புதியதோர் உலகு செய்வோம்/வெறும் செய்தியா?

விக்கிமூலம் இலிருந்து
12. வெறும் செய்தியா?

மனைவிக்கு எழுபத்தைந்து வயது. கணவருக்கு எண்பது வயது. மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவர், அவளைக் கொலை செய்தார். அவள் வீட்டருகே வசித்த ஒரு பழ வியாபாரியுடன் தொடர்பு கொண்டிருந்தாளாம். இது அவர்களுக்குள் அடிக்கடி தகராறு வரக் காரணமாக இருந்ததாம். நள்ளிரவில் அவள் தூங்கும்போது முதியவர் அரிவாளால் வெட்டிக் கொன்றார். இது செய்தி (தினமணி 2010.2003).

இந்தச் செய்தி தரும் அதிர்ச்சி இதுதான்.

இந்த வயதில் மனைவியின் நடத்தையில் சந்தேகம் வந்து அவளைப் படுகொலை புரியும் வரை அவரை விரட்டியிருக்கிறது. ‘தொடர்பு’, ‘சந்தேகம்’ என்ற இரு சொற்களும், எழுபத்தைந்துக்கும் எண்பதுக்கும் உரியவையாகச் சொல்லப்பட்டிருப்பதுதான் அதிர்வலைகளை ஏற்படுத்துகின்றன. எழுபதும் எண்பதும் பழுத்த முதுமை.

‘தொடர்பு’ என்ற சொல்லின் முழுப் பொருள் யாது? அந்த மூன்றாம் மனிதர் இளைஞரா? கிழவி பாசத்துடன் பழகினாளா? இருக்கலாம். கிழவருக்குத் தம் முதுமைக் காலத்தில் மனைவி தமக்கே உரியவள் என்ற உடமையுணர்வு அழுத்தமாக இருந்திருக்கலாம். முதுமையின் விரக்தியும் தன்னிரக்கமும் அவரை இந்த எல்லைக்குக் கொண்டுசென்றிருக்கலாம். எந்த நிலையிலும், ஒரு மனைவி என்ற நிலையில் ஒர் ஆணின் உரிமைக்குட்பட்ட சடப்பொருளாகவே பெண் பார்க்கப்படுகிறாள். இதுதான் விபரீதமாக விளைந்திருக்கிறது.

ஆனால், முதுமைக் காலத்துக்கே உரிய தனிப்பட்ட மனச்சிக்கல்களைத் துருவி, ஒரு பத்திரிகைச் செய்தியை வெளியிட வேண்டியது அவசியம் இல்லை. ஏனெனில், பயன்படுத்தப்பட்ட நடத்தை, சந்தேகம், தொடர்பு ஆகிய சொற்கள், வயதில் இளைய குடும்பம் சார்ந்த ஆண்-பெண் பாலரோடு தொடர்பு கொண்டவை.

உண்மையாகவே கிழவர் அத்தகைய பொருளுக்குரிய மனவிகாரத்துடன் செயல்பட்டிருந்தாலும், அவர் ஏதோ ஒரு மனக்கோளாறுக்குட்பட்டவராகிறார். எனவே இத்தகைய கற்பிதங்கள், பொதுவாகவே, சமூகத்தின் இருபாலருடைய மன, உடல் ஆரோக்கியங்களை மாசுபடுத்துகின்றன.

அண்மைக்காலங்களில் இளைஞர் உலகை நோக்கிக் கட்டவிழ்த்துவிடப்படும் வணிகநோக்குக் ‘காதல்’, புனிதமான பாலியல் உணர்வுகளை, இல்லறம் என்ற மேன்மையான எல்லைகளுக்குள் வைத்துப் பாதுகாக்கப்பட வேண்டிய உயரிய உணர்வுகளை, எப்படியெல்லாமோ கொச்சைப்படுத்தி வருகிறது. எல்லாத் தளங்களிலும், இளைய சமுதாயத்தினர், இந்த மனவிகாரங்களில் சிதறடிக்கப்படுகிறார்கள். சினிமா, தொலைக்காட்சி விளம்பரங்கள், வானொலி (பண்பலை)யின் இடைவிடாத உருவேற்றல்கள் எல்லாம், படித்தவர், படிக்காதவர், எல்லோரையும் உடல், உடல், உடல் என்ற தன்னுணர்வு களில் சிறைப்படுத்துகின்றன. ‘இலக்கணம் மீறிய சுவாரசியங்கள்’ என்று ஒழுக்க ரேகைகளை உடைக்கும் காட்சிகள் நியாயங்களாகும் ‘தொடர்கள்’ என்ற விளம்பரக் கொக்கிகள், ஈர்ப்பு இல்லாதவர்களையும் பிடித்து இழுக்கின்றன.

‘காதல்’ என்ற பதத்தில் எழும் பல்வேறு பரிமாணங் களும் பெண்ணின் உடலை மட்டுமே பாதிப்புக்குள்ளாக்குகின்றன. ‘உடல்’ என்று வரும்போது, இருபாலருக்கும் பொதுவென்றாலும், பெண் ஒர் அற்பக் கீறலைக் கூட மறைக்க இயலாத கண்ணாடி போன்றவளாகப் பார்க்கப்பட்டு வருகிறாள்.

இந்தக் கருத்தியலில் மாற்றமே இல்லை. இதைத்தான் எழுபத்தைந்து வயது மூதாட்டியின் கொலை தெளிவாக்குகிறது. அன்றாடம் பத்திரிகைச் செய்திகளில் கொலைகள் முந்நாட்களைப் போல் எந்தப் பரபரப்பையும் மக்களிடம் தோற்றுவிப்பதில்லை. என்றாலும் ஆண்-பெண் என்று பிறவியெடுப்பதன் நோக்கமே, இந்த உடல் சார்ந்த உணர்வுகளைத் தூக்கிப் பிடித்து அனுபவிப்பதுதான் என்பது சரிதானா?

நம் பழைய கதை-புராணங்களில் இறுதிக் காலங்களில் அரசர்கள், இல்லறம் துறந்த சான்றோர், வனங்களை நாடிச் சென்றனர் என்றறிந்திருக்கிறோம். சொத்து - சுகங்கள், பிள்ளை குட்டி, பாசங்கள் எல்லாம் துறந்து அமைதியில் இறுதி காணச் சென்றதாகவே கொள்ள வேண்டும். ஆனால் இந்நாட்களில் முதியோருக்கான இல்லங்கள் குறித்துத் தரப்படும் விளம்பரங்களில் , போகங்கள், சுகங்கள், (அமெரிக்கா சென்று வருவது உட்பட) வசதிகள், தன்னல மருத்துவங்கள் என்ற வண்ண வண்ணக் கவர்ச்சிகள் இறைக்கப்படுகின்றன.

ஒரு சொகுசு வண்டிக்கான விளம்பரம், மூன்று தலைமுறை மக்கள் சுகமாக உறங்கும் வசதியுடன் பயணம் செய்வதைக் காட்டுகிறது. ஓராணும் பெண்ணுமாக நடுத்தர வயது கடந்த முதிய தம்பதி, மிக நெருக்கமாக ஒரு வரை ஒருவர் சார்ந்து, அனுபவிக்கும் காட்சியில், “சீ! பின்னே பிள்ளைங்க..” என்ற சிணுங்கல் எழும்புகிறது. “அவங்க தூங்கி இருப்பாங்க!” என்ற விடைக்கு எதிரொலியாகப் பின்னிருந்து “நாங்க பாக்கல...” என்று இளவட்டங்கள் சிரிக்கின்றன.

வசதியான வண்டி விளம்பரம் இது. இத்தகைய உருவேற்றல்கள் சமுதாயத்தை எங்கே கொண்டு செல்கின்றது? அந்தந்தப் பருவத்துக்குரிய ஈர்ப்புகள், ஆசைகள். இயல்புதான். ஆனால், வயது முதிர முதிர, உலகியல் அனுபவங்களில் உணர்வுகள் புடம்போட்ட சொக்கத் தங்கமாக மாற வேண்டும்.

இன்றைய இளம் சமுதாயத்தினருக்கு, உயிர் வாழ இன்றியமையாததான நீர், காற்று, நல்ல மண் போன்ற இயற்கையின் கொடைகளைக்கூட உத்தரவாதப்படுத்த இயலாத நிலையில் முதிய சமுதாயம் இருப்பதைத் தம் குற்றமாக உணர வேண்டும். மனிதநேயங்கள் தேய்ந்து விட்டன என்ற புலம்பல்களை விடுத்து, தன்னலமற்ற தியாகம் இன்னா செய்தாரையும் மன்னித்தருளும் தகைமை, அன்பு என்று முதிய தலைமுறை வழிகாட்ட வேண்டும். இந்த நோக்கில் அபகரங்களாக ஒலிக்கும் விளம்பரங்களும் செய்திகளும் செல்லாக்காசுகளாக மதிப்பிழக்க வேண்டும்.

‘தினமணி’
28.10.2003