உள்ளடக்கத்துக்குச் செல்

புது டயரி/நடந்த கதை

விக்கிமூலம் இலிருந்து



நடந்த கதை

அமரர் திரு. வி. க. அடிக்கடி சொல்வார்; “ஏதாவது உடற்பயிற்சி செய்யவேண்டும். செய்யாமல் இருந்தால் இளமையில் ஒன்றும் தெரியாது. முதுமையில் மிகவும் இன்னல் உண்டாகும். வேறு பெரிய பயிற்சி செய்ய வேண்டாம். நாள்தோறும் ஒரு மைல், இரண்டு மைல் நடந்து பழக வேண்டும். நான் அப்படிச் செய்யாமையால் இப்போது துன்புறுகிறேன்” என்பார்.

என்னுடைய ஆசிரியப் பெருமான் டாக்டர் மகா மகோ பாத்தியாய ஐயரவர்கள் சிலநாள் நடப்பதுண்டு. அவர்கள் திருவேட்டீசுவரன் பேட்டையில் வாழ்ந்தார்கள். அங்கே திருவேட்டீசுவரன் கோயில் என்ற ஆலயம் இருக்கிறது. அதைச் சுற்றி நான்கு மாட வீதிகள் உண்டு. ஐயரவர்கள் வீடு தெற்கு மாடவீதியில் உள்ளது. அந்தத் தெருவுக்குப் பிள்ளையார் கோயில் தெரு என்று பெயர்.

சில நாள் ஐயரவர்கள், மேலே அங்கவஸ்திரத்தைப் போர்த்துக் கொண்டு இந்த நாலு வீதிகளையும் சுற்றி வருவார்கள். அப்போது கையில் ஜபமாலையையும் கொண்டு செல்வார்கள்; அவர்கள் இருந்த வீதியின் மேல் கோடியில், அதாவது மேல் வீதிக்குத் திரும்பும் மூலையில், ஒரு கிழவி இட்டிலி விற்றுக் கொண்டிருப்பாள். அந்த மூலையில்தான் ரிக்க்ஷாக்காரர்கள் ரிக்க்ஷாக்களுடன் இருப்பார்கள். ஐயரவர்கள் கையில் காலணா எட்டணா எடுத்துக் கொண்டு செல்வார்கள். அந்த இட்டிலிக் கூடைக்காரிக்கு முன்போய் நிற்பார்கள். அப்போது ரிக்க்ஷாக்காரர்களெல்லாம் அவர்களைச் சுற்றி மொலுமொலுவென்று மொய்த்துக் கொள்வார்கள். அந்தக் கூடைக்காரியிடம் ஆளுக்கு இரண்டு இட்டிலி கொடுக்கச் சொல்வார்கள். அப்போதெல்லாம் இட்டிலி காலணா விலை. எல்லாரும் வாங்கிக்கொண்ட பிறகு கணக்குப் பண்ணிப் பணத்தை இட்டிலிக்காரியிடம் கொடுத்து விடுவார்கள். இதனால் அந்தக் கிழவிக்கு வியாபாரம்; ரிக்க்ஷாக்காரர்களுக்கு ஓரளவு காலை உணவு. ஐயரவர்கள் பணத்தைக் கொடுத்துவிட்டு ஜபமாலையுடன் மேற்கு வீதியில் திரும்பும்பொழுது அந்தக் கிழவி, “மகராஜன் நல்லா இருக்க வேணும்!” என்று வாழ்த்துவாள். ஆண்டவனப் பிரதட்சிணம் பண்ணின பலன், உலாத்தின பயிற்சி என்று இரட்டை லாபம் உண்டு. அந்த இட்டிலிக் காரிக்கு வியாபாரம், ரிக்க்ஷாக்காரர்களுக்குச் சிற்றுண்டி என்று வேறு வகையிலும் இரட்டை லாபம் கிடைக்கும்.

வெளியூர்களுக்குப் போனால் அவர்கள் நெடுந்துாரம் நடப்பார்கள். அவர்களோடு அப்போது போனால் எத்தனயோ அருமையான இலக்கிய நுட்பங்களும் வாழ்க்கை அநுபவங்களும் கேட்கலாம்.

அந்தக் காலத்திலெல்லாம் எனக்கு நடந்து பயில வேண்டும் என்ற எண்ணம் எழவே இல்லை. சில முக்கியமான காரியங்களுக்காகச் சில சமயங்களில் ஒரேயடியாகப் பல மைல்கள் என் இளம் பிராயத்தில் கடந்திருக்கிறேன். இப்போது நினைத்துக் கொண்டாலும், ‘நாமா அப்படி நடந்தோம்?’ என்று ஆச்சரியமாக இருக்கிறது.

ஒரு காலத்தில் என்னுடைய உள்ளத்தில் துறவி ஆக வேண்டும் என்ற ஆசை உண்டாகி வளர்ந்து வந்தது. அப் போது எனக்குப் பதினாறு பிராயம்: சேந்தமங்கலத்தில் அவதுாத சுவாமிகள் ஒருவர் இருந்தார். ஸ்ரீ சுயம்பிரகாசப் பிரம்மேந்திர சரஸ்வதி என்பது அவர்கள் திருநாமம். அவர்களிடம் போய்ச் சரணம் அடைந்து சந்நியாசி ஆகிவிடவேண்டும் என்று ஆசை. “நான் சுவாமிகளிடம் போய்ச் சிலகாலம் கைங்கரியம் பண்ணி நல்ல நூல்களை வாசித்து விட்டு வருகிறேன்” என்று என் தாய்தந்தையரிடம் விடை கேட்டேன். அப்போது எனக்குத் தம்பி பிறக்கவில்லை. இப்போது ஆண்டவன் திருவருளால் ஒரு தம்பி இருக்கிறான்.

என் தாய்தந்தையருக்கு உள்ளே திகில். நான் இருக்கும் நிலையைக் கண்டு, எங்கே இவன் சந்நியாசியாகி விடுவானோ! என்று பயந்தார்கள். ஆகவே அவர்கள் போகக் கூடாது என்று தடுத்தார்கள். எனக்கோ சேந்தமங்கலம் போக வேண்டும் என்ற ஆசை அதிதீவிரமாக எழுந்தது. திருவாசகத்தில் கயிறு சார்த்திப் பார்த்தேன்; “போனோம் காலம் வந்தது காண், புயங்கப் பெருமான் பொன்னடிக்கே!” என்ற பகுதி வந்தது. இறைவனே உத்தரவு கொடுத்து விட்டதுபோல் எண்ணினேன். முதல்நாள் இரவு ஒரு கதர் வேஷ்டியையும் துண்டையும் யாரும் அறியாமல் எடுத்து வைத்து வெளித் திண்ணையில் படுத்துக் கொண்டேன். விடியற்காலையில் எழுந்து புறப்பட்டு விட்டேன். எங்கள் ஊராகிய மோகனூரிலிருந்து நாமக்கல் பன்னிரண்டு மைல்; அங்கிருந்து சேந்தமங்கலம் ஏழுமைல். அங்கே ஒரு சின்னஞ் சிறிய குன்றின் குகையில் சுவாமிகள் இருந்தார். அங்கே பிற்பகல் ஒரு மணிக்குப் போய்ச் சேர்ந்தேன். சுவாமிகள் காலில் விழுந்தேன். அவர், “ஏகபுத்ர விஷயம். மாதாபிதா சம்மதம் இல்லாமல் சந்நியாசம் கொடுக்கக் கூடாது!” என்று சொல்லிவிட்டார்; நான் எவ்வளவோ மன்றாடினேன்; மாட்டேன் என்று சொல்லி விட்டார்.  மறுபடியும் அங்கிருந்து நாமக்கல் வந்து அங்கிருந்து மூன்றுமைல் தூரத்தில் வல்லிபுரம் என்ற ஊரில் உள்ள என் நண்பர் வீட்டுக்குப் போனேன். அப்போதுதான் கால்வலி தெரிந்தது. அந்த வீட்டு அம்மாள் விளக்கெண்ணெய் தடவிக் காலுக்கு வெந்நீா் விட்டு நீவினாள். அது வரைக்கும் கால்வலி தெரியாமல், அப்போது எப்படி வந்தது என்று ஆச்சரியப்பட்டேன். வேறு நினைவே இல்லாமல் சுவாமிகளையே நினைத்துச் சென்றதுதான் காரணம். மனவலிமை உடம்பில் உள்ள துன்பத்தை மறக்கச் செய்துவிட்டது.

மற்றோர் அநுபவமும் உண்டு. அப்போதும் ஒரு சுவாமிகளைப் பார்க்கத்தான் நடந்து போனேன். சிருங்கேரி சங்கராசாரிய சுவாமிகளாகிய ஸ்ரீமத் சந்திரசேகர பாரதி சுவாமிகள், அப்போது கொடுமுடிக்கு விஜயம் செய்திருந்தார்கள். அவர்களைப் போய்த் தரிசித்துவிட்டு வரவேண்டும் என்ற விருப்பம் எழுந்தது. அப்போது என் நண்பர் மோ. ஸ்ரீ. செல்லம் ஐயரும் எங்கள் ஊரில் இருந்தார். அவரும் நானும் இளமையிலிருந்து நெருங்கிப் பழகியவர்கள். இருவரும் புறப்படலாம் எண்று திட்டமிட்டோம். மோகனூரிலிருந்து காவிரியைப் பரிசலில் தாண்டி அக்கரையாகிய வாங்கலை அடைந்து, அங்கிருந்து ஐட்காவில் ஆறு மைல் தூரத்தில் உள்ள கரூருக்குப் போய், அங்கே ரெயிலேறி, மேற்கே உள்ள கொடுமுடிக்குப் போக வேண்டும். இந்தப் பயணத்துக்குச் சிறிது பணம் வேண்டும். என் தகப்பனாரைக் கேட்டேன்; தரமாட்டேன் என்று சொல்லி விட்டார். அவருக்கு அந்தச் சுவாமிகளோடு நானும் யாத்திரையாகப் புறப்பட்டுவிட்டால் என்ன செய்வது என்று பயம்.

ஏதோ கையிலிருந்த சில்லறையை எடுத்துக்கொண்டு கால் நடையாகப் புறப்பட முடிவு பண்ணினோம். மோகனூரிலிருந்து காவிரியின் வடகரை வழியாக வேலூர் சென்று அங்கிருந்து புலிக்கல்பாளையம் என்ற ஊர்போய், அங்கிருந்து காவிரியைக் கடந்து அக்கரையில் உள்ள கொடு முடிக்குப் போவதாகத் திட்டம்.

நாங்கள் புறப்பட்டுவிட்டோம். காலையில் ஏதோ சிறிது உணவுண்டது. பத்து மைல் தூரத்தில் உள்ள வேலூரை அடைந்தோம். பசியாக இருந்தது. அங்கே ஹோட்டலுக்குச் சென்று இட்டிலி உண்டோம். நாங்கள் இருவரும் பிரம்மசாரிகள். எங்களைப் பார்த்த ஹோட்டல்காரர் என்ன கேட்டார் தெரியுமோ?

“நீங்கள் எங்கேயாவது பிராம்மணார்த்தம் சாப்பிடப் போகிறீர்களா?” என்று கேட்டாரே, பார்க்கலாம். பிரம்மசாரிகள் அனேகமாகப் பிராம்மணர்த்ததுக்குப் போகிற வழக்கம் இல்லை. அதைக் கவனிக்காமல் அவர் சொன்னது கிடக்கட்டும். அவர் கேட்டதிலிருந்து ஓர் உண்மை புலப்பட்டது. அந்தக் காலத்திலேயே, பிராம்மணார்த்தம் சாப்பிடப் போகிறவர்களில் சிலர் அந்தக் கடையில் இட்டிலி சாப்பிட்டிருக்க வேண்டும். மேலே வழி நடக்கையில் அதைச் சொல்லிச் சொல்லிச் சிரித்துக்கொண்டே போனோம்.

சாயங்காலம் ஆறு மணிக்குப் புலிக்கல்பாளையம் போனோம். அங்கிருந்து பாிசலில் கொடுமுடி சென்றோம். அங்கே ஆசார்ய சுவாமிகளை உடனே தரிசிக்க வேண்டும் என்று ஆசை. ஆனால் எத்தனையோ பணக்காரர்களும் பெரிய மனிதர்களும் சூழ்ந்து கொண்டு உள்ளே விடாமல் தடுத்தார்கள். அப்போது என் இளைய உள்ளம், “பணத்தைச் சட்டை செய்யாமல் இவ்வளவு தூரம் எவ்வளவு ஆர்வத்தோடும் சிரமத்தோடும் கடந்து வந்திருக்கிறோம் இங்கேயும் பணம் அல்லவா வேலியாக நின்று  குறுக்கே தடுக்கிறது!” என்று மறுகியது. ஆனால் சிறிது நேரம் கழித்து ஆசார்ய சுவாமிகள் வெளியிலே திண்ணைக்கு எழுந்தருளிப் பூஜை செய்தார்கள். எங்கள் கண்குளிர அதைத் தரிசித்தோம். அன்று இரவு அங்கே தங்கி உறங்கியதில் கால்வலி போய்விட்டது. எங்களுக்குத் தெரிந்த ஒருவரிடம் பணம் வாங்கிக் கொண்டு ரெயிலேறித் திரும்பினோம். இது நான் நெடுந்துாரம் நடந்த இரண்டாவது கதை.

சென்னைக்கு வந்த பிறகு கடற்கரைக்குப் போக வேண்டும் என்று எண்ணினேன். ஆனால் தமிழ்த் தெய்வத்தின் திருப்பணியில் ஈடுபட்ட எனக்கு மாலை வேளையில் நேரம் இருப்பதில்லை. வெளியூரில் இருப்பவர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா? ‘சென்னையில் உள்ளவர்கள் எல்லாரும் ஒவ்வொரு நாளும் பீச்சுக்குப் போய்க் கடற்காற்று வாங்குவார்கள்!’ என்று நினைக்கிறார்கள். இங்கேதான் ஒவ்வொருத்தருக்கும் தம் குடும்பச் சுமையைக் தாங்கும் பணியில் ஈடுபட்டு உழைப்பதற்கு இருபத்து நாலு மணிநேரம் போதுவதில்லையே!

திருவல்லிக்கேணியில் இருந்தபோது எப்போதாவது பீச்சுக்குப் போவதுண்டு. மங்தை வெளிக்குக் குடிவந்த பிறகு பீச்சாவது,காற்றாவது!

ஒரு சமயம் இரவு படுத்தால் தூக்கம் வராமல் இருந்தது. ஒருநாள் பார்த்தேன்; இரண்டு நாள் பார்த்தேன்; தூக்கம் இல்லை. ஒருவாரம் ஆயிற்று; தூக்கம் வரவில்லை. இதை அறிந்த ஒருவர். “விடியற்காலையில் எழுந்து நடவுங்கள்; துாக்கம் சுகமாக வரும்” என்றார். “ஆகட்டும்” என்றேன். ஆனால் நான் எழவும் இல்லை; நடக்கவும் இல்லை. அவர் தாமும் என்னுடன் வருவதாகச் சொன்னார். மிகவும் அக்கறையுடன் ஐந்து மணிக்கு வந்து என்னை எழுப்புவார்.  என்னிடம் ஒரு கெட்ட குணம். இராத்திரி எத்தனை நேரமானலும் ஒரேயடியாக விழித்துக்கொண்டு எழுதுவேன்; படிப்பேன். ஆனால் விடியற்காலம் எழுந்திருப்பது என்பது என்னால் முடியவே முடியாது.

அந்தப் பெரியவர்.அவர் என்னைவிட இருபது வயது பெரியவர் — என்னை எழுப்பித் தரதரவென்று இழுத்துச் செல்லாத குறையாக நடக்கச் செய்தார். அவருடன் நடந்தேன். நடையாஅது? அவர் வேகமாக நடப்பார்; நான் அவருடன் ஒடுவேன். “கொஞ்சம் மெதுவாகப் போகலாமே!” என்றால் அவர் கேட்கமாட்டார். “வேகமாகக் கால் வலிக்க வலிக்க நடக்கவேண்டும். அப்போதுதான் உடம்புக்கு நல்லது; தூக்கம் வரும்” என்பார். அவர் உபதேசத்தின் படியே வேகமாகக் காலை எட்டி வைத்து நடந்தேன். முதலில் கஷ்டமாகத்தான் இருந்தது. பிறகு பழக்கமாகி விட்டது. ஆனாலும் கால் வலித்தது, சிறிது துாரம் போக வேண்டுமானாலும் ரிக்க்ஷாக்காரனைக் கூப்பிடுகிற எனக்கு வேகமாக இரண்டு மைல் நடப்பதென்றால்? ஆனாலும் வலியைப் பொறுத்துக்கொண்டு நடந்தேன். ஏன் தெரியுமா? அந்தப் பெரியவர் சொன்னது உண்மை ஆயிற்று. இரவில் சுகமாகத் தூக்கம் வந்தது. அதனால் அவருடன் நடப்பதை நான் நிறுத்தவில்லை.

ஒரு மாதம் நடந்திருப்பேன். பழையபடி என்னுடைய சோம்பல் என்னிடம் வந்து சேர்ந்தது. ‘விடியற்காலைத் தூக்கம் வெல்லம் போலே’ என்று சும்மாவா சொன்னார்கள்? அதை விட மனம் வரவில்லை. வியாதி போனபிறகும் மருந்து சாப்பிடுவார் உண்டா? நானும் தூக்கம் வர ஆரம்பித்த பிறகு நடையை நிறுத்திக் கொண்டேன்.

நாலைந்து வருஷங்களுக்கு முன் இருக்கும். மறுபடியும் நடக்கும் பழக்கத்தைத் தொடங்கினேன். என் மகனுடைய நண்பர் ஒருவர் நாள்தோறும் தம் காரில் பீச்சுக்குப் போய் ஓரிடத்தில் காரை நிறுத்திவிட்டு அங்கிருந்து ஒரு மைல், இரண்டுமைல் போய்விட்டு வந்து காரில் வீடு திரும்புவார். அவருடன் என் மகனும் போனான். ஒருநாள் என்னையும் அவர் அழைத்தார்; போனேன். சில நாள் தொடர்ந்து சென்றேன்.

அந்த இரண்டு பேரும் இளைஞர்கள். காரை நிறுத்தி விட்டு வேகமாக நெடுந்துாரம் போய்விடுவார்கள். நான் சுமாரான வேகத்துடன் போவேன். பல பேர் இப்படிக் காாில் வந்து நிறுத்திவிட்டு உலாத்துவதைக் கண்டேன்.

இதில் ஒரு விசேஷம். பீச்சில் காலையில் நடக்கும்போது சில பெரிய மனிதர்களைச் சந்தித்தேன். ஹைக்கோர்ட்டு ஜட்ஜுகள் வந்தார்கள். அரசியல் தலைவர்கள் வந்தார்கள். அவர்களைச் சந்தித்தபோது, “நீங்களும் வாக்கிங் வருகிறீர்களா?” என்று விசாரிப்பார்கள். அந்தத் தோழமை விசாரிப்பில் எனக்கு ஏதோ புதிய பெருமை வந்துவிட்டது போல் தோன்றும். ஒரு நாள் போகாவிட்டால், “ஏன் நேற்று வரவில்லை?” என்று விசாரிப்பார்கள். ஹைக் கோர்ட்டு ஜட்ஜூ ஒருவர் இப்படி அக்கறையோடு நம்மை விசாரிக்கும்போது அவருடைய அன்பான சந்திப்பைப் பெறுவதற்காவது நடக்க வேண்டாமா என்று தோன்றும்.

ஆம் காலையில் பெரிய மனிதர்களின் முகத்தில் விழிப்பதே மனத்துக்கு ஊக்கம் தரும் செயல் அல்லவா? பெரிய பணக்காரர்கள், உடம்பின் கணத்தைச் சுமக்கமாட்டாத சேட்டுகள், இளம் பிள்ளைகள், இப்படி யார் யாரோ வந்தார்கள். எழுபது வயசானவர்கள் வந்தார்கள். “இந்த நடையினால்தான் இந்த வயசிலும் சுறுசுறுப்பாக இருக்கிறார்கள்!” என்று எண்ணிக் கொள்வேன். அப்போது திரு. வி. க. சொன்னது நினைவுக்கு வரும்.  இப்படிச் சில வாரங்கள் நடந்தேன். காலையில் பல பெரிய மனிதர்கள் முகத்தில் விழித்து, அவர்களுடைய புன்னகையையும் க்ஷேம விசாரணையையும் பெற்றேன். மழைக்காலம் வந்தது. அப்போது பீச்சுக்குப் போக முடியவில்லை. அந்தக் குளிரில் படுக்கையிலிருந்து எழுவது என்பது சாமான்யமான காரியமா? இந்தச் சுகத்தை விடப் பீச்சில் என்ன சுகம் இருக்கிறது?

மழைக்காலம் எவ்வளவு நாள் இருக்கும்? மழை நின்றது. என் மகனுடைய நண்பர் உலாவப் புறப்பட்டார். நான் மட்டும் வேலை இருக்கிறதென்று சொல்லிப் போவதை நிறுத்தி விட்டேன்.

காரணம் என்ன என்றா கேட்கிறீர்கள்? அதைச் சொல்லத் தெரியவில்லை. நமக்குள்ளே ஏதோ ஒன்று இருந்து நம்மைப் பிடித்து இழுத்து இதைச் செய்யாதே என்கிறது. அப்போது அறிவு எத்தனை சொன்னாலும், அநுபவம் எத்தனை இருந்தாலும், அதன் ஆணைக்குக் கட்டுப்பட்டுத் தான் இருக்க வேண்டியிருக்கிறது. அதுதான் மனிதனுக்கு என்று அமைந்திருக்கும் சிறப்பான இயல்பு போலும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=புது_டயரி/நடந்த_கதை&oldid=1534713" இலிருந்து மீள்விக்கப்பட்டது