புது டயரி/ஞான தீர்த்தம்

விக்கிமூலம் இலிருந்து



ஞான தீர்த்தம்

“ஞான தீர்த்தம் இன்னும் தயாராகவில்லையா?” என்று கேட்டார், அந்தப் பெரியவர். அவர் சுப்பிரமணிய பூஜை செய்கிறவர். கிருகஸ்தராக இருந்தாலும் மகான்; தம் நலமே கருதாதவர். ஞான தீர்த்தம் என்று குறிப்பிட்டது எந்தத் தீர்த்தம் என்று எனக்கு தெரியவில்லை. அப்போது பிற்பகல் மூன்று மணி இருக்கும். பூஜையெல்லாம் முடிந்து நண்பகல் உணவு உண்டு இளைப்பாறி எழுந்திருந்தார். அப்போது எந்தத் தீர்த்தத்தைக் கேட்கிறார்? எதற்காகக் கேட்கிறார்? எனக்கு விளங்கவில்லை.

இதோ தயாராகிவிட்டது; கொண்டுவருகிறேன்” என்று உள்ளிருந்து பதில் வந்தது. சிறிது நேரத்தில் இரண்டு தம்ளர் டபராக்களில் ஞானதீர்த்தம் வந்தது. என்னவென்று தெரிகிறதல்லவா? சாட்சாத் காபிதான்.

எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. “என்ன, இதைப் போய் ஞானதீர்த்தம் என்கிறீர்கள்? நான் வேறு ஏதோ புனிதமான தீர்த்தம் என்றல்லவா நினைத்தேன்?” என்றேன்.

“இது இல்லாவிட்டால் மூளை வேலை செய்யாது. எந்த வேலையும் ஓடாது. நமக்கு மூளை இருந்தாலும் அதற்குச் சுறுசுறுப்பு ஏற்றுவதற்கு நாளைக்கு இரண்டு தடவையாவது இந்த ஞானதீர்த்தம் வேண்டியிருக்கிறது” என்றார்.  அந்தப் பெரியவர். அவர் சொல்வதில் நியாயம் இருக்கிறது என்பதை உணர்ந்தேன்.

‘காலையில் எழுந்தவுடன் படிப்பு’ என்று பாப்பாவுக்குப் பாரதி பாடியிருக்கிறார், காலையில் எழுந்தவுடன் காபி என்று அவர் பாடியிருக்க வேண்டும். ஒருகால் அப்படித்தான் எழுதி மறுபடியும் திருத்தியிருக்கலாம். காலையில் காபி இல்லாவிட்டால் நம்முடைய முகத்தில் அசடு வழியும். சில பேருக்குக் கோபம் பொங்கும். வீட்டில் உள்ள இல்லத்தரசிகளுக்குக் காபி இருந்தால் போதும்; சாப்பாடுகூட வேண்டாம்; மங்குமங்கென்று வேலை செய்வார்கள். -

என்னுடைய மாமா வீட்டில் சிலகாலம் இருந்து படித்து வந்தேன். என் தாயைப் பெற்ற பாட்டி இருந்தாள். அவளுக்குக் காலையில் காபி வந்தால்தான் உயிரே வரும். மாட்டுப் பெண்ணிடம் கேட்க மாட்டாள். பயமோ, கவுரவமோ தெரியாது. குறிப்பிட்ட நேரத்தில் அவளுக்குக் காபி கொடுக்காவிட்டால் பாத்திரம் உடைபடும். அவள் வாய் புலம்பிக் கொட்டும். ஒரு தம்ளர் காபி உள்ளே போனால்தான் ஆவேசம் அடங்கும். இப்படி அநேகமாக எல்லார் வீட்டிலும் நடக்கும் என்றே நான் நினைக்கிறேன்.

காபி சாப்பிடாவிட்டால் தலைவலி வந்துவிடும். இந்தக் காபிக்கும் தலைவலிக்கும் என்ன சம்பந்தம்? ஒருகால் மூளை மக்கர் பண்ணி அதனால் தலைவலி வந்து விடுகிறதோ? வைத்திய சாஸ்திரம் என்ன காரணம் சொல்லுமோ தெரியாது. தலைவலிக்கும் காபிக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறது. காபி இல்லாவிட்டால் தலைவலி வருகிறது. ஆனால் தலைவலி வந்தபோதெல்லாம் காபி குடித்தால் போய்விடுமா? காபி சாப்பிடாமல் வரும் தலைவலிக்குத்தான் அது மருந்தே ஒழிய மற்றத் தலைவலிகளுக்கு அது மருந்து ஆகாது. அப் படியிருந்தால் அமிர்தாஞ்சனத்தைத் தேட வேண்டியதில்லையே!

பல பேருக்குக் காபி சாப்பிடாவிட்டால் குடல் வேலை செய்யத் தொடங்குவதில்லை; காலையில் அது சுத்தமானால் தானே வேலைகளைச் சரிவரச் செய்யலாம்? அதற்காகக் காபியை விளக்கெண்ணெய்க்குச் சமானம் என்று சொல்லி விடலாமா? அது அமிர்தம் அல்லவா? சில விசேஷ காலங்களில் அது தலைவலி மருந்தாகப் பயன்படுகிறது; சில சமயங்களில் விளக்கெண்ணெய் வேலையைச் செய்கிறது; அவ்வளவுதான்.

காபி என்றால் எல்லா ஊர்க் காபியும் ஒன்றாகிவிடுமா? ‘பிளாக் காபி’ என்று வெறும் டிகாக்ஷனைக் குடிக்கிறார்களாம், அமெரிக்காவில். பிராங்க்ளின் என்ற அமெரிக்க அறிஞர் ஒருவர் பாரிஸ் மாநகரில் நடைபெற்ற உலகத் தமிழ் மகாாட்டில் பேசினார். அப்போது தமிழ் நாட்டில் அவர் பெற்ற அநுபவத்தைச் சொல்கையில், “காரைக்குடியில் பிராமணர்கள் காபியைப்போல எங்கும் பார்த்ததில்லை” என்று சொன்னார். கறுப்புக் காபியைக் குடிக்கும் அந்த அமெரிக்கருக்கல்லவா தெரியும் தமிழ் காட்டுக் காபியின் அருமை?

அப்போதே காபிக் கொட்டையை வறுத்து அப்போதே அரைத்து டிகாக்ஷன் இறக்கி நல்ல கெட்டியான பாலில் அதை விட்டு அளவாகச் சர்க்கரை போட்டுச் சாப்பிட்டால்... ஆ! அமிர்தம் என்று புராணத்தில் கேட்கிறோம்; அதற்கு ஈடாகுமா? அதை ஆற்றும்போதே அதன் நறுமணம் எவ்வளவு இனிமையாக இருக்கிறது! தமிழ் நாட்டுக் காபி ஒர் உணவு, நாவுக்குச் சுவையானது; மூக்குக்கு மணமானது; வயிற்றுக்கு நிறைவானது; மூளைக்குச் சுறுசுறுப்பு ஊட்டுவது.  சிவபெருமானுடைய மூர்த்தங்களில் சோமாஸ்கந்த மூர்த்தம் என்பது ஒன்று. பரமசிவன், பார்வதி, அவர்களிடையில் முருகன் இப்படி எழுந்தருளியிருக்கும் கோலம் அது. ஒவ்வொரு சிவாலயத்திலும் இந்த மூர்த்தியைப் பார்க்கலாம். காபியைச் சோமாஸ்கந்த மூர்த்தி என்று நான் சொல்வது வழக்கம், பால்தான் பரமசிவன், டிகாக்ஷன் பார்வதி; சர்க்கரை முருகப்பெருமான் காலையில் காபி சாப்பிடும்போது இந்த உபமானம் நினைவுக்கு வந்தால் புண்ணியந்தானே? அதனால்தான் இதைச் சொல்லி வைக்கிறேன்.

கல்யாணங்களில் சம்பந்திச் சண்டை உண்டாகும். அநேகமாகப் பாதிக்குமேல் காபியினால் வந்த சண்டையாகவே இருக்கும். குறித்த காலத்தில் காபி வரவில்லையென்று பிள்ளை வீட்டுக்காரர்கள் கோபித்துக் கொள்வார்கள். “புதுப்பால் வந்தவுடன் போட்டுக் கொடுக்கலாம் என்று இருந்தேன்” என்று பெண்ணப் பெற்றவர் சமாதானம் சொல்வார். “புதுப்பால் சாயங்காலம் கறப்பான்; அதற்கப்புறந்தான் காபி கிடைக்குமோ?” என்று மாப்பிள்ளையுடன் வந்திருக்கும் ஓர் இளைஞன் சொல்வான். அநேகமாக அவன் தன் வீட்டில் தண்ணீர்க் காபியைச் சாப்பிடுகிறவனாக இருப்பான். இங்கே மாப்பிள்ளைக் கட்சிக்கு வக்காலத்து வாங்கி ஜபர்தஸ்துப் பண்ணுவான்.

மாப்பிள்ளை விட்டுக்கு வேண்டியவர்கள் வந்து கொண்டே யிருப்பார்கள். அப்போதப்போது காபி கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும். சில சமயங்களில் நேரமாகிவிட்டால் காபிக்கு சிறிது ஜலதோஷம் பிடித்துவிடும். பெண் வீட்டுக்காரர் என்ன, பாற்கடலா வைத்திருக்கிறார்? காபி சற்றே தரம் மாறியிருந்தால் பிள்ளை வீட்டுக்காரர்களுக்குக் கோபம் வந்துவிடும். “முக்கியமான மனிதர் வந்தாரே என்றுதானே காபிக்குச் சொல்லியனுப்பினோம்?  இந்தத் தண்ணீர்க் காபியையா கொடுத்தனுப்புவது? காபி ஆகிவிட்டதென்றால் நான் ஹோட்டலிலிருந்து வருவித்துக் கொடுத்துவிட்டுப் போகிறேன். இப்படி எங்களை அவமானப்படுத்த வேண்டாம்” என்று மாப்பிள்ளை வீட்டார், சண்டைக்குத் தொடங்கி விடுவார்கள். மற்றச் சீர் வகைகளில் குறைவு இருந்தாலும் சரி பண்ணி விடலாம்; அதைக் கவனிக்காமல் கூட இருப்பார்கள். அடே அப்பா! இந்தக் காபி விவகாரம் இருக்கிறதே, இதனால் இராம ராவண யுத்தம், பாரதப் பெரும் போரே உண்டாகிவிடும்.

சரியான காலத்தில் காபி சாப்பிடாவிட்டால் காபி சாப்பிட்டதன் சுவாரசியமே கெட்டுவிடுகிறது. அதனால்தான்,

“பெறுமவற்றுள் யாம்அறிவ தில்லை, உறுபொழுதில்
காபிடடீ அல்ல பிற”

என்று முன்பு ஒரு கிறளைப் பாடினேன்.

“விருந்தின் பயனெல்லாம் வீணாகும் காபி
அருந்தத் தராமல்விட் டால்”

என்பது அநுபவத்திலே எழுந்த மற்றொரு கிறள்.

ஒர் இரகசியம் சொல்கிறேன். நான் காபி சாப்பிடுவதில்லை. காபியின் சுவையை அடியோடு அறியாதவன் அல்ல. இளமையில் சாப்பிட்டேன்; பிறகு விட்டு விட்டேன். என்னுடைய ஆசிரியப் பிரானாகிய டாக்டர் ஐயரவர்கள் காபி சாப்பிடுவதுண்டு. அவர்கள் இளம் பிராயத்தில் காபி சாப்பிடவில்லை. பிறகு சாப்பிட்டார்கள். அப்போது தம்முடைய தந்தையாருக்குத் தெரியாமல் சாப்பிட்டார்களாம்.  பிற்பகல் நேரத்தில் அவர்கள் காபி பருகும்போது நான் அருகில் இருப்பேன். “உனக்குக் கொடுக்காமல் நான் சாப்பிடுகிறேனே” என்று வருந்துவார்கள். அவர்கள் உள்ளம் வேதனைப்படுவதை அறிந்து அவர்கள் கொடுக்கும் காபியை உண்டேன். பிறகு இருவேளையும் காபி சாப்பிடத் தொடங்கினேன். அவர்கள் அமரரான பிறகு மறுபடியும் காபியை விட்டுவிட்டேன்.

காபி சாப்பிட மீட்டும் தொடங்கியபோது என்னுடைய அன்னயார் இருந்தார்கள். நான் காபி சாப்பிடுவதைக் கண்டு அவர்களுக்குப் பெருமகிழ்ச்சி. அப்போது ஒரு விசித்திரத்தைக் கவனித்தேன். காபி தாய்ப் பாசத்தையும் மாற்றிவிடுகிறது என்பதை உணர்ந்தேன். நான் பகலுணவு உண்ண நேரமானல் என் அன்னையார் உண்ணாமல் காத்திருப்பார்கள். எத்தனை நேரமானலும் சரி, உண்ணாமல் இருப்பார்கள். ஆனால் காபி விஷயத்தில் அப்படி இல்லை; எனக்குக் கொடுக்காமலே சாப்பிட்டு விடுவார்கள். அப்போதுதான் காபியின் வலிமையை உணர்ந்தேன். தாயன்பையும் மாற்றும் கொடிய பானம் அது. இப்படிச் சொல்லாமல், பற்றை மறக்கச் செய்யும் ஞானதீர்த்தம் அது என்றும் சொல்லலாம் அல்லவா?

ஞான தீர்த்தம் என்று சொன்னவுடன் எனக்கு விட்ட கதை ஞாபகத்துக்கு வருகிறது. அந்தப் பெரியவர் காபியை ஞானதீர்த்தம் என்று சொன்னாரே, அப்போது இரண்டு தம்ளரில் காபி வந்தது என்று சொன்னேன் அல்லவா? எனக்கும் சேர்த்துத்தான் வந்தது. “நான் காபி சாப்பிடுவதில்லையே!” என்று சொன்னேன். அந்தப் பெரியவர் என்னை ஆச்சரியத்தோடு பார்த்தார். “எப்போதுமே சாப்பிடுகிற தில்லையா?” என்று கேட்டார். “ஆமாம்” என்றேன். “இது பெரிய விஷயம். தவம் என்றுதான் சொல்ல வேண்டும்” என்று பாராட்டினார்.  காபி சாப்பிடாமல் இருப்பதனால் எனக்கு எவ்வளவு மதிப்பு உண்டாகிறது தெரியுமா? பெண்டு பிள்ளைகளைத் துறந்து போன துறவிக்குக்கூட அவ்வளவு மதிப்பு இருப்பதில்லை. “உங்களுக்குத் தலைவலி வருகிறதில்லையா?”, “அதெப்படி உங்களைச் சுற்றி எல்லாரும் காபி குடிக்கும் போது நீங்கள் சும்மா இருக்கிறீர்கள்?”, “எப்படி உங்களுக்குக் காபியை விட்டிருக்க முடிகிறது?” என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு கேள்வியைக் கேட்கிறார்கள். சாதம் சாப்பிடாமல் இருந்தால்கூட அதைப் பெரிய விரதமாகக் கருதமாட்டார்கள் போலிருக்கிறது, காபி சாப்பிடா விரதம் பெறுகிற கவுரவத்தை நினைக்கிறபோது.

காலையில் வேறு எதைச் சாப்பிட்டாலும், “காபி சாப்பிட்டாயிற்றா?” என்றுதான் கேட்கிறார்கள். காபி என்பதற்குக் காலைப்பானம் என்று அர்த்தம் வந்து விட்டது.

நான் கல்கத்தாவுக்குச் சில முறைகள் போயிருக்கிறேன். அன்பர்களோடு அளவளாவும்போது வேடிக்கையாகப் பேசிக்கொண்டிருப்பேன். சிலேடையாகப் பேசுவேன். புதிய கவிகளைப் பாடுவேன். ஒரு முறை அந்த நகரில் உள்ள பாரதி தமிழ்ச் சங்கத்துக்குப் போயிருந்தேன். வழக்கம்போல் ஒருநாள் பிற்பகலில் அன்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். சிற்றுண்டியும் காபியும் வந்தன. எனக்குப் பால் தந்தார்கள். அப்போது அன்பர்களின் விருப்பப்படி சில சிலேடைப் பாடல்கள் சொன்னேன். நேஷனல் இன்ஸூலேடட் கேபிள்ஸ் கம்பெனியில் மானேஜராக இருந்த திரு டி. எஸ். சீதாபதி அவர்கள், “காபிக்கும் பழையதுக்கும் சிலேடை சொல்லுங்கள்” என்றார், நான் ஒரு சிலேடை வெண்பாவைச் சொன்னேன். அதில் என் இயல்பையும் இணைத்துச் சொன்னேன். 

கால உணவாகிக்
கைப்பிசைய நல்லதாய்ப்
பாலருந்தி வேண்டாத
பான்மையால்-சீலமிகு
சீதா பதிஎன்னும்
செம்மலே, காபியினை
ஒதாய் பழையதென்று.

காபிக்கு கால உணவாகி – காலையில் அருந்தும் உணவாகி, கைப்பு இசைய நல்லதாய் – கசப்புப் பொருந்த அதனால் நல்ல காபி என்று சொல்வதாய், பால் அருந்தி - பாலை அருந்தும் நான், வேண்டாத பான்மையால் – விரும்பாத இயல்பினால், சீலமிகு – குணத்திலே மிக்க, சீதாபதி என்னும் செம்மலே – சீதாபதி என்னும் பெயரை உடைய கனவானே, காபியினை ஒதாய் பழையது என்று – காபியினைப் பழையது என்று சொல்க.

பழையதுக்கு : காலை உணவாகி – காலையில் உண்னும் உணவாகி, கை பிசைய நல்லதாய் – கையினால் பிசையப் பிசைய நல்லதாகி, பாலர் உந்தி – இளம்பிள்ளைகள் வெறுத்துத் தள்ளி, வேண்டாத பான்மையால் – விரும்பாத இயல்பினால். (மற்றப் பகுதிகளுக்கு முன் சொன்னபடியே பொருள் கொள்க.)

“கைப்பு இசைய நல்லதாய் என்று சொன்னிர்களே, காபியை உண்டவர்களுக்குத்தான் அந்த அருமை தெரியும்; உங்களுக்கு எப்படித் தெரிந்தது?” என்று ஓர் அன்பர் கேட்டார்.

“நான் ஒரு காலத்தில் சாப்பிட்டதுண்டு. காபிக் காதலர்கள் டிகாக்ஷன் குறைவாக இருந்தால் கசப்பு  அதிகமாவதற்காக மறுபடியும் சேர்த்துக் கொள்வதைப் பார்த்திருக்கிறேன்” என்றேன்.

மற்றவர்கள் அருமையான காபியைக் குடித்து நொட்டை போடுவதைப் பார்க்கும்போதும், அருகில் உள்ளவர்கள் காபியை ஆற்றுகையில் உண்டாகும் நறுமணம் மூக்கைத் துளைக்கும் போதும் எனக்குச் சிறிதே சபலம் தட்டுவதுண்டு. ஆனால் காபியைக் குடிக்காத சிறிய செயலைப் பெரிய தியாகமாக எண்ணி அன்பர்கள் என்னை மதிக்கிறார்களே, அந்த மதிப்பை இழந்துவிட விருப்பம் இல்லை. அதனால்தான் அந்த விரதத்தை இன்னும் விடாமல் பிடித்துக்கொண்டிருக்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=புது_டயரி/ஞான_தீர்த்தம்&oldid=1534703" இலிருந்து மீள்விக்கப்பட்டது