புது டயரி/கழுத்தில் விழுந்த மாலை

விக்கிமூலம் இலிருந்து


கழுத்தில் விழுந்த மாலை

கல்கத்தாவில் பல ஆண்டுகளாகப் பாரதி தமிழ்ச் சங்கம் என்ற சங்கம் சிறப்பாக நடந்து வருகிறது. அங்கே நான் பல முறைகள் சென்று பேசியிருக்கிறேன். ஒரு முறை அங்கே நடந்த விழா ஒன்றில் முக்கிய விருந்தினனாகப் போயிருந்தேன். வரவேற்பு ஆனவுடன் ஒரு பெரிய ரோஜா மாலையை எனக்கும் என்னுடன் இருந்த வேறு ஓர் அன்பருக்கும் போட்டார்கள். நான் வழக்கம் போல எனக்குப் போட்ட மாலையைக் கழற்றி வைக்கப் போனேன். அப்போது சங்கத் தலைவர், “ஐயா, அந்த மாலையை அப்படியே சிறிது நேரமாவது போட்டுக் கொண்டிருங்கள்” என்றார், “ஏன்?” என்று கேட்டேன். “இங்கெல்லாம் இதுபோன்ற மாலைகள் கிடைப்பதில்லை. இந்த மாலைகளைத் தனியே சென்னையிலிருந்து வருவித்தோம். விமானத்தில் வந்தன. இவ்வளவு கஷ்டப்பட்டு வருவித்த மாலைகளைக் கொஞ்ச நேரமாவது நீங்கள் அணிந்து பார்க்க வேண்டும் என்பது எங்கள் ஆசை. தயை செய்ய வேண்டும்” என்றார். அவருடைய ஆசையைக் கெடுப்பானேன் என்று அரைமணி நேரம் அந்த மாலையை கழற்றாமல் இருந்தேன்.

கோவலன் நாடகத்தில் ஒரு காட்சி. கோவலன் கழுத்தில் மாதவி வீசி எறிந்த மாலையை அவனால் கழற்ற முடியவில்லை. அப்போது, “கழுத்தில் விழுந்த மாலை கழற்ற முடியவில்லை, காரிகையே இது யார் சூதோ?”  என்று அவன் பாடுவான். அவனைப்போலவே என் கழுத்தில் விழுந்த மாலையை என்னாலும் கழற்ற முடியவில்லை. ஆனால் இங்கே சூது வாது ஏதும் இல்லை. அன்புக்குக் கட்டுப்பட்டுக் கழற்றாமல் இருந்தேன்.

தமிழ்நாட்டில் கட்டும் மாலைகளின் அழகே தனிதான். எத்தனை வகையான மாலைகள்! கோவில் விழாக்களில் சுவாமிக்கு அலங்காரம் செய்கிறார்களே; அந்தக் கைவன்மை வேறு எந்த நாட்டுக் கலைஞர்களிடம் இருக்கிறது; வடக்கே போனால் நூலில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஏதோ மணமில்லாத பூவைச் செருகி. மாலையென்று போடுகிறார்கள். தமிழ்நாட்டு மாலை எங்கே, அந்த மாலை எங்கே? இந்த அருமைப்பாட்டை நன்குணர்ந்த பாரதி சங்கத் தலைவர் ஆசைப்பட்டது நியாயமானது தான்.

ஆனால் தமிழ்நாட்டில் சபைகளில் பேசும்போது மாலை போட்டால் உடனே கழற்றிக் கண்ணில் ஒற்றிக்கொண்டு கீழே வைத்து விடுவது என் வழக்கம். பல பேர் அப்படித்தான் செய்கிறார்கள். ரெயில்வே ஸ்டேஷனில் மாலைகளைக் கழற்றாமல் போட்டுக்கொள்ளும் சில அன்பர்களைப் பார்க்கலாம். வடநாட்டுக்காரர்கள் இங்கே வந்து திரும்புகையில் ஸ்டேஷனில் அவர்களுக்கு மாலை போட்டு அனுப்புவார்கள். அந்த மாலையை அவர்கள் கழற்றாமல் போட்டுக்கொண்டே இருப்பார்கள்.

பழங்காலத்தில் ஆடவரும் மகிளிரும் எப்போதுமே மாலைகளை அணிந்து கொண்டிருப்பார்கள் என்று தோன்றுகிறது. இலக்கியங்களில் வருகிற வருணனைகளைப் பார்த்தால் இப்படி எண்ணத் தோன்றுகிறது. அப்போதெல்லாம் ஆடவர்கள் சட்டை அணிவதில்லை. மார்பிலே மாலை அலங்காரமாக இருக்கும். இப்போது நாம் சட்டைகளை  அணிகிறோம். அவற்றிற்கு மேல் மாலையைக் கழற்றாமல் போட்டுக் கொண்டே இருந்தால் நன்றாக இருப்பதில்லை.

மற்றொரு சங்கடம், ரோஜாப்பூ மாலைகளில் சிவப்பு நூலைச் சுற்றியிருப்பார்கள். ஈரமான பூ ஆதலால் அந்த நூல் நனைந்திருக்கும். அந்த மாலையை அணிந்துகொண்டு ஐந்து நிமிஷம் அப்படியே இருந்தால் போதும்; சிவப்பு நூலின் சாயம் வரிவரியாய்ச் சட்டையில் படிந்துவிடும். இப்படி என் கதர்ச் சட்டையில் மாலை அணிந்த சுவடுகளை ஏற்றுப் பரிதவித்த சமயங்கள் பல.

மாலையைப் போட்டவுடன் கழற்றுவதைப் பற்றி ஒரு கூட்டத்தில் ஒரு வாக்குவாதமே நடந்தது. அமரர் திருப்புகழ் மணி டி. எம். கிருஷ்ணசாமி ஐயரவர்கள் ஒரு கூட்டத்தில் தலைமை தாங்கினார். நானும் வேறு இரண்டு புலவர்களும் அந்தக் கூட்டத்தில் பேசினோம். தலைவருக்கு மாலை போட்டவுடன் அதை அவர் கழற்றிவைத்து விட்டார். முதலில் பேசிய புலவரோ போட்ட மாலையைக் கழற்றவில்லை; போட்டுக்கொண்டே பேசினார். அதோடு நிற்கவில்லை; “நம்மிடம் மதிப்பு வைத்துத் தம்முடைய அன்புக்கு அறிகுறியாகச் சபையை நடத்துவோர் மாலையைப் போடுகிறார்கள். அதைக் கழுத்தில் போட்டுக்கொண்டிருப்பதுதான் மரியாதை, முகத்தில் அடிப்பதுபோல உடனே கழற்றி வைத்துவிட்டால் அந்த அன்பை உணா்ந்ததாகாது” என்று தாம் மாலையை கழற்றாமல் போட்டுக் கொண்டிருப்பதற்குரிய காரணம் ஒன்றைச் சொன்னார்.

அவருக்கு அடுத்தபடி பேசின புலவர் மாலை போட்டவுடன் கழற்றி வைத்தார்: “நமக்கு மிகவும் அன்பாக மாலை போடுகிறார்கள். அதைப் போட்டுக்கொண்டே இருந்தால் இதழ்கள் உதிர்ந்துவிடும். மாலை கசங்கிப் போகும். மரியாதையைக் காட்ட அவர்கள் போட்டால் நாம் வணங்கி ஏற்றுக்கொள்கிறோம், நானே அணிய வேண்டும் என்ற சுயநலம் எனக்கு இல்லை. என் வீட்டில் உள்ள பெண்களும் குழந்தைகளும் அணிந்துகொண்டால் அழகாயிருக்கும். ஆகையால் கசங்காமல் கழற்றி வைத்தேன். அன்பர்கள் போட்ட மாலையை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்வதுதான், அவர்கள் அன்பைப் பாராட்டுவதற்குச் சிறந்த அடையாளம் என்று நான் கருதுகிறேன்” என்று தம் கருத்தைச் சொன்னார்.

இறுதியில் திருப்புகழ் மணியவர்கள் பேசினார். “புலவர் அவர்கள் மாலையைக் கழற்றாமல் போட்டுக்கொள்வதுதான் மரியாதை என்று சொன்னார். கழற்றினவர்கள் எல்லோரும் போட்டவர்களை அவமதித்து விட்டார்கள் என்று தொனிக்கும்படி பேசினார். அன்பினால் ஒருவர் மற்றொருவரைப் புகழ்வதும் மரியாதை செய்வதும் வழக்கம். அப்படிப் புகழும்போதோ, உபசாரம் செய்யும் போதோ சிறிதும் அடக்கம் இல்லாமல் அந்தப் புகழ் முழுவதற்கும் நாம் உரியவர்கள் என்று காட்டிக்கொள்ளலாமோ! ‘நீங்கள் அதிகமாகப் புகழ்கிறீர்கள்; எனக்கு அவ்வளவு தகுதி இல்லை’ என்று சொன்னால் அவர்களை அவமதித்ததாக ஆகுமா? அது நம் அடக்கத்தைத் தானே காட்டும்? அதுபோல, அவர்கள் தம் அன்பைக் காட்ட அழகான மாலை போடுகிறார்கள். ‘எனக்கு இது ஏற்றதுதான்’ என்று போட்டுக்கொண்டே இருந்தால் அகங்கார உணர்ச்சியென்று தோன்றும். கழற்றி வைத்தால், ‘இதைப் போட்டுக்கொள்ள எனக்குத் தகுதி இல்லை’ என்ற அடக்க உணர்ச்சியைக் காட்டுவதாக இருக்கும்” என்றார்.

சில சமயங்களில் துணிச்சலாக ரோஜாப்பூ மாலையைப் போட்டுக்கொண்டே இருந்தால் வீட்டுக்குப் போகும்போது வெறும் நாருடன்தான் போவோம். சென்னையில் அந்த நாருக்குத்தான் கிராக்கி. பெண்பிள்ளைகள் நாரைப் பத்திர  மாகப் பாதுகாத்து வைத்திருப்பார்கள். நாரின் பெருமையை நானும் அறிவேன். வெளியூரில் யாரேனும் நண்பர்கள் என்னுடன் பேசிப் பழகிய பிறகு என் பழக்கத்தால் தாங்கள் பயன்பெற்றதாகச் சொல்வார்கள். அப்போது, “பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெற்றது போல உங்களுடன் பழகி எங்களுக்கும் மதிப்பு உண்டாயிற்று” என்பார்கள். நான் உடனே, "நீங்கள் நார் என்பது உண்மை பூ உதிர்ந்துவிடும். நார்தான் நிற்கும். நான் ஊருக்குப் புறப்பட்டுப் போகிறவன். நீங்கள் நிலையாக இங்கே இருப்பவர்கள்” என்பேன்.

ரோஜாப்பூ மாலைக்குப் பதிலாக மல்லிகை மாலை, செவ்வந்திமாலை வாங்கிப் போட்டால் பூ உதிர்வதில்லை. ஆனால் அப்போதும் ஆபத்து இருக்கிறது. எங்கள் ஆசிரியப் பெருமான் சொன்ன நிகழ்ச்சி ஒன்று எனக்கு நினைவுக்கு வருகிறது.

சைவ மடாலயங்களில் விழாக்காலங்களில் ஆதினத் தலைவர்கள் கொலு இருப்பது வழக்கம், ஞானாசிரியராகிய தலைவர் மலரால் அலங்கரித்த மண்டபத்தில் எழுந்தருளியிருப்பர். அவருக்கு மாலைகள் அணிந்து சுற்றிச் சூழப் பூச்சரங்களாலும் பூப்பட்டைகளாலும் அலங்கரித்துப் பூசை செய்வார்கள். உற்சவமூர்த்திக்கு அலங்காரம் பண்ணுவதுபோலச் செய்வார்கள். குருமகா சந்நிதானம் கண்ணை மூடிக்கொண்டு ஆடாமல் அசையாமல் வீற்றிருப்பது வழக்கம்.

பழங்காலத்தில் திருவாவடுதுறையில் ஒரு சமயம் கொலு நடைபெற்றது. அப்போது இருந்த ஞானாசிரியரைக் கொலுவில் அமர்த்தி வழிபட்டார்கள். செவ்வந்திப் பூவும் மல்லிகைப்பூவும் கொண்டு சுற்றிச் சூழ அலங்களித்திருந்தார்கள். கொலு மூன்று மணிக்குமேல் நடந்தது.  கொலு முடிந்தவுடன் மெல்லச் சுற்றியுள்ள அலங்காரங்களைக் கலைக்கச் செய்து மகா சந்நிதானம் அவர்கள் கீழே இறங்கி வந்தார் சற்றே சினத்தோடு, “என் உடம்பெல்லாம் பாருங்கள்” என்றார் சிறிய சிறிய தடிப்புகள் இருந்தன. “இத்தனை நேரமும் செவ்வெறும்புகள் கடிப்பதைப் பொறுத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தேன். பூவைக் கவனித்துப் பார்த்து அலங்காரம் பண்ணக்கூடாது?” என்று கேட்டாராம். மல்லிகைப்பூப் பட்டைகளைச் சாத்துவதற்குமுன் கீழே வைத்திருக்கிறார்கள். அவற்றில் செவ்வெறும்புகள் புகுந்துகொண்டன. அப்படியே கொலுவில் வைத்துவிட்டார்கள்! பாவம்! ஞானாசிரியர் அத்தனை நேரம் எறும்புக்கடியைச் சகித்துக் கொண்டிருந்திருக்கிறார்! அவருடைய உயர்ந்த பக்குவத்தை அது காட்டியது. தேகம் வேறே, நாம் வேறே என்ற உணர்ச்சி இல்லாவிட்டால் அத்தனே நேரம் சகித்துக்கொண்டிருக்க முடியுமா?

மாலைக்குப் பதிலாக ஆடைகளைப் போடும் வழக்கம் இப்போது வந்திருக்கிறது. நல்லதுதான். மாலை சிறிது நேரத்தில் வாடிவிடும். ஆடை பிறகும் பயன்படும். இருந்தாலும் மாலை போடுவதைத்தான் மரியாதையாக நினைக்கிறார்கள். மாலை மரியாதை என்றே சொல்கிறது. வழக்கம் அல்லவா?

ஒரு சமயம் மாலையும் ஆடையும் எதிர்பாராத வகையில் எனக்குக் கிடைத்தன. அது மிகவும் சுவையான நிகழ்ச்சி.

மயிலாப்பூரில் தெற்கு மாடவீதியில் வெள்ளீசுவரர் கோயில் என்ற ஆலயம் இருக்கிறது. அங்கே ஒரு சமயம் ஒட்டக்கூத்தர் திருநாளைக் கொண்டாடினார்கள். அப்போது இந்து சமய அறநிலைய ஆணையராக இருந்த திரு நரசிம்மன் அவர்கள் தலைமை தாங்கினார். நானும் வேறு சிலரும் பேசினோம்.  கூட்டம் தொடங்குவதற்குமுன் தலைவருக்கும் பேச்சாளர்களுக்கும் சுவாமி தரிசனம் செய்து வைத்தார்கள் கோயில் அறங்காவலர்கள். தலைவருக்குப் பிரசாதமாக மாலையையும் ஒரு பட்டையும் போட ஏற்பாடு செய்திருந்தார்கள். எல்லோரும் சுவாமி சந்நிதியில் நின்று தரிசனம் செய்தோம். பிரசாதம் வழங்கும்போது ஒரு தட்டில் பிரசாதம், மாலை, பட்டு எல்லாம் எடுத்துக்கொண்டு திரு. நரசிம்மனுக்கு முன்வந்தார்கள். அவர் சட்டென்று அந்தப் பட்டை எடுத்து அருகில் நின்றுகொண்டிருந்த எனக்குப் போட்டுவிட்டு மாலையையும் எடுத்துப் போட்டார். அறங்காவலர்களுக்கு எப்படி இருக்கும்? எனக்கு மிகவும் தர்மசங்கடமாக இருந்தது, போட்டதை எடுத்து மறுபடியும் அவருக்குப் போடுவது நாகரிகமாகத் தோன்றவில்லை.

சுவாமி தரிசனம் ஆனபிறகு கூட்டம் தொடங்கியது. தலைவர் உரை முடிந்ததும் நான் பேசத் தொடங்கினேன்.

“இப்போது நாம் ஒட்டக்கூத்தர் திருநாளைக் கொண்டாடுகிறோம். சிறிது நேரத்துக்குமுன் இறைவன் சந்நிதியில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. அது ஒட்டக்கூத்தர் காலத்து நிகழ்ச்சி ஒன்றை நினைக்கச்செய்தது. ஒட்டக்கூத்தர் மூன்று சோழர்கள் காலத்தில் வாழ்ந்தவர். அவர்களில் இடைப்பட்டவனாகிய இரண்டாம் குலோத்துங்கனுக்கு அவர் ஆசிரியராகவும் இருந்தார்; அவைக்களப் புலவராகவும் விளங்கினார். ஒருநாள் அரசவையில் பல புலவரும் பிறரும் கூடியிருந்தார்கள். குலோத்துங்கன் சிங்காதனத்தில் வீற்றிருந்தான். ஒட்டக்கூத்தர் அவன் புகழைப் பாடத் தொடங்கினார். தன் அரண்மனை வாயிலில் தொங்கும் ஆராய்ச்சிமணியின் நா என்றும் அசையாதபடி (யாருக்கும் குறையில்லா  மல் செய்து) இவ்வுலகமெல்லாம் பரந்த குடையைக் தரித்த பிரான்’ என்ற பொருள் அமையப் பாதிப் பாட்டைச் சொன்னார்.

“ஆடும் கடைமணி நாஅசை
யாமல் அகிலம்எல்லாம்
நீடும் குடையைத் தரித்தபிரான்...”

தொடர்ந்து பாட்டை அவர் சொல்வதற்குள், குலோத்துங்க சோழன் தானே அந்தப் பாட்டின் பிற்பாதியைச் சொல்லி விட்டான். ‘தினந்தோறும் புதிய கவிதையைப் பாடும் கவிப் பெருமானாகிய ஒட்டக்கூத்தனுடைய பாத தாமரைகளைத் தலையில் அணியும் குலோத்துங்க சோழனென்று என்னை உலகினர் சொல்வார்கள்’ என்ற பொருளை அமைத்து,

“என்றும் நித்தம்நவம்
பாடும் கவிப்பெரு மான்ஒட்டக்
கூத்தன் பதாம்புயத்தைச்
சூடும் குலோத்துங்க சோழன்என்
றேஎனச் சொல்லுவரே”
என்று சொல்லி முடித்தான். அவையினர் குலோத்துங்க சோழனுடைய குரு பக்தியை மெச்சினார்கள். 

“குலோத்துங்கன் தனக்கு வந்த புகழ்மாலையை ஏற்றுக் கொள்ளாமல் மாற்றி ஒட்டக்கூத்தருக்கே அதை அணிந்து விட்டான். இங்கே ஆண்டவன் சந்நிதியில் தமக்குப் போட இருந்த பட்டையும் மாலையையும் தலைவர்கள் எனக்குப் போட்டுவிட்டார்கள். அந்த நிகழ்ச்சியும் இந்த நிகழ்ச்சியும் ஒருவகையில் ஒப்புமை உடையனவாகத் தோன்றுகின்றனவல்லவா? அங்கே பாட்டு; இங்கே பட்டு.”

அவையினர் இதைக் கேட்டுக் கைதட்டி ஆரவாரித்தார்கள். நானும் ஒருவிதமாக அந்தச் செயலுக்கு விளம்பர  மும் நன்றியுணர்வும் விளங்கும்படி செய்துவிட்ட மகிழ்ச்சியை அடைந்தேன்.

வேறு ஒரு கூட்டத்தில் பெரிய மாலை ஒன்றைப் போட்டார்கள். கூட்டம் முடிந்து வரும்போது அந்த மாலையைக் கையில் எடுத்துக் கொண்டேன். அருகில் நின்ற என் அன்பர் சட்டென்று கை நீட்டி அதை வாங்கிக் கொண்டார். “நான் பூபாரம் தாங்க மாட்டேனென்று வாங்கிக் கொள்கிறீர்களா?” என்று சொல்லிப் புன்முறுவல் பூத்தேன்.

என்னுடைய மணி விழாவில் இலங்கையிலிருந்து வந்த இராசேந்திர குருக்கள் என்ற அன்பர் மிகப் பெரிய மாலைகளாக வாங்கி எனக்கும் என் மனைவிக்கும் அணிவித்தார். அவருக்கு அப்படி ஓர் ஆசை. எத்தனை பெரிய மாலையாக இருந்தால் என்ன? இரண்டு நாளுக்குமேல் இருக்குமா?

அந்த அன்பர் மற்றொரு காரியமும் செய்தார். எங்களுக்கு மாலைகளை அணிவித்தவுடன் அந்தக் கோலத்தில் ஒரு போட்டோவை எடுக்கச் செய்தார். அதில் ஒரு பிரதி எனக்குக் கொடுத்து என் வீட்டில் மாட்டும்படி என் பிள்ளைகளிடம் சொன்னார். அவர் ஒரு பிரதியைக் கொண்டு சென்று யாழ்ப்பாணத்தில் நீர்வேலியில் உள்ள தம் இல்லத்தில் மாட்டி வைத்திருக்கிறார்.

அவர் போட்ட மாலை இரண்டு நாளுக்கு மேல் இல்லை. ஆனால் அந்த மாலையின் வடிவம் இன்னும் போட்டோவில் அவர் அன்பைக் காட்டிக் கொண்டு விளங்குகிறது.