புது டயரி/நோய்க்கு இடம் கொடு

விக்கிமூலம் இலிருந்து



நோய்க்கு இடம் கொடு

ஆகா! இந்த உலகந்தான் எவ்வளவு அதிசயமானது. உலகத்தில் உள்ள மனிதர்கள்தாம் எவ்வளவு நல்லவர்கள்! நம்மிடத்தில் எத்தனை பேருக்கு அன்பு! எத்தனை பேருக்கு நாம் செளக்கியமாக இருக்க வேண்டும் என்ற ஆசை! முன் பின் பாராதவர்களெல்லாம் எவ்வளவு அன்பு காட்டுகிறார்கள்! நம்மை யார் கவனிக்கப் போகிறார்கள் என்று இருந்த எண்ணமெல்லாம் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிட்டதே!

இப்படியெல்லாம் எனக்கு ஆனந்த உணர்வு எழுவதற்குக் காரணம் என்ன தெரியுமா? நான் இரண்டு நாள் மருத்துவமனையில் படுத்திருந்தேன்; பிறகு டாக்டர்களின் கட்டளையின்படி வீட்டில் பத்து நாள் ஒய்வு எடுத்துக் கொண்டேன். அந்தக் காலத்தில் நண்பர்களுக்கு என்னிடம் உள்ள அன்பு வெள்ளத்தை உணர்ந்து மகிழ்ச்சியால் பொங்கினேன். கோபத்தால் பொங்காமல் மகிழ்ச்சி பொங்கும் படி என்னை ஆக்கின. அந்த நோய்க்கு நான் மிக மிக நன்றி பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன். “நோய்க்கு இடம் கொடேல்” என்று ஒளவைப் பாட்டி சொன்னாள். பாவம்! அவள் காய்ச்சலாகப் படுத்திருந்தபோது யாரும் அவளைக் கவனித்திருக்க மாட்டார்கள். பாட்டிதானே? குடும்பம் இல்லை, பிள்ளை குட்டி இல்லை. யார் கவனிக்கப் போகிறார்கள்? அதனால் அவளுக்கு நோயைக் கண்டு பயம் உண் டாகியிருக்கிறது.  நான் சொல்கிறேன், நோய்க்கு இடம் கொடு என்று. எனக்கு உண்டான அநுபவத்தால் அப்படிச் சொல்லுகிறேன். என்ன அநுபவம் என்றா கேட்கிறீர்கள்?

நான் அலுவலகத்துக்குப் புறப்படும்போது தாகமாக இருந்தால் “தண்ணிர்” என்று கேட்பேன். யாரும் கவனிக்க மாட்டார்கள்.“தாகமாக இருக்கிறது, தண்ணிர் தாருங்கள்” என்று மறுபடியும் கேட்டால், “எல்லோரும் கை வேலையாக இருக்கிறோம். நீங்களே போய் எடுத்துக் குடியுங்கள்” என்று பதில் வரும்.வீட்டுக்குள் ஒர் அறையிலிருந்து மற்றோர் அறைக்குத் தண்ணீர் கொண்டு வந்து கொடுக்கக் கூடாதோ? நானே போய் எடுத்துக் குடிக்க வேண்டுமாம்! அப்படி என்ன தலை போகிற வேலையோ தொியவில்லை.

நர்ஸிங்ஹோமில் இருந்தபோதோ, கொஞ்சம் முனகினால் போதும்; “ஹார்லிக்ஸ் சாப்பிடுகிறீர்களா? வெந்நீர் தரட்டுமா? ஆரஞ்சு ரஸம்?” என்று அடுக்கடுக்காகக் கேட்பார்கள். நான் எதையும் கேட்பதில்லை. சும்மா ஆயாசத்தால் முனகுவேன். அதைக் கேட்டு ஹார்லிக்ஸும் வெந்நீரும் ஆரஞ்சு ரஸமும் வந்து நிற்கும். வாயைத் திறந்து தண்ணீர் வேண்டும் என்று கரடியாய்க் கத்தினாலும் காதில் போட்டுக் கொள்ளாத பேர்வழிகள், இப்போது ஆசார உபசாரம் செய்ய முந்துகிறார்கள்.இதற்குக் காரணம் என்ன? எனக்குத் திடீரென்று கொம்பு முளைத்துவிட்டதா? அல்லது நான் தேவனாக மாறிவிட்டேனா? உண்மையைச் சொல்லப்போனல், நான் இப்போது எனக்குள்ள இயல்பான வலிமையை இழந்து படுத்திருக்கிறேன். டாக்டருக்கு அடிமையாகி நோயாளியாகப் படுத்திருக்கிறேன். அப்போது என்னிடத்தில் இல்லாத சிரத்தை, அப்போது கிடைக்காத உபசாரம், இப்போது உண்டாவதற்கு என்னுடைய நோய் தானே காரணம்? ஆகவே மரியாதையெல்லாம் அந்த  நோயினால் கிடைக்கிறது என்றுதானே சொல்ல வேண்டும்? அதனால்தான் அந்த நோயை நாம் வரவேற்க வேண்டும் என்கிறேன்.

மருத்துவமனையிலிருந்து வெளிவரும்போது ஓர் அன்பர் வந்தார். அவர் ஏதோ கேள்வி கேட்டார். நான் பதில் சொல்லும்போது ஒரு ஜோக் அடித்தேன். அதை அவர் ஒரு பத்திரிகையில் எழுதிவிட்டார். அவர் நான் சொன்ன சிலேடைக்காக அதை எழுதினார். ஆனால் அந்தச் சிலேடையோடு, நான் மருத்துவமனையில் இருந்த செய்தியும் ஒட்டிக் கொண்டிருந்தது. அதைக் கண்ட அன்பர்கள் சிலேடையை ரசித்தார்களோ இல்லையோ, நான் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் இருந்ததை அறிந்தார்கள். என் உடல் நிலையை விசாரித்துக் கடிதங்கள் வரலாயின. அந்தக் கடிதங்களில் அன்பர்கள் தங்கள் அன்பைக் கொட்டியிருந்தார்கள். உபதேசத்தையும் தாராளமாக வழங்கியிருந்தார்கள். மருத்துவமனையில் வந்து பார்த்தவர்களும், வீட்டில் வந்து பார்த்தவர்களும் எனக்காக மிகவும் இரங்கி, இனிமேல் நான் இப்படிச் செய்யக் கூடாது, அப்படிச் செய்யக் கூடாது என்றெல்லாம் அறிவுரை கூறினார்கள். ‘நாம் எவ்வளவு பெரிய மனிதர் ஆகிவிட்டோம் எத்தனை பேர் நம் நலத்தில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள்’ என்று எண்ணி எண்ணிப் பூரித்தேன். நோய்க்கு நன்றி கூறினேன்.

அப்பர் சுவாமிகளுக்குச் சூலை நோய் வந்தது. சைவராகப் பிறந்த அவர் சைன மதத்தில் சேர்ந்து அங்கே ஆசார்ய பதவியை வகித்து வந்தார். திடீரென்று அவருக்குப் பொறுக்க முடியாத வயிற்று வலி வரவே, அவர் துடி துடித்துப் போனார். சைனர்கள் மணி மந்திர ஒளஷதங்களால் அவருடைய நோயைப் போக்க முயன்றார்கள்; நோய் நீங்கவில்லை.  நோயின் துன்பம் தாங்க முடியாமல் அப்பர் சுவாமிகள் தம்முடைய தமக்கையாராகிய திலகவதியார் இருந்த திருவதிகைக்குச் சென்று அவர் காலில் விழுந்தார். அவருடன் திருக்கோயில் சென்று இறைவனைப் பணிந்து பாடினார். அவருடைய வயிற்றுவலி நீங்கியது. வயிற்றுவலி வந்ததனால்தான் மீட்டும் சிவசமயத்தை அடைந்து இறைவன் திருவருளைப் பெற முடிந்தது. அதனால், இந்த வயிற்று வலிக்கு நான் என்ன கைம்மாறு செய்வேன்? என்று மனமுருகி அவர் கூறினார்.

எனக்கும் வயிற்றில்தான் கோளாறு உண்டாயிற்று. உணவு இறங்கவில்லை; மலச்சிக்கல் ஏற்பட்டது. அமைதியே இல்லை. அந்த நிலையில் பெங்களுரில் நடைபெற்ற அருணகிரிநாதர் ஆறாவது நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசினேன். அப்போது நோய் கடுமை ஆயிற்று. சென்னைக்கு வந்தவுடன் எங்கள் குடும்ப டாக்டரிடம் காட்டினதில் அவர் உடனே மருத்துவமனையில் சேர்த்து விட வேண்டும் என்று ஆணை பிறப்பித்துவிட்டார்.

எனக்கு இவ்வளவு தடபுடல் வேண்டாமென்று தோன்றியது. பேதிக்கு மருந்து சாப்பிட்டால் போதும் என்ற எண்ணம். எங்கள் டாக்டர் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவரைப் போல என்னிடம் உரிமை கொண்டாடுவார். “நீங்கள் மருத்துவமனையில் சேர்ந்து உடம்பைப் பார்த்துக் கொள்ள வேண்டும். எல்லாச் சோதனைகளும் செய்து கொண்டேயாக வேண்டும்” என்று அடித்துப் பேசினார்.

என் குடும்பத்தினர் அவருடைய உத்தரவைக் கண்டு அலந்து போனார்கள். என்னவோ, ஏதோ என்று பயந்தார்கள். எனக்கு மட்டும்,ஒன்றும் இல்லாததற்கெல்லாம் இந்த டாக்டர் ஏன் இப்படிக் கலவரப்படுத்துகிறார் என்றுதான் தோன்றியது. “மருத்துவமனைக்குப் போவது அவசியமா?”  என்று என் குடும்பத்தாரிடம் கேட்டேன். “நோயாளிக்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்ல உரிமை கிடையாது. நீங்கள் பேசாமல் டாக்டர் சொன்னபடி கேளுங்கள்” என்று அழுத கண்ணும் சிந்திய மூக்குமாக என் மனைவி சொன்னாள். எல்லாச் சோதனையும் பண்ணினால் வீண் செலவாகுமே!” என்றேன் நான். “அதைப்பற்றி நீங்கள் ஏன் கவலைப்பட வெண்டும்?” என்று கேட்டான் என் மூத்த மகன்.

ஜனநாயக யுகத்தில் பெரும்பான்மைக்குத்தானே மதிப்பு? மருத்துவமனையில் சேர்ந்தேன்.

எங்கள் குடும்பத்தில் ஒவ்வொரு பிள்ளைக்கும் எத்தனையோ வேலைகள்! “அந்தப் புத்தகங்களையெல்லாம் அடுக்கி வைக்க வேண்டும். கொஞ்சம் உதவி செய்யுங்கள்” என்றால், “ஆமாம், வேறு வேலைகள் இல்லையோ? தலைக்கு மேல் வேலைகள் குவிந்து கிடக்கின்றன” என்பார்கள். அத்தகையவர்கள் இப்போது ஒருவர் மாற்றி ஒருவர் மருத்துவமனையே கதியாகக் கிடந்தார்கள். அடிக்கொரு தரம் நர்ஸிடம் கேள்வி கேட்டார்கள். அவள் பொறுமையாகப் பதில் சொன்னாள். நச்சு நச்சென்று கேட்டால் யாருக்குத்தான் கோபம் வராது? ஆகவே அவளுக்குச் சில சமயம் கோபம் வந்தது.

கையில் ஊசி குத்தி ஸ்லைன் ஏற்றினார்கள். ஸ்லைன் நிரப்பிய பாட்டில் மேலே தொங்கியது. சொட்டுச் சொட்டாக அது என் நரம்பினுடே இறங்கியது. “கையை அசைக்காதீர்கள்” என்று எச்சரித்தாள் நர்ஸ். அவளுக்கு மேல் உடன் இருக்கும் என் மனைவி எச்சரித்தாள்; மகன் எச்சரித்தான்.

டாக்டர் வந்து பார்த்துச் செல்வார். உடனே அவரைப் பின்பற்றி ஓடுவார்கள் என் குமாரர்கள். ஏதாவது ஆபத்து வந்து விடுமோ என்ற பயம் டாக்டரைக் கேள்விக்  கணைகளால் துளைத்திருப்பார்கள். அவருக்கும் கோபம் வந்திருக்கக்கூடும்.

இவ்வளவு கவலை, குழப்பம், கவனம், சிரத்தை, சுறுசுறுப்பு, கட்டுக் காவல், உபசாரம், அன்பு-எல்லாம் இப்போது ஏன் வந்தன? முன்பெல்லாம் இந்த அன்பு எங்கே? திருவாளர் நோயார் என்னிடம் வந்து சேர்ந்ததனால் வந்த பெருமை அல்லவா இது அதனால்தான், ‘நோய்க்கு இடம் கொடு’ என்று ஆத்திசூடியைத் திருத்தி விடலாமா என்று எனக்குத் தோன்றுகிறது.

வைணவர்கள், பெரியவர்களுக்கு நோய்வந்தால், ‘நோய் வாய்ப்பட்டிருக்கிறார்கள்’ என்று சொல்வதில்லை; ‘நோவு சாத்திக் கொண்டிருக்கிறார்கள்’ என்பார்கள். அதாவது நோய் அவரைத் துன்புறுத்தவில்லையாம். ஆடையைக் கட்டிக் கொள்வது போலே, மாலையைச் சாத்திக் கொள்வது போலே, அவர்களே திருவுள்ளம் கொண்டு நோயைத் - தம்மிடம் இருக்கும்படி பணித்திருக்கிறார்களாம். எனக்கு உண்மையிலே ‘நோவு சாத்திக் கொள்ளும் திறமை இருந்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் என்னுடன் வாழ்கிறவர்கள், என் நண்பர்கள் முதலியவர்களின் அன்பைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால், உடனே அந்த நோயை எடுத்து மேலே சாத்திக் கொள்ளலாம் அல்லவா?

இரண்டே நாள் நான் மருத்துவமனையில் இருந்தேன். உண்மையைச் சொல்கிறேன். அந்த இரண்டு நாள் இரண்டு யுகங்களாக இருந்தன. என் நண்பர்கள் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் படுத்திருந்தபோது போய்ப் பார்த்து வந்திருக்கிறேன்; என்னலான பணியையும் செய்திருக்கிறேன். என் குடும்பத்தினர் மருத்துவமனையில் இருந்த போதெல்லாம் கவலையுடன் இருந்து கவனித்திருக்கிறேன். அப்போது சில சமயங்களில் ஒரு பைத்தியக்கார எண்ணம்  எனக்குத் தோன்றும். “இந்த நர்ஸிங்ஹோம் அநுபவம், எப்படி இருக்கும்? நம் கையைக் கட்டிப் போட்டு ஸ்லைன் ஏற்றினால் நம்மால் தாங்க முடியுமா?” என்று எண்ணியிருக்கிறேன்.

நான் முருகனை வழிபடுகிறவன். என்னுடைய வேண்டுகோளிற் பலவற்றை அவன் நிறைவேற்றி வருகிறான். அந்த அருளாளன், என் எண்ணத்தை அறிந்து, உன் எண்ணப்படியே இந்த அநுபவத்தை நீயே அடைந்து பார் என்று கருணை பாலித்தான் போலும் ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால், டாக்டர் பல சோதனைகள் செய்து என் உடம்பில் அடிப்படையான கோளாறு ஏதும் இல்லை என்று சொல்லிவிட்டார். இரத்த பரிசோதனை செய்தார்; அதில் சர்க்கரை இல்லை; வேறு குற்றம் இல்லை. நீர் பரிசோதனை ஆயிற்று; அதிலும் ஒரு குறையும் இல்லை. இரத்த அழுத்தம் அளவுக்கு மிஞ்சி இல்லை; குறைவும் இல்லை. இதய நிபுணர் வந்து பார்த்தார்; ஒன்றுமே இல்லை என்று சொல்லி விட்டார். மற்றத் துறையினர் செய்த சோதனையினால் கிடைக்காத மகிழ்ச்சி, இதய நிபுணர் சோதனையின் முடிவு தெரிந்தவுடன் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் ஏற்பட்டது.

இப்போது வயசானவர்களுக்குத் திடீர் திடீரென்று இதயநோய் வருகிறது. எனக்கு அப்படி ஏதாவது வருமோ என்று என் மனைவி மக்கள், பயந்தனர். அப்படி ஒன்றும் இல்லை என்று அறிந்து அவர்கள் ஆறுதல் பெருமூச்சு விட்டார்கள். எனக்கு மகிழ்ச்சி உண்டானதற்கு அது காரணம் அன்று. என் இதயத்தில் தீங்கு இல்லை; நான் நல்ல இதயம்,படைத்தவன் என்று டாக்டர். சொல்லிவிட்டதில் எனக்கு அளவற்ற திருப்தி எனக்கு மற்றப்பலத்தைப் பற்றி அவ்வளவு அக்கறை இல்லை. படிப்பைப்பற்றி பணத்தைப்பற்றிக் கவலை இல்லை. வல்லவனாக இருக்க

  • * * 

வேண்டும் என்று நான் ஆசைப்படுவதில்லை; நல்லவனாக இருக்க வேண்டும் என்பதே என் குறிக்கோள். இதைப் பல சமயங்களில் வெளிப்படுத்தியிருக்கிறேன். இப்போது நான் நல்ல இதயம் உள்ளவன் என்று சர்ட்டிபிகேட் கிடைத்துவிட்டதே! இதைக் கண்டு மகிழாமல் இருக்க முடியுமா? இந்தச் சோதனையும் அதன் விளைவினால் உண்டான மகிழ்ச்சியும் எப்படி வாய்த்தன? எல்லாம் இந்த நோயினால் தானே? ஆகவேதான் சொல்கிறேன், ‘நோய்க்கு இடங்கொடு’ என்று.

மருத்துவமனையில் இருந்த போது நான் எதிர்பாராதவர்களெல்லாம் வந்தார்கள்; பார்த்தார்கள்; ஆறுதல் சொன்னார்கள்; எத்தகைய உதவியானாலும் செய்யத் தயாராக இருப்பதாகச் சொன்னார்கள். வீட்டுக்குப் போன பிறகோ, பத்திரிகை மூலமாகத் தெரிந்து கொண்டவர்கள் பலர் வந்தார்கள். மேல் மாடியில் ஒய்வாகப் படுத்திருக்தேன். டாக்டரின் உத்தரவுப்படி வருகிறவர்களை ‘ரேஷன்’ பண்ணி அனுப்பினார்கள் வீட்டில் உள்ளவர்கள். அதனால் எனக்குச் சங்கடமாக இருந்தது.

வந்தவர்கள் எல்லாரும், “நீங்கள் நன்றாக ஒய்வெடுத்துக் கொள்ளவேண்டும்; வெளியூர்களுக்குப் போவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்று உபதேசித்தார்கள். ஒருவர் தம்முடைய புத்தகத்துக்கு முன்னுரை எழுத வேண்டுமென்று என்னிடம் கொடுத்திருந்தார். அவர் வந்தார். "நீங்கள் ஒய்வெடுத்துக் கொள்ளுங்கள். அதிகமாகப் பேசக்கூடாது; எழுதக் கூடாது” என்றார். “அப்படியே செய்ய முயல்கிறேன்” என்று சொன்னேன். அவர் எழுந்து போவார் என்று எண்ணினேன். ஆனால் தயங்கித் தயங்கி நின்றார், “ஏதாவது சொல்ல வேண்டுமோ?” என்று கேட்டேன். “ஒன்றும் இல்லை. நீங்கள் ஒய்வெடுத்துக் கொள்ள வேண்டுமென்பதை வற்புறுத்துகிறேன். நான் கொடுத்த புத்தகத்தை ஒய்வு நேரத்தில் பார்த்துச் சிறிய முன்னுரை எழுதிக் கொடுத்தால் போதும். அவசரம் இல்லை. ஆனால் அச்சகத்தார் நெருக்குகிறார்கள். உங்களுக்குத் தெரியாதா, அச்சு வேலை நச்சுவேலை என்று? எப்போது முடியுமோ அப்போது எழுதித் தாருங்கள். நான்கு நாள் கழித்து வரட்டுமா?” என்றார்.

அவர் என்னை ஓய்வாக இருக்கச் சொல்கிறார். ஆனால் அவருக்கு முன்னுரை மட்டும் எழுதிக் கொடுத்தால் நல்லது; அதுவும் நான்கு நாளுக்குள் எழுதிக் கொடுக்க வேண்டு மென்பதைக் குறிப்பாகச் சொல்லிவிட்டார். நான், “பார்க்கலாம்” என்று சொல்லி அனுப்பினேன்

ஒப்புக் கொண்ட நிகழ்ச்சிகளை நிறுத்திக் கொண்டேன் என் மூளை படுவேகமாக வேலை செய்தது. அன்பர்கள் எத்தனை அன்பாக என் உடல் நலத்தைப்பற்றி விசாரித்தார்கள்! “நீங்கள் பல ஊர்களுக்குப் போய் அலைய வேண்டாம். உடம்பு சரியானவுடன் எங்கள் ஊருக்கு மட்டும் ஒரு முறை வந்து பேசிவிட்டுப் போங்கள். நேரே இங்கே வந்து இறங்கிப் பேசிவிட்டு இரவே போய்விடலாம். உடம்பை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று சிலர் கடிதம் எழுதினார்கள். அவர்களுக்குத்தான் என் உடல் நலத்தில் எவ்வளவு அக்கறை நான் பல இடங்களுக்குப் போகாமல் ஒய்வெடுத்துக் கொள்ளவேண்டும் என்ற உபதேசத்தை எவ்வளவு அன்போடு செய்கிறார்கள்! என் சொற்பொழிவைத் தம் ஊரில் மாத்திரம் செய்ய வேண்டும் என்று வேண்டிக்கொள்வதில் எத்தனை உரிமையையும் ஆவலையும் அன்பையும் காட்டுகிறார்கள்!

இத்தனையும் அந்த நோயினால் வந்த பிரபாவம். இப்போது, ‘நோய்க்கு இடங் கொடு’ என்று நான் சொல்வது எவ்வளவு அநுபவ பூர்வமான மணிமொழி என்று தெரிகிறதல்லவா?