தியையும் இவள் கண்களை மூடி அநுமதிக்கமாட்டாள். இவளுடைய வழி மரபு வழிதான். ஆனால் இதே வழியில் தளைகளை நீக்கத் தெரிந்து கொண்டதால், புதிய உலகம் அமைக்கும் நம்பிக்கை ஒளி மின்னுகிறது.


‘சென்னை வானொலி' - 1998

ஆசிரியை திருமதி. ராஜம் கிருஷ்ணன்

1952-ல் நடந்த அகில உலகச் சிறுகதைப் போட்டியில் இவரது ‘ஊசியும் உணர்வும்’ என்ற சிறுகதை தமிழ்ச் சிறுகதைக்குரிய பரிசைப் பெற்று ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ வெளியீடாக வந்த உலகச் சிறுகதைத் தொகுப்பில் அதன் ஆங்கில வடிவம் இடம் பெற்றது.

1953, கலைமகள் நாராயணசாமி ஐயர் நாவல் பரிசைப் பெற்றது. இவரது ‘பெண்குரல்’ நாவல்.

1958-ல் ஆனந்தவிகடன் நடத்திய நாவல் போட்டியில் இவரது ‘மலர்கள்’ நாவல் முதல் பரிசைப் பெற்றது.

1973-ம் ஆண்டில் சாகித்திய அகாதமி விருதை ‘வேருக்கு நீர்’ என்ற நாவலுக்காக இவர் பெற்றார்.

1975-ல் சோவியத்லாந்து நேரு பரிசை கோவா விடுதலைப் போராட்டத்தைச் சித்திரிக்கும் இவரது ‘வளைக்கரம்’ நாவல் பெற்றது.

1980-ல் இலக்கியச் சிந்தனையின் பரிசை இவரது ‘கரிப்பு மணிகள்’ நாவல் பெற்றது.

1982-ல் இலக்கியச் சிந்தனைப் பரிசையும் பாரதீய பாஷா பரிஷத் பரிசையும் பெற்றது இவரது ‘சேற்றில் மனிதர்கள்’ நாவல்.

1987-க்கான தமிழக அரசின் பரிசை தமது ‘சுழலில் மிதக்கும் தீபங்கள்’ நாவலுக்காகப் பெற்றார்.

1991-ல் தமிழக அரசின் திரு.வி.க. விருதைப் பெற்றார் இவர்.

1994-ல் சரஸ்வதி பரிசை இவரது ‘அவள்’ சிறுகதைத் தொகுப்பு பெற்றது.

1995-ல் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க விருதைப் பெற்றார்.

1996-க்கான ‘அக்னி’யின் அட்ஷர விருதைப் பெற்றார்.

திருச்சி மாவட்டத்தில் 5.11.1925-ல் பிறந்த இவர், ஒரு நாவலுக்கான பொருளை முன்பே திட்டமிட்டு, சம்பந்தப்பட்ட இடங்களில் பிரயாணம் செய்து, மக்களின் வாழ்வைக் கண்டறிய அங்கேயே தங்கி உய்த்துணர்ந்த பின்னரே, நாவலை எழுதுகிறார். இதுவே இவரது தனிச் சிறப்பாகும்.