புதியதோர் உலகு செய்வோம்/வெறும் சாதனமா?

விக்கிமூலம் இலிருந்து
11. வெறும் சாதனமா?

(நவம்பர் 25-லிருந்து டிசம்பர் 10 வரை பெண்களையும் சிறார்களையும் இலக்காக்கும் வன்முறை எதிர்ப்பாக ஐக்கிய அனைத்துலக நாடுகளின் ‘மகளிர் பட்சம்’, என்பதை நினைவுபடுத்தும் கட்டுரை)

“ஏதோ ஒரு சாதனம் கொடுக்கல் வாங்கல் என்று பரிவர்த்தனை செய்யப்படுவதுபோல் திருமணம் என்ற கேலிக்கூத்து, இளைஞர் (ஆண்கள்) பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டு முடிக்கப்படுகிறது. நவநாகரிகத்தில் பெண், அறிவு பெறும் வாய்ப்பு இருக்கிறது. முந்நாளைய மனைவி, அறியாமையும், பலவீனமான மென்மையுமாக ஏதோ ஒரு பிடிப்பில் இயங்கி வந்தாள். இந்நாட்களில் விழிப்புணர்வு, இதய அழகைப் பலி கொண்டுவிட்டது. திறந்த கண்களுடன் இருளில் நடக்கும் இரக்கத்துக்குரிய வெள்ளாட்டியாக (பணி மகள்) இருக்கிறாள். இது விநோதத் தலைமுறை. உறக்கத்துக்கும் விழிப்புக்கும் இடைப்பட்ட தலைமுறை. பழைய மண்ணையும் புதிய வித்துக்களையும் ஏந்திய தலைமுறை. அறிவோடு விழிப் புணர்வும் மெல்லியலில் உறுதியும், செம்மை நெறியும் கூடிய ஆற்றலின் வடிவாகப் பெண் திகழ்வது எந்நாள்?” - மேற்கண்ட வாசங்களுக்கு உரியவர் யார் என்று ஊகிக்க முடிகிறதா?

ஏறக்குறைய அமரகவி பாரதி, அண்ணல் காந்தி, ஆகியோரின் காலத்தில் வாழ்ந்த அராபிய தத்துவ வாதியும் கவிஞருமான கலில் கிப்ரானின் (1885 - 1931) வாசகங்கள் அவை.

பாரதி தம் கனவின் வடிவைக் கண்முன் காட்டி விட்டார். மூடக்கட்டுகளையும் மூத்த பொய்ம்மைகளையும் தகர்த்து, நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையுடன் திமிர்ந்த ஞானச் செருக்குடன் செம்மை நெறியில் புதுமைப் பெண் புத்தொளி பாய்ச்சுகிறாள். மனிதகுலத்துக்கான வாழ்வுப் பாதை, புதிய தெளிவும், நம்பிக்கையுமாக நிர்ணயிக்கப்படுகிறது. இந்தக் கவிக்கனவு மெய்ப்படவில்லை. மனித குலத்தைத் தோற்றுவித்து உருவாக்கி இயக்கும் மூலசக்தியே அவள்தான்.

அவள் அஹிம்சைத் தத்துவத்தின் மூலகாரணி என்று அண்ணல் காந்தி போற்றுகிறார். ஆணின் மிருக இச்சைகளுக்கு அவள் ஆட்படத் தன்னைப் பலவீனப்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று எடுத்துரைக்கிறார்.

தன்னை வீழ்த்த குரூரமிழைக்கும் கயவனின் வித்தையும் அவள் கருப்பைச் சுமக்கிறது. வெறிச் செயல்களை மேற்கொள்ளும் கயவர் இதை எப்போதேனும் எண்ணிப் பார்ப்பார்களா? தன் இயலாமையின் உச்சத்தில் பழி தீர்த்துக் கொள்ள, பெண்ணினத்தை நாடிக் குரூரங்களை அவிழ்த்துவிடும் பதர்கள், இந்த மண்ணில் நடமாடுவதற்கே உரியவர் அல்லர்.

காலம் காலமாக ஆண்வருக்கம் பெண்கள்மீது இக்கொடுமையை ஏவுகிறது; அழிக்க முற்படுகிறது.

தருமன் சூதில் தோற்றதும், துரியோதனன் பாஞ்சாலியைச் சபைக்கு இழுத்து வந்து மானம் பறிக்கச் செய்கிறான். அவள் அவைக்கு வரும் நிலையில் இல்லை என்றுரைத்தபோதும், முடியைப் பற்றி துச்சாதனன் இழுத்துச் செல்கிறான். இது என்ன நீதி? தம்மை வைத்துச் சூதில் இழந்தபின் தாரமுடமை ஏது? என்று அவள் எழுப்பிய குரல் பெண்வருக்கம் அன்றும் இன்றும் என்றும் நம்பிக்கை கொள்ளும் துணிவுக் குரல்.

அவள் சேலை உரியப் பெற்றபோது, ஐந்து நாயகர்களும் கைவிட்ட நிலையில், கண்ணன் உற்ற தோழனாக வந்து உதவினான். பொருள் சார்ந்த பேராசைகளில் ஒருவரை மற்றவர் தாக்க, போர் அல்லது சாதி-மத சமூகக் கலவரங்கள் நிகழும்போது, அப்பாவிகளான பெண்களுக்கு குரூரங்கள் இழைக்கப்படுகின்றன. அதுவும், காக்கிச் சட்டையணிந்து காவலராகக் காக்க வேண்டிய கடமையில் இருப்பவரே கயவர்களாகி, குற்றங்களுக்குச் சம்பந்தமே இல்லாத பெண்களை வன்முறைகளுக்கு உட்படுத்துகின்றனர்.

நாடு துண்டாடப்பட்டபோது, மதத்தின் பெயரால் இந்தியத் திருநாட்டில் பெண்களுக்கிழைக்கப்பட்ட குரூரங்கள், வன்முறைகள், நினைக்கவே இரத்தம் சுண்ட வைப்பனவாக இருந்தன. காந்தியடிகள் மனம்நொந்து, அந்த இடங்களில் எல்லாம் தம் மலர்ப்பாதம் பதிய நடந்தார். அவருடைய உள்மனதில் பதிந்த அந்த இரணங்கள் இறுதிவரை ஆறவேயில்லை. “பெண்ணே உன் மானத்துக்கு ஊறு வரும்போது, நீ இம்சைச் செயலில் ஈடுபட்டு உன்னைத் தற்காத்துக் கொள்ளலாம்” என்று உரைத்தார்.

நேருக்கு நேர் திறமையால் மேநிலை எய்திய பெண்களுடன் வாதுகள் செய்யலாம்; வாளேந்திப்போரும் புரியலாம். ஆனால் இந்நாள் அவளுடைய மேம்பாட்டையும் மேநிலையையும் ஒப்புக் கொள்ளாத ஆதிக்கங்கள், குன்றேறி நிற்கும் கருவங்கள், மூர்க்கத்தனமான செயல்களில் தம்மை வெளிப்படுத்திக் கொள்கின்றன.

உலகெங்கும் இந்தப் பாதகங்கள் நடைபெறுகின்றன. வளமையும் செல்வமும் மிகுந்த நாடுகளானாலும், போர்வெறி மூண்டுவிட்டால் அங்கே பலியாக்கப்படுபவர் குற்றமற்ற பெண்களும் குழந்தைகளும்தாம்.

இந்தியத் துணைக்கண்டத்தில், சுதந்திரம் பெற்று ஐம்பத்தாறாண்டுகளான பின்னரும், பொருளாதார, சமூக, சமத்துவம் என்பது அன்றைய நிலையில் இருந்து கிடுகிடுவென்று இறங்குமுகமாகி இருக்கிறது. காந்தியடிகள் ஏழு வகை அறங்களைக் குறிப்பிட்டார். இந்நாள் ஓர் இலக்கிலும் அறம் இல்லாத அதர்ம பரிபாலனங்கள் மக்களை வறுமையிலும் இயலாமையிலும், மிதமிஞ்சிய பொருள் குவிப்பு அதிகாரங்களிலும் சின்னாபின்னமாக்கிக் கொண்டிருக்கின்றன. வன்முறை அட்டூழியங்கள் ஆண்டுக்காண்டு குறையவில்லை.

எட்டு ஆண்டுகளுக்கு முன் இந்த நிலையை, வருந்தத்தக்க உண்மை என்று ஒரு கட்டுரையில் விவரித்திருந்தேன்.

1. ஒவ்வொரு நாற்பத்தேழு நிமிடத்துக்கும் ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுகிறாள்.

2. ஒவ்வொரு நாற்பத்து நான்கு நிமிடத்துக்குமிடையே ஒரு பெண் கடத்தப்படுகிறாள்.

3. ஒரு நாளைக்குப் பதினேழு வரதட்சணைக் கொலைகள் நிகழ்கின்றன.

என்றெல்லாம் பட்டியலிட்டிருந்தேன். இந்த இடைப்பட்ட ஆண்டுகளில், பெண்களுக்கு விழிப்புணர்வும் தைரியமும் கொண்டு வர சட்டங்கள் நெறிப்படுத்தப் பட்டிருக்கின்றன. பெண் கிண்டல், வரதட்சணை ஆகிய குற்றங்களுக்கு எதிரான சட்டங்களும் மகளிர் காவல் நிலையங்களும் இவற்றில் குறிப்பிடத்தகுந்தவை.

சட்டங்களும், நெறிமுறைகளும், நீதிகளும் மகளிருக்கு உண்மையில் பயன்பட வேண்டும்; பயன்பட்டிருக்க வேண்டும்; மகளிர் மேம்பாட்டுக்காக நிறுவப்பட்ட பள்ளிகள், உயர் கல்லூரிகள், தொழிற் பயிற்சி மையங்கள் எல்லாம் சமுதாயத்தில் மகளிர் நிலையை உயர்த்தாமல் இல்லை. ஆனால் வன்முறைகளும், தற்கொலைகளும் கொலைகளும் அன்றாடம் நிகழும் அவலங்களாக விரிவது ஏன்?

பழைய மண்ணில் புதிய வித்துக்கள் என்பதுதான் முரண்பாடா?

இல்லையேல் புதிய வித்துக்கள், ஒளி வெள்ளத்தின் கவர்ச்சியில் இருள் திரளுக்குள் நுழையும் முரண்பாடா?

பெண்ணறிவு, மாந்தரின் பேராசைகளைத் துண்டுமா?

பொதுவாகவே எல்லாச் சமயங்களிலும், ஆணுக்கிருக்கும் பல உரிமைகள் பெண்ணுக்கு இல்லாமல் இருப்பது இயல்பாக இருக்கிறது.

காலம் காலமாக வளைந்து போன ஒரு கூனலை நிமிர்த்துவது சிரமம்தான். பெண்ணுக்குப் பெண் எதிரி என்ற கருத்து, மாமியார் - மருமகள் - நாத்தி - அண்ணி - இளைய தாரம் மூத்தவள் மக்கள் என்ற உறவுகளை, விரோதமாகவே நெறிப்படுத்தி வந்திருக்கிறது. கொடுமைகளுக்கு எதிரான சட்ட உரிமை, வழக்கு, தண்டனை என்ற பரிகாரங்கள், தவறுதலாகப் பயன்படுத்தப்பட்டால், நிலைமை இன்னமும் மோசமாகும்.

பழங்காலத்தில், வீட்டுக்குள் கொடுமை என்பது, கணவன் தாசி வீட்டுக்குச் செல்வதும், மாமியார் சொல்லாலும் செயலாலும் மருமகளை நோகச் செய்வதுமாக இருந்தன. அவளைத் தள்ளி வைப்பார்கள், பிள்ளைக்கு மறுமணம் செய்ய முயல்வார்கள். பணம், நகை கேட்பார்கள். ஆனால், காலக்கிரமத்தில், அதிகபட்சமானாலும் மாற்றங்கள் வரும். மனம் திருந்தவும், விட்டுக் கொடுக்கவும், சந்தர்ப்பங்கள் இருந்தன. மூத்தாள் இளையாள் மகளைக் கொலை செய்தாள், விபசாரத்துக்கு விற்றாள், மாமியாரும் நாத்தியும் எரிவாயுவைத் திறந்து விட்டுக் கொலை செய்தார்கள் என்ற கொடுமைகள் இவ்வாறு இறைபடவில்லை. சமுதாயத்தின் வறிய மட்டங்களில் உழைப்பாளியான புருசன் குடித்துவிட்டு, குடிவெறியில் மனைவியை அடிப்பான். ஆனால், இன்று கல்லூரியில் தங்கப் பதக்கங்கள் பெற்று உயர்தொழில் செய்யும் கணவன், மனைவியைக் கொல்கிறான்; குழந்தையைக் கொல்கிறான்; சிகரெட் துண்டால் அவள் மேனியைச் சுடுகிறான்.

வீட்டுக்குள் நிகழும் கொடுமைகளுக்குச் சட்டங்கள் பயனளிக்குமா? எப்படியும் மாமியார் மீது அந்தப் பழி விழுந்து அவளைச் சிறைக்குள் தள்ளுவது பெண்ணுக்கு வெற்றியாகுமா?

பொய்க் குற்றங்களும் இலஞ்சங்களும் அநீதிகளும் மலிந்து போன (சாராய) சமூக நடவடிக்கைகளில் மீண்டும் மீண்டும் பெண்மீதே குற்றங்களும் தண்டனைகளும் விடியாதென்பது என்ன நிச்சயம்? பெண்ணுக்கு எதிரி பெண்ணே என்ற திசை திருப்பல் தவிர்க்கப்பட வேண்டும். கொடுமைகளின் மூலம் எங்கே என்பது கண்டறியப்பட வேண்டும்.

இன்றைய விபரீதங்கள், வணிக ரீதியாக, ‘பெண்’ணுடல் சந்தைப்படுத்துப்படுவதில்தான் வேர் கொண்டிருக்கின்றன. கலை, இலக்கியம், கல்வி, தொழில், அரசியல் எல்லா கூறுகளிலும் இந்த அபசுர நிழல், நம்மையறியாமலேயே படர்ந்து வந்திருக்கிறது. காட்சி ஊடகங்கள், மக்கள் தொடர்பு சாதனங்களாகிய பத்திரிகை, வானொலி ஆகிய எல்லாவற்றிலும், வாணிகப் பொருளாகப் பெண் அவளையறியாமலேயே மாற்றப்பட்டிருக்கிறாள்.

பொருள், வாழும் வசதி என்று நுகர்பொருள் சந்தையில் அவளே சந்தைப்பொருளாக, மாடலிங், கவர்ச்சி என்ற இருளுக்கு இழுத்துச் செல்லப்படுகிறாள்.

உருகி உருகி தெய்வத் தமிழைப் பாடவல்ல பெண்ணும், மறுபக்கம் வெறியூட்டும் உடற்கவர்ச்சிப் பாடல்களைப் பாடுவதை, புகழ் பெறுவதை வெற்றியாக நினைக்கிறாள். மழலைப் பள்ளிப் பெண்ணும், ‘ஐ லவ் யூ’ என்று ஆங்கிலத்தில் எழுதி இன்னொரு ஆண் மழலைக்குக் கொடுக்கிறாள். பள்ளிக் காவலனாகப் பணி செய்பவன் சமயம் கிடைக்கும்போது அந்த மழலையைத் தூக்கிச் சென்று தன் வெறிக்கு வடிகால் தேடுகிறான். இதெல்லாம் நடப்பியல் உண்மைகள் கதையுமல்ல, கருத்துமல்ல.

மரியமக்தவேனா விபசாரி என்று இழித்துரைக்கப்பட்டு வெறிக்கூட்டத்தின் கற்கள் விழுந்தபோது, “ஓ மனிதர்களே, உங்களில் பாவம் செய்யாத ஒருவர் மட்டுமே கல் வீசலாம்!” என்று குரல் கேட்டதாம்; வெறிக் கூட்டம் திகைத்ததாம்.

மனிதகுல பரிணாம வளர்ச்சியில் எங்கிருந்தோ குரூரங்களில் அறிவு துலங்கியிராத இயல்பு வேகத்தில் தட்டுத் தடுமாறி முட்டி முரண்டு தொடர்ந்து ஒருவனுக்கு ஒருத்தி என்ற நெறி கண்டோம்.

இந்த இடத்தில் மேன்மையை எட்ட ஏழு நெறிகளை காந்தியடிகள் குறிப்பிட்டார். 1. கொள்கையை நழுவவிடும் அரசியல், 2. பக்தியை இலட்சியமாக்காத இறைவழிபாடு, 3. ஒழுக்கம் அடிநாதமாக இல்லாத கல்வி, 4. நாணயம் இல்லாத வாணிபம், 5. மனிதநேயமற்ற அறிவியல் வளர்ச்சி, 6. உடலுழைப்பை விழுங்கும் செல்வம், 7. மனச்சான்றுக்கு ஒப்புதலில்லாத இன்பம்.

இத்துணை அறங்களும் தொலைந்துவிட்டன. வாழ்வாதாரங்களான நீரும், காற்றும், சூழலும் உலகெங்கும் மாசுபட்டிருக்கின்றன. உயிர்களை வாழ வைத்த இயற்கையின் அஹிம்சைத் தத்துவத்தைப் பேராசைகளாலும், வெடிகுண்டு கலாசாரத்தாலும் முறியடிக்க முற்பட்டிருக்கிறோம். எங்கிருந்து தொடங்கி எப்படி இந்த மாசுகளைக்களையும் முயற்சியில் ஈடுபடுவோம் என்ற குழப்பம் மேலிடுகிறது. என்றாலும், சஞ்சலங்களை ஒதுக்கி அவரவருக்கே உரிய வகையில் துணிவுடனும் நம்பிக்கையுடனும் புதிய வித்துக்கள் செழிக்க அக, புறத் துய்மைக்கு வழிவகுப்போம்.

‘பாரதமணி’,
ஜனவரி, 2004