உள்ளடக்கத்துக்குச் செல்

புது டயரி/என் புத்தகங்கள்

விக்கிமூலம் இலிருந்து



என் புத்தகங்கள்

யாராவது ஒர் அறிஞரைப் பார்த்துச் சிறிது நேரம் பேசி அவருடைய அறிவுரையைக் கேட்டு வரலாம் என்று நினைக்கிறோம். அவர் வீட்டுக்குப் போகிறோம். அவர் இருக்கிறதில்லை. இருந்தாலும் வேலை அதிகமாக இருப்பதானனால், “அப்புறம் வாருங்கள்” என்று சொல்லிவிடுகிறாா். இன்னும் சில நண்பர்களை நாம் நினைத்த நேரத்துக்குப் பார்க்க முடிகிறதில்லை.

ஆனால் வேறு சில பெரியவர்கள் இருக்கிறார்கள்; அவர்கள் இப்போது இல்லை என்றாலும், இருந்துகொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களை எந்த நேரத்தில் கூப்பிட்டடாலும் வருவார்கள். நம்மோடு பேசுவார்கள். நமக்கு அறிவுரை தருவார்கள். அவர்கள் யார் தெரியுமா? திருவள்ளுவர், கம்பர், ஷேக்ஸ்பியர், மில்ட்டன், காளிதாசர் முதலியவர்கள். அவர்களை உடம்புடன் பார்க்க முடியாது என்பது உண்மைதான். நாம் என்ன, அவர்களோடு கை, குலுக்கப் போகிறோமா? சாப்பாடு போடப் போகிறோமா? அல்லது உட்கார்த்தி வைத்து விசிறி வீசப் போகிறோமா? அவர்கள் யாவரும் தம்முடைய நூல்களில் வாழ்கிறார்கள். அவர்களே அந்த நூல்களின் வடிவத்தில் இருக்கிறார்கள். அவர்களை எப்போது வேண்டுமானாலும் அணுகலாம். அலுப்புத் தட்டினால் ‘கொஞ்சம் இருங்கள்’ என்று கூறி வந்து விடலாம். ‘போர்’ அடிக்கிற பெரிய மனிதர்களைப் போல நம்மைத் தொந்தரவு பண்ணமாட்டார்கள்.

புத்தகங்களை மனிதன் பெற்ற பெருஞ்செல்வம் என்று தான் சொல்ல வேண்டும். அதுவும் அச்சுயந்திரம் வந்த பிறகு எத்தனை வகையான புத்தகங்கள், எத்தனை அழகான வடிவத்தில் வந்திருக்கின்றன!

நான் புத்தகப்பித்தன்; புத்தகப்புழு என்று சொல்லுங்கள்; ஏற்றுக் கொள்கிறேன். வேறு எதிலாவது இருக்கும் புழுவைவிடப் புத்தகப் புழு உயர்வுதானே? சின்னப் பிராயத்திலிருந்தே புத்தகம் சேர்ப்பதென்றால் எனக்கு ஆசை. நாவல்கள் பலவற்றைச் சேர்த்து வைத்தேன். இலக்கியப் புத்தகங்களையும் வாங்கிச் சேர்த்தேன். 1916-17 ஆம் வருஷம் என்று ஞாபகம். என் மாமா வீட்டில் இருந்து படித்துக் கொண்டிருந்தேன். என் தகப்பனார் வேறு ஊரில் இருந்தார். மத்தியான்ன நேரங்களில் சிற்றுண்டி வாங்கிச் சாப்பிடப் பணம் கொடுத்து வைப்பார். நான் அந்தப் பணத்துக்குப் புத்தகம் வாங்கிவிடுவேன். ஒரு முறை கந்தர் அநு பூபதி, கந்தர் சஷ்டி கவசம் போன்ற நூறு சில்லறை நூல்கள் அடங்கிய விநாயகர் கொத்து என்ற புத்தகத்தையும் அருணாசல புராணத்தையும் வாங்கி வந்தேன். அந்தக் காலத்தில் நான் மூன்றாவது பாரம் படித்துக் கொண்டிருந்தேன். விநாயகர் கொத்து, குட்டையான புத்தகம்; தடிமனாக இருக்கும். “இதை என் வாங்கினாய்?” என்று என் மாமா கேட்டார். “எனக்குப் பாடம்!” என்றேன். அது பாடம் அன்று என்று அவருக்கு நிச்சயமாகத் தெரியும் அதை வாங்கியதற்காகவும் பொய் சொன்னதற்காகவும். அவர் என்னைக் கடுமையாகக் கோபித்துக் கொண்டார்.

கொஞ்சம் கொஞ்சமாகப் புத்தகங்களைச் சேர்த்து எங்கள் ஊரில் உள்ள எங்கள் வீட்டில் வைத்தேன்  ஆயிரம் தல வாங்கிய அபூர்வ சிந்தாமணி, இரத்தினபுரி ரகசியம், மின்சார மாயவன், தாசி தையல் நாயகியின் சமர்த்து — இப்படியெல்லாம் பல நாவல்கள் இருந்தன.

விவேக சாகரம் என்று ஒரு புத்தகம். அந்தப் புத்தகத்தை இப்போது அச்சிட முடியாது. பச்சைச் சிங்காரம் அது. எட்டையாபுரத்தில் இருந்த முஸ்லீம் ஒருவர் எழுதினது அது. நடை கடுமையான பண்டிதர் நடை.

ஒரு பிராம்மணன் நான்கு வேதங்களும் கற்றுக் கொள்கிறான். இடையிலே அவனுக்குக் கல்யாணமாகிறது. வேதங்களை அத்தியயனம் செய்து விட்டு வீட்டுக்கு வருகிறான். மனைவியோடு வாழலாம் என்று வருகிறான். அவன் மனைவி ஒரு கள்ளப் புருஷனை வைத்துக்கொண்டிருக்கிறாள். தன் கணவனிடம், “நான்கு வேதந்தானே கற்றிருக்கிறீர்கள்? ஐந்தாம் வேதமும் கற்றுக் கொண்டு வாருங்கள்” என்று சொல்லி அனுப்பி விடுகிறாள். அந்த அப்பாவிப் பிராம்மணனும் அதை உண்மையென்று நம்பிப் புறப்பட்டு விடுகிறான். சில பெண்களைச் சந்தித்துத் தான் ஐந்தாம் வேதம் கற்றுக் கொள்வதற்கு வந்திருப்பதாகவும் அதற்குரிய குருவைத் தேடிக் கொண்டிருப்பதாகவும் சொல்கிறான். அந்தப் பெண்கள் தாங்களே ஐந்தாம் வேதத்தைக் கற்றுத் தருவதாகச் சொல்கிறார்கள்.

ஒவ்வொருத்தியும் வெவ்வேறு வகையான தந்திரம் செய்து தன் கணவன் இருக்கும்போதே அந்தப் பிராம்மணனோடு இன்புறுகிறார்கள். “இதுதான் ஐந்தாம் வேதம்” என்கிறார்கள். இப்படி ஐந்து பேர் ஐந்து வகையில் அவனுக்குக் கற்றுக் கொடுக்கிறார்கள். இடையில் பல உபகதைகள். எல்லாம் பச்சை பச்சையான செய்திகள்.

இந்தக் கதையைச் சொல்வதுதான் விவேகசாகரம் அந்தப் பிராம்மணன் பெற்றுக்கொண்ட விவேகம், முறை  யற்ற காமலீலை. இப்போது மட்டும் அந்தப் புத்தகத்தை வெளியிட அரசு அனுமதிக்குமானல் ஒரே நாளில் லட்சம்பிரதிகள் செலவாகிவிடும்!

விவேகசாகரமும் வைத்திருந்தேன்; கைவல்ய நவநீதமும் வைத்திருந்தேன். இராஜாம்பாள் சரித்திரம், ஹனுமான் சிங் முதலிய துப்பறியும் நாவல்களும் இருந்தன. அப்போது வடுவூர் துரைசாமி ஐயங்கார் நாவல்கள் வராத காலம். ஆரணி குப்புசாமி முதலியார் தழுவல் நாவல்கள் எங்கும் பரவியிருந்த காலம்.

கிட்டத்தட்ட முந்நூறு புத்தகங்கள் என்னிடம் இருந்தன. அவற்றையெல்லாம் சேர்த்துப் பூர்ணமதி புத்கக சாலை என்று பெயரிட்டேன். பூ. ம. பு. என்று சுருக்கி மாக்கல்லில் நானே அச்சு அமைத்து மையில் தோய்த்துப் புத்தகங்களில் குத்தினேன், நாவல்களை அன்பர்களுக்குக் கொடுத்து வாசித்த பிறகு வாங்கி வைப்பேன், இலவச வாசகசாலை என்னுடைய புத்தகசாலை.

பத்திரிகைகளை எல்லாம் சேர்ப்பேன். அப்போதெல்லாம் எந்தப் பத்திரிகைக்காரரும் மாதிரிப் பிரதி வேண்டுமென்றால் உடனே அனுப்பி விடுவார்கள். அநேகமாக அந்தக் காலத்தில் நடைபெற்ற பத்திரிகைகளில் ஒவ்வொன்றிலும் ஒரு பிரதியாவது என்னிடம் இருக்கும். ஆனந்த போதினிக்கு நான் சந்தாதார். புத்தகக் கம்பெனிகளுக் கெல்லாம் கேட்லாக்குக்கு எழுதி வாங்கி வைத்துக் கொள்வேன். அந்தக் காலத்தில் கார்டு காலணாத்தான். நாள்தோறும் கடிதங்கள் எழுதுவேன். ஒவ்வொரு நாளும் எனக்கு ஏதாவது தபால் வந்துகொண்டே இருக்கவேண்டும். பத்திரிகையின் மாதிரிப் பிரதியோ காட்லாக்கோ எதுவானலும் சரி, வரவேண்டும். தபால் நிலையத்துக்குப் போய்த் தபால் கட்டுகளை உடைக்கும்போதே உடனிருந்து  தபால்களை வாங்கிக் கொள்வேன். அந்தக் காலத்தில் வி. பி. பி.யில் புத்தகம் தருவிப்பது எளிது. அதற்கென்று விசேஷச் செலவு கிடையாது. இப்போது வி. பி. பி.யில் தருவிப்பதென்றால் எத்தனை செலவு ‘சுண்டைக்காய் கால் பணம், சுமைகூலி முக்கால் பணம்’ என்பது இந்தக் கால வி. பி. பி.ச் செலவுக்கு நூற்றுக்கு நூறு பொருத்தமான பழமொழி.

அப்படிப் பல பத்திரிகைகளைப் படித்துப் படித்து நாமும் பத்திரிகைகளுக்கு எழுத வேண்டும் என்ற ஆசை உண்டாயிற்று. தினப் பத்திரிகைகளுக்கு ஊர்ச் செய்திகளை எழுதினேன். ஒவ்வோர் ஊரின் பெயரையும் தலைப்பாக இட்டுக் கீழே செய்திகளை வெளியிட்டு வந்த காலம் அது. எங்கள் ஊராகிய மோகனூரைப் பற்றி எத்தனையோ செய்திகளை எழுதினேன். பிறகு கவிதை. தேசீய கீதங்கள் முதலியவற்றை மாதப் பத்திரிகைகளுக்கு எழுதி அனுப்பினேன்.

சென்னைக்கு வந்த பிறகு இலக்கியப் புத்தகங்களைச் சேகரிப்பதில் ஆசை பிறந்தது. வாங்கி வாங்கிச் சேர்த்தேன். ஒரே நூலில் நான்கைந்து பதிப்பு இருக்கும். எல்லாவற்றையும் வாங்கி வைப்பேன். திவ்யப் பிரபந்தத்தைப் பலபேர் பதிப்பித்திருக்கிறார்கள். சமீபத்தில் கூட 15 ரூபாய் கொடுத்து ஒரு புதுப் பதிப்பை வாங்கியிருக்கிறேன். எல்லாம் எப்போதும் பயன்படுமா என்று கேட்கலாம். பெண்பிள்ளைகள் எத்தனை பாத்திரங்கள் வாங்கிச் சேர்க்கிறார்கள்! எல்லாம் நாள்தோறுமா பயன்படுகின்றன?

என்னுடைய ஆசிரியப் பெருமான் ஐயரவர்கள் பெரிய புத்தகப் பித்தர். பல நூல்களைத் தொகுத்தார்கள். படித்தார்கள். ஏட்டுச் சுவடியிலேயே படித்தவர்கள் அவர்கள்.  எந்த நூலைப் படித்தாலும் அதில் அடையாளம் செய்து படிப்பவர்கள். அவர்களுக்கென்று சில சங்கேதங்கள் உண்டு. நல்ல பாடல்களாக இருந்தால் அதன் பக்கத்தில் ஒரு சுழி போட்டிருப்பார்கள். அது பாடம் பண்ணத் தக்க பாட்டு என்று பொருள். சில இடங்களில் ஒரு புள்ளி, இரண்டு புள்ளி, மூன்று புள்ளிகள் இருக்கும். ஒரு புள்ளி இருந்தால் அந்த வரியில் சிந்திப்பதற்குரிய கருத்து ஒன்று இருக்கிறது என்று பொருள். மூன்று புள்ளிகள் இருந்தால் அங்கே மூன்று கருத்துக்கள் கவனிப்பதற்குரியவையாக இருக்கும். சந்தேகமுள்ள இடங்களில் — என்று சிறு கோடு இட்டிருப்பார்கள். பல இடங்களில் பாட்டின் ஒரு பாதியையோ, முழுப்பாட்டையோ பக்கத்தில் கெட்டையாகக் கோடிட்டிருப்பார்கள். அவை முக்கியமான பகுதிகள். சில இடங்களில் அடிக்கோடிட்டிருப்பார்கள். படிக்கிறவர்கள் படித்து அடையாளம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்துவார்கள். அவர்கள் ஏதாவது நமக்கு அறிவிக்க வேண்டுமானல், “அதோ அந்தப் புத்தகத்தை எடு; வலப்பக்கத்தில் மேலே அடையாளம் செய்திருக்கிறேன், அதைப் படி” என்பார்கள். அங்கே நமக்கு வேண்டிய கருத்தோ, மேற்கோளோ கிடைக்கும். அவர்கள் ஒன்று சொல்வதுண்டு; “நான் இறந்தால் மறுபடியும் தமிழ் நாட்டில்தான் பிறப்பேன். தமிழ் நூல்களைக் கற்பேன். ஆனால் நான் அடையாளம் இட்டு வைத்த இந்தப் புத்தகங்கள் எனக்குக் கிடைக்குமா?” என்று வருந்துவார்கள். தாம் படித்துக் குறிகளிட்ட புத்தகமென்றால் அதற்குத் தனி மதிப்பு, புழங்கின பாத்திரம் மாதிரி, அந்தப் பழக்கத்தை அவர்களிடம் நானும் கற்றுக் கொண்டிருக்கிறேன். எதைப் படித்தாலும் அடையாளம் செய்து படிப்பேன். பிழை இருந்தால் திருத்திக் கொண்டு படிப்பேன். சில புத்தங்களைப் பார்த்தால் ‘புரூப்’ திருத்து  வதற்காக என்னிடம் யாரோ கொடுத்திருக்கிறார்கள் என்று தோன்றும். நான் என்ன செய்வது? அப்படி ஒரு ‘கெட்ட பழக்கம்’ எனக்கு உண்டாகிவிட்டது.

பாரதியார், சில செய்யுள் நூல்களைப் படித்தால் சுவையில்லாத பாடல்களை அடித்து விடுவாராம். அவருக்கு அத்தனை ராஜச குணம்.

புத்தகங்களைப் படிக்கும்போது சில பேர் அடையாளம் வைப்பதற்காகத் தாளின் மூலையை மடித்து விடுவதுண்டு. அது நல்லதல்ல. பாராயண நூல்களில் ஒரு பட்டுக் கயிற்றை அடையாளம் வைப்பதற்காகவே சேர்த்துப் பைண்டு செய்திருப்பார்கள். வேறு நூல்களிலும் அந்த அமைப்பைப் பார்க்கலாம். இதுவரையில் படித்திருக்கிறோம் என்பதற்காக எல்லாருமே ஏதாவது காகிதத்தை வைப்பதுண்டு.

புத்தக அடையாளம் என்கிறபோது எனக்கு இரண்டு நிகழ்ச்சிகள் நினைவுக்கு வருகின்றன. நான் பல உரைகளும் அடங்கிய திருக்குறட் பதிப்பு ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தேன். நள்ளிரவு, உறக்கம் வந்தது, புத்தகத்தை மூடிவிட்டுப் படுத்துக் கொண்டேன். விடியற் காலை எழுந்து மீண்டும் தொடர்ந்து படிக்கலாம் என்று எண்ணினேன். எங்கே விட்டேன் என்பதற்கு அடையாளம் வைக்கவில்லை. புத்தகத்தை எடுத்துப் பிரித்தேன். அடையாளம் இருந்தது. தூக்க மயக்கத்தில் புத்தகத்தை மூடியபோது இடையே ஒரு பூச்சி அகப்பட்டு இறந்து போயிருந்தது. அதுதான் அடையாளம்! நான் படித்துக் கொண்டிருந்த இடம் எது தெரியுமோ? ‘கொல்லாமை’ என்னும் அதிகாரம்! அங்கேதான் இந்தக் கொலை நிகழ்ந்திருந்தது!  ஒரு பையன் அடிக்கடி என்னிடம் கதைப் புத்தகங்களை வாங்கிச் சென்று படித்துவிட்டுக் குறித்த காலத்தில் திருப்பிக் கொண்டு வந்து கொடுப்பான். ஒரு முறை ஒரு வாரம் தாமதமாகக் கொண்டு வந்து கொடுத்தான். நான் அவனிடம், “ஏன் அப்பா, இவ்வளவு தாமதம்?” என்று கேட்டேன். “ஊரிலிருந்து என் தமக்கை வந்திருந்தாள். அவளும் படித்தாள். அதனால் தாமதம்” என்றான். நான் புத்தகத்தை வாங்கி வைத்துக் கொண்டேன். அதைப் பிரித்துப் பார்த்தேன். அதில் தாழம் பூ அடையாளம் இருந்தது பூச்சி அடையாளம் இருந்ததைச் சொல்லவே வெட்கமாக இருக்கிறது. பூ அடையாளமோ, அடையாளத்துக்கு அடையாளம்; அதன் மணம் புத்தகத்தின் தாளில் ஏறியிருந்தது.

இதை நான் உவமையாக எடுத்துச் சொல்வதுண்டு. “நம்முடைய குழந்தைகளுக்குப் பெயரை அடையாளமாக வைக்கிறோம். எதையும் அடையாளமாக வைக்கலாம். ஆனால் நம் நாட்டில் இறைவன் பெயரை வைப்பது வழக்கம். அது பூ அடையாளம் போன்றது. குழந்தையை இனம் கண்டு கொள்ள அந்தப் பெயர் உதவுவதோடு இறைவனை நினைப்பூட்டிப் பக்தி மணமும் உண்டாகச் செய்கிறது” என்பேன்.

நாம் படித்து அடையாளம் செய்த புத்தகம் என்றால் அதன் மேல் ஒரு தனி அபிமானம் ஏற்படுவது இயல்பு. பழகின புத்தகம் என்பதற்காக மட்டும் அல்ல; திடீர் என்று ஓரிடத்தை எடுக்க வேண்டுமென்றால் நாம் செய்திருக்கும் அடையாளத்தைக் கொண்டு சட்டென்று கண்டு பிடித்து விடலாம்.

சில மகானுபாவர்கள் புத்தகம் வைத்திருக்கிறார்கள். வாங்கின மேனிக்கு அப்பழுக்கு இல்லாமல் அப்படியே இருக்கும். உள்ளே பிரித்துப் படித்துப் பார்த்தால்தானே?  பழைய காலத்திலேயே—அதாவது அழகழகாகப் பைண்டு செய்த புத்தகங்கள் இல்லாமல் ஓலைச்சுவடிகள் இருந்த காலத்திலேயே-இப்படிப்பட்ட புத்தகம் காத்த பூதங்கள் இருந்தன என்று தெரிகிறது.

“புத்தகமே சாலத்
தொகுத்தும் பொருள்தெரியார்,
உய்த்துஅகம் எல்லாம்
நிறைப்பினும் மற்று அவற்றைப்
போற்றும் புலவரும்
வேறே; பொருள்தெரிந்து
தேற்றும் புலவரும் வேறு”

என்று நாலடியாரில் ஒரு பாட்டு வருகிறது. வீடு முழுவதும் புத்தகங்களை நிறைத்து வைத்துப் பூட்டி வைக்கிற புலவர்களும் இருந்தார்களாம்! அந்தக் காலத்திலேயே. அப்படியானால் இந்தக் காலத்தைப் பற்றிச் சொல்ல வேண்டாம்.

சில பேர் கெளரவத்துக்காகப் புத்தகங்களை வாங்கி வைத்திருப்பார்கள். இன்ன புத்தகம் தம்மிடத்தில் இருக்கிறதென்பது கூடத் தெரியாது. நூலுக்குள்ளே என்ன இருக்கிறது என்றும் தெரியாது. யாராவது ஏதாவது கேட்டால் தம்மிடம் இல்லை என்று சொல்லி விடுவார்கள். ஏதாவது சுவையான கருத்து இந்த நூலில் இருக்கிறது என்று யாராவது சொல்லும்போது அதை முழுவதும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை சிலருக்கு உண்டாகும். முன்னே பின்னே புத்தகத்தைப் புரட்டிப் பார்த்திருந்தால்தானே தெரியும்? அப்போதைக்குப் போய்ப் புத்தகத்தைத் துருவினால் இருக்குமிடம் தெரியுமா?

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் முன்பு சேதுஸம்ஸ்தான மகாவித்துவான் இரா. இராகவையங்கார் ஆராய்ச்சித் துறையில் பணிபுரிந்து வந்தார். அவருக்கு, உதவியாகச் சிலர் இருந்தனர். அவருள் எம். ஏ. பட்டம் பெற்றவர் ஒருவர். ஒரு நாள் மகாவித்துவான் எதையோ ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தபோது, அந்த எம். ஏ. யைப் பார்த்து, “அழற்படுகாதை எடுத்துக் கொண்டு வா” என்றார். எம், ஏ. நூல் நிலையம் சென்றார். சென்றவர் நெடு நேரமாகியும் வரவில்லை. பிறகு வந்தார், “எங்கே புத்தகம்?” என்று கேட்டார் மகா வித்துவான். “அழற்படுகாதை என்ற புத்தகம் நூல் நிலையத்தில் இல்லை. நெடுகத் தேடிவிட்டேன்” என்றார், கேட்ட புலவர் பெருமானுக்குக் கோபம் வந்துவிட்டது. “அட முட்டாள்! சிலப்பதிகாரம் இங்கே இல்லையா?” என்று கத்தினார்.

பாவம் அந்த எம். ஏ. க்கு அழற்படுகாதை என்பது சிலப்பதிகாரத்தில் உள்ள ஒரு காதை என்று தெரியவில்லை, அவருக்கே தெரிய வில்லையென்றால், புத்தகத்தை வாங்கி வைத்து வருகிறவர்களுக்குக் காட்டுவதோடு நிற்கும் பெரு மக்களுக்கு என்ன தெரியப் போகிறது?

நான் படித்துக் குறிப்பு எடுத்த புத்தகத்தை யாராவது கேட்டால் கொடுக்க மனம் வருகிறதில்லை. கேட்கிறவர்களுக்குக் கொடுக்காவிட்டால் அவர்கள் என்னைப் பற்றித் தவறாக நினைக்கக்கூடும். சிலருக்குப் புத்தகங்ளைக் கொடுத்துத் திரும்பி வராமல் இழந்திருக்கிறேன். அந்தப் புத்தகங்களைப்போல ஆயிரம் புத்தகங்கள் கடையில் வாங்கிக் கொள்ளலாம்; புத்தம் புதிய பதிப்பே கிடைக்கும். ஆனாலும் என் கைப்பட்ட என் சொந்தப் புத்தகத்தில் குறித்திருக்கும் அடையாளங்களை, செய்திருக்கும் திருத்தங்களை, குறித்திருக்கும் சிறு குறிப்புக்களை, நான் விலை கொடுத்து எங்கே வாங்க முடியும்?