புதியதோர் உலகு செய்வோம்/பெண்ணைப் பீடத்தில் வைத்த மாமனிதர்
இந்திய மண்ணில் பாரதி என்ற கவியொளி உதயமாகும் வேளையில் இந்தியத் துணைக் கண்டத்தில் எல்லாத் திசைகளிலும் இருள் சூழ்ந்திருந்ததென்றால் தவறில்லை.
1882ஆம் ஆண்டில் கார்த்திகை மூலத்தில் உதித்த பாரதி, ஐந்தாவது வயதிலேயே தமது தாயை இழந்தார். அவரது தாயாரின் இளைய சகோதரி - 'சின்னம்மா சித்தி’ இந்தச் சேயைப் பேணி வளர்க்கப் பரிவுக் கரங்கள் நீட்டி அனைத்தார். பாலகனைச் சுவீகரித்த அவள் கட்டியவனைப் பறி கொடுத்ததால், சநாதனக் கொடுமரபு, அவள் மங்கலச் சின்னங்களான பூ, பொட்டு அணிமணிகள் மட்டுமின்றி, கார்குழலையும் களையச் செய்து, வெள்ளை முக்காட்டுக்குள் முடக்கி வைத்திருந்தது.
இந்த வெறுமை வடிவில்தான் பாரதி இந்தியத்தாயின் அன்னை முகம் கண்டார்.
அக்காலத்தில் பெண்டிர்க்கு மட்டுமின்றி ஆண் பிள்ளைகளுக்கும் இளவயதில் திருமணம் செய்வதனால் குடும்பப் பொறுப்புணர்வைப் பெறுவார்கள் என்ற கருத்து இருந்தது. பன்னிரண்டு வயது பாரதிக்கும், ஒன்பது வயது செல்லம்மாளுக்கும் திருமணம் நிகழ்ந்தது. பாரதியின் மாற்றாந்தாய் மகள் மூன்றுவயது லட்சுமிக்கும் அத்தை மகனான சிறுவன் கேதாரத்துக்கும் அதே நாளில் மணமுடித்து வைத்தார்கள்.இக்கொடுமையை இழைப்போர் இன்னுமோராயிரம் ஆண்டுகள் அடிமைப்பட்டு அழியட்டும் என்ற தீச்சொல்லைப் பின்னாளில் உமிழ்கிறார் அவர்.
இந்தக் கவிக்குயிலுக்கு, ஆன்மானுபவ உபதேசத்தை முறையாக அளித்த குருமணி வழக்கமான காவியுடுத்த ஆசாரியனோ, சடாமுடிச் சந்நியாசியோ அல்ல. இதுவும் ஒரு முரண்பாடுதான். இந்தியத்திருநாட்டில் சமண - பெளத்த நெறிகளுக்குச் சவாலாகத் தோன்றிய சங்கரர் வழித்துறவிகளால் மாயை என்று பழிக்கப்பட்ட பெண் இனம்; வெள்ளைத் தோலுக்குரியவள் புரட்சித் துறவியாகிய விவேகானந்தரின் வழியில் இந்திய நாட்டுக்குத் தொண்டாற்ற வந்த பெண் துறவி; எழுச்சிப் பெண்.
“சரிபாதி சமுதாயமான பெண் முடங்கிக் கிடக்கையில் சாத்தியமோ விடுதலை? உன் கவித்திறன் முழுதும் மகத்தான விடுதலை ஒளியை இலக்காக்கி மலரட்டும்” என்று உள்ளுணர்வை உசுப்பிவிட்ட மகாசக்தி, “அருச்சுனனுக்குக் கண்ணன் ஆன்மாறுபவ தரிசனம் காட்டினாற்போல அநுபூதி அளித்த குருமணி" என்று அந்தக் கணங்களை எண்ணி எண்ணிப் பரவசமடையச் செய்த புரட்சிக் குருமணி, சகோதரி நிவேதிதா. அப்போதே பாரதியின் கவித்திறமை புதிய மலர்ச்சி பெற்றது.
பாரதியின் பாடல்களிலும், புனைகதைகளிலும் கட்டுரைகளிலும், மிடிமைகளில் இருந்து வெளிப்பட்டு இலட்சிய ஒளியாக எழுப்பும் சக்தியாகவே திகழ்கிறாள் பெண். இந்த மாசக்தி, இந்நாட்டு மூலாதாரக் கருத்தியலுக்கும் பண்பாட்டுக்கும் அந்நியமானவள் அல்ல. அவள் கல்விக்கு அதிபதி, செல்வத்துக்கு உரிய தெய்வம்; வீரம், கருணை ஆகிய பண்புகளுக்கும் இருப்பிடமானவள்.
ஆனால் நடப்பியலில், தாயைப் போற்றும் பண்பாடு வெறும் சடங்காசாரமாக உயிரற்றுப் போயிருந்தது. மூடக்கட்டுகளிலும், மூத்த பொய்ம்மைகளிலும் அறிவுக்கண் குருடாக்கப் பெற்ற அபாக்கியவதிகளாக அடுக்களைப் பொந்தில் உழைப்பவர்களாக, காமவெறி பிடித்த ஆடவர்களின் கைப்பாவைகளாக, அடிமைச் சேற்றில் பெண்கள் உழன்ற நிலை கண்டு அவர் நொந்தார்; கொதித்தார். அந்த இலட்சிய வேகமே, அவரைச் சக்தி தாசனாக மாற்றியது. தேசியமென்ற பார்வையில், முப்பது கோடி மக்களை ஈன்ற தாயாக, செப்பு மொழி பதினெட்டுடையாளாக இருந்தும் சிந்தனை ஒன்றுடையாளாக பாரத மாதாவாக அவள் திகழ்ந்தாள். அந்த அன்னையின் துயில் நீங்கத் திருப்பள்ளியெழுச்சி பாடினார் அவர்.
அவளே தாய்; அவள் இயக்கம்; அவள் சூக்குமமான ஆற்றல். அவள் தெளிவு பரிதியின் வெப்பக் கதிர்; மேகத்திரள்; சொரியும் அமுதத்தாரை; பல்லுயிர்க்கு அமுதாம் ஆறு நீர் கடல் அவள் கவிதைத் தேவி, மனைத் தலைவி.
எழுச்சியூட்டும் கும்மிப் பாடலிலும், கோலக் கவிதையிலும், அவருடைய பெண், ‘கற்புநிலை என்று எங்களை மட்டும் முடக்கினிரே, அதை இரு கட்சிக்கும் பொதுவாக்கி வைப்போம்' என்று நியாயம் தீர்ப்பவள். பட்டங்கள் ஆளவும் சட்டங்கள் செய்யவும் வந்தவர் நாம்! எங்களுக்கு மேலாம் அறிவு உண்டு என்று எழும்பிவந்தவள்.
நாணமும் அச்சமும் நாய்கட்கு வேண்டும்! சிறிய தொண்டுகள் தீர்த்தடிமைச் சுருள் தீயிலிட்டுப் பொசுக்கிட வேண்டும் என்ற வரிகளில் கவியின் ஆத்திரம் கொப்பளிக்கிறது.இந்தப் புதுமைப் பெண், கல்வி கற்பதும், அறிவாற்றல் பெறுவதும் எதற்கு? கணவனுக்குப் புதுப்பொலிவுடன் பணி செய்து மகிழ்வூட்டி, அவன் சுமையைக் குறைப்பதற்கில்லை. உலக வாழ்க்கையின் நுட்பங்கள் அறிந்து தேர்ந்து, நாற்றிசை நாடுகள் யாவுஞ்சென்று புதுமை கொணர்ந்து, பாரததேசமோங்க உழைப்பதே இவள் இலட்சியம்; வையகம் புதுமையுறச் செய்து மனிதரை அமரர்களாக்கப் புறப்பட்டவள் இவள்.
பாஞ்சாலி சபதம், ஆங்கில ஆதிக்கத்தில் சிக்குண்ட பாரதநாட்டின் விடுதலை எழுச்சிக்காக எழுதப் பெற்ற தென்று கருத்துரைக்கப்படுகிறது. அது முற்றிலும் சரியன்று.
அக்காலத்தில் பாரதக் கதை, சுபநிகழ்ச்சிகளில் பாடுவதற்கும் உரைப்பதற்கும் உகந்த காப்பியமாகக் கருதப்பட்டிருக்கவில்லை. என்றாலும், பாரதக் கதையில் இடம்பெற்றிருக்கும். துரோபதை துகிலுரியப்படும் சருக்கம் தவறாமல் நாடகமாக நடிக்கப்பட்டது. துரோபதையாக நடிப்பவர் ஆணாக இருந்தாலும், ஒரு பெண்ணின் மானமழிப்பது, கீழ்மக்கள் கண்டுகளிக்க ரசனை மிகுந்த காட்சியாக இருந்தது.
பாரதி அந்த அவலக் காட்சியை மாற்றி வைத்தார். ‘வஸ்திராபஹரணமா?... இது பாஞ்சாலியின் சபதமடா, சபதம்?’ என்று கனல் பறக்கும் பாஞ்சாலியைத் தம் எழுச்சிச் சொற்களால் எழுப்பினார்.
‘நாயகர் தம்மைத் தோற்றபின் தாரமுடைமை அவர்க்குண்டோ?’ என்று அவையில் நீதி கேட்கிறாள் பாரதியின் பாஞ்சாலி.
அவலம் உச்சக்கட்டத்தை எட்டுகையில், உடுக்கை இழப்பவளின் இடுக்கண் நீக்கக் கண்ணன் திருவருள் பாலிக்கிறான்.இறுதியில் பாஞ்சாலியின் பொங்கெழுச்சி, சபதமாக ஒலிக்கிறது.
பெண்குலத்தின் எழுச்சி; சிறுமைகளையும் அநீதிகளையும் அக்கிரமங்களையும் பொசுக்கிக் கொண்டு எழும்பும் எழுச்சிதான் பாஞ்சாலி சபதம்.
பாரதியின் பாட்டு, கவிதை, கட்டுரை, எல்லாவற்றிற்கும் உயிர்த்துடிப்பாக ஒலிக்கிறாள், புத்தொளிப் பெண். குயில் பாட்டுக்கு வேதாந்த விளக்கம் சொல்லப்படுகிறது.
பெண் குயில் குரல் கொடுப்பதில்லை. ஆண் குயிலே கூவியழைக்கும். இங்கு பாரதி, ஊமைப் பெண்குயிலைக் கூவியழைக்கச் செய்கிறார்.
பெண்மை நலம் உணராத, காதலின் அருமையும் மேன்மையும் இன்பமும் சற்றும் அறிந்திராத விலங்கனைய மக்களுக்கு, அவள் பெருமையை, "ஆசைக்கடலின் அமுதமடா, பெண்மைதான் தெய்வீக மாநகராட்சியடா!...” என்று உயர்த்தும் வரிகளில் காதலின் புகழும் பெண்மையின் பெருமையும் விளங்குகின்றன.
‘பெண் செக்குமாடுமில்லை; பஞ்சுத் தலையணையுமில்லை’ என்ற கட்டுரை வரிகளின் விளக்கமே ‘குயில்’ என்ற கற்பனைக் கதை சொல்லும் அற்புதக் கவிதை.
‘பெண் உணர்ச்சிமயமானவள். அதனாலேயே அவள் அடக்கப்பட வேண்டும். பெண் எப்போதும் ஓர் ஆணை உடல்பரமான போகத்துக்கே இழுப்பாள். அவளால்தான் சமுதாயத்தில் அத்துமீறல்கள் ஏற்பட்டு, சமுதாய ஒழுக்கம் கெடுகிறது. வருண-சாதி சமயக் கட்டுப்பாடுகள் அவளால் குலைந்து போகும். எனவே கற்பொழுக்கம் அவளுக்கு இன்றியமையாததாகும். இந்தக் கற்பொழுக்கம், அவள் பிறவியெடுத்து வளரும்போதே அக ஒழுக்கமாக வளர்க்கப்பட வேண்டும். இவ்வொழுக்கம் பெண்மைக்கு மட்டுமே வற்புறுத்தப்பட்டு, நெறிப்படுத்தப்பட்டு, அவள், ஆளுமையைக் காலம் காலமாக சிறை வைத்திருக்கிறது. இந்த வேரோடிப்போன கருத்தைத் தகர்த்தெறிவதே பாரதியின் முதல் இலட்சியமாக இருந்திருக்கிறது என்றால் தவறில்லை.
கற்பொழுக்கம் ஆணுக்கும் இன்றியமையாதது என்பதை இவரே முதன் முதலாக வலியுறுத்துகிறார்.
‘பேனுமொரு காதலினை வேண்டியன்றோ பெண்மையும் கற்பு நிலை பிறழுகின்றாள்?'
‘பெண்ணுக்கு விடுதலை நீரில்லை என்றால் பின்னிந்த உலகினில் வாழ்க்கை இல்லை.'
பெண்விடுதலை என்ற குறியீடே யாருக்கும் யாரும் அடிமையில்லை என்ற சமத்துவ நெறியைப் பிரகடனப் படுத்துவதாக ஒலிக்கிறது. “பெண்மையடிமையுற்றால், மக்களெலாமடிமையுற்றால் வியப்பொன்றாமோ?” கண்களில் இரண்டிலொன்றைக் குத்திக் கெடுத்த ஆண் ஆதிக்க குலமே, அந்தத் தவறை உணர்ந்து செயல்பட வேண்டும் என்ற நோக்கில் குறியாக இருக்கும் பாரதி, ஒருபோதும் பெண்ணிடம் குற்றம் குறை காணவில்லை.
“நாம் நம் பெண்களுக்கு எழுதப் படிக்கக் கற்றுக் கொடுக்கிறோம் எதற்கு? சங்கீதம் கற்றுக் கொடுக்கிறோம் எது வரை?”
“கற்புக் கதைகளையும், புளுகுப் புராணங்களையும் படித்து மூத்த பொய்மைகளை மேலும் விடாமல் பற்றிக் கொள்வதற்கும், ஆர்மோனியத்தில் அரைகுறையாக ஒன்றிரண்டு சுரங்களை வாசிப்பதற்கு மட்டுமேதான்!
“அவள் எந்தக் கலையிலும் கல்வியிலும் உன்னதமாகத் தேர்ச்சி பெற்றுவிடலாகாது என்பதே உள் நோக்கம்!” என்று இடித்துரைப்பவர் அவ்வை மூதாட்டியைப் பெரிதும் புகழ்ந்துரைக்கிறார்.
அவருடைய மனைத்தலைவி, கல்வி கற்றவளில்லை. மூத்த பொய்மை, மூடக்கட்டுகள் எல்லாவற்றிலும் தோய்ந்த சராசரி இல்லத்துப் பெண். அவள் வீட்டுப் பணிகள் செய்யும்போது, அலுப்புத் தெரியாமலிருக்க அக்கம் பக்கம் பழகுகிறாள்; செவிவழிப் பல செய்திகள் வருகின்றன; பேசுகிறாள்; வீட்டுக்குள்ளிருக்கும் அவள், வெளியே சென்று வரும் கணவனிடம் எத்தனை செய்திகள் கூறுகிறாள்!
மூலப்பொருள்களைப் பக்குவமாக்கிப் படைப்பது போல, கேட்கும் எந்தச் செய்தியையும் சுவைபட உயிரூட்டி, ஒரு தேர்ந்த பத்திரிகை ஆசிரியரும் வியந்து போற்றும்படி, உலக வாழ்க்கையைப் பொருள் பொதிந்ததாகச் செய்யும் இந்த மனைத்தலைவி, பேதை, கபடற்ற குழந்தை போன்றவள்; மாசக்தியின் மகள்!
பெண் அறிவிலி, கணவனின் ஆன்ம நோக்கினையும் உயரிய இலக்கினையும் புரிந்து கொள்ளாமல் கீழ்முகமாக இழுப்பவள் வம்பு பேசுபவள், பொறாமைக்காரி: நஞ்சூட்டுபவள்; கொலையும் செய்யத் துணிவாள். என்றெல்லாம் இலக்கிய ஆசிரியர்களால் முத்திரை குத்தப்பட்டவள் பெண்.
அத்தகைய பெண்ணை உயர்பீடத்தில் ஏற்றி வைத்த மாமனிதர் பாரதி; அவள் மீது படிந்த சிறுமைகளைத் துடைத்து, சக்தியின் ஒரு துளியே நம்மிடையே இயங்கி, நம்மையும் இயக்குகிறது என்று உலகுக்கு உணர்த்திய பெருந்தகை அவர். “உயிர்களனைத்திலும் தாய்ச் சக்தியாக விளங்கும் தேவியே உன்னைப் போற்றுகிறோம்” என்ற ஆதித்தாய் வழிபாட்டை அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடித்த இந்தப் பாரத திருநாட்டின் சமுதாயத்தை உய்விக்க வந்த அந்தப் பேரோளி, இன்றும் என்றும் நம்மை அச்சுறுத்தும் புன்மை இருளைக் கரைக்கும் என்று நம்புவோம். நம்மை வருத்தும் இன்னல்கள் மாய, அந்த அமுதத்தாரை நமக்கு சக்தி அளிக்கும்; இது உண்மை. பாரதப் பெண்கள் பாரதியின் பெண்களாய்த் திகழ்வார்கள்.
(சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறையில் 2001, ஏப்-5ம் நாள் நிகழ்த்திய பாரதி அறக்கட்டளைச் சொற்பொழிவு).