உள்ளடக்கத்துக்குச் செல்

புதியதோர் உலகு செய்வோம்/கத்தி விளிம்பில் பயணம்

விக்கிமூலம் இலிருந்து

25. கத்தி விளிம்பில் பயணம்


நான் எழுத்துலகில் தடம் பதித்த புதிதில், புதிய பெண் எழுத்தாளர் பெயரில் ஏதேனும் படைப்புகள் காணப்பட்டால் உடனே அவர்களையும் படைப்பையும் இணைத்து ஒரு கற்பனை செய்து கொள்வேன். இது ஐம்பதுகளின் காலகட்டத்தில் நிகழ்ந்தவை என்று சொல்லலாம்.

அந்தக் காலத்தில் பெண்கள் பெயரில் ஆண்கள் எழுதுவார்கள் என்று நான் கருதியிருக்கவில்லை. ஏன்? கற்பனைக்கூட செய்திருக்கவில்லை. அந்நாள், கலைமகளில், ஒரு இஸ்லாமியப் பெண் எழுதும் கதைகள் வெளியாயின. இஸ்லாமிய சமூகம் பற்றிய படைப்புகளை, பிற சமயம் சார்ந்த எழுத்தாளர் எழுதியிருக்கின்றனர். ஏன்? அந்த சமூகத்து ஆண்கள் பெயரிலும் அமைந்திருக்கலாம். ஆனால் ஒரு பெண் எழுத்தாளர் என்ற வகையில் என் ஆர்வம் மிக அதிகமாக இருந்தது. கோவையைச் சேர்ந்த கிராமப்பகுதிகளில், 'கோசாப்பழம்’ என்ற பெயரில் ‘தர்பூசணி' பழத்தைக் குறிப்பிடுவார்கள். 'கோசாப்பழம்’ என்று கூவிக் கொண்டு தெருவில் விற்பனையாளர் செல்கையில், அது என்ன பழம் என்று ஓடி வந்து பார்த்தேன். தர்பூசணிக்கு இந்தப் பெயரா..? தடித்த கரும் பச்சைத் தோலை விலக்கினால், வெண்மையும் சிவப்பும், கருவிழிகளைப் போல் விதையுமாய், அழகிய இஸ்லாமிய சமூகப் பெண் படிமம் மனதில் பதிகிறது. இந்தப் பெயரை ஒப்பிடும்படி, ஒர் அழகிய பெண் எழுத்தாளரை நான் கற்பனை செய்து கொண்டிருந்தேன். கலைமகளுக்கு வெள்ளிவிழா ஆண்டு (1957), வெள்ளிவிழாவைக் கொண்டாடும் முகமாகப் போட்டிகள் அறிவிக்கப்பட்டன. சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை என்ற போட்டிகள். அந்தப் போட்டியில் ஆர். சூடாமணி சிறுகதைக்குரிய பரிசையும், ரஸவாதி நாவல் பரிசையும், நாடகத்துக்கான பரிசை நானும்பெற்றோம். பாரதியாரின் கவிதைகள் பற்றிய கட்டுரை ஒன்றை எச்.ஆர்.கிருஷ்ணன் என்பவர் வழங்கி, கட்டுரைக்கானப் பரிசைப் பெற்றார். அன்று மாலை, வெள்ளி விழாவை ஒட்டி, ‘கலைமகள்' அதிபர் ‘வுட்லண்ட்’ஸில் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்து இருந்தார். ஆசிரியர் நானும் கலந்துகொள்ள வேண்டும் என்று கட்டாயமாக வற்புறுத்தினார். நான் விருந்துகளில் கலந்து கொண்டு சற்றும் பழக்கமில்லாதவள். அப்போது நாங்கள் வெளியூரில் இருந்ததனால், மயிலாப்பூரில் என் சிறிய தந்தை வீட்டில் தங்கி இருந்தேன்.

ஒரு பொது விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டது அதுவே முதல் தடவை. எழுத்தில் மட்டுமே பார்த்திருந்த சரோஜா ராமமூர்த்தி, தங்கம்மாள் பாரதி, கி.சாவித்திரி அம்மாள், சரஸ்வதி அம்மாள் ஆகியோர் பெண்கள். எனக்கு ஒருபுறம் சாவித்திரி அம்மாளும் (கலைமகள் குடும்பம்) மறுபுறம் சரோஜா ராமமூர்த்தியும் அமர்ந்திருந்தனர். அடுத்து தங்கம்மாள் பாரதி. ஆண் எழுத்தாளர் அநேகமாக அன்றையப் பிரபல ஆசிரியர்கள் எல்லோரும் இருந்தார்கள். அவர்களில் கி.வா.ஜ., எல்லோரையும் வரவேற்று இன்முகத்துடன் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக நலம் விசாரித்து, நகைச்சுவையுடன் உரையாடினர். நான் அப்பொழுது ஒர் அறியாச் சிறுமியின் நிலையில்தான் இந்த எழுத்துலகச் சான்றோரின் இடையில் இருந்தேன். அமரர் கி.வா.ஜ., அவர்கள் முதல் சந்திப்பிலிருந்தே என்னிடம் பழகிய விதம், ஒரு தந்தை பேதைச் சிறுமி என்று பாராட்டாமல், மகிழ்ச்சியுடன் இறங்கி வந்து சம மதிப்பை வழங்குவது போலிருந்தது. இதெல்லாம், நான் பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்த அமரரைப் பற்றி நினைக்கும் போதுதான் புரிகிறது. அவரைப் பார்த்த உடனே, அந்த இஸ்லாமியப் பெண் எழுத்தாளரைப் பற்றிக் குறிப்பிட்டு, “அவர் வந்திருக்கிறாரா?” என்று ஆவலுடன் கேட்டேன்.

“ஒ! வந்திருக்கிறார்.” என்று கூறிவிட்டு மற்ற விருந்தினரை விசாரிக்கச் சென்றார். நான் தனியாக என்னுடன் நின்றிருந்த மேலே குறிப்பிட்ட பெண்களையே பார்த்துக் குழம்பினேன். தங்கம்மா பாரதியை முன்பு கண்டதில்லை. என்றாலும் பர்தாவுக்குள் தெரியும் வெண்ணையும் ரோஜா நிறமும் கலந்த முகத்தில் கருவண்டுக் கண்களுக்குச் சொந்தமான வடிவப் பெண் எழுத்தாளர் யாரும் தென்படவில்லை. நான் குழம்பி நிற்கையில், நேர் எதிர்மாறான வடிவத்தில் ஒர் ஆண்மகனை, ஆசிரியர் என் முன் அழைத்து வந்தார். “நீங்கள் கேட்டீர்களே. இவர்தாம் அந்தப் படைப்பாளி” என்று நகைத்துவிட்டுச் சென்றார். நான் திருதிருவென்று விழித்துவிட்டு, எப்படியோ என் ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு சமாளித்தேன்.

அக்காலத்தில் என் போன்ற படைப்பாளருக்குச் சில எல்லைக் கோடுகள் கற்பிக்கப்பட்டிருந்தன. ஆண் எழுத்தாளர் எதையும் எழுதலாம். பால்வினை நோய்கள், தாசிகுலம், முறையற்ற உறவு எல்லாமே அவர்களுக்கு எல்லைக்கோடுகள் அல்ல. அது அவர்களுக்கு பெண்ணைப் பொறுப்பாக்கிய வாழ்க்கை. ஆனால், பெண் படைப்பாளர்? நாங்கள் எழுதத் துணிந்தால் அது ‘ஆபாசம்’ என்று தள்ளப்படும். அச்சம், என் அடி மனசில் இருந்தது. ஆனால் இது ஏன் பொதுவானதாக இல்லை? அந்தக் காலத்தில் கேட்கப்படாத கேள்விகள் பல எழும்பி எழும்பி எனக்குள்ளே எதிரொலி இல்லாமல் மாயும்.

அந்த விழாவில், விருந்தில் தி.ஜா.முக்கியமான படைப்பாளர். எனவே, அவர்தாம் முதலில் தம் படைப்புகளைப்பற்றிப் பேசினார். எடுத்த எடுப்பிலேயே, ‘நான் 'மடி'க்கதைகள் எழுதுவதில்லை. 'விழுப்பு'க்கதைகள் தான் எழுதுவேன்’ என்று தொடங்கினார். என் அருகில் இருந்த கி.சாவித்திரி அம்மாள், அவருடைய மிகுதிப் பேச்சை நான் கேட்பதற்கே இல்லாமல் என்னிடம் புருபுருத்து தம் ஆற்றாமையைக் கொட்டினார். நான் திடுக்கிட்டேன். “விழுப்புக் கதைகள்! இவர் என்ன எழுதறார் பார்த்தியாம்மா? நீ யது நாத்தின் குருபக்தி படிச்சியோ? கதையா இது? ஏன் சாக்கடையைப் பாக்கனும்? சாக்கடையிலும் சூரியக்கதிர் விழுந்து சுட்டுப் பொசுக்குதே அதைப் பாக்கட்டுமே?”

என் நினைவில் இன்றும் உயர்ந்து நிற்கும் சொற்கள் இவை. ஆம்! யதார்த்தம் - நடப்பியல் சமுதாயத்தில் சாக்கடை இருக்கிறது. அதை விலக்க முடியாது. ஆனால் அதுதான் சரி என்று காட்டுவதா? இலக்கியம் மனித மனங்களை, மேல்நோக்கிக் கொண்டு சொல்ல வேண்டும். அமைதி அளிக்க வேண்டும். குழப்பங்களுக்குத் தெளிவு கானும் அழகியல் உணர்வு கொடுக்க வேண்டும். ஏன், சாக்கடையில் துழாவி இதுதான் என்று காட்டவேண்டும்?

இதுதான் சாவித்திரி அம்மாளின் ஆற்றாமை, அவர் குறிப்பிட்ட ‘யதுநாத்தின் குருப்க்தி’ கலைமகளில் வந்த சிறுகதைதான். 'யதுநாத்' என்பவர் ஒர் அரசர். அவருக்கு ஒரு சாமியார் குரு. அரசர் அந்தப்புரத்தையே மறந்து, குருவுக்குப் பணிவிடை செய்கிறார்; வழிபடுகிறார். அல்லும் பகலும் அவர் தங்கியிருக்குமிடத்திலேயே இருக்கை அவர் உறங்கும்போதும் அரசர் அவர் வசதிகளையே எண்ணிக் காத்து நிற்கிறார். ஒருநாள் இரவு, நல்ல நிலவு. குரு தம் விடுதியை விட்டு வெளிப்பட்டு மாளிகைக்கு வெளியே நிலவில் தனியாக நடந்து செல்கிறார். அவரறியாமல் அவருடைய பாதுகாவலன் போல் பின்னே அரசரும் செல்கிறார்.குருநேராகத் தாழ்ந்த குலப்பெண் வசிக்கும் ஒரு குடிசைக்குள் நுழைகிறார். அரசரும் எட்டிப் பார்க்கிறார். அந்தப் பெண்ணை நிர்வாண கோலத்தில் குரு மடியில் போட்டுக் கொள்கிறார். அரசர் பின்வாங்கி, நேராக அந்தப்புரத்துக்குள் நுழைகிறார்.

பல நாட்களுக்கு முன் படித்த கதை, சாவித்திரி அம்மாளின் ஆற்றாமை, என் போன்ற இளம் பெண் படைப்பாளிகளுக்குப் படைப்புலகின் பொறுப்பை உணர்த்தியது எனலாம்.

ஆசிரியர் கி.வா.ஜ.அடுத்து உடனே என் பக்கம் திரும்பி வந்தார்.

"இப்ப, நீங்க பேசனும், ராஜம்மா" என்றார்.

நான் திடுக்கிட்டுப் போனேன். அருகில் சாவித்திரி அம்மாள் என்னைக் குடைந்து, “பேசு. பேசம்மா? பதிலடி கொடு.” என்று தூண்டினார். எனக்குத் துணிவு வரவில்லை. நான் ஒரே வாக்காக மறுத்துவிட்டேன். எனக்கு அப்போதே இந்தப் படைப்புலகத்தில் எங்களுக்கு எல்லைகள் போடும் 'மதில்' இத்தகைய முரண்பாடுகள் என்று உணர்த்தப் பட்டது. சாவித்திரி அம்மாளே பேசியிருக்கலாமே? அவர்கள் கலைமகள் குடும்பத்தில் புலமை வாய்ந்த எழுத்தாளர். அவர் ஏன் நேராகப் பேசவில்லை? சரோஜா ராமமூர்த்தி இதில் சம்பந்தமில்லாதவர்போல் அமர்ந்திருந்தாரே...ஏன்? கடைசியில் கி.வா.ஜ., தங்கம்மாள் பாரதியை நோக்கி அறிமுகத்துடன், “நீங்கள் பேசுங்கள்.” என்றார். அவர் தாம் தங்கம்மாள் பாரதி என்றறிந்ததும் பரவசமாக இருந்தது. அவர் என்ன பேசினாரென்று புரியவில்லை. அவர் எங்களைப் போன்ற இளம் படைப்பாளரை, ‘எந்தையார் கனவு கண்ட புதுமைப் பெண்கள்’ என்று வாழ்த்தியது மட்டும் நெஞ்சில் நீங்காத ஆசியாகத் துணிவு கொடுத்தது.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, என்னுடைய பெண் எழுத்தாளர் தேடல் மிகக் கூர்மையாயிற்று. ஆனால் பெண் பெயரில் ஆணே எழுதுகிறார் என்ற கருத்து மட்டும் ஒப்புக் கொள்ளும்படியாக இல்லை. அந்த எழுத்துக்களில் ‘மத்தியப் பிரதேச ஆக்கிரமிப்பு' போன்ற இரட்டைத் தொனிகள் ஒலித்தபோதும் எனக்குத் தெளிவு வராமல், அந்த எழுத்தாளப் பெண்மணிகளை, நேரே சந்திக்க நான் முயன்று, வேறே யார் யாரோ பெண்களைத் தேடிச் சந்தித்தது மிகுந்த சுவாரஸ்யமான விஷயம்.

இன்று, இந்த ஐம்பது வருஷங்களில், பெண்கள் மீறி எழுதலாமா, மடிக்கதைகளிலேயே நிற்க வேண்டுமா, இல்லை, அவர்களும் போட்டி போட்டுக் கொண்டு ‘வன்முறைப் பாலியல், தொகுப்புகளைக் கட்ட விழ்க்கலாமா?’ என்பது இன்னமும் கேட்க வேண்டிய கேள்வியாகிறது. நாங்கள் கத்திமேல் நடக்க வேண்டும்.


‘பெண்ணே நீ’,

ஜனவரி - 2004