உள்ளடக்கத்துக்குச் செல்

புதியதோர் உலகு செய்வோம்/பெண்கள் படைப்பில் பெண்கள்

விக்கிமூலம் இலிருந்து

26. பெண்கள் படைப்பில் பெண்கள்


பெண்களே படைப்பாளிகள். தாயாக அமுதூட்டி ஒரு மகவை உருவாக்குகிறாள். உணவு படைத்து, சமுதாயத்தையே உருவாக்குகிறாள். மொழியை அவளே கற்பிக்கிறாள். அவள் மகிழ்ச்சியும் சோகமும் பாடல்களாக உருவாகி ஒவ்வொரு மொழியிலும் எழுதா இலக்கியமாகி இருக்கின்றன. பெண் உணர்ச்சிமயமானவள். படைப்புக்கு வேண்டிய மூலதனம் அதுதான். எழுத்தறிவும் கல்வியும் அவளுக்கு மறுக்கப்பட்டிருந்த நாட்களிலும் அவள் உணர்வுகள் அத்தகைய பாடல்களால் எழுதா இலக்கியங்களாக உருவாயின. தமிழில் இருபத்தாறாண்டுகள் பத்திரிகை நடத்தி - 116 நாவல்கள் எழுதிய முன்னோடி, வை.மு.கோதைநாயகி, எழுதப்படிக்கத் தெரியாதவர். பக்கத்து வீட்டுக்காரி எழுதத் தெரிந்தவள். அவளிடம் கதைசொல்லி எழுதச் சொன்னாராம். இளம் பருவ மணம் ஒத்த கணவர் எழுத்தாற்றல் வளர்ந்தது. இசையும் கேட்டே பயின்று இசைக்கச்சேரிகள் செய்தார். தேச விடுதலைப் போராட்டத்தில் முழுவதுமாக ஈடுபட்டார். இந்தப் பெண்மணிக்கு சமூக எதிர்ப்புகள் நிறையவே இருந்தது. பாரதியாரின் எதிர்வீட்டில் புகுந்த இடம். “உள்ளே யார் சுவாமி பாடுகிறார்கள்? இதோ நான் ஒரு பாட்டு எழுதியுள்ளேன், கூப்பிடுங்கள்!” என்று அந்த மாக் கவிஞர் அழைத்தும் மருமகளை வெளியே அழைக்கத் துணியாத காலம். கவிஞர் திண்ணையிலேயே பாடிக் காட்டி, துண்டுக் கடிதாசிப் பாடலைக் கொடுத்தால் வாங்கிச் சென்று உள்ளே கொடுப்பாராம். அந்தப் பாடல் கணீரென்ற குரலில் அப்படியே கேட்குமாம். பத்திரிகைகளைச் சநாதனம் எரித்துத் தன் எதிர்ப்பைக் காட்டிக் கொண்டதாம். அவரைப் பற்றி எழுத வேண்டும் என்று நான் அறுபதுகளின் கடைசியிலோ, அதற்குப் பின்னோ, அவர் வீட்டுக்குச் சென்றேன். வை.மு.கோ.வின் கணவர், பாரிச வாயுவினால் பீடிக்கப் பட்டுப் படுக்கையில் இருந்தார். அப்போது அவர் கண்களில் நீர் வழிய, இந்த விவரங்களைக் கூறினார். எனக்கு எழுத வேண்டும் என்ற ஆர்வம் மிகுதியாயிற்று. ஏற்கனவே டாக்டர் ரங்காச்சாரி, அமுதமாகி வருக, கையெழுத்துப் பிரதிகளுடன் சிரமப்பட்ட அநுபவத்தில், இதை வெளியிட யாரேனும் முன்வருவார்களா என்று ஆராய்ந்தேன். ஆனால், ஒட்டுமொத்தமாக எனக்குக் கிடைத்த பதில் மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. “அட என்னம்மா நீங்க? அவர்களெல்லாம் இலக்கியமா படைத்தாங்க? அவரைப் போய் எழுதிக்கிட்டு?” இதுமட்டுமில்லை. அவர் நடத்தையில் மாசு கற்பித்தவர்களும் உண்டு. நான் ஒடிந்து போனேன். தமிழ் நாவல் நூற்றாண்டில் நாவல் வரலாறு எழுதியவர்கள், கோதைநாயகியை விட்டுவிட்டார்கள். அதுகூடத் தமிழ்நாட்டின் பெண்கள் தலைவிதி என்று கருதலாம். ஆனால் ஸீஸதாரு லலிதா தொகுத்த “பெண்கள் எழுத்து - இந்தியாவில்” என்ற இரு பகுதிகளிலும் கோதைநாயகியின் வெறும் பெயர் போகிற போக்கில் குறிக்கப்படுகிறதே ஒழியே ஒரு நாலு வரி விவரம்கூட இல்லை. அவர்கள் பொதுக்குழுவில், தமிழ்நாட்டுப் பெண்மணி இடம் பெறாமல் இல்லை. கோதைநாயகியை வேண்டுமென்றே தவிர்த்திருக்கிறார்கள். இன்று பெண்கள் படைப்பில், பெண் எவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறாள் என்பதை ஆராயலாம். பெண்ணியமா, சமத்துவமா, மார்க்சியவாதப்பாதையில் படைக்கப்பட்டவளா என்று வண்ணம் பூசலாம். ஆனால், பல்வேறு அரங்குகளில் பல பரிமாணங்களுடன் முன்னோடியாகத் திகழ்ந்த பெண்மணி எந்த அரங்கிலும் ஒத்துக் கொள்ளப்படவில்லை. அகவயப்பட்டு, புறவயமாகவும், ஒரு பெண் இன்னும் சுயம் காண இயலாத நிலையில்தான் போராடுகிறாள். அந்தப் போராட்ட பிரதிபலிப்பைத்தான் 'பெண்கள் படைப்பில் பெண்கள்’ என்ற தலைப்பில் அடையாளம் காண முயலுவதாக நான் கருதுகிறேன். முதலில் பெண்ணுக்கு எழுதும் உந்துதல் எப்படி வருகிறது? கோதைநாயகிக்குக் கற்பனைத்திறன், அந்த உந்துதலை அளித்திருக்கலாம். பெரியார் பாசறையில் உருவான பெண் எழுத்தாளரின், சமூக அநியாயங்கள் - பெண்ணைப் பாதித்ததால் அவற்றை எதிர்த்து எழுதும் உந்துதல் ஏற்பட்டது. மூவலூர் இராமாமிர்தத்தம்மாளின் 'தாசிகள் மோசவலை அல்லது மதிபெற்ற மைனர்’ என்ற நாவலைப் படித்து நான் பரவசப்பட்டேன் எனலாம். பிற பெண் சமுதாயத்தால் சபிக்கப்படும் அளவுக்கு, ஒரு சாராரை, தெய்வ சம்மதம் என்று காலம் காலமாக இறுக்கப்பட்டு வந்த சமூகக் கோட்பாடுகளை அவர் எதிர்த்தது மட்டுமின்றி, விடுபட்டு, விடுதலை உணர்வைப் பரப்ப, பொட்டறுப்பு சங்கங்கள் நிறுவுவதாகத் தீர்வும் காட்டி இருந்தார். இந்தப் படைப்பை, சமகால ஆண் எழுத்தாளர் ஒருவர் குப்பை என்று விமர்சித்தார். எனவே, பெண்ணை ஒரு நுகர்பொருள் கோணத்தில் காதலி, மனைவி, கைம்பெண் என்ற பல்லாயிரம் ஆண்கள் பிம்பப்படுத்தும் நெறி இங்கே காலம் காலமாக பெண்களின் சுதந்தர சிந்தையையே மதிலாய் மறைத்திருக்கிறது. நாம் மதில்களுக்குள் இருக்கிறோம் என்ற உணர்வு, வெகுகாலம் தலைதூக்கவில்லை. குடும்பம்,பெண் உழைப்பு, கற்புநெறி, மக்களைப் பெறும் திறன், குடும்பத்துக்காக, மக்களுக்காக, கணவனுக்காக உயிரையும் கொடுக்கும் தியாக சிந்தை இவையே அவளை எந்த நிலையிலும் அடையாளப்படுத்தும் நெறிகளாக இருந்தன. கோதைநாயகியின் கணவரும், மற்றவரும் அவருடைய ஆற்றல் பரிமளிக்க உடன்பட்டிருக்கவில்லையெனின், நாவலாசிரியை, பத்திரிகையாசிரியை, இசையரசி, பேச்சாளர், தேசபக்தப் பெண்மணி என்ற மலர்ச்சிகளே வாய்த்திருக்காது. பாரதியாரின் விடுதலைப் பாடல்களைப் பாடிக் கொண்டு தெருவில் ஊர்வலம் செல்லவும், அந்நியத் துணி விலக்கும், மதுவிலக்குப் போராட்டங்களில் ஏனைய பெண்களுக்கும் துணிவு தரவும் ஒரு சக்தி கண்டறியப்பட்டிருக்காது. விடுதலைக்கு முன்னும் பின்னும், பெண்கள் பத்திரிகை எழுத்துகளால் ஊக்கம் பெற்றார்கள். புறவயமான சிறுமைகள், தடைகள், வெளிப்படையாக அகற்றப்பட்டன. பட்டங்கள் ஆளலாம்; சட்டங்கள் செய்யலாம். எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை என்று நிரூபிக்கலாம்.

அப்படி, நிருபிக்கும் வாய்ப்புகளுடன் பேனாவைப் பற்றியவர் டாக்டர் திருபுரசுந்தரி - 'லக்ஷ்மி' என்ற பெண்மணி. அவருடைய அனுபவ ஆற்றலின் நீள அகலம்நம்மைப் பிரமிக்க வைக்கக்கூடியது. அவர் நிறைய எழுதினார். தமிழர்கள் எங்கெல்லாம் பத்திரிகை படித்தார்களோ அங்கெல்லாம் அவர்கள் வீட்டுப் பெண்மணியாக வாசகர் மனங்களில் இடம் பிடித்தார். என்னைவிட நாலைந்து ஆண்டுகள் அவர் முதியவராக இருந்தாலும், இளமையில் நான் படித்த ஆண்கள் பள்ளியில் நாங்கள் இருவர் மட்டுமே பெண்கள். 34,35-கால கட்டம். நெருங்கிய தோழிகள். அவர்தாம் நாடறிந்த எழுத்தாளர் என்பதோ, நான்தான் ராஜம் கிருஷ்ணனாக எழுத்துலகப்ரவேசம் செய்திருக்கிறேன் என்றோ தெரியாத நிலையில் கலைமகள் நாவல்பரிசை நான் பெற்றபோது, அந்தக் காலத்தில் விழாவுக்கு வந்த என் தந்தையால் அடையாளம் கண்டு மகிழ்ச்சியில் பூரித்தார். ‘லக்ஷ்மி' நம் ‘திருபுரம்’ என்று எனக்கு ஏற்கனவே பத்திரிகை மூலமாகத் தெரிந்திருந்த போதிலும், அன்றைய விழாவில் ஏற்பட்ட மகிழ்ச்சி, நான் எத்தனை பரிசுகளைப் பெற்றபோதும் அடையாதது. என் நாவல் 'பெண்குரல்' தேர்வுக்குழுவில் அவரும் இருந்தார் என்று கூறி, நானாக அது இருந்தது கண்டு கட்டித் தழுவி மகிழ்ந்தார். அது பெண்குரல். இன்றும் என் எழுத்துக்களை ஆய்வு செய்பவர்கள், அது பெண்ணியக்குரல் என்று அடையாளப்படுத்துகிறார்கள். பதினைந்து வயதில் திருமணமாகி, ஒரு பெரிய குடும்பத்து இளைய மருமகளாக, அடி வைக்கும் பெண்ணின் வாழ்வில் அகம், புறம் இரண்டு தளங்களிலும் ஏற்படும் அழுத்தங்களே, அந்தக் குரலாக வெளிப்பட்டது எனலாம். குடும்பத்தில், ஒரு பெண் பகலெல்லாம் உழைக்கவும், இளம் தம்பதியினருக்கென்ற ஒரு தனி, அந்தரங்கத்துக்குக்கூட இடமில்லாமல், திருடரைப் போல் அணுக வரும் கணவனை ஏற்று மகிழ்விக்கவும் வேண்டுமா? அவளைப் பார்க்க வரும் ஓர் உறவினனான இளைஞனை வரவேற்று ஒரு தம்ளர் காபி கொடுக்க உரிமை இல்லையா? மாமி, நாத்தி, ஓரகத்தி என்ற உறவுப் பெண்கள் ஏன் அவளைக் குறை கூறும் நோக்கில் பார்க்கிறார்கள்? அவள் தாயையும்கூட, அத்தை பாட்டி இப்படித்தானே குறை கூறினார்கள்? அவள் திருடனைப்போல் வந்த கணவனைத் தள்ளிவிட்டுத் தன்னை வெளியிட்டுக் கொள்கிறாள். ‘பெண்ணியம்’ என்ற பதம் கூடப் பரிசயமில்லாத நாயகி. அந்த அத்தியாயத்தை ‘நான்’ என்ற எனக்குப் பரிசயமில்லாத குரல் எழுதியது. நான் அறிமுகப்படுத்திய அந்த மென்மையான, அடக்கமான, பணிவுள்ள, மரியாதை தெரிந்த இளம்பெண், வளைந்து கொடுக்கவில்லை. மாமி, நாத்தி பற்றிய குற்றங்களை அவனிடம் வடித்து ஆறுதல் தேட முயலவில்லை. இது ஏன்? ஏன் இப்படி நிகழ்கிறது? இந்தக் கேள்வியே அன்று ஒலித்த பெண்குரல். என்னுடைய உரிமை. அடிப்படை உரிமை. நான் பெண் என்பதால், எனக்கு மறுக்கப்படும் உரிமைகள். ஒரு பெண் ஆணைச் சார்ந்துதான் வாழ வேண்டும். அந்தச் சார்பின் அழுத்தமே, குடும்ப உறவுகளில் பெண்களை விரோதிகளாக்குகின்றன. குடும்பம் என்பது குறுகிய வட்டம்தான். பெண்களுடைய வட்டமும் குறுகியதுதான். ஆனால், அந்தக் குடும்பத்தின் சக்தியாக இயங்கும் பெண், கூட்டிலடைப்பட்ட, சிறகுகளை இழந்த கிளியைப் போல் ஆணாதிக்க நெறிகளால் பதப்படுத்தப்பட்டிருக்கிறாள். நமக்குச் சிறகுகள் வந்திருக்கின்றன. கூடுகளும் அன்றுபோல் இல்லை. பறக்க முடியும். பிழைக்க முடியும். எங்கோ ஒன்றல்ல. பெரும்பான்மைப் பலமும் இருக்கிறது. இந்த ஜனநாயக சமுதாயக் கட்டமைப்பில் ஆண்களும் பெண்களும் ஒருவர் உரிமையை மற்றவர் பாதிக்காமல், சுதந்தரமாக வாழ்ந்து உயர முடியும். ஆனால் அது நடக்கவில்லை. ஆணின் நோக்கில் அவள் இன்னமும் நுகர்பொருள்தான். பெண்ணின் படைப்புகள் ஒன்று, குடும்ப நெறியைக் கட்டிக்காக்கும் பழைய அச்சுகளில் இயங்குகின்றன. அல்லது, ஆண்கள் 'சுதந்தரம், பெண் உரிமை பேசல்’ என்ற வண்ணக் கொடிகளை ஏந்தித் தலைமை தாங்குவதுபோல் காட்டும் நோக்கில், பெண்களை அடையாளப்படுத்துவது சமத்துவம் என்ற கருத்தை வைக்கிறார்கள். ஒரு வயது முதிர்ந்த ஆண், ‘பக்கத்து வீட்டுத் திருமணமான பெண் கூந்தலை ஆற்றிக் கொண்டு நிற்கிறாள். அவள் அழகை என்னென்று சொல்வேன்? அழகை ரசிப்பவன் நான்?' என்று எழுதிப் பேராசிரியன் ஆகலாம். ஆனால் ஒரு பெண் அப்படி ஓர் ஆணை எழுதினால், அவளுக்கு ஓராயிரம் கண்டனங்கள் வரும். இதேபோல் ஓராண், 'பெண் பாலியல் ரீதியாக எத்தகைய அறிவாளி ஆணையும் முதுகெலும்பற்றவனாகச் செய்வாள். அவள் முட்டாளாக, அழகற்றவளாக இருந்தாலும் இந்த ஆற்றலால் ஆண்வர்க்கத்தையே செயலிழக்கச் செய்து தன் பசியைத் தீர்த்துக் கொள்வாள்’ என்று அப்பட்டமாக எழுத முடியும். பாராட்டுகளும் பெறுவான்.இந்தப் போக்கைப் பெண்மக்களும் பாராட்டிப் புகழும்போதுநெஞ்சில் எங்கோ இடிக்கிறது. உண்மை இதுவா? இது ஒன்றுதான் பெண்மையா? பசி யாருக்கு? உணவுக்கா, அதை அழிப்பவருக்கா? காலம் காலமாக இந்தப் பெண் விரோதக் கருத்தியலில் அவள் பதப்படுத்தப்பட்டு, நானே குற்றவாளி என்று தலைகுனிகிறாள். நான் பெண்.பெண். பாதுகாக்கப்பட வேண்டிய பிண்டம். என்னைப் பாதுகாக்க ஓராண் அவசியம் தேவை என்ற நிர்ப்பந்தமே, வரதட்சணைக் கொலைகளில் இருந்து, பெண் கருவழிப்பு வரை, வளர்ந்து கொண்டிருக்கிறது. எனவே, பெண் எழுத்தில், மிக மிக அருமையாகவே கேள்வி கேட்கும் உட்குரல் பதிவாகிறது.

பல ஆண்டுகளுக்கு முன், ‘அம்மா ஒரு கொலை செய்துவிட்டாள் என்ற சிறுகதை ஒரு சிறுமியின் குரலாகப் பதிவாயிற்று. (அம்பை) ஏனெனில், உயர்சாதிக் குடும்பங்களில் திருமணமானபின் பூப்பெய்துதலே மங்களம். அதற்குமுன் அவள் பூப்பெய்துதல் களங்கம். என்னுடைய இளமைப்பருவ அனுபவங்கள், எங்கள் வளர்ச்சியைப் பிறர் கண்டு அச்சுறுத்தும்போது ஏற்படும் குற்ற உணர்வுகள், ஒரு பெண் குழந்தை சபிக்கப்பட்டவள் என்ற நிலைக்குத் தள்ளக்கூடியவள். ஒருபத்து வயசுப் பெண் - பன்னிரண்டு வயசுப் பெண், காவேரிக்குச் சென்று குளிக்கும் ஆனந்தம் கண்காணிக்கப்படும். இதனாலேயே இளம் பருவத் திருமணங்கள் கட்டாயமாயின.ஆனால், ஒரு கால் நூற்றாண்டு கழிந்தபின், பெண்ணுக்குச் சகல சுதந்தரங்களும் வந்துவிட்டதாகத் தீர்மானமானபின், ஒரு பெண் பருவமாகும் முதல் அனுபவத்தால் மருண்டுபோன நிலையில், தாயின் அரவணைப்பு ஆதரவுக்கு ஏங்கும்போது, “இதுக்கு என்ன இப்ப அவசரம்?” என்ற சுடுசொல்லை உதிர்த்து சுட்டுப் பொசுக்கிய தாயின் உணர்வுகள், அந்தக் கொலைக்கதையில் வெளிப்பட்டன. இவள் நுகர்பொருள். எழுத்தாளரும், அவர் படைப்பும் வெவ்வேறல்ல. இது குறித்து, சில மாதங்களுக்குமுன் விவாதம் ஒன்று நிகழ்ந்தது. என்னைப் பொறுத்தவரையில், ஒரு பெண் படைப்பாளர், தம் படைப்பில் தம் உட்குரலாகவே இயங்கும்போதுதான் அவர் பெண் படைப்பாளராகிறார். காலம் காலமாக ஆணின் நோக்கில் நெறிப்படுத்தப்பட்டிருக்கும் கோடுகளில் தம்பாத்திரங்களை இயங்கச் செய்பவர்.உண்மையில் பெண் எழுத்தாளரல்ல. எழுத்தாளர். அவ்வளவே இந்த மலர்ச்சி எப்போதும், எல்லாப் படைப்புகளிலும் உட்குரலாகப் பதிவாவதில்லை எனலாம்.

என்றாலும், ஒருபெண், தன்னையே தான் யார் என்று தேடிக் கொள்ளும் அநுபவமாகவே பல்வேறு பாத்திரங்களில் அடையாளப்படுத்த முடியும்.

சுதந்தரப் போராட்டத்துக்குப்பின் வாசகர்கள் பெருகிப் பத்திரிகைச் செல்வாக்கு, பல எழுத்தாளர்களைத் தோற்றுவித்தன. பேனாவை எடுப்பதே குடும்பப் பெண்ணுக்குப் புரட்சி. அதுவும் பத்திரிகைகளில் வெளி வந்தாலே தன்னம்பிக்கை கூடும். பத்திரிகைகள் வெகுஜன ஆமோதிப்புடன்தான் எந்தப் பெண் எழுத்தாளரையும் ஆமோதிக்கும். கதாநாயகிகள், லட்சுமியின் கதைகளில், படித்தவர்களாக ஆசிரியர்களாக, மருத்துவர்களாக இயங்குவார்கள். ஆனால், நல்ல குடும்பப் பெண்களாக, சேவை செய்யும் விதவைகளாக, மாமியார், கணவர்களை மகிழ்விப்பவர்களாக, விதிக்கப்பட்ட 'நற்'பெண்டிர் மரபைக் காப்பாற்றுவார்கள். இல்லாதவர்கள், கொடுமைக்காரிகள் என்ற அச்சில் இயங்குவார்கள். 22 ஆண்டுகள், கணவனோடும், கணவர் மறைந்த பின்னரும், பிரச்னைக் குரிய கறுப்பர் சமுதாய, நிறவெறி வெள்ளையர் ஆட்சியில், ஓர் இந்திய மருத்துவராக, அரசு பணியாற்றியவராக வாழ்ந்தவர். மீண்டு வந்து, அதே குடும்பத் தொடர்களைத் தொடர்ந்தார்.உடைந்த கண்ணாடித் துண்டுகள் போல் சில அநுபவச் சிதறல்கள் மட்டுமே அவ்வப்போது தீபாவளி மலரில் வெளியாயின. அவருடைய சில அநுபவங்களை அவர் வாய்மொழியாகவே நெருங்கிய தோழி என்ற அடிப்படையில் அறிந்து கொண்டிருக்கிறேன். ‘இதெல்லாம் எழுதுங்கள், இந்தத் தொடர்கதைகள் வேண்டாம். அரிய அநுபவங்கள். தமிழ் இலக்கிய உலகுக்குக் கிடைக்கும் கொடைகளாக இருக்கும்’ என்று கூறியதுண்டு. ஆனால் தம் இறுதிக்காலம் வரை அவர் எழுதியும், தம் உட்குரல்களை அவர் பதிவு செய்ததாகத் தெரியவில்லை.

பெண்கள் அவ்வாறு பதிவு செய்ய இயலாமைக்குப் பல காரணங்கள் உண்டு. அது அவருடைய தனிப்பட்ட இயல்புக்குப் பொருந்தாமல் போகலாம். ஏனெனில் மற்றவர் மனங்களை நோகச் செய்யக்கூடாது என்ற காரணமாகவும் இருக்கலாம்.

அறுபதுகளின் முற்பகுதிகளில் 'ராஜலட்சுமி’ என்ற மலையாளக் கவிஞர், தம் வளர்ந்து வரும் 'மகோன்னத கவிஞர்’ என்று உயர்ந்த காலத்தில் தற்கொலை செய்து கொண்டார். தாம் எழுதிய கவிதை மற்றவரைத் தாக்கி விட்டது என்ற காரணத்துக்காகவே வாழ்வை முடித்துக் கொள்வதாக எழுதிவைத்த நினைவு. அவர் எழுதிய நாவல் ஒன்றுகூட உடனே மாத்ருபூமியில் வெளியாயிற்று.

இது சமுதாயம் குறித்த அச்சமோ, குற்ற உணர்வோ என்பதை வரையறுக்க முடியாது.

பிரச்னைகளில் சிக்கும் பெண்களின் மெல்லிய உணர்வுகளை இப்போதெல்லாம் பல பெண் எழுத்தாளர் அருமையாகப் பதிவு செய்கின்றனர். பெண்களும் மனிதர்கள். ஆனால் அவர்கள் ‘பாலியல் சார்ந்த தாய்மை உணர்வு சார்ந்த பெண்ணுக்குப் பெண் ஒத்துக்கொள்ளாத’ என்ற அச்சுகளில் இயங்கும்போது அந்த அச்சுக்களை ஏனென்று இனம்காட்டும் வகையில் உயர்தர எழுத்துக்கள் வெளி வந்திருக்கின்றன.

வாஸந்தியின் 'தாகம்' ஓர் அருமையான படைப்பு. நூற்றாண்டு முன் இந்தியாவில் இருந்து ஃபிஜித்தீவுகளுக்கு அடிமைகளாகக் கொண்டு செல்லப்பட்ட இந்திய சமுதாயத்தின் வளர்ச்சி, மேன்மைகள், சொந்த சமுதாய இந்திய இனவேர்களைக் கண்டு கொள்ள முயலும்போது ஏற்படும் அரசியல் - சமுதாயம் சார்ந்த முரண்பாடுகள், அனைத்திலும் சம்பந்தப்பட்ட நாகலட்சுமி, மோகினி என்ற இரு பெண்களின் வாழ்க்கை நிகழ்வுகள் அது முன் வைக்கிறது. நாகலட்சுமி, அந்நிய நாட்டில் இளமையில் கணவனை இழந்து மக்களை ஒரு பிடிவாதத்துடன் படிக்க வைத்து முன்னேற்றுபவர், தன் பிடியில் இருந்து மக்கள் கழன்று சுதந்தரமாக இயங்கப் போவதால் ஆயாசமடைகிறாள். தன் கடைக்குட்டி மகனுக்கு இந்தியாவில் இருந்து, பசையில்லாத குடும்பத்தில் இருந்து பெண் தேடிக் கொண்டு வருகிறார்.

மோகினி தன் கணவனைத் தாயின் பிடியில் இருந்து பிரித்துக் கொண்டு விடக்கூடாதென்று வியூகம் வளைக்கிறாள். அவள் நோய்க் கண்டு இறக்கிறாள். இறந்த பின்னரும் மகனை விடவில்லை. மோகினியை அச்சுறுத்து-கிறாள் - கனவுகள்-கற்பனைகளில் ஆவிபோல். அதேபோல் கணவன் இரத்தப்புற்று கண்டு இறந்து போகிறான். மேலெழுந்த வாரியாகப் பார்க்கையில், குருட்டு நம்பிக்கைகளை நிசமாக்குவதுபோல் தோன்றும். ஆனால், நாகலட்சுமி என்ற மாமியாரைக் காரணியாக வைத்து, இருவர் உளவியலையும், மோகினியின் பிரச்னைகள் நிறைந்த வாழ்க்கையையும், போராட்டங்கள்சார்ந்த மனச்சிக்கல்களையும் அற்புதமாக ஆராய்கிறது. ஃபிஜித்தீவில் இந்திய வம்சாவளியினர் ஆதிக்குடிகள், அரசியல் அரங்குகள் ஆகிய பல கூறுகளையும் இந்த நவீனம் காட்டுகிறது. நாகலட்சுமி, ஒரு பெண் - கதையில் வரும் நாயக்கர். அவள் காலத்திய ஆண். இருவரும் உழைத்து முன்னேறி, தலைமுறைகளை ஏற்றம் காணச் செய்தவர்கள். ஆனால் அவள் பெண். பெண்ணுக்கே உரிய அடையாளங்களில் சிக்குண்டு, தன் மகன், மருமகள் மக்கள் ஆகியவரிடம் ஏற்படக்கூடிய இயல்பான, நேசம், பாசங்களைத் தொலைத்துக் கொள்கிறாள். இந்தப் பீதியே, அசாதாரணமான உண்மைபோல், மோகினிக்குக் கணவனை அவன் அழைத்துக் கொண்டாற்போல் தோன்றுகிறது. இந்த அறியாமைகளில் இருந்து விடுபட்டு, சுதந்தரமனுசியாக இயங்க, இளைஞன் பிரசாத் வாயிலாக அவள் உணர்வு பெறுவதாகக் கதை நிறைவடைகிறது.

அடிமைகளாகப் புலம் பெயர்ந்து, சாதி மொழி இனச்சிக்கல்களில் காயம்பட்டும் ஆறியும் தங்கள் வேர்களை இழந்தாலும் பொருளாதார வண்மையிலும் சுயஉரிமைகளிலும் மகளிர் ஆண்களுக்குச் சமமாக முன்னேறும்போது, 'வேர்கள்’ என்ற பண்பாட்டை மகளிடம் மட்டும் எதிர்பார்க்கும் ஆண் 'இயல்பு’ குறிப்பிடத்தக்கது. இத்தகைய நவீனங்கள், சமூக வரலாற்றுப் பதிவேடுகளாகவும் விளங்குகின்றன. எனவே, பெண்ணியம் என்று அடையாளம் காட்டுவது, குடும்ப உடைப்பிலோ, விவாகரத்துப் பெறுவதிலோ, மறுமணம் செய்வதிலோ மட்டுமில்லை. தான் வெறும் உடல் என்ற முழுமையில் இருந்து அப்பால் தானும் அனைத்து உரிமைகளையும் கொண்டு மேன்மையுடன் வாழக்கூடிய மனுசி -மனிதா என்று உணர வேண்டும். 'உடல்’ என்ற பிம்பத்துக்கப்பால் அறிவு, சிந்தனை ஆகியவற்றால் முழுதுமாகத் தன்னை இனம்காண வேண்டும் என்ற தேடலில்தான் பெண்ணியக் குரல்கள் ஓங்குகின்றன. கையறு நிலையும் கண்ணீரும் இந்தத் தேடலுக்குப் பொருந்தாதவை. மனித நேயங்களை உடைப்பதும் ஆக்கபூர்வமான தேடல் விளைவுகளல்ல. ஏனெனில் பெண் தாய். ஆக்குபவள். சமுதாயத்தையும் உருவாக்குபவள்.

இன்றையச் சூழல் முழுதும் வணிகமயமாகி இருக்கிறது. அறிவியல் தொழில்நுட்பம், சமத்துவம் என்ற அந்நாளைய இலட்சியங்களைப் பொய்யாக்கி, அதிக வசதிகள், தேவைக்குமேல் செல்வங்கள் என்ற வண்மையாகவும், அடிப்படை வாழ்வாதாரங்களே இல்லாமல் அண்டிப் பிழைக்கப் போராடும் வறுமையாகவும் விடிந்திருக்கிறது,

அந்நாள் சாதிகள் சமுதாயத்தைக் கூறுபோட்டன. இந்நாள், சாதிகளுடன் பொருளாதார மலைமடு வேறுபாடுகளுடன் பல்வேறு அரசியல் கட்சிகளும் மனித நேயங்களைச் சூறையாடி இருக்கின்றன. பெண் இந்தச் சிக்கல்களில் தன்னை முழுதுமாக இழந்து கொண்டிருக்கிறாள். எனவே இன்றைய இலக்கியப் படைப்புகள், பொழுதுபோக்கவோ, ரசிக்கவோ, சுவாரசியமான களிப்பூட்டும் உணர்வுக்காகவோ, அல்லது பணத்துக்காகவோ மட்டும் உருவாக்கப்படுவதில் பயனில்லை. விழிப்புணர்வூட்டவும் பிரச்னைகளை இனங்கண்டு எழுச்சியுடன் எதிர்நோக்கிப் போராடி வெல்லவும் பயன்பட வேண்டும். போராட்டத்துக்கான கருவியாக வேண்டும்.

(அன்னை தெரசா மகளிர்ப் பல்கலைக்கழகக் கருத்தரங்க நிறைவுரை - 1997)