உள்ளடக்கத்துக்குச் செல்

புது டயரி/கண்ணுக்கு அணிகலன்

விக்கிமூலம் இலிருந்து



கண்ணுக்கு அணிகலன்

சிவப்பிரகாச சுவாமிகள் பாடிய நன்னெறியில் ஒரு பாட்டு வருகிறது. வேந்தர்களைவிடப் புலவர்கள் சிறந்தவர்கள் என்பதைச் சொல்ல வருகிறார். ‘வேந்தர்கள் பொன்னால் அணிகளைப் புனைந்து கொள்வார்கள். ஆனால் அவர்களைப் போல் அணிகளைப் புனையா விட்டாலும் பெரிய கல்வியையுடைய புலவர்களுக்கு அரசர்கள் சமானம் ஆக மாட்டார்கள்’ என்று சொல்லிவிட்டு அதற்கு ஒர் உவமை சொல்கிறார். ‘உடம்பில் உள்ள காது, மூக்கு, கழுத்து. கை, இடை, கால் முதலிய அங்கங்கள் எல்லாம் பலவகையான அணிகலன்களைப் பூணுகின்றன. ஆனால் கண்ணோ எந்த அணியையும் பூணுவதில்லை என்றாலும் அந்த உறுப்புக்கள் கண்ணுக்குச் சமானம் ஆகுமோ?’ என்று கேட்கிறார்.

“பொன்அணியும் வேந்தர்
புனையாப் பெருங்கல்வி
மன்னும் அறிஞரைத்தாம்
மற்றுஒவ்வார்; மின்னும்அணி
பூணும் பிறஉறுப்புப்
பொன்னே, அது புனையாக்
காணும்கண் ஒக்குமோ காண்.” 

(பொன்—பொன்னாலான நகைகள். புனையா—அணிகலன்களை அணியாத. மற்று—அசை. மின்னும் அணி—ஒளி வீசுகின்ற நகையை. பிற உறுப்பு—கண் அல்லாத வேறு அங்கங்கள். பொன்னே—திருமகளைப் போன்ற பெண்ணே! ஒரு பெண்ணைப் பார்த்துச் சொல்வது போல அமைந்தது பாட்டு; இதை மகடூஉ முன்னிலை என்பார்கள். அது புனையா—அந்த நகையை அணியாத.)

சிவப்பிரகாசர் இந்தக் காலத்தில் வாழ்ந்தால் இதைப் பாடியிருக்கமாட்டார். ஏன் தெரியுமா? அவர் காலத்தில் கண்ணுக்கு ஆபரணம் கிடையாது. இப்போது முக்குக் கண்ணுடி வந்து விட்டதே முக்குக் கண்ணாடி கண்ணுக்கு அணிகலமாகி விட்டதை நானே ஒரு கிறளில் பாடியிருக்கிறேன்

பண்ணார் கிராப்பில்லாத்
தலையிற் பயன்இலவே,
கண்ணாடி போடாத கண்.

கண்ணுக்குக் கண்ணாடி போட்டுக் கொண்டால் அழகென்று இப்போதெல்லாம் எண்ணுகிறவர்கள் இருக்கிறார்கள். கண்ணாடி போட்டுப் பழக்கப்பட்டவர்களே அது இல்லாமல் இருக்கும்போது சில சமயங்களில் அடையாளம் கண்டுபிடிக்க முடியாமல் போய்விடுகிறது.

நான் ஒரு நண்பர் வீட்டுக்குப் போனபோது கண்ணாடியைக் கழற்றிப் பையில் வைத்துக் கொண்டேன். அவர் என்னைக் கண்டவுடன், “உங்களுக்கு என்ன உடம்பு” என்று கேட்டார்.

“ஒன்றும் இல்லையே!” என்றேன்.  “இல்லை, இல்லை. நீங்கள் மறைக்கிறீர்கள். உங்கள் முகத்தைப் பார்த்தாலே தெரிகிறது. உங்கள் உடம்புக்கு ஏதோ கோளாறு” என்று மறுபடியும் சொன்னார்.

“எனக்குப் போன மாதம் சிறிது ஜலதோஷம் வந்தது. அதற்கப்புறம் ஒன்றுமே வரவில்லையே”

நண்பர் ஒப்புக்கொள்ளவில்லை. திடீரென்று எனக்கு ஒரு நினைவு வந்தது பையில் இருந்த கண்ணாடியை எடுத்து அணிந்து கொண்டேன். பிறகு அவரைப் பார்த்து, “இப்போது என்னப் பாருங்கள்” என்றேன்.

அவர் சிரித்துக் கொண்டே, “அடடா! ஏமாந்து போய் விட்டேனே! இந்தக் கண்ணாடி இல்லாமல் உங்கள் முகம் நன்றாக இல்லை. அது எனக்குத் தெரியவில்லை. ஏதோ அசெளக்கியம் என்று நினைத்தேன். இப்போதுதான் உங்கள் முகம் உங்கள் முகமாக இருக்கிறது” என்றார்.

‘அப்படியானால் கண்ணாடி போடாத முகம் என் முகம் அல்லவா? அது என்ன பேய் முகமா? அல்லது மூதேவி முகமா?’ என்று கேட்கலாமா அவரை?

மூக்குக் கண்ணாடி என்று நாம் சொல்வது எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது! ஆங்கிலத்தில் ஒரு கவிதை உண்டு. மூக்குக் கண்ணாடி மூக்குக்குச் சொந்தமா, கண்ணுக்குச் சொந்தமா என்று ஒரு விவாதம் எழுந்ததாம். கடைசியில் இரண்டுக்கும் சொந்தம் என்று தீர்மானம் ஆயிற்றாம். தமிழில் இந்த விவாதத்துக்கே இடமில்லை. மூக்குக் கண்ணாடி என்ற பெயரில் மூக்கும் இருக்கிறது; கண்ணும் இருக்கிறது,

நான் பலகாலம் மூக்குக் கண்ணாடி போட்டுக்கொள்ளவில்லை. என் ஆசிரியப் பெருமானிடம் தமிழ் கற்றுக் கொண்டபோது இரவெல்லாம் ஒலைச் சுவடிகளைப் படிப்ப துண்டு; புரூப்புகள் பார்ப்பதுண்டு. ஒவ்வொரு நாளும் இந்த வேலைகள் இருக்கும். ஆனாலும் மூக்குக் கண்ணாடி போட்டுக் கொள்ளவில்லை. பல ஆண்டுகளுக்குப் பிறகு துாரப் பார்வை தெரியவில்லை. நெடுந்துாரத்தில் உள்ள தென்ன மரத்தின் ஒலைகள் தனித்தனியே தெரியவில்லை. யாராவது நெடுந்தூரத்தில் வரும்போது பார்த்தால் இனங் கண்டுகொள்ள முடியவில்லை. கண் கெட்டுவிட்டது என்பதை நினைக்கும்போதே எனக்குப் பகீரென்றது. குருடனாகி விட்டேன் என்று எண்ணி வருந்தினேன்.

கண் டாக்டரிடம் சென்று கண்ணைக் காட்டினேன். எதாவது மருந்து போட்டுச் சரிப்படுத்திவிடுவார் என்ற நைப்பாசை இருந்தது. அந்த மனிதர் கறுப்புக் கறுப்பாகப் பெரியதும் சின்னதுமாக எழுத்து உள்ள அட்டையைச் காட்டிப் படிக்கச் சொன்னார். பள்ளிக் கூடத்தில் அரிவரி வகுப்பில் கூட இப்படி நான் எழுத்துக் கூட்டிப் படித்ததில்லை. இப்போது படித்தேன். அவர் பக்கத்தில் வாத்தியார் மாதிரி நின்று கொண்டு, “ஹூம்; படியுங்கள்; அடுத்தவரி; இன்னும் கீழே” என்று உத்தரவிட்டார். நான் படித்த காலத்தில் வாத்தியார்கள் கையில் பிரம்பை வைத்துக் கொண்டு மிரட்டுவார்கள். இந்த வாத்தியாரிடம் அது இல்லை. நான் படித்துக்கொண்டே வந்தேன். கீழே போகப் போக எழுத்துச் சிறியதாக இருந்தது. அது தெரியாவிட்டால் டாக்டர் கண்ணில் இருந்த பிரேமில் உள்ள சில்லை மாற்றி வேறொரு கண்ணாடிச் சில்லைச் செருகுவார்; “இப்போது படித்துச் சொல்லுங்கள்” என்பார். இப்படி என்னுடைய படிக்கும் ஆற்றலைப் பரீட்சித்து மார்க்குப் போட்டார். இரண்டு கண்களும் -2 என்று எழுதிக் கொடுத்தார். அதை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தேன். ‘நீ குருடு’ என்று தீர்ப்பெழுதின சாசனம் போல இருந்தது அது. கண்ணீர் விட்டு அழுதேன். ‘முருகா! என்னை இப்படிக்  குருடாக்கி விட்டாயே!’ என்று முறையிட்டேன். சில பாடல்களைப் பாடினேன். என்ன பாடினால் என்ன? நான் என்ன ஞானசம்பந்தரா? சுந்தரமூர்த்தி நாயனரா? என் பாட்டினால் அற்புதம் நிகழுமா? ‘சரி, நம் தலைவிதி’ என்று எண்ணிச் சமாதானப்படுத்திக்கொண்டேன்.

கண்ணாடிக் கடைக்குப் போய் டாக்டர் கொடுத்த குறிப்பைக் கொடுத்தேன். “மிகவும் மோசமான பார்வையோ?” என்று கடைக்காரரைக் கேட்டேன். “மோசமா? என்ன அப்படிச் சொல்லுகிறீர்கள்? இது மிகவும் சாதாரணம் ஆனது. சோடாபாட்டில் கண்ணாடிகள் போடுகிறவர்களெல்லாம் இருக்கிறார்களே!” என்று சொன்னபோது எனக்குச்சிறிது ஆறுதல் உண்டாயிற்று. நம்முடைய குறையைப்போல மற்றவர்களுக்கும் இருக்கிறதென்று அறியும் போது இந்த மனித மனத்துக்குத்தான் எத்தனை திருப்தி உண்டாகிறது! நம்மைவிட மற்றவர்கள் குறை பெரிதென்றால், நமக்குக் குறையே இல்லை என்பது போன்ற திருப்தி பிறக்கிறது. குறை குறைதானே? அப்படி இருக்க, இந்தப் பைத்தியக்கார ஆறுதலால் என்ன பயன் ஆனாலும் மனித சுபாவம் அப்படித்தான் இருக்கிறது. நுாற்றுக்கு இருபது மார்க்கு வாங்குகிற பையன் தன்னவிட அதிகமாக ஐம்பது அறுபது என்று வாங்குகிறவர்களைப் பார்த்து வருந்துவதில்லை. பத்து மார்க்கு வாங்கியிருக்கிறானே, அவனப் பார்த்து, “நாம் எவ்வளவோ மேல்” என்று தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்கிறான்.

இரண்டு நாள் கழித்துக் கண்ணாடிக் கடைக்காரர் கண்ணாடியைத் தந்தார். அதை அணிந்து கொண்டேன்; அணிவதாவது, மண்ணாங்கட்டியாவது தலைவிதியே என்று போட்டுக் கொண்டேன். கண் பார்வை நன்றாகத் தெரியும் என்பதற்காகத்தானே கண்ணாடி போட்டுக்கொண்டேன்? இப்போது என்னாயிற்றுத் தெரியுமோ? தலைவலி போய்த் திருகுவலி வந்த கதையாய் என்னலே சரியாக நடக்கவே முடியவில்லை. பள்ளம் மேடாகத் தோன்றுகிறது; மேடு பள்ளமாகத் தோன்றுகிறது. காலைத் தூக்கித் தூக்கி வைக்கிறேன்.

துரியோதனன் அப்படித்தான் நடந்தானம். அதைக் கண்டு திரெளபதி சிரித்தாளாம். பாரதப் போர் மூள்வதற்கு அதுதான் வித்தாயிற்று. இங்கே நான் நடந்ததைப் பார்த்து எந்தத் திரெளபதியும் சிரிக்கவில்லை; என் தர்ம பத்தினிதான் சிரித்தாள். “என்ன இப்படி, முள்மேல் நடக்கிறமாதிரி தத்தித் தத்தி நடக்கிறீர்கள்?” என்று கேட்டாள். கண்ணாடியைக் கழற்றி எறிந்து விடலாமா என்று தோன்றியது. டாக்டரிடம் போய், “ஏன் ஐயா, சாமிதான் கண்ணைக் கெடுத்து விட்டதென்றால் நீர் என் நடையைக் கெடுத்து விட்டீரே!” என்று கேட்கலாம் என்று எண்ணினேன். ஒரு கால் கண்ணாடிக் கடைக்காரன் தவறு செய்துவிட்டானே என்று யோசனை வந்தது. டாக்டரிடம் போய்க் கேட்பதற்கு எனக்குத் தைரியம் இல்லை. கடைக்காரரிடம் போய்க் கேட்கத் துணிந்தேன்.

“ஏன் ஐயா, இப்படித் தப்பான கண்ணாடியைச் கொடுத்துவிட்டீரே?” என்று கேட்டேன்.

“இல்லையே! டாக்டர் குறித்துக் கொடுத்தபடிதானே செய்து கொடுத்தேன்?” என்றார் அவர்.

“அப்படியானால் என்னால் சரியாக நடக்க முடியவில்லையே! எங்கோ பள்ளத்தில் காலை வைக்கிறதுபோல இருக்கிறதே!”

அவர் இடி இடி என்று சிரித்தார். “நீங்கள் புதிதாகக் கண்ணாடி போட்டுக்கொண்டிருக்கிறீர்கள். அதனால் முதலில் அப்படித்தான் இருக்கும். இரண்டு நாள் ஆனால் சரியாகி விடும்” என்றார்.  அவர் சொன்னது சரிதான் என்று பிறகு தெரிய வந்தது.

யாராவது கண்ணாடி போட்டுக் கொண்டிருந்தால், “உங்கள் கண்ணாடி மைனஸ் எத்தனை ஸார்?” என்று கேட்பேன். “மைனஸ் மூன்று” என்பார்; எனக்குச் சிறிது ஆறுதல் பிறக்கும். “மைனஸ் எட்டு” என்று ஒருவர் சொன்னார். அப்போது எனக்கு ஒரே ஆனந்தம்; எனக்கு மிகவும் வேண்டியவர், “எனக்கு மைனஸ் பன்னிரண்டு” என்றார். அதைக் கேட்டபோது எனக்குப் பழைய பார்வையே வந்துவிட்டது போன்ற திருப்தி, குதூகலம் உண்டாயிற்று.

ஐம்பது வயசுள்ள நண்பர் ஒருவரைக் கண்டேன். அவர் கண்ணாடி அணிந்திருந்தார். “உங்கள் கண்ணாடி மைனஸ் எவ்வளவு?” என்று வழக்கப்படி கேட்டேன். அவர் சொன்னதைக் கேட்டபோது எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. “மைனஸா? எனக்கு ப்ளஸ் இரண்டு” என்றார்.

அவர் எனக்கு விஷயத்தை விளக்கினர். எனக்குத் துாரத்துப் பொருள் தெரியாமல் இருந்தது. அவருக்குத் துாரத்துப் பொருள் நன்றாகத் தெரிகிறதாம்; புத்தகம் படிக்க முடியவில்லையாம்; அவருக்கு லாங் லைட் (Long Sight); எனக்கு ஷாா்ட் சைட் (Short sight). நான் குறுகிய பார்வை உடையவனாம்!

அவர் தமக்குச் சாளேச்வரம் வந்திருப்பதாகச் சொன்னார். பல கிழவர்கள் சாளேச்வரம் வந்துவிட்டதென்று கண்ணாடி அணிந்து கொள்வதைப் பார்த்திருக்கிறேன். அது என்ன சாளேச்வரம்? ராமேசுவரத்துக்கு இனமா? பிறகு அகராதியை எடுத்துப் பார்த்தேன். நாற்பது வயசுக்குமேல் வரும் வெள்ளெழுத்துக்குச் சாலேசரம் என்று பெயராம்.  உர்துவில் சாலேசரம் என்று வழங்குமாம். எனக்கு அப்படி ஒரு ஈசுவரமும் இல்லை. எனக்குக் குறுக்குப் பார்வை. நான் விசாலமான பார்வையோ தீர்க்கதரிசனமோ இல்லாதவனா? - இப்படி எண்ணும்போது எனக்கு ஒரு புதிய வருத்தம் உண்டாயிற்று.

எந்த வருத்தமும் நாளடைவில் குறைந்து விடுகிறது. இப்போதெல்லாம் பழைய வருத்தம் எதுவும் இல்லே. கண்ணாடி போட்டுக் கொண்டால் இடைவிடாமல் போட்டுக் கொண்டே இருக்கவேண்டும். இல்லாவிட்டால் கண் கெட்டுவிடும் என்று சொல்கிறார்கள். நான் வீட்டில் இருக்கும்போது கண்ணாடியைக் கழற்றி வைத்து விடுகிறேன். கண்ணாடி இல்லாமலேயே படித்து வருகிறேன். வெளியில் போனால் கண்ணாடி போட்டுக் கொள்கிறேன்.

இப்படிச் செய்வதனால் என் கண் கெட்டு விட்டதா என்று பார்ப்பதற்கு ஒரு சந்தர்ப்பம் நேரிட்டது. என் கண்ணாடி கீழே விழுந்து உடைந்துபோயிற்று. மறுபடியும் டாக்டரிடம் காட்டினேன். பழைய குறிப்பைக் காட்டினேன். அவர் சோதனை செய்தார். “பழைய கண்ணாடி போட்டு எத்தனை வருஷங்கள் ஆயின?” என்று கேட்டார். “உங்கள் குறிப்பையே பாருங்கள். தேதி இருக்கிறதே! எட்டு வருஷங்கள் ஆயின” என்றேன். “அப்படியா எட்டு வருஷமாகியும் உங்கள் கண் பழையபடியே இருக்கிறது” என்று ஆச்சரியப்பட்டார். “முன்புக்கு இப்போது பார்வை நன்றாகவே இருக்கிறது” என்று அவர் சொல்வார் என்று எதிர்பார்த்தேன். அப்படி அவர் சொல்லவில்லை. என்றாலும் கண் மேலும் கெடவில்லை என்பதை அறிந்ததில் எனக்கு மகிழ்ச்சியே உண்டாயிற்று.

“எனக்குச் சாலேசரம் வராதா?” என்று கேட்டேன்.  “வராது” என்று டாக்டர் சொல்லிவிட்டார். ஒரு கால் அது வந்தால் வேறு கண்ணாடி போடவேண்டுமோ என்ற பயத்தினால் அப்படிக் கேட்டேன்.

சாலேசரத்தைப் பற்றி எண்ணும்போது எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது.

ஒரு வீட்டுக்குப் புதியதாக ஒரு குடும்பம் குடி வந்தது. அந்தக் குடும்பத்தில் ஒரு கிழவர். அவர் நாள்தோறும் இராமாயணம் பாராயணம் பண்ணுகிறவர். அவருடைய சாலேசரக் கண்ணாடி கெட்டுப் போயிற்று. தம் பிள்ளையிடம், “அடே, கண்ணாடி வாங்கிக் கொண்டு வாடா! புத்தகம் தெரியவில்லை. படிக்கவேண்டும்” என்றார், அடிக்கடி அவர் சொல்லியும் அவர் மகன் வாங்கி வரவில்லை. பிறகு ஒருநாள் வாங்கி வந்தான். அதைப் போட்டுக் கொண்டு அவர் வாய்விட்டு இராமாயணத்தைப் படித்தார். “அப்பாடி கண்ணாடி போட்ட பிறகுதானே எழுத்துப் புரிகிறது?” என்று சொல்லிப் படித்தார்.

பக்கத்து வீட்டில் இருந்த ஒருவனுக்கு இந்தக் கிழவர் கண்ணாடி இல்லாமல் பரிதவித்ததும், கண்ணாடி வந்த பிறகு, படித்து மகிழ்வதும் தெரிந்தன. அவன் ஒரு கண்ணாடிக கடைக்குப் போனான். “ஒரு கண்ணாடி எடுங்கள், படித்துப் பார்க்கிறேன்” என்றான். கடைக்காரர் அவனுக்குச் சாலேசரம் என்று எண்ணி ஒரு கண்ணாடியைக் கொடுத்து ஒரு புத்தகத்தையும் கொடுத்தார். அந்த ஆள் கண்ணாடியைப் போட்டுக்கொண்டு புத்தகத்தை எடுத்துப் பார்த்தான்.

“தெரியவில்லையே!” என்றான்.

கடைக்காரர் வேறு கண்ணாடி கொடுத்தார். அதைப் போட்டுக்கொண்டு பார்த்தான். அப்போதும், “தெரிய வில்லையே!” என்றான். கடைக்காரர் பெரிய எழுத்துப் புத்தகம் ஒன்றை எடுத்துக் கொடுத்துப் பார்க்கச் சொன்னார். “இப்போதும் தெரியவில்லையே!” என்றான்.

இப்படியே சில கண்ணாடிகளையும் சில புத்தகங்களையும் மாற்றி மாற்றிக் கொடுத்தார் கடைக்காரர். “தெரியவில்லை” என்றே சொன்னான் வந்தவன்.

பேச்சுவாக்கில் கடைக்காரர். “நீங்கள் எது வரைக்கும் படித்திருக்கிறீர்கள்?” என்று கேட்டார்.

“நானா? நான் படிக்கவே இல்லை. பக்கத்து வீட்டுக் கிழவர் கண்ணாடி இல்லாமல் எழுத்தைப் படிக்க முடியவில்லை. கண்ணாடி போட்டுக் கொண்ட பிறகு எழுத்து அவருக்குத் தெரிகிறது. எனக்கும் கண்ணாடி போட்டால் படிக்க வரும் என்றல்லவா நினைத்தேன்” என்று அந்த ஆசாமி சொன்னான்!